Results 1 to 3 of 3

Thread: மணி மாலா !

  1. #1
    Senior Member Devoted Hubber Muralidharan S's Avatar
    Join Date
    Oct 2014
    Location
    Chennai
    Posts
    271
    Post Thanks / Like

    மணி மாலா !

    மணியின் வீடு:

    மணிக்கு சென்னையில் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் வேலை. நிறைய சம்பாதிக்கிறான். ஒரே பையன். பார்க்க லட்சணமாக இருப்பான். கல்யாணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருகிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் பெண் கிடைப்பதுதான் குதிரை கொம்பாக இருக்கிறதே!

    மணியின் அப்பா ஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியர். அவர் வேலையில் சேர்ந்ததும் மற்றும் ஒய்வு பெற்றதும் எழுத்தராக. கடைசி வரை உத்தியோக உயர்வு கிடைக்கவேயில்லை. எப்போதாவது மனுஷன் வருத்தப் பட்டாரா என்ன? நெவெர்.

    அவருக்கு கொஞ்சம் தற்பெருமை அதிகம். நிறைய பேசுவார். ஆனால் தன்னை பற்றியே பேசுவார். இப்போது பென்ஷன் வருகிறது. சொந்த வீடு, சென்னை திருவல்லிகேணியில். வீட்டில் ஒரு பகுதி வாடகை. பூர்விக சொத்தும் கொஞ்சம் இருக்கிறது. அதை குத்தகை விட்டு கொஞ்சம் காசு பார்க்கிறார்.

    மணிக்கு , அவனது அப்பாவின் குணம் தப்பாமல். சொல்லப்போனால், அவனது அலட்டல் அப்பாவை விட கொஞ்சம் அதிகமே..

    காலை. 8.00 மணி. அப்பா இரண்டாம் டோஸ் காபி குடித்துக் கொண்டு, கூடவே பேப்பர் மேய்ந்து கொண்டு இருக்க , அம்மா சமையல் கட்டில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டு இருக்க, மணி அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான்.

    “டேய் மணி, சாயந்தரம் 4.00 மணிக்குள்ளே வாடா..இன்னிக்கு பொண்ணு பாக்க போகணும். இந்தா பொண்ணு போட்டோ. பாக்க மஹா லஷ்மி மாதிரி இருக்கா. நல்ல வேலையாம்” அம்மா மணியிடம் போட்டோவைக் கொடுத்தாள். அவள் ஏற்கெனவே உறவுக்கார ராமதுரை வீட்டு கல்யாணத்திலே பெண்ணை பார்த்தாகி விட்டது. தரகர் மூலமா இந்த ஏற்பாடு.

    போட்டோவைப் பார்த்தவுடன் பிடித்து விட்டது மணிக்கு. ஆனாலும், டம்பம் விடவில்லை.

    “அட போம்மா! நீ இன்னும் அந்த காலத்திலேயே இருக்கியே! சும்மா தொணதொணக்காதே! எனக்கு ஆபீசில் இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. லண்டன் கிளை அதிகாரிகளுடன் சந்திப்பு. சோழா ஹோட்டலில். நான் இல்லேன்னா காரியம் கெட்டுவிடும். எங்க எம்.டிக்கு நான் கட்டாயம் பக்கத்திலேயே இருக்கணும்.” – ஆரம்பித்து விட்டான் தன் அலம்பலை, அம்மாவிடமே.

    மணியிடம் ஒரு நல்ல வழக்கம். மற்றவர்களைப்பற்றி அவன் அதிகம் விமர்சிக்கமாட்டான். தன்னை பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளவே அவனுக்கு நேரம் போதவில்லையே.

    கேட்டுக் கொண்டிருந்த அப்பா “அப்படி சொல்லாதே மணி! உனக்கும் வயசு ஆயிண்டே போறது பார்! தலை வேறே வழுக்கையாயிண்டே போறது!”- அஸ்திரத்தை எடுத்து விட்டார்.

    அடங்கினான் மணி. “சரி சரி! நீங்க முதலில் போங்க. நான் எப்படியாவது வந்துடறேன். பெண்ணோட தனியா பேசணுமே. ஒண்ணு பண்ணுங்க. 4.00 மணிக்கு சோழா ஹோட்டலில், பெண்ணோட பேசனும்னு வர சொல்லுங்க. பிடிச்சிருந்தா மேல பேசலாம்! ”

    “ஏதோ பண்ணு. நாங்க தரகரோட போய் பாக்கறோம். அவங்க சரி சொன்னாக்க, நீ மாலாவை, அதாண்டா பொண்ணை, ஹோட்டலில் வைத்து பேசு”.

    சாயந்திரம் என்ன புடவை கட்டிக்கலாமென்று அம்மா இப்போவே யோசனை பண்ண ஆரம்பித்து விட்டாள். பேங்க் போய், லாக்கரிலிருந்து நகை வேறு எடுக்கணும். என்ன சீர் கேக்கணும்னு எழுதி வச்சுக்கணும். நிறைய வேலை இருக்கு.

    ****

    மாலாவின் வீடு.

    மாலா ஒரு எம்.பி.ஏ. உளவியல் பட்டம் வேறு. பெற்றோர் நல்ல வரன் தேடிக் கொண்டிருந்தனர். இப்போ நல்ல வரன் ஒன்னு வந்திருக்கு. ஒரே பையன். நல்ல வேலை. சின்ன குடும்பம். கடவுளே! இது தகையவேண்டுமே! இப்போதெல்லாம் நல்ல வரன் எங்கே கிடைக்கிறது?

    மாலா, பையன் போட்டோவை ஏற்கனவே பார்த்து விட்டாள். அவளுக்கு இஷ்டம் தான். சின்ன வயது மாதவன் போலிருக்கிறான். அமெரிக்காவில் படித்து கொஞ்ச நாள் அங்கேயே வேலை. இப்போது சென்னையில். ‘மாலா மணி’. சொல்லிப்பார்த்துக் கொண்டாள். ஆஹா! பேர் பொருத்தம் கூட நல்லா இருக்கே.

    கனவை கலைத்தாள் அம்மா. “மாலா! தரகர் கிட்டேயிருந்து போன். பையனின் அப்பா அம்மா இன்னிக்கு இங்கே வராங்களாம். ஆனால்,பையன் வரலை. அவன் உன் கூட தனியா பேசணுமாம். சோழா ஹோட்டலில் . உனக்கு ஓகேவா?”

    “சரிம்மா! எப்போன்னு கேட்டு சொல்.!”. இந்த காலத்து பெண்.


    ****

    சோழா ஹோட்டல்    மணியும் மாலாவும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டெலில். சந்திப்பு. மணி கொஞ்சம் லேட்.

    “வாங்க மாலா!. உள்ளே போய் காபி சாப்பிட்டுகிட்டே பேசுவோம்”. மன்னிப்பு கேட்க மறப்பது மணியின் வழக்கம். தான் உயர்ந்தவன் என்கிற எண்ணம் எப்பவும்.

    உள்ளே போனார்கள்.

    “சே! என்ன வெயில் ! என்ன வெயில்! எப்படித்தான் நீங்களெல்லாம் சென்னையில் தாங்கறிங்களோ? என்னாலே முடியலேப்பா!. எப்பவும் நான் ஏ.சி கார் தான். கோரல்லா வெச்சிருக்கேன். ஆபீஸ்லே, வீட்டிலே 24 மணி நேரமும் ஏ.சி தான்.” ஆரம்பித்தான் மணி.

    சிரித்தாள் மாலா.

    24 மணி நேர காபி ஷாப். “நான் எப்போவும் இங்கே தான் வருவேன்!” மணியின் அடுத்த அலட்டல்.

    சிப்பந்தியை கூப்பிட்டான். “2 ப்ளாக் காபி”. சிப்பந்தி போன பிறகு அவள் பக்கம் திரும்பினான்.

    “அடடா! உங்களை கேக்கவேயில்லியே! என்ன சாப்பிடறீங்க? சண்ட்விச், ஐஸ் டீ, கூல் டிரிங்க்ஸ். இங்கே சாண்ட்விச் நல்லாயிருக்கும்” – மணி விசாரித்தான்.

    “கொஞ்ச நேரம்தானே இருக்கப் போறோம் ! காபியே போதுமே!” – மாலா.

    “நீங்க என்ன பண்றீங்க மாலா?”

    “நான் இப்போ ஒரு எச்.ஆர் மேனேஜர்- ஒரு எம் என் சி கம்பெனி லே...”

    அவள் முடிக்குமுன், “நான் ஒரு பெரிய கம்பெனியில் உதவி பொது மேலாளர். நான்தான் அங்கே எல்லாம். எல்லாத்துக்கும் மணி, மணி தான். நான் ஒரு மணி நேரம் இல்லன்னா, எங்க எம்.டிக்கு கையும் ஓடாது காலும் ஓடாது.”

    மாலா முறுவலித்தாள். “ அட !எங்க ஆபீசிலும் இதே கதிதான். எங்க வி.பி, மாலா மாலான்னு எப்பவும் என் பின்னாடியே!”

    மணி முகம் கொஞ்சம் மாறியது. “உங்க வி.பிக்கு வயசென்ன இருக்கும்?”

    “ஒரு 35 இருக்கும். கல்யாணின்னு பேரு. ஏன் கேக்கறீங்க?”

    மணி சுதாரித்துக்கொண்டான். “சும்மாதான் கேட்டேன்”. வழிந்தான்.

    மாலா சிரித்தாள். “அப்புறம் நீங்க அமெரிக்காவிலே வேலையிலே இருந்தீங்களாமே?”

    “அதை ஏன் கேக்கறீங்க மாலா. ஏண்டாப்பா சென்னை வந்தோமேன்றிருக்கிறது. என்ன ஊர் இது? ஒரே கூட்டம். எது எடுத்தாலும் இங்கே பிரச்னை.. எதிலே பார் ஊழல். சே! ஆனால், அமெரிக்கா அப்படி இல்லே. எனக்கு கடற்கரை பக்கத்திலேயே வீடு. ரொம்ப நல்ல வேலை. தினமும் சாப்பாட்டுக்கே 30 டாலர் செலவு பண்ணுவேன். பெரிய கார் வெச்சிருந்தேன். இப்போ அப்பா அம்மாக்காக , சென்னை வந்துட்டேன்”.

    “அடடே! அப்படின்னா அம்மா கோண்டா நீங்க? ” – மாலா சிரித்தாள்.

    “ அதெல்லாம் ஒண்ணுமில்லே!. இங்கேயும் பெரிய வேலைதான். என் கீழே ஒரு 20 பேர். அதே கம்பனியின் இந்திய கிளை. எப்ப வேணாலும் நான் திரும்பி அமெரிக்கா போகலாம். நீ வந்துடு, வந்துடுன்னு அங்கேயிருந்து ஒரே தொந்திரவு. அதை ஏன் கேக்கறீங்க! ..ரொம்ப பிடுங்கறாங்க.!”

    மாலா மெலிதாக சிரித்தாள். “சரி அப்படின்னா கேக்கலே!”

    மணிக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. ஏன் சிரிக்கிறாள்? ஒரு வேளை நக்கலோ? கிண்டலோ? இருக்கும். இருக்கும் . எச்.ஆர் மேனேஜர் ஆயிற்றே! ஜாக்கிரதையாக இருக்கணும்’.

    நேரம் ஆனது. மணியின் பேச்சு அவனையே சுற்றி சுற்றி வந்தது. மாலா மெதுவாக மணியை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அவனது தற்பெருமை அவளுக்கு வேடிக்கையாயிருந்தது.

    மணி சொன்னான் “அப்புறம், எனக்கு ஆபிசில் நிறைய பெண் நண்பிகள். ஆனாலும், ஒரு உண்மையை சொல்லட்டுமா ?”

    “என்ன?”- மாலா தலையை தூக்கி கேட்டாள்.

    “எனக்கு உங்களை பிடித்திருக்கிறது.”

    மாலா “ஏன், ஆபிசில் வேற யாரையும் பிடிக்கலையா?”

    மணி “ ஆமா. ஏனென்று தெரியலே! எல்லாரும் என்னை துரத்தி துரத்தி வந்து பேசுவாங்க. ஆனால் நான் யாருக்கும் மசியமாட்டேன்.”

    மாலாவின் இதழ்கோடியில் ஒரு முறுவல். “பரவாயில்லையே!”

    மணியின் மனதில் ஒரு நெருடல். “நக்கல் பன்றாளோ? ஏன் இவள் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டேன்கிறாள். ரொம்ப திமிர் பிடிச்சவள் போல இருக்கு” மணியின் எண்ண ஓட்டம்.

    இருவரிடையே கொஞ்சம் மௌனம். மணிக்கு அவளிடம் “உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்று கேட்க ஒரு தயக்கம். தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அவளே பிடிச்சிருக்குன்னு சொல்லட்டுமே!

    “சரி. அப்போ நான் கிளம்பட்டுமா? வேறே எதுவும் தெரிஞ்சிக்கனுமா?” – மாலா கேட்டாள்.

    “இல்லை. நான் வேணா உங்களை வீட்டில் கொண்டு விடட்டுமா?” – மணி

    “வேண்டாம். கம்பெனி கார்லே வந்திருக்கேன். ரொம்ப தேங்க்ஸ்”- மாலா. அலை பேசியில், டிரைவரை வரச்சொன்னாள்.

    மணி வாயை பிளந்து பார்த்துகொண்டிருக்க, வெள்ளை சீருடையில், ஒரு டிரைவர், பவ்யமாக கார் கதவை திறக்க, மாலா ஏறியவுடன், சீறி பறந்தது அந்த வெளி நாட்டு கார்.

    ****

    மாலாவின் வீடு.

    மாலா தன் வீட்டிற்கு வந்த போது மணி ஆறு. அப்போது மணியின் அப்பா அம்மா புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வாசலில் மணியின் அப்பா தன் சுய புராணம் பாடிக்கொண்டிருந்தார். “ மேனேஜர் இன்னிக்கு வந்தவன். எனக்கே பாடம் சொல்லி கொடுத்தான். இவனுகளுக்கு ரெண்டு வார்த்தை இங்கிலிஷில் பேச தெரியாது. லீவ் லெட்டர் எழுத என் கிட்டே கத்துகிட்ட பசங்கள் என்னை ஏவினாங்க! போங்கடா போங்கன்னு வேலையை விட்டுட்டேன். யாருக்கு வேணும் இந்த வேலை?. நன்னிலத்திலே 10 ஏகர் நிலம் இருக்கு. சொந்த வீடு இருக்கு. பிச்சைக்கார சம்பளம் தேவையேயில்லை! என்ன சொல்றீங்க சம்பந்தி?”

    மாலாவின் அப்பா ஒரு தாசில்தார். ஆனாலும் என்ன சொல்ல முடியும்? பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி “நீங்க சொல்றது ரொம்ப சரி”.. இம்சை தாங்கவில்லை. இவங்க போனால் போதுமென்றிருந்தது

    உள்ளே நுழைந்த மாலாவை பார்த்த பார்வையில், மணியின் பெற்றோர் முகத்தில் திருப்தி தெரிந்தது. இரண்டு நிமிடம் குசலம் விசாரித்து விட்டு கிளம்பி விட்டனர்.

    “அப்பாடா! ஒரு வழியா கிளம்பினாங்க.” அலுத்து கொண்டார் அப்பா.

    “ஏம்பா! கொஞ்சம் வாட்டமாக இருக்கீங்க! என்ன ஆச்சு?”

    அவளது அப்பா அம்மா முகத்தில் அவ்வளவு திருப்தி தெரியவில்லை. கொஞ்சம் சோர்ந்து போய் காணப்பட்டனர்.

    “இந்த இடம் சரிப்பட்டு வரும்னு தோணலை மாலா.” – அம்மா

    “எனக்கு கூட அப்படித்தான் தோணறது மாலா! வேண்டாமென்று சொல்லிடலாம்னு படறது”- அப்பா

    “ஏம்பா?”

    “பையனோட அப்பா ரொம்ப அலட்டிக்கிறார். அவரோட பேச்சும், கர்வமும் அப்பப்பா! . எல்லாத்திலேயும், தாங்க மட்டும் தான் கெட்டிகாரங்க மாதிரி பேசறார். இத்தனைக்கும் அவர் ஒரு ரிடயர்ட் குமாஸ்தா. நான் தாசில்தார். கொன்னுட்டார். முடியலேம்மா.. ”- அப்பா .

    “பையனோட அம்மா அதுக்குமேலே! உனக்கு எங்கே வேலை? என்ன சம்பளம்? பிடுங்கி எடுத்துவிட்டாள்”- அம்மா தன் பங்குக்கு குறை பாடினாள்.

    அப்பா இடைமறித்தார். “அது போகட்டும். எங்களை விடும்மா ! நீ பேசினியா? உனக்கு பிடிச்சிருக்கா?”-.

    “பேசினேம்பா.! எனக்கு அவரை பிடிச்சிருக்குப்பா. எனக்கு சம்மதம்”- மாலா

    அப்பா முகத்தில் கொஞ்சம் மலர்ச்சி. “ அடி சக்கை!. உனக்கு பிடித்தால் போதுமே!. வேறென்ன வேண்டும்? உனக்கு தெரியாதா மாமனார் மாமியாரை சமாளிக்க?”

    அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் தயக்கம். “மாப்பிள்ளை எப்படிம்மா?”

    “அவர் கொஞ்சம் கர்வி தான். சுய தம்பட்டம் ரொம்பவே அடிச்சிக்கிறார்”.- மாலா

    “அப்போ எப்படி? நீ ரொம்ப அமைதியான பொண்ணாச்சே?உன்னாலே தாங்க முடியுமா?” – அம்மாவின் குரலில் கவலை இழையோடியது.

    “மங்களம், நம்ப பொண்ணு படித்தவள். அவளுக்கு தெரியாதா? நீ ஏன் கவலைப்படறே?”

    மாலா நிதானமாக சொன்னாள் “அம்மா! நீ நினைக்கறா மாதிரி ஆணவமா இருக்கறது அப்படி ஒன்னும் ரொம்ப கெட்டது இல்லே. சில சமயம் கர்வம் நல்லது கூட. கர்வம், சுய மரியாதையின் ஒரு வகை வெளிப்பாடுன்னே சொல்லலாம். தலை குனிய மறுப்பது தப்பா? ".

    “பாத்தியா! என் பொண்ணு எவ்வளவு தெரிந்து வைத்திருக்கா?”

    மாலா மேலும் சொன்னாள் "கர்விங்க இன்னொருத்தர் கிட்டே கூழை கும்பிடு போட மாட்டாங்க. அவங்க செயலுக்கு அவங்களே பொறுப்பெடுத்துப்பாங்க. தன்னை தானே காப்பாத்திப்பாங்க. யாரையும் சார்ந்து இருக்க அவங்களுக்கு பிடிக்காது. அதனாலே அது ஒண்ணும் பெரிய குறை இல்லைம்மா !”

    அம்மா வாயடைத்து நின்றாள்.

    “அம்மா!. மணியைப் பார்த்தால் நல்லவராக தெரியறது. கொஞ்சம் வெகுளி. ஓட்டை வாய். அவருக்ககு அடிக்கடி ஐஸ் வைச்சி நான் சமாளிச்சிப்பேன். கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிடுவேன். இது சின்ன குறை தான். யார் கிட்டே குறை இல்லை? தானாக சரியாயிடும். நீ கவலைப்படாதே!”

    “ரொம்ப சரி. அப்போ நாளைக்கே தரகரிடம் நம்ப சைடு ஓகேன்னு சொல்லிடறேன். இறைவன் அருள் இருந்தால், முடியட்டுமே?” அப்பா திருப்தியாக அந்த இடத்தை விட்டகன்றார்.

    ****

    மணியின் வீடு:

    மணியின் அப்பா அம்மாவுக்கு மாலாவின் வீட்டு சம்பந்தம் ரொம்ப திருப்தி. பெரிய இடத்து பெண். ஒரே பெண். அழகாயிருக்கிறாள் . படித்திருக்கிறாள். நல்ல வேலை. மணி அதிருஷ்டக்காரன் தான். மணி வரட்டும், அவனை கேட்டுக்கொண்டு நாளைக்கே ஓகே சொல்ல வேண்டியதுதான்.

    மணி வீட்டிற்கு வரும் போது மணி ஒன்பது.

    “வாடா வாடா மணி, உனக்காகத்தான் காத்துகிட்டிருக்கோம். மாலாவை பிடிச்சிருக்கா?” அப்பா

    மணி நேரிடையாக பதில் சொல்லாமல், “உங்களுக்கு பிடிச்சிருக்கா?” – வினவினான். அவன் குரலில் கொஞ்சம் சுரத்து குறைந்திருந்தது.

    “எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மணி.! பெண் வீட்டிலே எல்லாரும் தங்கமா இருக்காங்க. உன்னை தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க.” அப்பா ரொம்ப ஆர்வத்தோடு.

    “நிறைய சீர் பண்ணுவாங்க போலிருக்கு. ரொம்ப மரியாதையாக நடந்துகிறாங்க” – அம்மா திருப்தியாக.

    “அப்பா. இந்த பெண் வேண்டாம்னு சொல்லிடுங்கப்பா! எனக்கு பிடிக்கலை.” குண்டை தூக்கி போட்டான் மணி.

    “ஏண்டா! ஏன் பிடிக்கலே? ”

    “பொண்ணு திமிரா இருக்காப்பா! படிச்ச கர்வம் நல்லா தெரியுது. நக்கலா சிரிக்கிறா. நிறைய சம்பாதிக்கிரோமென்ற அர்ரகன்ஸ். அப்புறம் என்னை பிடிச்சிருக்குன்னே அவள் ஒரு வார்த்தை கூட சொல்லலை. ரொம்ப பந்தா பண்றா. சரிபட்டு வராதுப்பா. அவங்க என்னை வேண்டாமென்று சொல்றதுக்கு முன்னாடி, பேசாம நாமே வேண்டாமென்று சொல்லிடலாம்ப்பா. வேறே பொண்ணு பாக்கலாம். என் படிப்புக்கும் வேலைக்கும் ஆயிரம் பேர் கிடைப்பாங்க.! ”

    மணியின் அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. பேச முடியவில்லை. நல்ல வரன் தட்டி போகிறதே!

    மாலாவின் வீடு:

    மணியின் அப்பா யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

    “அப்படியா! சரி. பரவாயில்லை. யார் யாருக்கு எங்கே முடிச்சு போட்டிருக்கோ? நம்ம கையிலே என்ன இருக்கு?” மாலாவின் அப்பா தொலைபேசியை வைத்தார். முகம் தொய்ந்து இருந்தது.

    “என்னப்பா! யார் போனிலே?” கேட்டுக்கொண்டே மாலா வந்தாள்.

    “தரகர்தாம்மா.. ” இழுத்தார்.

    “என்னப்பா! மணி வீட்டிலே என்னை வேணாம்னு சொல்லிட்டாங்களா?”

    “ஆமாம்மா! சரி விடு. அவங்களுக்கு கொடுப்பினை அவ்வளவுதான். பாக்கப்போனா, இந்த வரன் தட்டிபோனது நல்லதுன்னே தோணறது”

    “இல்லேப்பா!. தவறு என் பக்கம் தான்.” – மாலா இடைமறித்தாள்.

    அப்பா விழித்தார். “என்னம்மா சொல்றே?”

    “நான் ஒண்ணு செய்யறேன். மணியோட போனிலே பேசறேன்.”

    அப்பா பதில் பேச வாயெடுக்குமுன் மாலா தொடர்ந்தாள். “அப்பா. இந்த திருமணம் நடக்கும் பாருங்களேன். அவரை பார்த்து நான் கொஞ்சம் முகஸ்துதி பண்ணா எல்லாம் சரியாயிடும் .உங்களை போல் யாரும் இல்லேன்னு சொல்றேன். “

    அப்பாவுக்கு புரியவில்லை. இந்த பெண் என்ன சொல்கிறாள் ? அம்மா கேட்டாள் “என்னடி சொல்றே?”

    “ அம்மா !, நான் அப்பவே நினைச்சேன். நான் அவரை விட உசத்தியோன்னு மணி நினைச்சு பயந்திருப்பார். நான் கொஞ்சம் யதார்த்தமாக நடந்து கொண்டதை தவறாக புரிந்து கொண்டு , என்னை கர்வி என நினைத்திருப்பார். நான் அந்த பயத்தை போக்கறேன். எனக்கும் அவரை பிடிச்சிருக்குன்னுசொல்றேன். அவர் கட்டாயம் சம்மதிப்பார் பார் ! ” மிக நம்பிக்கையாக சொன்னாள் மாலா.

    மாலாவின் அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. பேச முடியவில்லை.

    மாலா உறுதியாக இருந்தாள். மணியுடன் வாழ்க்கை நடத்த. அவனை புரிந்து கொண்டிருக்கிறாள். அது போதுமே!

    மாலா இந்த காலத்து பெண். அவள் நினைத்ததை முடிப்பாள்.

    மாலா, மனதிற்கு பிடித்த மணியை மணமுடிப்பாள்.

    ****

    முற்றும்


    Happy Deepavali Greetings :


    Last edited by Muralidharan S; 4th December 2015 at 02:06 PM.

  2. Likes raagadevan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    10,904
    Post Thanks / Like
    சூப்பர்! படு யதார்த்தம்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #3
    Senior Member Devoted Hubber Muralidharan S's Avatar
    Join Date
    Oct 2014
    Location
    Chennai
    Posts
    271
    Post Thanks / Like
    மிக்க நன்றி மேடம் !

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •