Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Pammalar for his meticulous compilation.


    சிவாஜி 83

    1. சிவாஜி என்கிற வி.சி.கணேசன் பிறந்த தேதி : 1.10.1928, திங்கட்கிழமை. இந்த தேதியில் விழுப்புரத்தில் மாலை 4:30 மணியளவில் ராஜாமணி அம்மாள் - சின்னையா மன்றாயர் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.

    2. தன்னுடைய ஏழாவது அகவையில், திருச்சி சங்கிலியாண்டபுரத்தில், தனது வீட்டுக்கு அருகாமையில் நடைபெற்ற "கம்பளத்தார் கூத்து" நாடகத்தில், ஒரு நாள் வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடித்ததற்காக, சுதந்திரப் போராட்ட வீரரான தனது தந்தையின் கடுங்கோபத்திற்கு ஆளாகி கன்னத்தில் அறையும் வாங்கினார்.

    3. இவர் சேர்ந்த முதல் நாடகக் கம்பெனி, யதார்த்தம் பொன்னுசாமியின் 'மதுரை ஸ்ரீ பால கான சபா'. இவரது முதல் நாடக வேடம், 1935-ல், திண்டுக்கல்லில் "இராமாயண" நாடகத்தில் பாலஸ்திரீபார்ட்டாக, 'இளம்பருவ கன்னிமாட சீதை' வேடம்.

    4. நாடகமேடையில், இவர் ஏற்று நடித்த முதல் ராஜபார்ட் ரோல் "மனோகரா" நாடகத்தின் 'மனோகரன்'. கொல்லங்கோட்டில் நடைபெற்ற இந்நாடகத்தில், விசிகணேசனின் 'மனோகரன்' நடிப்பைக் கண்டு மயங்கிய கொல்லங்கோடு மஹாராஜா, இவருக்கு 'வெள்ளித் தட்டு' ஒன்றை பரிசாக அளித்தார். சில தினங்களுக்குப் பின், அந்த வெள்ளித் தட்டை விற்றுப் பணமாக்கி, 4 நாட்களுக்கு, தன் பசி மட்டுமல்லாது தனது சக நாடக நடிகர்களின் பசியையும் போக்கினார் விசிஜி.

    5. 1945-ன் இறுதியில், தந்தை பெரியாரின் தலைமையில், சென்னையில் நடைபெற்ற ஏழாவது சுயமரியாதை மாநாட்டில், அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" நாடகம் மேடையேற்றப்பட்டது. மாவீரன் சத்ரபதி சிவாஜியாகவே, கணேசன் உருமாறி, வீரமுழக்கம் செய்தார். நாடகம் முடிந்ததும் பெரியார், கணேசனின் நடிப்பை வியந்து பாராட்டி, "இன்று முதல் நீ வெறும் கணேசனல்ல, சிவாஜி கணேசன்" என்று பட்டம் சூட்டினார். இந்த நாடகத்தை, பார்வையாளர்களில் ஒருவராக, எம்.ஜி.ஆரும் பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    6. 1946 முதல் சற்றேறக்குறைய 4 வருடங்களுக்கு, சக்தி கிருஷ்ணசாமியின் 'சக்தி நாடக சபா'வில், பல நாடகங்களில் பல தரப்பட்ட வேடங்களில் வெளுத்து வாங்கினார் சிவாஜி. அவற்றில் அவருக்கு தலையாய புகழ் கொடுத்த வேடம், 'நூர்ஜஹான்' நாடகத்தில், அவர் ஏற்று நடித்த அழகுக்கிளி 'நூர்ஜஹான்' வேடம். அந்த நாடகத்தையும், அதில் அவரது அந்த ஸ்திரீபார்ட் வேட நடிப்பையும் பார்த்து பாராட்டாத பிரபலங்களே இல்லை.

    7. சிவாஜி, சக்தி நாடக சபாவில் இருந்த போது, ஏ.பி.நாகராஜனும் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரே நாடகத்தில், ஏபிஎன்
    ராஜபார்ட்டாகவும், அவரது ஜோடி ஸ்திரீபார்ட்டாக சிவாஜியும் நடித்திருக்கிறார்கள்.

    8. "பராசக்தி" படத்தில் நடிக்கும் போது சிவாஜிக்கு மாத சம்பளம் தான். சற்றேறக்குறைய இரண்டு வருடங்கள் தயாரிக்கப்பட்ட அப்படத்தின் கதாநாயகனான சிவாஜிக்கு மாதந்தோறும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.

    9. "பராசக்தி" படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, "பணம்", "பூஙகோதை" படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தார். "பராசக்தி" வெளியான மறுதினமே "திரும்பிப் பார்" திரைப்படத்திலும், "மனோகரா"விலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    10. 1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
    மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார். அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.

    11. 1953 பொங்கல் திருநாளிலிருந்த்து, தான் அமரராவதற்கு முன் வந்த 2001 பொங்கல் திருநாள் வரை, ஒவ்வொரு பொங்கலன்றும், வேலூருக்குச் சென்று, தன்னை வாழ வைத்த தெய்வம் பெருமாள் அவர்களுக்கு மரியாதை செய்து, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் புத்தாடைகள் வழங்குவதை ஒரு வழக்கமாகக் (கடமையாகக்) கொண்டிருந்தார். பெருமாள் தம்பதியரை வணங்கி ஆசி பெறுவார். 1979-ல் பெருமாள் அமரரான பின்னரும் கூட, ஒவ்வொரு பொஙகலன்றும் வேலூருக்கு சென்று, அவரது மனைவியை வணங்கி ஆசி பெற்று புத்தாடைகளை அளித்து வந்தார். சிவாஜியின் மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தினர், ஒவ்வொரு பொங்கலுக்கும் வேலூர் சென்று, பெருமாள் அவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்து புத்தாடைகளை வழங்கி வருகின்றனர்.

    12. சென்னை மாநகரில், முதன்முதலில் 5 திரையரங்குகளில் [சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி, லட்சுமி] வெளியான படம் "மனோகரா(1954)". அதே போன்று சிங்காரச் சென்னையில், 6 திரையரங்குகளில் [அசோக், சன், ஸ்ரீமுருகன், நூர்ஜஹான், கபாலி, பிரைட்டன்] வெளியான முதல் படம் "நானே ராஜா(1956)".

    13. 1955-ன் தொடக்கத்தில் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து அவர் அருளால் சிறந்ததொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொண்ட சிவாஜி தீவிர பிள்ளையார், ஐயப்ப பக்தர். பல ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று பயபக்தியுடன் ஹரிஹரஸுதனை தரிசித்து வணங்கியிருக்கிறார். மாரியம்மனிடமும் சிவாஜிக்கு அளவற்ற பக்தி உண்டு.

    14. 1957 முதல் 1961 வரை, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை இந்தியாவெங்கும், சற்றேறக்குறைய 112 முறை நடத்தி, அதன் மூலம் வசூலான தொகையில், நாடகச் செலவு, தனது சிவாஜி நாடக மன்ற உறுப்பினர் சம்பளம் போக, கிட்டத்தட்ட ரூ.32,00,000/-த்தை (ரூபாய் முப்பத்து இரண்டு லட்சங்களை), பல்வேறு ஆக்கப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கினார். குறிப்பாக, தென்னகமெங்கும், பல பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் இந்நாடகம் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடைகளால் தான் உருவானது.

    15. "ராணி லலிதாங்கி" திரைப்படம் வெளிவந்த சமயம், படத்தைப் பார்த்து விட்ட கழகத் தோழர் ஒருவர், அதில் சிவாஜியின் நடிப்பையும், நாட்டியத்தையும் கழகத் தலைவர் அண்ணாவிடம் வானளாவப் புகழ, அன்று இரவுக்காட்சியே யாரும் அறியாவண்ணம், மாறுவேடம் பூண்டு, முண்டாசு எல்லாம் கட்டிக் கொண்டு படத்தை பார்த்து விட்டு வந்தார் அண்ணா.

    16. "சம்பூர்ண ராமாயணம்" திரைப்படத்தை கண்டு களித்த மூதறிஞர் ராஜாஜி "சிவாஜியின் நடிப்பில் பரதனைக் கண்டேன்" என்று வியந்து பாராட்டினார். "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படத்தை பார்த்து ரசித்த வ.உ.சி.யின் புதல்வர் சுப்ரமண்யம் "நடிகர் திலகத்தின் ரூபத்தில் எனது தந்தையாரை தரிசித்தேன்" என உருக்கத்துடன் புகழ்ந்துரைத்தார். இந்த இரு பாராட்டுக்களைத் தான், தனக்கு நெருக்கமானவர்களிடம் பெருமையோடு கூறி, இன்புறுவார் சிவாஜி.

    17. மத்திய அரசு கொண்டு வந்த, பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்கு, 1959-ம் ஆண்டு, தமிழக முதல்வர் காமராஜர் முன்னிலையில், பாரதப் பிரதமர் நேருவிடம் ரூ.1,00,000 /- தொகையை வாரி வழங்கிய முதல் இந்திய நடிகர் வள்ளல் சிவாஜி.

    18. நடிகர் திலகத்தின் முதல் கறுப்பு-வெள்ளைப் படமும் (பராசக்தி) வெள்ளிவிழாக் கண்டுள்ளது. அவரது முதல் வண்ணப்படமும் (வீரபாண்டிய கட்டபொம்மன்) வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளது. உலக சினிமா சரித்திரத்திலேயே - ஒரு கதாநாயக நடிகருக்கு - இது ஒரு அபூர்வமான சாதனை.

    19. இந்தியத் திரையுலகக் கலைஞர்களில், அதிக அளவில் உலக விருதுகளை வென்ற மாபெரும் சாதனையாளர். 1960-ல் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் என கௌரவிக்கப்பட்டு வெள்ளிப்பருந்து சிலையையும் பரிசாகப் பெற்றார். 1995-ல், பிரான்ஸ் நாடு இவருக்கு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான செவாலியே விருது வழங்கி கௌரவித்தது.

    20. 1960-ல் தமிழகம் கடும்புயல், பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, முதல்வர் காமராஜர் அவர்களின் மேற்பார்வையில், சிவாஜி அவர்கள் தனி மனிதனாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.

    21. 1961-ல் தனது 'அன்னை இல்ல'த்தில், ஒரு பிள்ளையார் கோவிலை உருவாக்கினார் இந்த கலைப்பிள்ளையார். 2010-ல் பொன்விழா தொடக்கத்தைக் காணும் இப்பிள்ளையார் கோவிலின் கும்பாபிஷேகம் சில மாதங்களுக்கு முன்னர் அவரது அருந்தவப்புதல்வர்களால் மங்களகரமாக நடத்தப்பட்டது. 50 ஆண்டுகளாக இந்த வழியாக போவோர், வருவோர் எல்லாம் இந்த விநாயகரை வழிபட்டு வாழ்வில் மேன்மை பெற்றுள்ளனர்.

    22. சிங்காரச் சென்னையில், முதன்முதலாக, ரூபாய் பத்து லட்சத்திற்கும் மேல் மொத்த வசூலை அளித்த திரைப்படம் "பாவமன்னிப்பு". தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு ஏசி டீலக்ஸ் திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட முதல் திரைப்படம் "பாவமன்னிப்பு". [திரையரங்கம் : சென்னை - சாந்தி]

    23. 1962-ல், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் கலைத்தூதுவராக, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகளுக்கும் விஜயம் செய்து பற்பல பாராட்டுக்களையும், கௌரவங்களையும் பெற்றார். அமெரிக்க பயணத்தின் போது, நியூயார்க் மாநிலத்தில் உள்ள எழில் கொஞ்சும் நகரமான நயாகரா நகரின், ஒரு நாள் கௌரவ மேயராக, தங்கச்சாவி கொடுத்து கௌரவிக்கப்பட்டார். பிரதமர் நேருவிற்குப் பிறகு, இந்த கௌரவத்தை பெற்ற ஒரே இந்தியர் சிவாஜி.

    24. 1962-ல் சீனப் படையெடுப்பின் போது ரூ.40,000/-, 1965-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது ரூ.1,15,000/- மற்றும் 600 பவுன் தங்கம், 1999-ல் கார்கில் போரின் போது ரூ.1,00,000/-, யுத்த நிதியாக தாய்நாட்டிற்கு வழங்கியுள்ளார்.

    25. 1964-ல் பம்பாயில் சத்ரபதி சிவாஜி சிலை, 1968-ல் சென்னையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை, 1972-ல் ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை ஆகியவற்றை தன் சொந்த செலவில் நிறுவினார்.

    26. 1965-ல், இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது, போரில் காயமுற்ற நமது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிவாஜி அவர்கள், தமிழகத்தின் பல முன்னணிக் கலைஞர்களை போர்முனைக்கே அழைத்துச் சென்று, பல கலைநிகழ்ச்சிகள் நடத்தி, வீரர்களை மகிழ்வித்தார்.

    27. 1965-ன் இறுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுப்பினரானார். அதிலிருந்து 1988 ஜனவரி வரை, கிட்டத்தட்ட 23 வருடங்கள், காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தனது உடல், பொருள், ஆவி ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்.

    28. 1966-ல் பத்மஸ்ரீ, 1982-ல் ராஜ்யசபை எம்.பி., 1984-ல் பத்மபூஷன், 1997-ல் தாதா சாகேப் பால்கே விருது என தாய்த்திருநாடும் தன் தலைமகனை கௌரவித்திருக்கிறது.

    29. 1971ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில், 47 சென்ட் நிலம் வாங்கி, அதில் கட்டபொம்மன் சிலையை நிறுவினார். தமிழகமெங்கும் பல ஊர்களில், பெருந்தலைவர் காமராஜர் சிலைகளை, தன் சொந்த செலவில் நிறுவியிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைத்தார். பல இடங்களில் அம்பேத்கர் சிலைகள் அமைய தாராளமாக நிதியுதவி செய்தார்.

    30. சிவாஜியின் தாத்தா சின்னசாமி காளிங்கராயர் (அம்மாவின் அப்பா), அக்காலத்திலேயே, குழந்தைகளுக்கு தமிழ்ப்பற்றும், இறையுணர்வும் வரவேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தில் தனது சொந்த செலவில் விழுப்புரத்தில் தேவாரப் பாடசாலை நடத்தி வந்தார். அந்தத் தேவாரப் பள்ளியில் மாணவராகப் பயின்றவர் தான், பிற்காலத்தில் தமிழிசைக்கு அருந்தொண்டு புரிந்த தமிழிசை மாமேதை இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர்.

    31. விருந்தோம்பலில் சிறந்தது அன்னை இல்லம். அன்னை இல்லத்தில் சாப்பிடாதவர்களே இல்லை. சாதாரண ரசிகர்கள் முதல் உலகப் பிரபலங்கள் வரை அனைவரும் கமலா அம்மாள் கையால் உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அதே போன்று, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு, சிவாஜிக்கு வரும் மதிய உணவும் அங்குள்ள அனைவரும் (குறைந்த பட்சம் 10 பேராவது) சாப்பிடும் அளவுக்கு ருசியாக நிறைய செய்து அனுப்பி வைப்பார் கமலா அம்மாள்.

    32. "உத்தமபுத்திரன்" திரைப்படத்தில் 'யாரடி நீ மோகினி' பாடல் காட்சியில் நடிக்கும் போது 102 டிகிரி ஜுரத்துடன் நடித்தார். "பாலும் பழமும்" படத்தில் கண்பார்வை இழந்தவராக படுக்கையில் படுத்துக் கொண்டு அவர் நடித்த காட்சிகளின் போதும் அவருக்கு High Fever. அதே போன்று "கலாட்டா கல்யாணம்" திரைப்படத்தில் வரும் 'அப்பப்பா நான் அப்பனல்லடா' பாடல் காட்சி படமாக்கப்பட்ட போதும் காய்ச்சலுடன் நடித்தார். "இரு துருவம்" படத்தின் வெளிப்புறக் காட்சிகள் ஷூட்டிங்கின் போதும் கூட கடும் காய்ச்சலுடன் நடித்துக் கொடுத்தார். தன்னால் படத்திற்கு,
    படப்பிடிப்பிற்கு எந்தவிதத்திலும் பங்கம் வந்துவிடக் கூடாது என்கின்ற உயர்ந்த கொள்கை கொண்டவர்.

    33. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக "உத்தமபுத்திரன்" திரைப்படத்தில் தான் படமாக்கத்தில் Zoom Lens
    உபயோகப்படுத்தப்பட்டது. 'உன்னழகை கன்னியர்கள்' பாடலுக்கு இந்த யுக்தி கையாளப்பட்டது. "உனக்காக நான்" திரைப்படத்தில், நடிகர் திலகம் தனது கண்களுக்கு சிறப்பு லென்ஸ் அணிந்து கொண்டு நடித்தார்.

    34. "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் அவர் வாழ்ந்து காட்டிய "அப்பர்" வேடத்திற்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration), காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

    35. இயக்குநர் ஸ்ரீதருக்கு கை விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உண்டு. அவரது அந்த மேனரிஸத்தை, நடிகர் திலகம், தான் நடித்த "தெய்வமகன்" விஜய் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அவரது மிக நெருங்கிய நண்பர் தொழிலதிபர் டிவிஎஸ் கிருஷ்ணாவின் மேனரிஸங்களை "கௌரவ"த்தின் பாரிஸ்டர் ரோலில் பார்க்கலாம். இன்னொரு நெருங்கிய நண்பரான இண்டியா சிமெண்ட்ஸ் நாராயணசுவாமியின் மேனரிஸங்கள் பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் [வியட்நாம் வீடு] பாத்திரத்தில் இருக்கும்.

    36. உலகப் பெரும் சினிமா நிறுவனமான 20th Century Fox நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளக்க உரையுடன் வியாபார ரீதியாக வெளியிட உரிமை பெற்ற முதல் தமிழ்ப் படம் "தில்லானா மோகனாம்பாள்".

    37. சிங்கப்பூர் நாடு கண்டுபிடிக்கப்பட்ட 150வது ஆண்டு விழாவில் திரையிடுவதற்காக, சிங்கப்பூர் அரசால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுககப்பட்டு, சிங்கப்பூர் வெளி விவகார மந்திரி முன்னிலையில், சிறப்புக் காட்சியாக காட்டப்பட்ட திரைப்படம் "தங்கச்சுரங்கம்".

    38. ஹிந்தி நடிகர் ராஜேந்திரகுமார், சிவாஜியைப் பார்க்கும் போதெல்லாம், "நீங்கள் ஒரு ஹிந்திப் படத்திலாவது அவசியம் நடிக்க வேண்டும். உங்களது தமிழ்ப் படங்களைப் பார்த்தே உங்களுக்கு இந்தியாவெங்கும் எவ்வளவு ரசிகர்கள் தெரியுமா! உங்கள் ஹிந்திப் படம் வெளியாகும் நாளில் பம்பாயில் பூகம்பமே ஏற்படும்." என்றார். சில வருடங்கள் கழித்து, தர்த்தி திரைப்படத்தில், சிவாஜி நடித்தார். தர்த்தி வெளியான தினத்தன்று [6.2.1970], பம்பாயில் நிஜமாகவே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    39. முதல் வெளியீட்டில், வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை" திரைப்படத்தினுடைய முடிவு, தமிழகத்தில் சுபமாகவும், கேரளத்தில் சோகமாகவும் காண்பிக்கப்பட்டு, இரு மாநிலங்களிலுமே பெரும் வெற்றி. "பராசக்தி"க்குப் பிறகு, தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இந்தியாவிலும், இலங்கையிலும் என இரு நாடுகளில் வெள்ளி விழா கொண்டாடிய படம் "வசந்த மாளிகை". [இந்தியா - 200 நாள், இலங்கை - 287 நாள்]

    40. இந்திய அரசினால், நெகடிவ் உரிமை வாங்கப்பட்டு, இந்திய முக்கிய மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம், தேசிய திலகத்தின் "பாரத விலாஸ்".

    41. "கௌரவம்" திரைப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்காக, ராஜேஷ் கன்னாவிடம் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த பின் ராஜேஷ் கன்னாவின் வாக்குமூலம்: "கண்ணன் ரோலை வேண்டுமானால் நான் முயன்று பார்க்கலாம். ஆனால் அந்த பாரிஸ்டர் ரோலை நான் மட்டுமல்ல, பாலிவுட்டிலே கூட யாரும் நடிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், ஹாலிவுட்டிலே கூட சிவாஜி போல் நடிக்க அங்குள்ள எவராலும் முடியாது. இந்தப் படத்தை தயவு செய்து எந்த மொழியிலும் ரீமேக் செய்ய வேண்டாம். அப்படிச் செய்தால் விஷப்பரீட்சையாகி விடும்."

    42. தமிழ் சினிமா சரித்திரத்தில், எண்ணிலடங்கா சாதனைகளின் கருவூலம் "திரிசூலம்". தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, முதன்முதலில், பத்து திரையரங்குகளில் [தமிழகத்தில் 8 திரையரங்குகள், இலங்கையில் 2 திரையரங்குகள்] வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் படம் "திரிசூலம்".

    43. பாரதியாரின் கவிதைகள் என்றால் இவருக்கு உயிர். பாரதி பாடல்களில் 'பாரத சமுதாயம் வாழ்கவே', 'நெஞ்சு பொறுக்குதில்லையே' All time favourites. கண்ணதாசனின் 'மலர்ந்தும் மலராத', வாலியின் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல' ஆகிய பாடல்களையும் அடிக்கடி முணுமுணுப்பார். வைரமுத்துவின் பாடல்களும் பிடிக்கும்.

    44. பாரதிதாசனார் ஒரு சிவாஜி வெறியர். தனது குயில் பத்திரிகையில் நடிகர் திலகத்தைப் பற்றி பல தருணங்களில் வானளாவ புகழ்ந்து கவிதைகளும், செய்தி கட்டுரைகளும் வரைந்திருக்கிறார்.1962-ல் அவரது படைப்பான 'பாண்டியன் பரிசை', அதே பெயரில் நடிகர் திலகத்தை கதாநாயகனாகக் கொண்டு படமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. படத் தொடக்க விழாவும் நடைபெற்றது. ஆனால், அதற்குப் பிறகு, பற்பல காரணங்களினால், படப்பிடிப்பு நடைபெறாததால், படம் வளரவில்லை.

    45. கர்மவீரர் காமராஜர், கலைக்குரிசிலின் சில திரைப்படங்களை, பிரத்யேக சிறப்புக் காட்சியாக கண்டு களித்து, நடிகர் திலகத்தை பாராட்டியுள்ளார். அப்படி அவர் பார்த்து பாராட்டிய திரைப்படங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், நவராத்திரி, ராஜபார்ட் ரங்கதுரை, சினிமா பைத்தியம் [வீர வாஞ்சிநாதனாக சிவாஜி நடித்த காட்சிகள் மட்டும்].

    46. சிவாஜி ஆங்கிலப் படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பார். சென்னை காஸினோ திரையரங்கில் இரவுக்காட்சியாக ஆங்கிலப்படம் கண்டு களிப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஹிந்திப் படங்களில் அவரை மிகவும் கவர்ந்தவை, "ஜனக் ஜனக் பாயில் பாஜே" மற்றும் "ஷோலே". எம்.ஜி.ஆர் படங்களில் "ஆயிரத்தில் ஒருவன்", "நாடோடி மன்னன்", "அடிமைப் பெண்" ஆகிய படங்கள் ரொம்பப் பிடிக்கும்.

    47. சில தமிழக விஐபிக்களுக்கு மிகவும் பிடித்த சிவாஜி படங்கள்:
    எம்.ஜி.ஆருக்கு பிடித்த சிவாஜி படம் "ஆலயமணி"; கலைஞருக்கு பிடித்த தனது நண்பரின் படம் "தில்லானா மோகனாம்பாள்"; மூப்பனாருக்கு பிடித்த நடிகர் திலகத்தின் திரைப்படம் "முதல் மரியாதை"; மு.க.அழகிரியின் மனதைக் கவர்ந்த திரைப்படம் "இருவர் உள்ளம்"; பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கு பிடித்த படம் "பாசமலர்".

    48. பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சனுக்கு மிகவும் பிடித்த நடிகர் நமது நடிகர் திலகம். சிவாஜியை எங்கு எப்பொழுது பார்த்தாலும் அவரது காலில் விழுந்து வணங்குவார் அமிதாப். இன்னொரு பாலிவுட் பிரபலமான அமீர்கான் நடிகர் திலகத்தின் "கர்ணன்" திரைக்காவியத்தைப் பார்த்து விட்டு அப்படியே ஆடி அசந்து மிரண்டு போய் விட்டாராம்.

    49. தங்களது தந்தையார் நடித்த திரைப்படக் கதாபாத்திரங்களில், மூத்த மகன் தளபதி ராம்குமாருக்கு பிடித்த ரோல் 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்' [கௌரவம்]. இளைய மகன் இளைய திலகம் பிரபுவுக்கு பிடித்த வேடம் 'அப்பர்' [திருவருட்செல்வர்].

    50. 1990களில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த சமயம், அவரைக் காண, மனைவி கமலாவுடன் சிவாஜி, எம்.எஸ். அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். எம்.எஸ்., அவரது கணவர் சதாசிவம் ஆகியோரைக் கண்டு உடல் நலம் விசாரித்தார் சிவாஜி. கிளம்புவதற்கு முன், சிவாஜி சதாசிவத்தை நோக்கி, "எம்.எஸ். அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும். அவரது குரல் இந்த தேசத்திற்கே சொந்தம்" என்றார். அதற்கு சதாசிவம் சிவாஜியிடம்,"உங்களுக்கும் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். எங்களால் வந்து உங்களை பார்க்க முடியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். எம்.எஸ்.ஸின் குரல் மட்டும் தான் இந்த தேசத்திற்கு சொந்தம். ஆனால், உங்கள் உடம்பே இந்த நாட்டிற்கு சொந்தம். ஆகையால், உங்கள் உடம்பையும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!


    51. நடிகர் திலகம், காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையை விரும்பிக் கேட்பார். 1962-ல், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று உலகப்பயணம் செய்த போது, காருக்குறிச்சியாரின் இசைத்தட்டுகளை மறக்காமல் எடுத்துச் சென்றார்.

    52. ஹாலிவுட் படங்களின் இசையமைப்பு, BGM, Sound Effects இவையெல்லாம் நடிகர் திலகத்துக்கு நிரம்பப் பிடிக்கும். "மியூசிக்கிலேயே மிரட்டுறாங்க பாரு" என்று புகழ்ந்துரைப்பார். ஹிந்தியில், லதா மங்கேஷ்கரின் குரலுக்கு அதி திவீர ரசிகர். சிவாஜியின் மனைவி கமலா, ஆஷா போன்ஸ்லேவின் விசிறி. [லதா, ஆஷா இருவருமே சிவாஜி பக்தைகள்!]. தென்னகத்தில் சுசீலா, ஜானகி, ஈஸ்வரி, வாணி ஜெயராம் எல்லோர் குரலும் பிடிக்கும். கே.பி.சுந்தராம்பாளின் கணீர்க்குரல் இவர் மனம் கவர்ந்த ஒன்று. 'திருவிளையாடல்' திரைப்படத்தில் வரும் 'ஞானப்பழத்தைப் பிழிந்து' பாடலின் பரம விசிறி. இப்பாடலை 'சர்பத் பாட்டு' என்று தான் செல்லமாக அழைப்பாராம்.

    53. ஜி.ராமநாதன் அவர்களின் இசையமைப்பைப் பற்றி புகழ்ந்து கூறுவார். "உங்கள் இசை எப்பொழுதுமே நன்றாகத் தானிருக்கும்" என்று அவரிடமே பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது இசையையும் சிலாகித்துக் கூறுவார். "என் படங்களை விட அண்ணன் (எம்.ஜி.ஆர்.) படங்களுக்குத் தான் நீ தூக்கலாக இசையமைத்துக் கொடுக்கிறாய்! உன்னை கவனித்துக் கொள்கிறேன்' என செல்லமாக, உரிமையுடன் எம்.எஸ்.வியிடம் கடிந்து கொள்வதும் உண்டு. இளையராஜா இசையமைத்த பாடல்களில் சிவாஜிக்கு மிகவும் பிடித்தவை "செந்தூரப்பூவே" [பதினாறு வயதினிலே] மற்றும் "மாஞ்சோலைக்கிளிதானோ" [கிழக்கே போகும் ரயில்].

    54. "தூக்கு தூக்கி"யில் டி.எம்.எஸ். பாடி பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்டு, அவர் தனக்குப் பாடுவதற்கு பச்சைக் கொடி காட்டினார் சிவாஜி. "பெரிய பாகவதர் போல பாடியிருக்கிறீர்கள். உங்களுடைய அருமையான, வளமான குரல் எனக்கு பொருத்தமாக இருக்கும். தொடர்ந்து நீங்களே எனக்கு பின்னணி பாடுங்கள்" எனக் கூறிப் பாராட்டினார். பின்னொரு சமயத்தில், "உங்கள் குரலும் என் குரலும் ஒன்று போலத் தான் இருக்கிறது. நான் நடிப்பில் கொடுக்கும் பாவத்தை நீங்கள் பாட்டில் கொடுக்கிறீர்கள். ஆகையால் பாடலின் போது வரும் வசனங்களை அந்தந்த பாவங்களைக் கொடுத்து நீங்களே பேசுங்கள்." என்றார். டி.எம்.எஸ் இதைப் பலரிடம் சொல்லி பெருமைப்படுவாராம்.

    55. "பொட்டு வைத்த முகமோ" பாடலை முதன்முதலாக எஸ்.பி.பி. தனக்கு பின்னணி பாடிய போது, 'நீ உன் குரலிலேயே பாடு, நான் அட்ஜெஸ்ட் பண்ணி நடித்துக் கொள்கிறேன்' எனப் பெருந்தன்மையோடு கூறினார் சிவாஜி. எஸ்.பி.பி., ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாடல்கள் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், காலை வேளைகளில், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல் ஆல்பங்களை கேட்டு பரவசப்படுவார். தனக்கு முதன்முதலில் பின்னணி பாடிய சிதம்பரம் ஜெயராமனின் குரல் ரொம்பப் பிடிக்கும்.

    56. வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வரும் நேயர் விருப்ப திரைப்படப் பாடல்கள் நிகழ்ச்சியில், அன்று முதல் இன்று வரை, அதிக நேயர்கள் விரும்பிக் கேட்ட / கேட்கின்ற பாடலாக இருப்பது "பாசமலர்" திரைக்காவியத்தின் 'மலர்ந்தும் மலராத' பாடல்.

    57. சிவாஜி அவர்கள், எம்.ஜி.ஆரை 'அண்ணன்' என்றும். எஸ்,எஸ்.ஆரை 'ராஜூ' என்றும், ஜெமினியை 'மாப்ளே' என்றும், ஸ்ரீகாந்தை 'வெங்கடா' என்றும், பீம்சிங்கை 'பீம்பாய்' என்றும், பந்துலுவை 'பிஆர்பி(BRB)' என்றும், முக்தா சீனிவாசனை 'சீனு' என்றும், பத்மினியை 'பப்பி' என்றும், சாவித்திரியை 'தங்கச்சி / சிஸ்டர்' என்றும், சௌகார் ஜானகியை 'பார்ட்னர்' என்றும், சரோஜாதேவியை 'சரோ' என்றும், அஞ்சலிதேவியை 'பாஸ்(Boss)' என்றும், ஜெயலலிதாவை 'அம்மு' என்றும், வெண்ணிற ஆடை நிர்மலாவை 'ஸ்வீட் கேர்ள்(Sweet Girl)' என்றும் அன்பாகவும், செல்லமாகவும் அழைப்பார்.

    58. கலைஞர் கருணாநிதி எழுதும் திரைப்பட வசனங்கள் மிகவும் சிறப்பானவை என மனதாரப் பாராட்டும் சிவாஜி, தனக்கு அவர் எழுதிய திரைப்பட வசனங்களில் தனக்கு மிகவும் பிடித்தது "திரும்பிப் பார்" படத்தின் வசனங்கள் என்றும் கூறியிருக்கிறார். கலைஞரை சிவாஜி "மூனாகனா" என்று தான் அழைப்பார். அவர் இவரை "கணேசு" என்பார்.

    59. எந்த மேக்கப்மேன் சிவாஜிக்கு மேக்கப் போட்டு விட்டாலும், புருவத்தை மட்டும் தானே தான் எழுதிக் கொள்வார். "திருவருட்செல்வர்" அப்பர், "தெய்வமகன்" கண்ணன், சங்கர், "நவராத்திரி" குஷ்டரோகி இன்னும் இது போன்ற பல கதாபாத்திரங்களின் மேக்கப்பிற்காக, பல மணி நேரங்கள் உடலை வருத்திக் கொண்டதுண்டு.

    60. படப்பிடிப்பின் போது, எந்தவொரு காஸ்ட்யூமை தான் அணிந்து கொண்டு நடித்தாலும், அந்த உடை கசங்காமல், அழுக்காகாமல் இருப்பதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்.

    61. தன்னுடன் நடிக்கும் நடிக, நடிகையர் நன்றாக நடிக்கும் போது மனம் திறந்து பாராட்டுவார். பல சமயங்களில் கூட நடிப்பவர்களுக்கு, காட்சிக்கு ஏற்றாற் போல், நடிப்பு சொல்லிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி நடிக்கச் செய்வார். பானுமதி, சாவித்திரி, சௌகார் ஜானகி, மனோரமா ஆகியோருடன் நடிப்பது பற்றி இப்படிக் கூறுவார். "இவங்க கூட நடிக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா, கவனமா இருக்கணும். நாம கொஞ்சம் அசந்தா போதும், இவங்க performanceஸால நம்மளையே தூக்கி சாப்பிட்டுடுவாங்க."

    62. ஷுட்டிங் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு எத்தனை மணிக்கு வந்து படுத்தாலும் காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவார். காலை ஆறு மணிக்கு மேல் அவர் உறங்கியதாக சரித்திரமே இல்லை. 1990களில் தாடி வைப்பதற்கு முன் வரை, தினமும் ஷேவ் செய்வார். சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் போதும், சூரக்கோட்டைக்கு விடுமுறையாகச் செல்லும் போதும் மட்டும் தான் ஷேவ் செய்யாத சிவாஜியைப் பார்க்க முடியும். தினமும் இரு வேளை குளிப்பார். எந்த சீசனாக இருந்தாலும் குளியல் பச்சைத் தண்ணீரில் தான்.

    63. குளிர்ந்த மோர், காபி, அதிலும் பிளாக் காபி (Black Coffee) ஆகியவை இவர் விரும்பி அருந்துகின்ற பானங்கள். வேர்க்கடலை உருண்டைகளை விரும்பிச் சாப்பிடுவார். காலைச் சிற்றுண்டியாக விரும்பிச் சாப்பிடும் பலகாராங்கள் - இட்லி, பொங்கல், உப்புமா (ஏதேனும் ஒன்று). மதிய உணவில் கண்டிப்பாக அசைவம் இருக்க வேண்டும். டின்னரில் சில சமயங்களில் அசைவம் இடம்பெறும். மூன்று வேளைகளிலுமே அளவோடு தான் சாப்பிடுவார்.

    64. ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555 - இவர் புகைக்கும் சிகரெட். தம்பி ஷண்முகத்தின் மறைவுக்குப் பிறகு, மனைவி கமலாவின் அன்பு வேண்டுகோளை ஏற்று, கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக தன்னிடம் இருந்த புகை பிடிக்கும் பழக்கத்தை, ஒரே நாளில் கைவிட்டார். அதற்குப்பின், ஒரு நாள், ஒரு வேளை, ஒரு தடவை கூட சிகரெட் பிடித்ததில்லை. What a Will Power!

    65. தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் செய்தித்தாள்களை வாசிப்பார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செய்திகளுக்கே முதலிடம் கொடுப்பார்.

    66. சிவாஜி விமானப் பயணத்தின் போது மட்டும் அதிகம் பேச மாட்டார். பல சமயங்களில், விமானத்தில் ஏறி அமர்ந்த உடனேயே, கண்களை மூடிக் கொண்டு உறங்கி விடுவார்.

    67. காரில் பயணம் செய்யும் போது சினிமா, அரசியல், பொதுவான விஷயங்கள் என நிறைய பேசுவார். மிக நீண்ட தூர கார் பயணத்தின் போது, நிறைய பாடல்கள் கேட்பார். அதில் "கப்பலோட்டிய தமிழன்" படப் பாடல்கள் நிச்சயம் இருக்கும்.

    68. சிவாஜிக்கு தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சரளமாகப் பேசத் தெரியும். அந்தந்த மொழிக்காரர்களிடம் அவரவர்களது மொழியிலேயே பேசி அசத்துவார்.

    69. சிவாஜி எந்த இடத்திற்கு சென்றாலும் சுற்றுப்புறத்தை கூர்மையாக கவனிப்பார். வீட்டிலோ, வெளியிலோ எந்த இடத்திலும் அமர்வதற்கு முன் தான் உட்காரப் போகும் இருக்கை, தலை மேல் சுழலும் மின்விசிறி என ஒரு பார்வை பார்த்து விட்டுத் தான் உட்காருவார்.

    70. ரஷ்யா தவிர, கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார். ஒவ்வொரு நாட்டின் மக்கள் அணியும் விதவிதமான தொப்பிகளை சேகரித்து 'அன்னை இல்ல'த்தில் பத்திரமாக பொக்கிஷம் போல் வைத்திருந்தார்.

    71. எந்த ஊர், எந்த மாநிலம், எந்த நாடு சென்றாலும் அந்தப் பகுதியினுடைய சிறப்பம்சங்கள், அங்குள்ள மக்கள், அவர்கள் செய்யும் தொழில், அந்தப் பிரதேசத்தினுடைய சிறப்பு உணவு வகைகள் என்கின்ற தகவல்களை அளித்து உடன் வருவோரை அசத்துவார். புவியியல் அறிவில் புலி இவர்.

    72. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும், தஞ்சைப் பெரிய கோயிலுக்கும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், திருப்பதி கோயிலுக்கும், சிவாஜி அவர்கள், யானையை காணிக்கையாகத் தந்துள்ளார். நாகை மாவட்டம் அன்னை வேளாங்கன்னி ஆலயத்திற்கு, ஆலயமணியை தன் சொந்த செலவில் அமைத்துக் கொடுத்தார்.

    73. 1982-ல், தமிழக அரசு கொண்டு வந்த சத்துணவு திட்டத்திற்கு, இளைய திலகம் பிரபு, தன் சார்பில் ரூ.25,000/-மும், நடிகர் திலகத்தின் சார்பில் ரூ.1,00,000/-மும், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் வழங்கினார்.

    74. 1986-ல் பெல்ஜியம் பல்கலைக்கழகமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் அவரது கலைச்சேவைக்காக, 'டாக்டர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது.

    75. தமிழ்த் திரையுலகில், எம்.கே.டி. பாகவதருக்குப் பின், கறுப்பு-வெள்ளையில், ஐந்து வெள்ளிவிழாப் படங்களை [பராசக்தி, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாசமலர், பட்டிக்காடா பட்டணமா] கொடுத்த ஒரே நடிகர் சிவாஜி. ஒரே காலண்டர் வருடத்தில்(1961), கறுப்பு-வெள்ளையில், இரு வெள்ளிவிழாப் படங்களை [பாவமன்னிப்பு, பாசமலர்] கொடுத்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, கறுப்பு-வெள்ளைப் படங்களில், முதல் வெளியீட்டிலேயே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வசூல் அளித்த ஒரே படம் "பட்டிக்காடா பட்டணமா".

    76. 2593 இருக்கைகளைக் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் திரையரங்கில், 'மூன்று' 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும், 'ஒன்பது' 50 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும் கொடுத்துள்ள ஒரே உலக நடிகர் நடிகர் திலகம். [ஆக மொத்தம், மதுரை தங்கத்தில் 'பன்னிரண்டு' 50 நாட்களைக் கடந்த படங்கள்]

    77. நமது இந்தியத் திருநாட்டின் மகத்தான தினங்களான சுதந்திர தினத்தன்று 7 சிவாஜி படங்களும், குடியரசு தினத்தன்று 13 சிவாஜி படங்களும் வெளியாகியுள்ளன.

    78. 'பண்டிகை தின ஹீரோ' என்றாலும் அது சிவாஜி தான். பொங்கல் வெளியீடுகளாக 23 திரைப்படங்களும், தமிழ்ப் புத்தாண்டு வெளியீடுகளாக 26 திரைப்படங்களும், தீபாவளி வெளியீடுகளாக 42 திரைப்படங்களும் கொடுத்துள்ளார்.

    79. கிரிக்கெட், கால்பந்து இரண்டு விளையாட்டுக்களும் மிகவும் பிடித்தமானவை. கிரிக்கெட்டில் கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகியோரின் தீவிர ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயங்களில் நேரில் சென்று கண்டு, களித்து, ரசித்து மகிழ்வார். Indoor விளையாட்டுக்களில் மிகவும் பிடித்தது கேரம். டென்னிஸ் மேதை ராமநாதன் கிருஷ்ணனுக்கு, அவரது டென்னிஸ் ஆர்வத்தை கண்டு வியந்து, ஊக்கத் தொகை அளித்து உயர்த்தியுள்ளார்.

    80. சென்னை தியாகராய நகரில் உள்ள நல்லியில் தான் தனது வீட்டிற்கு, வீட்டு விசேஷங்களுக்கு தேவையான பெரும்பாலான ஜவுளிகளை வாங்குவார். "நான் சம்பாதிப்பதில் ஒரு பெரிய பகுதியை உன் கடைக்குத் தான் கொடுக்கிறேன்" என நல்லி குப்புசாமியிடம் ஜோக்காகவும் கூறுவார்.

    81. நடிகர் திலகம் தனது ரசிகர்களை "பிள்ளைகள்" என்று தான் கூறுவார். ரசிகர், ரசிகர் மன்ற கடிதங்களையெல்லாம் தம்பி ஷண்முகம் தான் கவனித்துக் கொள்வார். சில சுவாரஸ்யமான, வித்தியாசமான, முக்கியமான கடிதங்களை மட்டும் அண்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்வார்.

    82. ஒரு நடிகருக்கு, இரு அரசுகள், சிலை அமைத்த பெருமை, நடிகர் திலகத்துக்கே. புதுவை அரசு சார்பில், முதல்வர் ரங்கசாமி, 11.2.2006 அன்று புதுச்சேரியில், சிவாஜிக்கு சிலை அமைத்தார். தமிழக அரசு சார்பில், முதல்வர் கலைஞர், 21.7.2006 அன்று சென்னையில், தன் ஆருயிர் நண்பனுக்கு சிலை அமைத்தார்.

    83. நடிகர் திலகத்தின் மறைவுக்குப் பிறகு, ஆண்டுதோறும் அவரது நினைவு மற்றும் பிறந்த தினங்களில், சிவாஜி - பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்ட் சார்பில், நடைபெறும் சிவாஜி நிகழ்ச்சிகள், விழாக்களில், திரையுலக முன்னோடிகளுக்கும், திரையுலக சாதனையாளர்களுக்கும் சிவாஜி விருதுகள் வழங்கப்படுகின்றன. அமரத்துவம் அடைந்த முன்னோடிகள், சாதனையாளர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்படுகின்றன
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •