Results 1 to 4 of 4

Thread: நகை

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    நகை

    “மேகா ! நாம காதலிக்க ஆரம்பிச்சு நாலு மாசம் ஆயிடுச்சி இல்லே!” – சூரி வழிந்தான்.

    “நாலு மாசம், ஆறு நாள், எட்டு மணி, இருவது நிமிஷம்” – மேகா அவனை திருத்தினாள். அவனுக்கு எந்த விதத்திலும் சளைத்தவளில்லை அவள்.

    “அதெல்லாம் சரி, இப்படியே எவ்வளவு நாள்? நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கிறது? உங்க வீட்டிலே நம்ம காதலை சொல்லிட்டியா?”

    “இன்னும் இல்லே சூரி , சீக்கிரமே சொல்லிடறேன். நீ உங்க வீட்டிலே சொல்லிட்டியா?”

    “ம். சொல்லிட்டேன். அம்மாக்கு ஓகே. ஆனால்அப்பா தான் கொஞ்சம் நல்ல இடமா பாக்கலாமே! எதுக்கு அரசாங்க குமாஸ்தா பொண்ணு ? வேண்டாமேன்னு பாக்கிறார்.”

    “ஏய்! ”- மேகா புருவத்தை நெரித்தாள்.

    “இல்லே இல்லே! சும்மா தமாஷுக்கு சொன்னேன். அப்பாவுக்கும் ஓகே தான்”

    “அதானே பார்த்தேன்! நானும் எங்க அம்மாகிட்டே இன்னிக்கே சொல்லிடறேன்”- மேகா வெட்கத்தோடு.

    “அப்புறம் என்ன? அப்போ நான் போய் நாளைக்கே உனக்கு ஒரு நிச்சயதார்த்த ப்ரெசென்ட் வாங்கிடறேன். ஒரு நல்ல நாளா பாக்க சொல்லு உங்க வீட்டிலே. நாங்க வந்துடறோம், நிச்சயம் பண்ண.”

    “சூரி , எனக்கு ஒரு ஆசை. ஒரு நல்ல வைர மோதிரம் வேணும்.”


    “நிச்சயத்திற்கு, உங்கப்பா தான் எனக்கு மோதிரம் போடணும். உனக்கு என்ன ஆசை? என் கிட்டே கேக்கிறே? ”

    “எங்கப்பா உனக்கு போடத்தான் மோதிரம் கேக்கிறேன். எங்கப்பாவாலே அவ்வளவு செலவு பண்ண முடியாதே! ”

    “ஆனா, மேகா , அது ரொம்ப விலையாகுமே? எனக்கும் கட்டுப்படி ஆகாதே?”

    ‘உன்னை யாரு இங்கே வாங்கி தர சொல்லறா?”

    “பின்னே! என்னை என்ன திருட சொல்றியா?”

    “அட ! எப்படி கண்டு பிடிச்சே? சுப்பர் சூரி ! அதேதான் ! எனக்காக நீ நகைக் கடைலேருந்து மோதிரத்தை நைசா அபேஸ் பண்ணணும். ”

    “அடி பாவி! என்னடி! விளையாடறியா? என் கையிலே மோதிரம் போடறேன்னு, கைக்கு விலங்கு போட்டுடுவே போலிருக்கே?”

    “அவசரப் படாதே சூரி , நான் சொல்லறதை கேளு! நான் இதுக்கு முன்னாடி அண்ணா சாலைலே ஸ்ரீமதி நகைக்கடையிலே தான் வேலை செஞ்சிக் கிட்டிருந்தேன்! அங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு அத்துபடி. யார்கிட்டேயும் மாட்டிக்காம, எப்படி நகையை லவுட்டனும்ன்னு எனக்கு தெரியும்!”

    “இதோ பாரு, அந்த ஸ்ரீமதி ஜ்வேல்லேர்ஸ்லே, எங்கே பாத்தாலும் சி.சி.டிவி கேமரா இருக்கு. நானே பார்த்திருக்கேன். பத்தடிக்கு ஒரு செகூரிடி. நான் சொல்றதை கேளு மேகா , நான் கடன் வாங்கியாவது மோதிரம் வாங்கிடறேன். இந்த திருட்டு எல்லாம் வேண்டாமே?”

    “சாதா நகை யாருக்கு வேணும் ? லைப்லே ஒரு த்ரில் வேணுண்டா. நான் சொல்றபடி கேட்டா, ஒரு ப்ளூ ஜாகர் டைமன்ட் மோதிரம் உனக்கு” - மேகா

    “எதுக்கு இந்த வேண்டாத த்ரில்? இந்த அட்வென்ச்சர் தேவையா? மாட்டிகிட்டா எவ்வளவு பிரச்னை? அவமானம்?”

    “இவ்வளவு தானா உனக்கு என் பேரிலே நம்பிக்கை, சூரி ? நான் சொல்லற பிளான் கேளு. ரொம்ப ரொம்ப சிம்பிள். அப்புறமா முடியுமா முடியாதான்னு முடிவு பண்ணிக்க! நானும் முடிவு பண்ணிக்கறேன், நம்ப கல்யாணம் வேணுமா வேண்டாமான்னு? ”

    “சரி சொல்லு. எப்ப பார்த்தாலும் இப்படி சொல்லியே ப்ளாக் மெயில் பண்றே ! ரொம்ப ரிஸ்க் எடுக்ககச்சொல்றே. எனக்கென்னவோ இந்த விபரீத விளையாட்டு வேண்டாமுன்னு தோணறது.”

    மேகா தனது திட்டத்தை சொன்னாள். சூரியும் , உன்னிப்பாக மேகா வின் நகை திருடும் ஐடியா கேட்டான். அவனுக்கு ஆச்சரியம். சூப்பரா இருக்கே.!

    “அட, பிளான் நல்லா இருக்கே, நடக்கும் போலிருக்கே. கேடி, உனக்கு எப்படி இப்படிஎல்லாம் ஐடியா தோணறது?”

    “நான் தான் அப்பவே சொன்னேனே! இது நடக்கும். நீ நாளைக்கே போறே! காரியத்தை கச்சிதமா முடிக்கறே. அப்புறம் நான் உனக்கு சூப்பரா ஒரு பரிசு தரேன்.” மேகா கண் சிமிட்டினாள்.

    ****


    அண்ணா சாலை ஸ்ரீமதி ஜ்வேல்லேர்ஸ்




    காலை 11 மணி. அது ஒரு பெரிய நகைக் கடை. குளிரூட்டப் பட்டது. வெள்ளி நகை, பாத்திரங்கள் ஒரு பக்கம், பிளாட்டினம் நகைகள் இன்னொரு பக்கம், தங்க சங்கிலி, மாங்கல்யம் போன்றவை வேறொரு பக்கம் என பிரிந்திருந்தது.

    வைர நகைகள் தனியாக உள்ளே ஒரு அறையில்.

    சூரி உள்ளே நுழைந்தான். மேகாவின் அறிவுரையின் பேரில், டிப் டாப் உடை. இடது வலது கையில் ரெண்டு ரெண்டு மோதிரம். நல்லா தெரியற மாதிரி, ஒரு பிரேஸ்லெட். கழுத்தில் செயின். எல்லாமே இமிடேஷன் நகை தான். மேகா உபயம்.

    கடையில், எங்கே திரும்பினாலும், ஒரு சி சி டிவி கேமரா. போவோர் வருவோரை படம் பிடித்துக் கொண்டிருந்தது. பத்தடிக்கு ஒரு மீசை வெச்ச செக்யூரிட்டி. பயமுறுத்தற மாதிரி, பான்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு. யம்மாடி! மாட்டினா டின் கட்டிடுவாங்களே.

    வாசல் செக்யூரிட்டி வணக்கம் சொல்லி, கதவை திறக்க, சூரி நேராக வைர நகை பகுதிக்கு போனான்.

    கடையில் , தலைக்கு நேரே, ரெண்டு கேமரா இவனையே பார்த்துக் கொண்டிருந்தது. வைர நகை பகுதியில், மூன்று நான்கு சிப்பந்திகள் வாடிக்கையாளருக்கு நகைகளை காண்பித்து கொண்டிருந்தனர்.

    சூரிக்கு, அந்த குளிரிலும் கொஞ்சம் வியர்த்தது. இரண்டு சிவிங்கம் எடுத்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தான். டென்ஷன் கொஞ்சம் குறைந்தது

    “சார்! சொல்லுங்க! என்ன வேணும்”

    “நல்ல, உசந்த வைர மோதிரம் காட்டுங்க. பெஸ்ட் டைமன்ட் தான் வேணும்”

    “இதோ! இத பாக்கறீங்களா”

    கடை சிப்பந்தி மரியாதையுடன், வைர மோதிரங்களை எடுத்து வைத்தான்.

    “இல்லேயில்லே, எனக்கு ரூபா இரண்டு லட்சம் ரேஞ்சுக்கு மேலே காமிங்க”

    “சார், அப்போ ஒரு நிமிஷம் இருங்க சார், மேனேஜரை வர சொல்லறேன்”

    “பரவாயில்லே. நீங்களே காமியுங்க’ – சூரி அசத்தலாக !

    சிப்பந்தி உள்ளே சென்று, விலையுர்ந்த மோதிரங்களை எடுத்து கொண்டு வந்தான்.

    சூரி ஒரு பத்து பதினைந்து மோதிரங்களை எடுத்துப் பார்த்தான். ஒன்றிரண்டை விரலில் அணிந்தும் பார்த்தான். அடிக்கடி முகத்தை துடைத்து கொண்டான்.

    “எதை எடுக்கறதுன்னே தெரியலே. எல்லாமே நல்லாதான் இருக்கு !எனக்கு ஒண்ணும் புரியலே. குழப்பமா இருக்கு. ஒன்னு செய்யறேன் ! நாளைக்கு எனது மனைவியோட வரேன்”

    “பரவாயில்லே சார், நாளைக்கே வாங்க. இன்னும் கூட லேட்டஸ்ட் டிசைன் இருக்கு. காட்டறேன்” – சிப்பந்தி தனது ஏமாற்றத்தை மறைத்து கொண்டு வழியனுப்பினான்.

    வைர நகை அறையை விட்டு வெளியே வந்த சூரி , நேராக, வேறொரு பகுதிக்கு நடையை கட்டினான். அங்கு ஒரு சவரனில் சாதாரன தங்க மோதிரம் ஒன்றை வாங்கி கொண்டான். காஷ் கவுண்டரில் பணம் கட்டி ரசீது வாங்கி கொண்டு, மோதிரத்தை டெலிவரி எடுத்துக் கொண்டு, கடையை விட்டு வெளியே வந்து விட்டான்.

    வெயில் அவன் முகத்தில் அறைந்தது.


    ***

    ஸ்ரீமதி ஜ்வேல்லேர்ஸ் . அரை மணி நேரம் கழித்து.

    வைர நகை பகுதியில் கொஞ்சம் சத்தம். கொஞ்சம் பதட்டம். சிப்பந்திகள், செகூரிட்டி இங்கே அங்கே என்று அலைந்தனர். விஷயம் இதுதான் : மேஜை மேல் வாடிக்கையாளருக்காக காட்டி விட்டு வைத்த நகையை காணோம். ஒரு விலையுயர்ந்த மோதிரம், இரண்டு லக்ஷம் பெறும், பட்டப் பகலில் திருடு போய் விட்டது.

    திருடு போன சமயத்தில், அந்த பகுதியில், கஸ்டமர், நான்கைந்து பேர் மட்டுமே இருந்தனர்.

    கடையின் ஒரு பக்கம், காதும் காதும் வைத்தது போல் ஊழியரிடம் ரகசிய விசாரணை நடந்து கொண்டிருந்தது. கடைக்கு இது ஒரு பெரிய இழப்பு இல்லையென்றாலும், திருட்டை நிர்வாகம் கண்டு பிடித்தே ஆகவேண்டும்.

    கடை சிப்பந்திகள் நடுவே ஒரு ஒழுக்கத்தை, திருடினால் மாட்டிக் கொள்வோம் எனும் பயத்தை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

    இன்னொரு பக்கம், நகை கடை செக்யூரிட்டி சீப் தீபக், அவர் ஒரு ஒய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், தனி அறையில், களவு நடந்த நேரத்து , கேமரா பதிவுகளை பார்த்து கொண்டிருந்தார்.

    “நிறுத்து நிறுத்து!” “கொஞ்சம் பின்னாடி போ”, “முன்னாடி வா” , “ திரும்பி நாலு பிரேம் ரிவர்ஸ் போ.. “அதேதான்”. “அங்கேயே பிரீஸ் பண்ணு.” – தீபக் உன்னிப்பாக சி சி டிவி கேமரா பதிவை பார்த்தார். “அதோ அந்த டிப் டாப் ஆசாமி , அங்கே என்ன பன்றான்?”

    “ஏதோ வாயிலே போட்டு மெல்லறான் சார்” – அவரது துணை அதிகாரி துரை

    “சிவிங்கம்”
    “ஆமா சார்!”

    “அவன் ஏன் இந்த பக்கம், அந்த பக்கம் பாக்கிறான்? அவன் முகத்திலே கொஞ்சம் டென்ஷன் தெரியுது. அவன் இருக்கிற அடுத்த பிரேமுக்கு போ. இன்னும் மேலே போ. நிறுத்து நிறுத்து. இப்போ பார். அவன் வாய மெல்லலே. ஏன்? இதுக்கு என்ன அர்த்தம்?” –தீபக்

    “சிவிங்கத்தை எங்கேயோ துப்பிட்டான் போலிருக்கு சார். இல்லே முழுங்கிட்டானா?”

    “என்னய்யா துப்பு துலக்கறே? இது கூட தெரியலியா? குழந்தை கூட சொல்லிடுமே?”

    “தெரியலே சார்!”

    “நீ சரியான தத்திய்யா. அந்த சிவிங்கம் தான் அவனது ஆயுதம். இந்த திருட்டு அதை வெச்சு தான் நடந்திருக்கிறது.”

    “சார்! புரியலியே சார்!”

    “அவன் வைர மோதிரத்தை அந்த சிவிங்கத்திலே ஒட்டி , அதை ஏதோ ஒரு மேசைக்கு அடியிலே ஒட்டிட்டிருப்பான். எனது யூகம் சரின்னா, அவனது கூட்டாளி , நிதானமா, இந்த அமளி குறைந்த பின்னே, நாளைக்கு அல்லது கொஞ்ச நேரம் கழிச்சி வந்து, அவன் வெச்ச இடத்திலிருந்து மோதிரத்தை எடுத்துகிட்டு போயிடுவான்”

    “சார், நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்”- துரை ஆச்சரியமாக. எது தெரியுமோ தெரியாதோ, துரைக்கு ஜால்ரா போட நன்றாக தெரியும்.

    “எத்தனை திருட்டு இது போல பார்த்திருக்கேன்? எத்தனை பேர் இந்த மாதிரி கிரைம் நாவல் எழுதியிருக்காங்க ? இவைகளை படிச்சிட்டு தான் எவனோ பிளான் பண்ணியிருக்கான்! மடையன்!”

    “சூப்பர் சார், நம்மளை கேனைங்கன்னு நினைச்சிருக்கான். எத்தனை திருட்டு நீங்க கண்டு பிடிசிருப்பீங்க? இவங்க புத்தி நமக்கு தெரியாது? இப்போ என்ன சார் பண்ணனும்?”

    “அப்படி கேளு. இப்போ இந்த கடைக்குள்ளேயே அந்த மோதிரத்தை தேடு. முக்கியமா மேஜைகளுக்கு அடியிலே தேடச்சொல்லு. ”

    ஒரு பத்து நிமிட தேடலுக்கு பிறகு, மோதிரம் கிடைத்து விட்டது. வைர நகை அறைக்கு பக்கத்தில் ஒரு மேஜையில் கீழே சிவிங்கத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது.

    “ம். பார்த்தீங்களா ? நான் நினைத்தது சரி. வைர மோதிரத்தை இங்கே கொடுங்க. இப்போ , வேறே ஒரு கவரிங் மோதிரத்தை அங்கேயே சிவிங்கத்தோட ஒட்டி வெச்சிடுங்க. இதை வெச்சிதான் அந்த திருடனை பிடிக்கணும்”- செக்யூரிட்டி அதிகாரி தீபக் சொன்னார்.

    நிமிஷ நேரத்தில் துப்பு துலக்கிய சந்தோஷத்துடன்,அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் தீபக். ‘எனக்கே அல்வா கொடுக்க முடியுமா என்ன?’

    ****

    அன்று மாலை நான்கு மணி : ஸ்ரீமதி ஜ்வேல்லேர்ஸ்


    சூரியின் காதலி, மேகா , நகைக்கடையில் நுழைந்தாள். நேராக, டைமன்ட் நகை பகுதிக்கு போனாள். குறிப்பிட்ட இடத்தில் நகையை தேடினாள். ஒன்றும் கிடைக்கவில்லை.

    ‘என்ன பண்ணினான் இந்த சூரி . சொதப்பிட்டானா? ஒருவேளை நகையை அபேஸ் பண்ணி, எடுத்துகிட்டு போயிட்டானோ? ஏன் எனக்கு போன் பண்ணலே?”

    வெளியில் வந்தாள். அலைபேசியில் ஒரு மிஸ் கால் கொடுத்தாள். அவள் என்னிக்கும் சூரிக்கு மிஸ் கால் தான் கொடுப்பாள். சூரி தான் அவளை கூப்பிடனும்.

    சூரி யிடமிருந்து கொஞ்ச நேரத்தில் அழைப்பு.

    “சூரி , எங்கேஇருக்கே?” – மேகா பதற்றமாக.

    “இங்கே தான், மவுண்ட் ரோடு போலீஸ் ஸ்டேஷன். ரிச்சி ஸ்ட்ரீட் பக்கத்திலே”

    “ஐயையோ! மாட்டிக்கிட்டியா?” – மேகாவுக்கு வியர்த்து விட்டது.

    “நேர வா சொல்றேன்! ”

    “மோதிரம் இருக்கா இல்லியா?”

    “மோதிரம் இருக்கு. நீ நேர வா. எல்லாம் விவரமா சொல்றேன்”

    மேகா நேராக மௌன்ட் ரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தாள்.


    மவுண்ட் ரோடு போலீஸ் ஸ்டேஷன்

    “என்ன ஆச்சு சூரி ?”

    “சாரி மேகா , நீ சொன்ன மாதிரி என்னாலே நகையை எடுத்து மேஜைக்கு அடியிலே ஒளிக்க முடியலே. கடைசி நிமிஷத்திலே டர்ர் ஆயிடிச்சி. தைரியம் இல்லை. பேசாம வெளிலே வந்து ஒரு சவரன்லே சாதா தங்க மோதிரம் வாங்கிட்டேன். உனக்கு போன் பண்ண வெக்கமா இருந்தது. அதான் நேரே சொல்லிக்கலாமேன்னு பண்ணலே!”

    “சரியான தொடை நடுங்கி. பின்னே ஏன் இப்போ ஸ்டேஷன்லே இருக்கே?”

    “என் நண்பன் குமாரும் அவனது காதலியும் தான் இங்கே போலீஸ் ஸ்டேஷன்ல, கஸ்டடியில் இருக்காங்க. ஜாமீன் கொடுக்க வந்திருக்கேன்”



    “என்ன ஆச்சு?”

    “உன் பிளான் பத்தி குமார் கிட்டே சொன்னேன். என்னை திட்டினான். உன் மூளை ஏன் இப்படி வேலை செய்யுதுன்னான். மாட்டிக்குவேன்னான்."

    “அட பாவி! உன்னை யாரு நம்ம பிளானை அவன்கிட்டே உளறச்சொன்னது? லூசா நீ?”

    “சாரி மேகா . நேத்தி இரவு , ரெண்டு பேரும் கொஞ்சமா சரக்கு போட்டோம். அந்த சமயத்திலே, அடக்க முடியாமே, அவன் கிட்டே மட்டும் அட்வைஸ் கேட்டேன். ஆனால், அவன் கெட்ட நேரம் பாரு. எனக்கு பண்ணாதேன்னு சொல்லிட்டு, அப்புறம் அவனுக்கே ஆசை வந்திடுத்து போலிருக்கு. அந்த திருட்டை அவன் அப்படியே செஞ்சிட்டான். இன்னிக்கி, அவன் வெச்ச இடத்தில நகையை எடுக்க வர்றப்ப, அவன் காதலி மாட்டிகிட்டா. இவனையும் காமிச்சி கொடுத்திட்டா. ”



    “நல்ல வேளை நீ தப்பிச்சே!”

    “உன் பேச்சை கேட்டிருந்தால், நாம்ப ரெண்டு பெரும் இப்போ உள்ளே கம்பி எண்ணிக்கிட்டு இருந்திருப்போம். நான் பயந்தாங்கொள்ளியா இருக்கிறதும் நல்லதுக்கு தான்”.

    "அது சரி, உன் நண்பன் குமார் இந்த ஐடியா உன்னது அல்லது என்னதுன்னு போலீஸ் கிட்டே போட்டு கொடுத்திட்டா? " - மேகா கொஞ்சம் பயத்துடன் கேட்டாள்.

    "இல்லேன்னு சொல்லு. இதோ பாரு மேகா ! நகையை நான் திருடலை. நீயும் திருடலை. நமக்கு அந்த எண்ணம் இருந்தது. வாஸ்தவம் தான் . ஆனால், அதுக்காகவெல்லாம் உள்ளே தள்ள மாட்டாங்க. "

    “நீ சொல்றது சரிதான். ஏதோ கடவுள் புண்ணியம். தப்பிச்சோம். எனக்கு இப்போதான் புத்தி வந்தது. இனி இந்த ஐடியா எதுவும் வேணாண்டா சாமி. ”

    “புத்தி ? உனக்கு? என்ன நம்ப சொல்றே ? சரி, இந்தா, நான் வாங்கின மோதிரம். உன் விரலை காட்டு.”

    “நீ எனக்கு போடறியா?”

    “இது என்கேஜ்மென்ட் ரிங். யார் வேணா போட்டுக்கலாம். அப்பாகிட்டே சொல்லி, இதே மாதிரி ரிங் நிச்சயதார்த்தம் போது போடச்சொல்லு. இல்லையா, இதையே போட சொல்லு. அதுவே எனக்கு போதும்”


    ***முற்றும்


    திருக்குறள்

    அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
    அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். (428)

    விளக்கம்: அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்;
    அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்.



    பி.கு : Inspiration from Jeffery Archer !
    Last edited by Muralidharan S; 11th October 2015 at 06:56 PM.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    மிகவும் அருமை! அழகாக தமிழ்படுத்தியுள்ளீர்கள்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. Likes Russellhni liked this post
  6. #3
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி மேடம் .

    நான் ஜெப்ரி ஆர்ச்சரின் தீவிர ரசிகன். அவரது ஒரு சிறு கதையின் வெளிப்பிரகாரம் தான் இந்த கதையின் களம். ஆனால், மற்றபடி , நிறைய மாற்றியிருக்கிறேன். கதையின் போக்கே வேறு வகை . கொஞ்சம் டிபரன்ட் ! வேறு மாதிரி ட்விஸ்ட்.

    நீங்கள் அடிக்கடி சொல்வது போல " Poetic Justice" சொல்லவும், வள்ளுவன் வாக்கிற்கு ஒரு தளம் அமைக்கவும் ஜெப்ப்ரி தேவைப் பட்டார்.

    திருடர்களுக்கு எத்தனை வழிகள் தெரியுமோ அத்தனை வழிகளும் திருட்டைக் கண்டுபிடிப்பவர்களுக்கும் தெரியும் என்பதே என் மையக் கருத்து. அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சாமல் தெனாவெட்டாக இருந்தால் அவஸ்தைதான் முடிவில் என முடித்து விட்டேன். ஓகே தானே !
    Last edited by Muralidharan S; 13th October 2015 at 08:23 AM.

  7. #4
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    ரொம்ப சரி! சரியாக சொன்னீர்கள்! என் நியாய தர்ம அவசியத்தின் எதிர்பார்ப்பை கவனித்து ஆதரிப்பதற்கு மிக்க நன்றி! கதையோ, சினிமாவோ எதிலும் அது இல்லாவிட்டால் கடுப்பாகிவிடுவேன், இருந்துவிட்டால் மிக்க மகிழ்வேன்!

    ரொம்ப காலத்திற்கு முன்பு குமுதத்தில் ஜெப்ரி ஆர்சர் கதைகளின் மொழிபெயர்ப்புகள் படித்ததாக ஞாபகம். கணிணியில் பொழுது போக்க பழகிய பின் வாசிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. எங்கள் குடும்பத்தில் Robin Cook and Michael Crichton favourites.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •