Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நினைத்துப் பார்க்கிறேன்



    இந்தப் பதிவைத் தொடங்குதற்கு முன் முதலில் மேலே காணும் இரு இசைத் தெய்வங்களுக்கும் உளமார்ந்த அஞ்சலி.

    இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது.

    தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பாக தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில், டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ... இவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய மகுடம் சூட்டிய பாடல்...

    ஒரு மனிதன் மரணத்தை நோக்கிப் பயணிக்கும் போது அவன் மனதில் என்னவெல்லாம் தோன்றும்.. அவன் என்னவெல்லாம் நினைப்பான்... இதை நாம் யாராவது சிந்தித்திருக்கிறோமா.. அதுவும் அவன் தான் இறக்கப் போகிறோம் என்பதைத் தானே உணர்கிறான்.. அதற்குக் காரணம் அவன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறான்.. அப்போது அவன் மன ஓட்டம் எப்படி இருக்கும்...

    இப்படி ஓர் சூழ்நிலை ஒரு படத்தில் உருவாகியுள்ளது. இதற்குப் பாடல் எழுத வேண்டும், இசையமைக்க வேண்டும், பாட வேண்டும்...

    முதல் சவால், பாடலில் எந்த விதமான விஷயங்கள் இடம் பெற வேண்டும், அவை என்ன சொல்ல வேண்டும், என்னென்ன கால கட்டங்கள் இடம் பெற வேண்டும், அதைப் பற்றி அவன் மனதில் என்னவெல்லாம் தோன்றும்.. இப்படிப் பல விஷயங்களைப் பாடலில் கொண்டு வருவதற்கான முதல் படி.

    இரண்டாவது ... இசை ...இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன மாதிரியான இசையமைக்க வேண்டும்,, என்னென்ன கருவிகளைக் கையாள வேண்டும், பாடலில் என்னென்ன உணர்வுகளைக் கொண்டு வர வேண்டும்...

    மூன்றாவது ... பாடகர்கள்... இத்தனை விஷயங்களையும் தீர்மானித்தபின் இதை மக்களிடம் கொண்டு செல்பவர்கள் பாடகர்கள் தானே.. அவர்களிடம் இருந்து என்ன கொண்டு வர வேண்டும்...

    இப்படி வெவ்வேறு சவால்களை எதிர்நோக்கும் இசையமைப்பாளனுக்கு நிச்சயம் இது மிகப் பெரிய பரீட்சையே...

    ஆனால் இந்த சவாலை சந்தித்தவர்கள் யார்... மெல்லிசை மன்னர்களாயிற்றே.... விட்டு விடுவார்களா என்ன... கூட இருப்பது என்ன சாமான்யரா... கவிச்சக்கரவர்த்தியாயிற்றே...

    ஒரு மனிதன் கடைசி காலத்தில் தான் வாழ்க்கை என்றால் என்ன வென்று புரிந்து கொள்கிறான். அதற்குள் எல்லாமே கடந்து போய் விடுகின்றன.. வாழ்க்கையில் இளமையின் அனுபவங்கள், முதுமையின் துவக்கத்தில் படிப்பினைகள், கடைசி காலத்தில் முக்தியை வேண்டுதல் என மனித வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களையும் மன ஓட்டங்களையும் அவன் நினைத்துப் பார்க்கிறான். காலங்கடந்த ஞானோதயம் .. சராசரி மனித மனம் அப்படிப்பட்ட நேரங்களில் என்ன செய்யும்.. இறைவனிடம் புலம்பும்..

    இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.

    ஆடிய ஆட்டமென்ன
    பேசிய வார்த்தையென்ன
    திரண்டதோர் சுற்றமென்ன
    கூடு விட்டு ஆவி போனால்
    கூடவே வருவதென்ன...

    இந்தத் தொகையறாவிலேயே பாடலின் சூழலைக் கொண்டு வந்து விடுகிறார்கள்..

    இங்கேயே ஆரம்பித்து விடுகிறது பாடகர் திலகத்தின் குரல் சாம்ராஜ்ஜியம்...



    வீடு வரை உறவு,
    வீதி வரை உறவு,
    காடு வரை பிள்ளை,
    கடைசி வரை யாரோ

    ... இந்தப் பல்லவியை முதன் முதலில் கேட்டவுடன் நினைவுக்கு வந்து விடக்கூடிய முகம்...
    முதன் முதலாக இந்தப் பாடலைக் கேட்பவர்களுக்கு உடனே நினைவுக்கு வந்து விடக்கூடிய முகம்...



    இப்படி உடனேயே நடிகர் திலகத்தின் முகத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்ட இந்தப் பாடல் பாத காணிக்கை படம் என்ற வுடன் இயல்பாகவே மக்கள் மனதில் இது சிவாஜி படம் போல இருக்கிறது, என அவரை நினைத்து தியேட்டருக்கு வரவழைக்கும் அளவிற்கு இந்தப் பாடல் அமைந்து விட்டது. படத்தின் இயக்குநர் பீம்சிங் எனவும் மக்கள் கணிக்கும் அளவிற்கு முதல் எழுத்து பானாவும் சேர்ந்து கொண்டது.

    போகப் போக பாடலில் சூழ்நிலைகள் வெவ்வேறு வகையாக மாறவும் மக்கள் தீர்மானமே செய்து விட்டனர் இது சிவாஜி படமென்று.

    எல்லாமே படத்தின் இசைத்த்ட்டு பரபரப்பாக விற்பனையாகி சக்கை போடு போட ஆரம்பித்த பிறகு, படத்தில் சிவாஜி இல்லை எனத் தெரியும் வரைதான்.

    இப்படிப்பலவாறாக எதிர்பார்ப்பை உண்டாக்கி, பின்னாளில், இப்படத்தில் நடிகர் திலகம் நடித்திருக்கக் கூடாதா என்று நிரந்தரமாகவே என்னை ஏங்க வைத்த பாடல் - என்னை மட்டுமல்ல உங்களையும் நிச்சயம் ஏங்க வைத்திருக்கும் தானே...

    அசோகன் மிகத் திறமையான நடிகர். இருந்தாலும் இந்தப் பாடலில் மட்டும் நடிகர் திலகம் நடித்திருந்தால் இதனுடைய ரேஞ்ச் எங்கோ போயிருக்கும்... 1962ல் நடிகர் திலகத்திற்கு மற்றுமோர் வெள்ளி விழாப்படமாக அமைந்திருக்கும்.

    மெல்லிசை மன்னர் இப்பாடலை எப்படிப் போட்டிருந்தார்கள்... இதைச் சொன்னாலே நாம் இப்பாடலில் நடிகர் திலகம் இல்லை என ஏன் ஏங்குகிறோம், என்பது புலனாகும்.

    தொகையறா முடிந்து வீடு வரை உறவு பல்லவி முடிந்தவுடனேயே அதே தாளக்கட்டில், இளமையில் ஆட்டம் போடுவதைக் குறிக்கும் வண்ணம் டிரம்பெட்டில் ஒரு மேற்கத்திய இசைக்கோர்வை, இந்த இடத்தில் இயக்குநர் சமயோசிதமாக சில்ஹௌட்டில் நடனத்தை ஒளிப்பதிவு செய்ய வைத்திருப்பார், அப்படியே காமிரா கீழிறங்கி அசோகனிடம் செல்லும்...ஆடும் வரை ஆட்டம் சரணம் தொடங்கும்... அதற்கு அடுத்த சரணம், இளமையின் விளைவுகளைப் பற்றியும் சிற்றின்பம் வாழ்க்கையில் அதன் தாக்கம்,

    அதைச் சொல்லும் விதமாக தன் அன்னையை நினைக்கிறான்.. அப்போது தாயின் தாலாட்டு.. ஹம்மிங்கில் ஒலிக்கிறது...
    இந்த இடத்தில் மெல்லிசை மன்னரின் இசை ஞானம் நம்மை பிரமிக்க வைக்கிறது.. தாய்க்கு தாலாட்டு பாடும் சூழ்நிலையில், அவருக்கு வார்த்தைகள் இல்லாமல் ஆரிரோ மட்டுமே பாட வைத்திருப்பார். சொல்ல வந்த விஷயத்தை வார்த்தைகளை விட ஹம்மிங்கிலேயே சொல்லி விடத் தீர்மானித்து, அதற்கு மிகச் சரியாக அவர் பயன்படுத்திய பாடகி..



    ஹம்மிங் பேர்ட் என நாம் அன்போடு நினைவு கூறும் பி.வசந்தாவுக்கு முன்னோடி ஈஸ்வரி அவர்களே.. இவருடைய ஹம்மிங்கிலேயே பலவிதமான உணர்வுகளைப் பல பாடல்களில் கொண்டு வந்திருப்பார். ஏட்டில் எழுதி வைத்தேன் பாடலில் காதலன் காதலியை நினைவு கூற வைக்கும் குரல், எண்ணிரண்டு பதினாறு வயது பாடலில் காதலனின் காதலை ஏற்று ஆமோதிக்கும் குரல், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பாடலில் காதலனின் கலைநயத்தை ரசிக்கும் குரல்.. இப்படி தன் ஹம்மிங்கிலேயே பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்திய ஈஸ்வரியை, இப்பாடலில் தாய்மைக்கும் தாலாட்டிற்கும் ஒரே சேர பயன்படுத்தி யிருக்கும் உத்தி மெல்லிசை மன்னருக்கே உரித்தான சிறப்பாகும்.

    இந்த ஹம்மிங் முடிந்தவுடனே வரும் சரணத்தில் நாயகனின் உணர்வுகளை விளக்கும் சரணம்...

    தொட்டிலுக்கு அன்னை
    கட்டிலுக்கு கன்னி
    பட்டினிக்குத் தீனி
    கெட்டபின்பு ஞானி

    இந்த வரிகளின் மூலம் வாழ்க்கையில் சலிப்பும் விரக்தியும் ஏற்படுவதைச் சொல்லி விடுகிறார் கவிஞர்.

    இந்த நேரத்தில் அண்ணன் வீட்டை விட்டு வெளியேறி விபரீதமான எண்ணத்தில் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து பதைபதைப்புடன் தம்பி அவனைத் தேடி வருகிறான். இதையும் பாட்டில் கொண்டு வரவேண்டும். மெல்லிசை மன்னராயிற்றே சும்மாவா.. இதையும் மிகவும் தத்ரூபமாக டி.கே.ஆரின் வயலினில் அந்த டென்ஷனைக் கொண்டு வந்து விடுகிறார். கேட்கும் போதே நாமும் பதறி விடும் அளவிற்கு உணர்வு பாட்டிலேயே எதிரொலிக்கும்.

    இப்போது பாடலின் நாயகன் செல்லும் வழியில் ஒரு மயானம் குறுக்கிடுகிறது. அந்தக் கல்லறைகள் அவன் மனதில் ஒரு தாக்கத்தையும் தத்துவத்தையும் போதிக்கிறது. இதற்கு கவிஞரின் வரிகள் எப்படி அமைகின்றன.

    சென்றவனைக் கேட்டால்
    வந்து விடு என்பான்
    வந்தவனைக் கேட்டால்
    சென்று விடு என்பான்
    சென்று விடு என்பான்...

    இரண்டே வரிகளில் வாழ்க்கையின் அத்தனை உணர்வுகளையும் அவற்றால் மனிதன் மனதில் ஏற்படும் விரக்தியையும் வெறுப்புணர்வையும் சொல்லி விடுகிறார் கவிஞர். சென்றவனைக் கேட்டால் வந்து விடு என்பான் .. என்ற வரிகளில், ஒரு மனிதன் , மரணமடைந்த ஒருவனிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் மரணமடைந்தவன் அவனையும் தான் இருக்கும் இடத்துக்கே வந்து விடு என்று கூறுவதாக கவிஞர் உருவகப் படுத்திக்கொள்கிறார். அந்த அளவிற்கு மனித வாழ்க்கை மோசமாக இருக்கமாம். அதற்கு அடுத்த வரி இன்னும் ஆழமானது. வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்... இந்த வரி எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியது. ஒரு மனிதனின் இழப்பில் தான் இன்னொருவனின் பிழைப்பே இருக்கிறது என்பதாக உருவகம் செய்கிறார். அதற்காக நீ இன்னும் இருந்து என்ன சாதிக்கப் போகிறாய், நீ செத்தால் இன்னொருவன் பிழைப்பானல்லவா என இருப்பவனையும் மேல் லோகத்துக்கு அனுப்பத் துடிக்கும் மனித மனத்தையல்லவா இந்த வரிகள் கூறுகின்றன.

    இந்தக் கல்லறை அவன் மனதில் ஏற்கெனவே துளிர் விட்டிருந்த தற்கொலை எண்ணத்தை மேலும் அதிகமாகத் தூண்டி விட தான் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிழைத்து விழக்கூடாது எனத் தீர்மானித்து உயரமான மலையிலிருந்து குதி்ப்பதுவே மரணத்திற்கு உத்தரவாதமளிக்கும் என்ற எண்ணத்தோடு மலை உச்சிக்குப் போகிறான்.

    இதை உணர்த்துவதற்காக மெல்லிசை மன்னர் இசைக்கருவிகளின் - குறிப்பாக வயலின் இசையில் உச்சஸ்தாயியில் கொண்டு செல்கிறார். அப்படியே மேலே போகப் போக, கேட்பவர்களுக்கு ஒரு பரபரப்பை உண்டு பண்ணி விடுகிறது.

    அவ்வளவுதான்..

    க்ளைமாக்ஸ்.. காட்சியில் மட்டுமல்ல...
    பாடலின் வரிகளில்.. பாடலின் இசையில்...பாடும் குரலில்...

    விட்டு விடும் ஆவி
    பட்டு விடும் மேனி
    சுட்டு விடும் நெருப்பு
    சூனியத்தில் நிலைப்பு...

    அந்த சூனியத்தில் நிலைப்புடன் அவன் நிறுத்திக் கொள்கிறான்.

    ஆனால் அந்த பரபரப்போ நிற்கவில்லை..

    காரணம்.. அவன் தேடப்படுகிறான். உறவால் தேடப்படுகிறான்.. அவன் தம்பி தேடுகிறான்.. அதைப் பற்றிச் சொல்ல வேண்டுமே.. பாடல் முடிந்த பின் தான் அதற்கு விடை கிடைக்கும்.. எனவே இசை அப்படியே மேல் ஸ்தாயியிலேயே சஞ்சரித்து ஒரு ஸ்டேஜில் போய் நிற்கிறது. காட்சியின் தொடர்ச்சிக்காக..

    ....


    இப்படி பல்வேறு வகையில் மகத்துவம் வாய்ந்த பாடலில் பக்கம் பக்கமாக எழுதினாலும் தீராத விஷயமுள்ள காலத்தால் அழியாத காவியப் பாடலில் நம் மனதை மிகவும் பாதித்த ஒரு விஷயம்..


    இப்பாடல் காட்சியில் நம் நடிகர் திலகம் நடிக்கவில்லையே என்கிற மிகப் பெரிய குறையே.



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •