Results 1 to 4 of 4

Thread: அவள் அப்படித்தான் !

Threaded View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    அவள் அப்படித்தான் !

    சென்னை. திருவல்லிக்கேணி.

    வசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி.

    தனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக, விடுதியின் அறை தோழிகள்.

    கொஞ்சம் கட்டை குட்டை தனத்திற்கு , இரண்டு வருடங்களாக இதே திருவல்லிக்கேணி ஹாஸ்டல் வாழ்க்கை தான்.

    மஞ்சுளா இப்போதுதான் கோவையிலிருந்து வந்த, தனத்தின் புது ரூம் மேட். பார்க்க சுமாரான அழகுள்ள யுவதி.

    இருவருக்கும் கிட்ட தட்ட 27 28 வயது. மணமாகாத குமரிகள் .

    ஒரு ஞாயிறு. பிற்பகல் 4 மணி.

    தனம்!.. ஏய் தனம்! மஞ்சுளா தனத்தின் தோளை பிடித்து தன் பக்கம் திருப்பினாள்.
    ம். தனம் சுரத்தில்லாமல்.
    ஏய்! தனம். இங்கே பாரு. ஏன் டல்லா இருக்கே!
    ஒண்ணுமில்லே!

    ஏன் ஹாஸ்டல்லே யாரோடும் பேச மாட்டேங்கிறே! ஒதுங்கி ஒதுங்கி போறே! நானும் பாத்துகிட்டு தான் வரேன் ! ரூமிலேயே இருக்கே !வெளியே எங்கேயும் வர மாட்டேங்கிறே? ஏண்டி?

    போடி!. எனக்கு எதுவுமே பிடிக்கலை! என்னை ஏனோ யாருக்கும் பிடிக்கறதில்லை! ரொம்ப வெறுப்பாயிருக்குது!

    உளறாதே! சரி வா!. இன்னிக்கு வெளிலே போய், காபிடே லே காபி சாப்பிட்டு விட்டு ஜாலியா பீச்சுக்கு போய் வரலாம். வேடிக்கை பாத்தால் எல்லாம் சரியாயிடும்

    நீ போப்பா. நான் வரல்லே !. தனம் மோட்டு வளையை பார்த்துக் கொண்டே.

    ஏண்டி! என்னாச்சு உனக்கு! மஞ்சுளாவின் குரலில் கரிசனம்.

    ஏன் கேக்க மாட்டே! பாரு ஏன் மூஞ்சியை! எவ்வளவு பரு, மேடும் பள்ளமுமா! குண்டா இருக்கேன்! என் கலர் வேறே கம்மி. வெளிலே வந்தா, ஒரு பையன் கூட திரும்பி பாக்க மாட்டேங்கிறான். நீ பார்! எவ்வளவு அழகா இருக்கே!

    அவ்வளவு தானே, தனம் ! சரி வா! நல்ல பியூட்டி சலூன்க்கு போவோம். கொஞ்சம் ப்ளீச் பண்ணிக்குவோம். பளிச்சுன்னு ஆயிடலாம். ஹேர் ஸ்டைல் மாத்திக்கோ. சுடிதாருக்கு மாறு. நான் உன்னை அழகாக்கி காட்டறேன். அப்புறம் பாக்கலாம், எந்த பையன் உன்னை திரும்பி பாக்காம போறான்னு (மஞ்சுளாவின் ஆர்வம் 100 %)

    பண்ணிக்கலாம்தான்! ஆனால் அதுக்கு செலவாகுமே! அடிக்கடி வேறே பண்ணிக்கணும்! வேண்டாண்டி! கையை கடிக்கும்.

    அப்போ ஒண்ணு பண்ணலாம்!. ஸ்கின் டாக்டர் ஒருத்தி எனக்கு தெரியும். அவள் அழகு கலை நிபுணரும் கூட. பெஸ்ட் டாக்டர். ரொம்ப பீஸ் கேக்க மாட்டா. வரியா போகலாம்?

    போலாம் தான்! ஆனால் வேண்டாம்பா!

    ஏன் தனம் வேண்டாம்?

    எனக்கே தெரியும் டாக்டர் என்ன சொல்லுவாளென்று!. சாப்பாட்டை கட்டு படுத்து! வெய்ட்டை குறை!. இதெல்லாம் எனக்கு முடியாதுப்பா! நொறுக்கு தீனி இல்லாமல் என்னால முடியாது!

    அது சரி ! குண்டாயிண்டே போனால், அப்புறம் எப்படி அழகாறது? (ஆர்வம் 80%)

    என்ன மஞ்சுளா ! நீயும் என்னை கேலி பண்றே? எனக்கு இந்த மருந்து மாத்திரை எல்லாம் அலர்ஜி ஆயிடும். ஒரு தடவை சாப்பிட்டு, தோல் கறுத்து போச்சு தெரியுமா? என் தலையெழுத்து அப்படி. டாக்டர் எல்லாம் வேண்டாம் மஞ்சுளா. இப்படியே இருந்து விட்டு போறேன்

    மஞ்சுளா விடுவதாக இல்லை. அப்படியெல்லாம் சொல்லாதே! சரி, அப்போ ஒண்ணு செய். நீயே தினமும் பயத்தம் மாவு போட்டு முகம் கழுவு. மஞ்சள் பேஸ்ட், பரு மேல போடு. சரியாயிடும். . மருதாணி வெச்சுக்கோ. அப்புறம், கேலமைன் அப்பிக்கோ. இயற்கை வைத்தியம் தான் இருக்கவே இருக்கே! சீப் அண்ட் பெஸ்ட்!


    பண்ணலாம்!. ஆனால், எனக்கு இந்த மஞ்சள் போட்டாலே, வெடிப்பு வந்துடும். வேண்டாம்பா!

    என்ன தனம்! எது சொன்னாலும் எப்படி நெத்தியடியா நோ சொல்லறியோ !. ச்சே! போப்பா! கொஞ்சம் அலுப்புடன் மஞ்சுளா.(ஆர்வம் 50%)


    நீ ஏன் சொல்ல மாட்டே மஞ்சுளா! உனக்கு அழகிருக்கு. பாய் பிரண்டு வேறே நீ கூப்பிட்ட நேரத்திற்கு ஓடி வரான்!. எனக்கு அப்படியா! போன வாரம் எங்க வீட்டிலே பெண் பார்த்த ரெண்டு வரங்களும் என்னை வேண்டாம்னுட்டாங்க! இத்தனைக்கும் பசங்க ஒன்னும் சுரத்தேயில்லை! அவனுங்க மூஞ்சிக்கு நான் வேண்டாமாம். என்ன பண்றது! நான் பிறந்த நேரம் அப்படி!

    ஐயோ பாவம் இந்த தனம். நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் தனது தோழிக்கு. (ஆர்வம் மீண்டும் 100%)

    ஓ! இதுதான் விஷயமா? போகட்டும் விடு தனம்!. இதுக்கேல்லாம் மனசை போட்டு அலட்டிக்காதே!. வேறே எதிலயாவது மனசை செலுத்து. ப்ரோமோஷன் எக்ஸாம் எதாவது எழுதேன்! படியேன்!

    பண்ணலாம். ஆனால், ரொம்ப கஷ்டம். என்னாலே முடியாது. நான் ரெண்டு தடவை ட்ரை பண்ணி விட்டுட்டேன். ஏற மாட்டேங்குது.

    அட பாவமே ! பரவாயில்லே! ஒண்ணு செய். என் கூட, எம்.பி.ஏ சேர்ந்திடு, லயோலா காலேஜ் லே. பார்ட் டைம். பொழுதும் போகும். வேறே நல்ல வேலையும் கிடைக்கும். நிறைய ஸ்மார்ட்டா பசங்க வேறே, கூட படிக்கிறாங்க !.. என்ன சொல்றே ! (80%)

    வரலாம் தான் !. ஆனா சாயந்திரம் வகுப்பு , என்னாலே வர முடியாதே?

    ஏன் தனம்! உன் ஆபிஸ் தான் 5.30 மணிக்கே முடிஞ்சிடுதே! நேர காலேஜ் வந்துடு. (ஆர்வம் 70%)

    பண்ணலாம்! ஆனால், என்னால தினமும் முடியாதுப்பா!. ஆபிசிலேருந்து வரும்போதே ரொம்ப சோர்வா இருக்கும். வெளியே நகரவே பிடிக்காது.

    என்னடி சொல்றே!. என்னாலே முடியரப்போ ஏன் உன்னாலே முடியாது? (ஆர்வம் 50%)

    இல்லேப்பா!. உன்னை மாதிரி நான் ஒன்னும் ஹெல்தி இல்லே!. எனக்கெல்லாம் அதுக்கு கொடுப்பினை இல்லை மஞ்சுளா!

    சரி சரி!. வருத்தப்படாதே ! ம்ம்...இப்படி பண்ணலாமா! தபால் மூலமா படிக்கிறியா? என் பிரெண்ட்ஸ் நாலு பேர் எம்.பி.ஏ அப்படித்தான் படிக்கிறாங்க. ஏற்பாடு பண்ணட்டுமா? உனக்கு ஓகே வா! (ஆர்வம் 30%)

    படிக்கலாம்தான். ஐடியா நல்லாதான் இருக்கு. ஆனால் எனக்கு ஒத்து வருமான்னு தெரியலியே?

    ஏன்? இதுக்கு என்ன நொண்டி சாக்கோ ? தெரிஞ்சிக்கலாமா? மஞ்சுளாவின் குரலில் இளப்பம். கொஞ்சம் காரம். (20%)

    கோவிச்சுக்காதே மஞ்சுளா! சாரிடீ! பொதுவாவே, நான் ஒரு சோம்பேறி. அம்மாக்கு நாலு வரி லெட்டர் போடவே எனக்கு வணங்காது. யாராலே, இவ்வளவு ஹோம் வொர்க், அசைன்மென்ட் பண்ணி அனுப்ப முடியும்? இது ஆவர காரியமா எனக்கு படலே! எனை உட்டுருப்பா

    என்ன பொண்ணு இவ. எதுக்கெடுத்தாலும் நொள்ளை சொல்லிக்கிட்டு. கடுப்பு தான் வந்தது மஞ்சுளாவிற்கு. அடக்கி கொண்டாள். அதில்லை தனம்! நமக்கு தேவைன்னா படிச்சி தானே ஆகணும்? சோம்பேறித்தனம் பார்த்தால் யாருக்கு நஷ்டம்? பின்னாடி, இப்படி இருக்கொமேன்னு நீ தானே வேதனைப் படுவே!. (10%)

    நான் என்ன பண்ணட்டும், என்னை எங்க வீட்டிலே வளர்த்த விதம் அப்படி! ஆனால், நீ ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவ ! உனக்கு திறமை ஜாஸ்தி. நா அப்படி இல்லையே! எல்லாம் என் விதி !

    கோபம் பொத்து கொண்டு வந்தது கோவை மஞ்சுளாவுக்கு. அதெப்படி! படிக்கறது முடியலை! ப்ரோமொஷன் வேண்டாம்! ஹெல்த் பாத்துக்க முடியலை! ஆனால், எல்லார் தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு ராத்திரி ஒரு மணி வரை டி.வி. பாக்க முடியுது? அது பரவாயில்லியா?. அப்போ சோர்வு எங்கே போச்சு? (5%) :

    நல்லா இருக்கே மஞ்சுளா நீ பேசறது? எனக்கு வேறே என்ன பொழுது போக்கு இருக்கு? உனக்கு இருக்காப்போல எனக்கு பிரண்ட்ஸ் எங்கே இருக்காங்க? எனக்கு டி.வி. தவிர வேறே யார் துணை?

    ஆமா! எப்படியோ போ! உனக்கு போய் ஹெல்ப் பண்ண நினைச்சேனே! என்னை சொல்லணும்! மஞ்சுளா கோபமாக அறையை விட்டு வெளியேறினாள். :ஆர்வம் 0%)

    தனம், டிவி ரிமோட்டை தேடினாள். கூடவே, நேத்து வாங்கி வைத்த கார சேவு, முறுக்கு பொட்டலங்களை தேடினாள்.

    அப்பாடா ! தல அஜித் படம். தொந்திரவு இல்லாமல் பாக்கணும்.

    ****

    தனம் மாறவில்லை. மாறிவிட்டாள், மஞ்சுளாதான், வேறு அறைக்கு.

    அவளுக்கு தனத்தின் புலம்பல், இம்சை தாங்கவில்லை. இப்போ வனிதா, தனத்துடன். மஞ்சுளாவிற்கு பதிலாக வனிதா இப்போது தனத்தின் புதிய ரூம் மேட். திருச்சியிலிருந்து வந்தவள். . சக்கரம் திரும்ப சுற்ற ஆரம்பித்து விட்டது. முதலிலிருந்து.

    ****

    கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து. தனத்தின் அறை.

    ஒரு ஞாயிறு. பிற்பகல் 4 மணி.

    தனம்!.. ஏய் தனம்!
    ம்.
    ஏய்! தனம். இங்கே பாரு. ஏன் டல்லா இருக்கே!
    ஒண்ணுமில்லே!
    ஏன் விடுதியிலே யாரோடும் பேச மாட்டேங்கிறே! ஒதுங்கி ஒதுங்கி போறே! நானும் பாத்துகிட்டு தான் வரேன் ! வெளியே எங்கேயும் வர மாட்டேங்கிறே? ஏண்டி?

    போடி!. எனக்கு எதுவுமே பிடிக்கலை! போரடிக்குது ! ரொம்ப வெறுப்பாயிருக்குது!


    ....... ( ரிபிட் - மஞ்சுளாவுக்கு பதில் வனிதா என்று மாற்றி கதையின் 15வது வரியிலிருந்து படிக்கவும்).

    *****


    தனத்திற்கு இன்றும் புரியாத விஷயம் இதுதான்.

    என்னை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை? அப்படி என்ன குறை என்னிடம்?

    தனம்! அவள் பாவம். தன்னிலை உணராத பரிதாபம். அவள் சோம்பி இருந்தே சுகம் கண்டவள்.காண்பவள்.

    அவள் அப்படித்தான். சிலரை மாற்றுவது கொஞ்சம் கஷ்டம்.

    தனம் போன்றவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறலாம். அவர்களே மனது வைத்தால். பிறரை பார்த்து.

    அதுவரை, கஷ்டம் தான்! கூட இருப்பவருக்கு !

    இருப்பினும் சமாளிக்கலாம் " யு ஆர் நாட் ஓகே ! பட் தட்ஸ் ஓகே! "என்று தனம் போன்றவரிடம் பரிவு காட்டினால்!

    அவர்களை புரிந்து கொண்டால்!

    *****

    முற்றும்


    Last edited by Muralidharan S; 6th March 2016 at 04:51 PM.

  2. Likes kirukan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •