அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பிற்கு சிம்பு வரவில்லையா? டி.ஆர்.விளக்கம்!

சிம்பு நடித்த வாலு, இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்கள், பல பிரச்னைகளையும் தடைகளையும் தாண்டி தட்டுத்தடுமாறி ரிலீஸானது. இந்நிலையில் “அச்சம் என்பது மடமையடா” படத்திற்கும் இந்நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறதாம் படக்குழு.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த “விண்ணைத் தாண்டி வருவாயா” திரைப்படம் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல், சிம்புவிற்கு உலகளவில் ரசிகர்களையும் சம்பாதித்துக்கொடுத்தது. மீண்டும் கெளதம் மேனன் - சிம்பு கூட்டணியில் வெளியாகவிருக்கும் படம் “அச்சம் என்பது மடமையடா”. தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் உருவாகிவருகிறது.

இப்படத்திற்கான க்ளைமேக்ஸ் காட்சிகள் உட்பட இன்னும் ஐந்து நாட்களுக்கு படப்பிடிப்பு பாக்கியிருக்கிறதாம். அதுமட்டுமின்றி சித்ஸ்ரீராம் குரலில் அனைவரையும் வசீகரித்த ‘தள்ளிப்போகாதே…’ பாடலே இன்னும் படமாக்கப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தெலுங்கு படத்திற்கான ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியையே முடித்துவிட்டார் கெளதம் மேனன். மேலும் தெலுங்கு ரிலீஸூக்கான புரமோஷன் வேலையிலும் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஆனால் தமிழில் எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

தமிழில் ஏன் தாமதமாகிறது என்று விசாரித்தால், சிம்பு தான் காரணம் என்கிறார்கள். ஆரம்ப கட்ட படப்பிடிப்பிற்கு சிம்பு சரியாக வந்துகொண்டிருந்தவர், க்ளைமேக்ஸ் காட்சிகளுக்கான ஷூட்டிங்கிற்கு சரியாக வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கிற்கு அன்று காலையில் சிம்புவைத் தவிர கெளதம் மேனன் உட்பட மற்ற அனைத்து கலைஞர்களும் காத்திருக்க, அன்றைய ஷூட்டிங்கிற்கே சிம்பு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் படக்குழுவிற்குள் சிறு பரபரப்பு நிலவியுள்ளது. அன்றுலிருந்து தமிழ் போர்ஷனுக்கான படப்பிடிப்பை பற்றி எதுவும் கெளதம் மேனன் பேசவில்லையாம்.

இதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.ராஜேந்தரிடம் பேசியபோது, “ டிடிஎஸ் கட்டணம் இன்னும் கட்டவில்லை. அதை கட்டியவுடன் படப்பிடிப்பிற்கு வந்துவிடுவார். ஷூட்டிங் வராததற்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. மேலும் கெளதமிற்கும் சிம்புவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை” என்று கூறினார்.