Results 1 to 3 of 3

Thread: மாத்தி யோசி

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    மாத்தி யோசி

    முத்து , தன் நண்பன் குமாரிடம் புலம்பினான். “என்னன்னு தெரியலே குமார் ! . என் கடைகளிலே பிஸினெஸ் மந்தமா இருக்கு? இத்தனைக்கும், உயிரை விட்டு உழைக்கிறேன். ராத்திரி பதினொரு மணி வரைக்கும் தினமும் பாடு படறேன். ஒண்ணும் சரியா வரல்லே. ஒண்ணுமே புரியலடா மாப்பிளே! வெறுப்பாயிருக்கு! ”




    முத்து , ஒரு முன்னேற விரும்பும் முப்பத்தைந்து வயது வியாபாரி. சென்னையில் ஐந்து சிறிய எழுது பொருள் மற்றும் பான்சி சாமான்கள் விற்பனை கடைகளின் சொந்தக்காரன்.பெரம்பூர், மூலக்கடை, ஓட்டேரி, ஐயனாவரம், மற்றும் கொளத்தூரில் கடைகள் வைத்திருந்தான்.

    முத்துவின் நண்பன் குமார் ஒரு கம்பனியில் மார்க்கெட்டிங் மேனேஜர். எம்பிஏ மார்க்கெட்டிங் படித்தவன். அவனால் முத்து சொல்வதை நம்பவே முடியவில்லை. முத்து கடுமையான உழைப்பாளி. பி.காம் படித்தவன். இந்த தொழிலின் நெளிவு சுளிவு நன்றாக தெரிந்தவன். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்?

    “என்ன சொல்றே முத்து? அஞ்சு கடை வெச்சிருக்கே. அது எப்படி லாபம் பாக்கம இருக்க முடியும்? ஆச்சரியமா இருக்கே! அப்போ எங்கேயோ கோளாறு இருக்கு!”

    “அதுதான் குமார் எனக்கும் புரியலே ! வியாபாரம் விருத்தியே ஆக மாட்டேங்குது. கடைசிலே எல்லாம் போக உழைப்பு மட்டும்தான் மிஞ்சுது. காசு பாக்க முடியலே!”

    “ஏன் முத்து! சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே? உன் கடை வேலைக்காரங்க ஒருவேளை உன்னை ஏமாத்தராங்களோ?” – குமாரின் சந்தேகம்.

    “சே! சே! கடைகளுக்கு வேண்டிய சரக்கு எல்லாம் நான் தானே போடறேன். தினமும், நானே என் ஜிப்சி வான்லே சரக்கு கொள்முதல் செஞ்சி, எல்லா கடைக்கும் நானே பர்சனல் டெலிவரி கொடுக்கறேன். கணக்கெல்லாம் சரியா வருதே?” – முத்து

    “அப்போ கணக்கு வழக்கிலே ஏதாவது குழப்பம்? ஏதாவது திருட்டு?”

    “சான்சே இல்லே குமார். நானே எல்லா கணக்கு வழக்கையும் பார்க்கிறேன். தினசரி அக்கவுன்ட் எல்லாம் நானே தான்.”

    “அப்போ ஏன் உன் வியாபாரம் மந்தமா இருக்கு? எங்கேயோ உதைக்குதே?”

    “அதான் எனக்கும் தெரியலே குமார். விற்பனை சரியா போக மாட்டேங்குது! எல்லா கடைகள்ளேயும் வாங்கி போடற சாமான் எல்லாம் அப்படி அப்படியே முடங்கி கிடக்கு! ”.

    “எனக்கு புரிஞ்சு போச்சு முத்து. நீ வாங்கிப் போடற சாமான்கள் தரம் மட்டம். கஸ்டமர் விரும்பலே. முதல்லே அதை மாத்து. எல்லாம் சரியாயிடும்.”

    “நீ வேறே குமார்! என்னையே குறை சொல்லறியே ! எல்லாம் சூப்பர் குவாலிட்டி. ஒரு கஸ்டமர் கூட இதுவரை குறை சொன்னதில்லையே”

    “அப்போ, குறை உன் கடை சிப்பந்திகள் கையிலே தான். அவங்களுக்கு சாமானை விக்க தெரியலே! வியாபார தந்திரம் போதாது. என்ன முத்து, உனக்கு இது கூட தெரியலியா?”

    யோசித்தான் முத்து. 'ஒரு வேளை அதான் காரணமோ?'

    “என்ன பண்ணலாம்? நீயே ஒரு ஐடியா கொடேன் குமார்! ”

    குமார் தன் தலையை சுட்டு விரலால் தட்டிக் கொண்டான். . “ம்.. ஒன்னு செய்யலாம். விடுமுறை நாளிலே, உன் கடை சிப்பந்தி எல்லாரையும், உன்னோட பெரம்பூர் கடைக்கு வரசொல்லு. நானே அங்கு வந்து வியாபார நுணுக்கம் பற்றி இரண்டு மூணு வகுப்பு எடுக்கறேன். அவங்க விக்கும் திறமையை வளர்க்க நான் எனக்கு தெரிந்ததை சொல்லித்தரேன். என்ன ஆகுதுன்னு பார்ப்போம். சரியா ? ”

    முத்துவிற்கு இந்த ஐடியா பிடித்திருந்தது. “அப்படியே பண்ணலாம் குமார். ரொம்ப தேங்க்ஸ் உனக்கு! உன்னைதான் மலை போல நம்பியிருக்கேன். எப்படியாவது என் கடைகளின் வியாபாரத்தை பெருக்க வழி சொல்லு.! ”

    “என்ன மாப்பிளே இது!உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன்? நீ கவலைப் படாம போ”- குமார்

    ****


    குமார் , தனக்கு தெரிந்த வியாபார நுணுக்கங்கள் ,விற்பனை திறமை பற்றி முத்துவின் ஐந்து கடை சிப்பந்திகளுக்கும் மூன்று ஞாயிறு தினங்களில் வகுப்பு எடுத்தான். அவர்களுடன், வியாபார தந்திரங்கள், பேச்சு திறமை பற்றி தன் புரிதலை பகிர்ந்து கொண்டான்.

    ****

    இரண்டு மாதம் கழித்து

    முத்துவும் குமாரும் மீண்டும் சந்தித்து கொண்டனர்.

    குமார் கேட்டான் “என்ன முத்து! இப்போ வியாபாரம் எப்படி போகுது?”

    சூள் கொட்டினான் முத்து. “ என்னமோ போ குமார் ! ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி முன்னேற்றம் இல்லே . அப்படியேதான், மந்தமாகத்தான் இருக்கு”

    “அப்படியா! முத்து, வகுப்பு எடுக்கச்சேயே நான் பார்த்தேன். அப்பவே சொல்லனும்னு நினைச்சேன். உன் சிப்பந்திகளுக்கு இந்த பயிற்சி, கிளாசெஸ் இதிலே எதுவும் நாட்டமில்லே. அதுவுமில்லாம, அவங்களுக்கு தொழில் நுணுக்கமெல்லாம் நல்லாவே தெரிந்திருக்கு. அதுலே ஒன்னும் குறை தெரியலே!”

    “அப்போ திறமையின்மையும் காரணம் இல்லியா? பின்னே ஏன், விற்பனை ரொம்ப கம்மியா இருக்கு?”- முத்து கேட்டான்.

    “அதைத்தான் முத்து, நானும் யோசனை பண்ணிகிட்டிருக்கேன். சரி, நான் ஒரு ஐடியா சொல்றேன், கேக்கிறியா?”

    “என்ன பண்ணனும் சொல்லு” - முத்து முனகினான் அரை மனதுடன்.

    “உன் கடை கணக்கு வழக்கெல்லாம் நீயே எழுதறேன்னு தானே சொன்னே?”

    “ஆமா! அதுக்கென்ன இப்போ?”

    “ அங்கே தான் எனக்கு பிரச்னை ஆரம்பம்னு தோணுது !. அதை நீ செய்யாதே. ஒரு படிச்ச பையனை கடைகள் கணக்கு வழக்கு எழுத வேலைக்கு வை.”. குமார் சொன்னான்.

    “வெச்சா?””

    “சொல்றதை செய். கேள்வி கேட்காதே ! அப்புறம், கடைகளுக்கு தேவையான கூட்ஸ், ஸ்டேஷனரி எல்லாம் நீதானே வண்டியிலே சப்பளை பன்றேன்னு சொன்னே? உடனே, உன் டெலிவரி வண்டிக்கு ஒரு டிரைவர் போடு. டெலிவரி, சப்ளை எல்லாம் அவன் கிட்டே ஒப்படைச்சுடு. நீ டெலிவரிக்கு போகாதே! ”

    “என்ன குமார், வரவை அதிகப் படுத்த வழி கேட்டால், செலவை அதிகம் பண்ண ஐடியா கொடுக்கறே இதுதான் எம்பியே வா ?”- சந்தேகத்தோடு முத்து கேட்டான். குமார் கிட்டே யோசனை கேட்டதே தப்போ?

    குமார் கறாராக சொன்னான். “முத்து, ஒரு மூணு மாசத்துக்கு நான் சொல்றபடி கேளு. அப்புறம் பாக்கலாம்”

    “சரி, நீ சொல்லிட்டே, அப்படியே பண்றேன்” அரை மனதோடு சம்மதித்தான். எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் தான் முயற்சி பண்ணிடுவோமே.!

    கணக்கு எழுத ஒரு படித்த பையனை அமர்த்தினான். ஐந்து கடைகளுக்கும் சாமான் டெலிவரி கொடுக்க ஒரு டிரைவரை வேலைக்கு சேர்த்தான்.

    ****

    இன்னும் நான்கு மாதம் கழித்து

    முத்துவும் குமாரும் மீண்டும் சந்தித்து கொண்டனர்.

    “என்ன மாப்ளே, இப்போ வியாபாரம் எப்படி போய்க்கிட்டிருக்கு?”

    “குமார்! என்ன மாயம் பண்ணினே! இப்போ என் வியாபாரம் நாலு மடங்காயிடுத்து. எல்லா கடைகளும் அமக்களமா நடக்குது. இரண்டு கடைகளை பெருசாக்க முடிவு பண்ணியிருக்கேன்.”

    “சூப்பர் முத்து. பார்த்துக் கொண்டே இரு, ஒரு நாள், நீ சூப்பர் மார்க்கெட் கூட வெப்பே. அதுதானே உன் ஆசை? எங்கே எனக்கு ட்ரீட் ?”

    “கட்டாயம். எங்கே வேணா போகலாம் மச்சான். அது சரி, பிரச்சினை என்கிட்டே தான் இருக்குன்னு எப்படி கண்டு பிடிச்சே?” – முத்துவுக்கு தெரிந்து கொள்ள ஆவல்.

    ““முத்து, ரொம்ப சிம்பிள். நான் பார்த்ததிலே, உன் திறமை, உழைப்பெல்லாம், விழலுக்கிறைத்த நீரா, வீணாகிட்டிருந்தது போல எனக்கு தோணித்து. கிட்டதட்ட, நீயும் ஒரு டிரைவர், குமாஸ்தா மாதிரி தான் வேலை பண்ணியே தவிர, முதலாளி மாதிரி நடக்கல. கடைகளை சரியா மேற்பார்வை பண்ணலே.”

    “ஆமா! நீ சொல்றது சரிதான் குமார். முன்னெல்லாம், காலிலே வெந்நீர் கொட்டிகிட்டா மாதிரி ஓடுவேன். யாரோடவும் பேசக்கூட நேரம் இருக்காது. கணக்கு பாக்கறதும், டெலிவரி பண்றதுமே நேரம் சரியா இருக்கும். இப்போ எனக்கு நிறைய நேரம் இருக்கு”

    குமார் சிரித்தான். “ இத இத தான் நான் எதிர்பார்த்தேன்1”

    முத்து தொடர்ந்தான். “அதனாலே , இப்போ ஒவ்வொரு கடையிலும், அதிக நேரம் செலவிடறேன். சிப்பந்திகள் கூட பேசிப் பழகறேன். அவங்களுக்கு சொல்லித்தரேன். அவங்க பிரச்சனைகளை கேக்கறேன். நான் அடிக்கடி வந்து கடைகளைபார்க்கரதினாலே, அவங்களும் முனைப்பா வேலை பார்க்கிறாங்க. நான் கண் காணிக்கிறேன்னு தெரிஞ்சு ஒழுங்கா நடந்துகிறாங்க. இப்பதான் அவங்களுக்கு வேலைலே ஒரு பிடிப்பும் வந்திருக்கு “

    “கரெக்ட் முத்து! இப்போ தெரிஞ்சுகிட்டியா ! இதுதான் மேனேஜ்மென்ட் பை வாக்கிங் அரவுண்ட்(“Management by Walking Around"). சுற்றி வரும் மேலாண்மை” .

    “அட ! இதுக்கு பேரெல்லாம் வேறே வெச்சிருக்காங்களா என்ன?” – முத்து அதிசயித்தான்.

    ”பின்னே! அதாவது, உன் கீழே வேலை செய்யறவங்களை நீ ஊக்குவிக்கணும். பார்த்துக்கணும். மேற்பார்வை பண்ணனும். உதாராணமா இருக்கணும். முதலாளியா, அதான் உன் வேலை, அது மட்டும் தான் உன் வேலை தெரிஞ்சுக்கோ! நீ உன் வேலையை செய்யணும். அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாக்கனும். மத்தவங்க வேலையெல்லாம் நீ செஞ்சா, உன் வேலையை யாரு செய்வாங்க சொல்லு? ”

    “நீ சொல்றது சரிதான் குமார். உண்மையில், என் முன்னேற்றத்துக்கு நீ தான் காரணம். மில்லியன் தேங்க்ஸ் உனக்கு”

    "அதெல்லாம் எதுக்கு? எதுக்கும், உன் கணக்கு வழக்கு, டிரைவர் பேரிலே ஒரு கண்ணும் வெச்சுக்கோ. அதை விட்டுடப் போறே! "

    "கட்டாயம், எனக்கு உதவியா, ஒரு மேற்பார்வையாளர் கூட வெச்சிக்கிறேன். போதுமா?இப்போ என்னாலே முடியுமே ! " சிரித்தான் முத்து.

    *****முற்றும்


    திருக்குறள் : தெரிந்துசெயல்வகை

    செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்.


    ஒருவன் செய்யத்தக்க அல்லாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

    ****





    courtesy :

    Last edited by Muralidharan S; 1st May 2015 at 10:05 AM.

  2. Likes kirukan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    கதை சூப்பரு! கதை மூலம் ஒரு நல்ல எம்பியே பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு தேங்க்ஸு!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. Likes Russellhni liked this post
  6. #3
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    பவளமணி பிரகாசம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •