Results 1 to 8 of 8

Thread: தூண்டிலில் சிக்கிய மீன்கள்

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    தூண்டிலில் சிக்கிய மீன்கள்

    தங்கமணி : வயது 61

    தங்கமணி ஒரு தனியார் கம்பனி வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர். பென்ஷன் இல்லை.

    “என்னங்க! இப்படி இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே? வயசு வந்த ரெண்டு பெண்களை கரை எத்தறதை பத்தி ஏதாவது யோசனை பண்ணீங்களா?” – மனைவி வனஜாவின் அலம்பல். கொஞ்ச நாளாக, தினமும் காலையில் தங்கமணி பேப்பர் படிக்க உட்காரும்போது இதுதான் நடக்கிறது.

    “கவலைப் படாதே வனஜா. பாக்கலாம், என் பி. எப் பணத்தை வெச்சு, இந்த வீட்டை அடமானம் வெச்சு பெண்களுக்கு கல்யாணம் பண்ணிடலாம். அப்புறம், எதாவது கணக்கு எழுதற வேலை கிடைச்சா கூட போதும். நம்ப வயத்தை கழுவிக்கலாம்.”

    “இதேதான் எப்பவும் சொல்றீங்க! உங்களுக்கு எங்கே வேலை கிடைக்கப் போவுது? ஏதாவது உருப்படியா சொல்லுங்க.”

    “நான் என்ன பண்ணட்டும் வனஜா? நானுந்தான் எங்கெங்கேயோ முயற்சி பண்றேன். எவன் வேலை கொடுக்கறேன்கிறான்? அறுபது வயசு, ரிடையர்ட் அப்படின்னாலே, ஜகா வாங்கறான். என் படிப்பு, அனுபவம் ஒண்ணும் வேலைக்காவலை”.

    தங்கமணி செய்தித்தாளை பிரித்தார். உள்ளே இருந்து விழுந்த ஒரு துண்டு பிரசுரம் அவரைக் கவர்ந்தது.

    “ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மட்டும். நீங்கள் உன்னதமாக வாழ ஒரு கடைசி சந்தர்ப்பம். உங்களுக்கு என்றே, புதுமையான யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சிறந்த ஒரு வாய்ப்பு.

    அள்ளுங்கள் கைநிறைய. சொந்தக் காலில் நில்லுங்கள். நிம்மதியாக வாழுங்கள். வயது வரம்பு இல்லை. இன்றே அணுகுங்கள் அலை பேசி எண் : “



    தங்கமணி போனை கையிலெடுத்தார்.

    “ஹலோ! நான் சென்னை அம்பத்தூரிலிருந்து பேசறேன். ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்குன்னு உங்க விளம்பரம் பார்த்தேன். அதைப் பத்தி சொல்ல முடியுமா?”

    “கட்டாயம் சார், உங்க பேரு கொஞ்சம் சொல்லுங்க”

    “தங்கமணி”

    “தங்கமணி சார், நீங்க வர்ற ஞாயிறு பதினொரு மணிக்கு கிண்டிலே இருக்கிற மாருதம் ஹோட்டலுக்கு வந்துடுங்க. அங்கே வெச்சி எல்லா விஷயமும் சொல்றோம். வெல்கம் ட்ரின்க், மதியம் சாப்பாடு, கிப்ட் எல்லாம் உண்டு.”

    “சரி வரேன். இப்போ கோடி மட்டும் காட்ட முடியமா? வேலை வாய்ப்பு தானே?”

    “கட்டாயம் அதுவும் இருக்கு சார். நேரே வாங்க, கோடி கோடியா நீங்க சம்பாதிக்க வழி சொல்றோம்”


    ****
    ஞாயிறு பனிரெண்டு மணி

    மாருதம் ஹோட்டல். தமிழ்நாட்டில் பத்து பதினைந்து கிளைகள் உள்ள ஒரு பைனான்ஸ் கம்பெனி கூட்டம்.

    ஒரு இருவது பேர் அமர்ந்திருந்தனர். எல்லாம் பெருசுகள். எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தனர். தங்கமணி முதல் வரிசையில்.

    டிப் டாப் உடையணிந்த ஒரு நடுத்தர வயதுகாரர் , ஆணித்தரமாக பேசிக்கொண்டிருந்தார். அவர் பின்னாடி திரையில் ஒரு பிரசன்டேஷன் ஓடிக்கொண்டிருந்தது. இடையிடையே சில சீனியர் சிட்டிசன்கள், முந்திரிக் கொட்டைகளாய், கேள்விகள் கேட்டு கொண்டிருந்தனர். அதற்கு அவர் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

    “சார்! ஏதோ வேலை வாய்ப்பு இருக்குன்னு நினைச்சேன். நீங்க அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே? ஏதோ பணம் போடுன்னு தானே சொல்றீங்க?” – தங்கமணி

    “இருக்கு சார். எப்படின்னு ஒண்ணொண்ணா சொல்றேன்!. இப்போ உங்க பி.எப் பணத்தை வங்கியிலே போட்டா மிஞ்சிப் போனா ஒரு பத்து சதவீதம் வட்டி கிடைக்குமா? அதாவது ஒரு லட்சத்துக்கு, வருடத்துக்கு பத்தாயிரம். ஆனால், எங்ககிட்டே அதே ஒரு லட்சத்துக்கு மாதம் ஐயாயிரம் கிடைக்கும். அதாவது, வட்டி மட்டும் வருஷத்துக்கு அறுபதாயிரம். அதாவது அறுபது சதவீத வட்டி. வட்டி உங்க வீட்டுக்கு , பென்ஷன் மாதிரி மாதா மாதம் ஐந்தாந் தேதி வந்திடும். எப்போ வேணுமோ, அப்போ உங்க அசலை திருப்பி வாங்கிக்கலாம்.”

    “அது அப்படி சாத்தியம்?” – தங்கமணிக்கு சந்தேகம்.

    “நல்ல கேள்வி! நாங்க ஒரு பெரிய நிதி நிறுவனம். பங்கு சந்தை, அயல் நாட்டு செலாவணி அப்புறம் தங்கம் வெள்ளி வர்த்தகம் இதிலே முதலீடு பண்ணி நிறைய லாபம் பண்ணிக்கிட்டு இருக்கோம். உங்க பணத்தை அதிலே போடுவோம். பங்கு சந்தையில் கை தேர்ந்த எக்ஸ்பெர்ட் எங்ககிட்டே இருக்காங்க. லாபம் கட்டாயம். நம்ம ஊர் எம்.பி, எம்.எல்.ஏ எல்லாம் இந்த கம்பனிலே பணம் போட்டிருக்காங்க. ”

    “ இது ஒரு இன்வெஸ்ட்மென்ட் தானே. இதிலே வேலை வாய்ப்பு எங்கே இருக்கு?” –தங்கமணி விடவில்லை.

    “இதோ சொல்றேன். இந்த திட்டத்திலே நீங்க சேர்ந்தவுடனே, நீங்க இந்த கம்பனியின் விற்பனைப் பிரதிநிதி ஆகிடறீங்க. அதிகார பூர்வமா சம்பளம் கிடையாது. ஆனால், அதை விட அதிகமா, உங்களது திறமையை பொறுத்து கமிஷன் அடிப்படையில, நீங்க பணம் அள்ளலாம்.” நிறுத்தினார்.

    எல்லோரும் ஆர்வமாக கேட்க ஆரம்பித்தார்கள்.

    “இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?” கூட்டத்தில் ஒரு குரல்.

    “கட்டாயம். நாங்க ஏன் இந்த திட்டத்தை ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மட்டும்னு சொன்னோம் தெரியுமா? உங்க அனுபவம், பேச்சு சாதுரியத்தினாலே, கமிஷன் அடிப்படையிலே புது உறுப்பினரை நீங்க எளிதிலே சேர்க்கலாம். அதுக்கு நாங்க 15% கமிஷன் தறோம். உங்க அனுபவம், முதிர்வு எல்லாம் உங்களுக்கு கை கொடுக்கும். உங்களிடம் செலவிட நேரமும் இருக்கு. உங்க ஒய்வு நேரத்திலே, அலை பேசி மூலமாகவோ, இ மெயில் மூலமாகவோ உங்க நண்பர், உறவினரை சேர்க்கலாம்..”

    “மாசம் சுமாரா எவ்வளவு கிடைக்கும்?” – தங்கமணி.

    “உங்க திறமையை பொறுத்தது. உங்கள் சிபாரிசினாலே, ஒரு புது உறுப்பினர் ஒரு லட்சம் முதலீடு செய்தால், உங்களுக்கு ரூபாய் 15000/- உங்க வீடு தேடி செக் வந்துடும். உங்க உறுப்பினர் எண்ணை மட்டும் மறக்காம புது உறுப்பினர் சேரும் படிவத்திலே குறிப்பிட மறக்காதீங்க. மறந்தால், பணம் உங்களுக்குக் கிடையாது. லம்பா எனக்குத்தான்.”

    கூடியிருந்தவர் மெலிதாக சிரித்தனர்.

    “மாசம் நீங்க ரெண்டு புது கஸ்டமர் கொண்டுவந்தாலும், குறைந்த பட்சம் முப்பதாயிரம் கிடைக்கும். உங்களுக்கு விசிடிங் கார்ட் கொடுப்போம். மெம்பர்ஷிப் அட்டையும் கொடுப்போம். ..நீங்க வீட்டிலிருந்தே காசு அள்ள ஒரு அருமையான சந்தர்பம். நழுவ விட்டுடாதீங்க. அதைத்தவிர, நல்லா பண்றவங்களுக்கு, வெளிநாடு சுற்றுலா, போனஸ் எல்லாம் உண்டு.“

    “இந்த ஒரு லட்சம் முதலீடு பண்ணாமல், நான் விற்பனை பிரதிநிதியாக முடியாதா?” –தங்கமணிக்கு முதலீடு செய்ய பயம். உள்ளதும் போயிட்டா?

    “முடியாதுங்க ஐயா. நம்ம கம்பெனி ரூல் இடம் கொடுக்காது. உங்க பணத்தை உங்க வேலைக்கான உறுதிப் பணமா நினைச்சிக்கோங்க”

    கூட்டம் கலைந்தது. ஒரு பத்து பேர் உடனடியாக தங்களை உறுப்பினராக சேர்க்க படிவம் நிரப்பிக் கொண்டிருந்தனர். தங்கமணிக்கு ஏனோ தயக்கம்?

    சேரவும் பயமாக இருந்தது. விடவும் மனமில்லை. கடைசியில், பயம் வென்றது. தங்கமணி எதுவும் பேசாமல், வீட்டிற்கு வந்து விட்டார்.

    ****


    .. To Continue ....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    திக்!திக்!திக்! வேண்டாம் சபலம்!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. Likes Russellhni liked this post
  5. #3
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    தூண்டிலில் சிக்கிய மீன்கள் - 2

    தங்கமணி வீடு :

    “என்னங்க ஆச்சு! வேலை கிடைத்ததா?” வீட்டிற்கு உள்ளே நுழையும் போதே அவரது மனைவி வனஜா கேட்ட கேள்வி. குரலிலேயே எதிர்பார்ப்பு தெரிந்தது.

    “வேலை இருக்கும்மா! ஆனால் எனக்கு தோதுப் படும்னு தோணலை. ஒரு லட்சம் முதலீடு செய்யச்சொல்றாங்க”. மனைவியிடம் தங்கமணி எல்லாவற்றையும் விவரித்தார்.

    “பேசாம முதலீடு பண்ணிடுங்களேன். வட்டிதான் நிறைய கிடைக்குமே! வேலை வேறே கிடைக்கும்னு சொல்றாங்க. நம்ம கஷ்டம் விடியாதா?”

    “இல்லேம்மா! எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு. யோசனைப் பண்ணி பாரு. எப்படி இவர்களால் மட்டும் இப்படி கமிஷன்,போனஸ் வட்டின்னு வாரிக் கொடுக்க முடியும்? வங்கியை விட, வட்டி மட்டும், ஆறு மடங்கு அதிகம். இதை தவிர, ஏஜென்ட் கமிஷன். எப்படிம்மா , பேங்க்காரங்களாலே முடியாதது , இவங்களுக்கு மட்டும் சாத்தியம் ஆகும்?”

    “அதான் இவங்க பங்குச்சந்தை வியாபாரம் பண்றாங்கன்னு சொன்னீங்களே?”

    “பங்கு சந்தையிலே அவ்வளவு லாபம் கிடைக்குமா? எனக்கு நிச்சயமா தெரியலே. அப்படின்னா எல்லாரும் அதிலே போய் விழுவாங்களே? நிசத்திலே, நிறைய பேர் தலைலே துண்டு போட்டுக்கிட்டு இல்லே போறாங்க?”

    “இவங்க விஷயம் தெரிந்தவங்களை வேலைக்கு வெச்சிருப்பாங்க.”

    “அப்படின்னா, இதே பங்குச்சந்தையிலே இருக்கிற எத்தனையோ மியூச்சுவல் பண்டுகள் இந்த லாபம் எப்பவும் சொன்னதில்லையே? அவங்களும் இது மாதிரி அனுபவம், தகுதி இருக்கறவங்களை தானே வேலைக்கு வெச்சிருக்காங்க. அங்க கூட நஷ்டம்னு தானே நிறைய பேப்பர்லே பாக்கிறோம்”

    “நீங்க சொல்றதும் சரிதான். எதுக்கும், உங்க நண்பர் சேதுவைக் கேளுங்களேன். பக்கத்திலே தானே இருக்கார். அவர் நல்ல ஐடியா கொடுப்பார். அவர் பையனும் ஏதோ ஒரு நிதிலே தானே வேலை செய்யறான்?”

    “சரி பேசறேன்.”

    *****
    சேது : ஒய்வு பெற்றவர் வயது 63

    சேதுவின் பிளாட். சேது தங்கமணியின் நண்பர். சேது வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவர். ஓய்வூதியம் வருகிறது. வணிகம் நிதி, முதலீடு பற்றி நன்கு தெரிந்தவர். எதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கும் குணம். தனது அனுபவம், அறிவை கொண்டு, நண்பர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயல்வார். சுருக்கமாக அவரது நண்பர்களுக்கு ஒரு மேவன் (Maven).

    அவரது அலைபேசி அழைத்தது.

    “சேது ! நான் தங்கமணி பேசெறேன். ப்ரீயா இருக்கியா?”

    “சொல்லு தங்கமணி, என்ன விஷயம்?”

    " உன்கூட கொஞ்சம் பேசணும் சேது , நான் நேரவே வரேன் , வீட்டிலேயே இரு"

    அடுத்த அரை மணியில், தங்கமணி சேதுவின் வீட்டில் ஆஜர்.

    தங்கமணி தான் போய்வந்த பைனான்ஸ் கம்பெனி கூட்டம் பற்றி விவரித்தார்.

    “இதோ பாரு தங்கமணி, இந்த மாதிரி மார்கெட்டிங் வேலையெல்லாம் எடுத்துக்காதே. கடைசிலே உனக்கு தேவையில்லாத பிரச்னைகள் வரும். ஏதாவது ஆச்சின்னா, உன்னை நம்பி பணம் போட்டவங்க உன்னை பிச்சி பிச்சி எடுத்திடுவாங்க. இருக்கிற மானமும் போகும். இந்த வயசிலே இதெல்லாம் தேவையா?“

    “ஏன் அப்படி சொல்றே சேது?”

    “ நீ போன அந்த பைனானஸ் நிறுவனம் பற்றி எனக்கு தெரியும் தங்கமணி. இது ஒரு எம்எல்எம் கம்பனி( MLM- Multi Level Marketing) . உனக்கே தெரியும், வைப்பு நிதி வட்டி 60% கொடுக்கறேன்னு சொன்னாக்க, எப்படி கட்டுபடி ஆகும்? எங்கேயோ தப்பு இருக்கு. வில்லங்கம் இருக்கு. அந்த மாதிரி கம்பனிக்கு ஆள் சேக்க உனக்கு தைரியம் இருக்கா? எல்லா கம்பனியும் அப்படின்னு நான் சொல்லலே. கொஞ்சம் யோசனை பண்ணி செய்யுன்னு தான் சொல்லறேன்.”

    “ஏதோ ஒன்னு ரெண்டு கம்பனி திவாலாச்சுன்னா, அதுக்காக ஒட்டு மொத்தமா சொல்ல முடியுமா என்ன?”

    “இல்லே சேது, இவ்வளவு கமிஷன், வட்டி கொடுக்கணும்னா, ரோடேஷனுக்கு பணம் வேணும். அதுக்கு புதுசா சேருபவர்கள், பணத்தை தான் எடுத்து கொடுக்கணும். அதனாலே தான், ஆள் சேக்கரதிலேயே குறியா இருக்காங்க. புதுசா யாரும் சேரலன்னா, அப்போ அந்த கம்பனி படுத்துக்கும். இதை பிரமிட்னு சொல்லுவாங்க. இந்த வட்டி, உண்மையில் நடக்கிற காரியமில்லே. நல்ல யோசனை பண்ணிப்பாரு. உனக்கே புரியும். “

    சேது ஒரு காகிதத்தில் ஏதோ படம் வரைந்தார். தங்கமணிக்கு அதை பார்த்தால் , ஒன்றும் புரியவில்லை. கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது.


    சேது தொடர்ந்தார். “ இங்கே பாரு தங்கமணி, இந்த MLM கம்பனிகளில் பெரும்பாலும் இப்படித்தான் நடக்குது. மெம்பரா சேரறவங்க ஒரு லக்ஷம் ரூபா டெபாசிட் பண்ணனும்னு வெச்சிக்க, உன்னை மாதிரி. அவன் ஆறு பேரை சேர்க்கிரான்னு வெச்சிப்போம் . அப்போ கம்பனி நிதி 6 லக்ஷம் கூடும். சரியா ? அதிலிருந்து கமிசன் கொடுப்பாங்க. அதேமாதிரி புதுசா சேர்ந்த அந்த ஆறு பேரும் ஒவ்வொருத்தரம் ஆறு பேரை சேப்பாங்க. அப்போ 36 மெம்பெர்ஸ் ஆயிடும் தானே? பணம் 36 லக்ஷம் கம்பனிக்கு சேரும். . அடுத்த கட்டம் மெம்பெர்ஸ் 216 ஆகும். இப்படியே போனால் பதிமூனாவது ரவுண்டு வரும் போது உலக ஜனத்தொகையை விட அதிக மெம்பெர்ஸ் இருப்பாங்க. இது ஆவர காரியமா ? அப்படியே ஆனாலும் அவங்களுக்கு கமிஷன் கொடுத்து கட்டுபடி ஆகுமா ? அந்த பணத்தை எதிலே இன்வெஸ்ட் பண்ண முடியும் ? இதெல்லாம் நடக்கிற காரியமில்லே. கம்பனி ஆரம்பிச்சவங்க இருக்கிற முதலை, அவங்க பண முதலை தானே, கிடைச்ச வரைக்கும் போதும்னு தூக்கிட்டு ஓடிடுவாங்க. பணம் போட்டவனுக்கு மஞ்ச கடுதாசி தான் கிடைக்கும் . புரியுதா நான் சொல்றது? “



    புரிந்தது போல இருந்தாலும், தங்கமணியின் ஆசை அவரை விடவில்லை. “இல்லே சேது, அவங்க அந்நிய செலாவணி, கம்மாடிடி, பங்கு வர்த்தக முதலீடுலே போடறேன்னு சொல்லறாங்களே. அந்த லாபத்தை தானே ஷேர் பண்றாங்க”

    “அதெல்லாம் சூதாட்டம் தங்கமணி! நம்பாதே ! அது ஸ்பெகுலஷன்.! அதிலே ரொம்ப ரிஸ்க் இருக்கு. அந்த கம்பனி டைரக்டர் ஒருத்தன் பேரிலே ஏற்கெனவே மோசடி வழக்கு ஒண்ணு நிலுவையிலே இருக்கு. எனக்குத்தெரியும். எதுக்கும் பாத்து பண்ணு”

    அரை மனதுடன் தங்கமணி கிளம்பினார். ”சரி சேது! உன் பையன் மோகன் சீட்டு கம்பனிலே தானே வேலைலே இருக்கான். அவனையும் கொஞ்சம் கேட்டுக்கறேனே. அவன் இருக்கானா?”. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று தினம் கூத்தாடும் நடுத்தர வர்க்கம். இரண்டாம் ஒபினியன் வாங்கினால் தான் என்ன? தன் விருப்பத்திற்கு ஏற்றாற்படி யாராவது சொல்ல மாட்டார்களா ? இது அவர் எதிர்பார்ப்பு .

    “ அவன் இப்போ வீட்டிலே இல்லே. வந்தவுடனே உன்கிட்டே பேசசொல்றேன். சரியா! ”.
    ***



    ... தொடரும் ...
    Last edited by Muralidharan S; 29th December 2015 at 11:23 AM.

  6. #4
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    விழிப்புணர்வு கதை என்று விட்டு குறட்டை விடுவது எந்த விதத்தில் நியாயம். முரளி.. தவிர சிறுகதைகளுக்கெல்லாம் டைம் எடுக்கக் கூடாது.ஒன்று முழுதாக எழுதி மூன்று பகுதியாக அடுத்தடுத்த நாளிலோ அல்லது உடனேவோ போஸ்ட் செய்துவிடுவது நல்லது.

    கதையைப் பொறுத்தவரை க் கொஞ்சம் கட்டுரை சாயல் தான்... நான்ஃபிக்*ஷன் இன் கதை வடிவம் என்பது போலத் தான் இருக்கிறது..பட் ஓ.கே சொல்லவந்த மெஸேஜை தாமதிக்காமல் இட்டு விடுங்கள்- ஏற்கெனவே எழுதியிருந்தால்..எழுதவில்லையெனில் எழுதி நாளை இடுங்கள்..

    எந்தக் காலத்திலும் மக்கள் ஏமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்..இதற்கான பேஸிக் திங்க்..விலைவாசி ஏற்றம்..இன்று டி.வி ஒரு ஜூவல்லரிக்கான விளம்பரம். ஒரு வட நாட்டு நடிகை, அவர் கணவர், அவரது தந்தை (இருவருமே நடிகர்கள்) ப்ளஸ் இங்கு உள்ள ஒரு தமிழ் நாட்டு நடிகர், தெலுங்கு நடிகர் ஒருவர் என.. ஜூவல்லரி க் கிளைகள் ஆரம்பிக்கின்றன என ச் சொல்லி தரமான, சேதாரம் இலலாமல் கூலி குறைவாய் என்பது போல விளம்பரம்.. ஹெள இட் வில் பி பாஸிபிள்.. அட் காஸ்ட்டே கோடிகளைத் தாண்டும், பின் ஷோரூம் காஸ்ட் மற்றும் வேலையாட்கள் ப்ளஸ் லொக்கேஷன் ( நகைக்கடையை ஒரு ஒதுக்குப்புறமான நகரில் திறக்க முடியாது) இந்தக் காஸ்ட் எல்லாம் எப்படி ரிகவர் ஆகும்..கண்டிப்பாக எம்.சியில் தான் வரும்..ம்ம்பட் ஸ்டில் மக்கள்ஸ் செல்வார்கள்..

    எனிவே தாமதமான என் வருகைக்கு மன்னிக்கவும்..

  7. Likes Russellhni liked this post
  8. #5
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி ! மேடம்
    நன்றி !. சின்ன கண்ணன் .
    Last edited by Muralidharan S; 12th April 2015 at 07:51 AM.

  9. #6
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    தூண்டிலில் சிக்கிய மீன்கள் - 3

    தங்கமணி வீடு: அடுத்த நாள் காலை

    “அப்பா சொல்றதை கேக்காதீங்க அங்கிள். அவர் எப்பவுமே அப்படித்தான். எதுக்கும் ரிஸ்க் எடுக்கவே பயப்படுவார்.” சேதுவின் மகன் மோகன். நேராகவே தங்கமணி வீட்டுக்கே வந்து விட்டான். வாய்ப்பை அவன் தவற விட விரும்பவில்லை.

    “அப்போ என்னை சேரலாம்னு சொல்லறியா?” தங்கமணி கொஞ்சம் சந்தேகமாக கேட்டார்.

    “கட்டாயம். நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா தங்கமணி அங்கிள், பேசாம எங்க கம்பனிலே சேர்ந்திடுங்க. எங்க கிட்டேயும் அதே மாதிரி பிளான் இருக்கு. நான் சொல்லி இன்னும் அதிகமாவே கமிஷன் வட்டி எல்லாம் கொடுக்க ஏற்பாடு பண்றேன். ஒரு லட்சத்துக்கு மாசம் ஆறாயிரம் வட்டி. புது உறுப்பினரை சேர்த்தால் 20% கமிஷன். உங்களுக்காக மட்டும் இந்த ரேட். ஓகே வா? ” – மோகன்.

    “முடியுமா? இப்படி ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்குன்னு உங்க கிட்ட ஸ்கீம் இருக்கா என்ன? நீங்க வெறும் சீட்டு கம்பனி தானே!”

    “இருக்கே. எங்க கிட்டே ஏல சீட்டு மாத்திரம் இல்லே, வேறே நிறைய ஸ்கீமும் இருக்கு. நீங்க சொல்ற அதே ஸ்கீமும் இருக்கு. எல்லாம் ஒன்னே தான். ஏல சீட்டுலே மாசா மாசம் போடணும். உங்க ஸ்கீம்லே ஒரு தடவை மட்டும் போட்டா போதும். மத்தபடி ரெண்டும் கிட்ட தட்ட ஒண்ணு தான்.”

    “அப்படியா?”

    “போன மாசம் , எங்க விளம்பரம் அம்பத்தூர் டாக் லே வந்ததே, கிட்ட தட்ட உங்க கையிலே இருக்கே அது மாதிரி. நீங்க பாக்கல்லே? ”

    “அப்பா இதிலே உறுப்பினரா?”

    “எங்கப்பாவா? இதிலேயா? சான்சே இல்லே!”

    “சரி, உன்ன நம்பி சேர்றேன். இந்தா ஒரு லக்ஷம் ரூபாய்க்கு செக். என்ன பேர் போடட்டும் ? ”

    “ ஐஸ்வர்யா பாலாஜி பைனான்ஸ் அங்கிள். நிச்சயம் ஐஸ்வரியம் உங்களை தேடி வரும் அங்கிள், பாருங்களேன்.” – மோகன்

    ****

    மூன்று மாதம் கழித்து:
    தங்கமணி வீடு :


    “சார்! கொரியர்!”

    “வனஜா, ஐஸ்வர்யா பாலாஜி கம்பனியிலேருந்து மூணாவது செக் வந்துடுத்து. ஐந்து பேரை சேர்த்து விட்டேன். இதுவரை எழுபதாயிரம் ரூபாய் வந்துடுத்து. இன்னும் வரும்னு வேறே சொல்லறாங்க. நம்ம டெபாசிட்டுக்கும் வட்டி ரெண்டு மாசம் வந்துடுத்து 12000/-. ” - சந்தோஷம் தங்கவில்லை தங்கமணிக்கு

    “பரவாயில்லீங்க. கடவுள் நம்மை கை விடல்லே.”

    “அதான், போன மாசம், ஐஸ்வர்யா பாலாஜி பைனான்ஸ்லே இன்னும் ஒரு ஐந்து லக்ஷம் போட்டேன். அடுத்த மாசம் பேங்க் டெபாசிட்டை எடுத்து ஐந்து லக்ஷம் போடலாம்னு இருக்கேன். வட்டி வரட்டுமே, பொண்ணுங்க கல்யாணத்தை இன்னும் சிறப்பா நடத்தலாம்.”

    “அப்படியே பண்ணுங்க. உங்களுக்கு தெரியாதா?”

    ****

    ஆறு மாசம் கழித்து:

    “ மோகன், என்ன ஆச்சு? உங்க கம்பனி செக் பணம் இல்லன்னு திரும்பி வந்துட்டுதே?” – தங்கமணி பதறினார்.

    “சார், ஒன்னும் கவலைப் படாதீங்க. கொஞ்சம் பைனான்ஸ் டைட். அடுத்த மாசம் சேர்த்து செக் வந்துடும்.”

    அடுத்த மாதம்:

    “ என்னப்பா மோகன், செக் வரும்னு சொன்னே. ஒன்னும் வரலையே. என்ன நடக்குது? எனக்கு இப்போ ரெண்டு லக்ஷம் வட்டி மற்றும் கமிஷன் பாக்கி இருக்கே. அதை தவிர என் முதல் ஒரு பதினோரு லஷம் இருக்கே. பயமாயிருக்கு மோகன், உன்னை நம்பி தான் பணம் போட்டேன். ”

    “சார், ஒன்னும் கவலைப் படாதீங்க. உங்க பணம் பத்திரமா திரும்பி வந்துடும்”

    ***

    இன்னும் இரண்டு மாதம் கழித்து:

    தங்கமணி நிலை குலைந்து விட்டார். அவரது வட்டி கமிசன் வரவேயில்லை .மோகனை தேடினார். மோகன் கிடைக்க வில்லை. வேறு வழியின்றி தன் நண்பன் சேதுவை அலைபேசியில் அழைத்தார்.

    “சேது! நான்தான் தங்கமணி பேசறேன். உன் பேச்சை கேக்காதது தப்பாயிடுச்சி சேது. பேராசை பெரு நஷ்டமாயிடுச்சி. என்னமோ கம்பனி திவாலாமே? நிஜமாவா? என்ன பண்ணப்போறேனோ தெரியலியே சேது. உன் பையனோட பேசவும் முடியலே. கிடைக்க மாட்டான்கிறான். ”

    “ரொம்ப சாரி தங்கமணி. மோகன் ரெண்டு நாளா வீட்டுக்கே வரல்லை. டைரக்டர் எல்லாரும் பணத்தை சுருட்டிகிட்டு தலை மறைவாயிட்டாங்க போலிருக்கு. இவன் மாட்டிகிட்டான். பலி கடா மாதிரி. கஸ்டமர் எல்லாம் இவனை கேரோ பண்றாங்க. வீட்டைத்தேடி வேறே வந்து சத்தம் போடறாங்க. அடிச்சிக்கிட்டேன், இந்த வேலை வேண்டாண்டான்னுட்டு. கேக்கலை. மானம் போவுது.எதுக்கும் நீயும் ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடு”

    ***
    பத்து நாள் கழித்து:
    ஆங்கில தினசரியில் வந்த செய்தி:

    “ இந்தியாவில், நிதி நிறுவனங்கள், சீட்டுக் கம்பனிகள் மோசடி பெருகிக் கொண்டே போகின்றன. ஸ்பீக் ஆசியா -2200 கோடி மோசடி , ஆர்.எம்.பீ -2000கோடி, ஸ்டாக் குரு இந்தியா- 1000கோடி, எ.ஐ.எஸ்.இ காபிடல் - 400 கோடி , ராம் சர்வே - 600 கோடி மோசடி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

    சமீபமாக , மேற்கு வங்கத்தில் , சாரதா குரூப் சிட் பண்ட் ஏப்ரல் 13ல் கவிழ்ந்தது. மோசடி கிட்டதட்ட 3000 கோடி என்று சொல்லப் படுகிறது. இதில் கிட்டதட்ட 17 லட்சம் உறுப்பினர் பணம் இழந்தனர். இதில் ஏராளமானவர் பாமரர். பத்து பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    இது பெரிய நிதி நிறுவனங்கள் பற்றிய தகவல் மட்டும் தான். வெளிவராத சிறு நிறுவனங்களின் மோசடிகள் எவ்வளவோ? "....


    இது பற்றி பேசுகையில், ஒரு சீனியர் போலீஸ் அதிகாரி கூறியது. "இதுக்கு அறியாமையும், குறுக்கு வழியிலே எளிதில் சம்பாதிக்க வேண்டும் எனும் ஆசையும் தான் காரணம். எமாற்றுக் காரர்கள் அதை பயன் படுத்திக் கொள்கிறார்கள். ஒரே வழி வருமுன் காக்க வேண்டும். அதற்கு மக்களிடையே விழிப்புணர்வு வேண்டும். அபாய அறிவுப்பு போல ( Whisle Blowing), மக்களே முன்வந்து, இதுபோல் சந்தேகத்துரிய நிறுவன நடவடிக்கைகளைப் பற்றி எங்களுக்கு தகவல் கொடுத்தால், நாங்கள் நிச்சயம் தகுந்த நடவடிக்கை எடுப்போம்" .

    ***

    தமிழ் தினசரியில் வந்த செய்தி:

    .... 'தமிழ்நாட்டில், ஐஸ்வர்யா பாலாஜி பைனான்ஸ் போன மாதம் திவாலானது. அதில் முதலீடு செய்த மக்கள், போலீஸ் கமிஷனரின் அலுவலகம் முன் நேற்று தர்ணா செய்தனர். கம்பனி டைரக்டர்கள் தலை மறைவு. ஆத்திரமடைந்த பணம் போட்ட மக்கள்,பைனான்ஸ் அலுவலகத்தை சூறையாடினர். அங்கு இருந்த கம்பனி ஊழியர்களையும், விற்பனைப் பிரதிநிதிகளையும் பொது மக்கள் கட்டி வைத்து அடித்தனர்.

    இது தொடர்பான இன்னொரு சம்பவத்தில், ஐஸ்வர்யா பாலாஜி பைனான்சின் மேனேஜர் மோகன் என்பவர் நேற்று இரவு கொலை செய்யப் பட்டுள்ளார். இந்த செய்தி கேட்டு அவரது தந்தை சேது, சோகம் , அவமானம் தாங்காமல், மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    மேனேஜர் மோகனை கொலை செய்ததற்காக, தங்கமணி என்பவரை போலீஸ் வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறது. .... சாட்சியங்கள் கூற்றுப் படி, மோகனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டதாகவும், தங்கமணிதான் கொலை செய்திருக்கக் கூடும் எனவும் போலீஸ் தகவல்.

    ***

    நான்கு நாட்களுக்கு பிறகு தமிழ் தினசரியில் வந்த செய்தி:

    .... "தங்கமணியின் சடலம், திருவாலன்காடுக்கு அருகே, ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப் பட்டது. தற்கொலை என சந்தேகிக்கப் படுகிறது. தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது."


    முற்றும் .



    ***
    குறள்- சூது

    வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
    தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.

    வெற்றியே பெறுவதாயினும் சூதில் வரும் வெற்றி என்பது தூண்டிலில் உள்ள இரையை கவ்விய மீனின் வெற்றியை போன்றது. தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்.

    Last edited by Muralidharan S; 11th April 2015 at 07:20 PM.

  10. #7
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    மனம் கனத்துவிட்டது. எத்தனை பலிகள்! எவ்வளவு பாவங்கள்! எப்படி அப்பாவி மக்கள் தூண்டிலில் சிக்குகிறார்கள் என்பதை அழகாக விளக்கி நடக்கும் யதார்த்தத்தை தத்ரூபமாக விவரித்து ஒரு அருமையான விழிப்புணர்வுக் கதையை தந்துள்ளீர்கள், முரளிதரன்! கடைசியில் சொன்ன குறள் மிகவும் அற்புதம்! வள்ளுவப்பெருமானின் அறிவை எண்ணி எண்ணி வியக்கிறேன்! மக்களை ஏமாற்றும் பேராசைக்கார கொள்ளையரை திருத்து என்று ஆண்டவனிடம் வேண்டுவதா அல்லது சபலப்படும் சாமான்ய மக்களை தூண்டில்களில் சிக்காமல் காப்பாற்று என்று இறஞ்சுவதா என்று தெரியவில்லை.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. Thanks Russellhni thanked for this post
    Likes Russellhni liked this post
  12. #8
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி ! மேடம் Regret the delayed response !

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •