4 ஆண்டுகள், 8 படங்கள், தொடரும் சிவகார்த்திகேயனின் வெற்றிப்பயணம் - VIKATAN

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான மெரினா படம் சிவகார்த்திகேயன் நடித்த முதல்படம். அடுத்தமாதமே அதாவது மார்ச் 30, 2012 அன்று தனுஷ் உடன் நகைச்சுவை நடிகராக அவர் நடித்திருந்த 3 வெளியானது. மூன்றுமாதங்கள் கழித்து ஜூன் 1,2012 இல் அவர் கதாநாயகனாக நடித்த மனம்கொத்திப்பறவை வெளியானது.


இம்மூன்றில் அவர் நாயகனாக நடித்த இரண்டுபடங்களுமே வெற்றி. 3 படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அடுத்த ஆண்டில் கேடிபில்லாகில்லாடிரங்கா, எதிர்நீச்சல் ஆகிய இரண்டுபடங்களும் வெற்றியடைந்த நிலையில் வெளியான வருத்தப்படாதவாலிபர் சங்கம் மிகப்பெரிய வசூல்.
நடித்த எல்லாப்படங்களும் வெற்றி என்பதோடு வசூலிலும் சாதனை படைத்துவிட்டதால் அவருடைய சந்தைமதிப்பு பன்மடங்கு எகிறியது. அடுத்தபடமான மான்கராத்தேவில் அவருக்கு ஹன்சிகா ஜோடியானார். அந்தப்படத்தின் படத்தின் தயாரிப்புச்செலவும் பெரிதானது. சிவகார்த்திகேயனை நம்பிச் செலவு செய்யலாம் என்கிற எண்ணத்தை அந்தப்படமும் வெற்றியடைந்து உருவாக்கியது.

அதன்பின் வந்த காக்கிச்சட்டையும் ஓகே. அண்மையில் வந்த ரஜினிமுருகன் அவருடைய முந்தையவசூலையெல்லாம் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. திரைத்துறைக்கு வந்து நான்காண்டுகள் முழுமையடையும் நேரத்தில் அவர் எட்டு வெற்றிப்படங்களின் கதாநாயகன் என்கிற அந்தஸ்தோடு இருக்கிறார்.

அடுத்து புதுஇயக்குநர் பாக்யராஜ்கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் படம், மோகன்ராஜா இயக்கத்தில் ஒருபடம், இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒருபடம் ஆகிய மூன்றபடங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.
நான்காண்டுகள் வெற்றிப்பயணத்தையொட்டி, என் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சகநடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள், விநியோகஸ்தார்கள், திரையரங்குஉரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகப்பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றி என்று டிவிட்டரில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.