Results 1 to 6 of 6

Thread: இளமையே போ ! போ !

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    இளமையே போ ! போ !

    வருடம் 2013
    சென்னை : பருவா ஆராய்ச்சி மையம்


    டீன் செல்வம் கனைத்தார். “ என்ன டாக்டர் யயாதி? எல்லாம் தயார் தானே? மிஸ்டர். பருவா! ஆரம்பிக்கலாமா?”

    தலைமை விருந்தினர் பருவா தலையசைத்தார். டாக்டர் யயாதி சைகை காட்ட, அந்த மரபணு ஆராய்ச்சி நிலையத்தின் அறையின் விளக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டன. திரை உயிர்பெற்றது.

    அதிலிருந்து ஒரு நோயாளியின் சோர்ந்த முகம் ஒன்று மெதுவாக தெரிந்தது.


    “இதோ இந்த திரையில் தெரிகிறானே இந்த நோயாளியின் பெயர் சாமிநாதன். இவனுக்கு வந்திருப்பது ஒரு மரபணு நோய். பத்து லட்சத்தில் ஒருவருக்கே இந்த நோய் தாக்கும்” – நிறுத்தினார் டாக்டர் யயாதி. எல்லோரும் திரையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

    யயாதி தொடர்ந்தார் “ இவனது தலைமுடி அனைத்தும் கொட்டிவிட்டது. இத்தனைக்கும் கீமோ தெரபி எதுவும் கொடுக்கவில்லை. இதோ பாருங்க, இவனது தோல் சுருங்கி விட்டது. கண் பார்வை மங்கி விட்டது. காது கேட்காது. வாய் குழறும். நினைவு அடிக்கடி தப்பும். இவனது தமனிகளும் சிரைகளும் இறுகி விட்டன. இதய நோயும் , மூட்டு நோயும் இவனை தாக்கிவிட்டன.”

    முக்கிய விருந்தாளி பருவா குறுக்கிட்டார் “ இது மூப்பு. எல்லா வயதானவருக்கும் வருவது தானே? “

    “ஆமாம் சார், இது மூப்பு தான், வயதானால் வருவது தான் .ஆனால், இந்த சாமிநாதன் ஒரு சிறுவன். வயது இன்னும் பனிரண்டு கூட முடியவில்லை.”
    “என்னது?” ஆச்சரியபட்டார் பருவா. “இது நிஜமா ? ”

    “எஸ் சார், இங்கே சாமிநாதனை தாக்கியிருப்பது ப்ரோஜெரியா என்னும் மரபு நோய். ‘ஹச்சிகன் கில்போர்ட் ப்ரோஜெரியா’. இந்த நோய் வந்தால், முதுமை பத்து மடங்கு வேகத்தில் நோயாளியை தாக்கும் . அமிதா பச்சன் கூட ‘பா’ படத்திலே இப்படி நடிச்சிருக்கார் சார் ! ”- பருவா பக்கத்திலிருந்த மருத்துவமனை டீன் டாக்டர் செல்வம் எடுத்துக் கொடுத்தார்.

    “இந்த நோயை குணப்படுத்த முடியாதா?” பருவா ஆதங்கத்தோட கேட்டார்.

    “இன்னி வரைக்கும் முடியலே சார். ஆனா, ஒரு குட் நியூஸ். இந்த விஷயத்திலே நாங்க இந்த பரிசோதனை கூடத்திலே, கிட்ட தட்ட ஒரு தீர்வு கண்டு பிடிச்சிருக்கோம் சார் . ஒரு அரிய மருந்து எங்களாலே தயாரிக்க முடியும் !” மரபணு விஞ்ஞானி டாக்டர் யயாதி மெதுவாக

    “ம். இப்போ எனக்கு புரியுது. இந்த பரிசோதனைக்கு தேவையான நிதியுதவி வேணும். நான் காபிடல் கொடுப்பெனான்னு கூப்பிட்டிருக்கீங்க. சரியா?”- பருவா சிரித்துக் கொண்டே கேட்டார்.

    அப்போது, டீன் டாக்டர் செல்வம் சொன்னார். ”அதிலே பாருங்க பருவா, இந்த ப்ரோஜெரியா நோய்க்கு வரும் உடல் மாற்றங்கள், அவதிகள் , கிட்ட தட்ட எல்லாமே முதுமைக்கும் பொருந்தும். அதனாலே, இந்த நோய்க்கு மாற்று மருந்து கண்டுபிடித்தால், அதை வைத்து வயோதிகத்தை தவிர்க்கலாமே! எல்லோரும் இளமையாகவே இருக்க வழி செய்யலாமே? இயற்கை மரணத்தை தள்ளிப் போடலாமே? எல்லோரும் 150-200 வயது வாழலாம்."

    பருவா நெற்றியை சுருக்கினார் . ஒன்றும் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்தார்.

    டீன் டாக்டர் செல்வம் தொடர்ந்தார் "என்ன சொல்றீங்க பருவா? உங்களுக்கும் இது பெரிய லாபமான முதலீடாக இருக்கும்!. உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும் . நிச்சயமாக , இந்த நூற்றாண்டிலேயே இது ஒரு அரிய கண்டுபிடிப்பாக இருக்கும். நீங்க மனது வைத்தால், உங்களாலே முடியாத காரியம் இல்லை மிஸ்டர். பருவா ! உங்க அரசியல் பலத்தாலே எங்களுக்கு அரசு அனுமதிகளையும் வாங்கி கொடுக்க முடியும்!”

    “நீங்க சொல்றது சரிதான்!. ஆனால், இது நடக்குமா? நான் என்னவோ, வயதாவது என்பது இயற்கை, தவிர்க்க முடியாதுன்னு எண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு மோட்டார் வாகனம் தேயறது மாதிரிதான் நம்ம உடம்பும்னு படிச்சிருக்கேன். நீங்க வேற மாதிரி சொல்றீங்க?“ கொஞ்சம் நம்பிக்கையில்லாமல் கேட்டார் பருவா. முதலீடு அவருடையதாயிற்றே!

    “சரியாக சொன்னீர்கள் பருவா. ஆனால், அந்த கூற்று மாறிகிட்டே வருது. தேய்மானம் என்பது நமது உடலுக்கு பொருந்தாது என கண்டு பிடித்திருக்கிறார்கள். நமது உடல் தன்னைத்தானே சீர் செய்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. நம்ம உடல்லே கோடிக்கணக்கான செல்கள் பிறக்கிறது, இறக்கிறது மீண்டும் பிறக்கிறது. வயசானவங்களுக்கு இந்த செல் மீண்டும் மீண்டும் பிறப்பது குறையுது. இதற்கு , ஹெப்ளிக் லிமிட் , டோலேமேர்ஸ் இவை தான் காரணம். இவைகளை நாம் கண்ட்ரோல் பண்ண முடியும் என்பது டாக்டர் யயாதியின் கருத்து. எனக்கு அதிலே நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு:” அடித்து சொன்னார் டீன் செல்வம்.

    “நீங்க சொல்றது எனக்கு புரியுது. இந்த உலகத்தை புரட்டி போடறா மாதிரி ஒரு மருந்து தயார் பண்ணப் போறீங்க.! இன்னொரு வயக்ரா மாதிரி, பெனிசிலின், எக்ஸ்ரே மாதிரி. ஓகே ! ஐடியா எனக்கு பிடிச்சிருக்கு . எனக்கு இதில் பங்கு கொள்ள சம்மதம்.. எனக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்புங்க. தேவையான உதவி செய்யறேன். ஆமாம், என்ன பெயர் வைக்கப் போறீங்க?”- பருவா

    “ஸ்டாபேஜ்- பேர் நல்லாயிருக்கா? ” கோரசாக யயாதியும் செல்வமும் சொன்னார்கள்
    “வெரி குட் டாக்டர் யயாதி. வெற்றி பெற வாழ்த்துக்கள்” பருவா விடைபெற்றார்.


    வருடம் 2014


    ‘ஸ்டாபேஜ்’ மருந்து ஒரு காய கல்பமாக இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வந்து விட்டது. டாக்டர் யயாதி, டாக்டர் செல்வம் மற்றும் பருவா மூவருக்கும் ‘ஸ்டாபேஜ்’ சிறந்த பெயர் பெற்று கொடுத்து விட்டது. கோடிக்கணக்கில் பணம் புரள ஆரமபித்து விட்டது.
    யயாதி “பத்மபூஷன்” பட்டம் பெற்றார்.

    இந்த ‘ஸ்டாபேஜ்’ ஊசி ஒரு தடவை போட்டுக் கொண்டால், வயதாவதை தடுத்து விடலாம். “என்றும் இளமை இளமை” என வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிக்கலாம். இந்தியாவில் மட்டும் சுமார் அறுபது லட்சம் பேர் 2014ல் இந்த ஊசியை போட்டுக் கொண்டார்கள்.

    ***


    நாற்பது வருடங்களுக்கு பிறகு : வருடம் 2054
    டெல்லி அரசு ஆராய்ச்சி மனை




    டீன் டான்டேகர் கனைத்தார். “ என்ன டாக்டர் நாஞ்சே? எல்லாம் தயார் தானே? ப்ரொபசர் கிஷன் சந்த், ஆரம்பிக்கலாமா?”

    கிஷன் சந்த் தலையசைத்தார். அவர் அரசு திட்ட கமிஷன் மற்றும் பிரதம மந்திரியின் ஆலோசகர். அவர் தலைமையில், அந்த ஆராய்ச்சி மையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஆரம்பித்தது.


    ... தொடரும்
    Last edited by Muralidharan S; 17th February 2015 at 08:40 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    இளமையே போ ! போ ! Part II (தொடர்ச்சி)
    -----------------------------------


    டாக்டர் நாஞ்சே ஆரம்பித்தார். “ நாற்பது வருடங்களுக்கு முன்னால், சென்னையில் ஒரு மருந்து கண்டு பிடிக்கப் பட்டது. ‘ஸ்டாபேஜ்’ என்ற பெயரில். அன்று இந்த மருந்து மிக பிரபலமாக பேசப் பட்டது. ஆனால், இன்று? .. இயற்கைக்கு எதிரான விளைவுகளை கொண்ட இந்த மருந்தால் இன்று நாடே ஸ்தம்பித்து கொண்டிருக்கிறது. ”

    அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

    டாக்டர் நாஞ்சே தொடர்ந்தார். “இந்த மருந்தை செலுத்திக் கொண்டால், மக்கள் வயதாவதை தவிர்க்க முடியும். உண்மை . நம் நாட்டிலேயே இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் நான்கு கோடிக்கு மேல் என்று சொல்லப் படுகிறது. ஆனால், இதன் பக்க விளைவு ? இன்று நம்மிடையே உள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த மருந்தின் பக்க விளைவுகளால்,கிட்டதட்ட இரண்டு கோடி மக்கள் கடுமையான புற்று நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். "

    "செல்கள் உருமாறி, லுகேமியா, எலும்பு கான்சர், நுரையீரல் புற்று போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது லக்ஷம், புற்று நோயின் இறுதி கட்டத்தை நோக்கி. அவர்களை உபாதையிலிருந்து , சித்திரவதையிலிருந்து விடுவிக்க ஒரே வழி கருணை கொலை மட்டுமே. வேறு வழி என்னவென்றே தெரியவில்லை. இதே கதைதான் இந்த மருந்தை வாங்கிய மற்ற நாடுகளிலும்!"

    நிறுத்தினார் நாஞ்சே, மூச்சு வாங்கி கொள்ள. ‘ஒரு வேளை, எனக்கும் புற்று நோய் தாக்கி விட்டதோ? உடனே போய் பரிசொதனை செய்து கொள்ள வேண்டும்'.நாஞ்சேக்கு லேசான கலவரம் தலை தூக்கியது.

    நாஞ்சே தொடர்ந்தார் "இது மட்டுமல்ல, வாழும் காலம் நீட்டிக்கப் பட்டதால், மக்கள் தொகை அதிகமாகி விட்டது. எங்கும் தண்ணீர், சுத்தமான காற்று போன்ற அத்தியாவசிய பிரச்னைகளால் அவர்கள் வாழ்வாதாரமே இன்று ஆட்டம் கண்டு விட்டது."

    கிஷன் சந்த் இறுக்கமான பார்வையுடன் கேட்டார் “இதுக்கு என்ன வழி?என்ன மாற்று ? இதை எப்படி சரி செய்ய ?”

    நாஞ்சே தொடரு முன், டீன் டான்டேகர் கை அசைத்தார்.

    டீன் டான்டேகர் தொண்டையை செருமினார். “டாக்டர் நாஞ்சே, ஒரு நிமிடம்!."

    நாஞ்சே திரும்பினார் .

    டீன் மைக்கை வாங்கி சொன்னார் . " மேலே இது பற்றி நாம் பேசுமுன், சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவர் முதலில் பேசினால் நல்லதோ என படுகிறது! அவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். அவர் வேறு யாருமல்ல! நம் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர் தான். இப்போது பிரச்னைக்கு மூல காரணமான ,ஸ்டாபேஜ் மருந்தை கண்டுபிடித்த பத்மபூஷன் டாக்டர் யயாதி. அவர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்போமே! என்ன சொல்கிறீர்கள் ப்ரொபசர் கிஷன் சந்த்?”.

    கிஷன் சந்த் தலையசைத்தார்.

    எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க, ஆலோசனை கூட்ட நடுவிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் எழுந்தார். “ நன்றி டீன். டாக்டர் நாஞ்சே சொன்னது அத்துனையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.அவர் சொல்வது எல்லாம் உண்மை. என்னதான் நம் நாடு அதிகார பூர்வமாக இந்த மருந்தை தடை செய்தாலும், கள்ளமாக இந்தமருந்தை தயாரிப்பதையும் உபயோகப் படுத்துவதையும் நிறுத்த முடியவில்லை. வெளிநாட்டுநிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இதற்கு தீர்வு, இந்த மருந்தின் தீயவிளைவுகளை மாற்ற வேறு ஒரு மருந்து நாம் உடனே கண்டு பிடிக்க வேண்டும்”

    கிஷன் சந்த் “ என்ன இது! உங்கள் கண்டுபிடிப்பை நீங்களே தடை செய்ய , முறியடிக்க கூறுகிறீர்களே!ஆச்சரியமாக இருக்கு!”

    டாக்டர் யயாதி வெற்றாக சிரித்தார். “மன்னிக்க வேண்டும், இந்த மருந்தால் மிகவும் பாதிக்கப் பட்டவன் நான். இந்தமருந்தை கண்டுபிடித்ததால், எனக்கு ஏராளாமான சொத்து சேர்ந்து இருக்கலாம். ஸ்டாபேஜ் மருந்தால்,எனக்கு இளமை இருக்கலாம். ஆனால், திருப்தி? அது சுத்தமாக இல்லை.! "

    ஒரு நிமிடம் நிறுத்தி , முகத்தை துடைத்துக் கொண்டு டாக்டர் யயாதி தொடர்ந்தார். " எங்களுக்கு நிம்மதி இல்லை.எங்கள் வீட்டில் சந்தோஷம் இல்லை. விரக்தியின் எல்லையில் இருக்கிறோம். நான் சொல்வது உங்களுக்குவேடிக்கையாக இருக்கலாம். ஆனால் வேதனையான உண்மை. முதலில், இந்த காணொளியை பாருங்கள்.பின்னர் சொல்கிறேன்.”

    டாக்டர் யயாதி சைகை காட்ட, அந்த மரபணு ஆராய்ச்சி நிலையத்தின் அறையின் விளக்குகள் கொஞ்சம்கொஞ்சமாக உயிரை விட்டன. திரை உயிர்பெற்றது. அதிலிருந்து இரண்டு சிரித்த முகம் மெதுவாகதெரிந்தது. பனிரண்டு வயது பையன், பத்து வயது பெண்.

    “இதோ இந்த திரையில் இருக்கும் இருவரும் எனது குழந்தைகள். பெண்ணின் வயது 45. பையன் வயது 50. ஆனால், அவர்களின் உடல் வளர்ச்சி 10, 12. என்னுடைய காயகல்பம் ஸ்டாபேஜ் செய்த கொடுமையை பாருங்கள் . ஸ்டாபேஜ் உட்கொண்டதால் , இவர்கள் நாற்பது ஆண்டுகள்கழித்தும், திருமண பந்தம் , இல்லற வாழ்க்கைக்கு ஏற்ற வயதுக்கு வரவில்லை. வாழ்க்கையைஅனுபவிக்க மனம் விரும்பினாலும், உடல் இடம் கொடுக்க வில்லை. இதுவா இளமை?. இது கொடுமை. இவர்கள் கல்யாண வயதுக்கு வர , உடல் வளம் வர, இன்னும் முப்பது ஆண்டுகள் ஆகலாம்.

    டாக்டர் யயாதியின் குரல் கம்மியது. " நானும் எனது மனைவியும் இப்போதே புற்று நோயாளிகள்.இன்னும் முப்பது ஆண்டுகள் எங்களை கான்செர்விட்டு வைக்காது. இப்போது சொல்லுங்கள்! ஒரு தந்தையாக சொல்லுங்கள். இந்த 'ஸ்டாபேஜ்' நமக்கு தேவைதானா?”

    ஒரு நிமிடம் அரங்கம் அமைதியை போர்த்திக் கொண்டது. கிஷன் சந்த் தொண்டையை கனைத்தார். அந்த அறையின் கனத்த மௌன திரையை, கலைத்தார்.

    ”டாக்டர் யயாதி, உங்கள் வேதனை எங்களுக்கு புரிகிறது. நீங்கள் சொல்வது சரியே. இயற்கையின் நியதிஎப்போதும் ஒரு மாற்றத்தை நோக்கி போவது தான். மரணிக்காமல் வாழ்ந்துகொண்டே இருந்தால்வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும். நாம் அதை தவிர்க்க கூடாது. தவிர்க்க முயற்சி செய்தால், பக்கவிளைவுகள், இது போன்ற எதிர்பாராத துயரத்தை தான் தரும். "

    கிஷன் சந்த் தொடர்ந்தார். "இன்னொன்றும் உள்ளது. இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல, மிருகம், பறவை,நம்மை சுற்றியிருக்கும் கிருமி, ஏமாந்தால் தாக்கும் வைரஸ், உடலுக்குள் உள்ள பல கோடி மைக்ரோப்கள்,இப்படி எல்லாருக்கும் இந்த உலகத்தில் வாழ உரிமை உள்ளது. . சொல்லப் போனால், ஒன்றின் அழிவில்தான் மற்றொன்று பிறக்கிறது. ரிசைக்ளிங். ஒன்று மட்டும் நிச்சயம். புதிதாக பிறந்து வரும் மனிதஇனத்துக்கு, நாம் வழி விட வேண்டும். அதை மாற்றக் கூடாது."

    ஒரு நிமிடம் யோசனைக்கு பின்னர், கிஷன் சந்த் தனது பரிந்துரையை படித்தார்.

    "மேலே சொன்ன இதைஎல்லாம் கருத்தில் கொண்டு நான் இந்த பரிந்துரை செய்கிறேன். டாக்டர் யயாதி, ‘முதுமை தொலைய’ ஸ்டாபேஜ் கண்டுபிடித்த நீங்களே, இப்போதுஅதற்கு மாற்றாக “இளமை தொலைய” மருந்து கண்டு பிடியுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசு செய்யும். டீன் டண்டேகர், டாக்டர் நாஞ்சே, உங்களுக்கு சம்மதம் தானே ! யயாதி, உங்கள் புதிய கண்டுபிடிப்பால், உங்கள் குழந்தைகள் முதுமை அடைய வாழ்த்துக்கள்.”


    ****முற்றும்
    Last edited by Muralidharan S; 17th February 2015 at 08:35 PM.

  4. #3
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,887
    Post Thanks / Like

    மிகவும் அருமை, முரளிதரன்! ஆழமான, சீர்தூக்கி ஆராய வேண்டிய கருத்துக்கள்! நூறு சதவீதம் அவசியமான சிந்தனைகள்! ஆராய்ச்சி..ஆராய்ச்சி..ஆராய்ச்சி...நோயை வெல்ல,வலியை கொல்ல...சுகபோகத்தை பெருக்க, அவசரமாய் அனுபவிக்க...இயற்க்கைக்கு முரணாய் பயணிக்கும் அகங்காரமான, அதர்மமான போக்கு...விபரீதமான முயற்ச்சிகள்...கண்ணை விற்று ஓவியம் வாங்கும் மௌடீகம்!
    கதாபாத்திரங்களின் பெயர் தேர்விற்கு ஒரு சபாஷ்! வாழ்த்துக்கள்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. Thanks Russellhni thanked for this post
  6. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    வாழ்க்கை என்பது வியாபாரம்
    ஜனனம் என்பது வரவாகும்
    மரணம் என்பது செலவாகும்..
    போனால் போகட்டும் போடா..


    இந்தப் பாடல் தான் இந்தக் கதைக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கக் கூடும் என்று யூகிக்கும் அளவிற்கு வாழ்க்கையின் உண்மையை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.

    பாராட்டுக்கள் முரளி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellhni liked this post
  8. #5
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி மேடம்

  9. #6
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி ராகவேந்திரா

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •