ஒரு முதியவளின் படுக்கையறை..

** (2005 இல் எழுதியது)

மூத்த பேரன் மடியில் தலையும்
இடதுகை விரல்கள் ரவிக்கையில் நுழைத்தும்
கண்கள் கொஞ்சம் இறுக்கவே மூடி
நன்றாய்த் தூக்கம் போட்டு விட்டாச்சு..
இரண்டாம் பேரனோ அவளது மடியில்
டிவி சீரியல் வெறித்துப் பார்த்தே
கொஞ்சம் கொஞ்சமாய் இமைகள் மூட..


பத்தரை வாக்கில் முழுவதும் முடிய
அவளும் டிவியை படக்கென அணைக்க
மெஞ்ஞ மெஞ்ஞேஎன இருந்த அவனும்
எதுவும் சொல்லத் தோன்றாமல் சற்றே
வாரப் புத்தகம் எடுத்துப் புரட்ட..
அவளும் எழுந்து சின்னதை உள்ளே
விட்டுவிட்டு வந்து பெரியதை வாங்கி
உள்ளே நுழைகையில் ஒருவிழிப் பார்வை
அவனிடம் வீச படக்கென புத்தகம்
ஹாலில் இருந்த மேஜையில் வீசி
சட்டென அவளுடன் அறையுள் நுழைய..
கதவு கொஞ்சம் கொஞ்சம் மெல்லமாய்
பின்னர் சற்றே வேகமாய் மூட..


ஆச்சு இனிமேல் உறங்கி எழுந்து
காலை வேலை பார்த்திட வேண்டும்
இருப்பது ஒருஹால் ஸிங்கிள் பெட்ரூம்..
ஹால்தான் எனது இருப்பிடம் இரவில்..
மெல்லப் படுக்கையை உதறி விரித்து
தலையணை கொஞ்சம் சரியாய் வைத்து
மெல்ல எழுந்து விளக்கை அணைத்து
மெல்ல நடந்து படுக்கையில் தலையை
வைத்தால் உள்ளே மெல்லமாய்க் குரல்கள்..
என்னைப் பற்றி ஏதும் பேச்சா..
இல்லை சின்னவன் முழித்தழ றானா....


என்ன வாழ்க்கை என்றே தெரியலை
அவரும் போய்த்தான் வருடங்க ளாச்சு..
பேரன் பேத்திகள் பார்த்து விட்டாச்சு..
இப்போது இருப்பவன் என்னுடைய சின்னவன்
கடைசியாப் பிறந்த நல்லவன் என்னை
நன்றாய் வைத்துப் பார்த்துக் கொள்கிறான்..
மற்றவை எல்லாம் அவரவர் மனைவிகள்
முந்தானை பிடித்தே சென்றுதான் விட்டார்..
என்ன கொஞ்சம் பேசவே மாட்டான்
காலையில் ஆபீஸ் கிளம்பினான் என்றால்
இரவில்தான் வேலை முடித்து வர்றான்..
இந்தப் பெண்ணும் என்னுடைய உறவுதான்..
ஆரம் பத்தில் சரியாய் இருந்தாள்..
மூத்ததைப் பெத்த ஒருவரு டத்தில்
சின்னது வந்ததும் நிறையவே மாற்றம்..
ம் யாரைச் சொல்ல யாரை நோக..
சத்தம் கேக்குதே குழந்தை அழறதோ..


மேலே பேனும் மெல்லமாய்ச்சுற்றுது..
இந்த மாம்பலக் கொசுக்கள் மோசம்..
ஸ்ஸ் அப்பா.. என்னகடி கடிக்குது..
ஓடோ மோஸ்தான் தடவிக்க வேணும்..
சீரியல் பெண்ணின் கணவன் நாளை
சம்சாரத் துடன் சேர்ந்திடு வானா..


ஓஓ அடடா.. மாத்திரை மறந்தேன்..
எங்கே தண்ணீர்.. குடித்தே முழுங்கலாம்..
கொஞ்சம் கைகால் படபடன்னு வருது..
தெரியலை டாக்டரிடம் பிபி சொல்லணும்..
இந்த பாழாப் போன மனுஷன்
என்னை விட்டு சீக்கிரம் போகுமா..
மூணு பிள்ளை ரெண்டு பொண்ணு..
வயணமாப் பெத்து வளத்துவிட் டாச்சு..
வளத்த கடாக்களும் மாரில்பாஞ் சாச்சு..
எப்போ காலம் வருமென நானும்..
இருந்துதான் பாக்கேன்.. ஒண்ணும் காணோம்..


ம்ம்நாளைக்கு என்ன என்ன செய்யணும்..
மூத்தவள் பெண்ணுக்கு பளஸ்டூ எக்ஸாம்
போனில் பேசி விஷ்ஷம் பண்ணனும்..
பண்ணலை என்றால் மறுநாள் திட்டுவாள்
பெரியவன் பையனுக்கு பர்த்டேன்னு நினைக்கேன்..
காலண்டரைக் கொஞ்சம் புரட்டிப் பாக்கணும்
ரெண்டாம் காஸ்க்கு இவளை விட்டு
போன்பண்ணச் சொல்லணும் இவளது அம்மா
உடம்பு தேவலை ஆச்சா என்றே
அவளுக்கும் போன்பண்ணிக் கேக்கணும் அப்புறம்..
துபாயில் இருக்கும் சின்னப் பெண்ணிடம்
கொஞ்சம் பேசணும் நாளும் ஆச்சு..
இவனுக்குக் காலையில் தக்காளிக் கொத்சு..
வெண்டைக் காயில் வதக்கல், சீரா
மிளகு ரசமும் தேங்காய்த் துகையலும்
செய்யணும் ஏனோ தூக்கமும் வரலை..


கண்கள் இறுக்க மூடிக் கொஞ்சம்
ராமா ராமா சொல்ல லாமா..
ராமா ராமா ராமா ராமா..
சுற்றிச் சுற்றி நினைவுகள் மயங்க..


மெல்லத் தூக்கம் வந்துவிட் டாச்சு..!

( நன்றி மரத்தடி.காம்)