Results 1 to 6 of 6

Thread: மாற்றம் எங்கே?

Threaded View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    மாற்றம் எங்கே?



    கோபாலனுக்கு 60 வயது நிரம்புவதை கொண்டாட வெளியூரில் வசிக்கும் அவரது மகனும் , இரண்டு மகள்களும் ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் வளசரவாக்கத்தில் ஒரு சிறிய குளிரூட்டப்பட்ட சத்திரம். கோபாலனும் அவரது மனைவியும், மனையில் அமர்ந்திருக்கின்றனர், சஷ்டியப்தபூர்த்தி சடங்குகளுக்காக.

    அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்றிக்கொண்டே, புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். கூடவே , கோபாலனை பார்த்து “சொல்லுங்கோ!” என்று ஆணை வேறு.


    கோபாலனும் , மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டு குருக்கள் சொல்வதை , தப்பு தப்பாக, திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், குடும்பத்தோடு நாற்காலிகளில் உட்கார்ந்து , முன் பக்கம் பின் பக்கம், பக்கவாட்டில் திரும்பி , பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

    கோபாலனின் மகள்களும் மகனும் பட்டுப்புடவை, பட்டுவேட்டி சரசரக்க வாசலுக்கும், ப்ரோகிதருக்கும், டைனிங் ஹாலுக்குமாக , குறுக்கிலும் நெடுக்கிலும் வளைய வந்துக் கொண்டிருக்கின்றனர்.எல்லோர் முகத்திலும் ஒரு மலர்ச்சி.

    உறவினர் மற்றும் கோபாலனின் குடும்பத்தினர் குழந்தைகள் ,இங்கும் அங்கும் ஆடி ஓடி , ஒரே அமர்க்களம் ,கும்மாளம், கூச்சல்.

    ***
    அந்த வைதிக கூட்டத்தின் நடுவில், ஒரு சின்ன பையன். அவனுக்கு ஒரு 4 வயதிருக்கும். கொஞ்சம் புஷ்டியாக, வடக்கத்தி பையன் போல இருந்தான். ரொம்ப துறு துறு முகம். தலை நிறைய முடி .

    அந்த சிறுவன் , இங்கே ஓடினான், அங்கே ஓடினான், சிரித்துக் கொண்டே, கொஞ்சம் மழலையில் ஹிந்தியில் பேசிக்கொண்டு. குழந்தைகளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு எனெர்ஜி வருமோ, ஒரு நிமிடம் கூட அவன் ஓயவில்லை.

    வேகமாக மணவறைக்கு ஓடி வந்து, குத்து விளக்கில் , காய்ந்த தர்ப்பை சருகுகளை , கம்பி மத்தாப்பு போல போட்டு எரித்தான். “டேய்! டேய்! “ என்று யாரோ சொல்வதற்குள், அங்கிருந்து ஓடி, ப்ரோகிதர் பக்கத்திலிருந்த தட்டை கவிழ்த்தான். அடுத்த வினாடி, மனையில் இருந்த கோபாலனிடம் ஓடிச் சென்று மழலையில் ஏதோ கேட்டான். அவரும் புன்சிரிப்புடன் தலையசைக்க, முன்னால் இருந்த தட்டில் இருந்து , குட்டிக் கை நிறைய முந்திரியை அள்ளி கொண்டான். “டேய், வாண்டு , எடுக்காதே! தட்டில் போடு” என்று ப்ரோகிதர் சொல்வதற்குள் சிட்டாய் பறந்து விட்டான்.

    ஆரம்பத்தில், அந்த பையனின் குறும்பு மணவறையை சுற்றி இருந்த அனைவருக்கும் ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்தில் சிலருக்கு சலிக்க ஆரம்பித்து விட்டது. “யார் அந்த பையன்? சரியான வாலாக இருக்கிறானே ? நம்ம உறவு மாதிரி தெரியலியே ? அவன் அம்மா எங்கே ?” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

    ஆனால், அதை கோபாலன் சட்டை செய்யவேயில்லை. மணவறையில் இருந்து சிரித்துக் கொண்டே அந்த பையனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் மனையிலிருந்த அவரது மனைவியும் கூட, அந்த பையனின் அட்டகாசத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

    ஆச்சரியம், கோபாலனின் பிள்ளை, பெண்களுக்கு. நம்ம அப்பாவா இப்படி? முனுக்கென்றால் எல்லாவற்றிற்கும் மூக்கின் மேல் கோபம் வருமே, அவருக்கு. அவர் எப்படி இப்படி ? நம்ம குழந்தைகள் சேஷ்டை பண்ணினால், திட்டுவாரே! iஇப்போ மட்டும் எதுக்கு ஒன்னும் சொல்லாமல் இருக்கிறார்?

    அவர்களுக்கு இன்னும் ஆச்சரியம், அம்மாவும் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தது !. நெருங்கிய சுற்றத்திற்கும் கூடத்தான். “யார் குழந்தை இவன்? அவனது அப்பா அம்மா எங்கே? ஏன் யாரும் கண்டிக்கவில்லை? ”.

    முத்தாய்ப்பாக, அந்த குழந்தை புரோகிதர் முடியை பிடித்து இழுத்து விட்டான். அவர் வலி தாங்காமல் இந்த பக்கம் சாய, ஹோமத்திற்கு வைத்திருந்த நெய் எல்லாம் கொட்டி, அம்மாவின் பட்டுப் புடவை முழுக்க கறை. சுற்றியிருந்தவர்கள் எல்லாம் “டேய் டேய்” என்று கத்தினார்கள்.

    கோபாலனின் கடைசி பெண்னுக்கு தாங்க வில்லை. இது என்ன விஷமம்? ஏதாவது அபசகுனமாக ஆகி விட்டால் ? பொறுக்கவேயில்லை. விடுவிடென்று போய், குழந்தையை பிடித்து இழுத்தாள். அவனை அடிக்க கையை தூக்கி விட்டாள்.

    கோபாலன் தடுத்து நிறுத்தினார். “விடும்மா! பாவம் அவன் ! சின்ன குழந்தை!” .

    மகள் கோபமாக “என்னப்பா நீங்க! இந்த லூட்டி அடிக்கிறான். உங்க பொறுமைக்கு ஒரு அளவே இல்லியா? யார் குழந்தைன்னு கூட சொல்ல மாட்டேங்கறீங்க?”

    “இல்லேம்மா!. இந்த பையன் நம்ப எதிர் வீட்டிலே தான் இருக்கான். கொஞ்ச நாள் முன்னால் தான் குடி வந்தாங்க, டெல்லி பக்கத்திலிருந்து. இந்த சின்னப் பையன் கதை ரொம்ப பாவம்மா! “

    நிறுத்தினார் கோபாலன். அந்த மணவறையே கொஞ்சம் அமைதியானது.

    “உனக்கு தெரியாது ! நாலு நாள் முன்னாடிதான் இவன் அம்மா ஒரு விபத்திலே செத்து போயிட்டங்க. இவன் அப்பாவுக்கும் மண்டையிலே அடி. அதனாலே அவர் இன்னும் ஆஸ்பத்திரியில் இருக்கார். இன்னும் மயக்கம் தெளியலே. இவங்க கல்யாணம் கலப்பு திருமணம் . அதனாலே அவங்க அப்பா அம்மா வீட்டிலே ஒரே சண்டை ! தகவல் சொல்லியிருக்கு ! எப்போ வருவாங்களோ தெரியாது!"

    கோபாலன் தொடர்ந்தார் ." அம்மா உயிரோட இல்லைங்கிறதே குழந்தைக்கு தெரியாது. இரண்டு நாளா குழந்தை, அம்மா அம்மா என்று அழுதுகொண்டேயிருந்தான். இன்னிக்கு தான் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டு இருக்கான். வேறே யாரும் இல்லாத இவனுக்கு இப்போதைக்கு நாங்க தான். அம்மா இல்லாமல் வளரப் போற இந்த குழந்தையை எப்படி திட்டவோ அடிக்கவோ மனசு வரும்?”- கோபாலன் முடித்தார்.

    சுற்றி நின்றவர்கள் ஸ்தம்பித்து விட்டனர். என்ன சொல்வதென்றே யாருக்கும் தெரியவில்லை. “ஐயோ பாவமே” என்ற வார்த்தை மட்டும் சிலர் வாயிலிருந்து உதிர்ந்தது. சிலர் அந்த குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்றிரண்டு பேர் கண்களில் லேசான நீர்த்திவலை.

    இது எதுவும் புரியாத அந்த வடக்கத்தி குழந்தை, கோபாலனைப் பார்த்து சிரித்தது. அது மொழி தெரியாத கள்ளமற்ற வெள்ளை சிரிப்பு. பார்த்துகொண்டிருந்த கூட்டத்தில், ஒரு பெண்மணி , "வாடா என் செல்லமே !" என்று சொல்லிக் கொண்டே, குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள்.

    கோபாலனின் மகள் கொஞ்சம் திராட்சையை அள்ளிக் கொடுத்தாள். அவளை கட்டிகொண்டு குழந்தை அவளது கன்னத்தில் ஒரு சிறிய முத்தம் கொடுத்தது. தன் அம்மா போல் இருக்கிறாள் என நினைத்தானோ என்னமோ ? புரோகிதர் கூட , தனது குடுமியை, குழந்தை பிடிக்க நீட்டினார்.

    ***

    அதே வளசரவாக்கம். அதே சத்திரம். அதே கோபாலனும் அவரது மனைவியும் மனையில். புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களது குடும்பத்தோடு அமர்ந்திருக்கின்றனர். அதே பட்டுப்புடவை, பட்டுவேட்டியுடன் மகள்களும் மகன்களும்.அதே குழந்தை. அதே குறும்பு... எதுவும் மாறவில்லை..

    ஆனால், இப்போது அந்த குழந்தையை யாரும் வையவும் இல்லை. சபிக்கவும் இல்லை. சலித்துக் கொள்ளவும் இல்லை. மாற்றி மாற்றி கொஞ்சி கொண்டு இருந்தார்கள். கன்னத்தை கிள்ளி 'துமாரா நாம் க்யா ஹை?' கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


    உறவினர் இடையே ஏன் இந்த பெரிய மாறுதல்? மாற்றம் எதனால்? குழந்தையை பற்றி உண்மை விபரம் தெரிந்ததால் ஏற்பட்ட நெகிழ்ச்சியா ? அவனது இழப்பை பற்றி அவனுக்கே தெரியவில்லை என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட அனுதாபமா?

    **** முற்றும்


    **Inspired by : Management and Social Psychology Expert Stephen R Covey’s concept “ Paradigm Shift” .

    Paradigm shift is a change from one way of thinking to another, and can apply to anything on earth – Your positive or negative, and good or bad, attitudes define the way things appear to you.

    “Small shifts in your thinking, and small changes in your energy, can lead to massive alterations of your end result.” ― Kevin Michel.


    Last edited by Muralidharan S; 2nd February 2015 at 06:57 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •