Results 1 to 10 of 10

Thread: ஜில்லென்று! யமனுடன் ஒரு சந்திப்பு

Threaded View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    ஜில்லென்று! யமனுடன் ஒரு சந்திப்பு - 1



    யமலோக பட்டினம். யம தர்மனின் தர்பார்

    “சித்திர குப்தா! சொல்லு, நான் யார் உயிரை எடுக்க வேண்டும்?” –யமன்.

    “மஹா ப்ரோபோ! எல்லாவற்றிற்கும் நீங்கள் போக வேண்டிய அவசியமில்லை. கிங்கரர்களை அனுப்பிக் கொள்ளலாம்”

    “இல்லை சித்திரகுப்தா, நானும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். மற்ற கிங்கரருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவரது கஷ்டங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ள வேண்டும். சொல், நிறைய பாவங்கள் செய்து, நரகத்திற்கு வர வேண்டியவர் யார் யார்?”


    “அப்படியே பிரபோ! சென்னையில், கந்தசாமி என்று ஒருவர். பெரிய பணக்காரர். தொழிலதிபர். நிறைய பாவங்கள் செய்து கொண்டிருக்கிறார். அவரது உயிரை வேண்டுமானால் நீங்களே எடுங்கள்.”

    “அவர் செய்த பாவங்கள் என்ன சித்திரகுப்தா? ”

    “அவர் மகா பாவி. செலவை குறைப்பதற்காக, அவரது தொழிற்சாலை கழிவை, யாருக்கும் தெரியாமல், பூமிக்கடியில் தேக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த விஷ கழிவு, நிலத்தடி தண்ணீரில் கலந்ததனால், ஊர் ஜனங்கள் கடுமையான தோல் நோய், வயிற்று நோய் வந்து படாத பாடு படுகிறார்கள். அவதிப் படுகிறார்கள்.”.

    “அவன் அதுக்கு கொஞ்சமாவது வருத்த பட்டானா?” யமனின் கேள்வி .

    “அதை பற்றி அவர் கொஞ்சமும் கவலைப் படவில்லை, தர்மராஜா! அரசாங்கத்துக்கு லஞ்சம் கொடுத்து, கொடுத்து சரி கட்டிகிட்டிருக்கார். பெரிய பணக்காரராக ஆசை. பேராசை.”

    “அதை தவிர? ”

    “ ஏழைகளின் வயிற்றிலே அடிப்பார். அவரது குறியே எப்படி லாபம் சம்பாதிக்கிறது மட்டும் தான்”.

    “சரி. அப்படியானால், நானே போய் அவன் ஆயுசை முடிச்சி, உயிரை எடுத்துகிட்டு வாரேன்!” தர்மராஜா எழுந்து கொண்டார். பாசக் கயிறை கையில் எடுத்துக் கொண்டார்.

    “ஆனால், ராஜா, நமது கிரந்த கணக்குப்படி, அவரது ஆயுசு முடிய இன்னும் மூன்று மாதமிருக்கிறது”

    “இருக்கட்டும், எனக்கும் அவனை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. நமக்காக மக்களுக்கு பூமியிலேயே ஒரு நரகம் ஏற்படுத்திஇருக்கிறானே! நாம் கொடுக்க வேண்டிய கிருமி போஜனம், வைதரணி, பூபோதம் * போன்ற தண்டனைகளை அவனே மக்களுக்கு கொடுத்திருக்கிறானே! சும்மா பார்த்துட்டு வரேனே?”

    “பிரபோ! அவரது தம்பியும் பெரிய பணக்காரர்தான். ரங்கசாமி என்று பேர். அவர் காலம் இன்னும் இரண்டு நாளில் முடியப் போகிறது. அவர் உயிரை வேண்டுமானால், இப்போவே எடுத்து விடலாம். ஒரே கல்லிலே ரெண்டு மாங்காய் ”

    “அவர் தம்பி பேரென்ன சொன்னே?”

    “ரங்கசாமி”

    “இதோ வரேன், ரங்கசாமி!” – யமன் கிளம்பி விட்டார். பூலோக விஜயம்.


    *****
    சென்னை: ரங்கசாமி வீடு.

    ரங்கசாமி. இவர் கந்தசாமியின் தம்பி. அண்ணனின் தொழிற்சாலையில் இவரும் முதலீடு செய்தவர். பணக்காரர். அண்ணன் பங்களாவிற்கு சற்று தூரத்திலேயே அவரது வீடும் இருந்தது. அவருக்கு அண்ணாவின் அடாவடி போக்கு துளியும் பிடிக்காது. எத்தனையோ முறை சொல்லியும் கந்தசாமி கேட்கவில்லை. இருப்பினும், அவர் பேரில் மிகுந்த பிரியம்.

    ரங்கசாமிக்கு ஒரே பிள்ளை, வரதன். வயது 28. ரொம்ப தங்கமான பையன்.

    ரங்கசாமி தனது அண்ணன் கந்தசாமியின் உடல்நிலை பற்றி டாக்டரிடம் விசாரித்து கொண்டிருந்தார்.

    “இப்போ அண்ணாவுக்கு உடம்பு எப்படி இருக்கு டாக்டர்?” – ரங்கசாமி போனில்.

    “நிலைமை கொஞ்சம் மோசம் ரங்கசாமி. புற்றுநோய் முத்தி போயிருக்கு. உங்க அண்ணன் இப்போ இறுதி கட்டத்திலே இருக்காரு. அவருக்கு கெடு இன்னும் இரண்டு மாசம் தான்”

    “ என்ன டாக்டர், இப்படி சொல்லிட்டீங்க. அண்ணாக்கு இது தெரியுமா?”

    “அவர்கிட்டே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். குடிக்கிறது, சிகரெட்டு பிடிக்கிறதை நிறுத்துங்கன்னு. கேக்க மாட்டேங்கிறார். அவர் பெரிய தொழிலதிபர். நான் எவ்வளவு தான் சொல்றது ? நீங்க தான் அவர்கிட்டே இன்னும் அழுத்தமா சொல்லணும்”

    “சொல்லிட்டேன் டாக்டர்! நான் சொன்னா கேட்டுருவாரா என்ன ? போடாங்கறார்”

    “சரி! கடவுள் விட்ட வழி!” டாக்டர் போனை வைத்தார்.

    ரங்கசாமி கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தார். மீண்டும் போன் பண்ணினார். இந்த முறை தனது ஜோசியருக்கு. ரங்கசாமிக்கு ஜோசியம், ஜாதகத்தில் ரொம்ப ஈடுபாடு. நம்பிக்கை.

    “என்ன ஜோசியரே! டாக்டர் அண்ணாவுக்கு கெடு சொல்லிட்டார். நீங்க அவருக்கு ஆயுள் கெட்டி , ஒண்ணும் ஆகாதுன்னீங்க?” – கவலை தோய்ந்த குரலில் ரங்கசாமி.

    “ஐயா! இப்பவும் சொல்றேன்! உங்க அண்ணாவுக்கு எந்த கண்டமுமில்லே. அவர் ஜாதகப் பிரகாரம், இன்னும் ஒரு இருபது வருஷம் அவரை அசைச்சுக்க முடியாது. கொடி கட்டி பறப்பார்.”

    “என்ன இப்படி சொல்றீங்க! அண்ணாவுக்கு புற்று நோய். மிஞ்சிப் போனா, இன்னும் ரெண்டு மாசம் தான் அவர் உயிரோடு இருப்பாராம். இன்னிக்கு தான் டாக்டர் சொன்னார் ”

    “ஐயா! என்னை நம்புங்க ஐயா. அவருக்கு ஒண்ணுமில்லே. நான் முன்னாலேயே சொன்னா மாதிரி உங்களுக்குதான் இப்போ மரண கண்டம். ராகு சந்திரனோடு கூடி கிரகண தோசத்தை ஏற்படுத்தி 6, 8, 12 ஆம் வீடுகளில் அமைந்து லக்னாதிபதியின் பார்வை பெற்றிருக்கு ஐயா. அது உச்சத்திலே இருக்கிறதனாலே, உங்களுக்கு தான் இப்போ ம்ருத்யு தோஷம். அதுக்கு தான் நான் இங்கே, உங்க ஊட்டி எஸ்டேட்டில் உட்கார்ந்து, யாருக்கும் தெரியாமல், பரிகாரம் பண்ணிட்டிருக்கேன். ”

    “என்னமோ போங்க ஜோசியரே! மனசே சரியில்லை. சரி. எதுக்கும் அண்ணாவுக்கும் சேர்த்து பரிகாரம் பண்ணுங்க. வேணுங்கிற பணம் தரேன்! ”

    ***

    அடுத்த நாள் அதிகாலை 4 மணி.

    ஆழமாக மூச்சு விட்டு தூங்கிக் கொண்டிருந்த ரங்கசாமி அலறி அடித்துகொண்டு எழுந்தார். பயங்கர சொப்பனம். கருப்பாக, தலையில் இரண்டு கொம்புகளுடன், கோரை பற்களோடு, இரு யம கிங்கரர்கள் இவரை இழுத்துக் கொண்டு போவது போல் கனவு. அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்து விட்டது.



    உடனே போன் போட்டு , ஜோசியரை எழுப்பினார். “ஜோசியரே! யாரோ வந்து என்னை இழுத்துட்டு போறா மாதிரி கனவு கண்டேன்! ரொம்ப பயமா இருக்கு!”

    “அட கடவுளே! பாத்திங்களா ஐயா. உங்களுக்கு மரண யோகம் தான். ஒண்ணு செய்யுங்க! நீங்க நேரே இங்கே ஊட்டி வந்திடுங்க! பத்து நாள் பூஜை முடிஞ்சி , ம்ருத்ய தோஷ பரிகாரம் பண்ணிணப்புறம் நீங்க திரும்பி போகலாம். அப்புறம் உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது. உங்க அண்ணாவுக்கும் இங்கேயே பரிகாரம் பண்ணிடலாம்”

    “சரி! இப்போவே கிளம்பிடறேன். சாயங்காலத்துக்குள்ளே அங்கே இருப்பேன்”

    ரங்கசாமி அடித்து பிடித்து கொண்டு, அவசர அவசரமாக , வீட்டை விட்டு வெளியே வந்தார். இருட்டுவதற்குள் ஊட்டி போய்விட வேண்டும்.

    “என்னங்க! எங்கே இவ்வளவு காலையிலே புறப்பட்டுட்டீங்க?இன்னிக்கு பையன் வரதனுக்கு பெண் பார்க்க வரதா சொல்லியிருந்தோமே? ” மனைவியின் பேச்சுக்கு பதிலே பேசாமல், காரை எடுத்துக் கொண்டு சர்ரென்று ஊட்டி நோக்கி பறந்தார்.

    ****

    தொழிலதிபர் கந்தசாமி பங்களா அருகில்:

    சித்திர குப்தனும், யமதர்ம ராஜாவும் கந்தசாமி பங்களாவின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக கந்தசாமியின் தம்பி ரங்கசாமியின் கார் அவர்களை விர்ரென்று கடந்து சென்றது.



    “பிரபோ !அதோ ரங்கசாமி , காரிலே வேகமா எங்கேயோ போறான் பாருங்க!”- சித்திரகுப்தன் கைகாட்டினான்.

    “யாரு! ஊட்டி கிட்டே இன்னிக்கு சாயந்திரம், நாம உயிரை எடுக்க வேண்டிய ரங்கசாமியா?”

    “அவரேதான் ஐயா”

    யமன் தீவிர யோசனையிலிருந்தார். “என்ன ஐயா யோசிக்கறீங்க?”

    ”ஒண்ணுமில்லே! இவன் இங்கே எங்கே, காரெடுத்துகிட்டு வேகமாக போய்க்கிட்டிருக்கான்?"

    “அதுதான் ஐயா நானும் யோசிச்சிகிட்டிருக்கிறேன்”

    “ அது தான் அவன் தலை விதி. யாராலேயும் மாற்ற முடியாது. சரி வா! முதல்லே நாம்ப கந்தசாமியை பாக்கலாம்!”

    *****

    தொழிலதிபர் கந்த சாமியின் பங்களா:

    காலை ஆறு மணி.

    கந்தசாமி தனது அறையில் தூக்கம் வராமல் புரண்டு படுத்தார். நோயின் தாக்கம், மன புழுக்கம் இரண்டும் சேர்ந்து அவரது தூக்கத்தை அறவே குலைத்து விட்டிருந்தது.

    “சே! நேரம் நமக்கு சாதகமாக இல்லியே!”- புழுங்கினார். இருமுறை இருமினார். ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தார்.

    இன்னி தேதிக்கு அவருக்கு முன்னூறு கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. இப்போது அவரது அடுத்த குறிக்கோள், முன்னூறு கோடியை ஆயிரம் கோடியாக்க வேண்டும். அப்புறம், நான்கு புதிய ரசாயன தொழிற்சாலை கட்டி அதிலும் காசு பார்க்க வேண்டும். இதுக்கே இவருக்கு நேரம் போதவில்லை.

    இப்போது அவருக்கு இன்னொரு பிரச்னை பூதாகாரமாக உருவேடுத்திருக்கிறது. அவரது தொழிற்சாலையின் ரசாயன கழிவினால், நிறைய மக்கள் பாதிக்க பட்டிருப்பதால், நீதி மன்ற உத்திரவுப் படி, இழப்பீடாக 200 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். மேல் முறையீடு செய்யவேண்டும். அவரது தன்மான பிரச்சனை. எப்படி விட்டுக் கொடுப்பது?.

    இந்த நேரம் பார்த்தா, இந்த பாழாய் போன கான்சர் இவருக்கு வர வேண்டும்? எண்ணி இரண்டு மாதமென்கிறார் டாக்டர். என்ன பண்ணலாம்?

    “சே! எனக்கு மட்டும் கடவுள் ஏன் தான் இவ்வளவு சோதனை தருகிறாரோ? இன்னும் கொஞ்ச காலம் நான் உயிரோட இருந்தால், எவ்வளவு செய்யலாம்?”

    “இன்னும் கொஞ்ச நாள் இல்லை கந்தசாமி, நான் நினச்சா இன்னிக்கே உன் டைம் முடிந்துவிடும்” அசரீரி குரல் அந்த அறையில் ஒலித்தது.

    திடுக்கிட்டார் கந்தசாமி “யார்? யாரது?”




    “நான்தான் யமன், கந்தசாமி. கால பைரவன்.! நீ எவ்வளவு பாவம் பண்ணியிருக்கே? எங்க லிஸ்ட்லே நீ ஒரு முக்கிய புள்ளி. சொல்லப் போனால், கரும்புள்ளி. VIP. உன்னை நரகத்திற்கு அழைத்துக் கொண்டு போகவே வந்திருக்கேன். கிளம்பு! கிளம்பு”

    “ஐயோ! நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கே! பிரபோ! என்ன வேணா தரேன். என்னை விட்டுடுங்களேன். நான் என் சொத்தை மூணு மடங்காக்கணும். நாலு பாக்டரி கட்டணும். இழப்பீட்டு மனுவை எதிர்த்து அப்பீல் பண்ணனும். எக்கச்சக்க வேலை இருக்கு. தெய்வமே! எனக்கு கருணை காட்டுங்களேன்!”

    “ம்!” யோசித்தார் யமன். “நீ எவ்வளவோ பேரை கொன்னிருக்கிறாய்! உன்னாலே, இந்த உலகத்திலேயே நிறைய பேர் சித்தரவதை அனுபவிச்சிட்டு இருக்காங்க. அவங்களுக்கு இங்கேயே நரக வேதனையை கொடுத்திருக்கே ! தெரிஞ்சோ, தெரியாமலோ, என்னோடைய வேலையை நீ இங்கேயே செஞ்சிருக்கிறாய். எனக்கு கொஞ்சம் வேலைப் பளுவை குறைத்திருக்கிறாய்! சரி, அதனால் , போனால் போகிறது, உனக்கு ஒரு வரம் தருகிறேன். நான் சொல்லும் படி செய் !”

    “ஒ. நன்றி நன்றி யம தர்மா. நான் என்ன பண்ணனும்?”


    … To continue


    * கிருமி போஜனம்-கிருமிகளை, புழு பூச்சிகளை உண்ணச்செய்வது : வைதரணி- ரத்தம் சீழ் நதியில் முக்குவது , பூபோதம் - தேள் போன்ற விஷப் பூச்சிகளை விட்டு கடிக்க வைப்பது ( கருட புராணம்)
    Last edited by Muralidharan S; 6th May 2015 at 12:33 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •