Results 1 to 4 of 4

Thread: பார்வைகள் பலவிதம் !

Threaded View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    பார்வைகள் பலவிதம் !

    காலை 8.30 மணி. சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம். பஸ், புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அம்பத்தூரிலிருந்து திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் வரை, ஜெமினி, சத்யம் தியேட்டர் வழியாக இந்த அரசாங்க பேருந்து பயணிக்கும்.

    பேருந்து வசதி குறைவு. கொஞ்சம் பழைய வண்டி. ஆனால், டிலக்ஸ் என போர்டு போட்டு விட்டதனால், டிக்கெட் காசு கொஞ்சம் அதிகம்.

    கண்டக்டர், டிக்கட் கொடுக்க ஆரம்பித்து விட்டார். டிரைவர் டீ கடையில், தன் சக நண்பர்களுடன், வரப்போகும் ஊழியர் சங்க தேர்தலில் நிற்பவர்களில், எவன் அயோக்கியன், எவன் முள்ளமாரி , இவர்களில் யார் தேவலாம் என்பது பற்றி கார சாரமாக, கையில் சமூசாவை வைத்துக்கொண்டு , வைதுக் கொண்டிருந்தார்.

    கண்டக்டர் எட்டிப்பார்த்து, தனக்காக விசில் அடிப்பதை அசிரத்தையோட நோக்கி , “வரேன்! வரேன்!” என்று சைகை காட்டினார், வண்டியை நோக்கி திரும்பினார் . அவர் தன் நண்பர்களிடமிருந்து பிரியா விடை பெற்று வண்டியில் ஏறி அமர்ந்தவுடன் ,பேருந்து கிளம்ப வேண்டியது தான்.



    அலுவலகம் செல்பவர்கள், கல்லூரி, பள்ளி செல்பவர்கள் அவசர அவசரமாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர். ஆயிற்று, ஏறக்குறைய ஒரு நான்கு ஐந்து இருக்கை தவிர வண்டி நிரம்பி விட்டது.

    பேருந்து கிளம்பியது. முதல் நிறுத்தம், ஐஸ்வரியா பிளாட்ஸ். பெயரை வைத்து எதையும் எடை போட முடியாது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாக, அங்கங்கே காறை பெயர்ந்து, பல்லிளிக்கும் குடியிருப்பு. நடுத்தர வர்க்க, கீழ் மட்ட மக்களுக்கான உளுத்துப் போன, 40 வருட, 500 சதுர அடி புறாக்கூண்டுகள். இவ்வளவு நாள் அந்த கட்டிடம் நின்று கொண்டிருப்பதே ஒரு அதிசயம்.

    அந்த நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், பத்து பதினைந்து பேர் தடதடவென அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினர். அவர்கள் கண்கள் காலியான இருக்கைகளை தேடிக்கொண்டே. அவர்களிடையே அவசரம். ஒவ்வொருவரிடமும், ஒரு மியூசிகல் சேர் இடம் பிடிப்பது போல் ஒரு பதற்றம்.

    இந்த களேபரத்தில், ஒரு முதியவர், கிட்டதட்ட ஒரு 65 வயதிருக்கும், ஒரு காலி இருக்கையை தனது காடராக்ட் கண்களால் கண்டு பிடித்து, அதை நோக்கி அவரால் முடிந்த வேகத்தில் ஓடினார். அவர் ஒரு நோயாளி என்பது அவரது முக சோர்விலேயே தெரிந்தது. வயது கொஞ்சம் அதிகம். ஆரோக்கியம் கொஞ்சம் கம்மி. சில பல அரசு பேருந்து போல.

    அவர் இருக்கையை அடையுமுன், அவருக்கு பின்னால்,முட்டி அடித்து முன்னேறி வந்த ஒரு 20-25 வயது, வாட்ட சாட்டமான இளைஞன், அவரை இடித்து தள்ளி விட்டு, எகிறி குதித்து, அந்த இருக்கையில் அமர்ந்தான்.

    அவனது முகத்தில், ஒரு கோப்பையை தட்டிய மலர்ச்சி. 'பெண்கள்" கூட்டம் பக்கம் திரும்பி தன் ராஜ பார்வையை ஓட விட்டான், தன் திறமையை மெச்சி , யாரேனும் தன்னை சைட் அடிக்கிறார்களா என தெரிந்து கொள்ள. வயதில் பெரியவரை தள்ளி விட்டோமே என்ற வருத்தம் அவனிடம் சிறிதும் இல்லை. பெரியவரிடம், ஒரு சின்ன சாரி கூட கேட்கவில்லை.

    சிகப்பு நிற சட்டை, தாடை வரை கிருதா, வாராத தலை, ஐந்து நாள் தாடி, கொஞ்சம் சிவந்த கண்கள். சண்டைக்கு தயார் என்ற தோற்றம் அவனுக்கு. பின்னாளில், முயற்சி பண்ணினால், அவன் அரசியலில் ஒரு சிறந்த அள்ளைக்கையாகவோ, ஒரு கட்சி அடியாளாகவோ ஆக நிறைய வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. எனவே, அவனை தட்டி கேட்கிற தைரியம், சுற்றி இருந்த எவருக்கும் இருந்ததாக தெரியவில்லை.

    பெரியவர், பாவம், தள்ளாடி எழுந்து கொண்டார். கம்பியை பிடித்து கொண்டு. “த்சொ! த்சொ” கொட்டினார்கள், அருகிலிருந்த சிலர். “பெரியவரே, பார்த்து! பார்த்து!,” என்றனர். அவரது தள்ளாமை கண்டு சிலருக்கு அனுதாபம்.

    இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நாகரிக யுவதி, அவள் ஒரு பள்ளி ஆசிரியை. அருவருப்புடன் பக்கத்து சீட் காரியிடம் முணுமுணுத்தாள். “ சே! என்ன ஒரு அரகன்ஸ் அந்த பையனுக்கு! பார்த்தீங்களா ? இந்த மாதிரியா அநாகரிகமாக நடந்து கொள்வார்கள்?”

    இன்னொரு பயணி, ஒரு வக்கீல் கோபப்பட்டார் , “ சார் ! இந்த மாதிரி நடந்துகிறவர்களை கிரிமினல் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுக்கணும்!. பொறுக்கி பசங்க. இதுக்கு ஏதாவது சட்டம் இருக்கா, பாக்கறேன்?”

    மூன்றாவது ஒரு நர்ஸ் “ ஐயோ பாவம்! இந்த வயசானவர் கீழே விழுந்துட்டாரே! அடி கிடி பட்டிருக்குமோ?”. அவளது பார்வை அப்படி!

    நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கல்லூரி விரிவுரையாளர் “ வளர்ப்பு சரியில்லை சார். அப்பா அம்மா சரியாயிருந்தா, இந்த பையன் நிச்சயமா இப்படி நடக்க மாட்டான்! இந்த பையன் சரியான மெண்டல் கேசா இருக்கும்”. அவர் கொஞ்சம் ஜட்ஜ்-மெண்டல் டைப்.

    பெண்கள் பகுதியில், ஒரு 45 வயது பெண்மணி, குழந்தை இல்லாதவள், “இந்த மாதிரி பசங்களை பெத்துக்காம இருக்கறதே புண்ணியம்!” பக்கத்தில் இருப்பவளிடம் பொருமினாள். இவ்வாறு சொல்வதே அவளது இயல்பாகி விட்டது. அவளது மன உளைச்சலுக்கு அதுவே ஒரு எஸ்கேப் ரூட். அவளது புண்ணுக்கு அவளாக தேடிக் கொண்ட ஒரு மருந்து.

    கல்லூரி பெண் ஒன்றை கரெக்ட் பண்ணிக் கொண்டிருந்த ஒரு மாணவன் “பாத்து பெருசு! ஏன் இந்த கூட்டத்திலே வந்து கஷ்டப் படறீங்க! ஆட்டோல போலாமில்லே!”. நக்கலுக்கு, களுக்கென்று சிரித்தாள் அந்த பெண். விடலைப் பசங்களின் உலகமே வேறே.

    அதை பார்த்து பொறாமை பட்ட சக மாணவன், தன் பங்குக்கு “மேல போக டிக்கெட் எடுங்க பெரியவரே! இங்கே வந்து எடுக்கறீங்க?”. கூவினான். இதுக்கும் ஒரு களுக் அந்த பெண்ணிடமிருந்து. 'எத்தனை பசங்க என்னை பாத்து வழியறாங்க!', யவ்வன கர்வம் அந்த பெண்ணின் முகத்தில்..

    “முதியவர்களுக்கு மட்டும்” இருக்கையில் அமர்ந்திருந்தான் ஒரு 35 வயது இளையவன். எங்கே தன்னை எழுந்துக்க சொல்லுவாங்களோ என்று, ஆஸ்டிரிச் பறவை போல தலையை குனிந்து கொண்டான். யாரையும் பார்ப்பதை தவிர்த்தான்

    ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. கீழே விழுந்த பெரியவருக்கு யாரும் எழுந்து இடம் கொடுக்க தயாரில்லை. மனமுமில்லை. ‘வேறே யாராவது இடம் தரட்டுமே? நான் ஏன் தரணும்? அப்புறம் , யார் இந்த கூட்டத்தில் நின்னுகிட்டே பிரயாணம் பண்றது?”

    அவரவர் பாணியில், அவரது படிப்பு, வேலை, மன நிலைக்கேற்ப, தங்கள் எண்ண வெளிப்பாட்டை முணு முணுத்தனர். ஏதோ அவர்களால் முடிந்தது இவ்வளவுதான் !

    கண்டக்டர் அவரது இடத்திலேருந்து “ டிக்கெட்! டிக்கெட்!” என்று கத்தினார்.

    பெரியவர் “ சத்யம் ஒரு டிக்கெட் கொடுங்க!”

    “இந்தாங்க சார் டிக்கெட்! அடி கிடி ஒண்ணும் படலியே!”

    “ஒண்ணும் ஆவலை கண்டக்டர் சார். தேங்க்ஸ்”

    பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் சூள் கொட்டினார் “ சார், பாவம், கீழே விழுந்தாட்டாறேன்னு யாராவது எழுந்து இடம் கொடுக்கறான்களா பாருங்க! அவன் அவனுக்கு தன் சௌகரியம்தான் முக்கியம்!”. அவரது குரலில் தான் நிற்கிறோமே , மற்றவர்கள் வசதியாக உட்கார்ந்து வருகிறார்களே என்ற ஆற்றாமை, லேசாக தெரிந்தது.

    “இந்த காலத்து பசங்களே இப்படித்தான்! பெரியவங்க கிட்டே மரியாதை இல்லை”- பருமனானவர் பக்கத்தில், கிடைத்த கால் இருக்கையில் , குடை சாயாமல் உட்கார, பிரம்ம பிரயத்தனம் பண்ணி கொண்டிருந்த, மற்றொரு சீனியர் சிடிசன் முணுமுணுத்தார்.

    “உங்களை இப்படி இடிச்சு தள்ளிட்டு , அந்த பையன் எப்படி அதப்பா உக்காந்திருக்கான் பாருங்க? அவனை தட்டி கேட்க இங்கே யாருக்கும் தைரியமில்லை !” – இன்னொருவர் அங்கலாய்த்தார், இருக்கையில் அமர்ந்து கொண்டு.

    கண்டக்டர் “ சார்! பெரியவரே! நீங்க வேணா என் சீட்லே உக்காந்துக்கோங்க! ”

    விழுந்த பெரியவர் சொன்னார் “ வேண்டாங்க. தேங்க்ஸ். இருக்கட்டும்."

    கண்டக்டர் “ சார், இங்கே யாரையும் கேக்க முடியாது. அந்த பையனை போய் எழுந்திருக்க சொன்னா, சண்டைக்கு வருவான்.பொறுக்கி மாதிரி இருக்கான். எதுக்கு வம்பு ? நீங்க இங்கேயே உக்காருங்க சார்”.

    கண்டக்டரின் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ,இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த, டிப் டாப்பாக உடையணிந்த ஒரு நாகரிக இளைஞன், “சார்! இங்கே வந்து என் இருக்கையிலே அமர்ந்து கொள்ளுங்கள்!”

    “இருக்கட்டும்பா !வேண்டாம்பா!” அவசரமாக மறுத்தார் பெரியவர்.

    “இல்லே சார்!, இதுலே என்ன இருக்கு? என்னாலே நிக்க முடியும்! நீங்க உக்காருங்க ப்ளீஸ்!”

    வெயில் கண்ணாடி அணிந்திருந்த அந்த நாகரிக இளைஞன், தட்டுத்தடுமாறி கம்பியை பிடித்து கொண்டு எழுந்தான்.

    மனசிருக்கே அவனுக்கு! பார்வை இல்லையென்றால் என்ன?




    ****முற்றும்.

    Last edited by Muralidharan S; 7th December 2014 at 12:48 PM.

  2. Likes RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •