Results 1 to 8 of 8

Thread: லஷ்மியின் சந்தேகம்

Threaded View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    லஷ்மியின் சந்தேகம்

    சைதாபேட்டை அனன்யா மகளிர் கல்லூரி நூலக வளாகத்தை விட்டு நான் வெளியே வரும்போது சரியாக மாலை 6.00 மணி. கடந்த எட்டு வருடங்களாக இங்குதான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன், லைப்ரரியனாக.

    வெளியே வரும்போது யாரோ “லஷ்மி” என்று கூப்பிட்டது போல் இருந்தது. திரும்பினேன். என்னை இல்லை. வேறு யாரையோ?

    நேரம் பார்த்து, யாழினி, எனது உதவியாளினி, 5.00 மணிக்கு வேலை கொடுத்து விட்டாள். ஏதோ அவசரமாம். முடிக்க இவ்வளவு நேரம். அடிக்க வேண்டும் அவளை. இனிமேல்தான் ஆட்டோ பிடித்து, நகை வாங்கிக் கொண்டு, ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக்கொண்டு, சென்ட்ரல் ஸ்டேஷன் போய், எலெக்ட்ரிக் ட்ரெயின் பிடித்து திருவள்ளூர் செல்ல வேண்டும். வீடு அங்குதான்.

    இன்று பார்த்து லேட். அப்பா காத்துக் கொண்டிருப்பார் பணத்திற்காக. ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வேண்டும். நகை ஆர்டர் கொடுத்திருந்தேன், தங்கையின் வளை காப்புக்காக. அதை வேறு வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். இல்லைன்னா, அம்மாவும் அக்காவும் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். .

    என்னோட அக்காவும் இப்போ எங்க கூடத்தான். வாழா வெட்டி. அக்காவை பார்த்தபிறகு திருமண வாழ்க்கையில் எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் சுத்தமாக போய்விட்டது. கல்யாணம் செய்து கொள்வதாக எண்ணம் இப்போது கிஞ்சித்தும் இல்லை. இப்படியே இருந்து விடலாம், வயதான பெற்றோருக்கு துணையாக என முடிவு பண்ணி நிம்மதியாக இருக்கிறேன். அப்பாதான் அப்பப்போ "கல்யாணம் பண்ணிக்கோ லஷ்மி! எங்களுக்கு அப்புறம் உனக்கு துணை வேண்டாமா ?" என்று நச்சரிப்பார். இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவேன் . அப்பா பேச்சை கேக்க நான் என்ன கேனையா ?

    எனது தங்கையின் கல்யாணம், காதல் கடிமணம். ! ரெண்டு வருஷம் முன்பு , வீட்டை விட்டு போனவள் தான். இதுவரை அப்பா அவளை வீட்டிற்குள் சேர்க்க விடவில்லை. அம்மாவின் நச்சரிப்பால், இப்போது , மெதுவாக குடும்பத்துடன் சேர ஆரம்பித்திருக்கிறாள். இப்பவும் அம்மாவின் அரிப்பு தாங்காமல், அவளுக்கு எங்கள் வீட்டில் வளைகாப்பு . இன்னும் நான்கு நாட்களில்! அதற்கு தான் இத்தனை முஸ்தீபுகள்.

    இரவில் நகை, பணத்துடன் திருவள்ளூர் வரை செல்ல கொஞ்சம் பயம்தான். என்ன செய்வது? வேக வேகமாக, தி நகர் போய் நகையை வாங்கிக் கொண்டு, ரயில் நிலையம் அருகே பணம் எடுத்துக் கொண்டு, மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் ஏறினேன். அப்போதுதான் யாரோ என்னை பின் தொடர்வது போன்ற உணர்வு எனக்கு. திரும்பினேன். சுமார் 45 வயது மதிக்கதக்க ஆள், கட்டையான உருவம், பத்து நாள் தாடி, என்னையே குறு குறு வென்று பார்ப்பது போல் இருந்தது. ஒருவேளை ஜெவேல்லேரியிலிருந்து தொடர்கிறானோ? ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் போது பார்த்திருப்பானோ?

    கைப்பையை கெட்டியாக பிடித்துக்கொண்டே மின்சார வண்டியில் முதல் வகுப்பில் ஏறினேன். அவனும் என்னைத்தொடர்ந்து ஏறினான். கம்பார்ட்மெண்ட்டில் சுமாரான கூட்டம். அப்பாடா ! அவனைப்பார்க்காத மாதிரி ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.

    பார்க் ஸ்டேஷன்ல வண்டி நின்றவுடன் இறங்கி சென்ட்ரல் ஸ்டேஷன் நோக்கி விறு விறுவென நடந்தேன். எதேச்சையாய் திரும்பினால், தாடிக்காரன்.. என்னைப் பார்க்காதது போல் பின்னாடியே வந்துகொண்டிருந்தான். என் படபடப்பு அதிகமாயிற்று. மணியோ 7.30. இரவு. கையில் நகை, ரூபாய்40,000 ரொக்கம். திருவள்ளூர் ஒரு கோடி போகவேண்டும். “இந்த அப்பா ஏன் திருவள்ளூரில் வீடு கட்டினாரோ?” திட்டிக்கொண்டே நடந்தேன். திருட்டுத்தனமாக பின்னால் திரும்பிப் பார்த்தேன். தாடிக்காரனைக்காணோம். அப்பாடா!. அனாவசியமாக பயந்து விட்டேனோ? வீட்டில் சொன்னால், அப்பா, அம்மா, அக்கா மட்டுமல்ல, அக்கா பையன் நிகிலும் சிரிப்பான். “சரியான சந்தேக பிராணி! ” என்று.

    வீடு சேர 10 மணியாகிவிடும். அப்பா டென்ஷன் ஆகி விடுவார். மொபைலில் கூப்பிட்டு “ லேட்டாகும்பா! பயப்பட வேண்டாம்!” என்றேன். அப்பா கொஞ்சம் கவலைப்படற ஜாதி. “பத்திரம்! வேணுமென்றால் நான் ஸ்டேஷன் வரட்டுமா லஷ்மி” என்றார். அப்பாவுக்கு என்னை விட நகை, பணம் பேரில் கவலை. “வேண்டாம் வேண்டாம், ஸ்டேஷன் லேதான் என் ஸ்கூட்டி இருக்கே” நிராகரித்தேன்.

    திருவள்ளூர் செல்லும் மின் வண்டி புறப்படத் தயாராக இருந்தது. பார்த்துக் கொண்டே நடந்தேன். துணை கிடைத்தால் தேவலை. சிக்னல் விழுந்து விட்டது. லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் கூட்டம் இல்லை. கொஞ்சம் காலி தான். பக்கத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறினேன். சுமாரான கூட்டம். கைப்பையோடு நான் ஏறும் போது, யாரோ என்னை இடித்துக்கொண்டே, முண்டியடித்து ஏறினார்கள்.

    “இடியட்”. திட்டிக்கொண்டே திரும்பினேன். திக்கென்றது. அதே தாடிக்காரன். என் சந்தேகம் சரிதான். மாம்பலத்திலிருந்து என்னைத் தொடர்ந்து வந்து, இங்கும் ஏறி விட்டான். உடனே என் கைப்பையை தூக்கி பார்த்தேன். பத்திரமாக இருந்தது. போன உயிர் வந்தது. உஸ்! அப்பா ! நெற்றியில் பூத்த வியர்வையை துடைத்துக்கொண்டு, நெஞ்சு படபடக்க உள்ளே காலியாக இருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தேன். எதிர் இருக்கையில் இருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி மெலிதாக முறுவலித்தாள். சக பிரயாணி. நானும் பதில் புன்னகை பூத்தேன்.

    தாடிக்காரன் இரு வரிசை தள்ளி என்னைப் பார்த்தபடி உட்கார்ந்தான். கொஞ்சம் உதறல்தான் நகையையும், பணத்தையும் பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டுமே!. கடவுளே! என்னைக் காப்பாற்று.- வேண்டிக்கொண்டேன். எங்கே பார்த்தாலும் கொள்ளை, நகை பறிப்பு பற்றி தினசரியில் படிப்பதால், எனக்கு பயத்தில் கொஞ்சம் ஜுரமே வந்தது போலிருந்தது.

    வண்டி திருவள்ளுரை நெருங்க நெருங்க முதல் வகுப்பு காலியாகிவிட்டது. நானும் தாடிக்காரனும் மட்டும்தான். கத்தி, கித்தி எடுத்து மிரட்டுவானோ? குத்தி விடுவானோ? ஏன்தான் முதல் வகுப்பில் ஏறினேனோ? அவன் மெதுவாக எழுந்து என்னை நோக்கி நடப்பது போலிருந்தது.

    பயத்தில் என்ன செய்கிறேனேன்றே தெரியவில்லை. அவசர அவசரமாக, கைப்பையை எடுத்துகொண்டு திருவள்ளூரில் வண்டி நிற்கும்முன் பிளாட்பாரத்தில் குதித்தேன். வலது கால் கொஞ்சம் மடங்கியது. நல்ல வேளை. சமாளித்துக் கொண்டேன். “ பார்த்து, பார்த்து” சத்தம் கேட்டது லேடீஸ் கம்பார்ட்மெண்ட் அருகில்..

    திரும்பினேன். முதல் வகுப்பில் தாடிக்காரன் நான் உட்கார்ந்திருந்த இருக்கை பக்கத்திலிருந்து கூவி அழைத்துக் கொண்டிருந்தான்..என்னைத்தான்! ஐயையோ!

    ”ஏங்க ! கொஞ்சம் நில்லுங்க! அவசரத்தில் உங்க பர்ஸ் கீழே விழுந்ததை பாக்காம போறீங்களே?”

    அப்போது தான் உறைத்தது எனக்கு. அவசரத்தில் , பயத்தில் எனது பர்ஸ், பாண்ட்பாக்கேட்டிலிருந்து விழுந்ததைக்கூட கவனிக்கவில்லை.வெட்கமாக இருந்தது எனக்கு. நின்று பர்சை வாங்கிக் கொண்டேன்.

    “ரொம்ப தேங்க்ஸ்” – நான்

    “பரவாயில்லை. ! தவற விடறது எல்லாருக்கும் சகஜம் தானே !ம்ம்.. சார் !உங்களை எனது கசின் யாழினியுடன் பார்த்திருக்கிறேன். அனன்யா மகளிர் கல்லூரிலே தானே வேலை பார்க்கிறீர்கள்? நானும் திருவள்ளுர்தான். கொஞ்ச நாளாச்சு இங்கே வந்து”- தாடிக்காரன்.

    “அடக் கடவுளே! என்ன ஒரு சந்தேகம் எனக்கு” – எனக்குள் திட்டிக்கொண்டே, தாடிக்காரருக்கு மறுபடி ஒரு தேங்க்ஸ் போட்டுவிட்டு, டூ வீலர் ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன், லஷ்மி நரசிம்மன் ஆகிய நான்.


    முற்றும்....


    ****
    Last edited by Muralidharan S; 18th November 2014 at 05:21 PM.

  2. Likes adiram, Madhu Sree liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •