காலை 10 மணிக் காட்சி பக்கா அனுபவங்கள். ...தொடர்கிறது.

பொதுவாக சிட்டியில் உள்ளவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் கம்மி. சிட்டி தள்ளி உள்ள பகுதிகளிலும், நடுத்தரமான கடலூர், சிதம்பரம், விழுப்புரம் போன்ற நகரங்களிலும் இந்த காலை 10.30 மணிக் காட்சி மிகவும் பிரசித்தம். 'எப்படா சனி, ஞாயிறு வரும்' என்று தவம் கிடப்போம். வெள்ளிக் கிழமைதான் தியேட்டர் வாசலில் அது சம்பந்தமான போஸ்டர் ஒட்டுவார்கள்.

கொஞ்சம் 'டீப்'பாக சிந்தனை செய்த போது இன்னும் சில படங்கள் கூட ஞாபகத்துக்கு வந்தன. தெலுங்குப் படங்கள் அல்லாது கன்னடப் படங்களுக்கும் இத்தகைய பெருமை உண்டு.



அதில் முக்கியமானது விஷ்ணுவர்தன், துவாரகீஷ் நடித்த 'கள்ளா குள்ளா' என்ற படம் நிஜமாகவே நல்லா 'கல்லா' கட்டியது. கடலூர் முத்தையாவில் ரெகுலர் ஷோவாக கலக்கி எடுத்து பின் காலைக் காட்சியாகவும் இன்னொரு ரவுண்ட் வந்தது. செம என்டெர்டெயின்மென்ட் மூவி. கலர் வேறு.

அப்புறம் கன்னட ராஜ்குமார் நடித்த 'மயூரா' என்ற 'அரச' படம் தமிழ் பேசி ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றது. ராஜ்குமாரின் லாவகமான வாள்வீச்சு படத்தை தூக்கி நிறுத்தியது. பிரம்மாண்டமான தயாரிப்பு.



'சகோதர சவால்' என்ற கன்னடப்படம் 'சகோதர சபதம்' என்று வெளிவந்து விஷுணுவர்த்தன், ரஜினி நடிப்பில் நன்றாக ஓடியது. ரஜினி அப்போது தமிழில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரத்தை தயாரிப்பாளர்கள் விடுவார்களோ! செமையாக பயன்படுத்திக் கொண்டார்கள்.



தெலுங்கில் கிருஷ்ணாவும், என்.டி.ஆரும் இணைந்து நடித்த 'கடவுள் படைத்த மனிதர்கள்' (தெலுங்கில் 'தேவுடு சேசின மனுஷுலு') அந்த மாதிரி இன்னொரு படம். நாயகி ஜெயா மேடம்.

அப்புறம் நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் மூவி 'வைரக் கிரீடம்'

ராமகிருஷ்ணா இன்னொரு ஆக்ஷன் ஹீரோ. இவர் நடித்து வெளிவந்த 'பைட்டர் பகவான்' சக்கைப் போடு போட்டது.

ரஜினியின் வளர்ச்சி காலத்தில் அவர் நடித்த மொழி மாற்றுப் படம் 'இன்ஸ்பெக்டர் ரஜினி'. 'உங்க சௌத்ரியை எங்கள் இன்ஸ்பெக்டர் ரஜினி முந்திட்டார்' என்று அப்போதைய ரஜினி ரசிகர்கள் எங்களிடம் செம காமெடி பண்ணினர்.



பிறகு ரஜினியும், என்.டி ஆரும் இணைந்த படம்' என்ற விளம்பர வாசகத்தில் வெளிவந்து தோல்வியைத் தழுவிய 'டைகர்'. ரஜினிக்கு ஜெயசுதாவின் தங்கை சுபாஷிணியும், ராமாராவிற்கு ராதா சலூஜாவும் ஜோடி

என்.டி.ஆர் தனியே ஹீரோவாக நடித்த 'ராயல் டைகர் ராமு',

என்.டி.ஆர், வாணிஸ்ரீ ஜோடியில் 'சிம்மக்குரல்'.

கிருஷ்ணா நடித்த 'ரத்த சம்பந்தம்'

லேடி ஆக்ஷன் மூவி 'பொல்லாத பெண்'. இதில் லதா, சரத்பாபு ஜோடி.

இன்னும்



கௌபாய் குள்ளன்,

ஜூடோ சுந்தரி,

லேடி பைட்டர் ரேகா,

நேபாளத்தில் சி.ஐ.டி 999,

'டெத் ரைட்ஸ் எ ஹார்ஸ்' ஆங்கிலப்படத்தின் தழுவலான, மிக பாப்புலரான 'ரிவால்வார் ரீட்டா',

துப்பாக்கி ரங்கன்,

கத்திக்குத்து கந்தன்,



டூபான் மெயில் (இந்தப் பெயரில் மஞ்சுளா நடித்த தெலுங்கு தழுவல் ஒன்றை பார்த்திருக்கிறேன். 'அழகி'க்கு ஹீரோ நரசிம்ம ராஜு. கிரிபாபு, விஜயலலிதாவும் உண்டு )

டூபான் க்வின்

இப்படி நிறைய.

இன்னொரு படம் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

'நகரத்தில் திருடர்கள்' என்று ஒரு படம் வந்ததே...நினைவிருக்கிறதா?...படுபயங்கரமான படம். காலைக் காட்சி பார்த்துவிட்டே நடுங்கிப் போய் வீட்டுக்கு வந்தேன் வேர்க்க விறு விறுக்க.

இன்னும் கூட சில நினைவுக்கு வருகின்றன.

பூதம் எனது நண்பன்,

மாய சக்தி,

ராக்கெட் ராணி,

நாக சக்தி

இப்படியும் படங்கள் காலை காட்சியாக உலா வந்தன.

மலையாளத்தில் வின்சென்ட் நடித்த (அவரது நூறாவது படம் என்று நினைக்கிறேன்) 'பிக்னிக்' என்ற படம் பார்த்ததும் உண்டு.



நம்ம கமல், லஷ்மி நடித்த 'பொன்னி' என்ற படம் கூட பின்னாளில் கமல் ஸ்டாரான பிறகு 'கொல்லிமலை மாவீரன்' என்று வெளிவந்தது.



அப்புறம் கமல் நடித்த 'ஏழாம் இரவில்' என்ற மொழி மாற்றுப் படமும் இந்தக் காலைக் காட்சி லிஸ்ட்டில் சேருமே. கமலுக்கு கோராமை மேக்-அப். இது இந்தியிலும் 'பியாசா சைத்தான்' என்று மொழி மாறியது



இதுவல்லாமல் நேரிடையாகவே வந்த இந்திப்படம்... பேய்ப்படம் ஒன்று 'தர்வாஜா'. ஐயோ! குலை நடுங்க வைக்கும் படமல்லவா அது.

இன்னும் நிறைய இருக்கிறது. ஞாபகம் வர,வர தரலாம்.

இதெல்லாம் செம ஜாலியான காலங்கள். பின் இவைகளின் காலம் போய் நீங்கள் சொன்ன மாதிரி மலையாள 'A' சர்டிபிகேட் படங்களே பின்பு காலைக்காட்சி படங்களாய் நெடுநாள் கோலோச்சின. இந்தப் படங்கள் வெறும் முக்கால் மணி நேரத்தில் முடிந்து விடும். இவைகளிலும் சண்டைக் காட்சிகள் உண்டு. உடலுறவு சண்டைக் காட்சிகள்.



'மழு' (ஆயுதம்) நிஜமாகவே நல்ல படம். பாலன் கே.நாயரின் கடின உழைப்புக்கு ஒரு சான்று அந்தப் படம். 'பாப்பாத்தி' ரதி தேவி மருமகள். சந்தர்ப்பவசத்தால் ஒருமுறை மருமகளுக்கும், மாமனாருக்கும் ரசாபாசம் நடந்துவிட (இது படத்தில் டீசென்ட்டாகவே இருக்கும்... அது கூட படத்தின் முக்கால்வாசி பாகத்திற்குப் பிறகு... சுகுமாரன் என்ட்டர் ஆவதற்கு முன் ) நம்ம ஆளுங்க அதை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, முண்டு உடுத்திய 'பாப்பாத்தி' ரதிதேவியின் போஸை எட்டு சீட் போஸ்டராக ஒட்டி,'மாமனாரின் இன்ப வெறி'யாக மாற்றி, தமிழகத்தையே காம வெறி பிடிக்கச் செய்து விட்டார்கள் பாவிகள். அந்தப் படத்தில் கடும் கிராமத்து உழைப்பாளியாக வாழ்ந்து காட்டியிருப்பார் நாயர்.

அது போல ஜெயபாரதியின் முதுகை மட்டும் பெரிதான போஸ்டராக்கி 'இதோ இவிட வரே' படத்துக்கு பெரியவர் முதல் சிறியவர் எல்லோரையும் வரச் செய்து விட்டார்கள். நல்ல வேளை. 'சோமனின் காமம்' என்று இதற்கு தமிழில் பெயர் சூட்டாமல் விட்டார்களே! அதுவரை பிழைத்தோம்.

சரி! சப்ஜெக்ட் வேறு திசை நோக்கி பாய எத்தனிக்கிறது. நிறுத்திக் கொள்வோம்.

எது எப்படியிருந்தாலும் சரி! எழுபதுகளின் வெயிலில் தியேட்டர்களின் கதவுகளைத் திறந்து வைத்து, காற்றுக்காக அங்கேயே ஏங்கி, வேர்த்து நின்று விஜயலலிதா, கிருஷ்ணா, ஜோதி இவர்களின் பழுப்பு கலர் திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளையும், குதிரையோட்டங்களையும் ரசித்த காலங்களை காலாகாலத்துக்கும் மறக்க முடியாது.

காலைக்காட்சி அல்லாது மீதி மூன்று ஷோக்களும் என் 'இதய தெய்வ'த்தின் படங்களுக்கே முதலிடம். அதிலும் 'ஞான ஒளி'க்கு பிரதான இடம் அன்றும் இன்றும் என்றும். அப்புறம்தான் மற்ற படங்கள் எல்லாம்.