Page 9 of 10 FirstFirst ... 78910 LastLast
Results 81 to 90 of 92

Thread: பாசுரம் பாடி வா தென்றலே!

  1. #81
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே
    இருபத்து ஒன்பது

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – இருபத்தொன்று

    05.01.15

    *
    குழந்தை தத்தித் தத்தித் தவழ்ந்து போய் அம்மாவைப் பிடித்து நின்று மழலையில் “ம்மா, எனக்குப் பசிக்கிறது “ என்று சொன்னால் தாய் என்ன செய்வாள்?

    வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தால் அதை அப்படியே நிறுத்தி விடுவாள். சலவை இயந்திரத்தில் துணிகள் போட்டுக் கொண்டிருந்தால் அதை நிறுத்தி விடுவாள். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடனே கை கழுவி விடுவாள், எழுந்து கிண்ணத்தில் “ரசம் மம்மு’ பிசைந்து குழந்தைக்கு ஊட்டுவாள்! (இந்தக்காலத்தில் எந்தக் குழந்தை “பசிக்கிறது” எனச் சொல்கிறது? அவ்வப்போது இனிப்புப் பசி, குளிர்பானப்பசி, இத்தாலிய தோசைப் பசி என்று தான் அதற்கு வருகின்றன!)

    குழந்தை கண்ணனுக்கும் ஒரு நாள் பசித்தது. அம்மா யசோதையிடம் கேட்டான். பொறுப்பாளா அவள்? பானையில் தயிர் கடைவதை நிறுத்தி விட்டு சமையலறைக்குச் சென்றாள். அதற்குள் பொறுமையில்லாமல் கண்ணனுக்கோ மேலும் பசி. சின்னதாய்க் கோபம் கொண்டு தயிர்ப்பானையை உடைத்து விட்டான்.

    தயிர் தரையில் ஓடுவதைப் பார்த்தவுடன் பசி போய் பயம் வந்துவிட்டது. யசோதை வெளியில் வந்து பார்த்துக் கோபம் கொண்டாள். “ வா வா உன்னை என்ன செய்கிறேன் பார்!” எனச் சொல்லி கையில் கோலெடுத்து அடிக்க வர கண்ணன் ஓடினான். ஓடினான்., தெரு முனைக்கே ஓடினான். ஓடி அங்கிருந்த ததிபாண்டன் என்னும் ஆயன் வீட்டிற்குள் நுழைந்தான்.

    அங்கிருந்த ததிபாண்டனிடம், “ஐயா. என்னை அடிக்க என் தாய் வருகிறாள்., என்னை ஒளித்து வையுங்கள்” எனக்கேட்க ததி பாண்டனும் குட்டிக் கண்ணனை உட்கார வைத்து அவன் மீது ஒரு பானையைப் போட்டு அதன் மீது தான் உட்கார்ந்து கொண்டான்.

    யசோதை வந்துகேட்டதும் கண்ணன் இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டான்.

    “ஹை அம்மா போயாச்சு, ஜாலி” என்ற கண்ணன், “ததி பாண்டா. என்னை வெளியில் விடு” என்றான். ததிபாண்டனுக்கா தெரியாது? அவன் ஞானியாயிற்றே, உள்ளே இருப்பவன் எம்பெருமான் ஆயிற்றே! “ம்ஹூம், முடியாது, எனக்கு நீ வரம் தரவேண்டும் கண்ணா, அப்போது தான் உன்னை விடுவேன் “ என்றான்.

    “என்ன வரம் வேண்டும் உனக்கு?”

    “எனக்கு மோட்சம் வேண்டும்”

    “தந்தேன்” என்றான் கண்ணன். யோசித்தான் ததிபாண்டன். “எனக்கு மட்டுமல்ல. நீ ஒளிந்திருந்தாயே இந்தப் பானைக்கும் மோட்சம் வேண்டும்!” எனக் கேட்க, கண்ணன் சரியென்று சொல்ல, ததிபாண்டனும் அந்த உயிரில்லாத பானையும் அங்கேயே மோட்சம் பெற்றார்கள்!

    ததிபாண்டன் செய்த புண்ணியம் தான் என்னே! உலகத்தையே அடக்குகின்ற கண்ண பரமாத்மாவை ஒரு நாழிகைப் போது தனது பானைக்குள் அடக்கி வைத்தானே. மிகுந்த ஞானவான், பரமாத்மா தன் இல்லம் தேடி வந்ததை அறிந்து அவர் கால்களைப் பிடித்துக் கொண்டவன். அவனுக்கு அருள் செய்த கண்ணன் எப்படிப் பட்டவன்?

    ”சிந்திக்க நெஞ்சில்லை வாயில்லை
    நாமங்கள் செப்ப நின்னை
    வந்திக்க மெய்யில்லை வந்து
    இருபோதும் மொய்ம்மாமலர்பூம்
    பந்தித்தடம் பொழில் சூழ் அரங்கா!
    ததிபாண்டவன் உன்னைச்
    சந்தித்த நாள் முத்தி பெற்றதென்னோ
    தயிர்த் தாழியுமே..

    என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தாம் எழுதிய பாசுரத்தில் குறிப்பிடுகிறார். கண்ணனைச் சந்தித்ததால் ததிபாண்டவன் மட்டுமின்றி அவனது தயிர்ப்பானையுமன்றோ மோட்சம் பெற்றது!

    இன்றையபாடலில் நப்பின்னைப் பிராட்டியும் ஆயப் பெண்களுமாகச் சேர்ந்து கண்ணனை எழுப்புகிறார்கள்.

    **

    ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
    ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
    ஊற்றமுடையாய்ப் பெரியாய் உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
    மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
    ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்”

    **

    ஆயர் பாடியில் உள்ள பசுக்கள் எல்லாம் கறப்பார் யாரும் இல்லாமையால் தானாகவே பால் பொழிவதால் ஏந்துவதற்கு இட்ட பாத்திரங்கள் பொங்கி வழிகின்றன. பிடிப்பதற்குப் பாத்திரங்கள் இல்லை என்ற குறை ஏற்படுமே அன்றி, பால் இல்லை என்ற குறை ஏற்படாது! இப்படிப் பால் சொரியும் பசுக்கள் நிறைவாய்ப் பெற்றவன் நந்தகோபன், அவன் மகனல்லவா நீ! கண்ணா எழுந்திருப்பாயாக!

    என்றும் அடியாரைக் காப்பதில் ஆர்வமுடையவனே, வேதங்களும் கூட எல்லை காண முடியாதபடி பெரியவனாக இருப்பவனே, இப்படிப் பெரியவனாக இருந்த போதும் உலகில் அனைவரும் காணும்படியாக அவதரித்த பரஞ்சுடரே, இப்போது எழுந்து எங்களுக்கு நீ அருள் புரியாவிடில் உனது பெருமை குன்றி விடாதோ?

    உன் எதிரிகள் உனது வலிமையால் பலமிழந்து கதியற்று உன் வாசலில் வந்து நிற்பது போல் நாங்கள் வந்திருக்கிறோம்! அவர்கள் உன் வீரத்திற்குத் தோற்று உன் திருவடி பணிந்தனர், நாங்கள் உங்கள் குணங்களுக்குத் தோற்று வந்தோம்!

    நீ எய்யும் அம்பானது உடனே கொன்று விடுகிறது, ஆனால் உனது அன்போஉன்னை விடவும் முடியாமல், அடையவும் முடியாமல் சித்திரவதைக்குள்ளாகுகிறது! அப்படிப் பட்ட உன்னை நாங்கள் புகழ்ந்து வந்தோம், நாங்கள் சொல்வதெல்லாம் செய்து விட்டோம், இனி உன் பொறுப்பு!

    **

    எல்லா அகங்காரங்களையும் விட்டு எம்பெருமானைத் தஞ்சம் அடைய வேண்டும் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப் படுகிறது.

    **

  2. Likes Russellhni, aanaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #82
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே
    முப்பது

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – இருபத்திரண்டு

    06.01.15

    *

    சிலேடை என்பது என்ன?

    இரு பொருட்கள், ஆனால் அவற்றுக்கு ஒரே குணம் எனச் சொல்வது சிலேடை!

    கண்ணை யதுமறைக்கும் கண்ணிலே நீரழைக்கும்
    தன்னை மறந்தே தரமில்லா வார்த்தையைத்
    தாபமாய்ப் பேசிவிடும் தன்னுணர்வைத் தூண்டிவிடும்
    பாபமாய்ச் சிந்தனையைப் பற்றி எரியவிடுங்
    கோபமும் காரமும் ஒன்று

    பாருங்கள். கோபத்துக்கும் காரத்துக்கும் ஒரே குணங்கள். மாயக்கண்ணனை எடுத்துக் கொண்டால் அவனது விஷயம் வேறு. அவனது ஒரு செயலில் இரு குண விசேஷங்கள் புலப்படும்.

    குட்டிக் கண்ணன் செய்த விஷமங்கள், விளையாட்டுக்கள் சொல்லி மாளாது. ஒரு நாள் பலராமனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது விளையாட்டாக வாயில் மண்ணைப் போட்டுக் கொண்டு விட்டான். பலராமன் யசோதையிடம், “அம்மா, கண்ணன் மண் சாப்பிட்டு விட்டான்” எனச் சொல்லிவிட, யசோதை அதிர்ந்தாள், “மண்ணைச் சாப்பிட்டாயாடா நீ?”, கண்ணன் பயந்தவன் போல “இல்லையம்மா”, “பொய் சொல்லாதே, வாயைத் திற” எனக் கண்ணனின் வாயைத் திறக்கச் சொன்னவள் இன்னும் திகைத்தாள்., அவன் வாயிலே அகில உலகத்தையும் கண்டு திகைத்தாள் யசோதை.

    பிரமனைக் கண்டாள் அண்ட கோளத்தின் பெருமை கண்டாள்
    இரவியைக் கண்டாள் வானின் இந்துவைக் கண்டாள்
    வரையினைக் கண்டாள் எழும கோததி தன்னைக் கண்டாள்
    கரியிரு நான்கும் கண்டாள் கனகமாங் கிரியைக் கண்டாள் (பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்)

    எண் திக்கு பாலகர்களைக் கண்டாள்; வானில் உள்ள நட்சத்திரங்களைக் கண்டாள். என்ன அதிசயம்! ஆயர்பாடியையும் அதில் கையில் கோலுடன் தன்னையும், குழந்தைக் கண்ணனையும் கண்டாள். திகைத்து, மயங்கி கண்ணை மூடிக் கொண்டாள் யசோதை. “ ஆதியாய் எல்லாவற்றையும் வயிற்றடக்கி உள்ள் இவனை என் மகன் என நினைப்பது என்ன பேதைமை!” என்று பீதியுற்றாள் ஆய்ச்சி.

    கண்ணன் அவையனைத்தையும் உடனே மாயையால் மறைத்து விட்டுத் தேம்பி அழ ஆரம்பித்தான், ‘சரி சரி அழாதே கண்ணா. உன்னை அடிக்க மாட்டேன் ‘ என்றாள் யசோதை.

    வாயில் மண் போட்டுக் கொண்டதுஒருசெயல். அதன் மூலம் தனதுகுழந்தைக் குணத்தையும், வாயில் ஈரேழு உலகங்களைக் காட்டியதன் மூலம் பரப்பிரும்மத்தின் குணத்தையும் காட்டினான் கண்ணன்!

    இன்றைய பாடலிலும் கண்ணனை எழுப்புகிறார்கள்.

    **

    அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
    பங்கமாயு வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
    சங்கமிடுப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
    கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப்பூப்போல
    செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
    திங்களும் ஆதித்தனும் எழுந்தாற்போல்
    அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியோ
    எங்கள் மேற்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

    *

    அழகிய விசாலமான பூமியில் உள்ள அரசர்கள் இந்த பூமிக்கு நாமே அதிபதி என நினைத்து அகங்காரம் கொண்டவர்களாய் இருப்பார்கள். பின்பு ராஜ்யம் முதலியவற்றை இழந்து அகங்காரம் அடியோடு அழிந்து எம்பெருமானின் பள்ளியறையில் படுக்கையின் கீழ் கூட்டமாக அவனைப் பணிவார்கள்.

    அது போல நாங்களும் உனதுதிருவடிகளை வந்தடைந்தோம்! கிண்கிணியைப் போல பாதி மலர்ந்தும், பாதி மூடியும் இருக்கும் தாமரை போன்ற திருக்கண்களால் நீ எங்களை க் கடாட்சிக்க வேண்டும். கண்ணா! அப்படி அருள் புரியும் போது உன் பார்வையானது சிறிது சிறிதாக எங்கள் மேல் விழ வேண்டும்!

    உனது அழகிய திருக்கண்கள் விரோதிகளுக்குச் சூரியன் போல வெப்பத்தையும், அடியவர்களுக்குச் சந்திரன் போல குளிர்ச்சியையும் தருவன. சூரியனும் சந்திரனும் ஒரே சமயத்தில் உதிப்பது போலே, எங்கள் அஞ்ஞானமான இருளை அகற்றி, எங்களுடைய விரக தாபத்தையும் போக்கும் உன் திருக்கண்களால் எங்களைக் கடாட்சித்து, நாங்கள் உன்னைப்பிரிந்து படும் துயரமெல்லாம் நீக்க வேண்டும் கண்ணா!

    **

    எம்பெருமானது திருக்கண் பார்வையானது நாம் செய்துள்ள பாவங்கள் அனைத்தையும் போக்கி விடும் என்பது இப்பாடலில் சொல்லப் படுகிறது.

    **

  5. Likes Russellhni, aanaa liked this post
  6. #83
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே

    முப்பத்தொன்று

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – இருபத்து மூன்று

    07.01.15

    **

    நடையில் பல விதங்கள் இருக்கிறதா என்ன?

    எழுத்தில் – கவிஞர்களுக்கு மென்மையான நடை. கதாசிரியர்களுக்கு உயிரோட்டமான நடை. உடலால் நடக்கும் நடையில் – படையில் இருக்கும் வீரர்களுக்கு ராஜ நடை, இளம்பெண்களுக்கு அன்ன நடை, முட்டாள்களுக்கு வாத்து நடை – அட இருக்கின்றதே!

    அதுவும் ஒரு குழந்தை முதன் முதல் தானாய் நடக்க ஆரம்பிக்கும் போது என்ன செய்யும்? மெல்ல சுவற்றை பிடித்து எழுந்திருக்கும். மெல்ல கைகளை விட்டு விட்டு “ததக்கா பிதக்கா” எனக் கொஞ்ச தூரம் நடந்து ‘தொப்’ எனக் கீழே விழும். அம்மா அல்லது யாரும் பார்த்தால் போச்சு. வாய் முகம் கோணி ‘யே’ என வீறிட்டு அழும்! யாரும் பார்க்கவில்லை எனில் மறுபடி மெல்ல எழுந்து, பின்னால் தானே தடவிக்கொண்டு மறுபடி ‘ததக்கா பிதக்கா’! அந்த நடை இருக்கிறதே, மகா அழகு.

    குறுகுறுத்தபடி பளிச்சிடும் கண்களிலே கனவு மின்னிட, சிவப்பும் வெண்மையும் சரியான கலவையில் கலந்த நிறத்தில் இதழ்கள் இருக்க, அவற்றின் மேல் தாமரை இலை நீர் போல மெலிதான ஈரம் படர்ந்திருக்க – மெல்லிய புன்சிரிப்பு – முகமெங்கும் படர்ந்திருக்க , அதனால் கன்னத்தில் விழுந்த சிறு குழியானது முகத்துக்கு மேலும் அழகூட்ட, அந்தப் பெண் சிற்றிடை ஒசித்து ஒசித்து – இனிமையான ஒலி எழுப்பும் அழகான வாத்தியம் எழுந்து நடக்கிறார்போல – நடக்கும் நடையின் அழகே அழகு’ என்பார்கள் ஒரு பெண்ணைப் பற்றிக் கல்லூரி மாணவர்கள்!

    ஆண்டாளோ சிறுமி, அவள் எப்படிக் காட்டுக்குள் சென்று சிங்கத்தைப் பார்த்திருக்க முடியும்? அவள் நினைக்கும் இடமெல்லாம் கண்ணன் நிறைந்திருக்கிறான். எங்கும் கண்ணன், எதிலும் கண்ணன். அப்படி இருக்கையில் அவள் எப்படிப் பார்த்திருக்க முடியும்? கண்ணனின் நடையைப் போலத்தான் சிங்க நடையும் இருக்கும் என நினைத்துக் கற்பனை செய்கிறாள் இன்றையபாடலில்.

    இன்றைய பாடலில் ஆண்டாளும் கோபியர்களும் கண்ணனுடைய நடையழகைக் காண வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். மேலும், அவன் படுக்கையிலிருந்து எழுந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்து அவர்களது குறைகளைக் கேட்டு அருள வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறார்கள்.

    **

    மாரி மழை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
    கோவில்நின் றிங்கணே போந்தருளிக் கோப்புடைய
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
    காரிய மாராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.

    **

    “மழைக்காலத்தில் பெய்த பெரு மழையினால் வழிகள் எல்லாம் சேறாகிப் பாதை சரியில்லாமல் இருப்பதால் வெளியில் எங்கும் செல்ல இயலாமல் ஒரு மலைக்குகையின் உள்ளே – இதுவும் ஒரு பாறையோ என்று எண்ணும்வண்ணம் உறங்கும் சிறிய சிங்கமானது, மழைக்காலம் முடிந்ததும், தானே விழித்தெழுந்து, தன் கண்களில் நெருப்புப் பொறி பறக்க விழித்து, சிங்கங்களுக்கே உரிய மணம் கொண்ட பிடரி மயிர்களைச் சிலும்பி, எல்லா ப் பக்கங்களிலும் அசைந்து, உறக்கத்தில் முடங்கிக் கிடந்த உறுப்புகளை உதறி, சோம்பல் தீர உடலை நிமிர்த்தி, பெரிய கர்ஜனை செய்து வருவது போல – கண்ணபிரானே நீயும் வரவேண்டும்.

    இயற்கையாய் இருக்கும் கம்பீரத்திற்கும் வீரத்திற்கும் தான் நாங்கள் சிங்கத்தை உனக்கு ஒப்பிடுவோம். அன்றி உன் வடிவழகைப் பார்க்கும்போது – பூவைப் பூ போன்ற – அப்போது தான் மலர்ந்த பூவைப் போல – காயாம்பூவைப் போல (காய்க்காத பூவைப் போல) – மென்மையும் குளிர்ச்சியும் உடையவனல்லவா நீ!

    நீ படுக்கையில் கிடந்த அழகை அனுபவித்தோம். இனி உன்னுடைய நடையழகை அனுபவிக்க வேண்டும், எனவே எழுந்து சிங்கம் போல் நடந்து இங்கே வருவாயாக., நீ கிடக்கும் அழகையும் நடக்கும் அழகையும் காட்டினால் மட்டும் போதாது. நீ ஆசனத்தில் வீற்றிருக்கும் அழகையும் காட்ட வேண்டும்! பெருமை பொருந்திய சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டும். அது மட்டுமல்ல. நாங்கள் வந்த காரியம் என்ன? என்பதைக் கருணையோடு ஆராய்ந்து அருள வேண்டும்.”

    **

    எம்பெருமானுடைய நடையழகைச் சேவிப்பதே கண்படைத்த பயன் என்கிறார்கள்.

    **

  7. Likes Russellhni, aanaa liked this post
  8. #84
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **
    **

    பாசுரம் பாடி வா தென்றலே

    முப்பத்திரண்டு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – இருபத்து நான்கு

    08.01.15

    **

    நண்பர் கோபால் கிருஷ்ணன் ஒரு குட்டிக் கவிதை எழுதியிருந்தார்.

    கவிதையின்
    வாமன அவதாரம்
    ஹைக்கூ

    இதேபோல கிருஷ்ணாவதாரத்தைப் பற்றியும் குட்டியாய் எழுதி பார்க்கலாமா? எப்படி எழுதலாம்?

    கிருஷ்ணாவதாரம்
    மஹாவிஷ்ணுவின்
    அவதாரங்களில்
    ”ஹைக்கூ”

    என்ன இது? கிருஷ்ணன் செய்த செயல்களெல்லாம் பெரிதாயிற்றே. அவனது விளையாட்டுக்கள், வேடிக்கைகள், உபதேசங்கள் எல்லாம் நிறைய உள்ளனவே. அப்படி இருக்கையில் கிருஷ்ணாவதாரத்தை எப்படி ஹைக்கூ எனச் சொல்லலாம்?

    இப்படி அர்த்தம் கொள்ளக் கூடாது! மஹாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களின் தாத்பர்யம் கிருஷ்ணாவதாரத்தில் அடங்கி உள்ளது என அர்த்தம்.

    “ஹை, சும்மா கதை விடக்கூடாது. மற்ற அவதாரங்களை விடுத்து ராமாவதாரத்தை எடுத்துக் கொண்டால் ராமனுக்கு ஏக பத்தினி. கிருஷ்ணனோ ஏகப் பட்ட கோபிகைகளுடன் இருந்ததாக வருகிறது. எப்படி? எனக் கேள்வி வரும்.

    இராமாவதாரம் ஆதர்ச புருஷாவதாரம். இராமர் தன் சக்தியை வெளியிடாமல் சாதாரண மனிதன் போலவே நடந்து கொள்கிறார். உலகிற்கு உதாரண புருஷனாக விளங்குகிறார். தாம் பரம்பொருள் என்ற நினைவு அவருக்கு எப்போதும் இல்லை. ஆனால் கிருஷ்ணாவதாரமோ, பூர்ணாவதாரம். தாம் பரம்பொருள் என்பதை அவ்வப்போது காட்டிக் கொண்டார். தமது சக்தியை உணர்த்தியும் பேசியும் புரிய வைக்கிறார்.

    “தங்கள் கணவன் மார்கள், மக்கள் ஆகியோரை மறந்து கண்ணனிடம் ஈடுபட்டிருந்தனர் கோபியர்” என பாகவதத்தில் வருகிறது. ‘அடடா, கண்ணன் இப்படியா ‘ என நினைக்கக் கூடாது.

    நெருப்பு அழுக்கை எரித்துத் தூய்மைப் படுத்துகிறது. ஆனால் அழுக்கின் சேர்க்கையால் தீ அழுக்குப் படுவதில்லை. பரம்பொருள் என்ற நிலையில் சகல ஜீவராசிகளையும் மயக்கி நின்றான் கண்ணன். தெய்வீக நாதனைப் பழித்து அவன் செய்த காரியங்களைப் பிறர் மனதாலும் கருதக் கூடாது. சகல உயிர்களிடத்தும் ஊடுருவி நிற்கும் சக்தியான பரம்பொருளுக்கு ஆண், பெண், கணவன்,மனைவி என்ற பாகுபாடு ஏது? செயல்களைப் பாதிக்கும் சுகதுக்கங்கள் கடவுளைப் பற்றுமோ?

    ( மனசாட்சி: ரொம்ப ஆழமா ஆன்மிகம் பேசறா மாதிரி இருக்கு?

    நான்: சில விஷயங்களை இப்படித் தாம்ப்பா சொல்ல முடியும்!)

    கண்ணனிடம் ஈடுபாடு கொண்டு கோபியர்கள் இருந்தார்கள் என்றால், கணவர்கள் ஏன் கோபங்கொள்ளவில்லை? கண்ணன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் அவன் மனைவி இருந்தாள், இந்தமாயை அடிக்கடி வற்புறுத்தப் படுகிறது. கண்ணன் விளையாடியது, விந்தை காட்டியது, வாதம் தொடுத்தது, வெண்ணெய் திருடியது, வழி மடக்கியது, கண்கலங்கச் செய்தது, குழல் ஊதி எழுப்பியது, ஜலக்ரீடை புரிந்தது, ஆடைகளைக் கவர்ந்து கொண்டது அனைத்தும் பெண்களிடத்தில் தான், உலகம் மாயை, ஆணும் பெண்ணும் மாயத்தோற்றங்கள். உண்மையில் உள்ளது ஒன்றே- அது அவன் தான்! அனைத்தையும் மறந்து அவனைச் சரணடைந்தால் காக்கும் பொறுப்பு அவனுடையது. அவன் எங்கும் இருப்பவனாகையால் எப்போதும் வந்து காப்பான்! இந்த உண்மையைத் தான் கிருஷ்ண லீலைகள் நிரூபிக்கின்றன.

    இன்றைய பாடலில் ஆயப் பெண்கள் விரும்பின படியே கண்ணன் சிங்காசனத்திலிருந்து நடையிடத் தொடங்கினான். அதைக்கண்ட ஆயப் பெண்கள் அவனது நடையழகில் தங்களை மறந்து அவனது திருவடிகளுக்கும் குணங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார்கள்.

    **

    “அன்றிவ் வுலகம் அளந்தா யடி போற்றி
    சென்றவருத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
    பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி
    கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
    குன்று குடையா எடுத்தாய்குணம் போற்றி
    வென்று பகை கொடுக்கும் நின்கையில் வேல் போற்றி
    என்றென்றும் சேவகமே யேந்திப் பறை கொள்வான்
    இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்..

    **

    மென்மையான – தொட்டாலே கன்றிச் சிவந்துவிடும் மெல்லடிகளைக் கொண்டு முன்னொரு காலத்தில் காடும் மேடுமான இந்த உலகத்தை அளந்தாயே. அத்திருவடிகளுக்கு எந்தக் குறையும் வராமல் இருக்கவேண்டும் என்று நாங்கள் பல்லாண்டு பாடுகிறோம்!

    கல்லும் முள்ளும் நிறைந்த காட்டில் பல நூறுகாதங்கள் சென்று குகையில் புலியைப் பார்ப்பது போல, இராவணனை அவனுடைய இருப்பிடமான இலங்கையிலேயே வென்ற உன்னுடைய திறமைக்குப் பல்லாண்டு!

    ஒரு வண்டியில் ஆவேசித்திருந்து உனக்குத் தீமை செய்ய முயன்ற சகடாசுரன் அழியும் படியாகத் திருவடிகள் உதைத்தவனே, தாயும் உதவிக்கு வராத அந்த நேரத்தில் உன்னைக் காத்துக் கொண்ட புகழுக்குப் பல்லாண்டு!

    உன்னைக் கொல்ல இரு அசுரர்கள் கன்றாகவும், விளாங்கனியாகவ்வும் நிற்க, கன்றை விளாங்கனி மீது எறிந்து இருவரையும் அழித்தவனே, அப்படி எறிந்த போது மடங்கி நின்ற உன் திருவடிகளுக்குப் பல்லாண்டு!

    தனக்கு விழா எடுக்காததால் கோபம்கொண்டு இந்திரன் கல்மழை பொழிந்த போது கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் பசுக்களையும் காத்தவனே, இப்படித் தீங்கு புரிந்த இந்திரனையும் மன்னித்து அருள் புரிந்த உன்னுடைய குணத்துக்குப் பல்லாண்டு!

    பகைவர்களை வென்று அழியச் செய்யும் உன் கையிலுள்ள வேலுக்கும் பல்லாண்டு! இவ்வாறு உன் வீரச் செயல்களையும் புகழ்ந்து பாடுவதையே பயனாகக் கொண்டு நாங்கள் வந்தோம், எங்களுக்கு நீ இறங்கி அருள் புரிய வேண்டும்!


    **

    உட்கருத்து:

    இப்பாடலில் பகவானது விரோதிகளைச் சொல்வது போல மனிதனுடைய விரோதிகளை ஆண்டாள் நமக்குச் சொல்கிறாள்:

    • மஹாபலி – அகங்காரம்
    • இராவணன் – காமம்
    • சகடன் – மோகம்
    • வத்ஸன் – லோபம்;
    • கபித்தன் (விளாமரம்) – ஆச்சர்யம்
    • இந்திரன் – குரோதம்


    இந்த ஆறு விரோதிகள் அழிந்தால் இறைவன் தென்படுகிறான்!

    **

  9. Likes Russellhni, aanaa liked this post
  10. #85
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே

    முப்பத்து மூன்று

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஐந்து

    09.01.15

    **

    திடீரென்று மனது குதூகலிக்கிறது. உணர்வுகள் பொங்கி எழுகின்றன. எதையாவது எழுதத் தோன்றுகிறது. பேனா எடுக்கிறோம்.. எழுதுகிறோம்..

    நேற்றுப் பார்த்து
    நேற்றுப் பார்த்து
    நேற்றுப் பார்த்ததை
    நினைத்துப் பார்க்கையில்
    நேற்றுப் பார்த்தது
    நிழற்கனவாகி
    நாளை வந்திட..,
    மறுபடி நேற்று!

    என்று எழுதி பத்திரிகைக்கு அனுப்புகிறோம். நவீன கவிதை என அது பிரசுரமாகி விடுகிறது! பத்திரிகையைத் தடவித் தடவிப் பார்க்கிறோம். நாம் எழுதியதை மறுபடி மறுபடி படித்துப் பார்க்கிறோம். நமக்கே அப்போது தான் ஏதோ புரிய ஆரம்பிக்கிறது! நம் மனது மகிழ்கிறது. உடனே மறுபடி

    மனம் மகிழ்ந்திட
    மனம் மகிழ்ந்திட
    கண்ட மகிழ்ச்சியில்
    மனம் மடிந்திட,
    அந்தரத்தில் நிற்பதென்னவோ
    உடல்!

    என்று இன்னொன்று எழுதிவிடுகிறோம்!

    மஹா விஷ்ணுவிற்கும் ஆசை வந்தது. தானே வேறு உருவில் இருப்பதைப் பார்ப்பதற்கு. என்ன செய்தார்?

    துவாரகாபுரியில் ஒரு அந்தணன் இருந்தான். அவனுக்கு எட்டுக் குழந்தைகள் இறந்தே பிறந்தன. ஒவ்வொரு முறையும் அரசவைக்குச் சென்று ‘அரசன் ஒழுங்காக ஆட்சி செய்தால் பிரஜைகளுக்கு இவ்விதம் நேரா” எனச் சொல்லி இறந்த குழந்தைகளை எரித்து வந்தான். ஒன்பதாம் முறையும் குழந்தை இறந்தே பிறக்கவே – அந்தணன் அரண்மனைக்குச் சென்று நிந்தித்தான். “என் குழந்தைகளைக் காப்பதற்கு யாரும் இல்லையா?” எனக் கதறினான்.

    கண்ணன் அப்போது துவாரகையில் இல்லை. அர்ச்சுனன் மட்டும் இருந்தான். அவன் அந்தணனிடம் “ நீர் கவலைப் படாதீர். உமதுஅடுத்த குழந்தைக்கு எதுவும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என வாக்குக் கொடுத்தான். பத்தாவது குழந்தையின் பிரசவத்தின் போது வில்லேந்தி, எமன் எப்படி வருகிறான் என்று பார்க்கும் வண்ணம் நின்றான் அர்ச்சுனன்.

    குழந்தை பிறந்தது; இறந்தது; மறைந்தது. அந்தணன் அழுகையுடன் கேலி செய்தான். “ முன்பாவது உடல் இருக்கும், இப்பொது அதுவும் இல்லை. நல்ல காவல்!” அர்ஜூனன் வெட்கப் பட்டு உயிரை விட யத்தனிக்கையில், கண்ணன் வந்தான்.

    ‘வா, நாம் போய் மீட்டு வருவோம்” என இருவரும் வாயு ரதத்தில் ஏறித் தேடினார்கள். சக்கிர வளாகிரி என்ற இடத்தில் ஒரே இருள். தனது திருவாழியால் இருளைக் கிழித்து ரதத்தைச் செலுத்த கடைசியில் கண்டது என்ன?

    ஒளிமயமாக விளங்கும் நகரில் பரப்பிரம்மரான நாராயணன் ஆதி சேடன் மீது பள்ளி கொண்டிருப்பதைப் பார்த்தனர். விஷ்ணு “ உங்கள் இருவரையும் காண வேண்டும் என்று இங்குள்ள முனிவர்களும் முக்தர்களும் விரும்பினர். அதானாலேயே அந்தணனின் குழந்தைகளை மறைத்தேன். அவர்கள் இங்கே உயிருடன் இருக்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்லலாம்” என்றார். கிருஷ்ணார்ச்சுனர்கள் அந்தணனிடம் குழந்தைகளைத் திருப்பிக் கொடுக்க அந்தணன் மகிழ்ந்தான்.

    தான் எடுத்த அவதாரத்தை, தானே பார்க்க வேண்டுமென விஷ்ணுவையும் ஆசைப்பட வைத்தது கிருஷ்ணாவதாரம்.

    இன்றைய திருப்பாவைப் பாடலில் கண்ணபிரானையே வேண்டி வந்ததாகக் கூறுகிறார்கள் கோபியர்கள்.

    **

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
    தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
    அருந்தித்து வந்தோம் பறை தருதியாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

    *

    கம்ஸனின் தங்கை தேவகி, அவளது வயிற்றிலேபிறந்தாய். அன்று இரவே வசுதேவர் உன்னை யசோதையிடம் சேர்ப்பிக்க, நீ யசோதையினிடத்தே கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து வளர்ந்தாய். அது பொறுக்காமல் பல தீங்குகள் இழைத்தான் கம்சன். அவை எல்லாவற்றையும் விளையாட்டாய் அப்புறப் படுத்தினாய். கம்சனின் வயிற்றிலேபயம் எனப்படும் நெருப்பை வளர்த்தவனே கண்ணா!

    நாங்கள் என்ன உன்னிடம் வேறொன்று கேட்கவா வந்தோம்? உன்னையே வேண்டி வந்தோம், எங்களுக்கு நீயே வேண்டும் என்றாலும் இப்படி நோன்பு நூற்கச் செய்ததற்காகப் பயனையும் வேண்டுகிறோம்!

    திருமகளும் ஆசைப்படும் செல்வத்தையும், உனது வீரத்தையும் நாங்கள் பாடிக்கொண்டு வந்தபடியால் உன்னைப்பிரிந்து நாங்கள் பட்ட துன்பமெல்லாம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தோம்.”
    **

    எம்பெருமானிடம் சென்று வேறுபயனேதும் விரும்பாமல் அவனையே விரும்புவது சாலச் சிறந்தது என இந்தப்பாடலில் கூறப் படுகிறது.

    **
    Last edited by chinnakkannan; 8th January 2015 at 09:56 PM.

  11. Likes Russellhni, aanaa liked this post
  12. #86
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **
    **

    பாசுரம் பாடி வா தென்றலே

    முப்பத்து நான்கு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஆறு

    10.01.15

    **
    இப்பொழுது வந்துகொண்டிருக்கும் பத்திரிக்கைகளில் பொதுவான ஒரு விஷயம் உண்டு. கேள்வி – பதில் பகுதி!

    ‘ஆட்டின் மூக்கையும், கழுதையின் மூக்கையும் ஒப்பிடுக!” எனக் கேட்டு சில பத்திரிகைகளுக்கு அனுப்பினால் என்ன ஆகும்?

    முதல்பத்திரிகையின் பதில் “ ஆட்டின் மூக்கு அது எந்த நிறத்தில் இருக்கிறதோ அந்த நிறத்தில் இருக்கும். கழுதையின் மூக்கு எப்போதும் வெள்ளை! ஆடு ‘ம்ம்மே’ என்று தும்மும், கழுதை “ஹெஹஹ்ஹீ” எனத் தும்மும்!

    இரண்டாவது பத்திரிகை : (கொஞ்சம் தீவிரமாய் ஆராய்ச்சியில் இறங்கி) ஆட்டுப்பால் நல்லது என்றுபாபர் காலத்திலேயே கிபி 16… (ஒரு அரைப்பக்கத்துக்கு விளக்கம்), கழுதையைப் பற்றி இதிகாசங்களிலேயே காணப்படுகிறது (மறுபடியும் அரைப்பக்க விளக்கம். – கண்டிப்பாய் பதிலின் எதிர்ப்பக்கத்தில் – குதிரையைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தைப் போட்டிருப்பார்கள்!)

    மூன்றாவது பத்திரிகை: நீங்கள் கேட்பது எங்களுக்குப் புரிகிறது! பொது ஜனத்தையும், அரசியல் வாதியையும் தானே ஒப்பிடச் சொல்கிறீர்கள்? இருவருமே ஒருவகையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான். பொது ஜனத்தின் மூக்கு – விலைவாசி ஒவ்வொரு முறையும் குறையும்குறையும் என எதிர்பார்த்து எதிர்பார்த்து உடையும். அரசியல் வாதியின் மூக்கு தோழமை, எதிர்க் கட்சிகளால் – சிலசமயம் தன் கட்சி ஆட்களாலேயே உடையும்!

    ஆக கேள்வி ஒன்று எழுந்தால் அதற்குப் பதில் கிடைக்கத்தான் செய்யும். சிலசமயங்களில் பல பதில்களும் கிடைக்கலாம். அதற்காக கேள்வி கேட்காமல் இருக்கக் கூடாது. சிலசமயம் வேண்டுகோள்களையே கேள்விகளாகக் கேட்கலாம்..

    இன்றைய திருப்பாவைப் பாடலில் தங்கள் நோன்பிற்கு வேண்டியவைகளைக் கோபியர்கள் வேண்டுகிறார்கள்.

    **

    ,மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
    மேலையர் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண்டி சைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்

    **

    அன்பே வடிவெடுத்தவனே. நீலமணி போன்றவனே, மார்கழி நீராட்டம் என்ற இந்த நோன்பினை நோற்பதற்காக நாங்கள் வந்தோம், முன்னோரின் வழிமுறையைப் பின்பற்றி நாங்கள் நோற்கும் இந்த நோன்பிற்கு வேண்டியவைகளைக் கேட்பாயாக.

    உலகமெல்லாம் அதிரும்படியாக முழங்கக் கூடிய பால் போன்ற, வெளுத்த உன்னுடைய பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள் வேண்டும், எங்களது வரவை அறிவிக்க பெரிய பறைகள் வேண்டும், சங்கங்களும் , பறைகளும் முழங்க நாங்கள் செல்லும் போது, ‘உங்களுக்கு மங்களமே உண்டாகட்டும்’ என மனதார வாழ்த்துச் சொல்பவர்கள் வேண்டும்.

    நாங்கள் ஒருவரைஒருவர் கண்டு மகிழ அழகிய விளக்குகள் வேண்டும், நாங்கள் வருவதை வெகுதூரத்தில் இருப்பவர்களும் அறிந்து கொள்வதற்காக, முன்னே பிடித்துச் செல்லத் தக்க கொடிகள் வேண்டும், எங்கள் மீது பனி விழாதிருக்க மேற்பந்தல் வேண்டும், பிரளய காலத்தில் உலகனைத்தையும் உண்டு ஆலிலையில் சயனித்திருந்த உனக்கு, இப்பொருள்களைத் தருவது அரிதோ!

    எனவே எல்லாவற்றையும் நீயே அருள வேண்டும்!

    **

    எம்பெருமானுடைய அருளினாலேயே நாம் அனைத்தும் பெற முடியும் என்று இப்பாடலில் கூறப் படுகிறது.

    **

  13. Likes Russellhni, aanaa liked this post
  14. #87
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **
    **

    பாசுரம் பாடி வா தென்றலே

    முப்பத்து ஐந்து

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஏழு

    11.01.15





    வைணவப் பெரியவர் ஒருவர் இருந்தார். மஹா விஷ்ணுவிடம் தீவிர பக்தி உடையவர். அவருக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான்.

    பெரியவர் இறைவனைத் துதித்து “பெருமாளே, நீ தான் காப்பாத்தணும்” என்று வாய்விட்டுச் சொல்லும் போதெல்லாம் இவன் போய் நிற்பானாம், “கூப்பிட்டீங்களா சாமி!” ஏனெனில் அவன் பெயர் பெருமாள்!

    “அடப்பாவி., நான் உன்னைக் கூப்பிடவில்லையடா! கடவுளைத் தான் கூப்பிட்டேன்” என்பார் பெரியவர்.

    இப்படியே சில காலம் சென்றது. பெரியவரால் ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியவில்லை. வேலைக்காரனைக் கூப்பிட்டார். “இந்த பார் பெருமாள். நான் ஒவ்வொரு தடவையும் கடவுளை ‘பெருமாளே’ன்னு கூப்பிடறச்சே நீ வந்து நிக்கறே, ஒண்ணு செய்யலாம். பேசாம நீ பேர் மாத்திண்டுடு”

    “சரிங்க சாமி. அப்படிப் பேர் மாத்தினா எனக்கு என்ன தருவீங்க?”

    “பத்து ரூபா தர்றேன்” என்றார் பெரியவர்.

    மறு நாள் “ சாமி, நீங்க சொன்ன படியே பேரை மாத்திட்டேன்”

    “என்ன பெயர்ப்பா”

    “ஹை. முதல்ல பரிசுகொடுங்க”

    “எதுப்பா?”

    “அதான் பத்து ரூபாய்!”

    “சரி சரி இந்தா, பத்து ரூபாய்! என்ன பேர் வெச்சுண்டிருக்க?”

    “பெரிய பெருமாள் சாமி” என்றானாம் வேலைக்காரன். ( பெரிய பெருமாள் என்பது அரங்க நாதனைக் குறிக்கும்)

    ஆக, பரிசு கொடுத்தாலும் சில காரியங்கள் ஒழுங்காய் நடப்பதில்லை.

    இந்தப் பாடலில் கோபியர்கள் நோன்பு நூற்பதற்குப் பரிசாகக் கேட்கிறார்கள். எதை?

    வையத்துள் வந்துவிட்டோம் வாழ்வினைக் கண்டுவிட்டோம்
    பையில் துயின்றது போதுமே நீயெழுந்து
    பொய்யான இவ்வுடம்பைப் போக்கியே மோட்சமெனும்
    நெய்யொழுகு வெண்பொங்கல் தா

    இன்றைய பாடலில் நோன்புப்பரிசை விரிவாகக் கேட்கிறார்கள்.

    *

    கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப்
    பாடிப்பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்
    நாடுபுகழும் பரிசினால் நன்றாகச்
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே யென்னனைய பல்கலனும் யாமணிவோம்
    ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
    மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

    *

    “ உன்னை அலட்சியம் செய்பவர்களையும் அருகில் தேடிச் சென்று அருள் பாலிப்பவன் நீ. அருகில் வந்து நின்றது நீ என்று தெரிந்தபின் உன் திருவடிகளைத் தொழுது” மன்னித்துவிடு” என்று அரற்றுபவர்களை மன்னித்து புன்முறுவல் செய்த வண்ணம் மறைந்து விடுவாயன்றோ!

    உன்னை நாங்கள் பாடிப் பாடி மகிழ்கிறோமே. இதுவே எங்களுக்குப்போதும். இருப்பினும், உன் கையால் ஏதும் பரிசு தர விரும்புகிறாயா? கொடு! அள்ளிக் கொடு! எங்கள் நோன்புக்குப் பரிசாக அதை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.!

    நாட்டில் உள்ளவர்கள் புகழ்வதற்கு அருகதையாக உள்ள ‘சூடகம்’ எனும் கைவளையைத் தருவாயாக. தோளில் அணிந்து கொள்ளும் வங்கியைத்தருவாயாக. அவற்றுடன் பார்க்கும் போது காதில் பூதான் முளைத்து விட்டதோ என எண்ணும் வண்ணம் பளிச்சிடும் தங்க மாட்டல்களைத் தருவாயாக. காலில் அணிந்து நடந்தால் கால்கள் பேசுவதோ என எண்ணும் படி இருக்கும் ‘பாடகம்’ என்ற ஆபரணத்தைக் கொடுப்பாயாக. இப்படிப் பலவகையான ஆபரணங்களை நீ கொடுத்தால் நாங்கள் பூட்டிக் கொள்வோம், புதிய பட்டுப் பீதாம்பரங்களை அணிந்து கொள்வோம், அதன் பின் முழுதும் ஊற்றி விடப்பட்ட நெய்யும், பாலும்கலந்து செய்த அன்னத்தை – கையில் எடுக்கும்போதே முழங்கை வரை வழிந்தோடி விழும் அளவுக்கு நெய் சேர்த்த பொங்கலை – எல்லோருமாகச் சேர்ந்து உன்னுடன் கூடி உண்டு மனம் குளிர்வோம். இதைவிட வேறென்ன வேண்டும்?

    *

    ‘கடவுளுடன் கூடியிருந்து கலந்திருப்பதை விட உன்னதமான் பதவி கிடையாது’ என்பது பொருள்!

    கூடியிருந்து குளிர்வது – மற்ற அடியவர்களுடன் சேர்ந்து எம்பெருமானை நினைந்து உருகி, அவனது அருட்குணமாகிய பிரசாதத்தை மனதினால் உண்டு அந்த மகிழ்ச்சியிலே திளைத்திருத்தல்.

    **

  15. Likes Russellhni, aanaa liked this post
  16. #88
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே

    முப்பத்து ஆறு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – இருபத்து எட்டு

    12.01.15

    மரியாதை என்பது என்ன?

    ஒருவன் தான் செய்த செயல்கள் மூலம் நான்கு பேருக்கு நல்லது செய்தானென்றால் அவனுக்கு அனைவரும் மரியாதை காட்டுவார்கள் – அது அவனது குணத்திற்கு. மேற்பதவியில் இருப்பவர்க்கு கீழே உள்ளவர்கள் மரியாதை காட்டுவார்கள் – அது அவர்களின் பதவிக்கு.

    சரி மரியாதையை எப்படிக் காட்ட வேண்டும்?

    குழந்தை தந்தையிடம், ‘அப்பா ,நீ எங்க போயிட்டு வந்தே?” என ஒருமையில் கேட்கிறது. குழந்தைக்கு மரியாதை தெரியவில்லை என அர்த்தமில்லை. அன்பின் மிகுதியால் ஒருமையில் அழைக்கிறது. வளர்ந்தவுடன் அதே குழந்தை மரியாதையாகத் தந்தையிடம், ‘ அப்பா, நீங்கள் எனக்காக என்ன செய்து கிழித்தீர்கள்?” என்று கேட்கும்!

    எனது சகோதரி நாய் ஒன்று வளர்த்தார்கள். அது அழகாய் வேளாவேளைக்கு தயிர்சாதம், தொட்டுக் கொள்ள எலுமிச்சங்காய் ஊறுகாய், இட்லி, தோசை எல்லாம் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடும். சகோதரி உணவருந்தும் போது வாயில் உமிழ் நீர் பெருக, அவர் சாப்பிடும் சாம்பார் சாதத்தையே பார்க்கும். சகோதரிக்குக் கோபம் வரும்., “ச்சீ, அந்தப் பக்கம் போ எருமை மாடே!” என்பார்கள். அது பரிதாபமாய் வைப்புத் தொகை இழந்த வேட்பாளர் போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒதுங்கிவிடும். அவர் உண்டு முடித்ததும் எதிரே பாவமாய்ப்போய் நிற்கும். சகோதரிக்குச் சிரிப்பு வரும், “என் கன்னுக்குட்டியைத் திட்டிட்டேனாடா?” என்று அதைக் கொஞ்சுவார். நாய் எருமை மாடானதும் கன்றுக்குட்டியானதும் அன்பின் மிகுதியால் தான்!

    *இருபது வருடங்களுக்கு முன்னால் பெயர் பெற்ற அம்மையார் ஒருவர் தலை நகரிலிருந்து மதுரை வந்திருந்தார்கள். சாலையில் இருபக்கமும் ஒரே கூட்டம். ஒருவரிடம் விசாரித்தேன், “யாருங்க வராங்க?” அவர், “உஷ், அந்த அம்மா வருது!” என்றார். இங்கு மரியாதை காரணமாக உயர் திணை அஃறிணையாகி விட்டது!

    இன்றையபாடலில் கோபியர்கள் கண்ணனை, தவறிப் போய் உன்னை ஏக வசனத்தில் அழைத்திருந்தாலும் கோபங்கொள்ளாதே – எனச் சொல்கிறார்கள்.

    *
    கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னை
    பிறவிப்பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
    குறையொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோடு
    உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினா லுன்றன்னை
    சிறுபே ரழைத்தனவும் சீறி அருளாதே
    இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்

    *

    கண்ணா, மனம் கவர்ந்தவனே, நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று காடுகளை அடைவோம், அங்கே அவற்றை மேய விடுவோம். பின் காட்டிலேயே நினைத்த இடத்தில் அமர்ந்து உணவு உண்போம். சிறிதும் புத்தி இல்லாத மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவர்கள் நாங்கள். நீ எங்கள் குலத்தில் பிறந்ததற்கு நாங்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்கிறோம்!

    எந்தவிதமான குறையும் இல்லாத கோவிந்தா, உன்னோடு எங்களுக்குச் சம்பந்தம இல்லாமற் போனால் எங்களால் இங்கு உயிர் தரித்திருக்க முடியாது. அறிவற்ற சிறிய பிள்ளைகள் நாங்கள். அன்பின் மிகுதியால் உன்னை ஏக வசனத்தில் அழைத்திருக்கிறோம். அதற்காக எங்கள் மீது கோபம் கொள்ளாதே கண்ணா, எங்களுக்கு வேண்டிய பறைகளை நீ தான் செய்ய வேண்டும்!

    **

    பகவத் அனுபவத்திற்கு 2 விஷயங்கள் இன்றியமையாதவை. கானம் சேர்தல் : இறையிடத்தில் அணுகுதல்; உண்பது – சிறந்தஞானத்தைப் பெறுதல். அவன் சரணாகத வத்ஸலன். குற்றத்தை மன்னிப்பவன். ஆகவே பாவத்தைப் போக்க அவனையே சரணடைய வேண்டும் என்பது உட்பொருள்.

    **
    **2002இல் எழுதியது

  17. Likes Russellhni, aanaa liked this post
  18. #89
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே

    முப்பத்து ஏழு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஒன்பது

    13.01.15
    கஷ்டம் என்பது என்ன?

    நீள் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பவர்களிடம் சென்று அவர்களிடம் ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்லிப் பாருங்கள். உடனே அழுவார்கள்! ஏனெனில், அவர்களுக்கு அழுவது சுலபம், சிரிப்பது கஷ்டம்.

    எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. இந்த ஆண்டாள் திருப்பாவையில் நிறையபாடல்கள் எழுதியிருக்கலாமே. அதைப் படித்து இன்புற்று இருக்கலாமே. இப்படி ,30 பாடல்களில் முடித்து விட்டாளே..

    கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த 30 பாடல்களிலும் எல்லாவற்றையும் அழகாக அடக்கியிருக்கிறாளே, சரி தான் என்ன ஒரு தெளிவு என்று தோன்றுகிறது!

    முன்னுரையில் அம்பாளைப் பார்க்கும் போது அவள் கட்டியிருக்கும் புடவையின் நிறத்தைப் பற்றித் தான் எழுத வருகிறது என எழுதியிருந்தேன். திருப்பாவைப் பாடல்களைப் படித்த பின்னர்,

    ‘ நெருப்பில்
    விரல் பட்டால்
    சுட்டு
    வலியினால்
    கண்ணில் நீர் வரும்..
    அம்பாளின் தேஜஸால்
    மனம் பிரகாசமாக
    விழியில்
    நீர் வருவது ஏன்?’

    என எழுத வருகிறது. கொஞ்சமாவது பக்குவ நிலையைச் சுற்றிச் செல்கிறதா என்ன?

    இதுவரை படித்த பாடல்களில்: ஆண்டாள் தன்னையும், தன் தோழிகளையும் ஆயச் சிறுமிகளாகக் கருதி , அவர்களை எழுப்பி நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் இவர்களையும் எழுப்பி நோன்பு நூற்று, கண்ணனை அல்லது மோட்சத்தைக் (இரண்டும் ஒன்று தானே!) கேட்கிறாள் என்று எண்ணியிருந்தேன். முந்தைய தினம் அதைப்பற்றி ஒரு பாடல் இட்டிருந்தேன்.

    இன்றைய பாடல் வேறு விதமாக இருக்கிறது. அவளுக்கு மோட்சமெல்லாம் வேண்டாமாம். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் கண்ணனுக்கே கைங்கர்யம் செய்ய வேண்டுமாம்!

    அடடா, என்ன ஒரு மனது! அதுவும் ஒரு சிறுமிக்கு. எவ்வளவு பக்குவம் அடைந்திருந்தால் இப்படி ‘என்றென்றும் உன்னைத் தொழுது உனது அடியவர்களாக இருக்கும் வரம் வேண்டும்’ எனக் கேட்க முடியும்.

    நாம் என்ன செய்கிறோம். அன்றாட அலுவல்களில் சில நிமிடங்கள் மட்டும் இறையைத்துதிக்கிறோம். கடுஞ்சொற்களைப் பலரிடம் பேசுகிறோம். ஆண்டாளை நினைத்து, நம்மையும் நினைத்துக் கொண்டால் கண்ணில் நீர் வருகிறது…

    **

    சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
    பெற்றம் மேய்த்துண்ணும்குலத்தில் பிறந்து நீ
    குற்றேவல் எங்களைக் கொல்லாமற் போகாது
    இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
    உற்றாமே யாவோம் உமக்கே நாமாட்செய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

    **

    கண்ணா,பரம்பொருளே, விடியற்காலையிலேயே எழுந்து குள்ளக் குளிர நீராடி, நோன்பு நூற்று உனது தாமரைத் திருவடியை வந்து வணங்குகின்றோம். எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறாயா?

    கறவைப் பசுக்களை மேய்த்து, பால் விற்பதால் வரும் செல்வத்தால் உணவுண்ணும் ஆயர் குலத்தில் பிறந்து நீ என்னென்ன லீலைகள் செய்தாய்! எவ்வளவு பெரியவன் நீ! எனில் எங்களுக்கு எளியவனாகவே காட்சி தந்து, எளிமையுடன் எங்களுடன் பழகி உறவாடினாயே கண்ணா, நீ எங்களை உன் கைங்கர்யத்துக்கு ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடாது!

    இந்த நோன்பிற்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்கிறாயா கோவிந்தா? என்றென்றும், இந்த ஜென்மம் மட்டுமல்ல, ஏழேழு ஜென்மங்களுக்கும் நாங்கள் உனக்கே உறவாய் இருக்க வேண்டும். உனக்கே – உன்னை நினைந்தே நாங்கள் நோன்பு நூற்று உனக்கான கைங்கர்யங்கள் நாங்கள் செய்ய வேண்டும். அதற்கு அருள் புரி. மற்ற எண்ணங்கள் எங்களுள் எழுந்து எங்களை மாற்றி விடாமல் உன்னைப்பற்றியே நினைக்குமாறு வைத்திரு!

    “மற்றை நம் காமங்கள்” என்பதுஇந்திரியங்களால் தூண்டப் படும் ஆசைகள்..அவற்றை அறுக்க அவனே ஒரு வழி சொல்வான். அவை அறுந்தபின் தென்படுவதும் அவனே ஆவான்!

    **

  19. Thanks aanaa thanked for this post
    Likes Russellhni, aanaa liked this post
  20. #90
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    **


    நீள் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பவர்களிடம் சென்று அவர்களிடம் ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்லிப் பாருங்கள். உடனே அழுவார்கள்! ஏனெனில், அவர்களுக்கு அழுவது சுலபம், சிரிப்பது கஷ்டம்.

    **

    Quote Originally Posted by chinnakkannan View Post
    **

    இந்த ஜென்மம் மட்டுமல்ல, ஏழேழு ஜென்மங்களுக்கும் நாங்கள் உனக்கே உறவாய் இருக்க வேண்டும். உனக்கே உன்னை நினைந்தே நாங்கள் நோன்பு நூற்று உனக்கான கைங்கர்யங்கள் நாங்கள் செய்ய வேண்டும். அதற்கு அருள் புரி. மற்ற எண்ணங்கள் எங்களுள் எழுந்து எங்களை மாற்றி விடாமல் உன்னைப்பற்றியே நினைக்குமாறு வைத்திரு!


    **
    "அன்பே சிவம்.

  21. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
Page 9 of 10 FirstFirst ... 78910 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •