Page 7 of 10 FirstFirst ... 56789 ... LastLast
Results 61 to 70 of 92

Thread: பாசுரம் பாடி வா தென்றலே!

  1. #61
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //இது போன்ற சூழலை நம்மாழ்வார் திரு தொலைவில்லி மங்கலம் பாசுரத்தில் வெளிப்படுத்தி உள்ளார் . 10 பாசுரங்கள் கொண்டது.அதில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது.எல்லோருமே நம்மை ஆள்பவர்கள் தான் அதனால் தான் அவர்கள் ஆழ்வார்கள் என்று அழைகபட்டார்கள். இறைவனை ஆழமாக பற்றி கொண்டவர்கள்

    "இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?" என்று விளக்கம் படித்து உவகை அடைந்தது நினைவிற்கு வருகிறது சி கே// மிக்க நன்றி கிருஷ்ணாஜி.. நம்மாழ்வார் மட்டுமல்ல எல்லாப் பாசுரங்களையும் படித்து எழுத வேண்டும் என ஆசை..நாராயணன் தான் கிருபை செய்யவேண்டும்.. திருப்பாவை முடித்து நாச்சியார் திருமொழியைக் கையிலெடுக்காலாம் என நினைத்திருக்கிறேன்..திருமால் விட்ட வழி

    இப்போது நான்குபாசுரங்கள் இடப் போகிறேன்.. நாளையிலிருந்து சரியாக வரும் என நினைக்கிறேன்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடி வா தென்றலே…

    பத்தொன்பது

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – பதினொன்று

    *

    பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் – இம் மூன்றையும் பொறுத்து அழகு அமைந்திருக்கின்றது என்கிறது கீதை! அதுவும், சிறு குழந்தை, பிறந்த கன்றுக்குட்டி, குஞ்சுப்பறவைகள், குட்டி யானை போன்றவற்றைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் அழகுணர்ச்சியும் உற்சாகமும் பீறிடுகிறதே! காரணம், அவற்றின் இளமை. பருவமடைந்த பெண்களின் கண்களில் நாணமும், மடமையும் கலந்து ஒருவித அழகு தென்படும். காரணம், இளமை என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

    இன்றைய பாடலில் ஆயர் பாடியில் உள்ள பசுக்களெல்லாம் பெரியதாய் ஆனாலும், கண்ணன் கைப்பட்ட காரணத்தால் என்றும் மாறாத இளமையுடன் கன்று போலக் காட்சியளித்தன” என்று ஆண்டாள் கூறுகிறாள். இந்தப்பாடலில் ஊருக்கெல்லாம் செல்லப் பிள்ளையாகக் கண்ணன் இருப்பது போல ஊருக்கெல்லாம் செல்லப் பெண்ணாக இருக்கும் தோழி ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

    *

    கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
    செற்றார் திறவழியச் சென்று செருச்செய்யும்
    குற்றமொன்றிலாத கோவலர் தம் பொற்கொடியே
    புற்றர வல்குல் புனைமயிலே போதராய்
    சுற்றத் தோழிமா ரெல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில்வண்ணன பேர்பாடச்
    சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
    எற்றுக் குரங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

    *

    கண்ணனின் கைபடும் பாக்கியம் பெற்றதாலேயே, கறவைப் பசு என்ற நிலையை அடைந்தும் கன்றினைப் போலத் தோன்றந்தரும் திருவாய்ப்பாடியிலுள்ள பசுக்கள்!

    அப்படிப் பட்ட பசுக்களின் கூட்டங்களில் பால் கறப்பவர்கள் ஆயர்கள், அது மட்டுமா, கண்ணனுக்குத் தீங்கு விளைவிக்கும் எதிரிகளின் வலிமையை அழிக்கும் வண்ணம் சென்று போரிடுபவர்கள். அவர்கள் போரில் புற முதுகிட மாட்டார்கள். அப்படிப்பட்ட ஆயர் குலத்திற்கு அணியாக விளங்கும் பொற்கொடி போன்றவளே,

    புற்றிலே இருக்கும் பாம்பு போன்ற சிறிய இடையை உடையவளே, உன் நடையழகை நாங்கள் பார்த்து மகிழ வேண்டும். உனது தோழிகளாகிய நாங்கள் எல்லோரும் உன் முற்றத்தில் வந்து நின்று கருமை நிறக் கண்ணனைப் புகழ்ந்து அவன் திரு நாமங்களைப் பாடும் போதும் பேசாமல் அசையாமல் நீ கிடக்கலாகுமா? கண்ணன் ஊருக்கே செல்லப் பிள்ளையாக இருப்பவன். அவனைப் போல நீ ஊருக்கே செல்லமல்லவா! இப்படி நாங்கள் கூறும் போதும் நீ எதற்காக உறங்குகிறாய்? எழுந்திரு! “

    **

  4. #63
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே…

    இருபது

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – பன்னிரண்டு

    *

    ஒருவனைச் செல்வந்தன் என்று எப்போது சொல்வோம்?

    அவனது வீடு, வாசல், தோட்டம், வங்கிக் கணக்கு அவன் வைத்திருக்கும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு, ரகசிய அறைகளில் வைத்திருக்கும் எண்ணற்ற நகைகள் முதலியவற்றை வைத்தும் சொல்லலாம்.

    அல்லது இப்படியும் சொல்லலாம். “ அவனுக்கென்ன, பெரும் பணக்காரனாயிற்றே. அதை அவனது வீட்டு வேலைக்காரியைப் பார்த்தாலே போதுமே! அவள் பட்டுப் புடவை சரசரக்க, செண்பக மலரொத்த அவள் மூக்கு வைர மூக்குத்தியால் பிரகாசமாக, காதுகளில் வைரத் தோடுமின்ன, தங்க வளையல்கள் கலகலக்க, அவள் வீட்டைச் சுத்தம் செய்வது அழகோ அழகு! இவளே இப்படி என்றால் இவளை வேலைக்கு வைத்திருப்பவன் எத்துணை செல்வம் வைத்திருப்பான்!

    இந்தப் பாடலில் இராமபிரானுக்கு இலக்குவனைப் போல கண்ணனுக்கு இடையறாது தொண்டு செய்யும் மிகப் பெரிய செல்வத்தைப் பெற்ற பெரும் பணக்காரன் ஒருவனுடைய தங்கையை எழுப்புகிறார்கள்.

    உள்ளே உறங்கும் தோழி எப்படிப் பட்டவள்? அவள் ராம பக்தையாம், அதாவது கண்ணனில் ராமனைக் காண்பவளாம், அவளது ஒரு சிந்தனை கண்ணன் தனக்கே உரியவனாக இருக்க வேண்டும் என்று ஓடினாலும் மறு சிந்தனை, கண்ணனை மற்றவர்களுடன் சேர்ந்து தான் அனுபவிக்க வேண்டும் என்று ஓடுகிறதாம்.

    **

    கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
    நினைத்து முலை வழியே நின்று பால் சோர
    நனைத்தில்லம் சேறாக்கும் நற்செலன் தங்காய்
    பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றி
    சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
    அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோரெம்பாவாய்..

    **

    சகியே, உனது அண்ணன், கண்ணனை விட்டு ஒரு போதும் பிரியாமல் அவனுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாய் வைத்திருக்கிறான். அதனாலேயே அவனுக்கு வீட்டில் இருக்கும் பசுக்களைக் கறக்க நேரமில்லை. வீட்டில் இருக்கும் பசுக்கெளெல்லாம் தங்கள் மடி கனத்துத் தங்கி, தங்கள் இளங்கன்றுகளை நினைத்துப் பால் சொரிகின்றன.

    அப்படி முற்றத்தில் பால் சொரிவதால், அந்த முற்றம் முழுக்க பால் சேறாகி விடுகிறது. இப்படிப் பாலைக் கறக்க நேரமில்லாமல் கண்ணனுக்குத் தொண்டு செய்வதாகிய பெரும் செல்வத்தைப் பெற்றவனுடைய தங்கையே, நாங்கள் உன் வாசலில் மார்கழிப் பனி தலையில் விழ, கோபம் மிகக் கொண்டு இலங்கையின் கோமானான ராவணனை அழித்த ஸ்ரீராமனை, உன் மனத்துக்கினியவனைப் பற்றிப் பாடியவண்ணம் காத்துக் கொண்டிருக்கிறோம். நீ இப்படி வாய் திறவாமல் இருக்கலாமா?

    இனியாவது எழுந்திரு., எங்களுக்காக எழாவிட்டாலும் உனக்காக எழ வேண்டாமா? எல்லோரும் பகவானை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உனது விருப்பப்படியே அனைவரும் அறிந்து கொண்டனர்.

    எனவே எழுந்திருப்பாயாக!

    *

    ஸ்ரீ ராமானுஜர், தான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை. எல்லோரும் திரு மந்திரத்தை அறிந்து மோட்சம் பெற வேண்டும் என்றபரந்த திருவுள்ளத்துடன் குருவின் ஆணையை மீறி திருமந்திரத்தை வெளியிட்டார்! அவரைப் போன்றே எல்லோரும் பகவானை அறிந்து கொள்ள வேண்டும் என்ற பரந்த மனத்தை உடையவள் உள்ளே படுத்துக் கொண்டிருக்கும் கோபிகை என்பர்.

    **

  5. #64
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே…

    இருபத்தொன்று

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – பதின் மூன்று

    *

    கடின உழைப்பு மட்டுமே இருந்தால் போதுமா? காரியங்கள் கை கூடி வெற்றிக் கனி பறிக்கும் வரை பொறுமையும் வேண்டும்! எப்படிப் பட்ட பொறுமை?

    பொறுமையில் கொக்கினைக் கொண்டு இருக்க வேண்டும்.

    கண்விழித்துத் தூங்கியே காத்து நிற்கும் ; வாயினில்
    மண்வைத் தடைத்தாற்போல் மூடிநிற்கும் – நன்றாய்
    மனதை அடக்கியே மீனுக்காய் ஏங்கும்
    குணத்தை உடையது கொக்கு.

    இன்றைய திருப்பாவை பாடலில். ‘ அப்படிப்பட்ட பொறுமையுடைய கொக்கின் வடிவம் தாங்கி வந்த பகாசுரன் என்ற அரக்கனை மேல் அலகையும், கீழ் அலகையும் பற்றி விளையாட்டாக க் கிள்ளி எறிந்து கொன்ற கண்ணனைப் பற்றிப் பாடலாம் வா” என தோழியை கோபியர்கள் அழைக்கிறார்கள்! ‘திங்கள்’ என்பதும் “வியாழன்” என்பதும் சந்திரனைக் குறிக்கும். “வெள்ளி”யும் “ஞாயிறு”ம் சூரியனைக் குறிக்கும். ஏன் ”சனி” “புதன்” “செவ்வாய்” போன்றவற்றை விட்டார்கள் எனத் தெரியவில்லை!

    **

    புள்ளின் வாய் தீண்டானை பொல்லா அரக்கனைக்
    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
    பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம் புக்கான்
    வெள்ளியெழுந்து வியாழன் உறங்கிற்றுப்
    புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
    பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாள்
    கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

    *

    கொக்கைப் போல் உருவம் தரித்த பகாசுரனை விளையாட்டாகக் கொன்றவன் கண்ணன். பொல்லாத அரக்கனான ராவணனை நிர்மூலம் செய்தவன் ஸ்ரீராமன். இவர்கள் இருவர் புகழையும் பாடிக்கொண்டு ஆயர் பெண்கள் அனைவரும் பாவை நோன்பு நூற்கும் இடத்திற்குச் சென்று விட்டனர். சுக்கிரன் உதித்து சந்திரன் அஸ்தமித்து விட்டது, ஐந்தறிவு படைத்த பறவைகளும் கண் விழித்து எழுந்து இனிய ஒலியை எழுப்புகின்றன. நீ இன்னும் உறங்கிக் கிடக்கலாமா?

    மலரில் உறங்கும் வண்டுகளைப் போன்ற கருவிழிப் பாவைஉடைய பாவையே! நீ வாதம் செய்யலாகுமா? உன் கண்ணழகைக் கொண்டுகண்ணனை வசப்படுத்தி எங்களுக்குத் தரவேண்டாமா!

    விடியற்காலையில் ஆற்று நீர் குளிர்ந்திருக்கும். அப்பொழுதே நாம் நீராடி விட வேண்டும்.. சூரியன் உதித்து உச்சிக்கு வந்தால் நீர் கொதித்துவிடும். எனில், குளிரும் போதே நீராடாமல் நீ உறங்கிக் கிடக்கலாமா.

    நம்மையும் கண்ணனையும் நேற்றுவரை பிரித்து வைத்திருந்த பெரியவர்கள் நாம் நோன்பு நூற்க சம்மதித்திருக்கும் நல்ல நாள் அல்லவா இது! இந்த சில நாட்கள் கழிந்து விட்டால் நமக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமோ?

    படுக்கையில் சயனித்தவாறே மனதிற்குள் கண்ணனுடைய குணங்களை அனுபவித்துக் கொண்டு இருப்பவளே! அந்தக் கள்ளத்தைத் தவிர்த்து எங்களோடு கலந்து அனுபவிப்பாயாக!

    **

  6. #65
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே…

    இருபத்திரண்டு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – பதினான்கு

    *

    மனித மனத்தைக் குரங்கு என்கிறோம். எதனால்?

    எண்ணங்கள் ஒரு நிலையில் இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பதால்.

    காலையில் எழுந்தால் அலுவலகக் கவலை. மாலையில் வீடு,மனைவி, குழந்தை, விலைவாசி, நீள் தொலைக்காட்சித்தொடர் எனப் பலவித கவலைகள் சூழ்ந்து கொள்கின்றன. இறைவனைக் கண்மூடி அரைவினாடி துதிக்கும் போதும் எண்ணங்கள் பலவிதமாய் மாறுகின்றன. சிலசமயம் கவலைகள் கட்டுக்கடங்காமல் போனால் மனச் சோர்வு ஏற்படுகிறது! மனது குமைய ஆரம்பிக்கிறது.

    சரி மனம் சோர்வடையும் போது என்ன செய்ய வேண்டும்?

    மேல் நாடுகளில் மனச்சோர்வுக்குச் சிறந்தமருந்து சாக்லேட் என்று சொல்வார்கள். நாம் என்ன செய்யலாம்? பச்சைப் பசேலென்ற செடிகள், புதிதாகப் பூத்த மலர்களைத் தோட்டத்தில் ரசிக்கலாம். தோட்டம் இல்லை எனில், அழகிய பூக்களின் படங்களையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம்.

    பூக்களுக்கெல்லாம் மனச்சோர்வா ஏற்படுகிறது? அவை பாட்டுக்குக் காலையிலும் மாலையிலும் மலர்ந்து கொண்டிருக்கின்றன! காலையில் தாமரை, மாலையில் அல்லி மலரும்!

    கல்கி தனது பொன்னியின் செல்வனில்,

    சோர்வு கொள்ளாதே மனமே – உன்
    ஆர்வமெல்லாம் ஒரு நாள் பூரணமாகும்
    காரிருள் சூழ்ந்த நீளிரவின் பின்னர்
    காலை மலர்தலும் கண்டனை அன்றோ
    தாரணி உயிர்க்கும் தாமரை சிலிர்க்கும்
    அளிக்குலும் களிக்கும் அருணனும் உதிப்பான்” என
    ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

    இன்றைய திருப்பாவைப் பாடலில் பொழுது விடிந்ததற்கு அடையாளமாகப் பூக்களெல்லாம் மலர்ந்து விட்டன எனச் சொல்லிப் படுத்திருக்கும் தோழியை எழுப்புகிறார்கள் தோழியர்கள்.

    உறங்குகின்ற தோழி எப்படிப் பட்டவள்?

    எல்லாரையும் எழுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு இன்னும் உறங்கிக் கொண்டிருப்பவள்!

    *

    “உங்கள் புழக்கடைத்தோட்டத்து வாவியில்
    செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
    செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.

    *

    “ அம்மா, உன் வீட்டுப் புழக்கடைத் தோட்டத்தில் செங்கழு நீர்ப்பூ மலர்ந்தும், அல்லிப்பூக்கள் குவிந்தும் உள்ளனவே, இது பொழுது விடிந்ததற்கான அடையாளம் அல்லவா?

    அறிவற்ற பூக்களும் குறித்த காலத்தில் தத்தம்கடமையைச் செய்கின்றன. அறிவுள்ள நீ இன்னும் எழாமல் இருக்கலாமா?

    பகவானிடம்பக்தி கொண்ட முனிவர்கள் விடியலில் எழுந்து தாம் நீராடி உடைகளையும் நனைத்துத் துவைத்து உலர்த்தி, பின் அவனைத் தொழப் புறப்படுவார்கள்! அப்படி அவர்கள் துவைத்ததால் அந்த உடைகள் நீரினால் ஏற்பட்ட வெளிர் சிவப்பு நிறம் கொண்டிருக்கும்.. அப்படி நீர்க்காவி ஏறிய உடையை அணிந்த, வெண்மையான சுத்தம் செய்த பற்களை உடையமுனிவர்கள் கையில் கிரிதண்ட்டம் ஏந்திக் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

    “ நானே உங்களை முன்னால் வந்து எழுப்புகிறேன்” என வாய் கிழியப் பேசிவிட்டு இப்போது தூங்கிக் கொண்டிருப்பவளே, எழுந்திரு! இப்படி எழுந்திருக்காமல் கிடக்கிறாயே, இவர்கள் இப்படி அழைத்தும் எழாமல் இருக்கின்றோமே என்ற வெட்கமும் உனக்கு இல்லை!

    ஆயினும் உன்னுடைய நாவன்மை எங்களை உன்னிடம் இழுக்கின்றது.
    அந்த நாவன்மையைக் கொண்டு எம்பெருமானையன்றோ பாட வேண்டும். சங்கு சக்கரங்களை ஏந்தியவனும் தாமரைக் கண்ணனுமாகிய கண்ண பிரானுடைய திரு நாமங்களைப் பாடி நாப் படைத்த பயன் பெற வேண்டுமல்லவா? எழுந்திருப்பாயாக!”

    **

  7. #66
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    பாசுரம் பாடி வா தென்றலே…

    இருபத்து மூன்று

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – பதினைந்து

    30.12.14

    *

    நாக்கு எலும்பில்லாதது. சிலசமயம் ஒருவரை ‘ஓஹோ’ என்று புகழும். அதே நபரைப் படுகுழியில் தள்ளி இகழவும் செய்யும். சிலசமயம் நாம் ஒன்று நினைத்து சில வார்த்தைகள் பேசுவோம். அதுவே மற்றவருக்கு வேறு விதமாய்ப் புரியக் கூடும்

    சிலப்பதிகாரத்தில் தன் மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு , சொல்லும் போது வேறு விதமாய்க் கூறி விடுகிறான் பாண்டிய மன்னன். அதனால் விளைந்தது விபரீதம்.

    சினையவர் வேம்பன் தேரானாகி
    ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கு என்
    தாழ் பூங் கோதை தன்கால் சிலம்பு
    கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென..

    தாழ்ந்த மலர் மாலையுடைய அரசமாதேவியின் சிலம்பு ‘இவன் கூறிய கள்வன் கோவலன் கையில் இருக்குமானால், அவனைக் கொல்வதற்கு அச்சிலம்புடன் இங்கு கொண்டு வருக” எனக் கூற எண்ணியவன் அவ்வாறு கூறாமல் “அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணர்க” எனக் கட்டளையிட்டான் பாண்டியன்.

    இன்றைய திருப்பாவைப் பாடல் கோபியர்கள் ஒன்று சொல்லி தோழியை எழுப்ப, தோழி வேறு விதமாய்ப் புரிந்து கொண்டு வாதிடுவது போல் அமைந்திருக்கிறது. வீட்டிற்கு வெளியே இருக்கும் கோபியர்களுக்கும், உள்ளே இருக்கும் தோழிக்கும் நடக்கின்ற உரையாடல் இப்பாடல்.

    **

    ”எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ!
    சில்லென் றழையேன்மீர் நங்கைமீர் போதாகின்றேன்!
    வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயும் வாயறிதும்
    வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
    ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
    எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
    வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை மாயனைப் பாடலே ரெம்பாவாய்!

    *

    கோபியர்கள்:

    அடி பெண்ணே, இளமையான கிளியின் குரல் கொண்டவளே, இன்னுமா உறங்குகிறாய்?

    தோழி :

    (கோபம் கொண்டு) நீங்கள் பனியில் நனைந்து நோன்பு நூற்றுக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் உள்ளே உறங்கிக் கொண்டிருப்பதை இவ்வாறு “சோம்பல் மிக்க கிளி” எனச் சொல்லிக் குத்திக் காட்டலாமா, இப்படியெல்லாம் கடுஞ்சொற்கள் கூறாதீர்கள். இதோ வந்து விட்டேன்!

    கோபியர்கள்:

    அது சரி நாங்களா கடுஞ்சொற்கள் பேசுகிறோம்? நாங்கள் சொன்னதையெல்லாம் வேறு விதமாக மாற்றிப்பேசுகிற நீதான் வல்லவள். அதை நாங்களும் அறிவோம். நீ பெரிய வாய்த் துடுக்குள்ளவள்.

    தோழி

    சரி நானாகவே இருக்கட்டும், இப்போது என்ன செய்ய வேண்டும்.

    கோபியர்:

    ஒன்றுமில்லை. நீ உடனடியாக எழுந்து வா. அது தான் வேண்டும்!

    தோழி:

    நல்லது.. எல்லாரும் வந்து விட்டார்களா?

    கோபியர்:

    உன்னைத் தவிர எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து அவர்களை உன் விரலால் தொட்டு எண்ணிக் கொள். கம்ஸனால் ஏவப்பட்ட வலியானையைக் கொன்றவனும் விரோதிகளை பூண்டோடு அழிக்க வல்லவனும், ஆச்சர்யமானவனுமான கண்ணனைப் பாடுவோம் வா!

    **

  8. #67
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **


    பாசுரம் பாடி வா தென்றலே…

    இருபத்து நான்கு

    பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
    *
    திருப்பாவைப் பாசுரம் – பதினாறு

    31.12.14

    *

    ஒரு நல்ல காவல் காரனின் வேலை என்ன?

    தினமும் எந் நேரமும் விழிப்புடன் இருந்து அன்னியர்கள் நடமாட்டம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். யாராவது தீய எண்ணத்துடன் வீட்டினுள் புக முயற்சித்தால் தடுக்க வேண்டும். இந்தச் சமயத்தில் உயிரைத் திருணமாக மதித்து வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் காக்க வேண்டும்.

    சில பணக்கார வீடுகளில் வாசலுக்கு அருகில் வாயிற்காப்பவர்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.; நேர்மையாகச் சொல்லப் போனால் நம்மை, நமது உடமைகளைக் காக்கும் இந்தக் காவல்காரர்களுக்கு ஒரு மேலாளருக்குக் கொடுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். இதையே என் வீட்டுக் காவல்காரனிடம் ஒரு நாள் சொன்னேன். அவன் “ நிஜமாலுமே பெரிய மனுஷன் துரே நீ. அடுத்த தேர்தலில் நீ நின்றால் என் வாக்கு உனக்குத் தான்” என்றான்.

    இன்றைய பாடலில் ஆண்டாள் தன் தோழியரான கோபிகைகளை அழைத்துக் கொண்டு நந்தகோபனின் அரண்மனையை அடைகிறாள். நந்தகோபனின் அரண்மனை எது? ஸ்ரீ வில்லிப் புத்தூரில் உள்ள வடபத்ர சாயிப் பெருமாள் கோவில் தான் அது! அங்குள்ள காவல்காரனிடமும் வாயிற்காப்பவனிடமும் தங்களை உள்ளே விடுமாறு வேண்டுகிறார்கள் கோபியர்கள். எதற்கு?

    கண்ணனையும் அவன் குடும்பத்தையும் எழுப்ப!

    **

    “ நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
    கோயில் காப்போனே கொடித் தோன்றும் தோரண
    வாயில் காப்போனே மணிக்கதவம் தாள் திறவாய்
    ஆயர் சிறுமிய ரோமுக்கு அறை பறை
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
    வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
    நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்

    **

    “ கண்ண பிரான் உலகுகெல்லாம் நாயகனாய் இருப்பவன். அவனுக்கே நாயகனாய் – தந்தைப் பாசத்தால் அறிவுரைகளைக் கூறி வழி நடத்துபவன் நந்தகோப.ன். அப்படிப்பட்ட நந்தகோபனுடைய திருமாளிகையைக் காப்பவனே! நீ அடைந்த பாக்கியம் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை! உலகை எல்லாம் காப்பவனான கண்ணபிரானையே காப்பவனாக நீ திகழ்கின்றாய் அல்லவா!

    இந்த வாசல் கொடியாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருகிறது. எதற்காக? நாங்கள் இரவில் இடம் தெரியாமல் தடுமாறாமல் இருப்பதற்காக!

    அப்படிப்பட்ட அழகு மிக்க வாசலைக் காப்பவனே, மாணிக்கங்களினால் இழைக்கப்பட்டிருக்கும் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே செல்ல விடுவாயாக. நாங்கள் ஆயர்கள், அதிலும் பெண்கள். அதிலும் சிறுமிகள்! எங்கள் இளைய பருவத்தைக் கண்டாலே நாங்கள் வஞ்சனை அற்றவர்கள் என்பது உனக்குத் தெரியவில்லையா? எங்களைச் சந்தேகப் படாமல் உள்ளே அனுமதிப்பாயாக!

    இன்றைய தினம் இந்த வேளையில் வந்து பாவை நோன்புக்கு வேண்டிய பறை முதலியவைகளைப் பெற்றுக் கொள்ளும் படி கண்ணன் நேற்றே சொல்லியிருக்கிறான். கண்ண பிரானுக்குத் தொண்டு செய்வதைத் தவிர வேறு எண்ணம் எங்களிடம் இல்லை. அவனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடவே நாங்கள் இந்த வேளையில் இங்கு வந்திருக்கிறோம்! உன்னுடைய வாயால் மறுப்பு ஏதும் சொல்லிவிடாதே, நீயே கதவைத் திறந்து எங்களை உள்ளே விடுவாயாக” என்று அவர்கள் வேண்ட, அவனும் கதவைத் திறந்து அவர்கள் உள்ளே செல்ல வழி வகுத்தான்.

    *

    அடியவர்களுடைய அனுமதியை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானைக் காப்பாற்ற வேண்டும் என்பது இப்பாடலில் சொல்லப் படுகிறது..

    *

    நண்பர்கள் அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்

    *

  9. Likes aanaa liked this post
  10. #68
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    **

    . இதையே என் வீட்டுக் காவல்காரனிடம் ஒரு நாள் சொன்னேன். அவன் நிஜமாலுமே பெரிய மனுஷன் துரே நீ. அடுத்த தேர்தலில் நீ நின்றால் என் வாக்கு உனக்குத் தான் என்றான்.
    *
    Quote Originally Posted by chinnakkannan View Post
    **
    நண்பர்கள் அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்

    *
    அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்
    "அன்பே சிவம்.

  11. Thanks chinnakkannan thanked for this post
  12. #69
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கீசு கீசென் றெங்கு மானைச் சாத்தான் கலந்து



    ஆனை சாத்தன் என்பதற்கு அற்புதமாக பெரியவர்கள் அர்த்தங்கள் சொல்வர். சாத்துதல் அல்லது சாற்றுதல் எனும்போது அழித்தல் அல்லது காத்தல் என்று இரண்டுமே பொருந்தும். பகவான் ஆனைச்சாத்தனாக இருக்கிறான். ஒரு யானை கஜேந்திரனை பகவான் ரக்ஷித்தான். இன்னொரு யானை குவலயாபீடத்தை கொன்றான்.

    6ஆம் பாசுரத்திலும் பறவைகள் புள்ளும் சிலம்பின காண் என்று சொல்லப்பட்டன. இப்பாசுரத்திலும் பறவைகள் ஏன் குறிப்பிடப் படுகின்றன என்றால் ஸ்ரீ வைஷ்ணவத்தில் பறவைகளுக்கு முக்கியமான இடம் உண்டு என்பது கதை கதையாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.

    ஆனைச் சாத்தன் என்பது வடமொழியில் கஞ்ஜரிக என்று அழைக்கப்படும் பறவையாகும். தமிழில் அதற்கு வலியன் என்று பெயர். அது பரத்வாஜப் பட்சி என்றழைக்கப்படும். அப்பறவையின் கண் மிக அழகாய் இருக்குமாம். இங்கு பரத்வாஜ மகரிஷியைப்போல் ஞானக்கண் என்பது உள்ளர்த்தமாகும்.

    பொதுவா ஆனைச்சாத்தன் = கருங் குருவி/தவிட்டுக் குருவி/வலியன் குருவி டைப்பில் ஒரு குட்டிப் பறவை! கிராமத்துல கரிச்சான் குஞ்சு



    மற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை சற்றே மாறுபட்ட ஒன்று! அவள் பாவை-யும் மாறுபட்டது! பார்-வையும் மாறுபட்டது! அது ஆன்மீகப் பாவை மட்டும் அல்ல! வாழ்க்கைப் பாவை!

    இது குலசேகர ஆழ்வாரை போன்ற பெண்ணை எழுப்புதல் வகையான பாசுரம் .இதற்க்கு முன் அமைந்த புள்ளும் சிலம்பின காண பாசுரம் பெரியாழ்வார் போன்ற பெண்ணை எழுப்புவதாக அமைந்த பாசுரம் என்றும் பெரியவர்கள் விளக்கம் சொல்லி கேட்டு இருக்கிறேன் சி கே

    குமுதத்தின் கிசு கிசு 'கீசு கீசு ' என்பதில் இருந்து வந்ததோ ?

    வாச நறும் குழல் ஆய்ச்சியர் - நக்கீரன் தருமி சிவபெருமான் நினைவிற்கு வருகிறாரே ? சி கே
    gkrishna

  13. #70
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்
    gkrishna

Page 7 of 10 FirstFirst ... 56789 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •