**

பாசுரம் பாடி வா தென்றலே
இருபத்து ஒன்பது

பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்தொன்று

05.01.15

*
குழந்தை தத்தித் தத்தித் தவழ்ந்து போய் அம்மாவைப் பிடித்து நின்று மழலையில் “ம்மா, எனக்குப் பசிக்கிறது “ என்று சொன்னால் தாய் என்ன செய்வாள்?

வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தால் அதை அப்படியே நிறுத்தி விடுவாள். சலவை இயந்திரத்தில் துணிகள் போட்டுக் கொண்டிருந்தால் அதை நிறுத்தி விடுவாள். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடனே கை கழுவி விடுவாள், எழுந்து கிண்ணத்தில் “ரசம் மம்மு’ பிசைந்து குழந்தைக்கு ஊட்டுவாள்! (இந்தக்காலத்தில் எந்தக் குழந்தை “பசிக்கிறது” எனச் சொல்கிறது? அவ்வப்போது இனிப்புப் பசி, குளிர்பானப்பசி, இத்தாலிய தோசைப் பசி என்று தான் அதற்கு வருகின்றன!)

குழந்தை கண்ணனுக்கும் ஒரு நாள் பசித்தது. அம்மா யசோதையிடம் கேட்டான். பொறுப்பாளா அவள்? பானையில் தயிர் கடைவதை நிறுத்தி விட்டு சமையலறைக்குச் சென்றாள். அதற்குள் பொறுமையில்லாமல் கண்ணனுக்கோ மேலும் பசி. சின்னதாய்க் கோபம் கொண்டு தயிர்ப்பானையை உடைத்து விட்டான்.

தயிர் தரையில் ஓடுவதைப் பார்த்தவுடன் பசி போய் பயம் வந்துவிட்டது. யசோதை வெளியில் வந்து பார்த்துக் கோபம் கொண்டாள். “ வா வா உன்னை என்ன செய்கிறேன் பார்!” எனச் சொல்லி கையில் கோலெடுத்து அடிக்க வர கண்ணன் ஓடினான். ஓடினான்., தெரு முனைக்கே ஓடினான். ஓடி அங்கிருந்த ததிபாண்டன் என்னும் ஆயன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அங்கிருந்த ததிபாண்டனிடம், “ஐயா. என்னை அடிக்க என் தாய் வருகிறாள்., என்னை ஒளித்து வையுங்கள்” எனக்கேட்க ததி பாண்டனும் குட்டிக் கண்ணனை உட்கார வைத்து அவன் மீது ஒரு பானையைப் போட்டு அதன் மீது தான் உட்கார்ந்து கொண்டான்.

யசோதை வந்துகேட்டதும் கண்ணன் இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டான்.

“ஹை அம்மா போயாச்சு, ஜாலி” என்ற கண்ணன், “ததி பாண்டா. என்னை வெளியில் விடு” என்றான். ததிபாண்டனுக்கா தெரியாது? அவன் ஞானியாயிற்றே, உள்ளே இருப்பவன் எம்பெருமான் ஆயிற்றே! “ம்ஹூம், முடியாது, எனக்கு நீ வரம் தரவேண்டும் கண்ணா, அப்போது தான் உன்னை விடுவேன் “ என்றான்.

“என்ன வரம் வேண்டும் உனக்கு?”

“எனக்கு மோட்சம் வேண்டும்”

“தந்தேன்” என்றான் கண்ணன். யோசித்தான் ததிபாண்டன். “எனக்கு மட்டுமல்ல. நீ ஒளிந்திருந்தாயே இந்தப் பானைக்கும் மோட்சம் வேண்டும்!” எனக் கேட்க, கண்ணன் சரியென்று சொல்ல, ததிபாண்டனும் அந்த உயிரில்லாத பானையும் அங்கேயே மோட்சம் பெற்றார்கள்!

ததிபாண்டன் செய்த புண்ணியம் தான் என்னே! உலகத்தையே அடக்குகின்ற கண்ண பரமாத்மாவை ஒரு நாழிகைப் போது தனது பானைக்குள் அடக்கி வைத்தானே. மிகுந்த ஞானவான், பரமாத்மா தன் இல்லம் தேடி வந்ததை அறிந்து அவர் கால்களைப் பிடித்துக் கொண்டவன். அவனுக்கு அருள் செய்த கண்ணன் எப்படிப் பட்டவன்?

”சிந்திக்க நெஞ்சில்லை வாயில்லை
நாமங்கள் செப்ப நின்னை
வந்திக்க மெய்யில்லை வந்து
இருபோதும் மொய்ம்மாமலர்பூம்
பந்தித்தடம் பொழில் சூழ் அரங்கா!
ததிபாண்டவன் உன்னைச்
சந்தித்த நாள் முத்தி பெற்றதென்னோ
தயிர்த் தாழியுமே..

என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தாம் எழுதிய பாசுரத்தில் குறிப்பிடுகிறார். கண்ணனைச் சந்தித்ததால் ததிபாண்டவன் மட்டுமின்றி அவனது தயிர்ப்பானையுமன்றோ மோட்சம் பெற்றது!

இன்றையபாடலில் நப்பின்னைப் பிராட்டியும் ஆயப் பெண்களுமாகச் சேர்ந்து கண்ணனை எழுப்புகிறார்கள்.

**

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய்ப் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்”

**

ஆயர் பாடியில் உள்ள பசுக்கள் எல்லாம் கறப்பார் யாரும் இல்லாமையால் தானாகவே பால் பொழிவதால் ஏந்துவதற்கு இட்ட பாத்திரங்கள் பொங்கி வழிகின்றன. பிடிப்பதற்குப் பாத்திரங்கள் இல்லை என்ற குறை ஏற்படுமே அன்றி, பால் இல்லை என்ற குறை ஏற்படாது! இப்படிப் பால் சொரியும் பசுக்கள் நிறைவாய்ப் பெற்றவன் நந்தகோபன், அவன் மகனல்லவா நீ! கண்ணா எழுந்திருப்பாயாக!

என்றும் அடியாரைக் காப்பதில் ஆர்வமுடையவனே, வேதங்களும் கூட எல்லை காண முடியாதபடி பெரியவனாக இருப்பவனே, இப்படிப் பெரியவனாக இருந்த போதும் உலகில் அனைவரும் காணும்படியாக அவதரித்த பரஞ்சுடரே, இப்போது எழுந்து எங்களுக்கு நீ அருள் புரியாவிடில் உனது பெருமை குன்றி விடாதோ?

உன் எதிரிகள் உனது வலிமையால் பலமிழந்து கதியற்று உன் வாசலில் வந்து நிற்பது போல் நாங்கள் வந்திருக்கிறோம்! அவர்கள் உன் வீரத்திற்குத் தோற்று உன் திருவடி பணிந்தனர், நாங்கள் உங்கள் குணங்களுக்குத் தோற்று வந்தோம்!

நீ எய்யும் அம்பானது உடனே கொன்று விடுகிறது, ஆனால் உனது அன்போஉன்னை விடவும் முடியாமல், அடையவும் முடியாமல் சித்திரவதைக்குள்ளாகுகிறது! அப்படிப் பட்ட உன்னை நாங்கள் புகழ்ந்து வந்தோம், நாங்கள் சொல்வதெல்லாம் செய்து விட்டோம், இனி உன் பொறுப்பு!

**

எல்லா அகங்காரங்களையும் விட்டு எம்பெருமானைத் தஞ்சம் அடைய வேண்டும் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப் படுகிறது.

**