**

மூன்றாம் பாடல்

**

“திருத்துறையூர், திருப்பந்தணை நல்லூர், திருஅச்சிறுபாக்கம் முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக கொன்றை விளங்குகிறது,,

நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரமாகும். தமிழகமெங்கும் இயற்கையாக வளர்கிறது.

பட்டை, பூ, வேர், காய் ஆகியவை மருத்துவப் பயனுடையதாக விளங்குகிறது. இதில் சில மரங்களில் ஆரஞ்சு, இளம் சிவப்பு வண்ணங்களிலும் பூக்கள் பூக்குமாம்..பொட்டானிக்கல் பேர் என்னவென்று பார்த்தால் ஃபேபியேசியே என்பதாம்..”

“சரி..எதுக்கு திடீர்னு கொன்றை..ஆமா நீ பாட்டனில்ல சுமாராத் தானே மார்க் வாங்கினே”

“அதெல்லாம் இங்க எதுக்கு மனசாட்சி.. முருகலர் கொன்றைன்னுவருது.. அதனால பார்த்தேன்..முருகு அலர்னு பார்க்கணும் ..முருகுன்னா தேன் .. அலர் அலர்ந்த.. அதாவது தேன் நிறைந்து மலர்ந்திருந்த கொன்றைப்பூக்கள்.. அப்புறம் கலையதூர்தி- கலையையே வாகனமாகக் கொண்ட கலைமகள்னு அர்த்தம்.. மத்ததெல்லாம் சிம்ப்பிள் தான்..வா பாட்டுக்குள்ளயே போய்டலாம்..”

*

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

*

பவளத்தைப் போல சிவந்து ஜொலிக்கும் மேனிகொண்ட பரமசிவன், ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் திரு நீற்றினை அணிந்து, உமையோடு தனது வெள்ளை எருதின் மேல் தேன் நிறைந்த கொன்றை மலர்களால் தொடுத்த மாலையையும், சந்திரனையும் தனது தலையில் தரித்து என் உள்ளத்தினுள்ளே புகுந்துவிட்டான்

அதனால் செல்வத்திற்கு அதிபதியான திருமகள்,, கலையாகிய வித்தைகளையே வாகனமாகக் கலைமகள், .மலைமகள் உமையம்மை, நிலமகளாகிய பூமி, மற்றும் எண் திசைக்கும் உண்டான பல தெய்வங்கள் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும் குணமுடையவை..அவை அடியார்களுக்கும் மிக நல்லனவையே செய்யும்..