Page 14 of 16 FirstFirst ... 41213141516 LastLast
Results 131 to 140 of 157

Thread: Padalgal Palavidham - பாடல்கள் பலவிதம்

  1. #131
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு-10
    --------------------

    ஆர்வமாய் தேடித் தேடி..

    ஓடி ஓடி..

    அய்யா நடிகர் திலகத்தின்
    படங்களாய்ப் பார்த்த காலமது.
    (இன்னமும்தான் என்பது
    வேறு விஷயம்.)

    வழக்கமாக, ஒரு படத்துக்கு
    நான்கு இடைவேளைகள்
    விடும் அந்த டூரிங்
    திரையரங்கில், பழைய
    படங்களெனில் ஏழெட்டு
    இடைவேளைகள் விடப்படும்..
    படம் அறுந்து போவதால்.

    அங்கே அதிசயமாக
    நல்லவிதமாக முழுசாய்ப்
    பார்த்த படம் "தூக்கு தூக்கி".

    பழைய பாடல்களே மூன்று
    நிமிஷத்தில் முடிந்து
    விடுபவை. மோசமான
    பிரிண்டுகளாயிருந்தால், அந்த
    ஒரு பாடலிலேயே முந்நூறு
    வெட்டு விழும்.

    இந்தப் பாடல் திரையில் வந்த
    போதும், ஒரு ஓரத்தில் மின்னல்
    போல் வெட்டத் துவங்கிற்று.
    புள்ளிப் புள்ளியாய் மழை
    போல, நட்சத்திரங்கள் போல பாடல்காட்சி முழுதும் படம்
    அறுந்து விடுவதற்கான அபாய
    அறிவிப்புகள் நிறைய
    இருந்தாலும், தெய்வாதீனமாக
    அறுந்து போகவில்லை.

    "கண் வழி புகுந்து
    கருத்தினில் கலந்த
    மின்னொளியே ஏன் மௌனம்?"

    அய்யா மருதகாசியின் பாடல்
    வரிகளில் மட்டும் கேள்வி
    இல்லை.

    இசை மாமேதை ஜி.ராமநாதன்
    அவர்கள் அமைத்த இந்த மெட்டே ஒரு கேள்வி போல்
    இருப்பதை உணர்ந்தேன்.

    பாடல் பிடித்துப் போயிற்று.

    அந்தப்புர நந்தவனத்தில் அன்பு
    மனைவியைக் கொஞ்சிப்
    பாடும் அழகுப் பேருருவமாய்
    நம் நடிகர் திலகம்.

    நடையிலும், பாடும்
    பாணியிலும் புன்னகைப்பதிலும், கரும்பு,
    குறும்பு என மனையாளைக்
    கொஞ்சி விளையாடுவதிலும்,
    அமுதமெனத் தான்
    எண்ணியிருக்கும் இவள்
    விஷம் என்பதறியாத அந்த
    அப்பழுக்கற்ற முகம் அழகு
    பாவங்கள் காட்டுவதிலும்
    லயிக்காதிருப்ப்வனை அந்தப்
    பாடலின் இரண்டாம் வரியே
    கேலி செய்கிறது..

    "வேறெதிலே உந்தன் கவனம்?
    வேறெதிலே உந்தன் கவனம்?"


  2. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #132
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு-11
    ------------------

    அன்பு-
    இந்தப் பாடலின்
    ஆதார ராகம்.

    பரிவு-
    பாடலின் மொழி.

    உள்ளம் புகும் பாட்டு
    வெளிக் கொணரும்
    உருக்கம்-
    பாடலின் தாளம்.

    நிமிர்த்தி வைத்த
    துப்பாக்கி போல
    கம்பீரமாயிருந்த கணவன்,
    நேசமிகு மனைவியின்
    நலிவு கண்டு
    நனைத்த துணியாய்த்
    தளர்கிறான்.

    குடும்பம் விளங்க
    வளைய வந்தவள்,
    கை ,கால் விளங்காமல்
    திண்டாடும் நிலை கண்டு
    துயருறுகிறான்.

    கலைந்த கூந்தல்
    காணப் பொறுக்காமல்,
    வாரி, பொட்டிட்டுப்,பூச்சூடி
    பணிவிடை புரிகிறான்.

    கணவனின் முகஞ்சுளியாப்
    பணிவிடைக்குக் கூசிக்
    குறுகும் நடிப்பில் புன்னகை
    அரசியின் திறமை ராஜாங்கம்
    விரிகிறது.

    கடமையில் விறைத்த
    மனசுக்குள்ளிருக்கும் கனிவு
    அத்தனையும் வெளிப்படுத்தும்
    நம் நடிகர் திலகத்தின்
    கண்களுக்கு,இயற்றி,இசை தந்து,பாடவெல்லாம் தெரிகிறது.

    ஆணென்கிற மமதை கொண்டு
    பெண்ணை இம்சிக்கிறவர்களு
    க்காக,இந்தப் பாட்டு ரகசிய சாட்டை வைத்திருக்கிறது.

    அவர்களை..
    இந்தப் பாட்டு, அடிக்கும்.

    அன்பான ஆண்களுக்கும்,
    கனிவு மிகுந்த பெண்களுக்கும் என்றும் இந்தப்
    பாட்டு...

    பிடிக்கும்.


  5. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #133
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு- 12
    -------------------

    "அம்மாவுடன்
    கோயிலுக்குப் போனேன்.
    கோயிலில் தெய்வம்
    என் எதிரில் இல்லை.
    என் கை பிடித்து
    அருகில் நின்றது."
    -அன்னையைக் குறித்த
    என் கவிதை இது.
    ------------

    "செக்கச் செவேலென
    அழகான பெண் குழந்தை..
    எங்கள் தெருமுனை
    குப்பைத் தொட்டிக்கு."
    -இதுவும் என்னுடையதுதான்.
    -----------

    ஒரு ஒப்புமைக்காகக் கூட இந்த
    இரண்டையும் பொருத்திப்
    பார்க்க மனம் அஞ்சுகிறது.

    தன்னைத் தெய்வமென்று
    பிள்ளையைச் சொல்ல
    வைத்தவளும்,தொட்டிலிலிட
    வேண்டிய செல்வத்தைக்
    குப்பையில் வீசிப் போனவளும்
    தாய்மை பொங்கும்
    பெண்ணினத்தவர்தானே?

    கோயிலுக்குப் போன
    குழந்தைக்குக் கிட்டிய நல்ல
    அன்னை,அந்த குப்பைத்தொட்டிக் குழந்தைக்கு
    ஏன் கிடைக்காமல் போனாள்?

    கேள்விகள்-

    வேறு வேறு வடிவங்களில்
    இறைவனை நோக்கிப்
    போய்க் கொண்டே
    இருக்கின்றன.

    கோயில்களுக்கும்,
    குப்பைத் தொட்டிகளுக்குமாய்
    குழந்தைகள் போய்க் கொண்டே
    இருக்கின்றன.
    ------------

    குற்றமற்ற
    குழந்தைப் பூக்களை,ஒரு
    பாசத் தோட்டமமைத்துப்
    பராமரிக்கிறவராய்
    நடிகர் திலகம் தோன்றிப்
    பாடுமிந்த "எங்க மாமா" பாடல்,
    கவியரசர் வழியாக காற்றில்
    வந்த கடவுளின் அறிக்கை.

    அன்பென்கிற விஷயம் உள்ள
    வரை யாரும் இங்கே
    அனாதையில்லை என்கிற
    நம்பிக்கை.
    ----------

    இந்த
    செல்லக் கிளிகளாம்
    பாடல் கேட்டு,

    குழந்தைகளோடு,
    குழந்தைகளாய்..

    நாமும் உறங்குகிறோம்-
    நிம்மதியாக.


  7. #134
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு-13
    -------------------

    கலையரசரும்,கவியரசரும்
    கைகோர்த்து ஜெயித்த
    எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.

    விறகுவெட்டியாக மாறி
    வரும் இறைவன், வீதியில் வந்து பேசும் எளிமைத் தத்துவம் இப்பாடல்.

    மனிதர்களை வாழ்விக்கிற
    மகேசன், மனிதர்களின் உலகத்தில் கலக்கிற அதிசயம்
    பேசுகிறது, இந்தப் பாடல்.

    ஒன்றில் சந்தன வாசனை,
    ஒன்றில் ஜவ்வாது வாசனை
    என்று தலைவர் தலை சுமந்து
    வரும் விறகுகள் போலே பாடல் வரிகளும், ஒன்றில் சிந்தனை வாசனை,ஒன்றில்
    தத்துவ வாசனையென்று
    மணக்கின்றன.

    "பத்துப் பிள்ளை பெத்த
    பின்னும் எட்டு மாசமா?
    இந்தப் பாவி மகளுக்கெந்த
    நாளும் கர்ப்ப வேஷமா?"
    -பிரசவ வலி காணுதலே
    தொழிலெனக் கொண்டோர்..
    குறும்பான இந்தப் பாடல் வரிகள் தரும் ரகசிய வலியையும் தாங்கித்தான்
    தீர வேண்டும்.

    தன்னுடன் ஆடும் இளமங்கை,
    பாடல் முடியும் தருவாயில்
    கை பிடித்திழுத்து காதலுங்
    காமமுமாய்ப் பார்க்க...

    பாடல்வரிகளிலிருந்து கவனம்
    மாறாமல், "எனக்கு மணமாகி
    இரண்டு மனைவியருண்டு.
    என்னை விட்டு விடம்மா" என
    சைகையிலேயே நடிகர்
    திலகம் சொல்வாரே..
    அதற்காகவே இந்தப்பாடலை
    ஆயிரம் முறை காண வேண்டும்.

    இந்தப் பாடல் -ஆணி.

    நம் இதயம்- பசுமரம்.


  8. #135
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு-14
    -------------------

    அகத்தின் சாயல் கொண்டு
    அசத்தும் முகம்...
    இந்த அழகு முகம்.

    ஆயிரமாயிரம்
    கதைகள் பேச வல்ல
    அந்த விழிகள் இரண்டும்
    ஆசைப்பட்டு வசிக்குமிடம்...
    அந்த அழகு முகம்.

    கோடிக் கோடி
    மனித முகங்களில்
    மலர்ச்சியைக்
    கொண்டு வந்த முகம்..
    இந்த அழகு முகம்.

    கொட்டி வைத்த வைரமென
    மின்னும் முகம்...
    இந்த அழகு முகம்.

    காத்திருக்கும் கனவுகளை
    அழகாக நிரப்புமிந்த
    அழகு முகம்.

    கண்ணாடிகள்
    பெருமிதமாய்க்
    காட்டும் முகம்...
    இந்த அழகு முகம்.

    பார்த்துக் கொண்டே
    இருக்கச் செல்லும் முகம்...
    இந்த அழகு முகம்.

    பரம ஏழைக்கும்,
    பணக்காரனுக்கும்
    பிடித்த முகம்
    இந்த அழகு முகம்.

    இதயத்தோடு இன்பத்தை
    இணைத்த முகம்...
    இந்த அழகு முகம்.

    இன்னும்...
    இன்னும்...
    இன்னும்...
    பேச வைக்கும்
    அழகு முகம்.


  9. #136
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு-15
    -------------------

    காதல் மட்டும்தான்.. எச்சிலை
    முத்தமாக்குகிறது.

    காதல் மட்டும்தான்.. நடக்கும்
    போதே பறக்கிற பிரமையைத்
    தருகிறது.

    நம் காதலுக்குரிய நடிகர்
    திலகத்தின் எண்ணற்ற காதல்
    பாடல்களில்., எனக்கு மிகவும்
    பிடித்த பாடல்களில் ஒன்று-
    இந்தப் பாடல்.

    அந்த மென்மையிலும்,
    மென்மையான புன்னகை
    ஒன்றை மட்டும் வைத்தே
    உறுதியாகச் சொல்லலாம்..நம்
    நடிகர் திலகம்.."ரோஜாவின்
    ராஜா"தானென்று.

    கனவுப் பாடலிது.

    கனவுகள்,இங்கிதமில்லாதவை.

    எப்போதும் கண்ணியமாகவே
    இருக்கக் கூடிய உத்தரவாதம்
    இல்லாதவை.

    ஒழுக்கம் உணர்த்த வேண்டிய உலக நிர்ப்பந்தங்களுக்காக ஒளித்து வைத்திருந்த அடி மனசின் அழுக்கு எண்ணங்களையும் அதிரடியாய் வெளிப்படுத்த வல்லவை.

    ஆனால்,இந்தப் பாடல் போல
    கனவு வந்தால்..அது வரம்
    நமக்கு.

    பள்ளிக் குழந்தைகளை
    ஏதேனும் நல்ல காரியத்துக்காக
    ஊர்வலமாய் அழைத்துப்
    போவார்களே..!? அந்த ஊர்வலக் குழந்தைகளின் ஒழுங்கில் காணும் அழகை..
    நடிகர் திலகத்தின் பாவனைகளில் காணலாம்.

    கனவுதானே என்று சும்மா
    பிதற்றாமல் பாடலுக்குள் ஒரு
    கவித்துவம் புகுத்தியிருக்க
    ிறார்கள் ..பாடலோடு
    சம்மந்தப்பட்ட எல்லோரும்.

    சில நிமிடங்களில் பாடல்
    முழுவதுமாய் முடிந்த
    பிறகு..

    மனசு பாடத் துவங்குமே..

    அது..

    பாமர ரசிகன், மெல்லிசை
    மன்னருக்குச் செலுத்தும்
    ரகசிய அஞ்சலி.


  10. #137
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு-16
    ------------------

    *குழந்தைப் பேறில்லாதவள்
    வருஷக்கணக்கில்
    காத்திருக்கிறாள்..
    மாசமாக".

    * ஞாயிற்றுக்கிழமை
    கடைவீதியாய் வெறிச்சோடிக்
    கிடக்கின்றன..
    குழந்தை இல்லாத வீடுகள்.

    -இவையெல்லாம், ஒரு
    குழந்தைக்காக ஏங்கிக்
    கிடப்போரின் மனநிலையைக்
    கற்பனை செய்து நான் எழுதிய
    கவிதைகள்.

    உலகத்திலேயே மிகக் கொடிய
    சோகம்,குழந்தைப் பேறு
    இல்லாதவளின் சோகமென்றால்..
    உலகத்திலேயே மிக உயர்வான
    சந்தோஷம்,
    தாய்மையடைந்தவளின்
    சந்தோஷம் எனலாம்.

    போற்றி மதிக்கும் அன்புக்
    கணவனிடம், மனைவி அவனது காதல்மிகு பரிசு
    தன் வயிற்றிலிருப்பதைத்
    தெரிவித்து மகிழ்வதாய் வரும்
    "தியாகி" படப்பாடல் இது.

    "வலது கையில் தாய்
    படுத்தால் ஆம்பளைப் பிள்ளை.
    மாங்காய் தின்னா,சாம்பல்
    தின்னா பொம்பளைப் பிள்ளை.
    இதில் சந்தேகம் இல்லை"

    -என்று பாடுகையில்
    குறும்பும்,தகப்பனான
    பெருமிதமும் காட்டும் அந்த எழில் முகம்..

    "அட..சும்மா போங்க
    நீங்க ஒன்னும்
    மருத்துவரில்லை.
    தொட்டதுதான் உங்க சேவை..
    மத்தது இல்லை".

    -என்று மனைவியும்
    குறும்பாய் மடக்க..
    நாக்கு துருத்தி பொய்க் கோபம் காட்டும் அந்த திறமை முகம்..

    நடிகர் திலகத்தின் அன்பு முகம்
    கண்டு,தாம் மலர்ந்த
    முகங்கள்தாம் எத்தனை கோடி?

    "எப்போ..எப்போ?" என்று
    ஆர்வமாய்க் காத்திருந்து..
    தடைகளை நொறுக்கியெறிந்து விட்டு இந்தப் படம் வந்து
    பார்த்த நிமிடம்..

    நம் இதயமும்தானே
    துள்ளலாய்ப் பாடிற்று..?

    "இந்த யோகம்..
    நல்ல யோகம்!"


  11. #138
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு-17
    ------------------

    அரங்கம் ஆலயமாக..

    அன்றொருநாள் ஒலித்தது இந்த
    ஆன்மிகக் குரல்.

    கலை தெய்வத்தை தரிசிக்கப்
    போன இடத்தில், காது
    குளிர்வித்தது இந்த தெய்வீக
    கானம்.

    பாடும் திறமையுடைய என்
    நண்பனுடைய பக்திப் பாடல்
    தொகுப்பிற்காக நான் எழுதிக்
    கொடுத்த ஒரு பாடலினூடே
    எழுதியிருந்தேன்...
    "கல்லுக்குள்ள சாமிய வச்சது
    நம்பிக்கைதானம்மா!"-என்று.

    ஆழ்ந்து மனம் ஒன்றி இறை
    வணங்கும்போதெல்லாம்,
    இந்த நம்பிக்கையை நான்
    உணர்ந்தேன்.

    ..கிறேன்.

    ...வேன்.
    ------

    "எங்கும் இனிதாக,
    எல்லாமும் நலமாக,
    பொங்கும் அருட்கடலே..
    புண்ணியனே அருள்புரிவாய்.
    கண்ணுள் ஒளியானாய்.
    கனிவின் வடிவானாய்.
    ஹரிசிவன் மகனே நீ
    கரையேற வரம் தருவாய்."

    -அருளே வடிவான அய்யப்பனில் கரைந்துருகி ஒரே ஒரு முறை நானும் சபரிமலைக்கு விரதமிருந்து சென்றதுண்டு.

    களைக்கக் களைக்கக்
    கல்லிலும்,முள்ளிலும் நடந்து
    சென்று கடவுள் அய்யப்பனைக்
    கண்ட போது அடைந்த
    பேரின்பத்தை விட, மாலை
    அணிந்த நாள்தொட்டு தினமும்
    கோயிலில் மாலை நேரத்தில்
    நடக்கும் பஜனையின் போது
    நானடைந்த பரவசம் அதிகம்.

    இறைவனை அடைய செல்லும்
    வழிகளில் இசையின் வழியே
    சிறப்பென்றுணர்ந்த சிலிர்ப்பான
    தருணங்கள் அவை.

    "வாழ்க்கை" திரைப்படத்தில்
    வரும் இந்தப் பாடலைக்
    கேட்கவும், பார்க்கவும் நேர்ந்த
    தருணங்களிலும் அது
    மாதிரியான சிலிர்ப்பை
    உணர்ந்திருக்கிறேன்.

    காவி வேஷ்டியும், கருப்புச்
    சட்டையும், இடை இறுக்கிய
    சிவப்புத் துண்டுமாய்..
    நம் நடிகர் திலகம்-
    கடவுளை வணங்கும் கடவுள்
    போல் ஒரு கம்பீர அமர்வு.

    முன்னே துணி விரித்து,
    முடியாத பிள்ளையைக்
    கிடத்தியிருக்க..
    சேர்த்த கரம் பிரிக்காது
    சேவித்திருப்போர் கூட்டத்தின்
    இசை உருக்கம்...

    இதயத்துள் இறை நிறுவும்
    இசைஞானி...

    பாட்டு வரிகளால் மனம்
    நிறைகிற அய்யா.
    பஞ்சு.அருணாசலம்..

    அய்யா நடிகர் திலகத்தின் இசைக் குரலாகவே மாறி நின்ற
    அமரர். மலேஷியா
    வாசுதேவன்...

    எல்லோரும்..

    மறக்க முடியாதவர்கள்.

    மறக்கக் கூடாதவர்கள்.
    ---------

    "சும்மா ஒரு
    வாயசைப்புதானே"
    என்கிற அசட்டை கிடையாது.

    கதைச் சூழலைத் தாண்டிய
    சுய திறமை வெளிப்பாடு
    கிடையாது..நம்மவரிடம்.

    நன்றாகக் கவனித்தால்
    தெரியும்.

    கதைப்படி அத்தனை
    மருத்துவர்களும் கைவிட்டு
    விட்ட தன் பிஞ்சு மகனின்
    உயிர் பிழைப்பை கடவுளிடம்
    மட்டுமே எதிர்நோக்கியிருக்கிற
    ஒரு அபாய சூழல். அம்மாதிரிச்
    சூழலில் ஒரு அழுத்தமான
    சோகம் ஒரு தகப்பனைக் கவ்விக் கொள்வது தவிர்க்கவே
    முடியாதது.

    பாடலை முழுமையாக
    கவனித்துப் பாருங்கள்.

    கண்களில் நிரந்தரமாய்ப்
    படிந்திருக்கும் கவலையும்,
    ஆண்டவனை இறைஞ்சிப்
    பாடும் அவரது முகத்தில்
    சூழலின் இறுக்கமும்..
    அழுது வீறிட்டுக் குழந்தை
    பிழைக்கும் வரைக்கும்
    மாறவே மாறாது.
    ------

    நமக்குப் பழகிய கலையின்
    தெளிவு விரவிய முகம்
    பக்கவாட்டில் பிரம்மாண்டமாய்
    காட்டப்பட ..நம் நடிகர் திலகம்
    வாயசைத்துப் பாடிக்
    கொண்டிருக்கிறார்.

    அவரை வியக்கும் நம்
    உள்ளமோ..அந்தப் பாடலின்
    வரிகளைக் கொண்டே அவரைப் பாடிக் கொண்டிருக்கிறது.

    "உயிருக்குள் உயிராக
    விளையாடும் ஜோதி.
    உலகத்தின் அசைவுக்கு
    நீதானே ஆதி."

    (நல்ல சமயத்தில் பாடலை
    நினைவூட்டிய, நட்புமிகு
    திருச்சி.திரு.பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
    நன்றி.)


  12. #139
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு-18
    ------------------

    படகு.

    ஒரு சின்னப் பழுதுமின்றி பல
    கோடி உள்ளங்களை
    வெகுகாலமாய் சுமந்து
    செல்லும் படகு.

    இசைப் படகு.

    ரசனை சமுத்திரம் தாண்டி
    நம்மை இன்பக் கரையேற்றும்
    படகு.

    கொஞ்ச காலத்துக்கு முன்
    மதுரையின் திரையரங்கொன்றில் மக்களின்
    உற்சாக வெள்ளத்தில்
    ஆர்ப்பாட்டமாய் நீந்தி வந்த
    ஆனந்தப் படகு.

    ----------

    நடந்து செல்லும் பொருட்டு
    இறைவன் கொடுத்த கால்களின் கீழ் சக்கரம் கட்டிக்
    கொண்டு விரைந்து வரும்
    நடிகர் திலகத்தைப்
    பார்த்தவுடன், வருஷத்துக்குப்
    பத்துப்படம் நடித்து, காலில்
    சக்கரம் கட்டிக்கொண்டு
    வெற்றிப் பாதையில்
    விரைந்தோடியவர்தானே இவர்
    என்று மனதில் தோன்றுகிறது.

    கண்கள் இடுக்கிச் சிரித்து
    வரும் அந்தச் சிரிப்பு..

    "படகு..படகு" என்று சொல்லச்
    சொல்ல முகத்தில் காட்டும்
    அந்தச் சிலிர்ப்பு..

    இருக்கையை மறந்து எழுந்து
    ஆட்டம் போட்டு, உடலில் உள்ள காற்றையெல்லாம்
    சீழ்க்கையடித்துச் செலவழிக்கும் ரசிகனுக்கு
    இது போதாதா?
    ---------

    போதாது என்கிற முடிவெடுத்து
    மஜ்னுவாக மாறுகிறார்
    அடுத்த நிமிஷமே.

    பாலைக் காற்றில் முடி பறக்க,
    பல்லக்கில் அழுது செல்லும்
    பிரியமானவளை நினைந்துருகிப் பாடுகையில்
    அந்த காதல் பித்தனை கண்முன் நிறுத்துகிறார்.

    காதலென்றால் இதுதான் என
    நம் உள்ளம் உற்சாகமாய்
    நிச்சயிக்கிறது.
    ---------

    "இது மட்டுந்தானா காதல்..
    இன்னும் பார் " என்று மெத்தை
    யிட்ட கட்டிலில் அமர்ந்து
    கொண்டு மேன்மைக்குரிய
    காதல் இதுதானெனக்
    காட்டுகிறார்..சலீமாக மாறி.

    "அனார் என்றால் மாதுளம்"
    எனப் பாடுகையில்,
    வலக்கையை ஒயிலாய் உயர்த்தி, தலையை ஒருபுறமாய் அசைத்து, வலது
    தொடை மெல்ல உயர்த்தி,அதில் அழகாய்த் தாளமிட்டு
    அவர் செய்யும் பாவனையைப்
    பார்த்து பாடத் தோன்றுகிறது..
    "உங்கள் அழகுக்கு சலாமு
    அய்யா!"
    ---------

    "அனார்.."

    அடித்தொண்டையிலிருந்து
    சலீமுக்காக எஸ்.பி.பி.
    சொல்வதை, ஒலி வடிவமாய்க்
    கேட்டாலும் மனக்கண்ணில்
    ஒரு நொடி நடிகர் திலகம்
    வந்து போவார்.
    --------

    படகு...

    நம்மைச் சுமந்து கொண்டு
    ஆனந்தமாய் மிதந்து கொண்டே
    இருக்கும்..

    ஆயுசுக்கும்.


  13. #140
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு- 19
    -------------------

    ஏற்றமிகு தமிழ்த் திரையுலகின்
    எழுச்சிக் காலத்தில், எழுபதில்
    வந்த இந்த "எங்கிருந்தோ
    வந்தாள்" படப் பாடல், என்னைப்போன்ற கோடிக்கணக்கானோரின்
    இதய சிம்மாசனங்களில்
    நிரந்தர வீற்றிருப்பு
    செய்கிறது.

    இன்றும் கூட இந்தப் படம்
    பார்த்து விட்டு வருகிற
    முகங்களில் "பார்த்தோம்,வந்
    தோம்" என்கிற அலட்சியத்தைப் பார்க்க முடியாது. ஒரு முழுமையான
    கலைப்படைப்பு தந்த
    பெருமிதத்தையும்,முதிர்ந்த
    ரசனையையும் அந்த
    முகங்களில் நாம் காண
    முடியும்.

    நாளைக்குப் பரீட்சையென்றால்
    .. இன்றிரவு (நல்ல)மாணவன் படிப்பில் காட்டுகிற அக்கறையை, நாம் நடிகர் திலகத்திடம் காணலாம்..
    எப்போதும் போல் இந்தப்
    பாடலிலும்.

    சிரிப்போடு தொடங்கும் இந்தப்
    பாடல், நம் சிரிப்பை வாழ
    வைக்கிற வேலையை
    முப்பத்தைந்து வருடங்களாகத்
    தொடர்கிறது.

    தமிழ் சினிமாவில் காதல் எனில் இதுதானென நிச்சயிக்கப்பட்ட
    விஷயங்களையெல்லாம்,
    நம் நடிகர் திலகமும்,நடிகர்
    திலகத்தின் படங்களுந்தான்-
    அர்த்தமுள்ளதாய்.. அழகாய்
    மாற்றி எழுதியிருக்கிறார்.
    மாற்றி எழுதின.

    சிரிப்புக்கு ஸ்வரம் பிரித்த
    அமரர் எம்.எஸ்.வி, இசையாகவே சிரித்துப் பாடிய
    சுசீலாம்மா, என் உயரம்
    எனக்குத்தான் என்று ஓங்கி
    ஒலிக்கும் குரலுக்குரிய
    தெய்வீகப் பாடகர், அமரர் அய்யா டி.எம்.எஸ்., கதாநாயகியாய் சும்மா அழகு வலம் வராமல் தன் இருப்பைத் தெளிவாய்த் தெரிவிக்கும் கலைச் செல்வியின் அற்புத நடிப்புப் பங்காற்றல்..

    சிறப்புக்கெல்லாம் சிகரம்
    வைக்கும் நம் சிங்கத் தமிழன்..
    வேறென்ன வேண்டும்?

    பாடலுக்கு வயசு, வருஷக்
    கணக்கில் இல்லை...யுகக்
    கணக்கில் நீளும்.

    காதலும்,கவிதையுமாய்
    பழைய வருஷங்களிலிருந்தவன்,
    காதலியைப் பிரிந்த சோகத்தில் பைத்தியமாய் மாறிப் போகிறான்.

    அன்புடனும்,அக்கறையுடனும்
    அவனைப் பராமரிப்பதற்காக
    அமர்த்தப்பட்ட இளம் பெண்ணுடன் ஆடிப் பாட வேண்டிய கதைச் சூழல்.

    கத்தி மேல் நடப்பது போல்
    ஜாக்கிரதை காட்ட வேண்டிய
    சூழல் இது.

    கத்தி மேல் நடனமே ஆடுகிறார்..நம்மாள்.

    நல்ல தமிழில் எழுதப்பட்ட
    பாடல் வரிகளுக்கு
    வாயசைப்பதற்குக் கூட ஏற்கனவே கவிஞனென்பதால்
    தமிழ்ப் புலமை மிக்கவன்
    என்கிற காரணத்தைச் சொல்லி
    விடலாம்.

    ஆனால், சுவாதீனத்துடன்
    இருந்த பழைய கால
    மேதமையை, நடிப்பில் எந்த இடத்திலும் காட்டி விடக்
    கூடாது.

    அதற்காக என்னென்னவெல்லாம்
    செய்கிறார்..? தலைமுடி
    கலைவது குறித்த அக்கறையே
    இல்லாது,குதித்துக் குதித்து
    முடி கலைக்கிறார்.

    பளீரென்று சிரிக்கிற நாயகியின் இதழ்களின் கீழ் கையேந்தி புன்னகையைப் பிடிக்கிறார்.

    பிடித்த புன்னகையை
    பட்டாம்பூச்சி போல் பறக்க
    விடுகிறார். கை நழுவிப்
    பறந்த புன்னகைப் பூச்சியை
    குதித்துப் பிடிக்கப் பார்க்கிறார்.

    முயற்சி தோற்க "பொத்" என்று
    புல்தரையில் விழுந்து
    புரள்கிறார்.

    கச்சிதமாயில்லாத காவி
    ஜிப்பா,வெள்ளை பைஜாமா அணிந்த இருபது வயதுக் குழந்தையாய் ஓடுகிறார். ஆடுகிறார்.

    சிரிக்கிறார். குஷியாட்டம்
    போடுகிறார்.

    முகத்தை முன் நீட்டி, கைகள்
    இரண்டையும் பின் இழுத்து,
    சின்ன வார்த்தைக்கும்
    பெரிதாய் வாய் திறந்து,
    மிக அகலமாய் கண்கள்
    அகட்டி, குழந்தை போல் கைகள்
    கொட்டி, சரிந்திறங்கும்
    திண்டிலிருந்து, கால்கள்
    மட்டும் "கிடு கிடு"வென இறங்க..

    உடலின் மற்ற பாகங்களில்
    ஒரு அசைவும் காட்டாமல்
    வியப்பூட்டி..

    என்னென்னவெல்லாம்
    செய்கிறார்?

    "நிலவென வளரட்டும் கவிதை
    உள்ளம்" என நாயகி
    பாடுகையில், ஒரு கட்டத்தில்
    நமக்கு முதுகு காட்டித்தான்
    நிற்கிறார். அப்போதும் அவர்
    ஏதோ பாவங்கள் காட்டிக்
    கொண்டுதானிருக்கிறார்
    என்பதை அவரின் முதுகின்
    அசைவுகள் உணர்த்துகின்றன.

    அட..

    முதுகையும் நடிக்க
    வைத்தார்..
    நடிகர் திலகம்.

    ( இந்தப் பாடலைப் பற்றி
    எழுதுங்கள் என்று என்னை
    அன்புடன் பணித்த அன்புமிகு
    திரு.V.C.S அவர்கள்,
    இந்தப் பாடலில் நடிகர் திலகம்
    செய்யும் சில அற்புத
    பாவனைகளை "சிப்பிக்குள்
    முத்து" படத்தின்'துள்ளி
    துள்ளி' பாடலில், கமல் அவர்கள் அப்படியே செய்திருக்கிறார் என்றும் தெரிவிக்கிறார்.)


Page 14 of 16 FirstFirst ... 41213141516 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •