சிவாஜி பாட்டு-30
-------------------------------

என்னை அழ வைத்த கவிதைகள் ஏராளமாயிருக்கின்றன.

என் கவிதை, நண்பரொருவரை அழ வைத்தது.. எனக்கே வியப்பு.

என் தந்தை மறைந்து ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு, அவரது நினைவு நாளில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

அவரைக் குறித்த என் நினைவுகளோடு நீண்ட அந்தக் கவிதையை இப்படி முடித்திருந்தேன்...

"ஜென்மமெனும் பாத்திரத்தில்
ஒரு பிச்சையாய் விழுந்தது
உன் மரணத்தின் கௌரவமாயிருக்கலாம்.

ஆனாலும்..
அப்பா..!
இன்று... இப்போது
நீ
ஒரு விதவையின்
புருஷன்தானே..?"

-கவிதை எழுதிய காகிதத்தை அந்த நண்பரிடம் வாசிக்கக் கொடுத்த போது, உள்ளூர எனக்கு "திக் திக்".

காரணம்... அந்த நண்பர் நல்ல கவிஞர். மிகச் சிறந்த இலக்கியவாதி. தேர்ந்த விமர்சகர். என்னத்தையோ எழுதி அவரிடம் பாராட்டெல்லாம் வாங்கவே முடியாது.

நீண்ட நேரமாக கவிழ்ந்த தலையை நிமிர்த்தாமல் படித்துக் கொண்டிருந்தவரை குனிந்து உற்றுப் பார்த்தேன். அதிர்ந்தேன். அவர் அழுது
கொண்டிருந்தார்.

அழுது முடித்து ஆசுவாசப்பட்ட பிறகு அவரே அழுகைக்குக் காரணம் சொன்னார்.

"உங்கள் கவிதையின் ஏக்கத்தில், கோபத்தில் இருக்கிற நிஜம்தான் என்னை அழ வைத்தது."

நிஜமான கலைவடிவங்களுக்கு கிடைக்கிற மரியாதை அலாதியானது.

நிஜத்தைப் பாடல் வடிவமாக்கிக் கொண்ட இந்த
"முத்துக்களோ கண்கள்" அதற்கு ஒரு உதாரணம்.
******

"டிங்.. டிங் டிங்..டிங்
டிங்.. டிங் டிங்..டிங்"
- ஒரு சின்ன எதிரொலியோடு இனிமையாய் வந்து விழும் துவக்க இசையே, காதலில் வீழ்ந்த ஒரு ஆடவனின் கனவுத் துவக்கம் என்று நிச்சயப்படுத்த மெல்லிசை மாமன்னரால் முடிகிறது.

இரவில் இந்தப் பாடலோடு தூங்கினால், காலைப் பொழுதும் இந்தப் பாடலுடனேயே விடிகிறது.
*******

கனவு காணும் நாயகன், ஏழை. சாதாரணனுக்கும் கீழான சாதாரணன். வாழ்க்கை, வறுமைக் கரங்கள் கொண்டு அவனது உடைகளைக் கிழித்தாலும், அவனது உடைக் கிழிசல்களுக்கூடாக அவனது நம்பிக்கை சிரித்தது.

அவன் நல்லவன். கனவிலும் யாருக்கும் தீங்கு நினையாதவன். கனவில் வரும் நாயகி இவனுக்கு மாலை சூட்டுகிறாள். அவள் தோளில் கிடக்கும் மாலையை அவளேதான் சூடிக் கொண்டிருக்கிறாள்.

நாயகன் கண்ணியமானவன். கனவிலும் யாருக்கும் தீங்கு நினையாதவன்.
******

சர்க்கரை டப்பா காலியாய்ச் சிரிக்க, கசப்புக் காப்பி குடித்து முடிக்கும் தருவாயில், தம்ளர்
விளிம்பில் ஒட்டிக் கிடந்த ஒரு சீனித் துணுக்கு நாக்கில் பட்டு கொடுக்கிற இனிப்பாய்..

நாயகனின் நீளமான கசப்பு வாழ்க்கைக்கூடே இந்தக் கனவுக் காதல்... கொஞ்சமாய்த்
தித்திப்பு.
******

வியர்வை மினுக்கும், யதார்த்த வாழ்வின் அடையாளங்களாய் நமக்குப் புலப்படும் இந்த இருவரின் ஒப்பனையற்ற முகங்கள்... வழமையான தமிழ் சினிமா கனவுப் பாடல்களை
விட்டு வெகுதூரம் தள்ளி நின்ற
அறுபதுகளின் ஆச்சரியம்.
******

ஒரு நல்ல நடிப்புக்கலைஞனின்
கலையொழுக்கத்திற்கு எல்லையோ, முடிவோ இல்லை என்பதற்கு இந்தப் பாடலில் ஒரு உதாரணம் வைக்கிறார்... நடிகர் திலகம்.

பாடலின் துவக்கத்தில் ஒரு முறை மல்லாந்து படுத்துக் கொண்டு, புன்னகை அரசியின்
பக்கம் முகம் திருப்பி "முத்துக்களோ கண்கள்" என்று பாடுகிறார்.

படுத்துக் கொண்டு பாடும் போதும் அத்தனை தத்ரூபமான வாயசைப்பு.
******

பாடல் முழுதும் நடிகர் திலகம் காட்டுகிற உற்சாக முகபாவங்கள், இதழ் விட்டு நீங்காத அற்புதப் புன்னகை...

எல்லாமே, நம்மையும் ஒரு காதல் உலகம் நோக்கி கைபிடித்து அழைத்துச் செல்பவை.
******

புன்னகை அரசியை முன் நிறுத்தி, இழுத்து அணைத்துத் தன் நெஞ்சோடு இறுக்கிக்
கொள்கிற நடிகர் திலகத்தின் நடிப்பு வெளிப்பாட்டில், வாராது வந்த மாமணியான தன் காதலை நழுவ விடப் பிரியமில்லாத ஒரு எளியவன் நமக்குக் காட்சிப்படுகிறான்.
******

கனவுக் காதலியின் தாவணி உருவிய வெற்றி மதர்ப்புடன் கூடிய நடிகர் திலகத்தின் புன்னகைக்கும், ஒரு தேர்ந்த மீனவனின் லாவகத்துடன் தாவணியை வலை போல் வீசுகையில் அவர் புரியும் ஆனந்தப் புன்னகைக்கும்..

குறைந்தபட்சம் நூறு வித்தியாசங்கள்.
******

பாடலின் நடுவே, தன் நெஞ்சோடு கவிழும் புன்னகை அரசியின் பூவிருக்கும் கூந்தலில் அழுந்த ஒரு முத்தம் தருகிறார்... நடிகர் திலகம்.

அந்த கூந்தல் பூ வாடியிருக்கலாம்.

ஆனால்... அந்த வாசனை முத்தம் மணத்திருக்கும்...

இந்தப் பாடல் போலப் பல நூற்றாண்டுகளுக்கு.



Sent from my P01Y using Tapatalk