Page 16 of 16 FirstFirst ... 6141516
Results 151 to 157 of 157

Thread: Padalgal Palavidham - பாடல்கள் பலவிதம்

 1. #151
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  சிவாஜி பாட்டு-30
  -------------------------------

  என்னை அழ வைத்த கவிதைகள் ஏராளமாயிருக்கின்றன.

  என் கவிதை, நண்பரொருவரை அழ வைத்தது.. எனக்கே வியப்பு.

  என் தந்தை மறைந்து ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு, அவரது நினைவு நாளில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

  அவரைக் குறித்த என் நினைவுகளோடு நீண்ட அந்தக் கவிதையை இப்படி முடித்திருந்தேன்...

  "ஜென்மமெனும் பாத்திரத்தில்
  ஒரு பிச்சையாய் விழுந்தது
  உன் மரணத்தின் கௌரவமாயிருக்கலாம்.

  ஆனாலும்..
  அப்பா..!
  இன்று... இப்போது
  நீ
  ஒரு விதவையின்
  புருஷன்தானே..?"

  -கவிதை எழுதிய காகிதத்தை அந்த நண்பரிடம் வாசிக்கக் கொடுத்த போது, உள்ளூர எனக்கு "திக் திக்".

  காரணம்... அந்த நண்பர் நல்ல கவிஞர். மிகச் சிறந்த இலக்கியவாதி. தேர்ந்த விமர்சகர். என்னத்தையோ எழுதி அவரிடம் பாராட்டெல்லாம் வாங்கவே முடியாது.

  நீண்ட நேரமாக கவிழ்ந்த தலையை நிமிர்த்தாமல் படித்துக் கொண்டிருந்தவரை குனிந்து உற்றுப் பார்த்தேன். அதிர்ந்தேன். அவர் அழுது
  கொண்டிருந்தார்.

  அழுது முடித்து ஆசுவாசப்பட்ட பிறகு அவரே அழுகைக்குக் காரணம் சொன்னார்.

  "உங்கள் கவிதையின் ஏக்கத்தில், கோபத்தில் இருக்கிற நிஜம்தான் என்னை அழ வைத்தது."

  நிஜமான கலைவடிவங்களுக்கு கிடைக்கிற மரியாதை அலாதியானது.

  நிஜத்தைப் பாடல் வடிவமாக்கிக் கொண்ட இந்த
  "முத்துக்களோ கண்கள்" அதற்கு ஒரு உதாரணம்.
  ******

  "டிங்.. டிங் டிங்..டிங்
  டிங்.. டிங் டிங்..டிங்"
  - ஒரு சின்ன எதிரொலியோடு இனிமையாய் வந்து விழும் துவக்க இசையே, காதலில் வீழ்ந்த ஒரு ஆடவனின் கனவுத் துவக்கம் என்று நிச்சயப்படுத்த மெல்லிசை மாமன்னரால் முடிகிறது.

  இரவில் இந்தப் பாடலோடு தூங்கினால், காலைப் பொழுதும் இந்தப் பாடலுடனேயே விடிகிறது.
  *******

  கனவு காணும் நாயகன், ஏழை. சாதாரணனுக்கும் கீழான சாதாரணன். வாழ்க்கை, வறுமைக் கரங்கள் கொண்டு அவனது உடைகளைக் கிழித்தாலும், அவனது உடைக் கிழிசல்களுக்கூடாக அவனது நம்பிக்கை சிரித்தது.

  அவன் நல்லவன். கனவிலும் யாருக்கும் தீங்கு நினையாதவன். கனவில் வரும் நாயகி இவனுக்கு மாலை சூட்டுகிறாள். அவள் தோளில் கிடக்கும் மாலையை அவளேதான் சூடிக் கொண்டிருக்கிறாள்.

  நாயகன் கண்ணியமானவன். கனவிலும் யாருக்கும் தீங்கு நினையாதவன்.
  ******

  சர்க்கரை டப்பா காலியாய்ச் சிரிக்க, கசப்புக் காப்பி குடித்து முடிக்கும் தருவாயில், தம்ளர்
  விளிம்பில் ஒட்டிக் கிடந்த ஒரு சீனித் துணுக்கு நாக்கில் பட்டு கொடுக்கிற இனிப்பாய்..

  நாயகனின் நீளமான கசப்பு வாழ்க்கைக்கூடே இந்தக் கனவுக் காதல்... கொஞ்சமாய்த்
  தித்திப்பு.
  ******

  வியர்வை மினுக்கும், யதார்த்த வாழ்வின் அடையாளங்களாய் நமக்குப் புலப்படும் இந்த இருவரின் ஒப்பனையற்ற முகங்கள்... வழமையான தமிழ் சினிமா கனவுப் பாடல்களை
  விட்டு வெகுதூரம் தள்ளி நின்ற
  அறுபதுகளின் ஆச்சரியம்.
  ******

  ஒரு நல்ல நடிப்புக்கலைஞனின்
  கலையொழுக்கத்திற்கு எல்லையோ, முடிவோ இல்லை என்பதற்கு இந்தப் பாடலில் ஒரு உதாரணம் வைக்கிறார்... நடிகர் திலகம்.

  பாடலின் துவக்கத்தில் ஒரு முறை மல்லாந்து படுத்துக் கொண்டு, புன்னகை அரசியின்
  பக்கம் முகம் திருப்பி "முத்துக்களோ கண்கள்" என்று பாடுகிறார்.

  படுத்துக் கொண்டு பாடும் போதும் அத்தனை தத்ரூபமான வாயசைப்பு.
  ******

  பாடல் முழுதும் நடிகர் திலகம் காட்டுகிற உற்சாக முகபாவங்கள், இதழ் விட்டு நீங்காத அற்புதப் புன்னகை...

  எல்லாமே, நம்மையும் ஒரு காதல் உலகம் நோக்கி கைபிடித்து அழைத்துச் செல்பவை.
  ******

  புன்னகை அரசியை முன் நிறுத்தி, இழுத்து அணைத்துத் தன் நெஞ்சோடு இறுக்கிக்
  கொள்கிற நடிகர் திலகத்தின் நடிப்பு வெளிப்பாட்டில், வாராது வந்த மாமணியான தன் காதலை நழுவ விடப் பிரியமில்லாத ஒரு எளியவன் நமக்குக் காட்சிப்படுகிறான்.
  ******

  கனவுக் காதலியின் தாவணி உருவிய வெற்றி மதர்ப்புடன் கூடிய நடிகர் திலகத்தின் புன்னகைக்கும், ஒரு தேர்ந்த மீனவனின் லாவகத்துடன் தாவணியை வலை போல் வீசுகையில் அவர் புரியும் ஆனந்தப் புன்னகைக்கும்..

  குறைந்தபட்சம் நூறு வித்தியாசங்கள்.
  ******

  பாடலின் நடுவே, தன் நெஞ்சோடு கவிழும் புன்னகை அரசியின் பூவிருக்கும் கூந்தலில் அழுந்த ஒரு முத்தம் தருகிறார்... நடிகர் திலகம்.

  அந்த கூந்தல் பூ வாடியிருக்கலாம்.

  ஆனால்... அந்த வாசனை முத்தம் மணத்திருக்கும்...

  இந்தப் பாடல் போலப் பல நூற்றாண்டுகளுக்கு.  Sent from my P01Y using Tapatalk

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #152
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  சிவாஜி பாட்டு- 31
  ------------------------------

  ஆணுக்கு பெண் மீதான மோகமும், பெண்ணுக்கு ஆண் மீதான அளவு கடந்த காதலும்..
  கிட்டத்தட்ட விஷம் போலத்தான்.

  அப்படியே உறைந்து போக வைக்கிற விஷம்.

  தன்னைத் தவிர அத்தனையும் மறக்கடிக்கிற விஷம்.

  ஆபத்து, அபாயங்களை எல்லாம் அலட்சியம் செய்யும் இரண்டு அன்புள்ளங்களுக்குள் ஒரு பாம்புக் கொத்தலுக்குப் பிறகானது போல் "சுர்" என்று ஏறுகிற விஷம்.

  கொல்லாமல் கொல்லுகிற விஷம்.

  அதனால்தானோ என்னவோ விஷத்தோடு தொடர்புடைய பாம்போடு தொடர்புடைய ஒரு
  இசையின் சாயலோடு இந்தக் காதல் பாடல் துவங்குகிறது.
  *******

  "இதை ஆனந்தன் கடைல குடுத்துடு. இந்தா.. இதை ஜாஹிர் உசேன் கடைல குடுத்துடு. பாக்கியில்லே.. முழுசாக் குடுத்தாச்சுன்னு அப்பா சொல்லச் சொன்னாருன்னு சொல்லிக் குடுத்துடு."- என்னுடைய சின்ன வயசில் வந்த சில முதல் தேதிகளில் பணத்தைக் கட்டுக் கட்டாய்ப் பிரித்து, ரப்பர் பேன்ட் போட்டு அப்பா என்னிடம் கொடுத்து விட்டதுண்டு.

  சின்னதான சட்டை பணக்கற்றைகளால் நிரம்பி வழிய, கடைகளை நோக்கி தார்ச்சாலையில் நடந்து போக.. அத்தனை பெருமை..அந்த வயசில்.

  பிறகு, வருஷங்கள் உருண்டோடி, நானும் வேலைக்குப் போய், முதல் சம்பளம் வாங்கின சாயங்காலம் வீடு திரும்பும் போது மனசில் வந்த கர்வமிகு சந்தோஷம்,சின்ன வயசுச் சந்தோஷத்தை சின்னதாக்கி விட்டது.

  ஏதோ ஒரு ஈர்ப்பினால் ஒரு ஆண், அழகான பெண்ணொருத்தியுடன் அறிமுகமான கையோடு அன்பு கொண்டு காதலாவது... அப்பன் காசோடு ஆனந்தமாய் நடப்பதைப் போல.

  ஆசையாய் நேசித்தவள் தனக்கே தனக்கென்று வந்து விட்ட பொழுதில், மகிழ்வான மகிழ்வாய் காதலாகிக் கசிந்துருகும் சந்தோஷம்... சுயமாய் உழைத்துச் சம்பாதித்த காசோடு கர்வமாய் நடப்பதைப் போல.

  இந்தப் பாடலில், சுய சம்பாத்தியத்தோடு நடந்து
  போகிற சந்தோஷத்தைப் பார்க்கலாம்... நடிகர் திலகத்தின் முகத்தில்.
  ******
  பிரமிப்பாகத்தான் இருக்கிறது...

  சோகப் பாடல்களென்றால், இரும்பாய்,பாறையாய் இறுகிப் போகிற அதே முகத்தில், இந்த மாதிரி காதல் பாடல்களுக்கு நந்தவனத்தையே உருவாக்குகிற நடிகர் திலகத்தை.. நினைக்க, நினைக்க.

  அய்யா நடிகர் திலகத்தின் புன்னகை ஒரு புது மொழி.

  மரபுக் கவிதை போல் இலக்கணமாகவும், புதுக்கவிதையாய் கட்டுடைத்த வடிவமாகவும் அந்த மொழி நம்மை இனிதே சேர்கிறது.

  "பெண்ணே... நீ தலை முதல் கால் வரை பரவ விட்ட அழகை, நான் உதட்டின் மேலேயே உட்கார வைத்து விட்டேன்..பார்த்தாயா?" - என்று அந்தப் புன்னகை மொழி, நாட்டியப் பேரொளியிடம் கேலி பேசுகிறது.

  அந்த மொழி மௌனப்படும் வேளையிலும் ஆயிரம் அற்புதங்களைப் பேசுகிறது.
  ******

  நடிகர் திலகத்திற்காகப் பாடப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவற்றை தெய்வீகப் பாடகர் அமரர் அய்யா டி .எம் .எஸ். அவர்களே பாடி விட்டதால், வேறு குரலை அய்யனுக்குப் பொருத்திப் பார்க்க மறுப்போர் உண்டு.

  அது,நியாயம்.

  வேறு எந்தப் பாடகர் நடிகர் திலகத்துக்குப் பாடினாலும், அநியாயத்துக்கு மறுப்போர்
  கூட்டமும் உண்டு.

  அப்படிப்பட்டோரின் வாயடைத்த அற்புதப் பாடல்களின் பட்டியலில் ஆரம்பத்திலேயே வருகிற பாடலிது.

  பாடல் வரிகளுக்கு மிகச் சரியான உதட்டசைவு மட்டுமே நடிப்புப் புலமையாகாது என்பதை நடிகர் திலகம் கற்றுக்கொடுக்கிறார்..இந்தப் பாடலில்.

  "பொன்னே சொல்..ஏன் த்யானம்?" என்று பாடினால் வாயசைப்பில் ஒரு கேள்வி வந்து நிற்கிறதே... அது புலமை.

  நிலவடிக்கும் மொட்டை மாடியில் தன்னை விட்டு நழுவி ஓடும் மனைவியிடம், "வெட்கம் ஏனோ.. வா என் பக்கம்."-எனப் பாடுகையில் ஒரு ஏக்கம் த்வனிக்கிறதே... அது புலமை.

  தென்னங்கீற்றுகளை வகுந்து கொண்டு, அந்த மொட்டை மாடியின் இன்னொரு நிலவு போல புன்னகை முகம் நீட்டி, "போனால் வராது... இது போலே காலமினி" என்று பாட..

  'உண்மைதான். உங்கள் காலம் இனி வேறு யாராலும் வராது' என்று எங்களை அந்த "தெய்வப் பிறவி" எதிர்ப் பாட்டு பாட வைத்தாரே... அது புலமை.  Sent from my P01Y using Tapatalk

 4. #153
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  சிவாஜி பாட்டு-32
  -------------------------------

  கண்ணம்மாள் என்று பெயர் என் பாட்டிக்கு. என் அம்மாவின் அம்மா. கண்ணுப் பாட்டி என்போம் நாங்கள். பாசக்காரி.

  பள்ளி விடுமுறையில் அவளிருந்த கிராமத்துக்குப் போனால் சற்றே பருமனாக்காமல் ஊர் திருப்ப
  மாட்டாள். வயிற்றுக்கோ, பிற மனிதர்களுக்கோ வஞ்சகம் நினைக்காத நல்ல மனசுக்காரி.

  காது சுத்தமாகக் கேட்காது. வாய்ப் பேச்சும் வராது.
  மிகச் சிரமப்பட்டுப் பேசினாலும் வார்த்தைகள் சரியாக வந்து விழாது.

  ரொம்பவும் கஷ்டப்பட்டவள். அவள் கணவர், என் தாத்தா.. எங்கள் காலத்தில் என்னவோ கண்ணுப் பாட்டியை சீரும், சிறப்புமாய் வைத்துக் காப்பாற்றினார்தான். ஆனால், என் அம்மா,சித்தி, மாமாக்கள்எல்லோரும் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில்,சொல்லாமல், கொள்ளாமல் சில
  வருடங்கள் தன் பிழைப்பைப் பார்த்துக் கொள்ள
  ஒடி விட்டாராம். அந்தக் காலகட்டத்தில் அவள் பட்ட வேதனையும், அவமானங்களும் தந்த நெருப்பு
  கடைசி வரை அவளிடமிருந்தது.

  அந்த நெருப்பில், தன்னிடம் எந்தக் குறைபாடுமில்லாமல், கணவன் என்ன தவறிழைத்தாலும் பொறுத்துப் போகும் சராசரிப் பெண்களுக்கான சூடு இருக்கும்.

  மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளோடு அவள் வாழ்க்கையை ஜெயித்த
  கதையை, அவளது தத்துப் பித்துப் பேச்சிலேயே நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

  "ச", "ர".. இப்படி என்ன எழுத்தானாலும் அவள் உச்சரிப்பில் "க" என்றே ஒலிக்கும்.

  நான் கூட வேடிக்கையாகச் சொல்வதுண்டு. " நான் இப்பகொஞ்ச நாளாத்தான் கவிதைல்லாம் எழுதுறேன்.ஆனா..நான் பொறந்ததுல இருந்தே என்னை "கவி"ன்னு சொல்றது (ரவி -கவி) கண்ணுப்பாட்டிதான்".

  அம்மா கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.

  உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
  செயலால் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
  ******

  ஒரு அலுவலகத்தில், ஒரு விண்ணப்பம் எழுத வேண்டிய சூழலில் ஒரு வெள்ளைக் காகிதம் தேவையாயிருந்தது.

  அருகிலிருந்த மேஜைக்குப் பின்னே இருந்தவரிடம் கேட்டேன். இரண்டு காகிதங்கள் இணைந்த ஷீட் ஆகக் கொடுத்தார்.

  "ஒரு பேப்பர் போதும் சார்" என்றவுடன் அவர் சிரித்த போதுதான் கவனித்தேன்... அவரது இடது தோளுக்குக் கீழ் கையே இல்லை என்பதை. ஒரு
  கையே இல்லாதவர் காகிதத்தை எப்படி ஒற்றையாகக் கிழிப்பார்?

  கேள்வியோடு நான் தவித்தேன். அவர் ஷீட்டை எடுத்து மேஜை மீது வைத்து, வலது கை விரல்களால் அதன் மடிப்பில் கூராக நீவிய பின், வெள்ளை ஷீட்டை விரித்து, கூராக நீவியதின் முனையில் லேசாக கிழித்து விட்டுக் கொண்ட பின், இரண்டு விரல்களால் காகிதத்தை அழுத்தி நகர்த்திக் கொண்டே வந்தார்... தையல் இயந்திரத்தில் ஒரு துணி நகர்வதைப் போல.

  மிகச் சில நொடிகள்...

  அவர் என்னிடம் தந்த ஒற்றை வெள்ளைத்தாளில் கிழிக்கப்பட்ட ஓரம் எது என தேடுகிற மாதிரி அந்தக் காகிதக் கிழிப்பில் ஒரு இயந்திர நேர்த்தி.

  இரண்டு கைகள் கொண்ட நாமெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு கவனமாய் காகிதம் கிழித்தாலும் ஏதோ ஒரு இடத்தில் கோணலாய்க் கிழிகிறது.

  இவரால் எப்படி முடிகிறது என்கிற என் அன்றைய ஆச்சரிய விழி விரிப்பு இன்னமும் நீடிக்கிறது.

  உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
  செயலால் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
  ******

  கன்னையனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

  சிவகங்கையில் அமுதா என்றொரு திரையரங்கம் இருந்தது. மனித வாழ்க்கையை, அதன் இன்ப, துன்பங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல எல்லோரையும் பார்த்துக் கொள்ள வைத்த நடிகர் திலகத்தின் படங்களையும் அந்த திரையரங்கம் காட்டியது.

  அந்த வரிசையில் அது "பாகப்பிரிவினை"யைக் காட்டிய போதுதான் கன்னையன் என் கண்களின் வழியாக மனசுக்குள் வந்தான்.

  நடிகர் திலகம் என்கிற மகாகலைஞனிடமிருந்து வெளிப்பட்டு, தனது தனித்தன்மையை இழந்து விடாமல் ரங்கனாய், ராமனாய் நம் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்பவர்களில் இதோ.. இந்த
  கன்னையனும் ஒருவன்.

  திறமையாளர்களால் கற்பிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம், காலத்தை மீறி ஏதோ நம் நெருக்கமான சொந்தக்காரன் போல் வாழ்நாள் முழுதும் நம்முடன் வரும் அதிசயம், நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்வது.

  கன்னையன் தன் ஊனத்தை நினைத்து வெகுவாக வருந்துகிற போதும், சூடான பானம் தரப்பட்ட ஒற்றைக் கையின் சூடு தாங்காமல் தவிக்கிற போதும், அவனுடைய வேகத்திற்கு அவனது ஊனமே தடை போட்டாலும், அதையெல்லாம் தாண்டி அவனது நம்பிக்கை அவனை வேகமாக செலுத்துவதும், "நம்பிக்கையோடு இருங்கள். ஜெயிக்கலாம்" என்று கன்னையன் உணர்த்துவதும் அந்தச் சின்ன வயதிலிருந்தே எனக்கு புரிதலானது. பிடித்தமானது.

  திருவிழா என்று ஆட்டமும்,பாட்டமுமாய் ஊர் ரெண்டுபட, இயலாமையை முன்னிறுத்தி
  வீட்டோடு முடங்கி விடாது,மடங்கிப் போன இடது கையும், இயங்காமல் விறைத்துப் போன
  இடது காலும் ஒரு புது வித நடனம் உண்டு பண்ண, தானும் களமிறங்குவதோடு மட்டுமல்லாமல், வழக்கம் போல் இந்தக் களத்தையும் தனதாக்கிக் கொள்கிற என் கன்னையனை மிகவும் பிடிக்கும்.

  உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
  செயலால் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.  Sent from my P01Y using Tapatalk

 5. #154
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  சிவாஜி பாட்டு- 33
  --------------------------------

  கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில், கலங்க கலங்க நம்மை அழ வைப்பவர்களை நமக்குப் பிடிப்பதில்லை.
  ******

  அருகிலிருந்த மாணவன் செய்த குறும்பைக் கண்டித்த என்னை, நான் தவறு செய்து விட்டதாகக் கருதி, இரண்டு காதுகளையும்
  பிடித்து தன் தலைக்கு மேலே தூக்கிய என் இரண்டாம் வகுப்பு ஆசிரியரின் மேல் இன்று வரை கோபமிருக்கிறது எனக்கு.

  அவர் உயரத்தில் தூக்கிய போது நான் கீழே உணர்ந்த அவமானப் பள்ளம், மிக ஆழமானது. அந்த அவமானத்தில் உந்தப்பட்ட என் கண்ணீர், வருஷங்கள் தாண்டி நீளமானது.

  கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில், கலங்க கலங்க நம்மை அழ வைப்பவர்களை நமக்குப் பிடிப்பதில்லை.
  ******

  ஆனால்...

  திரைப்படம் என்கிற பெயரில் ஒரு மகாகலைஞனின் மாசற்ற திறமைகளை நமக்கு முன் திரையிட்டுக் காட்டிய "தெய்வ மகன்" பார்த்த போது...

  அதில் "கண்களால் பேசுதம்மா" என்கிற உன்னதப் பாடலைப் பார்த்த போது...

  "அழ வைப்பவர்களைப் பிடிக்காது" என்கிற எனக்குள் திண்மையாய் இறுகிக் கிடந்த அனுபவ தத்துவம், தூள் தூளாய் நொறுங்கிப் போனது.

  ஒற்றை ஆள் ஒரு முறை அழ வைத்தாலே ஜென்மத்துக்கும் பிடிக்காமல் போகுமே.. முன்பெல்லாம்? இங்கே... ஒருவரல்ல.. இருவரல்ல..ஆறு பேர் நம்மை கதறக் கதற அழ வைக்கிறார்கள்.

  ஆனால்... அத்தனை பேரையும் பிடிக்கிறது.

  'காலம் சென்ற' அல்ல... 'காலம் வென்ற' நம் கவியரசர் தன் இதயப் பேனாவுக்குள் உண்மைப் பாசத்தை மையாய் ஊற்றிக் கொண்டு எழுதி, எழுதி அழ வைக்கிறார். பிடிக்கிறது.

  பாடலில் காட்டப்படும் விரிந்து பரந்த அந்த ஆலயத்தில் ஒரு அன்னையின், ஒரு பிள்ளையின் மனசுகளை இசையால் பேச வைத்து, மெல்லிசை மன்னர் அழ வைக்கிறார். பிடிக்கிறது.

  "பெண்ணோடு பேசுதம்மா..பெற்றெடுத்த வயிறு.." -அந்த "வயிறு" எனும் சொல்லைப் பாடும் போது நடுங்க விடும் குரலில், "இனம் புரியா.." என்று
  உச்சஸ்தாயியில் உயர்த்தும் குரலில் அமரர் சீர்காழியார் அழ வைக்கிறார். பிடிக்கிறது.

  இப்படி ஒரு உணர்ச்சிமயமான உருக்கும் பாடலை, கற்பனை செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், அதைக் காட்சியாக நம் கண்களில் விரித்து இயக்குநர் அமரர் ஏ .சி . திருலோக்சந்தர் அழ வைக்கிறார். பிடிக்கிறது.

  அம்மா வேஷமே போடுவதால் "பண்டரிபாய்" இல்லை, " பண்டரித்தாய்" என்று நண்பர்கள் சிலர் கேலி செய்வார்கள். இந்தப் படம் பார்த்த பிறகு அவர்களைக் கண்டித்திருக்கிறேன். சொல்லத் தெரியாத பிள்ளைப் பாசத்தை,நொண்டியடிக்கும் ஒரு தவிப்பு நடையால் விளக்கி பண்டரிபாய் அம்மா அழ வைக்கிறார். பிடிக்கிறது.

  ஊமையில்லை.. ஆனால் பேச, பாட வார்த்தையில்லை. ஒரு இயக்குநரின் சிந்தனையில் உதித்த பாத்திரத்தை அப்படியே
  தன்னிலிருந்து வெளிக்காட்டும் திறமைக்கு ஈடு இணையில்லை. நம் நடிகர் திலகம்- படத்தின் தலைப்பை நிஜமாகவே நிரூபிக்கும் தெய்வ மகன்.

  தெய்வ மகன்- பிறப்பிலிருந்தே பெற்ற தாயைப் பிரிந்திருக்கிறவன் இவ்வாறுதானிருப்பான் என்று காட்டுகிறார். பிடிக்கிறது.

  அகல விரித்த கண்களின் வழியாக, அன்பே உருவான அன்னையை விழுங்கப் பார்க்கும் செயலால் அய்யன் அழ வைக்கிறார். பிடிக்கிறது.

  சுடர் மினுக்கும் தூணுக்குப் பின்னால் நின்று உதடு பிதுக்கி அழுது அழ வைக்கிறார். பிடிக்கிறது.

  அய்யன் தன் முகத்தை ஒரு பாத்திரம் போலாக்கி, அன்பை யாசித்து அழ வைக்கிறார். பிடிக்கிறது.

  வரிசையில் கடைசியில் நின்று கை நீட்டி யாசிக்கையில், அன்னை கை நிறைய அள்ளித்
  தந்த நாணயங்களை சிதற விட்டு, அன்னையின் திருமுக அழகை மனசுள் சேகரிக்கிற பாச யதார்த்தத்தில் அய்யா அழ வைக்கிறார். பிடிக்கிறது.  Sent from my P01Y using Tapatalk

 6. #155
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  சிவாஜி பாட்டு -34
  ----------------------------------

  "வெள்ளிக் கிண்ணந்தான்" -

  இவர்கள், பாடிக் காதலிக்கிறார்கள்.

  நாம், பாடுபவர்களைக் காதலிக்கிறோம்.

  பாடலைக் காதலிக்கிறோம்.
  *****

  நாயகரின் கம்பீர வீற்றிருப்பை ஒரு நாற்காலி
  ஏந்தியிருக்கிறது.

  கால் மேல் கால் அணிந்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் கலை நாயகர், காதல் நாயகியின்
  வரவு கண்டு மலர்ந்து, மெல்லக் கால்கள் பிரித்து,
  லாவகமாய் நாற்காலியின் கைப்பிடியில் கையூன்றி எழுவதாய் பாடலின் துவக்கத்திலே
  ஒரு பாவனை.

  அதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது..
  அய்யன் தன்னை விலகி எழுந்து போனதும் அந்த
  நாற்காலி இவ்வாறு புலம்பியிருக்குமோ?

  "தெரியாத்தனமாக நான் சிக்கி விட்டால், ஆண்டாண்டு காலங்களாய் என் மீது ஏறிக் கொண்டு, நான் அழுக்காகி, தேய்ந்து, உடைந்து போகிற வரைக்கும் என்னை விடாதவர்கள் எண்ணற்றோர். அவர்களுக்கெல்லாம் என் மீது
  இருந்த பற்று, அவர்கள் மீது எனக்குக் கொஞ்சமும் கிடையாது. நான் விரும்பும் தலைவா..
  எனக்குப் பெருமையான உன் சில நிமிட அமர்வு
  காலகாலத்திற்கும் எனக்குக் கிடைத்து விடலாகாதா?"
  *****

  நல்லவர்களிடம் ஆசை இருக்கும். பேராசை இருக்காது. "எனக்கு.. எனக்கு" என்கிற அலையல்
  இருக்காது.

  தனக்குத் தேவையானது தவிர்த்து வேறெதையும்
  விரும்பாத நல்ல காதலனாய் இதில் வரும் நடிகர்
  திலகத்திடம் இவற்றை உணரலாம்.

  வெள்ளிக் கிண்ணங்களில் பால் நிரப்பிக் கொண்டு காதல் மனைவி சிரித்து வருகிறாள்..
  முதலிரவு அறைக்குள். அவன் முன் அவள் நீட்டிய
  வெள்ளித் தம்ளர் பாலை அவன் ஏறெடுத்தும்
  பார்க்கவில்லை. தனக்கு எதையோ தந்தாளே..
  அதை வாங்கி ஓரமாய் வைத்தோமே.. அது என்ன?
  ..ம்ஹூம்.. அந்த மாதிரிக் கேள்விகளை அவன்
  சிந்தனையில் சேர்க்கவில்லை.

  அவனுக்குத் தேவையில்லை பால் என்கிற திரவம்.
  அவன் விரும்புவது திரவம் சுமந்து வரும் அழகான
  உருவம்.
  *****

  முகத்தில் செயற்கையாக ஒப்பனை போலில்லாமல், கண், மூக்கு, உதடு போன்று
  ஒரு அவயமாகவே புன்னகையைப் பொருத்துவது
  நடிகர் திலகத்தாலேயே ஆகும். இந்தப் பாடலிலும்
  ஆக்கியிருக்கிறார்.
  *****

  கட்டில் உண்டு். கட்டிப் பிடித்தல் உண்டு. கன்ன
  முத்தம் உண்டு். மறந்தும் காமமாகி விடாத மகத்தான வியப்பு மட்டுமே அத்தனையிலும் உண்டு.
  *****

  நீர் நிலைக்கு மேலே ஒரு பாலம். பாலத்தின் மீது
  காதலர் இருவர். அவர்களும் உருவாக்குகிறார்கள்
  ஒரு நேசப் பாலம். அதில் காதல் நடக்கிறது.
  *****

  அவசியத்திற்கென்று வந்ததும் அழகாகிறது அய்யனிடம். குளிருக்கென்று அணியும் ஸ்வெட்டர்
  நம் கண்களுக்குக் கொண்டு வருகிறது குளிர்ச்சி.
  *****

  கைகளைக் கத்தி போல் நீட்டிக் கொண்டு ஒரு
  ஒயிலான முன் பின் நகர்தலோடும், மெலிதாய்ச் சுழன்று தோள் குலுக்கலோடும் ஆடும் பாடலின் இடையிசைக்கான நடனம், காதல் பாடல்களுக்கு
  இப்படித்தான், இவ்வளவுதான் ஆட வேண்டும்
  என்பதான அறிவுறுத்தல்.
  *****

  பாத்திரம் நிறைய பாயசம் இருந்தால்தான் தம்ளர்களில் நிரப்பி அடுத்தவர்களுக்குத் தர முடியும். ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவனாலேயே
  பணம் கேட்டவனுக்கு ஐநூறாவது தர முடியும்.
  சொல்வதற்கு இன்பமான விஷயங்கள் ஏராளமாக
  வைத்திருப்பவனாலேயே "இன்னும் சொல்லவோ"
  என்று ஆனந்திக்க முடியும். "இன்னும் சொல்லவோ" என்று அய்யா பாடும் போது முக
  நிறைவைக் கவனியுங்கள்.. புரியும்.. நிறைய வைத்திருப்பவனின் நிறைவு.
  *****

  "காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன?"
  ஒரே வரி.

  தன்னுடையவள் காலத்தை நிறுத்திப் பார்க்கிற மாயக்காரி என்பதைச் சொல்ல வருகிற ஒரு பெருமித பாவனை.

  காலத்தையே நில்லென்று சொல்லி விட்டவள்
  தன்னுடையவள் என்று கண்களால் காட்டுகிற
  கர்வ பாவனை.

  ஒரே வரி். இரண்டு பாவனை.

  உயரக் கை தூக்கிக் குவித்து வணங்குகிறேன்..
  என் உள்ளக் கோயில் வாழ்கின்ற தேவனை.
  Sent from my P01Y using Tapatalk

 7. #156
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  சிவாஜி பாட்டு - 35
  ---------------------------------

  வீணை இசை என்ன இத்தனை இனிக்கிறது
  என்று விசாரித்தால், வீணை பலா மரத்தில்தான்
  செய்யப்படுகிறதாமே?

  அதுவும் "வாணி"யே மீட்டினால்.. இனிமைக்கா
  பஞ்சம்?
  *****

  மிதமிஞ்சிய ஒப்பனை அழகு. கற்பழிக்க விரட்டும்
  தடியர்களிடமிருந்து காப்பாற்றும் கதாநாயகனின் மீது காதல். நாலு ஜோடிப் பாட்டு. நடிப்பதற்கே
  வாய்ப்பில்லாத காட்சிகள்... இப்படியான கதாநாயகி நடிகர் திலகத்தின் படங்களில் காணக்
  கிடைக்க மாட்டாள்.

  நவராத்திரியில், பாசமலரில் - நடிகையர் திலகம்,

  நெஞ்சிருக்கும் வரை, இரு மலர்களில் - புன்னகை
  அரசி,

  பாலும் பழமும், ஆலயமணியில் - அபிநய சரஸ்வதி,

  அவன்தான் மனிதன், எங்கிருந்தோ வந்தாளில் -
  கலைச் செல்வி,

  வசந்த மாளிகையில், சிவகாமியின் செல்வனில் -
  வாணிஸ்ரீ...

  சராசரி நாயகிகளில்லை.. சாதித்த நாயகிகள்.

  நடிப்பென்பதின் மனித உருவமாய்த் திகழ்ந்த
  எங்கள் நடிகர் திலகத்தின் நேர் நின்று, பேர் வென்று சாதித்த நாயகிகள்.
  *****

  " ல(த்)தா"-

  மறக்க முடியாத பெயர்.

  கதவிடுக்கில் சிக்கிய பல்லியாய் அன்றாடங்களின் பிடியில் சிக்கி அல்லலுறும்
  மனிதர்களுக்கு சினிமாக் கொட்டகைகள் ஆறுதல் தளமாகின்றன.

  எல்லோருக்குமே சினிமா என்பது பொழுதுபோக்கில்லை. தன்னை, தன் கஷ்ட நஷ்டங்களை திரையும் உலவும் பிம்பத்தோடு
  பொருத்திப் பார்த்துக் கொண்டு, ஒப்பிட்டுக் கொண்டு சந்தோஷிக்கவோ, வருந்தவோ செய்யும்
  சாதாரணர்களுக்கு சினிமா ஒரு திருத்தலம்.

  வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி் போல்
  அலங்காரப் பதுமையாக மட்டும் வளைய வராமல், நடுத்தரக் குடும்பங்களில் திடீர் திடீரெனச் சூழும் இருளை விரட்டும் சுள்ளென்ற சூரியப் பெண் ல(த்)தாவை தமிழ் மக்கள் வசந்த மாளிகையில் கதாநாயகியாகப் பார்த்தார்கள்.

  ஒரு அடிமைத் தனம் கிடையாது. பிறையில் ஏற்றி
  வைத்த தீபமாட்டம் அழகில் அலப்பல் கிடையாது.
  காசென்றால் வாய் பிளக்கும் கேவலம் கிடையாது.
  எந்தவொரு சூழலிலும் தன் கம்பீத்தை சிறிதும் இழக்காத கதாநாயகி, தமிழ்த் திரைகள் பழகாத புதுசு.

  அன்புக்கு சந்தனமாய் குழைவதும், அதிகாரத்தை
  திராவகமாய் பொசுக்குவதுமாய் ஒரு குணம்.

  தன்மானத்தைச் சீண்டிப் பார்க்கிறவன் காதலனே ஆனாலும், அவனே தனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளியாய் இருந்தாலும், துணிந்து நெற்றிக் கண் திறக்கிற ல(த்)தா என்கிற கதாநாயகியை, நான் வசந்த மாளிகையை முதன் முதலாகப்
  பார்த்த அந்தச் சின்ன வயசிலேயே பிடித்துப் போனது.

  "ல(த்)தா"-

  மறக்க முடியாத பெயர்.

  ( தலைவர், "லத்தா" என்று அழைத்து அழகாக்கிய
  பிறகு "லதா" வாவது..? "லத்தா" தான்! )
  *****

  அந்தக் கால இரவுகளில் என்னோடு அதிக நேரம் வசித்த வானொலிப் பெட்டியிலிருந்து "அடுத்ததாக வசந்த மாளிகை படத்திலிருந்து ஒரு பாடல்" என்று குரல் வந்தால், எம். ஆர். ஆர். வாசு அறைக்குள் நுழைந்து உருட்டிய சத்தம் கேட்டு, கண் தெரியாத தவப்புதல்வன் நிர்மல் காதோடு
  கை குவித்து கவனமாதல் போல நானும் ஆவலோடு காது தீட்டிக் காத்திருப்பது... இந்தப்
  பாடலுக்காகத்தான்.

  நன்றிகளுக்குரிய கவியரசர் நடிகர் திலகத்தை
  வீணையாக உருவகப்படுத்திய போதே பாடல்
  ஜெயித்து விட்டது.

  "கலைமகள் கைப்பொருள்" கலைமகளின் மடிமீது
  கிடக்கிறது.. குழந்தை போல. மடி கிடத்திப் பார்த்த
  கலையன்னைக்குத் தன் திறமை நாதத்தால் பெருமை சேர்த்த குழந்தைதானே நம் நடிகர் திலகம்?

  "கவனிக்க ஆளில்லையோ"...

  கவனிப்பு - அன்பு மிகுந்த அக்கறை.

  சரியான விரல்களால் மீட்டப்படாத அற்புதமாய்
  நாயகன். நாதம் நிரம்பிய வாத்தியம் நல்லிசை
  தாராமல் வீணாகிறதே என்கிற நாயகியின் கவலை, பாடலாகியிருக்கிறது.

  கவலை எவ்வளவு இனிமை கேளுங்கள் என்கிறார்
  திரை இசைத் திலகம்.

  நாயகன் குறித்த நாயகியின் கவலையை மூன்று
  பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் .. கவியரசரும், திரை இசைத் திலகமும்.

  "உன்னிடம் ஆயிரம் ராகங்களே - என்றும்
  உனக்குள் ஆயிரம் கீதங்களே..
  இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் - இல்லை
  எனக்கேனும் வழிகாட்டுங்களேன்!?"

  - அக்கறை. காதல் மிகுதியில் கசியும் கரிசனம்.
  கெட்டழியும் காதலனை நல்வழிப்படுத்த வேண்டும்
  என்கிற துடிப்பு. தானே அந்த நல்ல காரியத்தைச்
  செய்ய வேண்டுமென்பதுதான் நினைப்பு. இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் என்பதெல்லாம் சும்மா நடிப்பு.

  "நான் யார் உன்னை மீட்ட?
  வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட?
  ஏனோ துடிக்கின்றேன்..
  அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்..!"

  - சுய பரிசீலனை. காதலனை நல்வழிப்படுத்தும்
  யோக்கியதை தனக்கிருக்கிறதா என்று தனக்குத்
  தானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. தனது தவிப்பையே தன் கேள்விக்குப் பதிலாகத் தரும்
  பரிதாபம்.

  "சொர்க்கமும், நரகமும் நம் வசமே.
  நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே.
  சத்தியம், தர்மங்கள் நிலைக்கட்டுமே.
  இது, தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே."

  - ஏக்கத்தையும், கவலையையும் அறிவுரையாக மாறும் உரிமை. தன் நேசத்திற்குரியவன் மேல்
  தான் கொண்ட அன்பெல்லாம் திரட்டி தாயாகி
  நிற்கிற பெருமை.
  *****

  சுசீலாம்மா ஆயிரம், ஆயிரம் என்று பாடும் போது
  அந்த "ரம்", உள்ளே சிவப்பு பரவிய அறையில்
  தலைவர் ஊற்றி, ஊற்றிக் குடிக்கும் மதுவை விட
  போதை.
  *****

  சிவப்பு வெல்வெட் விரித்த மாடிப் படிகளில் ஊன்றி, ஊன்றி நடந்து வரும் அழகை வி்டுங்கள்..

  வெளிர் நீல உடையணிந்த மெழுகுச் சிலை போல
  நிற்கும் அழகை விடுங்கள்..

  "இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே" என்று
  வாணிஸ்ரீ பாட, உதடு சுழித்துச் சிரிக்கிற அழகை
  விடுங்கள்..

  "ஏனோ.. துடிக்கின்றேன்" என்று அழுது பாடும்
  பெண் குரல் கேட்டதும், நின்று நிமிர்ந்து திரும்பிப்
  பார்க்கும் ஒரு பார்வை போதாதா.. எங்கள் தலைவனை நினைத்து, நினைத்து நாங்கள்
  கொண்டாட..!?


 8. #157
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  சிவாஜி பாட்டு -36
  --------------------------------

  ரசிக்கத்தக்க நல்ல பாடல்கள், அழகான குழந்தைகளைப் போல.

  எந்தக் குழந்தையும் "என்னைக் கொஞ்சு" என்று
  விளம்பரப் பலகை வைத்துக் கொண்டு கெஞ்சுவதில்லை.

  கொஞ்சத் தூண்டும் அதன் அழகே, 'வேறு வழியில்லை.. கொஞ்சியே ஆக வேண்டும்' என்கிற அந்த அழகின் கர்வமிகு நிலைப்பே நாம்
  கொஞ்சுவதற்கான அழைப்பாகிறது.

  இந்தப் பாடலும் ஓர் அழகான குழந்தை. நம் நினைவு வாசல்களில் ஆர்ப்பரித்து விளையாடும்
  குழந்தை. குறும்பு மாறாத, துள்ளலும், வேகமும் மிகுந்த குழந்தை.

  "கொஞ்சாமல் போய் விடு.. பார்ப்போம்" என்று
  செல்லமாய் மிரட்டும் குழந்தை.
  *****

  "தன் நிழலையும்
  தள்ளாட வைக்கிறான்...
  குடிகாரன்"
  - முன்பு நானெழுதிய கவிதை.

  பெரிசாய் தாடி வளர்த்துக் கொண்டு, எந்நேரமும்
  சோகித்துக் கொண்டு, எதையோ பறிகொடுத்தாற்
  போல் எப்போதும் விட்டம் வெறித்துக் கொண்டு
  இருப்பதற்காகத்தான் குடிக்கிறார்கள் என்று நான்
  நினைத்திருந்தது இந்தப் பாடல் பார்த்து மாறியது.

  உறவென்று யாருமற்ற வேதனையை, நல்லதெது,
  கெட்டதெது என்று எடுத்துச் சொல்ல ஆளில்லாமல்
  வளர்ந்த கொடுமையை, மதுப் புட்டி, லாரி, இரவு
  ராணிக்காக தியாகித்த இரவுகள் என்று தன்னைச்
  சுற்றி ஒரே மாதிரியாகச் சுழலும் உலகத்தினின்றும் தன்னைத் துண்டித்துக் கொள்ளவும், அதற்காக இனிமையாகத் தன்னை தண்டித்துக் கொள்ளவும் கூட குடிப்பார்கள் என்பது
  இந்தப் படம் பார்த்து புரிந்தது.
  *****

  "ஒரு இளைஞன் குடித்திருக்கிறான். அத்துடன்
  விடாமல் விலைமாது வீட்டுக்குப் போகிறான் .. ஆட்டம் போடுகிறான்" என்றொரு பாட்டுச் சூழலை
  ஒரு இயக்குநர் சொல்லி, பெண்கள் மிகுதியாகப்
  பார்க்கும் தன் படத்தில் அதை இடம் பெறச் செய்ய
  ஒத்துக் கொண்டு, கொஞ்சமும் விரசமின்றி அதை
  வெற்றியாக்கிச் சாதிக்க நடிகர் திலகமன்றி யார்
  இங்கே?
  *****

  இசைக்கேற்றாற் போல் ஆடுவதும், பாடல் வரிகளுக்குச் சரியாக வாயசைப்பதும் மட்டுமே
  போதும் என்று நாயகன் இருந்திருந்தால் இந்தப் பாடல் ஜெயித்திருக்காது.

  அந்த அழகியோடு அங்கே பாடி, ஆடுவது சும்மா
  ஒரு பொம்மையல்ல. உணர்வுகள் மிகுந்த ஒரு
  உயிர்ப்பான மனிதன். தன்னுடைய வாழ்வின்
  வெம்மைக்காக கவலை கொண்டு சோர்ந்து
  போகாத, தன்னை நோக்கி வரும் இன்ப நிமிஷங்களை வீணாக்கப் பிரியமில்லாத புத்திசாலி. வாழ்வின் கோர முகங்களையும் சந்தித்து வந்த அனுபவசாலி. இரவில் விழித்து
  ஆர்ப்பரிக்கும் ஒரு வீட்டுக்குள்ளிருந்து இந்த
  அவல உலகை விமர்சிக்கும் தைரியசாலி.

  சும்மா ஆடுகிற, பாடுகிற கதாநாயகன் இங்கே
  தேவைப்படமாட்டான்.

  அந்தப் பாடலில் நடிக்க ஒரு வேகம் வேண்டும்.

  வாழ்க்கை மீதும், சக மனிதர்கள் மீதும் பெரிய
  மரியாதை ஏதும் வைத்திராத ஒரு அலட்சியம்
  அந்த முகத்தில் தெரிய வேண்டும்.

  குடியும், காமமும் அப்படியொன்றும் தப்பில்லை
  என்று சொல்ல வருகிற துணிச்சலைக் காட்ட வேண்டும்.

  தனக்குப் பழக்கமான அவலமான வாழ்வை கிண்டலாகவும், கர்வமாகவும் ஆராயும் திறமை
  காட்ட வேண்டும்.

  ஒரு தேர்ந்த கஜல் பாடகனின் கையசைப்பு பாவனைகள்..

  வாழ்வின் மீது எவ்வித மரியாதையும் இல்லாததை
  உணர்த்தும் அந்தக் கர்வக் கண்கள்...

  தன்னுடைய தீய பழக்கங்கள் குறித்து கவலைப்படாததைக் காட்டும் அந்த முகத்தின்
  அலட்சியங்கள்...

  துள்ளலான அந்த ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தின் முழுமைத்
  தன்மை ...

  இவற்றை வைத்துக் கொண்டு நம்மை இந்தப்
  பாடல் வழி வசீகரிக்க ஒரே ஒரு நடிகர் திலகம்
  இருக்கிறாரே..?

  அந்த நாயகனின் ரசிகரென்கிற பெருமை நம் ஆயுசுக்கும் வேண்டும்.Page 16 of 16 FirstFirst ... 6141516

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •