Page 13 of 13 FirstFirst ... 3111213
Results 121 to 123 of 123

Thread: அந்த நாள் ஞாபகம்...

 1. #121
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  3,024
  Post Thanks / Like
  அந்த நாள் ஞாபகம்

  1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்


  கடந்த பதிவின் இறுதி பகுதி

  பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்த நாளன்று நடந்த நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

  இங்கிருந்து பதிவு தொடர்கிறது

  மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக் வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.

  நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.

  வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.

  [எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].

  சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.

  எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது

  உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.

  நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.

  ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்

  இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.

  (தொடரும்)

  அன்புடன்

 2. Thanks gopu1954 thanked for this post
  Likes gopu1954 liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 4. #122
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  3,024
  Post Thanks / Like
  அந்த நாள் ஞாபகம்

  1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

  கடந்த பதிவின் இறுதி பகுதி


  நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.

  இங்கிருந்து பதிவு தொடர்கிறது

  பல ஊர்களிலும் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழா நடைபெற்றபோதும் சென்னையில் விழா பல காரணங்களால் தள்ளிப் போனது. தமிழகத்தின் பல இடங்களிலும் அசம்பாவித நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருந்த காரணத்தினால் கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையாக இருந்தது.

  இந்த நேரத்தில் தீபாவளியன்று வெளியாவதாக இருந்த ராமண்ணாவின் சக்தி லீலை தள்ளிப் போடப்படுகிறது என்ற செய்தி வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் சினிமாவில் ரிலீஸ் ஆவதாக இருந்த சக்தி லீலை தள்ளிப் போடப்படுவதால் பட்டிக்காடா பட்டணமாவே தொடரும் என்ற ஒரு தகவலும் வந்தது. சக்தி லீலை தீபாவளியன்று [நவம்பர் 4] வராது எனபது உண்மைதான். ஆனால் நவம்பர் 10 வெள்ளியன்று வெளியீடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாக தயாரிப்பாளர் அறிவிக்கவே, நவம்பர் 4 முதல் 9 வரை உள்ள 6 நாட்களுக்கு சென்ட்ரல் சினிமாவில் துஷ்மன் இந்திப் படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

  வசந்த மாளிகை தொடர்ந்து வெற்றி பேரிகையை முழங்கிக் கொண்டிருந்தது. தீபாவளியன்று நடிகர் திலகத்தின் புதிய படம் வெளிவராததால் அன்று காலை நியூசினிமாவில் கூட்டம் அலை மோதியது. 6-வது வாரம் சனிக்கிழமை காலைக்காட்சிக்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்கப்பட்டதை பார்த்தோம். அதற்கு முன் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவும் தவப்புதல்வனும் ஷிப்ட் செய்யப்பட்டு ஓட சென்னையைப் பொறுத்தவரை வசந்த மாளிகையும் தவப்புதல்வனும் ரிலீஸ் தியேட்டர்களில் தொடர, பட்டிக்காடா பட்டணமா ஷிப்டிங்கில் தொடர்ந்தது.

  நடிகர் திலகத்தின் அடுத்த ரிலீசாக வெளியாவதாக இருந்த நீதியின் ஒரிஜினல்தான் துஷ்மன் என்பதை தெரிந்திருந்த நானும் என் கஸினும் தீபாவளியன்று மாலை காட்சிக்கு துஷ்மன் பார்க்க சென்ட்ரல் சினிமாவிற்கு போகிறோம். நல்ல கூட்டம். ஆனால் படம் பெரிய அளவிற்கு எங்களை impress பண்ணவில்லை. இந்த கதை தமிழ் சினிமாவிற்கு எப்படி சூட் ஆகும் என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் நடிகர் திலகம், பாலாஜி சிவிஆர் கூட்டணி இருப்பதால் அதை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்தது. மாப்பிளையை பார்த்துகடி மைனா குட்டி பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதை பத்திரிக்கையில் படித்திருந்தோம். அது போல் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல் ரிகார்டிங் செய்யப்பட்டதும் செய்தியாக வந்திருந்தது.

  இந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் நடிகர் திலகம் சினிமா படப்பிடிப்பில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில், நடிகர் சங்க வேலைகளில் மூழ்கி இருக்கும் நேரம், அது அவரது உடல்நிலையை பாதித்து ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவர் vomit செய்ய அதில் ரத்தம் கலந்திருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் பயந்துபோய் டாக்டரை கூப்பிட, டாக்டர் BP சற்று அதிகமாக இருக்கிறது அதனால் ஒய்வு எடுக்கவேண்டும் என்று கூற நாளை காலை எனக்காக செங்கல்பட்டு பக்கத்தில் எல்லா ஆர்டிஸ்ட்ம் காத்திருப்பார்கள். பாலாஜியும் சிவிஆரும் காத்திருப்பார்கள். அவ்வளவு பேர் கால்ஷீட்டும் வேஸ்ட் ஆகிவிடும். நான் போகவேண்டும் என்று கிளம்பி போய்விட்டாராம்.

  அன்றைக்குத்தான் கிளைமாக்ஸ்-ற்கு முந்தைய அனைவரும் பாடும் பாடல் காட்சியான எங்களது பூமி பாடல் படமாக்கப்பட்ட தினம். படத்தில் இந்த பாடல்காட்சியில் மட்டும்தான் அந்த கருநீல டிரைவர் யுனிபார்ம் தவிர்த்து வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி அணிந்திருப்பார் நடிகர் திலகம். ஒரு துப்பட்டாவும் அணிந்திருப்பார். அது சிவப்பு கலரில் இருக்கும். முதல் நாள் இரவு ஏற்பட்டது போல ரத்த வாந்தி வந்தால் அதை அடக்குவதற்கும் மீறி வந்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கும்தான் சிவப்பு கலர் துப்பட்டாவை பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இப்போதும் அந்த பாடல் காட்சியை பார்த்தோம் என்றால் இரண்டு மூன்று ஷாட்களில் அந்த துப்பட்டாவை அவர் வாயின் மேல் பொத்தி பிடிப்பதை கவனிக்கலாம். தன்னால் தயாரிப்பாளருக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற அந்த பெரிய மனதிற்கு தலை தாழ்ந்த வணக்கம்!

  நான் முன்பே குறிப்பிட்டது போல தமிழக அரசியல் வானிலும் பல்வேறு விஷயங்கள் நடந்துக் கொண்டிருந்த நேரம். அதன் எதிரொலியாக பல சம்பவங்கள் நடந்துக் கொண்டிருந்தன. அன்றைய ஆட்சியின் முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் புகார்களை அன்றைய ஆளுநராக இருந்த கே.கே.ஷா அவர்களிடம் எம்ஜிஆர் அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் காட்சி தலைவர் M. கல்யாணசுந்தரம் அவர்களும் கொடுக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த புகார்களை நான் தமிழக அமைச்சரவையிடம்தான் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்க முடியும் என்று ஆளுநர் சொல்லிவிட அதனால் அவரிடம் கொடுத்தை திரும்பபெற்று டெல்லி சென்று அன்றைய குடியரசு தலைவர் வி.வி.கிரியிடம் அளித்தனர். ஆனால் அங்கிருந்தும் அது தமிழக அமைச்ச்சரவையிடம்தான் வந்து சேர்ந்தது என்பது வேறு விஷயம். இதே நேரத்தில்தான் (1972 நவம்பர் மத்தியில்) பாளையங்கோட்டை கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்டார் இதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலையால் மீண்டும் கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டன.

  இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!

  (தொடரும்)

  அன்புடன்

 5. Thanks gopu1954 thanked for this post
  Likes gopu1954 liked this post
 6. #123
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  3,024
  Post Thanks / Like
  அந்த நாள் ஞாபகம்

  1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

  கடந்த பதிவின் இறுதி பகுதி


  இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!

  இங்கிருந்து பதிவு தொடர்கிறது

  பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது.

  பல காரணங்களால் தள்ளிப் போன பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நவம்பர் மூன்றாவது வாரத்தில் நடைபெற்றது, நவம்பர் 19 அல்லது 21 என்று நினைவு. சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். ஏர் கலப்பை மாடலில் நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்கப்பட்டது அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது

  நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியான அதே அரங்குகளில்தான் [பாரடைஸ் அகஸ்தியா ராக்ஸி] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்

  இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் படம் [எங்கள் தங்க ராஜாவிற்கு முன்பாக வேறு ஒரு கதை படமாக்கப்பட்டு அதில் நடிகர் திலகம் ஒரு டாக்டர் ரோலிலும் சௌகார் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்து வந்தனர். பின்னர் அந்த கதை கைவிடப்பட்டு எங்கள் தங்க ராஜா எடுக்கப்பட்டது] . .

  மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது..

  நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.

  (தொடரும்)

  அன்புடன்

 7. Thanks gopu1954 thanked for this post
  Likes gopu1954 liked this post
Page 13 of 13 FirstFirst ... 3111213

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •