Results 1 to 7 of 7

Thread: சுதா, ஸ்டீபன், சுந்தர்ராஜன்

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like

    சுதா, ஸ்டீபன், சுந்தர்ராஜன்

    சுதா, ஸ்டீபன், சுந்தர்ராஜன்

    *

    சின்னக் கண்ணன்

    *

    வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை என்று சுந்தர்ராஜன் யோசித்தான்.

    *

    1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகரின் படமென்று முதல் நாளே மணிக்கணக்காய் நின்று கவுண்டர் அருகே சென்றதும் டிக்கட் இல்லை என்று மூடி விட, அழுக்காய் கைலி கட்டி இருந்த ஆளிடம் பேரம் பேசி 200 ரூபாயில் டிக்கட் வாங்கி உள்ளே சென்று படம் திராபையாய்ப் போய்விட, தலைவலியுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தால் குறுக்கே மைக்கை நீட்டி 'நாங்கள் சன் டிவியில் இருந்து வருகிறோம் படத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ' என்று கேட்கும்போது.

    2. அழகாய் இருக்கிறாளே என்று நினைத்து கஷ்டப் பட்டு அப்துல் ரகுமான், மீரா போன்றவர்களின் கவிதையையெல்லாம் கோட் பண்ணி வெகு நேரம் செலவழித்து ஒரு கடிதம் எழுதி ஒரு பெண்ணிடம் ஒரு வாலிபன் சேர்த்தால் அதைப் படிக்காமலேயே அவனிடம் அவள் 'ஐ, லவ் யூ ' சொன்னால், அந்த வாலிபனுக்குச் சப்பென்று போய் வெறுத்து விடும்,

    அல்லது இப்போது I-95 நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாட்டிக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டு நான் நொந்துகொண்டிருக்கிறேனே இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் - இன்னும் என்னவெல்லாமோ யோசித்துக் கொண்டு தனது நிஸான் ஸண்ட்ராவில் உட்கார்ந்து கொண்டிருந்தான் சுந்தர்ராஜன். அவன் முன்னேயும் பின்னேயும் கார்கள் .முன்னால் ஏதோ ஒரு விபத்து நிகழ்ந்திருக்கும் போலும்.

    மேலும் வேதாந்தி போல சுந்தர்ராஜன் யோசிக்க ஆரம்பித்தான். ' நான் யார், சுந்தர்ராஜன், பத்து வருடமாய் துபாயில் ஸாப்ட்வேர் எஞ்சினியராய் குப்பை கொட்டி விட்டு, இப்போது இங்கே அமெரிக்காவில் ப்ளோரிடாவில் காண்டினண்டல் ஷாப்பிங் என்ற கம்பெனியில் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டில் இரண்டாம் இடத்தில் இருக்கிறேன்.

    இந்தக் கடங்காரி சுகந்தி (அவன் மனைவி) தம்மாத்தூண்டு கம்பெனி பி ஆர் சியில் வேலை பார்க்கிறாள் இப்போது எதற்காக இங்கே வந்திருக்கிறேன். மியாமி ஏர்போர்டில் இருந்து சுகந்தியின் அண்ணா பெண் சுதா வருகிறாள். ஏன் இந்த சுகந்தியே போய் கூட்டி வர மாட்டாளோ.

    சுகந்தியின் அண்ணா ராமபத்ரன் இருக்கிறானே- சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் பர்ச்சேஸ் மேனேஜர். வாங்கினாலும் கமிஷன் விற்றாலும் கமிஷன். சம்பளம் ஒரு போனஸ் மாதிரி அவனுக்கு.

    அவனுடைய பெண்டாட்டி மங்களம் ஒரு அழகு நிலையம் ஆரம்பித்து அதில் வேறு வருமானம். அதில் மேக்கப் செய்து கொண்ட சில 44 வயது நங்கையருக்கு மணமாகி விட்டதால் அதற்கு வேறு புகழ். இந்த சுதா எதற்கு இஞ்சினியரிங் படிக்க வேண்டும் சரி படித்தது தான் படித்தாள் எதற்கு நுழைவுத் தேர்வெல்லாம் எழுதி இங்கு masters படிக்க வருகிறாள் சமர்த்தாய்க் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமல்லவா. '

    மேற்கொண்டு சுந்தர்ராஜன் யோசிக்குமுன் ஹாரன் ஒலி காதில் விழ முன்னால் இருந்த இடைவெளியைச் சற்று நகர்ந்து நிரப்பினான்.

    முன்னால் கார்கள் ஆமை மாதிரி, நத்தை மாதிரி ஊர்ந்து கொண்டிருந்தன.

    சே. வேறு உவமை சொல்லலாம். சென்னையில் அமெரிக்கன் கான்ஸலேட்டின் வாயிலில் இரவு இரண்டு மணிக்கே தூக்கத்தை எல்லாம் விட்டுவிட்டு கையில் டாக்குமெண்டும், நம்பிக்கையுடனும் காத்திருக்கும் கூட்டம் ஆறு மணிக்கு திட்டிவாசல் திறந்ததும் சோம்பல் முறித்துக் கொண்டு நகர்வது போல கார்கள் நகர்ந்தன. அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருக்கும் புதிதாய்க் கல்யாணமான மெஹந்தி கையில் இன்னும் அழியாத, கையில் திருமண ஆல்பத்துடன் இருக்கும் இரு பெண்களைப் போல( என் ப்ரேம் கனெக்டிகட்டில் ஒர்க் பண்றார் - ஓ, என் ப்ரவீண் மினியாபோலிஸில் இருக்கிறார்) முன்னால் மின்சார நீல (electric blue)வோக்ஸ் வாகன் ஒன்றும் கை கோர்த்துக் கொண்டு ஒரு மெர்ஸாடிஸ் பென்சும் ஊர்ந்து கொண்டிருந்தன. சின்னக் குழந்தை கிறுக்கலாய் எழுதிய எஸ் போல கார்கள் வளைந்து சென்றன.

    சுந்தர்ராஜன் அனிச்சையாய் ஒரு கேஸட் எடுத்துப் போட்டான்.

    'ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் ' என்றார் டிஎம் எஸ். அடசட், எஜக்ட் செய்து காஸெட் மாற்றினான் இப்போது டிஎம் எஸ், பி சுசீலா -

    'வெண்ணிற மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில் விதவிதமான சடுகுடு விளையாட்டு விட்டு விடாமல் கட்டியணைத்து தொட்டது பாதி பட்டது பாதி விதவிதமான ஜோடிகள் விளையாட்டு '

    அதற்குள் கார்களெல்லாம் எஸ்ஸான் நுனிக்கு வந்ததும், கோனார் அவிழ்த்து விட்டதும் பசுவைத் தேடித் துள்ளிக் குதித்து ஓடும் கன்றைப் போல வேகம் பிடித்து ஓடின.

    சுந்தர்ராஜனும் எஸ்ஸின் நுனிக்கு வந்ததும், காஸெட்டை எஜக்ட் செய்து விட்டு fast lane பிடித்து வேகம் அதிகப் படுத்தினான். நேரம் பார்த்தான் 6.25. மைகாட் , இன்னேரம் விமானம் வந்திருக்கும், சுதாவே வெளியில் வந்திருப்பாள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரு வழியாய் மியாமி ஏர்போர்ட்டை அடைந்த போது மணி 7.15. பார்க் பண்ணிவிட்டு அரைவல் லவுஞ்சிற்கு ஓடினால் அங்கே சுதா.

    நீல வண்ண சுரிதாரில், மரபுக் கவிதையையே எழுதி வரும் கவிஞன் திடீரென ஆசைப்பட்டு எழுதிய புதுக்கவிதை எப்படி சந்தம், எதுகை, மோனை கலந்தெல்லாம் இருக்குமோ அது போல் கொஞ்சம் பள பளப்பாகவே இருந்தாள் சுதா.

    அவள் அருகில்- புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, காம்ப்ளான் போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் தின்று கொழுத்திருக்கும் ஜெர்ஸிப் பசுக்களைப் போல- சாதுவாய் குண்டாய் இரு சூட்கேஸ்கள் இருந்தன.

    'என்னது இது சுதா, உன் டிரஸ்ஸும் புக்ஸுமா ? '

    'இல்லை அங்கிள் இது டிரஸ், அது மேக்கப் சாமான்கள் ' என்று சொல்லி அதிர வைத்தாள்.(என்னது அங்கிள் என்கிறாள்)

    ஒரு வழியாய் சூட்கேஸ்களை கஷ்டப் பட்டு டிக்கியில் வைத்துவிட்டு காரைக் கிளப்பி மறுபடியும் I-95 ஐத் தொட்ட போது , சுதா தன் அப்பாவின் சபரிமலைப் பயணம், அம்மாவின் பியூட்டிபார்லர் பா(ர்)ட்டிகள், தான் வளர்க்கும் டாமி எப்படி சோகமாய் வழியனுப்பியது, தான் போய்க் கலந்து கொண்ட தன் ப்ரண்டின் கல்யாணம் போன்றவைகளைச் சொல்லி முடித்திருந்தாள்.

    அரைமணி நேரம் ஆகியும் கார் சென்று கொண்டே இருந்ததால், 'என்ன அங்கிள், மறுபடியும் என்னை இந்தியாவுக்கே கூட்டிப் போறீங்களா ' எனக் கேட்டாள்

    சுந்தர்ராஜன் , 'இல்லை சுதா, இதோ பக்கம் தான். இன்னும் முக்கால் மணி நேரம் தான் ஆத்துக்குப் போய்விடலாம் ' என்றான்

    'என்னது '

    'ஆமாம், இங்கே அமெரிக்காவில் பக்கம் என்றால் 40 மைல்.ரொம்பக் கிட்டக்க என்றால் மூன்று மைல். இது எல்லாம் போகப் போக உனக்கே தெரியும். '

    Deerfield Beach என்ற போர்டைப் பார்த்துவிட்டு ' அழகாய்ப் பேர் வைத்திருக்கிறார்களே அங்கிள். மான் வயல் கடற்கரை என்று ' என்றாள் சுதா.

    'இங்கே சுற்றிச் சுற்றி பீச் தான். பாம்பனோ பீச், டெல் ரே பீச், வெஸ்ட் பால்ம் பீச் எல்லாம் இடங்களின் பெயர்கள் ' என்று சொன்ன வண்ணம் தனது அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் இருந்த இடத்திற்கு காரைத் திருப்பினான்.

    காம்ப்ளெக்ஸ் வாசலில் செக்யூரிட்டி ஒரு சின்ன அறையில் நின்று கொண்டிருக்க, நுழையும் இடத்தில் தடுப்பாய்க் கட்டை நீட்டிக் கொண்டிருந்தது. தனது அடையாள அட்டையை எடுத்து அங்கு இருந்த மெஷினில் செருகினான் சுந்தர்ராஜன். ஏரியில் மீன் பிடிப்பதற்காக தலைகுனிந்து தேடிக்கொண்டிருந்த கொக்கு மீன் பிடித்ததும் தலையை நிமிர்த்துவது போல அந்தக் கம்பமும் நிமிர்ந்து வழிவிட்டது.

    'பரவாயில்லையே, செக்யூரிட்டி எல்லாம் பலமாக இருக்கிறதே அங்கிள் '

    'ஆமாம் ஏழுமணிக்குத்தான் செக்யூரிட்டி வருவான். அதற்கு முன்னால் ஆறே முக்காலுக்கே திருடர்கள் உள்ளே வந்து விடுவார்கள். ஆமாம் என்னை என்ன அங்கிள் அங்கிள் என்கிறாய். '

    'பிறகு எப்படிக் கூப்பிடுவதாம். நீங்கள் வயதில் பெரியவர்.எனக்கு 23வயது. சுகந்தி என்னை விட அஞ்சு வருஷம் பெரியவள். நீங்கள் சுகந்தியை விட எட்டு வருடம் பெரியவர் '

    'கொஞ்சம் விட்டால் எல்லார் ஜாதகத்தையும் சொல்லிவிடுவாய் போல இருக்கிறதே. சுந்தரா என்றே கூப்பிடு போதும் ' என்று சொன்னவண்ணம் தனது அபார்ட்மெண்ட் வாசலில் காரை நிறுத்தினான் சுந்தர்ராஜன்.

    மறுபடியும் சூட்கேஸை எடுத்துக் கொண்டு ( நாலு பேரைக் கொலை செய்து இதில் போட்டுக் கொண்டு வந்திருப்பாளோ, இந்த கனம் கனக்கிறதே)

    'மேலே செகண்ட் ப்ளோர் சுதா '

    'இரண்டாம் மாடியா சுந்து. லிப்ட் இருக்கிறதா ' (இதற்கு அங்கிளே பரவாயில்லை)

    'இங்கே எல்லாமே அப்படித்தான். first floor என்றால் ground floor, second floor என்றால் first floor. படிதான் லிப்ட் எல்லாம் கிடையாது. நம்பர் 2922. '

    ஒருவழியாய் வாசலில் சூட்கேஸை வைத்துவிட்டு சாவி போட்டுத் திறந்தால் எதிரே சோபாவில் சுகந்தி. முதலில் நுழைந்த சுந்தர்ராஜனை பொங்கல் இனாம் கேட்க வந்த போஸ்ட் மேனைப் பார்ப்பதுபோல் அல்பமாய்ப் பார்த்தாள்.

    பின்னால் சுதாவைப் பார்த்ததும் 'வா, வா சுதா, எப்படி இருக்கிறாய். என்னங்க சும்மா மசமசன்னு நிக்காம சூட்கேஸெல்லாம் உள்ளே கொண்டுபோய் வைங்கோ. நீ வா. ப்ளைட் எப்படி இருந்தது ' என்றெல்லாம் மூச்சு விடாமல் கேட்டாள்

    சிறிது நேரத்தில் அவர்கள் பேச்சிலேயே செட்டில் ஆகிவிட சுந்தர்ராஜன் உடை மாற்றிக்கொண்டு ஷார்ட்ஸ் அணிந்து வந்து அமர்ந்தான்.

    'என்ன அங்கிள். ஒரே பழைய தமிழ்ப்பாட்டாய் இருக்கிறதே ' என்று காஸெட்ஸ் பார்த்துக் கேட்டாள் சுதா.

    'அதை ஏன் கேட்கிறாய் சுதா. மத்த விஷயத்தில எப்படியோ, தமிழ்ப் பாட்டைப் பொறுத்த வரைக்கும் இவர் இன்னும் 70 லயே இருக்கார் '

    'ஏன் எனக்கு கர்னாடக சங்கீதமும் பிடிக்குமே. '

    'கன்று பசுவிடம் நாட்டத்திலே அதைக் காண வரும் ஆயர் கூட்டத்திலே - சற்று நின்று பேச என்ன நேரமில்லையடி நோில் வர ஒரு தோதும் இல்லையடி ' எனப் பாடினான் சுந்தர்ராஜன்.

    'போதுமே, ஒண்ணு சுதாரகுனாதன் இல்லைன்னா பி. சுசீலா. பாடி எல்லாம் நம்ம சுதாவைப் பயமுறுத்தாதேள் ' என்ற சுகந்தி 'நாளைக்கு ஈவ்னிங் போஸ்டன் நான் போறேன் ' என்றாள்.

    'என்னது '

    'ஆமாம் திடீர்னு ஏதோ ஒரு ப்ராப்ளமாம். என்னைக் கூப்பிடுகிறார்கள். ஒரு வாரம் தான் அடுத்த வாரம் வந்து விடுவேன், சுதா நீ கவலைப் படாதே, சுந்தரா உன்னைப் பார்த்துப்பார். அடுத்த சனிக்கிழமை வந்துவிடுவேன். உனக்கும் காலேஜ் அடுத்த வாரம் தான்,அதைப் பற்றியும் விசாரித்து விட்டேன். ஓக்கே. கவலைப் படாதே. ஏன்னா சுதாவைப் பார்த்துப்பேளோல்லியோ ' என்றாள் சுகந்தி

    சுந்தர்ராஜன் 'பட்ஜெட் படிக்கிற பைனான்ஸ் மினிஸ்டர் மாதிரி நீயே பேசி முடிச்சுட்ட. என்ன ஒரு வாரத்துக்கு எங்களுக்கு பீட்ஸா தானா ' என்றான்

    சுதா 'கவலைப் படாதீர்கள் சுந்தரா, எனக்கும் கொஞ்சம் சமைக்கத் தெரியும் சுமாராய் சமைப்பேன்.சுகந்தி நான் யுனிவர்ஸிடி பக்கத்திலேயே ஏதாவது ரூமெடுத்து தங்கிக்கறேனே, எதுக்கு உங்களுக்கெல்லாம் சிரமம் ' என்றதற்கு
    சுகந்தி 'எல்லாம் நான் வந்தபிறகு பார்த்துக்கலாம் ' எனச் சொல்லி அடக்கினாள்.

    ********

  4. #3
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ********
    மறுநாள் சாயந்திரம் சுகந்தி கிளம்பிப் போய் விட்டாள். திங்கள் கிழமை ஆரம்பத்திலிருந்து சுந்தர்ராஜனுக்கு ஒரே வேலை ஆகி விட்டது.

    ஆபீஸிலிருந்து வருவதற்கே எட்டு,ஒன்பது என்றாகி சுதா ஏதாவது சமைத்து வைத்திருந்தால் அரை குறையாய்ச் சாப்பிட்டு அவள் பார்த்த டிவி படங்களைப் பற்றிக் கொஞ்சம் கேட்டு விட்டு பிறகு தூங்கப்போவதற்கே நேரம் சரியாய் இருந்தது.

    தினமும் காலையில் சுகந்தி போஸ்டனிலிருந்து அவனுடன் ஆபிஸில் பேசி விடுவாள்

    ஒரு வழியாய் வெள்ளிக் கிழமை வந்தது. வெள்ளி என்றால் சுந்தராவிற்கு ஒரு வழக்கம். கொஞ்சம் சோம பானம் அருந்துவான்.சுகந்தி ekkp என்று சொல்லி விட்டாள் (எக்கேடும் கெட்டுப் போங்கோ)

    அன்று ஆபீஸில் இருந்து ஆறு மணிக்கே வந்து விட்டான். சுதாவைக் காணோம். ஏதோ அருகில் இருக்கும் mall க்கு போவதாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    சுந்தரா குளித்துவிட்டு ஒம்மாச்சி கும்பிட்டுவிட்டு சவரணையாய் மிளகு அப்பளாம்(ஓவனில் சுட்டது), வறுத்த முந்திரி, சுகந்தி cereals வைத்துப் பண்ணியிருந்த மிக்ஸர் அப்புறம் பகார்டி ரம் என்று எடுத்து வைத்துக் கொண்டு குடிக்க ஆரம்பித்தான்

    டிவியில் ஏதோ சுவாரஸ்யமாக படம் நடக்கவே, படத்தின் சுவாரஸ்யத்தில் மூன்று பெக் போனது தொியவில்லை.

    கதவில் சாவி வைத்துத் திறக்கப்படும் சப்தம் கேட்க பார்த்தால் சுதா. இன்று அழகாய் நீல ஜீன்ஸும் அதன் மேல் சிகப்புச் சட்டையும் அணிந்து கொஞ்சம் அழகாகவே இருந்தாள்.

    கையில் சில ப்ளாஸ்டிக் பைகள். 'ஹாய் சுந்தரா, சாரி, டிலே பண்ணிவிட்டேனா. வந்து ரொம்ப நேரம் ஆச்சா ' என்று சொல்லி விட்டு உள்ளே போனாள்.

    சுந்தர்ராஜன் கொஞ்சம் நாக்கு உலர்ந்து போய் , சரி எதற்கும் பாத்ரூமிற்குப் போய் சிந்திப்போம்- சிந்திக்க பாத்ரூமை விட சிறந்த இடம் இருக்கிறதா என்ன- என்று பாத்ரூமிற்குப் போய் முகம் அலம்பிக் கொண்டான். கண்ணாடியில் பார்த்தான்.

    கண் சிவந்து வேறு சுந்தராவாகத் தெரிந்தான்.

    'சுதா எவ்ளோ அழகா இருக்கிறாள் ' என நினைக்க ஆரம்பித்ததும் தமிழ் சினிமாவில் வருவதைப் போல அவனது உருவத்திலேயே அவனது நல்ல மனசும் கெட்ட மனசும் வெளி வந்தன

    நல்ல மனசு பட்டு வேட்டி பட்டு சட்டை போட்டுக் கொண்டு 'சுந்தரா, இது உனக்கே நியாயமாய் இருக்கிறதா. ப்ரெட் போடுவாய் என நினைத்து பக்கத்தில் வரும் வாத்தைப் பிடித்து பார்பெக்யூ செய்யலாம் எனப் பார்க்கிறாயே ' எனச் சொன்னது.

    கெட்ட மனசு ஜீன்ஸ்,டி ஷர்ட், ரிம்லெஸ் கண்ணாடி,இடுப்பில் பேஜர், காதில் வளையம், கையில் செல் போன் ரிபோபோக் ஷு அணிந்து வெளி வந்து சுந்தராவைப் பார்த்து 'அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம் ' என்று பாடியது

    பட்டு வேட்டி திகைத்துப் போய், 'ஆள் மாடர்னா டிரஸ் பண்ணிக்கிட்டு இப்படி அரதப் பழசாப் பாடறியே ' என்றது

    மாடர்ன், 'யோவ் (சுந்தராவைக் காட்டி) இந்த ஆளுக்கு என்ன தெரியுமோ அது தான் எனக்கும் தெரியும். அதான் பாடினேன். ஒழுங்கா உபதேசம்லாம் பண்ணாமல் போயிடு என்று பட்டு வேட்டியை மிரட்ட இரண்டுக்கும் அடி தடி நடக்க கடைசியில் பட்டுவேட்டியாலேயே நல்ல மன சுந்தரராஜ பிம்பத்தைக் கட்டிப் போட்டு கெ.ம சுந்தர்ராஜனுள் புகுந்து கொள்ள சுந்தரா ஒரு தீர்மானத்துடன் பாத்ரூம் கதவைத் திறந்தான்.

  5. #4
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சுதாவின் அறைக்குப் போனான்.

    என்னது இது. உள்ளே சுதா படுக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் கண்ணீர் தாரை தாரையாக (கண்ணீருக்கும் தாரைக்கும் என்ன சம்பந்தம்- ராமாயணம் தொிந்தவர்களிடம் கேட்க வேண்டும்) கன்னத்தில் - இறக்கத்தில் பெடல் செய்யப்படாமல் போகும் சைக்கிள் போல(சுந்தரா இப்போ எதுக்கு உவமை)- உருண்டோடிக் கொண்டிருந்தது.

    பக்கத்தில் லெட்டர் பேட் பேனா. ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் போலும். ஏன் அழுகிறாள்(சுந்தர்ராஜனினுள் பட்டுவேட்டி கட்டை அவிழ்த்துக் கொண்டு மாடர்னை அடக்கி விட்டது)

    'என்ன சுதா. என்ன லெட்டர்லாம். ஏன் அழுதுண்டிருக்க ? '

    சுதா அவனை நிமிர்ந்து பார்த்து 'என் ப்ராப்ளம் என்னோட சுந்தரா, விட்டுருங்க '

    'ஹேய், நான் யார், உன் மாமா தானே. சொல்லு. எதுவா இருந்தாலும் சொல்லு. அதுஎன்ன லெட்டர் ' என்று சுந்தர்ராஜன் கேட்டான்

    சுதா பதிலேதும் சொல்லாமல் அந்த லெட்டர் பேடை எடுத்து நீட்ட படித்துப் பார்த்தான்

    அதில்,
    கண்ணில் தெரியும் காட்சிகளைக் கண்ணுள் வைக்க முடிவதில்லை
    மண்ணில் பூத்துச் சிரிக்கின்ற மலரின் வாசம் நினைவிலில்லை
    எண்ணில் அடங்கா எண்ணங்களை ஏட்டில் எழுத இயல்வதில்லை
    விண்ணில் பறக்கும் புள்ளினத்தின் விஷமச் சிரிப்போ தெரிவதில்லை

    ஏன்தான் இறைவன் என்னைத்தான் எதற்காய் இங்கே படைத்திட்டான்
    தேன்தான் அவனே எனத்தெரிந்தும் தேடித் தேடித் திகைக்கின்றேன்

    என்று எழுதிவிட்டு கீழே ஒரேயடியாக ஸ்டீபன், ஸ்டீபன் என பல தடவை கிறுக்கியிருந்தாள்.

    'சுதா என்னது இது. விருத்தத்தின் அர்த்தம் புரியலை. கூடவே ஏன் ஸ்டீபன் என்று எழுதியிருக்கிறாய்
    யார் அந்த ஸ்டீபன் ? '

    சுதா பதிலேதும் சொல்லாமல் முழங்கால்களில் தலையைப் புதைத்துக் கொண்டு
    அப்போது தான் ஸ்டார்ட் செய்யப் பட்ட ஆட்டோ போல குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்

    மேலும் சுந்தரா விசாரித்ததும் அவள் மெல்ல மெல்ல விவரித்தது தமிழ் சினிமா சக்கையாப் பிழிந்து எடுத்து விட்ட சாதாரண காதல் கதை.

    ஸ்டீபன் அவளுடைய காலேஜ் மேட்டாம். அவனுக்கும் இவளுக்கும் லவ்வாம். ராமபத்ரன் அவன் கிறிஸ்டியன் என்பதால் முடியாது என்று சொல்லி விட்டாராம். ஒரே முனைப்பாய் முனைந்து இவளை இங்கு அனுப்பி விட்டாராம்.

    அவன் நினைவிலேயே இவள் இருக்கிறாளாம் இங்கு வந்ததுமுதல் அவன் ஞாபகம் தானாம். இப்போது அவனுடன் அவள் சேர்வாளா என நினைத்துக் கொண்டதால் அழுகை வந்ததாம். தயவு செய்து சுகந்தியிடம் சொல்லி விடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டாள்

    சுந்தரா சுதாவிடம் 'சரி சரி அழாதே. நான் அவரிடம் அடுத்த வாரம் பேசிப் பார்க்கிறேன். நீ சமர்த்தாய் போய் படிக்கிற வழியைப் பாரு ' என்று சொல்லி சமாதானப் படுத்திவிட்டு தனது படுக்கையில் வந்து விழுந்தான். உடனே தூங்கியும் போனான்.

    கனவில் ராமபத்ரன் வந்து 'சுந்தரா சுதாவை ஸ்டீபனுடன் எல்லாம் சேர்த்து வைக்க நினைக்காதே. உன்னைத் துப்பாக்கியாலெல்லாம் சுட மாட்டேன். இந்த தோசைக்கரண்டியைக் காய வைத்து இதாலேயே உன்னை சுட்டு விடுவேன். இதுவே போதும் உனக்கு ' என்று தோசைக்கரண்டியுடன் பயமுறுத்தினார்.

    **********************

  6. #5
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மறுநாள் காலையிலேயே சுகந்தி போஸ்டனிலிருந்து வந்து விட்டாள்.

    'ஹேய் சுதா, என் சினேகிதி ஒருத்தியோட தங்கை சோபியா அங்கே தான் படிக்கிறா. அவள் அபார்ட்மெண்டிலேயே நீ தங்குவதற்கும் ஏற்பாடு பண்ணிவிட்டேன் சாயந்தரம் போகலாம் உனக்கும் சுலபமாக இருக்கும் நாங்களும் சனி ஞாயிறு உன்னைப் பார்த்துக் கொள்வோம் ' என்று சொன்னாள்.

    மாலையே சுதா கிளம்பிப் போய்விட்டாள். போவதற்கு முன் சுந்தர்ராஜன் (சுகந்திக்குத் தெரியாமல்) சுதாவிற்கு தைரியம் சொன்னான்.

    அடுத்தவாரம் ராமபத்ரனிடம் பேசுவதாய்ச் சொன்னான்.

    சுதா புன்னகை புரிந்து தாங்க்ஸ், சுந்து அங்கிள் என்று சொல்லி விட்டுச் சென்றாள்

    ***********
    திங்கள் கிழமை என்று ஆரம்பித்தால் வாரத்தில் ஐந்து நாட்களும் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கும்.

    சுந்தராவிற்கும் மூன்று நாட்கள் பொழுது பறந்து விட, புதன் கிழமையன்று மாலை ஏதோ ஆபீஸ் விஷயமாய் ஒருவரைப் பார்ப்பதற்காக Fort laudedale என்னும் இடத்திற்குச் சென்றான்.

    இங்கு தானே பக்கத்தில் எங்கோ சுதா இருக்கிறாள் என நினைப்பு வர அவளிடம் செல் போனில் தொடர்பு கொண்டான்

    'வாங்க அங்கிள் ' என்று சொல்லி சுதா எப்படி அங்கு செல்வது என்று வழி சொன்னாள்.
    அவள் அபார்ட்மெண்டிற்குச் சென்று கதவைத்தட்டினால் சுதா திறந்தாள்.

    'வாங்க சுந்தரா '

    'ஹாய் சுதா எப்படி லெக்சர்ஸ் எல்லாம் இருக்கிறது '

    'எல்லாம் ஓகே சுந்தரா, சோபியா வெளியில் போயிருக்கிறாள். அவளுடன் தான் தினமும் போய் வருகிறேன்.
    உட்காருங்க. என்ன சாப்பிடறீங்க. காபி கலக்கட்டா ? '

    சுதா கொண்டு வந்துவைத்த பில்டர் காபியைக் குடித்த படியே
    'சொல்லு சுதா, ஸ்டீபனோட பேசினாயா, என்ன சொல்றார் ? ' என்று கேட்டான்.

    'ஸ்டீபன் ? ஓ அதைச் சொல்றீங்களா ' சுதா சிரிக்க ஆரம்பித்தாள்

    'சுந்தரா அங்கிள். ஸ்டீபன் என்பதெல்லாம் ஒரு டூப், கப்ஸா,பீலா.
    இப்ப பாருங்கள். நீங்கள் என்னோட கண்ணை நேராய்ப் பார்த்து பேசுகிறீர்கள்.
    அன்னிக்கு நீங்கள் நீங்களா இல்லை. அதுவும் என்னை கண்ணைப் பார்க்காமல் மற்றபடி அலைய விட்டீர்கள்.
    நானும் சின்னவள் தானே எனக்கும் உணர்ச்சிகள் எல்லாம் உண்டுதானே.
    நீங்கள் வந்து என்னிடம் ஏதாவது ஆரம்பித்தால் நானும் தப்புப் பண்ணிவிடுவேனோ என்று பயம்.
    அதனால் தான் நீங்கள் பாத்ரூம் போயிருக்கிறச்சே கிச்சன்ல போய் முகத்தில்
    தண்ணீர் தெளித்துக் கொண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு
    எப்போதோ எழுதினதை எடுத்து வைத்துக் கொண்டு அதன் கீழ் ஸ்டீபன் என்று பல முறை கிறுக்கிவிட்டு நீங்கள் வரும்போது அழ ஆரம்பித்தேன்.

    அழும் பெண்ணிடம் முறை தவறி நடக்கும் அளவுக்கு நீங்கள் அயோக்கியரில்லை என்று தெரியும்.
    நானும் சின்னப் பெண். என்னிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளத்தான் அந்த மாதிரி செய்தேன். என்னை மன்னித்து விடுங்கள் ' என்றாள்.

    சுந்தரா என்ன பேசுவது என்று அறியாமல் திகைத்து மனதிற்குள் ' - அடிப்பாவி- அத்தனையும் நடிப்பா - சிவாஜி கெட்டார் போ-சே பழைய உவமை- அனலைஸ் திஸ் ராபர்ட் டி நீரோ கெட்டார் போ- பெண்கள் சாகசக் காரிகள் என்று சொல்வது உண்மை ' எனச் சொல்லிக் கொண்டு 'சுதா . நான் கிளம்பறேன். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை ' என்று கிளம்பினான்

    சுதா, ' சுந்தரா தப்பால்லாம் எடுத்துக்காதேள் ' என்றாள்

    சுந்தர்ராஜன் வெளியே வந்து பார்க்கிங்கில் இருந்து காரைக் கிளப்பி ரிவர்ஸ் எடுத்தால் கை அனிச்சையாய் ஒரு காஸெட் எடுத்துப் போட, பி. சுசீலா '

    நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ ' என்றார்.

    (முதலில் ஃபாரம் ஹப் அப்புறம் திண்ணை 2000 வருடம்- கே.ஆர். ஐயங்கார் என்ற பெயரில் எழுதியது..)

  7. #6
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,192
    Post Thanks / Like
    அசத்தல், போங்கள்! நகைச்சுவை உணர்வு கொப்புளிக்க எழுதுவது உங்கள் தனித்திறமை! அட! அட! என்னமாய் அருமையான உவமானங்கள் வந்து விழுகின்றன! அப்புறம், ஸ்டிபன் எபிசோட் சுதா போடும் நாடகம் என்று எனக்கு முதலிலேயே தெரிந்துவிட்டதாக்கும்!
    இன்னொரு விஷயம்: மதுரையோ, ப்லோரிடாவோ அருமையாக தேர்ந்த கைடாக சுற்றிக்காட்டுகிறிர்கள், நன்றி!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #7
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி பி.பிக்கா.. இது நான் எழுதிப் பார்த்த மூன்றாவது கதை!!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •