Results 1 to 10 of 15

Thread: வன மோகினி

Threaded View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like

    வன மோகினி

    வன மோகினி
    *

    சின்னக் கண்ணன்..
    *
    காற்றும் பெண்ணும் ஒன்று தானோ.
    *
    உயிர்வாழ பிரபஞ்சத்திற்கு இன்றியமையாதது காற்று. பிரபஞ்சம் வாழ்வதற்கும் பல உயிர்களைப் பெற்றுக் காப்பதும் பெண்ணின் கையில் இருக்கிறது. பெண்மையின் பல குணங்கள் காற்றிற்கும் இருக்கின்றன. மனமகிழ்ந்து சிரிக்கும் சின்னப் பெண்ணைப் போல சில சமயங்களில் மென்மையாய் தென்றல் என்ற பெயரில் மனத்தை வருடுகிறது. அதுவே கோபங் கொண்ட பெண்ணாக மாறுகிறது புயல் என்ற பெயரில்.
    *
    இவ்வளவு என்ன, பெண்ணின் முக்கிய குணம் ஒன்று அதற்கு இருக்கிறதே. அதோ அந்த மரத்திடம், மரத்தின் இலைகளிடம், பூக்களிடம், புள்ளினங்களிடம்.. எல்லாவற்றிடமும் சளைக்காமல் பேசுகிறதே. என்ன கொஞ்சம் கூடுதல் உரிமை எடுத்துக் கொள்கிறது, எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டுப் பேசுகிறது.
    *
    இவ்வாறென்றில்லாமல் இன்னும் பல வித சிந்தனைகள் மனதில் அலைபாய, சற்றும் நகர முடியாமல், தோளில் இருந்து பட்ட காயத்தில் பெருக்கெடுத்த ரத்தம் காய்ந்து விட்டதாலும், காயத்தால் ஏற்பட்ட வலி கண்களைத் தாக்க மெல்லக் கண்களை நன்றாகத் திறந்தான் குலசேகரன்.

    மாலை மங்கி இருள் பூரணமாக ஆக்கிரமித்தாலும், அங்கே, அந்த அழகர் மலைக் காட்டில் , அடர்ந்த மரங்களினிடையே மதி தன் நிலவினை(கிரணங்களை)ப் பாய்ச்சியவாறே இருந்ததால், அந்த அரச மரத்தடியில் சாய்ந்து படுத்திருந்த குலசேகரன் மீதும் வெளிச்சம் சற்றே விழுந்திருந்தது.அந்த வைகாசி மாதத்தில், பெளர்ணமி வருவதற்கு இரு தினங்கள் இருந்தாலும் கூட முழு நிலவின் வெளிச்சம் தெளிவாக இருந்தது.
    *
    சற்றே சுரணை வர வர, வலி முழுவதுமாகத் தெரிய வந்தாலும் சற்றும் முனகினானில்லை. காயங்களினால் ஏற்பட்ட வலியை விட மனதில் ஏற்பட்டிருந்த வலியால் மிகவும் ஆயாசமாக இருந்தது குலசேகரனுக்கு.
    *
    அங்கு எவ்வண்ணம் வந்து சேர்ந்தோம் என யோசிக்கலானான் குல சேகரன். ' இந்தப் பாண்டிய நாட்டுக்குஎப்போது விடிவு காலம் வரும். எத்தனை காலந்தான் சோழர்களுக்கும் ஹொய்சளர்களுக்கும் அடிமைப் பட்டிருப்பது என நான் நினைத்துக் கொண்டிருந்தது உண்மை தான். ஆனால் அவர்களைத் தோற்கடிப்பதற்கான படை பலம் என்னிடம் இல்லையே. இப்போதும் கூட ஒழுங்காகத் தான் கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் எதற்காக சோழ அமைச்சர் அநிருத்தரின் ஒற்றர்கள் ரகசியமாக மதுரை வர வேண்டும். அவர்கள் வந்த தகவல் எனக்குக் கிடைக்க நானும் புறப்பட்டேன்.

    தலைமை ஒற்றனை அவனறியாமல் நானே பின் தொடர்ந்தேன்.அவன் ரகசியமாக இந்த அழகர் மலைக் காட்டிற்குள் நுழைந்த பிறகு அவனைத் தொடர்ந்தால் சோழ வீரர்கள் பதின்மர் எங்கிருந்தோ வந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர்.
    ஹீம் என்ன ஆயிற்று சொக்கா. என் வீரத்திற்கு. பத்துப் பேரில் ஒன்பது பேரைத் தான் பரலோகம் அனுப்ப முடிந்தது என் வாளினால். ஒருவன் தப்பி விட்டானே. அதுவும் வேலை என் தோளில் பாய்ச்சிவிட்டு.. ' எனப் பெருமூச்செறிந்தான்.
    *
    மேலும் தொடர்ந்து சிந்திக்கலானான். 'கொற்கையில் இருந்து முத்து வாணிபம் நன்கு தான் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் முத்து வாணிபத்தின் கணக்கையும் தான் சோழர்களுக்கு மாதமொரு முறை அனுப்பிக் கொண்டிருக்கிறோமே. ஏன் பாண்டியர்களை முழுவதும் ஒழிக்க வேண்டுமென நினைத்து விட்டார்களா.இருப்பினும் இப்போதைக்கு என்னால் ஏதும் செய்ய இயலாதே. ஒவ்வொரு பாண்டிய வீரனும் பத்து சோழ வீரனுக்குச் சமமென்றாலும் அவர்களது பெரும் படை பலத்திற்கு முன்னால் நாம் போரிடுவது எங்ஙனம். என் காலத்திலும் இந்த அடிமைத் தனத்திற்கு விடுதலை கிடைக்காதா '
    *
    இவ்விதம் பலவாறாக மனதில் சிந்தனை அலைபாய இருந்த குலசேகரனின் காதில் மெல்லிய பாடல் ஒன்று ஒலித்தது. அந்த இனிய ஒலி அவன் இருந்த இடத்திலிருந்து சற்றே மேட்டிலிருந்து வந்தது. இரண்டாம் ஜாமம் ஆரம்பித்து சில நாழிகைகளே ஆயிருந்தாலும் கூட மரங்களின் அடர்த்தியினூடே புகுந்த நிலவொளியினாலும் கூட அந்தக் குரலுக்குரியவர் யாரென குலசேகரனால் கண்டுகொள்ள முடியவில்லை.
    *
    இனிமையான மலய மாருதத்தில் அந்தக் குரல் பாடிக் கொண்டிருந்தது அந்தக் காட்டினூடே, நிசப்தத்தைக் கலைத்து,மிக மெலியதான பாடலைக் கூட ஓசை மிகவைத்துக் கொண்டிருந்தது. அதுவும் பாடிய குரல் பெண்குரல் என்பதால் சற்றே யோசனையும் எழுந்ததுகுலசேகரனுக்கு.
    *
    ' வனாந்திரத்தில் எல்லாம் மோகினிகள் நடமாடுவார்களாமே.என்றோ பாட்டியார் கூறியிருக்கிறார்கள். ஒரு வேளை மோகினியாக இருக்குமோ. ' எனத் தோன்றி 'இருந்தால் என்ன அதையும் ஒரு கை பார்த்து விடலாம். 'என நினைத்து தடுமாறி எழுந்து நிற்க முயன்று மீண்டும் கீழே விழுந்தான். அவ்வாறு விழுந்ததால் அங்கு இருந்த சிறு கற்கள் புரண்டு சரிவில் சர சரவென உருண்டோடின.
    *

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •