Results 1 to 8 of 8

Thread: கால்களை வாங்கியவ்ன்..

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like

    கால்களை வாங்கியவ்ன்..

    கால்களை வாங்கியவன்


    சின்னக் கண்ணன்




    கணேஷிற்குக் கோபம்,துக்கம்,அழுகை,கவலை எல்லாம்- நன்றாகக் கொலைப் பட்டினி போடப்பட்ட கன்றானது அவிழ்த்து விடப்பட்டதும் தாவிச் சென்று அம்மாவின் மடியை விட்டு அம்மாவின் காலை முட்டுமே- அதைப் போலக் கண்மண் தெரியாமல் முட்டிக் கொண்டு வந்தது. காரணம் காந்தன் சொன்ன வார்த்தைகள்.


    கணேஷைப் பற்றி - கணேஷ் ஜனித்த போது பிரம்மன் அவன் தலையெழுத்தை எழுத வேண்டி எழுது கோல் எடுத்தபோது இவனே அதைப் பிடுங்கி கோழிக் கிறுக்கலாய் எழுதிவிட்டானோ என்னமோ. வாழ்க்கையில் எல்லா யிடங்களிலும் நாய், சில அமைச்சர்கள், விலைவாசி ஏற்றத்தால் தமிழ்நாட்டுப் பொதுஜனம் போல் படாத பாடு பட்டு ஒவ்வொரு நிலையிலும் மிகக் கஷ்டப்பட்டுக் கொண்டு யிருந்தான். பார்க்காத வேலைகள் எல்லாம் விரல் விட்டு எண்ணி விடலாம். கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாம் பழகிவிட்டதால் ஒரு நிலையில் தமிழக முதலமைச்சர் ஆவதற்கும் விண்ணப்பித்தான். அருள் பார்வை கிடைக்கவில்லை எனில் தற்சமயம் பர்வதா பிரஸ் என்ற அச்சகத்தில் டாப்பையன் முதல் முதலாளியின் செயலாளர் என - ஒரு எல்லாம் கலந்து கட்டி அடிக்கும் வேலை ஒன்றைப் பார்த்து வயிற்றை நிரப்பி வாயால் தண்ணீர் குடித்து அதைக் கழுவி வந்தான்.


    அப்பொழுது தான் காந்தனின் அறிமுகம் அவனுக்கு ஏற்பட்டது.


    காந்தன்: பிறக்கும் போதே ஆசீர்வதிக்கப் பட்டவர்களில் ஒருவன். சின்ன வயதில் அவன் அம்மா தங்கத்தில் செய்யப்பட்ட, வெள்ளி முலாம் போடப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நிப்பிள் கொண்ட பாட்டிலால் தான் அவனுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் யிந்திப் பால் புகட்டினாள். காந்தனின் அப்பாவிற்குச் சொந்தமாக யிரு மளிகைக் கடைகள் நகரின் மையத்திலும், யிரு 'சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் ' தயார் செய்யும் தொழிற்சாலை ஊரில் ஒதுக்குப் புறத்தில் தோன்றிய அழகிய நகரான கொக்குப் பாக்கத்தில் இருந்தது. பணத்திற்குக் கேட்கவா வேண்டும். ஒரிஸ்ஸாவில் வரும் வெள்ளத்தைப் போல அவரிடம் வந்து சேர்ந்து கொண்டே, வடிந்து விடாமல் கூடிக் கொண்டே சென்றது.


    காந்தன் வளர்ந்து, ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் பொறியியற் கல்லூரியில் இலவசமாகச் சேர்ந்து (அவன் அப்பா அவன் முதல் வகுப்பு படிக்கும் போதே நன்கொடை கொடுத்து விட்டார்) இளங்கலை, முதுகலைப் பட்டம் முடித்து விட்டு என்ன செய்வதென்றறியாமல் இருந்தான். அப்பாவின் வியாபாரத்திலும் பங்கு கொள்ள இஷ்டமில்லை. ரொம்ப போரடித்ததால் எதையாவது வளர்க்கலாம் என யோசித்தான். அவன் வீட்டில் ஏற்கெனவே ஒரு டஜன் நாய்கள், பூனைகள் இருந்து அவைகளைப் பார்த்துக் கொள்ள ஆட்களும் இருந்தார்கள். மகனின் கஷ்டத்தை அறிந்த தந்தை அவனுக்கு 'செல்லப் பிராணி 'யாக வளர்ப்பதற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு முதலைக் குட்டி வரவழைத்து பங்களாவின் பக்கத்திலிருந்த ஒரு புறம்போக்கு நிலத்தில் ஒரு குளமும் வெட்டிக் கொடுத்தார். அந்த முதலையோ ஹார்லிக்ஸ் சாப்பிடாமலேயே அசுர வேகத்தில் வளரவே, காந்தன் பயங்கொண்டு, அதை ஆள் வைத்து அடித்துக் கொன்று அருகில் இருந்த மாலை நேர சிற்றுண்டி விடுதிக்கு (தமிழில் 'ஈவ்னிங் மட்டன் ஸ்டால் ' என்பார்கள்) 'சிக்கன் 65 ' செய்வதற்கு அனுப்பி விட்டான்.


    மறுபடியும் போரடிக்க 'சரி தமிழ் வளர்க்கலாம் ' என முடிவு செய்து 'வாயு ' என்ற பெயரில் சிற்றிதழ் ஆரம்பித்தான். அவனது பத்திரிகையை தமிழ் நாட்டில் ஐந்து பேரும்(வெவ்வேறு பெயரில் அவனே சந்தா கட்டியிருந்தான்) அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் , டிம்பக்டூ எனப் புலம் பெயர்ந்த தமிழர்கள் 145 பேரும் வாங்கி வந்தார்கள். 'வாயு 'வில் 'காராபூந்திப் பாண்டியன் ' என்ற பெயரில் கவிதைகள், கட்டுரைகள், சிறு கதைகள் எழுதி வந்தான் காந்தன். அந்தப் பத்திரிகையை அடிக்கக் கொடுத்த இடம் பர்வதா பிரஸ்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பர்வதா பிரஸ்ஸில் கல்யாணப் பத்திரிகைகள், பூப்புனித நீராட்டு விழா பத்திரிகைகள் என்று ஒரு புறமும், ஸ்ரீசண்டி மகா ஹோமம் சித்தி விநாயகர் கோவிலில் (ராதிகா அடிக்கடி வந்து கும்பிடும் கோவிலாம்) நடைபெறுகிறது என்ற மாதிரியான போஸ்டர்களும், 'கடவுள் இல்லை என்று கவிஞர் புலவர் டாக்டர் யின்னார் இன்ன இடத்தில் பேசுகிறார் ' என்பது மாதிரியான போஸ்டர்களும் அடித்து வந்தார்கள். காந்தனுடைய 'வாயு ' பத்திரிகை சிற்றிதழாக இருந்தாலும் அதை அச்சடிக்க அவன் பெரிய தொகை கொடுத்ததால் பர்வதா பிரஸ்ஸில் சந்தோஷமாக அச்சடித்துக் கொடுத்தார்கள்.


    கணேஷ் அவ்வப்போது அச்சுக் கோர்க்கும் வேலை, பிழை திருத்தும் வேலையைப் பார்த்து வந்ததால் வேறு வழியில்லாமல் காந்தன் எழுதிய சில சிறுகதைகள் 'நகக் கண்ணுக்குள் ஏற்பட்ட நகக் கீறல்கள் ' 'அர்த்த ஜாமம் இல்லாத அர்த்த ராத்திரிகள் ' ; 'சிற்பியைச் செதுக்கும் உளியின் கண் ' போன்றவற்றைப் படித்து தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு அவனது ரசிகனானான். அதுவும் 'சிற்பியைச் செதுக்கிய உளியின் கண் ' என்ற கதையில் காந்தன் ஒரு மண்புழு வாராந்தாவிலிருந்து வீட்டிற்குள் ஊர்ந்து நுழைவதற்கு ஒரு மணி நேரம் பிடித்ததை இருபத்திரண்டு பக்கங்கள் எளிமையான கடின நடையில் மேஜிகல் ரியலிஸமாக எழுதியிருக்க அதைப் பத்து டா குடித்து சிரமப்பட்டு முழித்தவாறு பிழை திருத்துகையில் தான் கணேஷிற்கு காந்தன் எழுத்துக்களின் மேல் ஒரு பற்று ஏற்பட்டது (வேறு வழியில்லை, வாடிக்கையாளன் அல்லவா)


    காந்தன் பிரஸ்ஸிற்கு வரும் போதெல்லாம் அவனது கதைகளை (வாடிக்கையாளரின் திருப்தியே முக்கியம் என்ற அச்சகத்தின் குறிக்கோளுக்காக) பாராட்டிப் பேச, காந்தனும் மகிழ்ந்து அவனது குறுகிய வட்ட வாசகர் கூட்டத்தில் கணேஷைச் சேர்த்துக் கொண்டு அவ்வப்போது கணேஷிற்கு கோல்ட் ப்ளேக் பில்டர், வெங்கட் நாராயணா போளி ஸ்டாலிலிருந்து மசால் வடை, அப்பா கடையிலிருந்து மில்கா வொண்டர் கேக் வாங்கிக் கொடுத்து கணேஷுடன் கதைகளைப் பற்றி அரட்டை அடித்து தனது இலக்கிய தாகத்தைத் தணித்து வந்தான்.


    இப்படி இருக்கையில் தான் ஒரு நாள் விதி என்னும் பின்லேடன் நட்பினால் அழ்காய் எழுந்திருந்த காந்தன் - கணேஷ் என்ற கட்டிடங்களை ஒரே ஒரு பெண் விமானத்தால் மோதித் தூள் தூளாக்கியது.


    ஒரு நாள் கணேஷ் தனது அச்சகத்தில் 'நிகழும் ...வருஷம் தை மாதம் சுப யோக சுப திணத்தில் ' என அடிக்கப்பட்ட ஒரு அழைப்பிதழை வைத்துச் சரிபார்த்துக் கொண்டு தினத்திற்கு 'ன ' வா 'ண ' வா என சற்றே குழம்பி சரி எதற்கும் இருக்கட்டும் என 'சுபயோக சுப தினணத்தில் ' என்று சரி செய்து கொண்டிருந்த போது 'யாராவது இருக்கிறார்களா ' என்று குரல் கேட்டது.

  4. #3
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நிமிர்ந்து பார்த்தால் மாயப் பிசாசு போன்ற தோற்றத்தில் ஒரு பெண். அழகிய கறுப்பு ஜீன்ஸ் அணிந்து அதற்கு இணையாக மஞ்சள் வண்ணத்தில் ஒரு பனியன் அணிந்து இருந்தாள் அவள். கண்டிப்ப்பாக அவளுக்கு தமிழ்த் திரைப்படங்களில் வாய்ப்புக் கிடைக்காது எனச் சொல்லலாம். உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருந்தது. கணேஷ் திருதிருவென முழித்து 'என்ன வேண்டும் உங்களுக்கு ' எனக் கேட்டான்.


    'என் பெயர் சாரா. நான் 'நீர் நிலைகள் ' என்ற சிற்றிதழில் இருந்து வருகிறேன். இங்கு கணேஷ் என்பது... '


    'நான் தான் ' என்றான் கணேஷ் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த குரலில் - அவளை அலுவலக அறையில் உட்கார வைத்து.


    'கணேஷ், நீங்கள் 'ஓமப்பொடிச் சோழன் ' என்ற புனைப்பெயரில் எழுதி எங்களுக்கு அனுப்பிய கவிதை தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. அதைச் சொல்லலாம் என வந்தேன் ' என்றதும் தான் ஞாபகம் வந்தது கணேஷிற்கு. காந்தனின் சிற்றிதழ்க் கதைகளைப் படித்து மனம் நொந்து இருந்த போது கை போன போக்கில் மனம் போன போக்கில் கிறுக்கியது அது.


    தினசரி

    எப்போதும்

    மனதுக்குள் குருவிகள்

    கீச் கீச் என்று

    சத்தம் போடும்

    அன்று

    அமைதியாய் இருந்தன

    ஏன் என்று கேட்டேன்

    'இன்று பார்த்தாயா

    எங்கு பார்த்தலும்

    போலீஸ் பந்தோபஸ்து

    தெரியுமா '

    தெரியும் என்றேன்.

    எதற்கு எனத் திருப்பிக் கேட்டன.

    'எந்த வித அசம்பாவிதம்

    நடக்காமல் இருப்பதற்காக '

    'அது தான் ஏன்

    சில வருடங்களுக்கு மு

    இந்த நாளில்

    நடக்கக் கூடாதது

    நடந்தது வாஸ்தவம்

    அது ஒரு காயம்

    ஆறி விட்ட நிலையில்

    மறுபடி மறுபடி

    வடுவை நினைவு படுத்த வேண்டுமா '

    எனக் கேட்டது மனக் குருவிகள்


    இன்று என்ன நாள் என யோசித்ததில்

    வருட இறுதி மாதத்தில்

    ஆறாவது நாள் எனத் தெரியவர

    குருவிகளின் கேள்விக்கு

    பதில் சொல்லத்

    தெரியவில்லை எனக்கு


    இதை காந்தனிடம் கொடுத்திருந்தால் 'கவிதை புரிகிறது ' என தள்ளிவிட்டிருப்பான் என்ற பயத்தில் 'நீர் நிலைகளுக்கு அனுப்பியது நினைவுக்கு வந்தது கணேஷிற்கு. அதையா தேர்வு செய்திருக்கிறாள் இந்த சாரா. ஒரு நிமிஷம். ஹை . இந்தப் பெயரில் இன்னும் நீள் தொலைக்க்காட்சித் தொடர்கள் எதுவும் வரவில்லையே ஏன் என யோசித்தான் கணேஷ்.


    'கணேஷ், நன்றாகவே எழுதுகிறீர்கள். ஆமாம், உங்கள் பிரஸ்ஸில் சிற்றிதழ் அடிப்பீர்களா. ஏனெனில் நான் எனது 'நீர் நிலைக 'ளையும் உங்கள் பிரஸ்ஸிலேயே அடிக்கிறேன். இப்போது அடிக்கும் அச்சகம் சரியில்லை ' என்றாள் சாரா. 'கண்டிப்பாக ' என மறுமொழிந்து பிடித்த ஆர்டரை தனது முதலாளி பாஸ்கர மார்த்தாண்டம் எம்.ஏ. எம்பி (எம்.பி அவரது இனிஷியல்) யிடம் சொன்ன போது அவர் துள்ளிக் குதித்தார். 'ரொம்ப நல்லது கணேஷ். இப்படியே 'செவ்வானம்,கரிசல் மண், தூய அக்னி ' போன்ற பத்திரிகைகளையும் வளைச்சுடு. பஞ்ச பூதங்களையும் நம்ம பிரஸ்ஸில அடிக்கறதா பெருமைப் பட்டுக்கலாம் ' என்றார்.

  5. #4
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இப்படியாக சாராவிற்கும் கணேஷிற்கும் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் காந்தனும் ஒரு நாள் சாராவைப் பார்த்து விட்டான். சாராவின் அழகிய பார்வை, பேச்சு,முகம் எல்லாம் அவனது மனதிற்குள் மண்டியிட்டு உட்கார்ந்து மணியடித்தது. தானாகவே அறிமுகம் செய்து கொண்டான் காந்தன். இருந்தாலும் சாரா கணேஷிடம் விழுந்து விழுந்து பழகுவதை பொறுக்க முடியவில்லை அவனால்.


    ஒரு நாள் கணேஷையே கூப்பிட்டு மிரட்டி விட்டான். 'கணேஷ், கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாம இருக்கிறாயே. நான் அந்தப் பெண்ணை நேசிக்கிறேன் என்று உனக்குப் புரியவில்லையா. பேசாமல் விலகிவிடு. உனக்கு எனது படை பலம், பணபலம், அறிவு பலம் எல்லாம் தெரியும் ' எனச் சொல்ல அப்போது தான் கணேஷுக்கு கோ,து,அ, க எல்லாம் ஒன்றாய் வந்தன.


    'நான் பாட்டுக்கு வாடிக்கையாளர் என்ற முறையில் தானே சாராவிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இப்படிக் காதல் என்று ஏதேதோ காந்தன் சொல்கிறானே ' என 'சும்மா இருந்த தொண்டனை முதலமைச்சர் ஆக்கினாற்போல 'த் தவித்துக் குழம்பினான் கணேஷ். குழம்பிய குட்டையில் தானே தெளிவாய் முள்ளம்பன்றி பிடிக்க முடியும். அது போல அவன் மனமும் ஒரு தெளிவு நிலையை அடைந்தது.


    மறு நாள் வந்த சாராவிடம் ' சாரா. நான் ஒன்று சொல்வேன். என்னைத் தவறாக நினைக்கக் கூடாது '


    'சொல்லுங்கள் '


    'உங்களுக்கு என்னையும் தெரியும், காந்தனையும் தெரியும். நான் உங்களைக் காதலிக்கிறேன். காந்தனும் உங்களைக் காதலிக்கிறார் '


    'அட நானும் தான். நான் உங்களையும் காதலிக்கிறேன்,காந்தனையும் காதலிக்கிறேன்! ' என்றாள் சாரா.

  6. #5
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    'மீட்டர் போடுகிறேன் ஏறுங்கள் சார் ' என்று சொல்லும் ஆட்டோக்காரனை நம்பாமல் தவிக்கும் மனதைப் போல அவள்சொன்னதைக் கேட்டுத் திகைத்தான் கணேஷ்.


    'என்ன சொல்கிறீர்கள் சாரா '


    'ஹ ஹா புரியவில்லை ' என்றாள் செவாலியர் குரலில்.


    'நான் இரண்டு தடவை மிஸ் இந்தியாவிற்குப் போட்டியிட்டிருக்கிறேன். அப்படித் தான் சொல்வேன். உங்கள் இருவரை மட்டுமல்ல இந்த உலகத்தையே காதலிக்கிறேன் ' என்று சொன்ன சாரா 'கணேஷ். are you serious ' என இயல்புத் தமிழில் கேட்டாள்.


    கணேஷ் ஆம் என்று சொல்ல ' சரி எனக்கு ஒரு நாள் நேரம் கொடுங்கள். நாளைக்கு காந்தனையும் வரச் சொல்லுங்கள். பேசலாம் ' என்றாள்


    மறு நாள் காந்தன்,கணேஷ் இருவரும் அழகாய் உடையணிந்து அமர்ந்திருக்க சாரா ' நேற்று முழுவதும் யோசித்துப் பார்த்தேன். உங்கள் இருவரையும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் உங்கள் ஒருவரைத்தான் என்னால் மணக்க முடியும். என்ன செய்ய. நான் கண்ணகி பரம்பரயில் பிறந்தவள். என் கொள்ளுப்பாட்டிக்குச் சொந்த ஊர் மதுரைப் பக்கம் ' என்றவள் மேலும் தொடர்ந்தாள்.


    'கணேஷ், நீங்கள் பணவசதி இல்லாதவர் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. உங்களைக் கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்ற என்னால் முடியும். ஆனால் உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் '


    'சரி ' என்றனர் இருவரும் தேவா, பரத்வாஜ் குரலில்.


    'நீங்கள் இருவரும் ஒரு வாரத்திற்குள் எனக்கு ஒரு நாவல் எழுதித் தர வேண்டும்.அது எனக்குப் பிடிக்க வேண்டும்;


    'நாவல் தானே. இருபது பக்கம் என்பது எனக்கு ஜீஜீபி. எழுதித் தருகிறேன் ' என்றான் காந்தன்.


    'இருபது பக்கமா! '


    'ஆமாம். இப்போதெல்லாம் இருபது பக்கம் என்றால் நாவல். பத்துப் பக்கம் என்றால் குறு நாவல். ஐந்து பக்கம் என்றால் நீள் கதை. மூன்று பக்கம் என்றால் கதை என்று ஆகிவிட்டதே. உனக்குத் தெரியாதா ? '


    'அதெல்லாம் இல்லை. 1,235 பக்கத்துக்குக் குறையக் கூடாது '


    'ஏன் ? '


    'கூட்டினால் 2 வருகிறது. எனது ராசியான எண்! ' என்றாள் சாரா. இருவரும் ஒத்துக் கொண்டு மறுவாரம் சந்திப்பதாகச் சொல்லிப் பிரிந்தார்கள்.

  7. #6
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கணேஷ் தன் மூளை, தலை, தோல், முதுகெலும்பு இன்னபிற எல்லா பாகங்களையும் கசக்கிப் பிழிந்து யோசிக்க வைத்து நாவலின் 100 அத்தியாயங்களுக்கு முன் கதைச் சுருக்கம் எழுதினான். அதுவே 200 பக்கம் வந்து ஒரு வாரத்தையும் சாப்பிட்டு விட்டது.


    மறுவாரம் காந்தன் பளபளப்பாக தடியாக இருந்த தனது நாவலை சாராவிடம் சமர்ப்பிக்க, அவன் நாவலின் முன் தென்னாப்பிரிக்கக் குழந்தை மாதிரி சோனியாக இருந்த தனது நாவலின் மு.க.சு வைக் கொடுத்தான் கணேஷ். சாரா 'இரு நாட்களில் பார்த்துச் சொல்கிறேன் ' எனச் சொல்லி வாங்கிச் சென்றாள்.


    இரு நாட்கள் கழித்து கணேஷிடம் வந்து 'மன்னியுங்கள் கணேஷ். நான் உங்களது 'ஒரு நடுப்பகலில் அடித்த வெய்யிலைப் பற்றிய நாட்குறிப்புக்களை 'த் தேர்வு செய்யவில்லை. காந்தனது 'பேசும் பிணங்களும் பேசாத மனிதமும் ' நாவல் என்னைக் கவர்ந்து விட்டது. அதையே தேர்வு செய்து, காந்தனையும் எனது மணாளனாகத் தேர்ந்தெடுத்து விட்டேன் ' எனச் சொல்ல கணேஷிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கொல்லங்குடி கருப்பாயியைப் போல

    'பாடு பல பட்டுத்தான் - நானும்

    ஒரு நாவல் அனுப்பி வச்சேன்

    நாவலும் தொடரலையே - எனக்கு

    வாழ்க்கையும் தொடரலையே '


    என ஒப்பாரியே பாடி விட்டான்


    மாலை காந்தன் பிரகாசமாய் வர, கணேஷ், 'அப்படி என்னடா எழுதினே நீ. அதுவும் அவ்வளவு பக்கங்கள்ல இவ்வளவு சீக்கிரமா ' எனக் கேட்க காந்தன் 'பரவாயில்லை, தோற்றவன் நீ. நான் சொல்றேன் எப்படின்னு. முதல்ல அம்பது பக்கத்திற்கு கதானாயகன் லைப்ரரிக்குப் போய் தனக்குப் பிடித்த புத்தகத்தை எடுக்கறதப் பத்தி எழுதியிருந்தேன். அவன் ஒரு புத்தகத்தின் மீது ஈடுபாடு கொண்டு படிக்க ஆரம்பிச்சான்னு எழுதிட்டு 51வது பக்கத்திலிருந்து என்சைக்ளோபீடியாவைச் சேர்த்து வச்சுட்டேன். அது சாராவிற்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. சரி சரி இந்தா. இதான் எங்க கல்யாண அழைப்பிதழுக்கான டிராப்ட். இதை நீயே ப்ரூப் பார்த்து அச்சடி. அப்ப தான் பொருத்தமாயிருக்கும் ' என்று சொல்லிக் கொடுத்து விட்டுச் சென்றான்.


    கணேஷிற்கு வந்த அழுகையினூடே அந்த லக்னப் பத்திரிக்கையைப் படித்தான். 'நிகழும் ...வருஷம் தை மாதம்... நான்காம் நாள்... சிரஞ்சீவி காந்தனுக்கும் செளபாக்கியவதி வாணி என்கிற சாராவிற்கும்.... ' என இருக்க ஏதோ எண்ணத்தில் அச்சுக் கோர்த்து இயந்திரத்திற்கு அடிக்க அனுப்பினான்.


    இரண்டாயிரம் காப்பிகள் அழைப்பிதழ்கள் அடிக்கப் பட்டு காய வைக்கப் பட்டிருக்க ஒன்றை எடுத்துப் பார்த்தான் கணேஷ். 'சிரஞ்சீவி கந்தனுக்கும்... செள வணி என்கிற சர ' விற்கும்... ' என அழைப்பிதழில் அடிக்கப் பட்டிருப்பதைக் கண்டவுடன் ஒரு வித சுகமான, அருமையான, சுவாரஸ்யமான,இனிமையான, அழகான, அல்பமான உணர்வு அவனுள் பரவியது!




    (முற்றும்)

  8. #7
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,164
    Post Thanks / Like
    சிறுபிள்ளைத்தனமான(வேறு வார்த்தை உபயோகித்தால் நாகரிகமாய் இருக்காது!) கதையும் எழுத முடியும் என்று காட்ட வேண்டுமா?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  9. #8
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அந்தக் காலத்தில் ஒரு எழுத்தாள நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது.. நவீன இலக்கியம்பற்றிப் பேச்சு வந்தது.. அப்போதெல்லாம்(இப்போது கூட) தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக வைத்து விட்டு உட்சென்றால் ஒன்றும் புரியாது..உதா: என் அப்பாவின் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகைச் சேடி பூத்துக் குலுங்கி இருந்தது (தலைப்பு த் தான்)

    அந்த நண்பர் சொன்னார்..ஒரு கதை வந்திருக்கிறது.,.முகங்களை விற்றவன் என்று தெரியுமா.. என்று சொல்லிவிட்டு நீங்கள் வேண்டுமானால் எழுதுங்க்ளேன்..கால்களை வாங்கியவன் என்று..என்று கேட்டார்..

    இரண்டு நாட்களில் சற்றே யோசித்து(?!) எழுதியது இது..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •