Results 1 to 10 of 10

Thread: நதி மூலம்...ரிஷி மூலம்...

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like

    நதி மூலம்...ரிஷி மூலம்...

    நதிமூலம்.... ரிஷி மூலம்...


    சின்னக் கண்ணன்
    (கே. ஆர். ஐயங்கார் என்ற பெயரில் எழுதியது




    முதலில் ஒரு கல்வெட்டு:-
    ***************

    காலம்: பண்டைய காலத்திலும் தமிழகத்தில் ஒரு போதாத காலம்.

    ஆட்சி : 'சோழப் புலி கொண்ட சுறா ' வான பாண்டிய மன்னன் சற்குண பாண்டியனின் ஆட்சி.

    வேலை முடியப் போகிறது இன்னும் சில நாழிகைகளில் - என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டால் அவ்வளவு தான். எல்லா வேலைகளையும் விரைவாய் முடித்துவிட்டு கடைசித் தருணத்தில் கொஞ்சம் ஓய்வில் இருக்கவே அனைவரும் விரும்புவர்.

    சூரியனுக்கும் அன்று அவ்வாறு தோன்றி விட்டதோ என்னமோ. உச்சி வெய்யில் ஏறி சில நாழிகைகள் ஆகியும் கூட தனது கிரணங்களை நன்றாகப் பாய்ச்சி வீடு செல்ல வேண்டும் என்ற தவிப்பை வெளிப்படுத்தினான். அவனுடைய தவிப்பை அவனே வைத்துக் கொள்ளப் படாதோ. ஏன் இப்படி மற்றவர்களையும் வதைக்க வேண்டும் ?

    அதுவும் 'நடுக்காடு ' என்றழைக்கப் பட்ட அந்த கிராமத்தில் பிரதானத் தெருவில் இருந்த படோடாபமான மாளிகையின் உள் அமர்ந்திருந்த அந்த இருவருக்கும் - சூரியனின் உஷ்ணத்தாலோ- அல்லது மனதின் உஷ்ணத்தாலோ நெற்றியில் வியர்வைத் துளிகள் பொங்கி வந்து கொண்டிருந்தன.

    தலைப்பாகை அணிந்து, மீசையில் வெண்ணிறம் பாதி நிறைந்திருக்க ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்த முதலாமவர் - நடுக்காடு உட்பட்ட 26 கிராமங்களின் தலைவர்- சயங்கொண்ட நாதர் தான் முதலில் பேச ஆரம்பித்தார்.

    'என்ன சொல்கிறீர்கள் மெய்க்கீர்த்தி ? நீர் கூறுவதெல்லாம் உண்மையா ? '

    மெய்க்கீர்த்தியானவர் சிறு துணியினால் முகத்தைத் துடைத்துக் கொண்டே சொன்னார். 'ஆம் பிரபோ '

    'அதாவது நாம் அரசாங்கத்துக்குக் கட்டவேண்டிய வரியைக் குறைத்துக் கட்டியதைப் பற்றி அவன் அரசரிடம் சொல்லப் போகிறானாமா ? '

    'ஆம் பிரபோ ' என்றார் மெய்க்கீர்த்தி மறுபடியும்.

    'யாரய்யா அவன் ? அவன் பேர் என்ன ? கரிக்காற் நெடுக்கிள்ளி. இப்படியொரு பெயரை யார் வைத்தார்கள் ? எப்படிக் கூப்பிடுவார்கள் ? கரி என்றா கால் என்றா நெடு என்றா ? '

    'கிள்ளி என்று அழைப்பார்கள். அவனுக்குச் சொந்தமாகவும் சில நிலங்கள் இருக்கின்றன. நாம் எல்லா கிராமங்களில் இருந்தும் வரி வாங்குகிறோமாம். ஆனால் அரசுக்குக் கொடுப்பதில்லை எனக் குற்றஞ்சொல்கிறான் '

    'பேசிப் பார்த்தீரா ' எனக் கேட்டார் சயங்கொண்ட நாதர்.

    'ஆ பேசினேனே. கேட்க மாட்டேன் என்கிறான் '

    'அப்படி என்றால் ஒன்று செய்யும். மறுபடியும் போம். எப்படியாவது அவன் வாயை அடைக்கப் பாரும்... ஆமாம்.. அவனுக்கு உறவு என்று சொல்ல அம்மா.. அப்பா ? '

    'அப்பா பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த போரில் மடிந்து விட்டார் பிரபோ. அன்னையும் தவறி விட்டாள். இருப்பது ஒரே ஒரு பாட்டி '

    'சரி.சரி. உண்டானதைச் செய்யும்.. விரைவாக ' என்றார் சயங்கொண்ட நாதர்.

    *****************

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திடீரென விழிப்பு வந்திட சாளரத்தின் வழியே வெளியில் பார்த்தாள் பூங்கொடி. வானம் மங்கிக் கொண்டிருந்தது. வர வர உடம்புக்கு முடிவதில்லை. என்னதான் விடிகாலை எழுந்து பகல் பொழுதுவரை சுறுசுறுவென வேலை செய்தாலும் மதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வந்து விடுகிறது. இதை எப்படியும் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்குவதற்கும் நேரமாகி விடுகிறது....

    மெல்ல படுக்கை அறையிலிருந்து வெளியில் வந்தாள். அழகாக இலவம்பஞ்சைப் போல வெளுத்திருந்த கூந்தலை அவிழ்த்து மறுபடியும் முடிந்து கொண்டாள். கொல்லைப் புறம் சென்றுவந்து, குளிர் நீரால் முகம் கழுவி பக்கத்திலிருந்த அண்டாவில் இருந்த தண்ணீரில் முகம் பார்த்தாள். அழகிய முகம் - கொஞ்சம் நிறையவே சுருக்கம் விழுந்திருந்தது. ஒற்றைச் சீலை. பாழ் நெற்றி. காதுகளில் கிழங்கு கிழங்காய் தண்டட்டி தொங்கவிட்டதால் காதும் சற்றே தொய்ந்திருந்தது.. உடம்பு நன்றாக தேக்குமரத்தைப் போல உறுதியாயும், பூசணிக்காயைப் போலக் குண்டாகவும் இருந்தது.

    முகம் துடைத்து முற்றத்தில் பார்த்தால் - காய வைத்திருந்த தானியங்களை சில பறவைகள் கொத்திக் கொண்டிருந்தன. காதில் இருந்த தண்டட்டியைக் கழற்றி எறிந்து அவற்றை விரட்டினாள். 'என்ன இந்தக் கிள்ளியைக் காணோம் ' என நினைத்துக் கொண்டிருந்த போது அவளிடத்தில் வேலை செய்யும் ஒரு பெண் ஓடி வந்தாள். 'பாட்டி. மோசம் போய்விட்டோம். '

    'என்னடா செல்லீ. என்ன ஆயிற்று ' பூங்கொடி பதறினாள்.

    'உங்கள் பேரன் கிள்ளியை அடித்து வைக்கோற்போரில் போட்டு எரித்து விட்டார்கள் '

    'ஆ ' என அலறிய பூங்கொடி , 'யார் செய்தது இந்த வேலையை. அந்தப் பாவி சயங்கொண்டான் தானே. அவனை ஒரு வழி பண்ணுகிறேன் ' என்று சொல்லிப் புறப்பட்ட போது தான் அவர்கள் நால்வர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் என்றால் மெய்க்கீர்த்தியின் ஆட்கள். கையில் வாட்கள்.

    'வாங்கடா பேடிகளா ' கூச்சலிட்டாள் பூங்கொடி. அருகில் இருந்த கம்பை எடுத்துக் கொண்டாள். ' ஆசான் சாத்தனிடம் சிலம்பம் பயின்றவள் நான் ' சுழற்றினாள்.

    வாட்கள் பறந்தன. பூங்கொடியின் கம்பு துண்டு துண்டானது.

    மேலும் நால்வர் பூங்கொடியைச் சூழ்ந்தனர். பூங்கொடி தனி. நால்வர் கையிலும் வாட்கள்..

    **************

  4. #3
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அய்யகோ.. நான் என் செய்வேன் ? தனியொருவனாய் நின்று தவறினைத் தட்டிக் கேட்ட கிள்ளியைக் கிள்ளி எறிந்தவர்கள் அவன் பாட்டியையும் விடவில்லையே.. என்னாகுமோ என்று என் மனம் பதைபதைக்கிறது.

    ( அட.. பழந்தமிழ்ப் பாடலில் வரும் வரிகளின் அர்த்தத்தை கப்புனு கதையில் இறக்கி விட்டீங்களே. தானியம் கொத்த வரும் பறவைகளை காதணியை கழற்றி வீசி விரட்டுவார்களாம். அதை மீண்டும் எடுத்து அணியாமல் அங்கேயே கிடப்பதால் அது சிறுவர்கள் ஓட்டி வரும் சிறுதேரை தடுக்குமாம். அத்தனை செல்வச் செழிப்பாக இருந்தது என்று சொல்லுவாங்க.. ஹி ஹி.. அவ்வளவு செழிப்பு இருந்தா எதுக்கு நாலு தானியம் தின்ன வரும் பறவையை விரட்டணும் என்பது என் சந்தேகம் )

    இலக்கிய நயத்துடன் இன்னொரு கதையை ஆரம்பித்த சிக்காவுக்கு இன்னைக்கு உத்திராடத் திரு நாளை முன்னிட்டு ஒரு கப் சக்கப் பிரதமன்.


  5. #4
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    'அவ்வளவு தான் நடந்தது ' என்றார் மெய்க்கீர்த்தி. சயங்கொண்ட நாதர் கோபாவேசமானார். 'என்ன சொல்கிறீர்கள். பாட்டியையும் பேரனையும் கொன்று விட்டார்களா ? '

    'ஆம் பிரபோ '

    'இப்போது மற்றவர்கள் அருகில் இருக்கும் கிராமத்திற்கு வரப்போகும் தென்னவன் ஆபத்துதவிகளிடம் சொல்லப் போகிறார்களாமா ? '

    'ஆம் பிரபோ.. அடுத்த வாரம் '

    'எல்லாம் என் தலையெழுத்து. நான் ஒன்று சொன்னால் நீர் ஒன்று செய்கிறீர். '

    'பிரபோ தாங்கள் தான் வாயடைக்கச்... '

    'அதற்காகக் கொல்வது என்று அர்த்தமா..ஏதாவது கையூட்டு கொடு என்று சொன்னேன். இப்போது விஷயங்கள் சிக்கலாகி விட்டன '

    'பிரபு ஒரு யோசனை '

    'என்ன ? சொல்லித் தொலையும் '

    'கரிக்காற் நெடுக்கிள்ளியும் அவனது பாட்டியும் நமது எதிரிகள். அவர்கள் இப்போது இல்லை. அவர்களை வீரர்கள் ஆக்கினால்... '

    'என்ன ஆயிற்று மெய்க்கீர்த்தி உமக்கு. மூளை குழம்பி விட்டதா ? '

    'இல்லை பிரபு. நான் உடனே மதுரை சென்று அமைச்சர்.. '

    'என்ன அமைச்சரைத் தெரியுமா உமக்கு ? '

    'அமைச்சரின் தேரோட்டியைக் கண்டு பேசி வருகிறேன். என்ன கொஞ்சம் செலவாகும் '

    : 'எல்லாம் கொஞ்சம் செலவில் முடிய வேண்டியவை. உம்மால் இழுத்துக் கொண்டே செல்கிறது. என்ன தான் செய்யப் போகிறீர் ? '

    மெய்க்கீர்த்தி சயங்கொண்டாரிடம் நெருங்கி ஏதோ பேசினார்.

    ****************

  6. #5
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பொழுது விடிந்ததற்கு அறிகுறியாக அந்தப் புரச் சமயலறையில் பாத்திரங்கள் உருட்டப் படும் ஒலிகளும் எண்ணெயில் மாவு பொரியும் ஓசையும்- அந்தப் புரத்தின் உப்பரிகையில் அழகிய ஆசனத்தில் அமர்ந்திருந்த சற்குண பாண்டியனின் காதுகளில் விழத்தான் செய்தன. என்றாலும் மன்னனின் கண்கள் எதிரே ஒரு பணிமகள் பிடித்திருந்த தட்டொளியைப் (கண்ணாடியை) பார்த்த வண்ணம் இருந்தன. அருகில் இருந்த இன்னொரு பணிமகள் உக்கத்தை (விசிறி) இருமுறை விசிறியதால் மன்னனது கருங்குழல்கள் சற்றே கலைந்து சாயம் போன வெளிர் நரையைக் காட்டின.

    'ம்க்கும் ' என்று கழுதைக்குப் போட்டியாக ஒரு சின்னக் கனைப்புச் செய்த வண்ணம் அவன் அருகில் வந்தார் அமைச்சர் அறிவுடை நம்பி. அதுவரை கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னன் அமைச்சர் எழுப்பிய ஒலியால் அவர் வருவதைப் பார்த்தும் பாராதது போல வானத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.

    'காலையிலேயே மன்னவருக்குப் பலத்த சிந்தனை போல இருக்கிறது ' என்றார் அமைச்சர்.

    'சிந்தனைக்கு என்ன குறைச்சல் அமைச்சரே ' என்றான் பாண்டியன். 'பாருங்கள். எட்டுத் திசைகள் இருக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் எதிரிகள். இப்பொழுது தான் ஒரு போரை முடித்துவிட்டு வந்தேன். அதற்குள் சேரன் வேறு போருக்குத் தயாராவதாகத் தகவல் '

    'மன்னா. அமர்ந்த இடத்திலேயே இருந்து எப்படித்தான் இவை எல்லாம் தெரிந்து கொள்கிறேரோ. உங்களுக்கு நிகர் யாரும் இல்லை '

    'சரி. சரி. ஏற்கெனவே மார்கழிப் பனி. இதில் நீர் வேறு. அமர்ந்து பேசும் ' என அருகில் இருந்த ஆசனத்தைக் காட்டினான் மன்னன். அமர்ந்த அமைச்சர் ஜாடை காட்ட பணிமக்கள் விலகினர்.

    'அடுத்த போருக்குத் தயாராக முடியுமா அமைச்சரே. நிதி நிலைமை எப்படி இருக்கிறது ? '

    'சிறிது கஷ்டம் தான் வேந்தே '

    'புதிய வரி போடலாமென்றால் அதுவும் கஷ்டம். இப்பொழுது தான் ஒரு வரி போட்டு மக்கள் முணுமுணுக்கிறார்கள் என மூன்றிலொரு பகுதி குறைத்தோம்.. '

    'புதிய வரி போடுவது கவலை இல்லை மன்னா '

    'எப்படி '

    'புதிய வரி போட்டு விடுவோம். சில நாட்களில் காக்கை பாடினியார் சிலையை ஒளித்து வைத்து விடுவோம். மக்கள் அதைப் பற்றிப் பேசுவார்கள். வரியை மறந்து விடுவார்கள்! '

    'மறுபடி கூட்ட வேண்டுமென்றால் ? '

    'கல் தோன்றி மண் தோன்றிய காலத்திலிருந்து நமது நாட்டில் சிலைகளுக்குப் பஞ்சம் இல்லை மன்னா.. மனித மனங்களுக்குத் தான்.. '

    'ஆம் அமைச்சரே. இவ்வளவு கல் நெஞ்சக் காரராயிருக்கிறேரே. மக்களுக்கு மேலும் மேலும் வரி விதிக்கலாம் என்கிறீரே! '

    'மன்னா... ' '

    'சரி அதை விடும். இதென்ன இந்த அதிகாலை வேளையில் என்னைப் பார்க்க வந்த காரணம் ? '

    'மன்னா. நடுக்காடு என்றொரு கிராமம் '

    'அதற்கென்ன. அதுவும் சுற்றுப் பட்ட 26 கிராமங்களுக்கும் தலைவர் சயங்கொண்ட நாதர். அதுவும் தெரியும் '

    'மன்னா. உங்கள் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது. அந்த கிராமத்தில் இருந்த கரிக்காற் நெடுக்கிள்ளி என்பவரும் பூங்கொடி என்ற கிழவியும் தாங்கள் போரில் ஜெயிக்க வேண்டும் என வேண்டி தீயுள் புகுந்து விட்டார்கள் '

    'என்ன ' கோபம் மிகக் கொண்டான் மன்னன். 'இது என்ன அபத்தமாய் இருக்கிறது. எனக்காக இவர்கள் ஏன் வெட்டியாக உயிர் துறக்க வேண்டும். அவன் பேரென்ன. கிள்ளி. அவன் நமது படையிலாவது சேர்ந்திருக்கலாம். இது போன்ற விஷயங்களெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று உமக்குத் தெரியாதா அமைச்சரே '

    'தெரியும் மன்னா. இருந்தாலும் அவர்கள் நமது குடிமக்கள். நம் மீது அன்பினால் உயிர்த் தியாகம் செய்த வீரர்கள். நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்ற ஆவலால் கிழவியும் பேரனும் செய்த தியாகத்தை நீங்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது.

    'இப்பொழுது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள் ' என்றான் சற்குணன். 'சீக்கிரம் சொல்லும். எனக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. சிகை திருத்துபவனை வரச் சொல்லியிருக்கிறேன். '

    :மன்னா. அவ்விருவருக்கும் ஒரு நடுகல்லும், வாரிசு- தூரத்து உறவு யாராவது இருந்தால் அவர்களுக்கு ஏதாவது தானமும் கொடுத்துக் கல்வெட்டும் பொறிக்கலாம் என்பது எனது எண்ணம். மக்களும் பாராட்டுவார்கள் '

    'தானம் ' உறுமினான் மன்னன். 'சயங்கொண்ட நாதரிடம் இருந்து எட்டுக் கிராமங்களைப் பிடுங்குங்கள். அருகில் உள்ள கிராமத் தலைவர்களிடம் இருந்தும் 10 கிராமங்களைப் பிடுங்கி -மொத்தம் 18 கிராமங்கள் இறந்தவர்கள் பெயரில் எழுதிவையும். இனிமேல் 18 கிராமங்களுக்கு ஒரு தலைவர் எனப் புதிய சட்டம் இயற்றும். கல்வெட்டுப் பொறிக்கும் ஆளை வரச்சொல்லும் ' என்றான்.

    'வணக்கம் மன்னா. ' என்றான் தடியாய் இருந்த கல்வெட்டுப் பொறிக்கும் ஆள்.

    'அமைச்சரே. எழுதிக் கொள்ளும்.. நிகழும்...வருஷம்... சோழப்புலி கொண்ட சுறாவான சற்குணபாண்டியனால் நடுக்காடு கிராமத்தைச் சேர்ந்த கரிக்காற் நெடுக்கிள்ளிக்கும் பூங்கொடிக்கும் அவர்கள் செய்த தியாகத்திற்காக நடுக்காடு உள்ளிட்ட 18 கிராமங்கள் வழங்கப் படுகிறது. இவற்றை அவர்களது வாரிசுகள் வானம் உள்ளளவும், உயிர் உள்ளளவும் அனுபவிக்கலாம்...சரியா அமைச்சரே.. மறக்காமல் வல்லின மெல்லினங்களில் மேற்புள்ளி வைக்கச் சொல்லாதீர்கள் '

    'மெத்தச் சரி மன்னா. உஙக்ள் தயாள குணமே குணம் ' என்றார் அமைச்சர் அறிவுடை நம்பி.

    ******************************************

  7. #6
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பிறகு ஒரு உரையாடல்:

    ******************

    காலம் : கி.பி. 1895

    இடம் : ஆலங்காடு

    'ஆஹா. அழகாக அடுப்பில் எரியும் விறகின் அடிப்பாகத்தைப் போன்ற கருமையான கூந்தல் கொண்டவளே. திருவிழாக்களில் தெய்வத்திற்குப் படைக்கப் படும் பொங்கலைப் போன்ற இனிமையைக் குரலில் கொண்டவளே. மீனுக்காகத் தவம் செய்து காத்திருக்கும் கொக்கின் முக்கைப் போன்ற கூரிய அறிவு உடையவளே. கிண்கிணி வாய்த் தாமரை போல அழகிய கண்களை... '

    'என்ன ஆச்சு மச்சான் உனக்கு ? ஏன் இப்படி எல்லாம் பேசறே '

    'ஒன்றுமில்லை பொன்னி. வரும் வழியில் தமிழாசிரியருடன் சிறிது பேசிக் கொண்டிருந்தேன் '

    'நல்ல வேளை. ஒரு நிமிஷத்தில் நான் பயந்தே போய்விட்டேன். ஆமா. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா ? '

    'ஓ. மறப்பேனா. இன்னிக்கு உன் பிறந்த நாளாயிற்றே. பொன்னி உனக்கு என்ன வேண்டும் கேள் '

    'ஆமாம் நான் கேட்டுத் தான் நீங்க தரணுமாக்கும். அப்பாவைப் பார்த்துப் பேச வேண்டியது தானே. எப்பவும் ஊர்மட்டும் சுத்தறீங்க '

    'அப்பாவைப் பார்ப்பது இருக்கட்டும் பொன்னி. உனக்கு ஏதாவது பரிசு தரணும்னு பார்க்கறேன். கிட்ட வாயேன் '

    '....... '

    'பொன்னி '

    '........ '

    'தயங்காமல் கேள். எது வேணும்னாலும் கேள். நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும்னு மட்டும் என்கிட்ட கேட்காதே. அதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள் '

    'அடச் சே. ஆசையாய்க் கூப்பிட்டன்னுக் கிட்டக்க வந்தால் சும்மா பேசிக்கிட்டே இருக்கியே '

    'பொன்னி. நீ கேக்கறத தரமாட்டேன்னா நினைக்கிறே. கண்டிப்பா எப்பாடு பட்டாவது வாங்கித் தரேன். கொஞ்சம் ஏதாவது கேளேன் '

    'உன்னைத் திருத்தவே முடியாதுய்யா. தானாவும் தெரியாது. சொன்னாலும் புரியாது.. ஆண்டவா என்னைக் காப்பாத்துப்பா! '

    'எதுக்கு ஆண்டவனைக் கூப்பிடறே '

    'சரி ஒண்ணு செய். என் வீட்டில் தோய்க்கறதுக்கு இருந்த கல்லு தேஞ்சு போச்சு. இதோ இந்த மண்டபத்துக்குப் பக்கத்திலே இருக்கே இந்தக் கல்லு அதை வீட்டுக்குக் கொண்டு வா '

    'என்ன விளையாடறயா. நான் ஒண்டி ஆளாய் எப்படி இதைத் தூக்கறது. முதுகெலும்பு விலகிடும் '

    'ஐயோ. நாலு ஆளை வெச்சுக் கொண்டுவந்து போடுங்களேன் '

    'சரி பொன்னி. என்ன இதுல என்னமோ எழுதி இருக்கறமாதிரி இருக்கு. சறகுண பாணடியனால ....னு '

    'என்னங்க. படிக்கறதெல்லாம் அப்புறம் வெச்சுக்குங்க. முதல்ல கொண்டுவது வீட்டின் கொல்லைப்பக்கம் போடற வழியைப் பாருங்க '

    'சரி பொன்னி '

    *************************************

  8. #7
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பிறகு ஒரு கடிதம்

    ************

    காலம்: கி.பி 1910

    இடம்: சென்னைப் பட்டணம்

    அப்போது இருந்த கவர்னரின் செயலாளரின் செயலாளரின் செயலாளரான ஸர். ராபர்ட் ப்ரெளன் என்பவரால் லண்டனில் இருந்த அவரது மனைவி மேரிக்கு எழுதப் பட்ட கடிதம். (தமிழாக்கப் பட்டு உள்ளது)

    என் இனிய அமிர்தமான மேரி.,

    நலமா. நான் இங்கு நலம். நம் குழந்தைகள் ஜேம்ஸீம் ரோஸலீனும் எப்படி இருக்கிறார்கள் ? பள்ளிக்கு ஒழுங்காகச் செல்கிறார்களா ?

    இங்கு எனக்கு எதுவும் சொல்லிக் கொள்ளும் படியான வேலை இல்லை. என் மேலாளரோ சும்மா இருக்காமல் எங்காவது போய் வா என்றுவிட்டார்.

    எனில் சென்றவாரம் மதுரைப் பக்கம் உள்ள கிராமங்களுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஆலங்காடு என்ற ஒரு கிராமத்தில் இரவு தங்க வேண்டி வந்தது. ஒரு கிராமத்துப் பெரியவர் வீட்டில்தங்கினோம். காலை குளிப்பதற்குச் செல்லும் போது அவர்கள் வீட்டின் கொல்லைப் புறத்தில் துவைப்பதற்காக வைக்கப் பட்ட கல் ஒன்றைப் பார்த்தேன். என் கூட வந்த சாம்ப சிவம் ( எனக்கு மொழி பெயர்ப்பவர்) துள்ளிக் குதித்தார். மிக அரிய கல்வெட்டாம் அது. முன்பு நாட்டை ஆண்ட பாண்டிய மன்னன் சற்குண பாண்டியன் என்பவரால் கொடுக்கப் பட்டதாம் அது. அதனால் அந்தக்காலச் சரித்திரம் தெரியவருகிறதுஇ என்று சாம்பசிவம் கூறினார்.

    அந்தக் கல்லை அப்படியே பெயர்த்து சென்னப் பட்டண பொருட்காட்சியகத்துக்குக் கொண்டு வந்து விட்டோம்.

    இங்கு டிசம்பர் மாதத்தில் மென்மையான குளிர்தான் இருக்கிறது. அங்கு குளிர் அதிகமா. எப்போதும் உன்னை மட்டும் - உன்னையே உன்னை மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். (கதை விடாதீர்கள் என்று சொல்லாதே)

    முடிந்தால் ஏப்ரல் மாதத்தில் கப்பலேறி அங்கு வருவேன்.

    சந்தைக்குச் சென்றால் எனக்கு சில தொப்பிகள் வாங்கி வை. எனது தொப்பிகள் அழுக்காகி விட்டன.

    சாம்பசிவத்திடம் இருந்து சில தமிழ் வார்த்தைகள் வாக்கியங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

    எனில் இக்கடிதத்தை முடிக்கும் போது - யின்யவ்லே என்கு ஓர் முத் கொடு - என முடிக்கிறேன்.(அர்த்தம் தெரிந்தால் நீ வெட்கப் படுவாய்)

    உன் நினைவில் வாழும்

    ராபர்ட்

    **********************

  9. #8
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பிறகு ஒரு புத்தக விமர்சனம்

    *****

    காலம்: கி.பி. 2002

    இடம் : சென்னை

    ****************************

    புத்தகம் : சின்னக்கண்ணன் எழுதிய 'வாள் பிடித்த வஞ்சி '

    (xyz பதிப்பகம், pqr தெரு, தி நகர் சென்னை. 4 பாகங்கள். 3 பாகம் வாங்கினால் 1 பாகம் இலவசம்.

    ரூ 800 மதிப்புள்ள புத்தகம் ரூ 600 மட்டுமே. முன்பதிவு செய்து கொள்ளலாம்.. கடன் வசதி உண்டு)

    விமர்சிப்பவர்: பேராசிரியர் இமயவரம்பன் கணைக்கால் இரும்பொறை.

    நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி:

    '...........ஆகவே கற்பனைக் குதிரை காயம் பட்டிருந்ததால் சற்று நொண்டினாலும் கூட நொண்டிக்கொண்டே அந்தக் காலப் பாண்டிய சாம்ராஜ்யத்துக்குச் சென்றேன். சற்குண பாண்டியன் எப்படிப் பட்டவன். நல்லவன். தூயவன். பலசாலி. தைர்ய சாலி. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே அடிகோலியவன். அவனது தளபதி கரிக்காற் நெடுக்கிள்ளி தான் அவனது போர்களில் அவனுக்குப் பக்க பலமாக இருந்தான். பாண்டியனுக்குப் போர்த் திட்டங்கள் வகுத்துத் தந்ததும் அவனே. சோழருடன் ஏற்பட்ட போரில் உயிர்த் தியாகமும் புரிகிறான்.

    அவனது தங்கை பூங்கொடி: நல்லியல்பு கொண்டவள். மன்னனை நேசிக்கிறாள். பிறகு நாட்டுக்காக சோழ குமாரி அவனை நேசிப்பதை அறிந்ததும் தன் காதலைத் தியாகம் செய்கிறாள். வாட் போரில் மிக்க வல்லமை பெற்றவள் அவள். சேர நாட்டிற்குச் சென்று ஒற்று வேலை புரிந்து பாண்டியனுக்கு உதவி உயிர்த் தியாகம் புரிகிறாள். இதைப் பற்றி ஒரு கல்வெட்டும் காணப் படுகிறது. இந்தக் கல்வெட்டைப் பற்றி சரித்திரப் பேரா. சாம்பசிவம் தனது 'முற்காலப் பாண்டியர்கள் ' என்ற தம் நூலில் குறிப்பிடுகிறார். சற்குண பாண்டியன், கரிக்காற் நெடுக்கிள்ளி, பூங்கொடி எல்லாம் வரலாற்றுப் பாத்திரங்கள். சோழகுமாரி, துறவி, வல்லபராயன்(சேர நாட்டு ஒற்றன்) எல்லாம் எனது கற்பனைப் பாத்திரங்கள். எனில் எனக்குத் தெரிந்த தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுத முயற்சித்திருக்கிறேன்.....

    *

    (முற்றும்)

  10. #9
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்

    இன்றும் மாமல்லபுரம் செல்பவர்களுக்கு அதெல்லாம் ஆயனசிற்பி செதுக்கிய சிற்பங்கள் என்றும் சிவகாமி நடனமாடுவது போலும் ஒரு மாயக்காட்சி தோன்றுவது இயற்கை. (அமரர் கல்கியின் நாவல்களைப் படித்தவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும்)/

    கல்வெட்டில் இருந்த விஷயம் நடந்த சம்பவம் என்றாலும் அதன் பின்னணியும் அதன் பாத்திரங்களும் எப்படி எல்லாம் மாறிப் போகிறார்கள் என்று தெரியுதா ?

    ( எதுக்கும் உலகத் தலைவர் சின்னக் கண்ணன் ஒரு மாமேதை அவர் எழுதிய கதைகளை நிலா ராஜா கூட வாங்கிப் படித்தார் என்று ஒரு கல்வெட்டு செதுக்கி வச்சா எதிர்காலத்துல ஏதாச்சும் நடக்க சான்ஸ் இருக்கோ )

  11. #10
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,249
    Post Thanks / Like
    வழக்கமான நக்கல் தூக்கலாகவே இருக்கிறது! சாடையாய் சொல்வதெல்லாம் நன்றாகவே புரிகிறது!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •