Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 23

Thread: Yanaigal pul meivathillai

  1. #1
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like

    Yanaigal pul meivathillai - யானைகள் புல் மேய்வதில்லை


    யானைகள் புல் மேயவதில்லை




    சில்லென்று இதமாக வீசிக் கொண்டிருந்த மலைக்காற்றில் ஒரு ஈர வாசனை தெரிந்தது. மழை வருமா ? ஆனாலும் அவன் அண்ணாந்து பார்த்தபோது வானம் நிர்மலமான நீல நிறமாகவே இருந்தது. அந்த நீல வானத்தில் இருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து வைத்தது போல அந்த சிறிய ஏரி அவன் எதிரில் தெரிந்தது. அதன் கரையில் இருந்த பாறையின் மீது அவன் வெகு நேரமாக உட்கார்ந்திருக்கிறான்.

    அவன்...,,,,,,,பிரபு என்கிற பிரபாகர்..

    முப்பது வயது இன்னும் முடியவில்லை.. இள வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து சில போர்முனைகளையும் கண்டவன். பகைவர்களுக்கு பாரதத்தின் வீரம் என்னவென்று காட்டி அதன் பரிசாக ஒரு பாதத்தை இழந்தவன். கைபர் கணவாய் போல நெற்றியின் ஓரத்திலிருந்து கன்னத்தின் வழியாக காதுக்கு கீழ் வரை ஒரு பள்ளம்....முன்பல்லில் ஒன்றில் பாதி காணாமல் போனதால் பேசும்போது லேசாக காற்றுடன் சொற்கள் கலந்து வரும். ஆனாலும் அவன் கண்ணில் இன்னும் கதிரவன் ஒளி வீசியபடிதான் இருந்தான். நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையும் அவன் ஆண்மைக்கு கட்டியம் சொல்லும். .

    பணி செய்ய முடியாத நிலையில் இன்று இராணுவத்தில் இருந்து வெளியேறி விட்டான். வயிற்றுக்கு உணவும் உடல் மறைக்க உடையும் அவனுக்கு என்றும் கிடைத்துவிடும். ஆனால் வாழ்வின் வசந்தங்களை அவன் இதுவரை கண்டதிலை. என்றோ அனாதையானவன் இன்றோ குரூபியானவன். அதனால் அவன் வாழ்வில் துணை வர எந்தப் பெண்ணும் தயாராகவும் இல்லை. உடன் பணியாற்றியதால் அவன் வெள்ளை உள்ளத்தைப் புரிந்து கொண்ட நண்பன் துரைசாமி அவனைத் தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.

    "எவ்வளவு நாள் வேணுமானாலும் என்னோடு இரு. தனியா இருக்க்ணும்னு நென்சசு மனசை கஷ்டப்படுத்திக்க வேணாம். உனக்கு ஒரு வேலை கிடைப்பது பெரிய விஷயம் இல்லை. இப்போதைக்கு உன் பென்ஷன் இருக்குது. மத்ததை அப்புறம் யோசிக்கலாம்". துரையின் அன்பு அழுத்தமாக அவனைப் பிடித்துக் கொள்ள அவன் மனைவியின் பயம் கலந்த முகம் அவனை தர்மசங்கடத்தில் தள்ளியது.

    "உங்க ஃப்ரெண்டு கிட்டே ஏதாச்சும் சொல்லி கொஞ்சம் அவர் ரூம் பக்கமே இருக்கும்படி செய்யுங்க. குழந்தை அவரு மொகத்தைப் பாத்தாலே பயப்படுது" அவள் கிசுகிசுத்தது ஒரு வேளை பிரபுவின் காதில் கேட்டாலும் கேட்கட்டுமே என்று கூட இருந்திருக்கலாம்.

    இப்போது வந்திருக்கும் பிரச்சினையை அவன் துரையிடம் சொல்ல விரும்பவில்லை. இரண்டு நேர்முகத் தேர்வுகளில் அவன் தெரிந்தெடுக்கப் பட்டு இருந்தாலும் அதில் ஒரு நிறுவனம் மட்டுமே அவனை பணியில் சேருமாறு கடிதம் அனுப்பி இருந்தது. ஆனாலும் ஐம்பதாயிரம் ரூபாய் உடனடியாக செக்யூரிடடி டெபாசிட் ஆக கட்ட வேண்டிய நிலை.

    காரணமே இல்லாத காரணங்களால் அவன் இதுவரை சேமிக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. இன்றோ திடீரென்று அவசரமான தேவை உருவாகி இருக்கிறது. துரை ஏற்பாடு செய்து தருவான். ஆனால் அவன் மனைவியை எதிர்த்து பேச வேண்டி இருந்தால் அதை பிரபு விரும்பவில்லை. மேலும் இன்னும் துரை வீட்டில் அவனுக்கு பாரமாக இருக்கவும் பிரபுவால் முடியவில்லை. எப்படியாவது இந்த பணத்தை ஏற்பாடு செய்து விட்டால் சில மாதங்களில் திரும்பக் கொடுத்து விடலாம். ஆனால் யாரைக் கேட்பது ? வங்கிகளில் கூட சுலபத்தில் பணம் கிடைக்காதே ?

    போர் முனையில் கூட இத்தனை மன அழுத்தம் இருந்ததில்லை. அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணுகெட்டிய தொலைவு வரை மரங்களும், புதர்களும் மட்டுமே தெரிந்தன. மேல் வானத்தில் சூரியனை சில கருமேகங்கள் சுற்றி வளைத்து ராகிங் செய்து கொண்டிருக்க, அனுசரணை இல்லாத மனிதர்களாக மலை முகடுகள் அதை அசையாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன.

    காற்றில் லேசாக குளிர் அதிகரிக்க அவன் உடம்பு சிலிர்த்தது. கடிகாரத்தைப் பார்த்து விட்டு சால்வையைப் போர்த்தியபடியே எழுந்து விந்தி விந்தி நடந்தான். ஊனமான காலில் அணிந்திருந்த வட்டமான செருப்பு லேசாக வழுக்க காலை அழுத்தி ஊன்றியபடியே நிமிர்ந்தபோது பொட்டென்று ஒரு நீர்த்துளி அவன் நெற்றியில் விழுந்தது. இலவசப் பொருட்கள் தருவதாகக் கூறும் அறிவிப்பைப் பார்த்ததும் கூடும் மக்கள் போல அதற்குள்ளாக கருமேகங்கள் கூடி வானத்தில் சண்டையிட ஆரம்பித்து இருந்தன. கையில் குடை இல்லை. வீட்டிலிருந்து நிறைய தூரம் வந்து விட்டான் என்பது தெரிந்தது. மழை வலுக்கும் முன் ஒதுங்க ஒரு இடம் தேவை.

    எங்கும் மரக்கூட்டங்கள்தான் தெரிந்தன.. ஊழித் தாண்டவமாடும் ருத்ரன் போல தலை விரித்து ஆட ஆரம்பித்த மரக்கூட்டங்களின் நடுவில் அந்த சிறிய வீடு தெரிந்தது. உள்ளே தெரிந்த விளக்கின் ஒளி இதமாக மனதில் ஒரு வெப்பத்தைக் கிளப்ப அவன் மெல்ல மெல்ல அந்த வீட்டை நோக்கி நடந்தான். பூமியை செழிப்பாக்க வருகிறோம் என்று மேகங்கள் விடும் செய்தியைத் தாங்கி வரும் தந்திக் கம்பிகளாக மழை ஆரம்பித்தபோது பிரபு அந்த வீட்டின் வாசல் கதவைத் தட்டினான்.

    கதவு திறந்ததும் தெரிந்த அந்த முகம்...

    ஒரே ஒரு மத்யம ஸ்வரத்தில் கல்யாணி ராகமும், சங்கராபரணமும் மொத்தமாக வித்தியாசப்படுவது போல சாதாரண பெண்களிடமிருந்து அவளிடம் ஏதோ ஒரு வேறுபாடு தெரிந்தது. அது என்ன என்று மனதுக்குப் புரியவில்லை. வயது என்ன என்பது சரியாக தெரியவில்லை. முப்பதுகளின் பின் பகுதியில் இருக்கலாம்.. ஆனால் மாலை மயங்கிய பிறகும் மேல் வானத்தில் பரவியிருக்கும் செவ்வண்ணம் போல ஒரு இளமையான் புன்முறுவல் தெரிந்தது.

    நூல் புடவையில் இருந்தாலும், ஒரு அன்புச் சக்கரம் அவள் பின் சுற்றுவது போல தோன்றியது. கடவுள் உருவாக்கியதை இயற்கை யோசித்து யோசித்து வருடக் கணக்கில் செதுக்கி இப்படி தெய்வீகமாக ஆக்கி இருக்குமோ ? அவன் அவளையே பார்த்தபடி நின்றான்

    "உள்ளே வாப்பா.. மழை வலுக்குது"

    இது வரை அவனைக் கணடதும் முகம் சுளிக்காமல் வரவேற்றது இவள் மட்டும்தானோ ?

    அவன் உள்ளே வந்தபோது "அங்க்கிள்" என்றபடி ஒரு சின்னப்பயல் .. இல்லை.. சின்னப்புயல் அவன் மீது பாய "டேய் சீனா.. அங்க்கிளை தொந்தரவு செய்யாதே" என்றபடி சீனாவை நகர்த்தி விட்டு "நீ உட்காருப்பா" என்றாள். ஒரே ஒரு சிறிய அறை. அதை ஒட்டியபடி இருந்த இன்னொரு அறை சமையலறை எனவும், ஓரமாகத் தெரிந்த கதவு டாய்லெட் என்றும் புரிந்தது.

    தன் மேல் ஏறிய சீனாவைப் பிடித்துக் கொண்டபடி "பரவாயில்லைங்க சின்னப் பையன்தானே ! " என்ற அவனுக்குள் துரையின் மகனுடைய பயந்த முகம் தோன்றி மறைந்தது.

    "என் பேரு பிரபாகர். நான் கோல்டன் எஸ்டேட் குவாட்டர்ஸில் என் நண்பனோடு தங்கி இருக்கேன். இங்கே இந்த ஏரிக்கு வாக்கிங் வந்தேன்.திடீர்னு மழை வந்திருச்சு. அதான்.. இங்கே... மழை விட்டதும் கிளம்பிடுறேன்"

    "அதனாலே என்னப்பா ? இங்கே யாரும் வர்ரதில்லை. சரியான பாதையும் இல்லை. இப்போ போனாலும் மழைத் தண்ணி சேறாக்கி சறுக்கி விட்டுரும்." என்றவள் அவன் காலைக் கவனித்து "கண்ணி வெடியா?" என்றாள்.

    "ஆமா..எப்படி சரியா...... ?"

    அவள் கையை நீட்டிய திசையில் பார்த்தபோது மிலிடரி உடை அணிந்த ஒருவரின் படத்துக்கு சந்தன மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

    "என் வீட்டுக்காரர். எப்பவும் நாடு நாடுன்னே பேசிக்கிட்டு இருப்பார். மிலிடரிக்காரங்க எல்லாரும் யானை போலன்னு சொல்லுவார். எப்பவும் உயர்ந்த லட்சியத்தோடதான் வாழணும். யானை எப்பவுமே ஒசந்த மரக்கிளையை ஒடிச்சு திங்குமே தவிர தரையில் இருக்குற புல்லைத் தின்னாது. அது போலத்தான் நாமளும் வாழணும்னு சொல்லுவாரு. நாங்க அவர் சொன்னதை தட்டுனதே இல்லை. ராணுவம்தான் அவருக்கு உசிரு. நாட்டுக்கு உழைக்கிறவங்களுக்கு என்ன வேணுமானலும் செய்யலாம்னு சொல்லுவாரு"

    சீனா அவன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். பிரபுவின் மனதில் அணை உடைந்து ஒரு நதி ஓட ஆரம்பித்தது. அவளுடன் பேசிக்கொண்டே போனபோது தனக்கும் கூடப்பிறந்தவர்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று அவனுக்குள் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. நேரம் நகர நகர வெளியே மழைத்தாரைகள் இருளுடன் கூடி திரை போட்டு உலகத்தை மூடியிருந்தன. பேச்சு வாக்கில் பிரபு அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல அவள் முகத்தில் ஒரு பனி மூட்டம்.

    "எப்படிப்பா இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு இருக்கே ? எங்க வீட்டுக்காரர் சொன்னது போல நீங்க எல்லாருமே யானைங்கதான். எங்களைப் பாரு..எங்களுக்கும் வேறு சொந்தம் யாரும் இல்லை. ஆனா எனக்கு சீனாவும் அவனுக்கு நானுமாய் இருக்கிறோம்."

    "இந்த இடத்தில் தனியா..."

    அவள் சிரித்தாள்.

    "இயற்கைக்கு எதிராகத்தான் போராட முடியாது. மனிதர்கள் கிட்டே இருந்து என்னைக் காப்பாத்திக் கொள்ள எனக்கு சக்தி இருக்குதுப்பா"

    மழை விடுவதாகத் தெரியவில்லை.

    "இன்னைக்கு ராத்திரி இங்கேயே தங்கிட்டு காலையில் மழை விட்டதும் கிளம்பலாமே"

    பேய் மழையால் நகர முடியாமல் போக பிரபு துரைக்கு ஃபோன் செய்து விவரம் சொன்னான். காலையில் மழை விட்டதும் வருவதாக் சொன்னான். அன்று இரவு அவள் கொடுத்த அவள் கணவரின் லுங்கியைக் கட்டிக்கொண்டு சூடான சப்பாத்தியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தபோது அவள் அவனுக்கு எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டாள். சீனா கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அவன் மடியில் சாய்ந்தபடி தூங்கிப் போயிருந்தான்.

    "உன் கிட்டே நல்லா ஒட்டிக்கிட்டான் போலிருக்கு"

    "ஆமாம்"

    "அவனுக்கு அன்பு காட்ட என்னை விட்டால் யாரு இருக்காங்க.. அதான் பள்ளம் கண்டதும் பாயுற தண்ணி போல பாயுறான்" அவள் ஜன்னல் இடுக்கு வழியாகத் தெரிந்த மின்னலைப் பார்த்தபடி சொன்னாள்.

    "பிரபாகரை ஒரு விஷயம் கேக்கலாமா?"

    "கேளுங்க"

    "உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா ? எங்காவது ஒருத்தி உனக்காக பிறந்திருப்பா இல்லையா?"

    பிரபு மெல்லச் சிரித்தபடி "இந்த முகத்தைப் பாருங்க.. இதில் இருக்கும் தழும்புகளை விட அதிகமாக வலிக்கும் தழும்புகள் என் மனதில் இருக்கு. அத்தனை அவமானங்கள்... "

    "உனக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா ?"

    "குடும்பமா... ? அது மனப்பூர்வமாக யாராவது என்னோடு வாழ்ந்தால் நல்லா இருக்கும். ஆனா என் வாழ்க்கையில் அது கிடைக்க சான்ஸே இல்லை"

    அவள் அவனை பரிவாக ஏறிட்டாள். "உனக்கு ஆசையே கிடையாதா?"

    "நீங்க சொல்லுறது புரியுது. எனக்கு எல்லா ஆசைகளும் இருக்கு.. குடும்பம், குழ்ந்தைங்க... எல்லாமே.... ஆனா அதுக்காக வெறுமே ஒருத்தியோட என்னைப் பகிர்ந்துக்கா நான் தயாராக இல்லை. எனக்குள் இருக்கும் ஆசைகள் என்னோடு முடிஞ்சு போனாலும் பரவாயில்லை. என்னை வெறுக்கும் ஒருத்தியோட வெறும் பொய் வேஷம் போட்டு வாழ என்னால் முடியாது. என் வாழ்க்கையில் எது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இப்போதைக்கு எனக்கு ஒரு வேலை கிடைச்சா போதும். என் நண்பனுக்கு பாரமா இருக்க விரும்பலை. அவன் என்னை பாரமா நினைக்கல. ஆனாலும்..... "

    அவள் எதுவும் பேசவில்லை.

    அந்த சிறிய அறையில் ஒரு ஓரமாக சீனாவைப் படுக்க வைத்து விட்டு அவனுக்கு ஒரு பஞ்சடைத்த மெத்தையை விரித்தாள். ஜன்னலில் இருந்து வழிந்த நீர் ஓரமாக கசிந்திருக்க அவள் படுக்கையை அறையின் நடுவில் போட்டள்.

    "இப்படி போட்டா உங்களுக்கு படுக்க இடம் போதாதே. நான் இப்படியே ஓரமா சுருண்டு படுத்துக்குறேன் அக்கா"

    அக்கா என்ற வார்த்தை கேட்டு அவள் ஒரு நிமிடம் அப்படியே நின்றாள்.

    "பரவாயில்லை. நான் அந்த சமையலறையில் படுத்துக்குவேன்"

    இரவு விளக்கின் ஒளியில் தூங்கிக் கொண்டு இருந்த சீனாவின் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான். பின் மழையின் ஒலியைக் கேட்டபடி மல்லாந்து படுத்துக் கண் மூடியிருந்தான். எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை. காலையில் கண்விழித்தபோது அவள் சூடான டீயுடன் தயாராக இருக்க சீனா கீழே விழுந்திருந்த மரக்கிளைகளில் இருந்த பூமொட்டுக்களைப் பறித்துக் கொண்டு இருந்தான்.

    "வெளியே நிக்காதே சீனா... மரமெல்லாம் சாய்ஞ்சிருக்குது பாரு" அவள் சீனாவை அழைத்தாள்.

    "நல்ல தூக்கமா ? " என்றபடி அவள் சிரித்தாள்.

    அப்போது துரையிடமிருந்து அழைப்பு வர அவன் கிளம்பினான்.

    "போய்விட்டு அப்புறமாக இன்னொரு நாள் வரேன்".

    அவன் காலைக் கட்டிக் கொண்டு பிடிவாதம் பிடித்த சீனாவை அவள் விலக்கி விட போக மனமின்றி காலைத் தேய்த்தபடி அவன் நகர்ந்தான்.

    "ஒரு நிமிஷம் பிரபாகர் !"

    அவள் அவன் கைகளில் ஒரு சின்ன பையைத் தந்தாள். மேலாக ஒரு பிளாஸ்டிக் பையில் முறுக்கு தெரிந்தது.

    "அப்புறமா சாப்பிடு"

    அவன் தடை சொல்லாமல் வாங்கிக் கொண்டு நடந்தான். வானம் இன்னும் மூட்டமாகவே இருந்தது. அவன் துரையின் வீட்டுக்கு வந்தபோது மீண்டும் ஒரு பெருமழை பிடித்தது. காற்றோடு மழையும் சேர்ந்து வெறி பிடித்தது போல ஆடி முடித்தபோது அவன் மனதில் மட்டும் வானம் நிர்மலமாகவே இருந்தது.

    மத்தியானம் தன் அறையில் இருந்தபோது அவள் தந்த பை ஓரமாக இருந்தது. அதை எடுத்து திறந்தான். மேலாக ஒரு கவரில் நாலு முறுக்குகள் இருந்தன. அதன் கீழ் இன்னொரு கவர் இருந்தது. அதை எடுத்துப் பிரித்தான். கட்டு கட்டாக் ரூபாய் நோட்டுகள். மொத்தம் ஐம்பதாயிரம். அத்துடன் ஒரு சிறிய பேப்பர்.

    :"தம்பி பிரபாகர்.. எந்த காரணத்துக்காகவும் ஒரு ராணுவ வீரன் கஷ்டப்படக் கூடாதுன்னு எங்க வீட்டுக்காரர் சொல்லுவார். உன் கஷ்டத்துக்கு இப்போதைக்கு இது உதவும். நீ தானம் வாங்குவதாக நினைத்து மனம் வருந்த வேண்டாம். கடனாகவே நினைத்துக் கொள். உன்னால் என்றைக்கு திருப்பித் தர முடியுமோ அன்று தந்தால் போதும். நீ என்னை அக்கா என்று உண்மையாக நினைத்து அழைத்திருந்தால் இதை வைத்துக் கொள்"

    அவன் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தபோது ..

    "பிரபு..உனக்கு கூரியர் வந்திருக்கு".

    கூரியரில் வந்த கவரைப் பிரித்தபோது ஏற்கனவே நேர்முகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இன்னொரு பெரிய கம்பெனியின் சென்னைக் கிளையில் அவனை உடனே வந்து சேரும்படி செய்தி வந்தது. தங்கும் இடமும் அவர்க்ளே தருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை விட முக்கியமாக அவன் எந்தத் தொகையும் டெபாசிட்டாக செலுத்த வேண்டியது இல்லை என்பதும் புரிந்து போனது. அவன் எதிர்பார்த்திருந்த உத்தியோகம். இனி கவலை இல்லாத வாழ்க்கைக்கு ஒரு கேரண்டி.

    "கங்கிராஜுலேஷன்ஸ் பிரபு" என்று துரை துள்ளி வந்து அவனை அணைத்துக் கொண்டான். "இனிமேல் உனக்கு ஒரு குறையும் இல்லை"

    "உன்னைப் போல ஒரு நண்பன் இருக்கும்போது எனக்கு என்ன குறை? ஒரு சின்ன விஷயம். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் துரை" மனம் முழுவதும் பிரகாசமாக அவன் கிளம்பினான்.

    அவன் அந்த வீடு இருந்த அந்த மரக்கூட்டத்துக்கு அருகே வந்தபோது ஒரு வேறுபாடு தெரிந்தது. காற்றில் அங்கங்கே மரங்கள் விழுந்து கிடக்க மனிதக்கூட்டமும் இருந்தது. வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய மரத்தின் கிளைகள் சரிந்து கிடப்பது தெரிந்தது. அவன் விந்தி விந்தி அருகில் ஓடினான்.

    "என்ன ஆச்சு?"

    "நேத்து ராத்திரி மழையிலேயே அந்த மரமெல்லாம் சாய ஆரம்பிச்சிருந்துச்சு. காலையிலே மறுபடி அடிச்ச காத்துல அந்த மரம் அந்த மிலிடரிக்காரன் வீட்டு மேலே விழுந்திருச்சு. வாசலில் இருந்த அவரு சம்சாரம் அடிபட்டு விழுந்துட்டாங்க. ஆஸ்பத்திரியிலே சேர்த்து இருக்காங்க அந்தப் சின்னப் பையன் மட்டும் உள்ளே இருந்திருக்கான். அதனால தப்பிச்சுட்டான். அவங்களுக்கு உறவுக்காரங்க வேற யாரும் இல்லை., பாவம் அந்த புள்ளை நிலைமை"

    பிரபு வேகமாக முன்னேறினான். சிதறிக் கிடந்த கிளைகளுக்கும், இலைகளுக்கும் நடுவில் ஒரு சின்ன உருவம். ஒரு போலீஸ் முகம் அவனை மறித்தது.

    "யாரு நீங்க ?"

    அவன் வாய் திறக்கும் முன் "அங்கிள்" என்ற விம்மலுடன் சீனா அவனிடம் ஓடி வர அவனைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.

    "அழக்கூடாது சீனா... அங்க்கிள் இருக்கேனில்ல"

    "ஓஹோ.. நீங்க இவங்க சொந்தக்காரங்களா ? சரி.. சரி.. கொஞ்சம் இப்படி வாங்க"

    பிரபு சீனாவைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே போனான்.

    அதன் பிறகு மிஷன் ஆஸ்பத்திரியில்....................

    "அந்த லேடி கோமாவுல இருக்காங்க. எப்போ சரியாகும்னு சொல்ல முடியாது. பட்டணத்துக்குக் கொண்டு போய் பெரிய ஹாஸ்பிடலில் பார்க்கலாம். குணமாக சான்ஸ் இருக்கு.. அப்புறம்....இப்போதைக்கு அவங்க பையனை ஒப்படைக்கக் கூடிய இடம் நீங்கதான். அவனை வச்சுக்க உங்களுக்கு ஆட்சேபணை இருந்தா ஏதாச்சும் இல்லத்துல சேர்த்து விடுறோம்..."

    "இல்லே இல்லே.. அவன் என் கிட்டேயே இருக்கட்டும். என் அக்காவையும் சென்னைக்கு அழைச்சுகிட்டு போக ஏற்பாடு செஞ்சிடறேன்."

    மருத்துவமனைக் கட்டிலில் அவள்அசையாமல் படுத்திருந்தாள். கடவுள் உருவாக்கி இயற்கை யோசித்து யோசித்து வருடக்கணக்கில் செய்த தெய்வீக சிற்பம் அல்லவா ?

    நேற்று அவள் என்ன நினைத்து முன் பின் தெரியாத தனக்கு அத்தனை பணத்தைக் கொடுத்தாள் என்று அவளைக் கேட்க ஆசைப்பட்டான். ஆனால் அவன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அது அவனுக்குள்ளேயே மெதுவாகப் புதைய ஆரம்பித்தது. இந்தக் கேள்விக்கான பதில் எனும் புல் அவனுக்கு தேவையில்லை. அவன் வாழ்க்கையின் லட்சியம் இதுவல்ல.

    அவள் சொன்னது நினைவுக்கு வந்தது. நம் செயலும் சிந்தனையும் என்றும் உயர்வாகவே இருக்க வேண்டும். போரிலும் சரி.. வாழ்விலும் சரி.. ஒரு ராணுவ வீரன் எதற்கும் கலங்காமல் முன்னேற வேண்டும்.

    பிரபுவின் முகமும் மனமும் இப்பொது தெளிவாக இருந்தன. மருத்துவமனையில் இருந்து அவன் சீனாவின் கையைப் பிடித்துக் கொண்டு கிளம்பியபோது அவன் நடையில் தடுமாற்றம் இல்லை. ஏனென்றால்........

    யானைகள் புல் மேயவதில்லை.

    (முற்றும்)
    __________________

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Simply super madhu anna

    நல்ல வர்ணனைகள்.. டபக் டபக் கென்று சுருதி சுத்தமான இசையைப் போன்ற நடை..அந்த மரவீடெல்லாம் கண்முண் தோன்றுகிறது..ரொம்ப இயல்பான வசனங்கள், வார்த்தைகள்.. ரொம்ப பேஷா எழுதறீங்கண்ணா..

    (ஐம்பதாயிரம் ரூபாய்பற்றி அந்தப் பெண்ணிடம் ப்ரபாகர் சொல்லவே இல்லையே..பரவாயில்லை..)

  4. #3
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    CK !!

    Quote Originally Posted by chinnakkannan View Post
    (ஐம்பதாயிரம் ரூபாய்பற்றி அந்தப் பெண்ணிடம் ப்ரபாகர் சொல்லவே இல்லையே..பரவாயில்லை..)
    " பேச்சு வாக்கில் பிரபு அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல அவள் முகத்தில் ஒரு பனி மூட்டம்."

    இதெல்லாம் இந்த வரியில் அடக்கம் !!

  5. #4

  6. #5
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மன்னிக்க..அந்த லைனை மறந்துட்டேன் !..

    தவிர அந்தப் பெண் எதற்காகப் பணத்தைக் கொடுத்தாள் என யோசிக்க வேண்டிய அவசியமே இல்லையே..(அவளைப் பற்றி எந்த இடத்திலும் தவறாக எழுதவில்லையே நீங்கள்).. நார்மலான அனுதாபம்.+உதவி செய்ய ஆசைப்படும் குணம் ஆக இருக்கலாம்..அதற்காகத தான் பதில் எனும் புல் தேவையில்லை..என எழுதியிருக்கிறீர்கள்..

    Quote Originally Posted by madhu View Post
    CK !!



    " பேச்சு வாக்கில் பிரபு அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல அவள் முகத்தில் ஒரு பனி மூட்டம்."

    இதெல்லாம் இந்த வரியில் அடக்கம் !!

  7. #6
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,797
    Post Thanks / Like
    மிகக் கனமான கதைக் கரு. கம்பீரமான மனித உள்ளங்களைப் பற்றிப் படிக்க மகிழ்ச்சியாய் இருந்தது! மனிதம் சாவதில்லை. எவ்வளவு ஆறுதலான சங்கதி! அது சரி, பசித்தாலும் புலி புல்லை தின்னாது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன், யானை புல் தின்னாது என்ற சொலவடை எனக்கு புதிது.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #7
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    PP akka

    யானைகள் புல் தின்பதுண்டு என நினைக்கிறேன். ஆனால் சாதாரணமாக அவை புல் மேய்வதில்லை என்று சொல்வார்கள்.

  9. #8
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like
    Variety is the word...
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

  10. #9
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    madhu fantastic story.

  11. #10
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    mayilammaa..

    Variety Ok.. But what about the story oru vELai mayilammavukku pidikkalaiyO ?

    Rajesh

Page 1 of 3 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •