Results 1 to 3 of 3

Thread: நட்புக்கு அப்பால்!

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    நட்புக்கு அப்பால்!

    1994 ஜூன் 15

    பிழைப்பு தேடி, கோபாலும் கணேசனும் தங்கள் தங்கள் பாதையில் பிரிய முடிவெடுத்தனர். பிரிவதற்கு முன்னாள், சென்னை ஆழ்வார்பேட்டையில், ஒரு முட்டுச்சந்தில், சின்ன ரெஸ்டாரண்டில் சந்திக்க திட்டம். அதுதான் அவர்கள் எப்போதும் அரட்டை அடிக்கும் பாசறை .


    இரண்டு வடை , இரண்டு சமுசா, சிங்கில் டீ சகிதம் தங்களுக்கு தாங்களே பிரிவுபசாரம் நடத்திக் கொண்டார்கள். இருவருக்கும் மூச்சு முட்டியது. கணேசன் பேச்சு தடுமாறியது. அவன் வாயில் வடை! அவன் பேச அதுவும் ஒரு தடை! கண்ணீர் மல்க, பிரியா விடை !

    டேய் கோபால், நீயும் என்கூட வந்துடுடா! துபாயிலே எங்க மாமா பெரிய கடை வெச்சிருக்கார். அங்கே போயிடலாம். நம்ப ரெண்டு பெரும் ஒன்னாவே இருக்கலாம்! என்ன சொல்றே? இங்கே நாம படிச்ச பீஏவுக்கு என்ன வேலை கிடைக்கும்? பேசாம வந்துடுடா! எங்க மாமா கிட்டே சொல்லி டிக்கட்டுக்கு ஏற்பாடு பண்றேன். கணேசன் கெஞ்சினான். அவனுக்கு நண்பனை விட்டுப்பிரிய மனமேயில்லை.

    இல்லே கணேசா! நான் வரல்லே! எங்க அப்பா அம்மாவை விட்டு இப்போ வர முடியாதுடா! நீ போயிட்டு வா! பின்னாடி பாக்கலாம்! ஆல் தி பெஸ்ட்! கோபால் முடிவாக மறுத்து விட்டான், சமூசாவை விண்டு கொண்டே. சிம்பாலிக்காக சமோசா இரண்டு பாகமாய் , ஒன்று வாயில், ஒன்று தட்டில் .

    சரி! எப்படியோ போ ! நான் சொல்லி எப்போ கேட்டிருக்கே ? நான் கிளம்பறேன். அடிக்கடி மெயில் போடு! யாகூ மெயிலாமே. அதுலே எழுது. கடிதம் போடு! என்ன மறந்துடாதே என்ன?

    கனத்த மனதுடன், கசியும் கண்ணீருடன், இருவரும் பிரிந்தனர்.

    இருவருக்கும் அப்போது வயது இருபத்தி மூன்று.

    ****
    இருபது வருடம் கழிந்தது. (ஆண்டு 2014)

    இந்த கால கட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள்? அமெரிக்கா மேல் அல்கொய்தா 911 தாக்கு, அயிடியில் பூகம்பம், ஈரோ காசு, ஈராக் போர், உலகை உலுக்கிய சுனாமி , ஒபாமா ஆட்சி,என எவ்வளவு நடப்புக்கள்? எவ்வளவு இழப்புகள்?

    இதே சமயம், இந்தியாவும் 'நான் மட்டும் என்ன குறைச்சலா?விட்டேனா பார்! என போட்டு தாக்கிக் கொண்டிருந்தது. கார்கில் யுத்தம், தகவல் தொழில் நுட் பூம், மொபைல், மேட்ச் பிக்சிங், ஐபில் ஹவாலா லலித் மோ(ச)டி, மிஷன் டு மூன், ரியல் எஸ்டேட் என பிய்த்து உதறிக் கொண்டிருந்தது.

    முழு நேர வேலையாக, அரசியல் வாதிகளும் அதிகாரிகளும், நாட்டை நாலா பக்கமும் ஓட்டை போட்டு திருடிக் கொண்டிருந்தார்கள். அயோக்கியர்களுக்கு ஓட்டை போட்டு விட்டு பொறுமிக் கொண்டிருந்தார்கள் பொது மக்கள்.

    இன்க்ரடிபில் இந்தியா, இந்த இருபது வருடத்தில் நாளுக்கு ஒரு ஊழல் என போக்ரான் குண்டாக வெடித்து கொண்டிருந்தது. அலைக்கற்றை ஊழல், காமன் வெல்த், மாட்டு தீவன ஊழல் என சுனாமியாக கலக்கிக் கொண்டிருந்தது.

    இந்த கலங்கிய குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள், மிகத் தெள்ளத் தெளிவாக அரசியல்வாதிகள்.

    திறமை வாய்ந்த தமிழ்நாடும் எதற்கும் குறை வைக்கவில்லை. அதன் பங்கை விட கொஞ்சம் அதிகமாகவே ஆற்றிக் கொண்டிருந்தது. திண்டிவனத்தை சென்னையிலிருந்து மிக அருகில் என கூப்பாடு போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். எந்தக் கொள்ளையிலும் தமிழ் நாட்டுக்கு ஒரு தனி இடம்தான். அவர்களை அசைக்க முடியாது.

    கோபால் சென்னையிலேயே இருந்து விட்டான். அவனது அப்பா அம்மாவுடன். அவன் கல்யாணம் கூட செய்து கொள்ள வில்லை. குண்டும் குழியுமான ரோடும், சாக்கடையாக வரும் குழாய் நீருமே அவனுக்கு சுவர்க்கம். நிம்மதியான வாழ்க்கை.

    மாறாக, துபாய் போன கணேசன் , மாமாவின் துணையினால், வாழ்க்கையில் உயர்ந்து விட்டான். எக்கச்சக்க பணம் அவனிடம் சகட்டு மேனிக்கு சேர்ந்தது. சொத்து மேல் சொத்து குவிந்தது.

    கோபாலுக்கும் கணேசனுக்கும் இடையில் முதலில் கொஞ்ச நாள் கடித போக்குவரவு இருந்தது. காலப் போக்கில், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று விட்டது. ஆனாலும், கணேசனுக்கு கோபாலின் நினைவு மறக்கவில்லை. கோபாலுக்கு கணேசனை மறக்க முடியவில்லை.

    இப்படியே , கால சக்கரம் உருண்டது. இடைப்பட்ட வருடங்களில், இரண்டு நண்பர்களுக்கு இடையில், எந்த பரிவர்த்தனையும் இல்லை.

    ****
    2014, ஜுன் 01

    ரியல் எஸ்டேட் பிசினெஸில் , ஐம்பது கோடி முதலீடு செய்வதற்காக கணேசன், துபாயிலிருந்து , ஜூன் 14, சென்னை வர வேண்டியிருந்து. கூடவே, அவனுக்கு சென்னையில் நண்பன் கோபாலின் நினைவும் வந்தது.

    உடனே, கணேசன் தனது காரியதரிசியை கூப்பிட்டான். தன் நண்பன் கோபாலை, சென்னையில் எப்படியாவது, காண்டாக்ட் பண்ணி , தான் தங்கப் போகும் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து வரப் பணித்தான்.

    ****

    2014, ஜுன் 15.

    இரவு 8 மணி. சோளா ஹோட்டலின் 24 மணி நேர காபி ஷாப்.

    கணேசன், தன் நண்பன் கோபாலின் வரவுக்காக காபி ஷாப் லவுஞ்சில் காத்திருந்தான். அங்கு தான் இருவரும் பார்ப்பதாக ஏற்பாடு. ஒரு மணி நேரமாக அவன் தன் நண்பனை எதிர் நோக்கி வழி மேல் விழி.

    அப்போது கணேசனின் அலைபேசி சிணுங்கியது.

    கணேசன் எடுத்தான். மிஸ்டர் கணேசன், நான் பிரான்ஸ்சிஸ் பேசறேன். கோபால் சாரோட அசிஸ்டன்ட். சார் இப்போ ஒரு முக்கிய வேலையா வெளிலே இருக்கார். நாளைக்கு சாயந்தரம் அவரே உங்களை ஹோட்டல்லே வந்து பார்க்கிறேன்னு சொன்னார். !

    அப்படியா! நான் நாளைக்கு திரும்ப துபாய் போகணுமே. என்னால் இருக்க முடியாதே! .நண்பனை பார்க்க முடியாத வருத்தம் கணேசனின் குரலில் தெரிந்தது.

    சரி சார், இதை நான் அவர் கிட்டே சொல்றேன். ஆனால், இப்போ அவரை தொடர்பு கொள்ள முடியாது !. முக்கியமான மீடிங்க்லே இருக்கார்! அவரே உங்களை அப்புறமா தொடர்பு கொள்வார் அப்போ வெச்சிடட்டுமா? . தொடர்பு துண்டிக்கப் பட்டது. கணேசன் அலைபேசியை அணைத்தான்.

    கணேசனுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இன்றோடு இருபது வருடம் முடிகிறது, நண்பனை பிரிந்து!. அவனை மீண்டும் சந்தித்து கொண்டாட நினைத்தோமே ! அடடா ! நண்பனை பார்க்க முடியாது போலிருக்கிறதே!

    முடிவு செய்து விட்டான் கணேசன். பேசாமல் கோபாலன் வீட்டை கண்டுபிடித்து இன்றே பார்த்து விட வேண்டியது தான். ஆழ்வார்பேட் ரெஸ்டாரன்ட்க்கு அருகே எங்கேயோ தானே அவன் வீடு.! அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்.. இல்லேன்னா என்ன, பேசாம துபாய்க்கு திரும்பி போக வேண்டியதுதான். அடுத்த முறை, முறையாக அவனிடமே அட்ரஸ் கேட்டுகிட்டு வரலாம்.


    அப்போது மணி கிட்டதட்ட இரவு 8.30. கணேசன் வாடகை பென்ஸ் காரில் கிளம்பினான். இருபது வருடங்களுக்கு முன் இருவரும் பிரிவுபசாரம் செய்து கொண்ட ரெஸ்டாரன்ட்க்கு முதலில் போகச்சொன்னான். பின்னாடியே, அவனது காரியதரிசியும் இன்னொரு காரில் தொடர்ந்தான்.

    கணேசனின் டிரைவர் ரெஸ்டாரன்ட் அருகில் காரை நிறுத்தினான்.

    கணேசன் கார் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். ஆழ்வார்பேட்டையே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது.

    இருவது வருஷத்தில் எவ்வளவு மாற்றங்கள்? எங்கே பார்த்தாலும் அடுக்கு மாடி கட்டிடங்கள். மால்ஸ். பெரிய பெரிய ஹோட்டல்கள். எப்படி அட்ரஸ் கண்டு பிடிக்கறது? ஒருவேளை, அவன் வேறே இடத்துக்கு மாறி இருந்தால் ? சரி! கோபாலே போன் பண்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியது தான்.

    அப்போது இரவு மணி ஒன்பது. ரெஸ்டாரன்ட், ஒரே ஒரு விளக்கில் மந்தமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தது. தெருவே காலி. அங்கங்கே கார்கள் நின்று கொண்டிருந்தன. கணேசன் காரிலேயே அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். பழைய நினைவுகள்.


    அவனது காரியதரிசி, கணேசன் ஆணையின் பேரில், ரெஸ்டாரன்ட்டிலிருந்து சூடான சமூசாக்களை வாங்கி கொண்டு வந்தான். கணேசன் அதை நிதானமாக சுவைத்துக் கொண்டிருந்தான். ஆச்சரியமாக இருந்தது காரியதரிசிக்கு. எவ்வளவு பெரிய பணக்காரர், அவருக்கு இப்படி ஒரு ஆசையா சமூசவின் பேரில்?

    அப்போது, தூரத்தில், ஒரு போலிஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இறங்கினார். ஒவ்வொரு கடையாக பார்த்து கொண்டு வந்தார். விசாரணை பண்ணிக் கொண்டு வந்தார். அவர் யாரையோ தேடுவது போல இருந்தது. ஏதோ செக்கிங் பண்றாங்க போல. நிறுத்தி வைத்ததிருந்த ஒவ்வொரு காரையும் சோதனையிட்டார். கணேசனின் கார் அருகில் வந்தவுடன் நின்றார்.

    நீங்க எதுக்கு இங்கே வண்டியை பார்கிங் பண்ணியிருக்கீங்க சார்! இந்த நேரத்திலே? எனி ப்ராப்லம்? குனிந்து , கொஞ்சம் பணிவுடன் கேட்டார் போலிஸ்காரர். கார் பென்ஸ் காராயிற்றே.

    ஒண்ணுமில்லை இன்ஸ்பெக்டர், நான் துபாய் லேருந்து வரேன். பழைய ஞாபகம்! நான் முன்னே குடியிருந்த ஏரியா, சும்மா பாக்கலாமேன்னு வந்தேன்!

    இன்ஸ்பெக்டர் கார் உள்ளே, கொஞ்சம் உற்று பார்த்தார். கொஞ்சம் இருட்டு. உள்ளே உட்கார்ந்திருந்த கணேசன் சரியாக தெரியவில்லை. ஆனால், கணேசன் கையிலிருந்த மோதிரம், ப்ரேஸ்லெட், கழுத்து செயின் எல்லாம் அவர் பெரிய பணக்காரர் என்பதை மெளனமாக தண்டோரா போட்டுக்கொண்டிருந்தது.

    சரி சார் , ரொம்ப நேரம் இங்கே இருக்க வேண்டாம்! கிளம்பிடுங்க, இந்த ஏரியாவிலே போலீஸ் ரோந்து, கொஞ்சம் கெடுபிடி.

    சரி இன்ஸ்பெக்டர், நாங்க இப்போவே கிளம்பிடறோம்! நன்றி. கணேசன் மரியாதை நிமித்தமாக கார் கதவை திறந்து, இன்ஸ்பெக்டருடன் கை குலுக்கினான்.

    விளக்கு வெளிச்சத்தில் கணேசனை பார்த்த இன்ஸ்பெக்டருக்கு ஏதோ பொறி தட்டியது. இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே? அவரது போலிஸ்கார மூளையில் ஏதோ எலி பிராண்டியது.

    சார்! நீங்க எங்கே தங்கியிருக்கீங்க? இன்ஸ்பெக்டர் கேட்டார்.

    இங்கே தான்! சோளாவிலே. வரட்டுமா இன்ஸ்பெக்டர்?

    ஒரு நிமிஷம் சார் ! ரொட்டின் செக் தான். உங்க ஐடென்டிடி அல்லது பாஸ்போர்ட் கொஞ்சம் காமிக்க முடியுமா?

    ஒ! இந்தாங்க ! தன் பாஸ்போர்ட்டை நீட்டினான் கணேசன்.

    அதை புரட்டி பார்த்து விட்டு, இன்ஸ்பெக்டர் திருப்பி கொடுத்தார். சரி சார் இந்தாங்க! பார்த்து போயிட்டு வாங்க! டேக் கேர் ! என்றார் தனது தொப்பியில் கை வைத்து சல்யூட் அடிக்கும் தோரணையில்.

    ***

    கணேசன் தனது ஹோட்டல் அறையை அடையவும், அவனது அலைபேசி அவனை அழைக்கவும் சரியாக இருந்தது.

    டேய் கணேசா, நாந்தான் கோபால் பேசறேன். நான் இன்னும் கொஞ்ச நேரத்திலே உன்னை உன் ஹோட்டல்லே பார்க்கிறேன். அங்கேயே இரு, எங்கேயும் போகாதே. லாபிக்கு வந்ததும் உன்னைக் கூப்பிடறேன்!

    வா! வா! கோபால், நேரே எனது சூட்டுக்கே வந்துடு. அறை எண் 501. ஏண்டா லேட்டு? சீக்கிரம் வா! உன்னை பாக்கணும், உன்கூட நிறைய பேசணும்

    இருபது வருடத்துக்கு முன்னால் பார்த்த நண்பனை பார்க்கும் சந்தோஷம் கணேசனுக்கு. ரூம் சர்வீசுக்கு ஸ்காட்ச் விஸ்கி ஆர்டர் பண்ணினான்.

    ஒரு பதினைந்து நிமிடத்தில், கணேசனின் அறைக்கதவு தட்டப் பட்டது. உள்ளே ஒரு நடுத்தர வயது மனிதர் நுழைந்தார். போலீஸ் கான்ஸ்டபிள் உடையில்.

    கணேசா! எப்படி இருக்கே ! நல்லா இருக்கியா?

    நீங்க யாரு? கணேசனுக்கு வந்தவர் யார் என்றே தெரியவில்லை. ஒரு வேளை கோபாலோ?

    நான்தான் கோபால்! என்னைத்தேரியலே? இப்ப கூட உன்கூட போன்லே பேசினேனே!

    நீங்களா ! இருக்காது! கோபால் இவ்வளவு உயரம் இல்லை! அது மட்டுமில்லே, கோபால் ஒரு கான்ஸ்டபிளே இல்லே! யாரோ அவரது அசிஸ்டன்ட் என்கூட பேசினாங்களே. கோபால் எங்கே?

    அப்போது உள்ளே நுழைந்தார் ஆஜானுபாகுவான போலீஸ் உதவி கமிஷனர்.

    சரியாக சொன்னீங்க! மிஸ்டர் கணேசன். இவர் கோபால் இல்ல. சாயந்திரம் உங்க கூட பேசினாரே, இன்ஸ்பெக்டர் கோபாலின் உதவியாளர், பிரான்ஸ்சிஸ் அவர்தான் இவர் நாங்க போலீஸ் கிரைம் பிரான்ச்!. உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்.

    என்னையா? நான் துபாயிலே பெரிய புள்ளி. என்னை எதுக்கு கைது பண்ணப் போறீங்க?

    நீங்க தானே கணேசன்? நேத்திதான், நீங்க சென்னையிலே நடமாடறதா மும்பைலேருந்து அலெர்ட் வந்தது. உங்க போட்டோ இன்னிக்கு காலைலே தான் எங்க கைக்கே வந்தது. உங்களை கைது பண்ணச்சொல்லி மேலிடத்திலிருந்து உத்திரவு வந்திருக்கு. தங்க கடத்தல் மற்றும் ஹவாலா மோசடி சம்பந்தமா உங்களை கைது பண்றோம்!

    நாந்தான் கணேசன் அப்படின்னு உங்களுக்கு எப்படி தெரிந்தது?

    என்னோட டீம் இன்ஸ்பெக்டர் கோபால் தான், நீங்க இங்கே இருக்கிறதா தகவல் கொடுத்தார். அவர் ரோந்துலே இருக்கும்போது, ஆழ்வார்பேட் அருகே, உங்க பாஸ்போர்ட் பார்த்து, உங்களை அடையாளம் கண்டதும் அவர்தான். அவரே உங்களை கைது பண்ணியிருக்கணும். ஆனால், என்ன காரணமோ தெரியலே, உங்களை அங்கே விட்டுட்டு, எங்களுக்கு தகவல் கொடுத்திருக்கார். நல்ல வேளை, நீங்க துபாய்க்கு கிளம்பற முன்னே பிடிச்சுட்டோம்!


    கணேசனை வெளியே அழைத்து வரும் போது, லாபியிலிருந்து பார்த்து கொண்டிருந்த, இன்ஸ்பெக்டர் கோபால் முகத்தில் வருத்தம். முகத்தை தன் கைகுட்டையால் துடைத்துக் கொண்டார். கணேசன் அவரை தாண்டி , போலீஸ் ஜீப்பில் ஏறினான்.

    *** முற்றும்


    Inspired by and Courtesy : O. HENRY
    Last edited by Muralidharan S; 4th September 2015 at 09:17 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    Excellent -narration and language!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. Likes Russellhni liked this post
  5. #3
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    மேடம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •