-
இப்பருவம் போகாமல் இருக்கா தப்பா
..தப்பெதுவும் செய்யாமல் இருக்கும் போதும்
முப்பொழுதும் விரைவாக ஓடிச் சென்று
..முதுமையெனும் தன்மையுனை வந்தே தீரும்
அப்பொழுது அரனைத்தான் பற்றி னாலும்
..அருகுமோ நீசெய்த பாவ மெல்லாம்
.இப்பொழுதே சிந்தையிலே சிவனைக் கொண்டால்
...ஏற்றமும்பின் வந்துசேரும் மோட்ச முந்தான்...
-
மோட்சமுந்தான் இங்கு மலிவாய் கிடைக்குதாம்
நுரைத்த கோப்பையிலே வழுக்கும் வளைவுகளிலே
போதையிலே காமத்திலே பிறழ்ந்த நெறிகளிலே
உருளுது புரளுது உலகம் பொல்லாத மாயையிலே
-
மாயையிலே மதிமயங்கும் மனமே கொஞ்சம்
...மாதவனை நினைத்துவிடு சுகமே மிஞ்சும்
பேயைப்போல் பலவெண்ணம் பாய்ந்தால் கூட
..பிறழாமல் சிந்தையினை ஒன்றாய் வைத்து
தாயைத்தான் பிரியாமல் தாவும் சேய்போல்
.. தயங்காமல் நாரணனின் பாதம் பற்ற
பாயைத்தான் படுக்கையாகக் கொண்டி ருக்கும்
...பரந்தாமன் கருணைமழை பொழியும் பாராய்..
-
பாராய் என்னை
ஓரக்கண்ணால்
ஒற்றைக்கண்ணால்
பம்பரக்கண்ணால்
வட்டக் கரு விழியில்
விழுந்துவிட்டேன் என்றோ
-
என்றோ நெஞ்சில் பதிந்திருந்த
..எழிலின் உய்ரம் அவள்முகமோ
கன்றாய் நெஞ்சுள் துள்ளிடுமே..
..கவிதை ஊற்றாய் பொங்கிடுமே
இன்றோ என்ன ஆனதென்று
..ஏக்கத் துடன்நான் கேட்டிடவும்
தண்மைச் சிரிப்பில் தாமரையாய்ச்
..சொன்னாள் வயது போனதென்று..
கன்னியின் இளமையது காலஞ் சென்றால்
,..கட்டழகு குறைவதுவும் கண்ட வுண்மை
நுண்ணிய மாற்றங்கள் நோயோ வேறோ
...நொடியினில் தோலினிலே வந்து சேரும்
வண்ணமாய் வயணமாய் அழகு சேர்ந்த
..வஞ்சியின் வாழ்க்கையில் சுழன்ற காற்றால்
எண்ணுதற் கிலாமலே சோகம் கொண்டு
..ஏந்திழையின் முகமுந்தான் வாட லாச்சே
மெல்லச் சிரித்தே நான்சொன்னேன்
..மென்மைப் பெண்ணே வருந்தாதே
கள்ளச் சிரிப்பு சிரிக்கின்ற
..கண்கள் மாற்றம் கொளவில்லை
உள்ளந்தன்னில் கண்டிருந்த
..உந்தன் உருவம் மாறாது
அள்ளும் கவிதை போலிருக்கும்
..அழகில் முதுமை வாராதே..
-
வாராதோ அந்த பொன்னான நாளும்
பாட்டி வீட்டில் கோடை வெயிலில்
செட்டுப் பிள்ளைகள் சேர்ந்து
களித்து ஆடிய ஆட்டமென்ன
கூட்டாஞ்சோறு மொட்டை மாடியிலே
கோடி வித்தை கூடிப் பழகி மகிழ
கைவேலை கூட்டு வேலை கதை நேரம்
கனவாய் இன்று காணாமல் போனதே
-
(ப்ளஸ்டூ படிப்பில் மார்க் குறைவாய்ப் போனது என
ஒரு பையன் புலம்ப் அவனுக்கு அவன் நண்பன் ஆறுதல் சொல்கிறான்)
போனதே என்று புலம்பாமல்
...பொழுதைத் தள்ளி இருக்காமல்
ஆனது பார்ப்போம் எனச்சொல்லி
..அகத்தினில் பொங்கு என் தோழா
கானகம் போல வாழ்க்கையில்லை
...கல்வியில் தோல்வி கஷ்டம்தான்
வானதைப் போல உயர்ந்திடலாம்
...வீழ்ந்ததை நினைத்தே இருக்காதே..
அவன் :
விழுந்து விழுந்து படித்தேன்நான்
..விஷயம் புரிந்தே படித்தவன்நான்
பழுதா சரியா என்றேதான்
..பலரிடம் கேட்டுக் கற்றவன்தான்
கழுகாய்க் கண்கள் முழித்திருந்தே
..கணிதம் மற்றும் படித்திருந்தேன்
வழுக்கித் தந்தார் சிலமதிப்பெண்..
..வானம் போனது என்னாசை..
நண்பன்:
போடா போடா என் தோழா
..போன மதிப்பெண் சிலதானே
வாடா உள்ளம் கொண்டுவிடு
..வேறாய்ப் படிப்பு எடுத்துவிடு
பாடா வதியாய்த் தந்தாலும்
..பரவா யில்லை வெற்றிபெறு..
தாடா உழைப்பு எனச்சொல்லி
..தாவி வேலை கொடுத்திடுவர்..
-
கொடுத்திடுவர் பல வாக்குறுதி
எண்ணற்ற இலவசம் வெகுமதி
அப்பாவி மக்களை ஏமாற்றி
எப்படியோ அரசுக் கட்டிலேறி
தன் குடும்பத்தைச் செழிப்பாக்கி
நாட்டை சின்னாபின்னமாக்கி
குரங்கின் கை பூமாலையாக்கி
வரலாறு படைப்பது நம் விதி
-
விதி என்றாலும்
வேதனைகள் வேட்கைகள் தொட்ர்ந்தாலும்
எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது
நம் கண்க்ள் சந்தித்த தருணம்
-
தருணம் தப்புத் தப்பாய் போகுதே
உப்பு விற்கையிலே மழையடிக்குதே
உமி விற்கையிலே காற்றடிக்குதே
தங்கம் வாங்கினால் விலை குறையுதே
ஏறுக்கு மாறாய் ஏணியும் பாம்பும்
இயங்கினால் அடைவேனா பரமபதம்