Quote:
சின்னத்திரையிலும் காமெடிக்கே முதலிடம் கொடுக்கும் மதுமிதா!
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா. அதையடுத்து அட்டகத்தி, ராஜாராணி, ஜில்லா, தெனாலிராமன், காக்கி சட்டை, காஞ்சனா-2, டிமான்டி காலனி என பல படங்களில் நடித்து விட்டார்.
ஆனால், இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சின்னத்திரையில், மாமா மாப்ளே, பொண்டாட்டி தேவை, அதிதி பூக்கள் என சில சீரியல்களில் நடித்து நேயர்கள் மத்தியில் பேசப்படும் நடிகையாகவும் இருந்தார்.
ஆக, ஏற்கனவே டிவியில் வளர்ந்து கொண்டிருந்த மதுமிதா, இப்போது சினிமா மூலம் இன்னும் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறார். தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும், சின்னத்திரையையும் அவர் விடவில்லை.
அழகி, மடிப்பாக்கம் மாதவன், சின்னப்பாப்பா பெரிய பாப்பா சீசன் 3யிலும் நடித்து வருகிறார். ஆனால் சினிமாவோ, சின்னத்திரையோ எதுவாக இருந்தாலும் காமெடி கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுத்து வருகிறார் மதுமிதா.
இதுபற்றி அவர் கூறுகையில், என்னைப்பொறுத்தவரை இரண்டு மீடியாக்களையும் ஒரே மாதிரியாகத்தான் நினைக்கிறேன். குறிப்பாக எனது கதாபாத்திரங்கள் ரசிகர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் காமெடி வேடங்களுக்கே முதலிடம் கொடுக்கிறேன்.
மேலும், அழுது வடியும் கேரக்டர்களை நான் விரும்புவதில்லை. டிவி சீரியல்களைப்பொறுத்தவரை பெரும்பாலும் சென்டிமென்ட் கதைகளாக இருப்பதால் ஒவ்வொரு கேரக்டர்களும் அழுது நடிக்க வேண்டியதிருக்கும்.
ஆனால் நான் காமெடி நடிகை என்பதால் என்னை இயக்குனர்கள் அழ விடுவதில்லை. அதுதான் எனக்கு பெரிய சந்தோசமே. என்னை புரிந்து கொண்டு கேரக்டர்கள் தருகிறார்கள். அதனால் என்னால் முடிந்தவரை ரசிகர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சிப்படுத்த முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார் மதுமிதா.