-
https://youtu.be/ItXcLlyyK-Y
தெய்வ மகன் - 49
-------------------------------
( 05.09.2018 - தெய்வ மகன் 49-ம்
ஆண்டு நிறைவு )
1. முதுகு காட்டும் சுழல் நாற்காலியில் முகம் காட்டாத முதலாளி. அவர் கம்பீரம் உணர்த்துவதாய் நீளும் அவர் இடது கை.
2. மிகப் பணிவு காட்டும் உதவியாளினியிடம் அலுவல் நேரம் முடிந்து விட்டதை விசாரிக்கும் சிம்மக்குரல்.
3. முதலாளி என்கிற அலட்டல், மிரட்டல் எல்லாம் இல்லாத குரல் கனிவு.
4. "எல்லாரும் போயிட்டாங்களா"-
விசாரிப்பில் மிளிரும் தன் ஊழியர்கள் மீதான அக்கறை. கரிசனம். ( நீங்க போயிட்டீங்களே பாஸ்? )
5. "கார் தயாராயிருக்கா?"- நிதானமும், பொறுப்பும் மிகுந்த கேள்விக் குரல். முதலாளியாக நடிப்பதிலும் காட்டும் நிதானமும், பொறுப்பும்.
6. விருட்டென்று எழுந்து உதவியாளினியைக் கடக்கும் போது, முகம் காட்டாதபடி செய்யும் தொப்பித் தாழ்த்தலும்.. கோட் காலர் உயர்த்தலும். அது படம் பார்க்கும் நமக்காக மட்டுமல்ல.. முக விகாரம் மறைக்க முயலும்
எச்சரிக்கை உணர்வாகவும்.
7. கதவு திறந்து விடும் உதவியாளினிக்குக் கனிவோடு
சொல்லும் " தேங்க் யூ".
8. வீட்டின் கதவு விரியத் திறந்து, கம்பீர வீச்சோடு முதுகு காட்டி நடக்கும் சிங்க நடை.
9. வழக்கமான மாடிப்படியேறலை
திசை திருப்பும் வேலைக்காரன் கூறும் தகவலுக்கு, முதுகு வழி காட்டும் புரிதல்கள்.
10. உதடுகள் புன்னகைக்காமல், கண்கள் விரிக்காமல்.. ஏன்.. முகமே காட்டாமல்.. ஒரே ஒரு தோள் சிலிர்ப்பு. அதில்.. ஒரு தந்தையின் சிரிப்பு.
11. வேலைக்காரன் சொன்ன சந்தோஷச் செய்திக்குத் தோள் சிலிர்ப்பு. உடன் ஒரு அழகான பின்வாங்கல்... பாயப் போகும் புலியின் பதுங்கல் போல.
12. பெட்டி வைத்திருக்கும் இடது கையையும், சுமையேதுமற்ற வலது கையையும் தொடை வரை
சந்தோஷ மோதல் மோத விடும் அழகு.
13. நிதான நடை வேகம் பிடித்து,
வேலைக்காரனை நெருங்கும் போது மீண்டும் நிதானமாகி, பணத்தை அள்ளி அவனை நோக்கி வீசும் அவசரம்.
14. காசள்ளி வீசும் செயலில் ஒரு
மகிழ்வு வெளிக்காட்டல் மட்டுமே.
கொஞ்சம் நடிப்பு பிசகினால் அங்கே ஒரு கர்வமான செல்வந்தனே தெரிந்திருப்பான்.
15. வேலைக்காரனுக்கு சந்தோஷம் வீசிய அடுத்த நொடி
புயல் வேகமெடுக்கும் படியேறல்.
16. மிக மிக மகிழ்வாகவும், வேகமாகவும் படியேறும் தருணங்களில் நாமுணரலாம்.. படியில் கால் பாவாமல், ஒரு வேகம் வழியாகவே மளமளவென
நம்மால் மேலேற முடிவதை. அதை
இங்கே நடிகர் திலகம் ஏறும் போதும் உணரலாம்.
17. பளீரென்ற வெண்சிரிப்புடன்
ஒரு பெண்ணின் புகைப்படம். தன்
கனவை நனவாக்கப் போகும் அவளது நிழல் மோவாய் தொட்டுக் கொஞ்சிப் போகும் பாசம்.
18. அலமாரிக் கதவு திறந்து உயரக் கிண்ணத்திலிருந்து அள்ளி கோட் பாக்கெட்டில் போடும் காசுகள் மட்டுமல்ல.. அந்த தாராள மனசுமன்றோ தங்கம்?
19. மருத்துவமனையில் நுழையும்
அவசரம். நண்பனான மருத்துவருக்குச் சொல்லும் மாலை வணக்கத்திலும் அப்பனாகப் போகிற பரவசம்.
20. அவசரக்காரன் என்பதையும் மீறி, தன் மனைவி மீது பாசக்காரன் என்பதை உணர்த்தும் " அவ இந்த வலி தாங்க மாட்டா.."
21. மற்றுமொரு கலைக் கதவு போல் மருத்துவமனைக் கதவு திறந்து, நடிகர் திலகம் மருத்துவ நண்பனை நோக்கி வருகிற வேகம்.. சரிவான பாதையில் இறங்கும் மிதிவண்டி போல் சுகமானது. அழகானது.
22. அய்யனின் முகம் காட்டாமல், மேஜரின் முகபாவங்களைக் கொண்டே அய்யனின் பரபரப்பை உணர்த்தும் சாதுர்ய இயக்குநரின் மீது பிரமிப்பு. அந்த நேரத்து ( நமக்குப் பார்க்கக் கிடைக்காத )அய்யனின் அற்புத பாவங்களை பார்க்கிற பாக்யம்
பெற்ற மேஜரின் மீது பொறாமை.
23. சடசடவென மாறும் தனது முகபாவங்கள் மூலமாக அய்யனின் அவசர குணத்தை மேஜர் உணர்த்தப் பார்த்தாலும்..
" அவ பூ மாதிரி.. அவளுக்கு சீக்கிரம் டெலிவரி ஆகிற மாதிரி செய்" எனும் அய்யனின் பொருத்தமான விரைவுப் பேச்சு, அவசர குணத்தை உணர்த்தி ஜெயிக்கிறது.
24. " இத்தனை அவசரம் ஆகாது.
உன் அவசரம் கடவுளுக்குப் புரியாது" எனும் கருத்தில் மேஜர் கேலி செய்ய, மெல்லிய வெட்கத்துடன் மேஜரின் தோள் தட்டும் அழகு.
25. தோள் தட்டல் ஊதியத்துடன் போனஸாக ஒரு நாணச் சிரிப்பு.
அந்த சிரிப்பில் ' நீ சொல்வது சரிதான் நண்பா" என்கிற பகிரங்க ஒப்புதல்.
26. "ராஜூ.. ராஜூ.." என்று அடிக்கடி நிறைய முறை அழைப்பார். ஒரு முறை குழைவு.
ஒரு முறை நெகிழ்வு. ஒரு முறை
உத்திரவிடல்.. ஒரு முறை .......
27. இப்போது இரு முறை " ராஜூ".
முதலில் விளிக்கும் ராஜூ.. கவனப்படுத்துதல். இரண்டாவது ராஜூ... தன் விருப்பத்தைத் தெரிவிக்கிற சாக்கில், அந்த விருப்பத்தை நண்பன் நிறைவேற்றுவான் எனும் நம்பிக்கையில் எழும் விளித்தல்.
28. தனக்குப் பிறக்கப் போகிற குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி, தங்கக்
காசுகள் அள்ளி, கையில் வைத்து மூடி நீட்டுவார். இறுக்கமான கை மூடலுக்குள் தங்கக் காசுகளுக்கு மாற்றாக ஒரு குழந்தையை வைத்திருப்பார்.. மானசீகமாக.
29. இப்போது மீண்டும் ஒரு "ராஜூ". தொடரும் " நான் ஏன் இப்படியெல்லாம் ஆசைப்படறேன்னு உனக்குப் புரியுதுல்ல.." எனும் கேள்வி. கேள்வியைத் தேவையில்லாததாய் ஆக்குகிறது.. இந்த கெஞ்சலான ராஜூ.
30. செவிலிப் பெண் வந்து மருத்துவரை அழைக்க, மருத்துவர் நகர, பயம் உந்தித் தள்ள நண்பனின் தோள் பற்றுவார். கொஞ்ச நேரத்துக்கு முந்தின தோள் தட்டல்.. மகிழ்வு.
இந்த தோள் பற்றல்.. பயம்.
31. பயத்துடன் தனித்து விடப்பட்ட
கொடுமையை அழகாக நடித்துக் காட்டுகிறது.. அய்யனின் முதுகு.
32. அழகழகாய் சிரிக்கும் குழந்தைகளின் புகைப்பட வரிசை.. உயரச் சுவரில். தனக்குப்
பிறக்கப் போகும் அழகை அந்த அழகுகளில் தேடும் அழகு.
33. குழந்தைப் படங்களைப் பார்த்துக் கொண்டே நகரும் நடையில் ஒருவித பயமும், தவிப்புமான அலைபாயல்.
34. பாப்பா படங்களில் கண்கள். மூடிய கைகள் எனும் தொட்டிலில்
தங்கக் காசுகளாய் குழந்தையின் குலுங்கல்.
35. பிறந்த குழந்தையொன்றின் வீறிடல். மருத்துவர் வருகை. "ஆண் குழந்தை" எனும் அறிவிப்பு.
அய்யனின் ஆசுவாச பிரம்மாண்டம். " கடவுளே.." எனும்
அந்த அற்புத உணர்வு வெளிப்பாட்டை மிக ரசித்திருப்பான்.. அந்தக் கடவுளே!
36. குழந்தையைப் பார்க்கும் பேராவலில் அய்யன் விரைய.. நண்பன் தடுக்க.. திமிறிக் கொண்டு அய்யன் சொல்லும்
"இப்பவே பாக்கணும்" உச்சரிப்பழகை நீங்களெல்லோரும் இப்பவே பார்க்கணும்.
37. ஆர்வமாய் உள்ளே ஓடிய அய்யன் அவலட்சணக் குழந்தை
பார்த்து வெளியேறும் போது தளர்ந்து உடன் வரும் கால்களில்
ஒன்று அந்தரத்தில் நின்று நீடிக்கும் ஆச்சரியம்.
38. மிகுந்த வேதனையில் நடப்பவரின் கை பற்றும் நண்பனின் கையை அலட்சியமாய் கையாலேயே மறுக்கும் குழந்தைக் கோபம்.
39. மேஜை மீது கையூன்றி பலமாக அதன் மீது இரண்டு அடி. அடி வாங்கியது மேஜையல்ல.. பல காலக் கனவை பொய்க்கச் செய்த படைத்தவனின் முதுகு.
40. மீண்டும் ஒரு " ராஜூ". இந்த
விளிப்பில் அடிபட்ட சிங்கத்தின்
கோபம். கெஞ்சலில்லை.கட்டளை.
41. தன் பிள்ளையைக் கொன்று விடச் சொல்லும் நண்பனை அதட்டும் மருத்துவரை நோக்கித்
(முதல் முறையாக நம்மையும் நோக்கித்) திரும்பும் அந்தக் கோர
முகத்தின் உண்மைத் தன்மை ஒப்பனையால் மட்டும் விளைந்ததன்று. ஒப்பற்ற கலைஞனின் திறமையாலும் விளைந்தது.
42. ஏற்கனவே விகாரப்படுத்திய
முகத்தை, கண்களை அகல விரித்தல், சுருக்குதல், உதடு துடிக்க விடல் போன்ற சில சிரமமான பாவனைகளால் மேலும் விகாரப்படுத்திக் கொள்ளும் நடிப்பு நிஜம். பேசப் பேச வழியும் விழிகளின் கண்ணீர்க் கோடுகள் அய்யனின் நடிப்புச் சிறப்பை அடிக்கோடிடுகின்றன.
43. அவலட்சணப் பிறப்பால் தான்
சிறு வயதில் பட்ட வேதனை பகிரும் உருக்கம். அன்று தான் பட்ட வேதனையை இன்று நினைத்தாலும் "பக்" கென்று இருப்பதாய்ச் சொல்லி, "படீர்.. படீர்" என்று வயிற்றிலடித்துக் கொள்ளும்போது(போலியற்ற நிஜ அடி) அய்யன் மீது நமக்குப்
பிறக்கும் இரக்கம்.
44. தன் மனைவி தங்க விக்கிரகம்
போல பிள்ளை பெற்றுத் தருவதாகக் கூறியதைச் சொல்லும் போது " பாத்துக்கிட்டே
இருங்க.. " என்று ஆரம்பிப்பார்.
பளீரென்று ஒரு மனைவியாகிய பெண் அய்யன் முகத்தில் வந்து போவாள்.
45. குழந்தையைக் கொன்று விட
மறுக்கும் நண்பரின் நெஞ்சில் சாய்ந்து கதறும்போது உரிமையான ஒட்டுதலும், மீண்டும்
நண்பன் மறுக்கையில் வெறுப்பான விலகலும்.
46. காட்சியின் உணர்ச்சிமயமான
வேகத்தை அசுரவேகமாக்கும் அந்த ஆவேசக் கால் உதைப்புடன்
கூடிய, நாடு மறக்காத கைச் சொடுக்கு.
47. அடங்காத ஆவேசம் நீடிக்க..
நண்பனின் முடிவுக்கு ஆர்வமாய்க்
காத்திருக்கும் போது அய்யனின்
மெல்லிய தள்ளாடல்.
48. 'உன் மனைவி குழந்தையோடு
வரமாட்டாள்' எனும் நண்பனின்
உத்தரவாதத்திற்கு நன்றியாய் பணம் அள்ளுவார்... கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும் கோட் பையிலிருந்து பணம் எடுக்க அத்தனை நடுக்கம்.. பரிதவிப்பு..
49. நீட்டிய காசையும், அத்தனை காலம் பூஜித்த நட்பையும் தூக்கி எறிந்து விட்டு நண்பனை வெளியேற்றும் மேஜரின் கோபம்
நமக்கும் வருகிறது... இந்தக் காட்சி முடியும் போது.
ஏற்றுக் கொள்ள முடியாத சோகத்தை, ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய சூழலில் அய்யன் அமைதியாக இருப்பது போல்..
நாமும் அமைதி காக்கிறோம்...
இந்தக் காட்சி முடியும் போது.
*****
ஒரு அவசியமான பின்குறிப்பு...
-------------------------------------------------------
" தெய்வ மகன்- 49" துவக்கிய நிமிஷத்தில் என் வழக்கமான பாணியில் மொத்தப் படத்தின்றும்
வரிசையாகக் காட்சிகள் தேர்ந்து
எழுதுவதுதான் தீர்மானமாக இருந்தது. யூ ட்யூபில் பாகம் பாகமாக வந்த "தெய்வ மகன்" பார்த்ததும் " ஆஹா.. வசதிதான்.
ஒவ்வொரு பாகமாக காட்சிகளைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.." என்று மனம் மகிழ்ந்து ஆரம்பித்தேன்.
ஆனால்.. படத்தின் சான்றிதழ் காட்டித் துவங்கி, நடிகர் திலகமும், மேஜரும் ஆளுக்கொரு
பக்கமாய்ப் பிரிவதோடு முடியும்
11நிமிட துவக்கக் காட்சிக்குள்ளேயே
நான் வியந்து போற்றும் 49-ம் முடிந்து விட்டதால், தெய்வமகனை
முழுசாய் எழுத முடியாமல் நான்
படுதோல்வியடைந்தேன் என்பதைப் பகிரங்கமாகவும், பணிவன்புடனும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
-ஆதவன் ரவி-
-
-
-
-
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ce&oe=5C3940AC
Rare photo of NT. Thanks to NTFans
courtesy Vasudevan F B
-
-
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...00&oe=5C2C9F26
தங்கப்பதுமை..தயாரிக்கும்போது வந்த விளம்பரம்.!
courtesy abdul kadar abdul s F Balam
-
-
-