பெரிசுக்கு என்ன ஆச்சு?
அந்த வருஷம் நல்ல வெள்ளாம.மழை மண்ணுன்னு விளச்சலுக்கு பல விஷயம் இருந்தாலும் மனுஷனோட உழைப்பு நல்ல படியா இருந்தாத்தேன் அதிக போகம் பாக்க முடியும்.அந்த விளச்சலுக்கு காரணமானவங்க கூலிக்காரங்க.அவங்க உழைப்புக்கு
மரியாத செய்ய வேண்டி,
விளஞ்ச நெல்லுல கொஞ்சத்த கூலிக்கு மேல நீங்க அளந்து வச்சிக்கங்கன்னு மலச்சாமி சொல்ல, கூலிக்காரங்களும் சந்தோசமா நெல்ல பங்கு போட்டுக்கிட்டு இருக்காக.அங்க வரா பொன்னாத்தா .என்னன்னு கேட்டு விஷயம் தெரிஞ்சுக்கறா.
அந்தாளு எனக்கு வாக்கப்பட்டு வந்ததே நாலு வெள்ளாட்டோட மட்டுந்தா, வேட்டி கட்டி இருக்கிறதே எங்கப்பன் காசுலதே, யாரோட காச யாரு தூக்கி கொடுக்கிறதுங்கற அர்த்தத்துல கேவலப்படுத்துறா.
ஊருக்கே நாட்டாம, பெரியமனுஷன்னு பாக்காம கூலிக்காரங்க அம்புட்டு பேரு முன்னாலே அவ ஏசியத யாரால தாங்கிக்க முடியும்? கோபம் தள்ளுது.ரெண்டு சாத்து சாத்தலாம்னு பொங்குது மனசு.மாமனோட கெஞ்சல் மனசுல வந்து நிக்குது.ச்சீ போ ன்னு மன பாரத்தோட போறாரு.
வேற ஏதாவது கஷ்டம்னா நாலு பேருகிட்ட பேசி ஆறுதல் தேடிக்கலாம். இவ கேவலத்த யாரு கிட்ட சொல்ல முடியும்? அது குடும்ப கௌரவத்துக்கே கேவலமாகிப் போயிடுமே. இப்படியே தா அந்த மனுஷனுக்கு பாறாங்கல்லு மாதிரி மன பாரம் அசயாம தங்கிட்டே இருக்கு.
மனசுல இருக்கற பாரத்த அப்பப்போ பாட்டுப்பாடி ஆறுதல் படுத்திக்குவாரு.
அவுரு தன் சோகத்த தாங்க தாய்மடி ஏதாவது கிடைக்குமாங்குற அர்த்தத்துல பாடறாரு.அந்தக் கொடியும் படர ஏதாவது தேரு கிடைக்குமான்னு அலையுது.
"ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே
கனவுலகம் தாங்காதே "ன்னு
அப்படின்னு அப்பத்தேன் ஒரு குரலு காத்துல வருது.
தண்ணியில்லாம தவிச்ச செடிக்கு மழத்தூறலா தண்ணி கிடச்சா எப்படி இருக்கும்.சோகமான மனசு கொஞ்சம் சொக்குது.
"உள்ள அழுகறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் "ன்னு
அடுத்த அடி போட,
"இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
உன்ன மீறவும் ஊருக்குள்
ஆளில்ல "ல்னு
ஞாயத்த, பதில் குரல் சொல்ல,
இது மாதிரியான ஆறுதலத்தான இத்தன நாளா தேடுனேன் ?ன்னு
ஆச்சரியமும் சந்தோசமுமா சுத்தி முத்தி ஆள தேடி தேடி யாரையும் காணோமேன்னு
"பூங்குயில் யாரது "ன்னு பெருசு
கேள்வி கேக்குறாப்புல ' பாடுது.
இனியும் இந்த மனுசனுக்கு தன் முகத்த காட்டாம இருக்க முடியாதுன்னு சொல்லி ஒருத்தி வந்து நிக்குறா.
பிரமிச்சு நிக்குது பெருசு.
அது
குயிலு.
உனக்குள்ளயா இவ்வளவு சங்கதி ன்னு விழி விரிஞ்சு பாக்குறாரு மனுசன்.
கவலய எல்லாம் காத்துல பறக்க விடு, மன பாரத்த தூக்கி எறிங்கற மாதிரி அவ பேச்சு பெருசுக்கு ஆச்சர்யமாச்சு.
அவள எட போட்டது தப்பாப் போச்சேங்கறது அவரு முகத்தில தெரியுது.
"பேச்சு விவரமாத்தான் இருக்கு, பெரிய அஞ்ஞானமெல்லாம் பேசுறியே " அப்படிங்குது பெரிசு.
"அப்படி பேசுலேன்னா அல்லல குத்தி விளயாடும் இந்தக் கால இளவட்டம்"அப்படிங்கறா குயிலு.
இளவட்டம்ங்கற வார்த்த பெரிசுக்கு ஆர்வமாச்சு.
உடனே,
"இளவட்டம்ங்கற மரியாதய எனக்குத் தர்றியா "ன்னு கேட்கறாரு.
அவளுக்கு இது கொஞ்சம் ஆச்சர்யத்த கொடுத்திருக்கும் போல.
"விட்டா கட்டிக்கிறதுக்கு தாலியோட வந்துருவீங்க போலிருக்கு "ன்னு அவ கேட்க,
"வந்தா என்ன? "ன்னு இவரு கேட்க
அப்பத்தா அவ,
ஆச கிழவனுக்குன்னு ஒரு வார்த்தய விட்டுப்புட்டா.
அறுபது வயசு மனுசந்தேன்.அது அந்த வயசுக்கு அதுக்கேத்த மாதிரி வாழலியே.மனசுல அதுக்கு என்ன வெல்லாம் ஆச இருந்திருக்கும். அது நொறுங்கி பல வருஷம் ஆச்சே.நாளாக நாளாக அந்த மன பாரம் நீங்க அதுவும் ஒரு வடிகால் தேடுமில்லையா.அந்த நேரத்தில அவ குணமும் பேச்சும் கொஞ்சம் சந்தோசம்னு நினக்கையிலே பாவி புள்ள கிழவன்னுட்டாளேங்கற கோபம் உடனே என்னையா கிழவங்கற, உன் குடிசய எல்லாம் காலிபண்ணி புடுவேன்னு தன் அதிகாரத்த காட்டுது.அதிகாரத்தோட பலவீனம் இந்த மாதிரி சமயங்களில்தா(ன்) தெரிஞ்சுக்க முடியுது.
அந்த வார்த்த அவள குத்திருது.
அதிகாரத்த சாய்க்கனும்னா பலமான வார்த்தைய சொல்லியாகனும்.அதனால,
"நீ குமரன்னு நான் ஒத்துக்கனும்னா இந்தக்கல்ல தூக்குய்யா பாக்கலாம்.அப்பிடி நீ தூக்கிப்பிட்டின்னா உன்ன குமரன்னா ஒத்துக்கிடர்றேன் "னு சவால் விடுறா.
அதுக்கு பெரிசு, "நீ குமரன்னு ஒத்துகிட்டா பத்தாது. என்ன கட்டிக்கிடறயா, தூக்கறேன் "ன்னு ஒரு கொக்கிய வீசுது.
அதுல எல்லாமே அடங்கிப் போயிருமேங்கற சாமார்த்தியந்தான் அந்தக் கேள்வி.
தனக்குத்தா ஜெயிப்புன்னு நினச்சுத்தா மனுசங்க பந்தயத்தில இறங்கறாங்க.அதுக்கு அவளும் விலக்கல்ல. ஒத்துக்கிடறா, அப்ப விட்டாப் போதும்னு ஒரு சமாதானத்துக்கு.
இந்தக் கூத்துதான் பெரிசு அந்த பாறய தூக்கிப் பாக்றதும் , முடியாம வக்கிறதுக்கும் உண்டான காரணம்.
*******
முதல் மரியாதை