-
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியாக இருந்த துறையூரில் வசித்து வந்த நேரம்.திருச்சி நகரைச் சுற்றிக் காண்பிக்க என்னை என் அப்பா 1965இல் அழைத்துச்
சென்றிருந்தார்.துறையூரில் அந்நாட்களில் முதல் வெளியீட்டில் படங்கள்
வெளியாவதில்லை.திருச்சிக்கு நான் முதல் முதலாகச் சென்றிருந்த அந்த
நேரத்தில் திருச்சி ஜூபிடர் திரையரங்கில் ஆண்டவன் கட்டளையும்,ராஜா
திரையரங்கில் பச்சை விளக்கும் ஓடிக் கொண்டிருந்தன.அப்பொழுதுதான்
முதன்முறையாக ஆண்டவன் கட்டளைப் படத்தினை முதல் வெளியீட்டில்
கண்டேன்.அந்த பசுமையான நினைவினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சி.இதுவும் அந்த ஆண்டவன் கட்டளையோ என்னவோ.
-
அந்த நாள் ஞாபகம் - தொடர்ச்சி.
நடிகர் திலகம் படங்களின் ஓபனிங் ஷோ அனுபவங்களை எழுதுங்கள் என்று சொன்னபோது, அதை பற்றி மட்டும் எழுதாமல் தொடர்ச்சியாக வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் அந்த படங்கள் வெளியான காலக் கட்டத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளையும் எழுதியிருந்தேன். அது ராஜா வரை வந்து நின்றது. அதன் பின் வெளியான படங்களை பற்றியும் தொடர்ச்சியாக எழுதுங்கள் என்று நமது நண்பர்கள் சொன்னார்கள். அதை ஒரு சில பாகங்களாக (அதாவது நேரம் கிடைக்கும் போது) எழுதலாம் என்று நினைக்கிறேன்.
இந்த நேரத்தில் ஒரு சின்ன குறிப்பு. அந்த காலக் கட்டத்தைப் பற்றி எழுதும் போது ஒரு சில நிகழ்வுகளை குறிப்பிட வேண்டிய சூழல் வரும். அது நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இருக்குமே தவிர, உயர்த்துதல், தாழ்த்துதல் என்ற அளவிற்கு போகாது. இனி விட்ட இடத்திற்கு, அதாவது 1972 -ம் ஆண்டுக்கு செல்வோம்.
ராஜா ஒரு மிகப் பெரிய வெற்றியை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தது. அது வரை பாலாஜி எடுத்த படங்களிலே மிக பெரிய வெற்றி. தனிப்பட்ட முறையில் முதல் தடவையாக படம் வெளியான ஐந்து வாரங்களில் நான் ஐந்து முறை பார்த்த படம். சிவாஜி ரசிகர்கள் சந்தோஷமாக இருந்த நேரம். காரணம் போட்டியில் தொடர்ந்து இரண்டு படங்கள் ஜெயித்த சந்தோஷம். 1971-ம் வருட தீபாவளியன்று பாபுவும், நீரும் நெருப்பும் வெளியானது. அதில் பாபு வெற்றி. 1972 -ல் ஜனவரி 26 அன்று ராஜா ரிலீஸ். ஒரு வாரம் கழித்து பிப் 4 அன்று சங்கே முழங்கு வெளியானது. ராஜா மிகப் பெரிய வெற்றி. அந்த நேரத்தில் அடுத்த படமும் போட்டியில் தான் வெளியாகப் போகிறது என்றவுடன் த்ரில் + எதிர்பார்ப்பு. ஆம், ஞான ஒளியும் நல்ல நேரமும் போட்டி போடப் போகின்றன என்ற சேதி வருகிறது.
இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். 1971 அக்டோபர் 18 தீபாவளியன்று ரிலீஸான பாபுவும், நீரும் நெருப்பும் தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் கடைசியாக ஒரே நாளில் வெளியான படங்கள். அதற்கு பிறகு இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகவில்லை. மிக கிட்டத்தில் வெளியானது என்று சொன்னால் அது ஞான ஒளி மற்றும் நல்ல நேரம் படங்கள் தான்.
1972 -ம் வருடம் மார்ச் 10ந் தேதி வெள்ளிக்கிழமை நல்ல நேரம் ரிலீஸ். மறு நாள் 11ந் தேதி சனிக்கிழமை ஞான ஒளி ரிலீஸ். இதற்கு பிறகு நெருங்கிய இடைவெளி என்றால் 1975 -ம் வருடம் அக்டோபர் 31 வெள்ளியன்று பல்லாண்டு வாழ்க வந்தது, இரண்டு தினங்கள் கழித்து நவம்பர் 2 தீபாவளியன்று Dr.சிவா மற்றும் வைர நெஞ்சம் வெளியானது. அது போல் 1974 -ம் வருடம் நவம்பர் மாதம் 7ந் தேதி உரிமை குரல் வெளியானது. 6 நாட்களுக்கு பிறகு 13ந் தேதி தீபாவளியன்று அன்பை தேடி ரிலீஸ் ஆனது. மற்ற நேரங்களில் இருவர் படங்களுக்கும் இடைவெளி இருந்தது.
மீண்டும் 1972-க்கு வருவோம். சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்ததை குறிப்பிட்டேன். மதுரை சிவாஜி ரசிகர்களின் சந்தோஷத்தை அதிகப்படுத்துவது போல சில நிகழ்வுகள் நடந்தன. சங்கே முழங்கு பிப் 4 அன்று மதுரை சிந்தாமணியில் வெளியானது. அந்த நேரத்திலே நல்ல நேரம் விளம்பரம் வருகிறது. மார்ச் 10 முதல் என்று. அதுவும் மதுரை சிந்தாமணியில் என்று. எங்களுக்கு சந்தோஷம் அதிகமானது. அந்த நேரத்தில் ராமன் தேடிய சீதை ஏப்ரல் 14 முதல் ரிலீஸ் என்று விளம்பரம். அதுவும் மதுரை சிந்தாமணி. இது அனைத்தும் அறிவித்தபடி ரிலீசானால் சங்கே முழங்கு 35 நாட்களில் மாற்றப்படும், நல்ல நேரம் அதே 35 நாட்களில் தூக்கப்படும்.
இதைப் பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அப்செட் ஆகி இதை மாற்ற முயற்சி எடுத்தார்கள். ஆனால் சூழ்நிலை அவர்களுக்கு உதவவில்லை. சங்கே முழங்கு வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்த படம். ஆகவே ரிலீஸ் மாற்ற முடியாது. நல்ல நேரம் தேவர் படம். அவரிடம் சென்று தேதியை மாற்றுவது என்பது impossible. ராமன் தேடிய சீதையோ 1970 -ம் வருடம் மாட்டுக்கார வேலன் வெளி வந்த உடனே அதே தயாரிப்பாளரான ஜெயந்தி பிலிம்ஸ் ஆரம்பித்த படம். 1971 பொங்கலன்று வெளி வருவதாக விளம்பரம் செய்ப்பட்ட படம். ஆனால் டிலே ஆகி கடைசியாக 1972 -ம் வருடம் ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் முடிவு செய்யப்பட்டது. தவிரவும் மாட்டுக்கார வேலன் சிந்தாமணியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற காரணத்தால் சென்டிமென்டாக அவர்கள் சிந்தாமணியில் தான் திரையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆகவே அவர்களும் மாற்ற தயாரில்லை. தவிரவும் இந்த பிரச்சனை மதுரையில் மட்டுமே இருந்தது. ஒரு ஊரில் ஏற்படும் சிக்கலுக்காக மொத்த ரிலீசையும் தள்ளி போட முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
பிறகு நல்ல நேரத்தின் மதுரை விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ் அந்த படத்தை சிந்தாமணியில் இருந்து மாற்றி வேறு தியேட்டர் தேட ஆரம்பித்தார்கள். மெயின் தியேட்டர்கள் எல்லாம் ஏற்கனவே புக்ட் [booked]. சென்ட்ரலில் ராஜா ஓடிக் கொண்டிருக்கிறது. தேவியில் அகத்தியர் ஓடிக் கொண்டிருக்கிறது. நியூசினிமாவில் ஞான ஒளி வெளியாக போகிறது. சிந்தாமணிதான் பிரச்சனை. கடைசியில் அலங்கார் தியேட்டர் புக் செய்யப்பட்டது. ரசிகர்கள் அவ்வளவாக திருப்தி படவில்லை என்பதால் மூவிலாண்ட் [பின்னாளில் ஜெயராஜ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது] அரங்கமும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
(தொடரும்)
அன்புடன்
-
தற்பொழுது சன்லைப் தொலைகாட்சியில் நடிகர் திலகம் நடித்த
வாணி ராணி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது.
-
Mr Murali Sir,
No words to explain your memory. Fantastic narration.
Regards
-
முரளி,
சான்ஸே இல்லை. ஒரு சுவையான period கதை படிக்கும் இன்பம்.உங்களுடன் நான் ரசிப்பது ஆற்றோட்டமான நடையில் நீங்கள் வைக்கும் சுற்று பின்னல்கள்.அரசியல்,கலை,சதி,காலகட்டம் சார்ந்த தகவல்கள் எல்லாம் கலந்தது. இப்படி ஒரு சுவாரஸ்யமான எழுத்தை படித்து நாளாயிற்று.(ஏனோ கார்த்திக் சார்,வாசு தலை காட்டுவதே இல்லை)நீங்கள் எழுதுவது 100% உண்மை என்பதால் ,தொகுத்து சரித்திரமாக்கியே விடலாம்.
இப்படிக்கு,
உங்கள் பரம ரசிகன்.
பின்னே இல்லையா?எனக்கெதிராக நீங்கள் பண்ணிய ஆங்கில நாட்டாமையையே ரசித்தவன் இல்லையா?
-
அந்த நாள் ஞாபகம்- தொடர்ச்சி
அடுத்த கட்டமாக இரண்டு படங்களின் சாதக பாதகங்களை பற்றிய விவாதம் ஆரம்பித்தது. தேவர் சில வருடங்களுக்கு முன் தமிழில் தயாரித்த {வெற்றிப் பெறாத) தெய்வச் செயல் படத்தை ஒரு சில மாற்றங்களோடு இந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற பெயரில் ராஜேஷ் கன்னாவை வைத்து எடுக்க, அது ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது. அதையே தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து நல்ல நேரம் என்று எடுத்தார்
ஏற்கனவே வேற்று மொழியில் வெற்றி பெற்ற படம். அதுவும் தவிர எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்கள் தயாரித்த தேவர் முதன் முறையாக கலர் படம் எடுக்கிறார். [ஆனால் அவர் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த கடைசி கலர் படமும் இதுதான். இதற்கு பிறகு தேவர் எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கவில்லை].
இந்த பக்கத்தில் ஞான ஒளி மேஜர் நாடக குழுவால் நாடகமாக நடத்தப்பட்டு பிரபலமானது. நாடகத்தை பார்த்தவர்கள் கதை அம்சத்தை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் வியட்நாம் வீடு படத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்காக சுந்தரம் கதை வசனம் எழுதிய படம். பி.மாதவன் இயக்கம். ஆனால் கருப்பு வெள்ளை படம். மதுரையில் நியூசினிமாவில் ரிலீஸ். ராஜாவிற்கும் இந்த படத்திற்கும் 45 நாட்கள் தான் இடைவெளி.
நான் தெய்வ செயல், ஹாத்தி மேரா சாத்தி இரண்டுமே பார்த்தேன். ஆனால் ஞான ஒளி நாடகம் பார்க்கவில்லை.
இப்போது என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன். படம் வெளியானது மார்ச் 11 சனிக்கிழமை. மார்ச் 13 திங்கள்கிழமை முதல், ஆண்டு தேர்வுகள் [annual exams]ஆரம்பம். அதற்கு முன்னோடியாக சனிக்கிழமை அன்று டிராயிங் [drawing] தேர்வு. ஆக ஓபனிங் ஷோ மட்டுமல்ல, படமே எக்ஸாம்ஸ் முடியும் வரை பார்க்க முடியாது. என் கசினுக்கு பிரச்சனையில்லை. அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் எளிதாக செல்ல முடியும். அந்த காலக் கட்டங்களில் எப்போதுமே ஒரு படம் வெளியாகும் நேரம் நெருங்க நெருங்க படத்தை பற்றி வெளி வரக் கூடிய செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்புடனும் ஆர்வத்துடனும் பேசப்படும். இது போன்ற செய்திகளை என் கஸின் எனக்கு சொல்லுவான். அப்படிப்பட்டச் செய்திகளில் ஒன்று தான் சென்னையில் ஞான ஒளி ஐந்து அரங்குகளில் திரையிடப்படும் செய்தி. நாங்கள் முதன் முறையாக இப்படிப்பட்ட சாதனை நிகழ்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். பிறகு தான் தெரிந்தது இந்த சாதனையை நடிகர் திலகமே 1954-ம் ஆண்டில் எதிர்பாராதது படம் மூலமாக செய்திருக்கிறார் என்று.
நல்ல நேரம் வெளியானது. படத்திற்கு Divided Opinion. அதாவது யானைகள் வரும் காட்சிகள், அவை செய்யும் சில சாகசங்கள் என்று அமைக்கப்பட்டிருந்த சில காட்சிகள் நாயகனின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டன என்று தீவிர ரசிகர்கள் குறைப்பட்டார்கள். பொதுவாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று கருத்து வந்தது.
மறு நாள் ஞான ஒளி வெளியானது. நான் தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டிற்கு வந்து விட்டேன். எங்கள் வீடு சென்ட்ரல் மற்றும் நியூ சினிமா இடையில் அமைந்திருக்கும். திடீரென்று சரவெடி பட்டாசு சத்தம். ஓடி சென்று பார்த்தால் ஓபனிங் ஷோ காலைக் காட்சி முடிந்து மக்கள் வெளியே வருகிறார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அணை உடைந்து பாயும் மகிழ்ச்சி ரசிகர்கள் மத்தியில். விசில், வாழ்க கோஷம் முதலியன உச்ச ஸ்தாயில் ஒலிக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த என் கஸின் சொன்னது நடிப்பு + ஸ்டைல் - பிச்சு ஒதறிட்டார். அவன் முக்கியமாக சொன்ன மற்றொரு விஷயம் வசனம். அதாவது ஆண்டனி மற்றும் லாரன்ஸ் இடையே நடக்கும் One upmanship போட்டியில் பேசப்படும் வசனங்கள். ஏற்கனவே பார்க்க முடியவில்லையே என்று இருந்த என்னை மேலும் ஏங்க வைத்தன அவனது வார்த்தைகள்.
மாலையில் சுமார் 5 மணி அளவில் வேறொரு வேலையாக டவுன் ஹால் ரோடு சென்ற நாங்கள் இருவரும் அவனது நண்பர் ஒருவரை (சொல்லாமலே தெரிந்திருக்கும் சந்தித்தவர் சிவாஜி ரசிகரென்று) பார்த்தோம். அவரும் படத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். என் கசினிடம் படத்தைப் பற்றி கேட்டார். நைட் ஷோ போகப் போவதாகவும் மாலை சுமார் 7 மணிக்கு போய் வரிசையில் நின்றால் டிக்கெட் கிடைக்காது? என்று அவர் கேட்க, ட்ரை பண்ணுங்க என்றான் என் கஸின். இந்த நிகழ்வெல்லாம் என் ஏக்கத்தை அதிகரித்தது.
நான் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்து பதினாறாம் நாள் மார்ச் 26 அன்று ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்தேன். அப்போதும் படத்திற்கு பெரிய ஆரவாரம். குறிப்பாக பிரசவத்தின் போது மனைவி இறந்து போன செய்தி வரும்போது எந்த வசனமும் இல்லாமல் அந்த முகத்தின் தசைகள் மட்டுமே துடிக்கும் காட்சி, யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப் போவதை எண்ணி குமுறும் சீன், அதன் பிறகு தேவனே என்னை பாருங்கள் பாடல் காட்சி. குறிப்பாக நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே என்ற வரிக்கு முன்னால் வரும் நடைக்கும் அந்த போஸிற்க்கும் தியேட்டர் அலறியது. அந்தோனி, அருணாக மாறிய பின் வரும் ஒவ்வொரு ஸ்டைல்- கும் பெரிய ஆரவாரம். படத்தில் ஒரு சில அரசியல் பொடிகள் வரும். இறந்து போன பாதிரியார் சிலையை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது அருணாக வரும் நடிகர் திலகம் சொல்லுவார். "மறைந்து போன தலைவர்கள் சொன்ன நல்ல கொள்கைகளை கடைப்பிடிப்பது தான் நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை. சிலை வைப்பது அல்ல". இது அன்று தமிழகத்தில் நிலவிய சிலை வைக்கும் obsession-ஐ குறித்ததால் தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.
இப்படியாக படம் பார்த்தேன். படம் ஓடி முடிப்பதற்குள் மொத்தம் மூன்று முறை பார்த்தேன்.
அன்புடன்
-
Mr Murali Sir,
Pls do write each and every movie with your style.
Watched the movie during my childhood days with mother at Chennai Plaza
Theatre. Not only this each and every NT movie were seen with my mother
at Shanthi,Pilot,Chitra,Wellington and othern theatres near Mount Road.
-
அந்த நாள் ஞாபகம்
ஞான ஒளி படம் தமிழகம் எங்கும் மிகப் பெரிய வெற்றி. சென்னையில் ஐந்து அரங்குகளில் திரையிடப்பட்டும் மக்கள் வெள்ளம் அலை மோதுவதாக வந்த செய்தி மேலும் ரசிகர்களை மகிழ்ச்சிகுள்ளாக்கியது. நாடகமாக நடத்தப்பட்டு படமானதால் அதை பார்ப்பதற்கு சபாக்கள் சார்பில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் 55 சிறப்பு காட்சிகள் நடைபெற்றது. அது மட்டுமல்ல அவை அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது மற்றொரு சாதனையாகும்.
நல்ல நேரம் திரைப்படமும் நன்றாகவே ஓடியது.
அடுத்த படம் பட்டிக்காடா பட்டணமா. இயக்குனர் பி.மாதவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவிஸ், எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி படங்களுக்கு பிறகு தயாரித்த படம். கிராமத்து பின்னணியில் அமைந்த கதை என்பது தெரியும். ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. நடிகர் திலகத்தின் இரண்டு வித கெட் அப்கள் [குடுமி வைத்த கெட் அப் மற்றும் ஹிப்பி ஸ்டைல் தலை முடி வைத்த கெட் அப்] ஆவலை தூண்டியிருந்தாலும் ஆவேசம் இல்லை. அதற்கு ஒரு காரணம் அப்போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் திலகத்தின் படங்கள் தான்.
ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆவலை தூண்டியிருந்த படங்கள் தர்மம் எங்கே, வசந்த மாளிகை, என்னைப் போல் ஒருவன், ராஜ ராஜ சோழன், பாலாஜியின் புதிய படம் [நீதி என்று பெயர் வைக்கப்படவில்லை], என்.வி.ராமசாமி தயாரிக்கும் படம் [ரோஜாவின் ராஜா] என்பவை. மேற் சொன்னவை எல்லாமே கலர் படங்கள் என்பது கூட பட்டிக்காடா பட்டணமா என்ற கருப்பு வெள்ளை படத்திற்கு எதிர்பார்ப்பை குறைப்பதற்கு ஒரு காரணமானது.
இதற்கிடையே ராஜா, ஞான ஒளி விடுத்த சவாலையும் சமாளித்து மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நூறு நாட்களை கடந்தது. ஞான ஒளி 50 நாட்களை கடந்தது. பட்டிக்காடா பட்டணமாவின் மதுரை விநியோகஸ்தரான பாரத் மூவிஸ் கார்பரஷேன், சென்ட்ரலில் படத்தை ஒப்பந்தம் செய்து விட்டு மூன்று வார டெர்ம்ஸ் போட்டுக் கொண்டார்கள். இது என்னவென்றால் அன்றைய சூழலில் நிலவி வந்த பங்கு விகிதாசார முறை. அதாவது முதல் மூன்று வாரங்களுக்கு விநியோகஸ்தருக்கு வசூலின் பங்கில் அதிகம் வழங்க வேண்டும். அதற்கு பிறகு வசூலாவதில் சரி பாதியாக பகிர்ந்து கொள்வது என்று அமையும். பெரிய எதிர்பார்ப்பு இல்லையென்பதால் மூன்று வாரம் மட்டுமே போடப்பட்டது.
1972 -ம் வருடம் மே 6 அன்று ரிலீஸ் என்று விளம்பரம் வந்தது. இதை எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
(தொடரும்)
அன்புடன்
அன்றைய நாட்களின் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான போது நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவரும் இந்த அந்த நாள் ஞாபகம் தொடர் பதிவிற்கு பாராட்டு தெரிவித்த வாசு மற்றும் கோபால் ஆகியோருக்கு நன்றி!
-
திரு முரளி சார்,
நீங்கள் எழுதும் தொடர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான அந்த நாள் ஞாபகம் தொடரை படிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.மிகவும் ரசித்து படித்து அனுபவித்துகொண்டிருக்கிறேன் .நன்றி பல கோடி .
-
அந்த நாள் ஞாபகம்
சம்மர் லீவ் என்பதால் படம் பார்க்க போவது பெரிய விஷயமில்லை. போகலாம் என்று முடிவு எடுத்தவுடன் டிக்கெட் வாங்க முயற்சி எடுத்தோம்.மன்ற டிக்கெட்கள் கிடைக்கவில்லை. படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் கூட அவரின் மாபெரும் ரசிகர் கூட்டம் படத்தை வரவேற்க தயாராகி விட்டது என்பது புரிந்தது. சரி எப்படியும் வாங்கி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. முதல் நாள் இரவு வரை முயற்சி எடுத்தோம். ஆனால் பலன் இல்லை. சரி எப்படியும் மறு நாள் காலை தியேட்டர் பக்கம் போய் ட்ரை பண்ணலாம் என்று முடிவானது.
6ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கே சென்ட்ரல் சினிமா வாசலில் ஆஜர். ஆனால் அங்கேயும் ஏமாற்றம். படம் பார்க்க வந்திருந்த எங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் கேட்டுப் பார்த்து விட்டோம். பலன் பூஜ்யம். டைம் போய்க் கொண்டிருக்கிறது. Q -வில் நின்று டிக்கெட் வாங்குவதெல்லாம் நடக்காத விஷயம். காரணம் சரியான கூட்டம். ஹவுஸ் புல் போர்டு மாட்டி விட்டார்கள். தியேட்டரின் பின் பக்க வாசல் பக்கம் போய் பார்க்கலாம் என்று அங்கே போனோம். அப்போதுதான் மன்ற டிக்கெட்கள் வைத்திருந்தவர்களை உள்ளே விட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நம்பிக்கையில் நாங்களும் உள்ளே நுழைந்து விட்டோம். உள்ளே போனாலும் டிக்கெட் இல்லை. ஆபிஸ் ரூம், கவுன்ட்டர் என்று எங்கே கேட்டாலும் டிக்கெட் இல்லை என்ற ஒரே பதில். மட்டுமல்ல, டிக்கெட் இல்லாதவங்களை எல்லாம் வெளியே அனுப்புங்க என்ற சத்தமும் கேட்கிறது. நாங்கள் அப்படி இப்படி என்று சுத்திக் கொண்டிருக்கிறோம். சனிக்கிழமை என்பதால் ராகு கால நேரம் முடிந்தவுடன் [9 -10.30 ] படம் ஆரம்பிக்கப் போகிறார்கள். கடைசியாக உள்ளே இருக்கும் கூல் ட்ரிங்க்ஸ் ஸ்டால் அருகில் போனோம். அங்கே என் கசினுக்கு தெரிந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடமும் விஷயத்தை சொல்லி புலம்ப, எத்தனை டிக்கெட் வேணும் என்று அவர் கேட்டாரே பார்க்கலாம். எங்களுக்கு நம்பவே முடியவில்லை. இரண்டு என்று சொன்னவுடன் உடனே இரண்டு டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். எங்களுக்கு புதையல் கிடைத்த சந்தோஷம். [குறிப்பிட வேண்டிய விஷயம் அவர் எம்.ஜி.ஆர். ரசிகர்].
அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.
(தொடரும்)
நன்றி செந்தில்!