Originally Posted by
jaisankar68
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் பற்றிய இந்தத் திரியை தொடங்கி வைத்த திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இது பற்றி உடனடியாக தகவல் தெரிவித்த அன்பர் திரு. வினோத் அவர்களுக்கும் நன்றி. தொடக்க நாளிலேயே பதிவுகளை மேற்கொண்ட கலியபெருமாள் விநாயகம் , மற்றும் ரூப் குமார் ஆகியோருக்கும் நன்றி.
முதல் பதிவாக பொன்மனச்செம்மலின் முதல் படம் பற்றிய கருத்துக்களுடன் திரி தொடங்கப்பட்டுள்ளது.இன்ஸ்பெக்டர் ரங்கய்ய நாயுடு என்ற சிறிய கதாபாத்திரத்தில் மக்கள்திலகம் இதில் நடித்துள்ளார். தென்றல் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட கட்டுரையில் பாட்டுப்புத்தகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் 12வதாக இடம் பெற்றிருப்பதாக படித்த நினைவு உள்ளது. மக்கள் திலகம் இப்படம் பற்றிய தனது கருத்துரையில் அவர் ஏற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் பற்றிக் குறிப்பிடுகையில் என்னால் அந்த பாத்திரத்துக்கோ அந்தப் பத்திரத்தால் எனக்கோ பெருமை சேர்க்கும் அளவுக்கு இல்லை எனக்குறிப்பிட்டுள்ளார். ஆயினும் பொன்மனச்செம்மலின் முதல்படம் என்ற அளவில் ஒவ்வொரு ரசிகனின் மனத்திலும் இப்படம் நீங்காத இடம் பெற்றிருக்கிறது. இருப்பினும் இப்படத்தின் காட்சிகளை முழுமையாகக் காணக்கிடைக்காத சூழல் உள்ளது. ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல ஏக்நாத் வீடியோ நிறுவனம் வெளியிட்ட ஒரு விசிஆர் காசட்டிலும் ஜனனி நிறுவனம் வெளியிட்ட வீடியோ மேகசீனிலும் இப்படத்தில் மக்கள்திலகம் அவர்கள் பங்கு பெற்ற காட்சிகள் மட்டும் வெளிவந்தன. அவையும் தற்போது கிடைக்கவில்லை.
கொடுமையான வறுமைச் சூழலில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இதனைத் தொடர்ந்து பல படங்களில் இன்ஸ்பெக்டர் வேடம் புனைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்ததாகவும் , தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேடமே நிலைத்துவிடக்கூடும் என்ற எண்ணத்தில் அவ்வாய்ப்புகளை மறுத்து விட்டதாகவும் மக்கள் திலகம் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் வயிற்றைக் கழுவ அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் அதன் பின்னரும் பல சமயங்களில் தோன்றியதாகவும் அந்த எண்ணங்களை துடைத்தெறிந்து விட்டு வைராக்கியமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.