-
தொடர் - 2 .
பிரமாணர் அல்லாதோர் புறக்கணிப்பு !
இந்தியர்களின் கோரிக்கைகளையும், குறைபாடுகளையும் பிரிட்டிஷ் சர்க்காருக்கு தெரிவித்து பரிகாரம் தேடவும், ஆள்வோருக்கும், ஆளப்படுவோருக்கும் ஒரு வித தொடர்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்திய நலன் விரும்பும் பெரியோர்கள் பலர் முதன் முதல் நேஷனல் காங்கிரஸ் என்ற தேசிய மகாசபையை ஆரம்பித்தனர். ஆரம்ப காலத்தில் அது மிதவாதிகள் ஸ்தாபனமாகவே இருந்தது. ஆண்டு தோறும் கூடும் மகா நாடுகளில், ராஜ விசுவாச தீர்மானம் முதல் இடம் பெற்றிருந்தது.
ஆலன் ஆக்டேவியன் ஹியூம், w.c. பானர்ஜி, பதுருதீன் தயாப்ஜி, எஸ். ராமசாமி முதலியார், ரங்கைய நாயுடு, ராவ் பகதூர் சாஸ்திரி, சபாபதி முதலியார், சர். சங்கரன் நாயர் போன்ற நிதானமான அறிவாளிகள் காங்கிரசில் ஆதிக்கம் பெற்றிருந்தவரை அது ஓரளவு உண்மையான பிரதிநிதித்துவம் வாய்ந்த தேசிய மகாசபையாகவே இருந்தது. சென்னை மாகாணத்தில் உள்ள அறிவு விளக்கம் பெற்ற பிராம்மணர் அல்லாதோர் அதை ஆதரித்தும் வந்தார்கள்.
அந்த காங்கிரசின் பழைய இலட்சியங்கள் சில இப்போதும் காங்கிரஸ் இலட்சியங்களாக இருந்து வருகின்றன. ஆனால் அந்த லட்சியங்களை அடைய கையாளப்படும் முறைகளும், கையாளும் நபர்களும் கொடிய வகுப்பு வாதிகளாய் இருப்பதனால், காங்கிரஸ் இப்போது குறிப்பிட்ட சமூகத்தார் நலன் கோரும் வகுப்பு ஸ்தாபனமாக மாறி விட்டது. எனவே முஸ்லிம் சமூகத்தினரும் அதனை ஆதரிக்க வில்லை. காங்கிரஸ் பகட்டில் மயங்கி அதில் சேர்ந்த தென்னாட்டு பிராமணர் அல்லாத அறிவாளிகள் பலர், பின்னாளில், காங்கிரஸ் கட்சி வெளிப்பார்வைக்கு தேசிய சபையாகவும், உண்மையில் அது பிராமணர் அல்லாதோரை புறக்கணிக்கும் ஒரு இயக்கமாக இருப்பதையும் உணர்ந்து தமது சுயமரியாதையையும், கவுரவத்தையும் காப்பற்றிக்கொள்ளும் பொருட்டு கண்ணியமாக வெளியேறி விட்டனர்.
தொடர்ந்து நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் பிராமணர் அல்லாதோர் சமூகத்தை சார்ந்த எஸ். ராமநாதனும், பி. ரத்தினவேல் தேவரும், தோற்கடிப்பட்டதும், சி. ராஜகோபாலாச்சாரி, டாக்டர் டி .எஸ். எஸ். ராஜன், எஸ். சத்தியமூர்த்தி மற்றும் ருக்குமணி லட்சுமிபதி (இவரின் பெயரில் சென்னை எழும்பூரில் இப்போதும் சாலை ஒன்று உள்ளது) போன்றவர்கள் வெற்றி பெற்றதும், பிராமணர் அல்லாதோர் காங்கிரஸ் கட்சியில் புறக்கணிக்கப் பட்டதை வெளிச்சம் போட்டு காட்டியது.
சமூக விஷயங்களில் பிற்போக்கான ஒரு சில பிராமணர்கள் காங்கிரஸ் கட்சியில் ஆதிக்கம் பெற்றதன் விளைவாய், காங்கிரஸ் சீர் குலைய தொடங்கிற்று !
தொடரும் ...
-
தொடர் - 3.
காங்கிரஸ் கட்சியில் பிளவு :
பிரிட்டிஷார் ஆட்சியில் பிராமணர் அல்லாதோர், முக்கியமாக ஒடுக்கப்பட்டவர்கள் சிறுக சிறுகவேனும் தலை தூக்கி மதிப்பு பெற்று வருவதும்,, பாதிரியார் உதவியினால் கல்வித் துறையில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றமடைந்து வருவதும், ஆங்கிலக் கல்வியின் பயனாக நாட்டிலே மத உணச்சியும் குருட்டு நம்பிக்கைகளும் குறைந்து வருவதும், அந்த வைதீக அரசியல் வாதிகளுக்கு மிக்க அச்சத்தை உண்டு பண்ணின. பிராமணியத்துக்கு இந்து மதமே அரணாக இருந்து வருவதனால் இந்து மதாபிமானம் குன்றினால் பிராமணீ யம் ஒழிவது திண்ணம் என்று அவர்கள் உணர்ந்தனர். மதத்தையும்,, சுவர்க்க நரகங்களையும் காட்டி மக்களை ஏய்க்க முடியாத நிலை ஏற்படவே, தேசியத்தை காட்டி ஏய்க்க எண்ணம் கொண்டனர். எனவே, பிரிட்டிஷ் அரசாங்கம் மீது பாமர மக்களுக்கு துவேஷத்தையும், வெறுப்பையும் உண்டு பண்ணும் வழிகளை தேடலாயினர்.
இந்திய செல்வத்தை கொள்ளையடிப்பதும், இந்தியக் கலைகளையும் நாகரீகத்தையும் அழிப்பதே பிரிட்டிஷாரின் நோக்கம் என்றும், இந்தியக் கைத்தொழில்கள் மறைந்ததற்கும், இந்தியா வறுமை நாடனதற்கும் பிரிட்டிஷாரே காரணமென்றும், பிரிட்டிஷாரை ஒட்டி சுயராஜ்ஜியம் ஸ்தாபித்தாலே இந்தியா காப்பாற்றப்படும் என்றும் அவர்கள் விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த முயற்சி ஆரம் பத்தில் பலனளிக்க வில்லையென்றாலும், காலப்போக்கில் அவர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தலைவர்களும், ஆரம்பத்தில் இதற்கு செவி சாய்க்க வில்லை என்றாலும், நாளடைவில் மிதவாதிகள் அல்லாதோர் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியில் பெருகலாயிற்று. பால கங்காதர திலகர் தலைமையில், அவர்கள் 1907ல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் கட்சியை கைப்பற்ற முயன்றனர். அம்முயற்சி பலிக்க வில்லை. அன்று தொட்டு, காங்கிரஸ் கட்சியில் பிளவு உண்டாயிற்று.
தொடரும் ....