8000 ஆவது சிறப்புப் பதிவு
'பொட்டு வைத்த முகமோ'
'சுமதி என் சுந்தரி'
http://thumbnails107.imagebam.com/26...8266041325.jpg
8000 ஆவது சிறப்புப் பதிவாக, ஸ்பெஷலாக வருவது 'சுமதி என் சுந்தரி' படப் பாடல். தமிழ்த் திரையுலக பாடல்கள் வரலாற்றையே புரட்டிப் போட்ட பாடல். திரு எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெமனி, சிவக்குமார் என்று பாலா பலருக்கும் பாடிக் கொண்டிருந்த சமயத்தில் 1971-ல் இளைஞர்களின் கனவுப் படமாக வந்து இளமை விதையைத் தூவி அனைவர் நெஞ்சிலும் புதுமைக் காதல் பயிர் வளர புது வழி காட்டிய புத்துணர்வுப் படமான 'சுமதி என் சுந்தரி' படத்தில் முதன் முதலாக நடிகர் திலகத்திற்குப் பாலா பாடி, தான் பாடிய அத்தனைப் பாடல்களையும் தானே முந்திச் சென்று 'பொட்டு வைத்த முகமோ' மூலம் எவருமே முந்த முடியாத முதல் இடத்தைப் பெற்றார்.
இதற்கு பாலா மட்டுமே காரணமல்ல. இதுவரை பாலா பாடிய பாடல்களின் மகத்துவமான வெற்றிக்கு அவரே முழுக் காரணம். ஆனால் 'பொட்டு வைத்த முகமோ' வெற்றிக்கு அவரால் அப்படி முழுக் காரணமாக முடியவில்லை. காரணம் 'நடிகர் திலகம்' என்ற ஜெயின்ட். அதை மீறி யாருமே ஒன்றுமே செய்ய முடியாது. டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரலிலேயே நடிகர் திலகத்தைப் பார்த்துப் பழகிப் போன நமக்கு டோட்டலாக மாறுதலுடன் இளமை பொங்கும் பாலா வாய்ஸுடன் அவர் இப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக நடித்திருப்பதை இன்று பார்க்கும் போதும் மிரட்சி அடங்கியபாடில்லை. நடிகனுக்காக பாடகனா? இல்லை பாடகனுக்காக நடிகனா? நடிகனுக்காக பாடகன் என்றால் பலர் இருக்கிறார்கள். ஜெமினிக்கு பி.பி.எஸ், எ.எம்.ராஜா. அத்தனை ஹீரோக்களுக்கும் பொதுவாக பாடகர் திலகம், தங்கவேலுவுக்கு எஸ்.சி.கிருஷ்ணன், நாகேஷுக்கு ஏ.எல்.ராகவன் இப்படி. பாடகனுக்காக நடிகனா என்றால் அதுவும் என்னால் முடியும் இதுவும் என்னால் முடியும் என்று சூளுரைக்க சூரக்கோட்டையாரைத் தவிர வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியாது.
http://thumbnails104.imagebam.com/26...0266040796.jpghttp://www.5eli.com/Lyrics/wp-conten...00-300x300.jpg
1971-லோ நடிகர் திலகம் உடல் வனப்பில் உச்சம் தொட்டிருந்தார். வாளிப்பான உடல். 43 வயது. தோற்றமோ இருபது வயது வாலிபன் போல. கல்லூரிக் கட்டிளங் காளை போல. இத்தனைக்கும் மேக்-அப் ஹெவி எல்லாம் கிடையாது. அதனால் பாலாவுக்கு மிக மிக வாட்டமாகப் போயிற்று. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி, மோத்தி, பி.பி.எஸ், சௌந்தர்ராஜன் என்று பாத்திர வார்ப்புகளுக்கு ஏற்ப பலர் நடிகர் திலகத்திற்கு பாடினாலும் பாடகர் திலகமே பின்னால் நடிகர் திலகத்தின் குரலாக பாடல்களில் முழு ஆக்கிரமிப்பு செய்து விட்டார்.
இப்போது அப்படியே ஒரு சேன்ஜ். இளமை பொங்கும் கலைக்குரிசிலும், கலைச்செல்வியும் ஜோடி. இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைக் காடுகளின், மலைகளின் சரிவுப் பாதைகள் நடுவே ரசமான பாடல். அடித்தது யோகம் பாலாவிற்கு. எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தாகி விட்டது. மற்ற துண்டு துக்கடாக்களுக்கும் பாடி ஓகே ஆகி விட்டது. இப்போது நடிப்பின் இமயத்திற்கு பாடி அதுவரை 'தொட்டபெட்டா' தொட்டிருந்தவர் 'எவரெஸ்ட்'டில் ஏறி அமர்ந்து விட்டார். அமர்ந்தவர் அமர்ந்தவர்தான். கீழே இறங்கவே இல்லை.
சரி வருமா, குரல் பொருந்துமா என்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் பாலா உட்பட. திலகத்திற்கோ தன் திறமை மேல் எப்போதுமே திடமான நம்பிக்கை. பயத்தில் பாலா புலம்ப 'பாலு...நீ பாடு... மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சர்வ அலட்சியமாக நடிப்பின் சர்வாதிகாரி சொல்ல, தைரியம் வரவழைத்து அற்புதமாக பாடி முடித்து விட்டார் பாலா. இப்போது ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்.
இப்போது நடிகர் திலகத்தின் டர்ன். பாட்டை முழுவதும் கேட்டு உள்வாங்கியாகி விட்டது. கொஞ்சம் வழக்கத்தை விட கவனமாக. தான் நடிகர் திலகம் இல்லை.. 'சுமதி என் சுந்தரி' படத்தின் சுந்தர ஹீரோ...இளம் நாயகன். உடன் அழகு நாயகி. அது மட்டுமே. பாடகர் திலகத்தின் குரலுக்கு வாயசைத்து அசைத்து பழகி ஆகி விட்டது. இப்போது வேறு ஒரு இளைஞன் பாடுகிறான். அதற்கேற்ற மாதிரி வாயசைக்க வேண்டும்.அவ்வளவுதானே ! ஜூஜுபி.ஊதித் தள்ளி நடித்தாகி விட்டது. பாடலை பார் புகழ ஹிட் ஆக்கியும் கொடுத்தாகி விட்டது.
ரிசல்ட் என்ன! பாலா எவருமே தொட முடியாத புகழை இந்த ஒரு பாடல் மூலம் பெற்று விட்டார் நடிகர் திலகத்தின் வாயசைப்பு மூலமாக. அது போல தன்னுடைய அசாத்திய திறமை மூலமும். நடிப்பின் சமுத்திரமும், பாடல் கடலும் ஒன்று சேர்ந்து ஒரு இசைப் பிரளயத்தையே நடத்தி முடித்து விட்டன எம்.எஸ்.வி என்ற இன்னொரு இசைக் கடல் இணைவின் மூலம்.
மிக உற்சாகமாக ஆரம்பிக்கும் இசை. புள்ளி மானைப் போல மலைப் பாதைகளுக்கு இடையில் கலைச்செல்வி துள்ளி ஓடி வர, வெகு இயல்பாக 'நடிகர் திலகம்' நடந்து வந்து செடியிலிருந்து இலை கிள்ளிப் போட, அந்த நான்கு நிமிடப் பாடல் நான்கு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாதது. ஒரு காலை மடக்கி ஸைடில் நிற்கும் போஸாகட்டும்...அல்லது பேன்ட்டின் முன்னிரண்டு பக்க பாக்கெட்டுகளில் கட்டை விரல் கொடுத்து கொக்கி போட்டு, இடுப்பொடித்து நிற்கும் அழகாகட்டும்... வலதுகாலை டைட் செய்து, இடது கால் மடக்கி உயரே செல்வி இருக்க, சரிவில் நின்றபடி 'பொட்டு வைத்த முகமோ' பாடல் தொடங்கும் போதே தியேட்டர் ஓனர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து முடித்திருப்பார். வெளிர் நீல டைட் பேண்ட்டும், ஜவுளிக் கடைகளின் வெளியே அப்போதெல்லாம் விளம்பரத்திற்கு வைக்கப்பட்டு 'சுமதி என் சுந்தரி ஷர்ட்' என்று அமோக விற்பனை ஆன அந்தப் பெரிய செக்டு ஷர்ட்டும் அணிந்து ஏதோ பத்தாம் வகுப்பு பையனைப் போல ஆச்சர்யம் வரவழைக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார்?
http://i.ytimg.com/vi/NaeKkH0hPus/hqdefault.jpghttp://i60.tinypic.com/2vtpmci.jpg
'தரையோடு வானம்' என்று கலைச்செல்வியின் ஒரு கை பிடித்து, இன்னொரு கையை வானம் நோக்கி உயர்த்தையிலே திரையரங்குகளின் கூரைகள் நொறுங்குமல்லவா? படத்தின் போஸ்டர்கள் இந்தப் போஸைத்தானே தாங்கி நிற்கும்! கை தூக்கி இடையொடித்து செல்வி நிற்கையிலே அவர் இடையின்மீது ஒரு கை வைத்து ('இடையோடு பார்த்தேன்.... விலையாகக் கேட்டேன்') இன்னொரு கையை தன் இடுப்பின் மீது நடிகர் திலகம் வைத்து ஸ்டைலாக நிற்கும் அடுத்த போஸ் அதற்குள் வந்து முன் போஸை ரசித்து முடிப்பதற்குள் நம்மைப் பாடாய்ப் படுத்துமே! அடுத்த சில வினாடிகளில் அதே விலையில்லா வரிகளுக்கு ஜெயா முன் நடக்க, அப்படியே பின்னால் தொடர்ந்து சற்று கழுத்தைச் சாய்த்து புற்களுக்கு மத்தியில் கால்களைத் தூக்கி வைத்து நடக்கும் அந்த ஸ்டெப்ஸ். (போலீஸ் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் பண்ணும் ரசிகர்களை அடக்க முயன்று தோற்றுப் போகும்) என்ன நடக்கிறது என்றே தெரியாது. வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்று எண்ணுமளவிற்கு ரசிகர்களின் ஆரவார சப்தம் ஒலிக்கும். 'செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள் என்றபடி கால் மடக்கி, படுத்து நாயகி கரம் பிடித்து, விருட்டென்று 'புரிந்தாள்' என்று முடித்தவுடன் கையை விசிறி விலக்குவது விசில் சப்தங்களை வீறிட வைக்கும். திரும்ப அதே வரி வரும் போது தாழ்நிலையில் பாய்வது போல் நிற்க, ஒரு நொடி குளோஸ்-அப் காட்டி பின் காமெரா தூர விலகி விடும். ஜெயாவின் கைபிடித்து ஒவ்வொரு முறையும் பின்னால் நடந்து வரும் ஸ்டைல் விதவிதமாக இருக்கும். 'குழலோ.. ஓ.. ஓ' என்று பாலா பாடும் போது அதற்குத் தகுந்தாற்போல் 'நடிகர் திலகம்' அந்த 'ஓ' வுக்கு தலையை சாய்த்து மிக அழகாக வாயசைக்கும் போது யாருக்குத்தான் 'ஓ' போடத் தோன்றாது?
'அந்தி மஞ்சள் நிறமோ' என்று வெகு அழகாக நெஞ்சு நிமிர்த்தி அவர் ஓர் முழு ஆண்மகனுக்குரிய தகுதியை உடல் மொழியாகக் காட்டுவார் பாருங்கள். (அதாவது முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது) காட்டிவிட்டு மீண்டும் உடனே உடல் தளர்த்துவார்)
அடுத்த சரணத்தில் ஜெயாவின் பின் நின்று, அவரது இரு கைகளையும் பின்பக்கம் இழுத்தவாறு பிடித்து ஊஞ்சல் ஆட்டுவது போல 'பொன்னூஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்' என்று பாடுவது கிளாஸ். என்னுடன் கலந்தாள்' இரண்டாம் தரம் ஒலிக்கையில் குளோஸ்-அப்பில் மிக அழகாக சிரிப்பார் கலைச் செல்வியைக் கட்டி அணைத்தபடி. வசந்தா குரலில் 'லலலா லலலா லலலா லால்லா' என்று ஜெயா இவர் அணைப்பிலிருந்து விலகி பின்புறம் சாய்ந்து ஹம்மிங் தரும் போது நடிகர் திலகம் தலையை முன் நீட்டி சைட் போஸில் சிரிப்பது செம ரகளை.
http://i62.tinypic.com/15hhcte.jpg
மூன்றாவது சரணமான 'மலைத் தோட்டப் பூவில்' வரிகளில் நிற்கும் உடல் மொழி அசர வைத்து விடும் நம்மை. தலையை ஒரு வெட்டு வெட்டி இந்த லைனை ஆரம்பிப்பார். வலது கை கட்டை விரல் பேன்ட் பாக்கெட்டில் கொக்கியாய் மாட்டியிருக்க, இடது கை நீட்டி 'மணமில்லையென்று' பாடிக் கொண்டிருப்பவர் சடேலென்று கையை வீச்சருவாள் வெட்டுவது போல விசிறி ஒரு ஆக்ஷன் செய்து கையை பின்னால் கொண்டு செல்வாரே பார்க்கலாம். இதற்கு நடுவில் தலை ஸ்டைலாக ஷேக் ஆவதையும், உடம்புப் பகுதிகள் வளைந்து நெளிவதையும் நாம் கவனிக்கத் தவறி விடக் கூடாது. இரு வினாடிகளில் இடைவிடாத அதிசய அசைவுகளைக் கா(கொ)ட்டி விடுவார். அப்படியே வரிகள் மீண்டும் தொடரும் போது படு அலட்சியமாக ஜெயாவைப் பின் தொடர்ந்து நடை போட்டு செல்வார். அப்படியே நின்று இடது காலை சற்று மடக்கி வலது கையை உயர்த்துவார்.
'நிழல் போல் மறைந்தாள்' என்னும் போது தியேட்டர் ரெண்டு பட்டு விடும். வலதுகையை மார்புக்கு நேராக நீட்டி ஓடும் ஜெயாவை சுட்டு விரலால் சுட்டிக் காட்டுவார். அய்யோ! அமர்க்களம் சாமி! அடுத்து வரும் போது வேறு வித போஸ்.
இப்படி பாடல் முழுதிற்கும் வினாடிக்கு வினாடி போஸ் முத்திரைகள், நினைத்துப் பார்க்க முடியாத விந்தை அசைவுகள், ஸ்டைல், நடை என்று தூள் பரத்துவார்.
பாலா குரலை அப்படியே தன்னுள் உள்வாங்கி, அதே போன்ற வாயசைப்போடு தன்னுடைய முத்திரைகளை மறக்காமல் அளித்து, அனைத்து ரசிகர்களையும் பரவசப்படுத்தி, பார்ப்போரை வியப்பிலாழ்த்தி நடிகர் திலகம் இந்தப் பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்.
கலைச்செல்வியும் நல்ல கம்பெனி. எளிமையான கண்களை உறுத்தாத சிம்பிள் மேக்-அப். உடையும் அது போலவே ரொம்ப எளிமை. வெளிர் வயலட் நிற சேலை மிகப் பொருத்தம். அழகில் அள்ளுகிறார். பி.வசந்தாவின் குரல் அப்படியே மேடம் பாடுவது போல அவ்வளவு பொருத்தம். இன்னும் கொஞ்சம் அந்த 'லலலா லலலா லலலா லால்லா' ஹம்மிங் வராதா என்று ஏங்குமளவிற்கு அற்புதம்.
பாடல் முழுதுமே இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் படமாக்கப்பட்டது. எத்தனயோ இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் பல பாடல்கள் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல் அவற்றையெல்லாம் மீறிய தனிச் சிறப்பு கொண்ட காந்தத் தன்மை மிக்கது. அழகான காதலியை ரசித்து அவளைப் பின்பற்றியபடியே தொடரும் அவளைவிட அழகான இளைஞனின் காவிய ரசனைப் பாடல் இது.
'மெல்லிசை மன்னரி'ன் ஒவ்வொரு இசைக்கருவிகளும் இப்பாடலின் ஒவ்வொரு எழுத்தோடு இசைந்து இன்பம் தரும். சிதார், ஷெனாய், சந்தூர், கிளாரினெட், சாக்ஸ் , தபேலா, டோலக் என்று மனிதர் விளையாடி இருப்பார். நடிகர் திலகமும், கலைச்செல்வியும் தங்களை மெய்மறந்த நிலையில் அந்த பூங்காவின் பெஞ்சில் தழுவி கட்டுண்டு கிடக்க, பின்னால் ஒலிக்கும் அந்த கோரஸ் தொடர்ந்து வர இருக்கும் இந்த அற்புதப் பாடலுக்குக் கட்டியம் கூறி விடும். 'லாலா ஹாஹா ஹாஹா' என்று பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து கோரஸாக ஒலிக்கும் போது ஒவ்வொரு இளைஞனும் புளகாங்கிதம் அடைந்து விடுவான். மனதுக்குள் இனம்புரியாத கிலேசம் தோன்றி அனைவரையும் இன்பச் சித்ரவதை செய்துவிடும்.
படத்தின் துவக்க இசையே நம்மை உற்சாகத் துள்ளல் போட வைத்து விடும்.
பாலா நாம் யாருக்குப் பாடுகிறோம் என்பதை உணர்ந்து வெகு அழகாக பாடியிருப்பார். நடிகர் திலகத்திற்கே உரித்த கம்பீரமும் குறைந்து போகாமல், அதே சமயம் காதல் பாடலென்பதால் தன்னுடைய பாணி குழைவுகளையும் விட்டுக் கொடுக்காமல் வார்த்தைகளை தெள்ளத் தெளிவாக உச்சரித்து பாலா புகுந்து விளையாடியிருப்பார். தினைமாவுடன் சேர்ந்த தேனாக வசந்தாவின் ஹம்மிங் உலகம் உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.
இறப்பே இல்லாத சாகாவரம் பெற்ற பாடல்.
http://2.bp.blogspot.com/_78rwGPFYej..._Y/s1600/2.jpg
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
ஆஆஆஆஆஆஆஅ………
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைபோடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
என்னுடன் கலந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
ஆஆஆஆஆஆஆஆ……. ஹ ஹா ஹா
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
நிழல் போல் மறைந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
பொட்டு வைத்த முகமோ
ஓஓஓஓஓ….
கட்டி வைத்த குழலோ
ஓ...ஓஓஒ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
லலலா லலலா லலலா லால்லா
அந்தி மஞ்சள் நிறமோ
லலலா லலலா லலலா லால்லா
https://youtu.be/NaeKkH0hPus