-
சிவாஜி பாட்டு-20
-------------------
கரும்பு தின்னக் கசப்பதில்லை.
'எனக்குப் பிடித்த இந்தப்
பாடலைப் பற்றி எழுதுங்கள்'
என்று என்னிடம் அன்பு
வேண்டுகோள் விடுத்திருந்த
அன்புமிகு திரு.பொன்.
இரவிச்சந்திரன் அவர்களின்
வேண்டுகோளுங்கிணங்கி
எழுதும் பொருட்டு,
"என் தம்பி"யில் வரும்
"முத்துநகையே" எனும்
இசைக் கரும்பை இரண்டு,
மூன்று முறை தின்றேன்.
--------
நான்கைந்து நிமிடங்களே
போதுமானதாயிருக்கிறது-
நடிகர் திலகத்துக்கு.. நம்மை
உணர்வுப் பிழம்பாய்
மாற்றுவதற்கு.
நான்கைந்து நிமிடங்களே
போதுமானதாயிருக்கிறது-
மெல்லிசை மாமன்னருக்கு..
ஒரு பாசக் கதையே பாட்டுவழி
சொல்வதற்கு.
நான்கைந்து நிமிடங்களே
போதுமானதாயிருக்கிறது-
தெய்வீகப் பாடகருக்கு..
காலமெல்லாம் நிலைத்து
நிற்கும் தன் குரலினிமையை,
இந்த கானத்தோடு
கரைப்பதற்கு.
---------
கவியரசரைக் கையெடுத்துக்
கும்பிடத் தோன்றுகிறது...
எளிமை சரித்திரமாய் நம்
முன்னே இந்தப் பாடல்
விரியும் பொழுது.
"தென்மதுரை மீனாள்
தேன் கொடுத்தாள்.
சித்திரத்தைப் போலே
சீர் கொடுத்தாள்.
என் மனதில் ஆட
இடம் கொடுத்தாள்.
இதுதான் சுகமென
வரம் கொடுத்தாள்."
ஒரு பாடலை நமக்குப் புரிகிற
மாதிரி அருமையாய் எழுதியது
மட்டுமல்ல.. அந்தக்
குழந்தைக்கே புரிகிற
மாதிரி எழுதிய கவியரசரை கும்பிடத்தானே வேண்டும்?
தென்மதுரை மீனாள்,நமக்குக்
கவியரசரையும்தான்
கொடுத்துப்
போயிருக்கிறாள்.
----------
தமிழ்த் திரைப்பாடல்களில்
ஒரு விஷயம்
கவனித்திருக்கிறேன்.
ஒலி வடிவிலே நாம் கேட்டு
மிகவும் ரசித்தவொரு
திரைப்பாடலைக் காட்சி
வடிவிலே காண நேர்கிற
போது, அந்தப் பாடல் மீதான நமது மதிப்பான அபிப்ராயம்
அப்படியே நீடிப்பது கிடையாது.
ஒலி வடிவிலே நாம் ரசித்த
அதே பாடலைக் காட்சி
வடிவிலே பார்க்கப்
பிடிக்காமல்கூட போவதுண்டு.
இந்தக் குறை வைக்காத
பாடல்கள்,நடிகர் திலகத்தின்
பாடல்களே.
இந்தப் பாடலையே எடுத்துக்
கொள்ளலாம்...
போற்றி வளர்த்த,தன் மீது மிகப்
பாசம் கொண்ட
பெண்குழந்தையைப் பார்த்து
அவளது உடன்பிறவாச்
சகோதரன் பாடுவதாய் அமைந்த பாசப் பாடல்.. இது.
கவித்துவம் மிகுந்த
எளிமையான பாடல் வரிகள்,
கனிவான இசை,இதமான குரல்
என்று ஒலி வடிவிலே நம்
நெஞ்சள்ளிப் போன இந்தப்
பாடலையே, காட்சி
வடிவிலே பார்க்கிற போது,
பாடல் மீதான நம் பெருமதிப்பு
நடிகர் திலகத்தால் அதிகமாகிறது.
திரைப்படத்தின் காட்சி
வரிசைப்படி படப்பிடிப்பு
செய்யப்படுவதில்லை என்பது
நாமறிந்ததே. ஊனமுற்ற அந்த
சிறுமி இளம்பிள்ளைவாதத்தால்
அவதியுறும்போது, அவளுக்குத்
தாய்க்குத் தாயாய் இருந்து
காத்தவன் கதாநாயகன்தான்
என்பது விளக்கப்படும்
பாடலுக்கு முந்தைய
காட்சியும், பாடற் காட்சியும்
அடுத்தடுத்து படம்
பிடிக்கப்பட்ட காட்சிகளல்ல.
இருப்பினும், தொடர்ச்சியாய்
எடுக்கப்பட்டது போல் ஒரு
தோற்றத்தை அழுத்தமாக
உருவாக்கி விடுவது, நம்
நடிகர் திலகத்தின் சிறப்பு.
---------
ஓடி,ஒளிந்து விளையாட்டுக்
காட்டும் குழந்தையோடு,
இதழ்களோடு சேர்ந்து
கண்களும் புன்னகைக்க
நம் திலகம் பாடும் அழகு,
கோடி பெறும்.
அவர் 'ஆஹா,ஓஹோ' சொல்லும் அழகு பார்த்தாலே..
நம் வருத்தங்கள் ஒடி விடும்.
-----------
கண்ணழகையும்,
கையழகையும் புன்னகையோடு
பாடிக் கொண்டிருப்பவர்,
அன்பின் வேகத்தில் "காலழகு"
என்று தவறிச் சொல்லி விட்டு,
சூம்பிய குழந்தைக் கால்கள்
பார்த்த முகத்தில் புன்னகை
துரத்தி, சோகம் சூடி..
நடிகர் திலகம்- எவராலும்
புறக்கணிக்க முடியாத
புனிதம்.
----------
"மலர்ந்தும் மலராத" போன்றே
மறக்க முடியாத வெற்றியைப்
பெற வேண்டிய இந்தப்
பாடல், அந்தளவுக்கு
பேசப்படாதது குறித்து
என்னிடம் வருந்திப் பேசினார்..
திரு.பொன்.இரவிச்சந்திரன்.
அன்பின் பொன்.இரவி...
இந்த இனிமைப்பாடல் வந்த
சமயத்தில்,நீங்கள் சிறு
குழந்தையாயிருந்திருப்பீர்கள்.
நான், கைக்குழந்தையாய்
இருந்திருப்பேன்.
நம்மைச் சூழ்ந்த காற்றோடு
கரைந்த இலட்சக் கணக்கான
பாடல்களில், இதைத் தேர்ந்து
நீங்கள் சொல்ல..நான் எழுத..
இந்தத் தலைமுறைக்கும்
இனிக்க,இனிக்கப் போய்ச்
சேர்கிற இந்தப் பாடல் -
எப்போதும்..எந்நாளும்
தோற்காது..நண்பரே!
https://youtu.be/f2gQqwbeJRM
-
சிவாஜி பாட்டு- 21
-------------------
வெறும் பாட்டல்ல.. இது!
அழகான வாழ்க்கைத் தத்துவம்
எளிதாக விளக்கப்படும் இசைப் பாடம்.
கற்றுச் சிறந்த ஞானத்திற்கும்,
கர்வத்திற்கும் நடக்கும்
சங்கீதச் சண்டை.
-----------
கர்வம் பொல்லாதது.
'என்னால் முடியும்' என்கிற
நம்பிக்கை, "என்னால் மட்டுமே
முடியும்" என்கிற நிலைக்கு
மாறும் போது, அங்கே கர்வம்
என்பது வந்து விடுகிறது.
எதிலும் தன்னையே
முன்னிலைப்படுத்தி, எப்போதும் தன்னையே
பெரிதெனச் சொல்லும்
மனிதரின் குடுமி,கர்வத்தின்
கையிலிருக்கிறது என்று
பொருள்.
----------
மற்றவரை மட்டம் தட்டி
இன்பம் காணுவோரின் கர்வம்
அடக்கப்படும் என்பதற்கு
உதாரணமாய் ஒரு கதை
கேட்டதுண்டு.
ஒடுங்கிய பாலமொன்றில்
நல்லவனொருவன் நடந்து
வந்து கொண்டிருந்தான்.
எதிரே, கர்வம் பிடித்தவன்
ஒருவன் வந்து
கொண்டிருந்தான்.
வந்தவன்,நல்லவன் செல்ல
வழியில்லாமல் பாதையை
அடைத்துக் கொண்டு நின்றான்.
நல்லவன் அமைதியாகக்
கேட்டான்.."எனக்கு வழி
விடுகிறாயா?"
கர்வி கொக்கரித்தான்.. "நான்
முட்டாள்களுக்கு வழி
விடுவதில்லை.."
நல்லவன் அமைதியாக..
"ஆனால்,நான்
முட்டாள்களுக்கு வழி
விடுவதுண்டு" என ஒதுங்கி
நின்றான்.
---------
கதையின் நல்லவனைப்
போலவே இந்தப் பாடலில்
நடிகர் திலகம், திறமையால்
கர்வம் அடக்கும் அழகை
சுவாரஸ்யமாக ரசிக்கலாம்.
மின்னும் ரோஸ் நிறச்
சட்டையும், மீசை இல்லாத
உதடுகளில் திறமைப்
புன்னகையும், அட்டகாசமான
அமர்வும், தோள்கள் உருட்டி,
திசைகள் அத்தனைக்கும் தன்
திருமுகத்தின் பாவனைகள்
காட்டும் பேரழகும்..
நடிகர் திலகம், வெகு சுலபமாய்
நம் நெஞ்சில் குடியேறுகிறார்.
உதடு பிதுக்கி, முகத்தைக்
கோணலாக்கிக் கொண்டு
"குப்பா.. முனியா" என்று
அடியாட்களை அழைக்கும்
வழக்கமான வில்லத்தனங்கள்
இல்லாத, வித்தியாசமான
வில்லன் பாத்திரங்கள்,அமரர்
நம்பியார் சாமிக்கு நடிகர்
திலகத்தின் படங்களில்தான்
கிட்டின என்றே சொல்லலாம்.
"இதில் தேவை என்ன
பக்கமேளம்?" - ஆணவ த்வனியில் நம்பியார் பாட..
வாசிப்பை நிறுத்தி,
மிருதங்கத்தை நிமிர்த்தி
வைத்து விட்டு, வெற்றிலைச்
செல்லம் திறந்து சாவகாசமாய்
பாக்கு மெல்லும் அழகு..
வேறு யார் செய்தாலும்
வராது..
நடிகர் திலகம் தவிர்த்து.
---------
கர்வங்கள் ஒடுங்கிய நாளைய
சுத்தமான காலவெளியில்
கேட்கத்தான் போகிறோம்..
அய்யாவின் நம்பிக்கை
வாசிப்பை..நிரந்தரமாய்.
https://youtu.be/grg1KgK0r8I
-
சிவாஜி பாட்டு-22
-------------------
நெருக்கியடிக்கும் திருவிழாக் கூட்டத்தில் வெயிலில் அலைந்த களைப்பு தீர
மரத்தடி நிழலில் நின்று பருகும் இளநீர் தரும் ஒரு
குளுமையை...
சத்தம், சாப்பாடு,சந்தோஷம்
எல்லாமே கொஞ்சம் அதிகமாக
காணப்படுகிற கல்யாண வீட்டு
களேபரத்திலும், பெண்ணைப்
பெற்றவனின் மனம் காணும்
நிம்மதி மிகுந்த மௌனத்தை..
மடித்துக் கட்டிய வேட்டியும்,
பனியனை வெளிக் காட்டும்
மெல்லிய ஜிப்பாவும், கண்களில்
கனலும், நீட்டி முழக்கிப் பேசும்
பேச்சுமாய் நடிகர் திலகம்
வாழ்ந்த "கருடா சௌக்கியமா"
படத்தின் வேகப் போக்கினூடே
இந்த மென்பாடலைப் பார்த்த
போது உணர்ந்திருக்கிறேன்.
சில வருத்தங்கள் நம் மனதோடு தங்கி விடுகின்றன.
"வேறு மாதிரியான நல்ல படம்" என்பதற்கான மிகச்
சிறந்த உதாரணப் படமாய்
அமைந்த இந்தப் படம் ஏன்
அதிகமாகப் பேசப்படவில்லை..
போற்றப்படவில்லை..?
- என்கிற வருத்தத்தைப் போல.
ஒரு படம்.அதற்குள் பாடல்களைத்
திணிக்கிற கதைச் சூழல்கள்..
இதெல்லாம்
மீறி இந்தப் படத்தின் கதையோடு
ஈஷிக் கொண்டு
வருகிற இந்தப் பாடலின்
சூழல் அற்புதமானது.
சதையைப் போற்றும் சராசரிப்
பாடல்களிலிருந்து தூரமாய்
விலகிக் கொண்டு, காதலைக்
கண்ணியமாய்ப் பேசுகிறது..
இந்தப் பாடல்.
மெல்லிசை மாமன்னர் இந்தப்
பாடலின் மென்மையில்
வாழ்கிறார்.
அரிதான, இனிமையான
சசிரேகாவின் குரலை
நமக்கும், காற்றுக்கும் மிகவும்
பிடிக்கிறது.
"பாடும் நிலா" என்று எஸ்.பி.பி
அவர்களை அழைப்பது சரிதான்
என்று அழுத்தமாய்
நிரூபிக்கிறது இந்தப் பாடல்.
இசை வெளிச்சமற்று இருண்டு
கிடக்கிற நம் இதயங்கள்
ஒளிர, ஒளிர "நிலா" பாடுகிறது.
ரௌடிக் கட்டு விடுத்து,
கண்ணியமான அந்த வேட்டிக்
கட்டல், அடர் நீலச் சட்டை
அணிந்து நடந்து வரும் அழகு,
நடிகர் திலகத்திற்கு மட்டுமே
வாய்த்த அழகு.
" சந்தன மலரின் சுந்தர வடிவில்"என்று பாடத்
துவங்குகிற நிமிஷத்தில்,
மனைவியின் முன் நின்று
ஓர் வளர்ந்த குழந்தை போல்
சட்டையின் கீழ்ப்புறமாய்
நீவி விட்டுக் கொண்டு பாடும்
நடிப்பை இந்தத் தலைமுறை
நடிகர்களெல்லாம் பார்த்துப்
பார்த்துக் கற்றுக் கொள்ள
வேண்டும்.
ஊரையே பயந்து மிரள
வைக்கும் "தீனதயாளு" தன்
அன்பான மனைவிக்கு மட்டும்
தனது சுயரூபம் காட்டாது,
மென்மையானவனாய்க் காட்டிக் கொள்கிற கதைச் சூழலை உள்வாங்கிக் கொண்டு
அவர் வெளிப்படுத்துகிற
நடிப்பில் அசந்து போகிறோம்.
-----------
"மு த் து க் கி ரு ஷ் ணா.."
என்று விரல் சொடுக்கி
அழைப்பதிலும், சிரித்த முகம்
மாற்றாமல் கானம் பாடி
நடப்பதிலும் மயங்கிக் கிடக்க
நாமிருக்கிறோம்.
எது வேண்டுமென்று நாம்
நினைக்கிறோமோ.. அதை
அப்படியே தருவதற்கு அவர்
இருக்கிறார்.
பிறகென்ன..?
https://youtu.be/-FWGP3ubDus
-
சிவாஜி பாட்டு- 23
--------------------
கலைத் தாயே...!
கைகூப்பிச் சொல்வோம்..
நன்றிகளுனக்குக் கோடி.
நீ அருள் தந்தாய்.. உன்னதக்
கலைஞனே மகனாய் உனக்கு
வாய்த்தானடி.
அற்புத நடிப்பைக் கொடுத்துக்
கொடுத்து, அனைவரையும்
தன் பக்கம் சாய்த்தானடி.
சத்தியக் கலைஞனுக்குச்
சாவில்லையென்றிருந்தோம்.
ஒரு ஜூலை-21 ல் ,அதில்
மட்டும் ஏய்த்தானடி.
-----------
இதோ...
உன் தெய்வ மகன் வந்தாடும்
ஓர் திரைப்பாடல் கண்டோமடி.
திரைப்பிம்பம்தானே என
எண்ணாமல், தொட்டுக்
கண்ணிலொற்றிக்
கொண்டோமடி.
ஆயிற்று.. ஒரு நூறு முறை..
இந்தப் பாடலைப் பாடிப் பாடி.
எம் செவிகள் அலைகின்றன..
இப்பாடலையே தேடித் தேடி.
செந்நிற ஆடையில் சிரித்த
முகம் காட்டி,
வெண்ணிற ஆடையில் வந்து
எமது வேதனைகளை தூரம்
ஓட்டி,
கருப்புஞ் சிவப்புமாய் அணிந்த
உடையில் கண் நிறைந்த
எழில் காட்டி..
உன் மைந்தன் வந்தானடி.
இந்தப் பாட்டு போல்
இன்னும் பல பாடல்களில்
மஞ்சுளா ஜோடி.
மன்னவன் அவனுக்கு மயக்கும்
அவன் அழகுதானே
எப்போதும் ஜோடி?
காமமற்ற காதல் காட்டி,
கண் சுருக்கியும், விரித்தும்
கலைகள் காட்டி,
உதடு சுழித்து, உடலை
நிமிர்த்தி,
கைகள் முன்னே நீட்டி,
பூமுகத்துப் புன்னகையால்
நம் துயர்கள் விரட்டி,
புதிது புதிதாய் கலை
செய்து
எங்கள் அன்பைத் திரட்டி...
கலைத் தாயே..!
கைகூப்பிச் சொல்வோம்...
நன்றிகளுனக்குக் கோடி.
உன்னருளால் எங்கள்
சந்தோஷ பூமிக்கு...
தேவன் வந்தான்டி.
https://youtu.be/DngO2_1GL6M
-
சிவாஜி பாட்டு- 24
-------------------
பாடலென்கிற பேரில் வந்த ஒரு
கவிதைக்கு, நடிகர் திலகம்
என்கிற கவிதை வாயசைத்து
நடித்த அதிசயம் 1987-ல்
நடந்தது.
தந்தைக்கும்,மகளுக்குமான
அதீத பாச உணர்வுகளை
மையமாகக் கொண்ட படங்கள்
ஜெயிக்கிற காலத்தில்
இருக்கிறோம். ஒரே ஒரு
பாடலுக்குள்ளேயே அத்தகைய
உணர்வுகளை உள்ளடக்கி
நம் இதயம் வென்ற இப்பாடல்
வியப்புக்குரியது.
------------
நடிகர் திலகத்தின் மனத்தின்
நிறம் கொண்ட தூய வெள்ளைக் கால்சட்டை, அடர்சந்தன நிறத்தில் அதனுள்
நுழைத்த மேல்சட்டை, நடிகர்
திலகத்தின் துணையோடு
நடக்கும் அவரது வாக்கிங்
ஸ்டிக்...
மாறிக் கொண்டேயிருக்கிற
காலத்திற்கேற்றாற் போல்
தன்னைப் புதுப்பித்துக்
கொண்டேயிருந்திருக்கிறார்..
நடிகர் திலகம்.
அதனால்தான் கடினமான தமிழ்
மற்றும் இசை இலக்கணத்திற்கு உட்பட்ட
பழங்கால நாடக,திரைப்படப்
பாடல்களுக்கு வாயசைத்து
நடித்த அவரால், இந்தப்
புதுக்கவிதைக்கும் கூட
அழகூட்ட முடிந்திருக்கிறது.
--------------
இறந்த காலத்தில் இருந்ததாய்
கதையில் சொல்லப்படும் ஒரு
இறக்காத இல்லற வாழ்வின்
அன்பை ஒரு அழகான
கவிதைக்குள் சுருக்கி விட்ட
கவிப்பேரரசு வைரமுத்து,
இனிமையாய் இசையூட்டிய
சங்கர்-கணேஷ்,
அப்பாவும், பெண்ணுமாகவே மாறி விட்ட எஸ்.பி.பி-ஷைலஜா...
மகளாக நடித்த நதியா..
எல்லோரும் வியப்புடன்
வாழ்த்துவதற்குரியவர்கள்.
-----------
"அன்புள்ள அப்பா..
உங்கள் காதல் கதையைக்
கேட்டால் தப்பா?"
-தந்தையென்றாலும்
பண்போடு அனுமதி கோரும்
மகளை, கேட்பது காதல் குறித்து
என்பதால் "பொல்லாத
பெண்ணப்பா" என்று
செல்லமாகக் கடிந்து கொள்வது
ஒரு அழகு.
--------------
மகள் கேட்கிறாள்..
"அப்பா..
நீங்கள் அம்மாவைப் பார்த்தது
எப்போது?
ஞாபகம் உண்டா இப்போது?"
ஆர்வமாய் பதில் சொல்கிறார்
தந்தை...
"முதல் முத்தத்தையும்
முதல் காதலையும்
மறக்க முடியாது மகளே..
அவளை நான் பார்த்தது
மலர்கள், வண்டுகளுக்குப்
பேட்டி கொடுக்கும்
ஊட்டியில்."
"அவளை நான் பார்த்தது.."
என்று துவங்கி, "ஊட்டியில்"
என்று முடிக்கும் வரைக்கும்
இடைவிடாமல் பாடல்
பாடப்படுகிறது.. ஆனால்..
அதிலும் 'எங்கே முதன்முதலில் பார்த்தோம்?'
என்று யோசிப்பதாய் அவர்
காட்டும் பாவனை ஒரு அழகு.
--------------
"அந்த மலர்க்காட்சியில்
அழகான பூவே
அவள் மட்டுந்தானே"
எனும் போது காட்டும்
பெருமிதம் ஒரு அழகு.
--------------
"பூக்களெல்லாம்
அவள் கனிந்த முகம் காண
நாணிக் கோணி
குனிந்து கொண்டன."
-எனப் பாடுகையில்
நாணியும்,
கோணியும் இவர் செய்யும்
அசைவுகள் அழகு.
-------------
"உங்கள் மணவாழ்க்கையில்
மலரும் நினைவுகள் உண்டா?"
-மகள், பழைய நினைவுகளைத்
தட்டி எழுப்பி விடுகிறாள்.
"நான் தாயிடம் கூட
பார்த்ததில்லை அந்தப் பாசம்.
அவள் நினைவுகளே
என் சுவாசம்."
-எனும் போது தனக்குள்
தானே கரைந்து போய்..
"அன்புள்ள அப்பா" எனும்
மகளின் குறும்புக் குரல்
கேட்டு சோகத்திலிருந்து உடனே தன்னை விடுவித்துக்
கொள்வது ஒரு அழகு.
----------------
"அப்பா..
அம்மா உங்களை
நல்லா கவனிச்சுக்கிட்டாங்களா?"
-மகளின் ஆசைக் கேள்வி.
துள்ளிக் குதித்து வரும்
பதில்..
"சேலையில் எனது
முகம் துடைப்பாள்
நான் சிணுங்கினால்
செல்ல அடி கொடுப்பாள்.
விரல்களுக்கெல்லாம்
சுளுக்கெடுப்பாள்.
என் நகக்கண்ணில் கூட
அழுக்கெடுப்பாள்."
-சுளுக்கெடுப்பதையும்,
அழுக்கெடுப்பதையும் கூட
அந்தந்த வரிகளைப்
பாடுகையில் மகளிடம்
ஆர்வமாகச் செய்து
காட்டுவார்.
எப்படி சுளுக்கெடுப்பது,
எப்படி அழுக்கெடுப்பது
என்றெல்லாம் தெரியாத
வயதில்லை..மகளுக்கு.
இருப்பினும், மனைவியால்
தான் பெற்ற மகிழ்வான
அனுபவங்களை மகளுக்கு
விளங்கச் செய்வதில் இருக்கும்
குழந்தைத்தனமான வேகம்
ஒரு அழகு.
---------------
இரண்டே கண்கள்.
"தாயாய் அவளைப்
பார்த்ததுண்டு" -என்று
பாடினால், அவற்றில் தாய்மை
ததும்புகிறது.
"ஒரு தாதியாய் அவளைப்
பார்த்ததுண்டு"- என்று
பாடினால், அவற்றில் கருணை
கசிகிறது.
"ஒரு தேன் குடமாய்
அவளைப் பார்த்ததுண்டு"
-என்று பாடினால் அவற்றில்
இனிமை வழிகிறது.
ஆச்சரியத்துக்குரிய அந்தக்
கண்கள் அழகு.
---------------
அன்பான மனைவியைப்
பிரிந்த வேதனை தாங்காமல்
அவர் அழுதுகொண்டே பாடும்
பாடலின் கடைசி வரிகள்..
"என் வானத்தில்
விடிவெள்ளி எழுந்தது..
வெண்ணிலவு மறைந்தது."
இறைவா...!
நடிகர் திலகமென்கிற
வெண்ணிலவையும்
பறிகொடுத்து விட்டு
பரிதாபமாய் இருண்டிருக்கும்
எங்கள் வானத்தில்
எப்போது விடியல் தருவாய்?
https://youtu.be/yXnbMxFpT7A
-
சிவாஜி பாட்டு- 25
-------------------
* "அமாவாசை எப்போ.?"
என்று பாட்டி கேட்ட போது
உன்னைத்தான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
நிலவே..!"
* " நேரங்கெட்ட நேரத்தில்தான்
வந்து தொலைக்கிறது
இந்தக் காதல்..
நூலக அமைதியில்
தும்மலைப் போல.
- இந்த மாதிரி நிறைய காதல கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
நிறையப் பேர் பாராட்டியிருக்கிறார்கள்.
" நீ போட்ட காதல் வகுத்தலில்
எனக்குக் கிடைத்த
ஈவு : கண்ணீர்.
மீதி : உயிர்."
-என்கிற என் கவிதையைப்
படித்து விட்டு, ஒரு சிலர்
"உனக்கு காதல் தோல்வியா?"
என்று கூடக் கேட்டிருக்கிறார்கள்.
காதலை எழுதி, எழுதி.. எனக்கும் காதலுக்குமான
காதல்தான் அதிகமாயிற்றே
தவிர, என் காதல் படித்துக்
கோபமுற்று "ராஸ்கல்" என்று
பல் கடித்து, செருப்பு கழற்றிக்
காட்டுவதற்குக் கூட ஒருத்தி
எனக்கு வாய்க்கவில்லை.
மென்மையும்,மேன்மையுமாய்..
இனிமையும், இதமுமாய்..
இந்தப் பாடல் பார்க்கக் கிடைத்த போது, இப்படிப் பாடிய
சந்தோஷிக்கவாவது ஒருத்தி
எனக்குக் கிடைத்திருக்கலாம்
என்று ஏக்கமாய்ச் சிந்தித்திருக்கிறேன்.
------------------------------
இருளில் மிதக்கும் இரவு.
இரவில் மிதக்கும் நீர்நிலை.
நீர்நிலையில் மிதக்கும் படகு.
படகில் மிதக்கும் காதல்.
காதலோடு அதில் மிதக்கும்
காதலர்கள்.
அழகே உருவாக கலைச் செல்வி.
அசத்துவதன்றி வேறொன்றறியாக் நடிகர் திலகம்.
கண்களைச் சிரிக்கச் செய்து
விட்டு, நம்மை வேடிக்கை
பார்க்கிற அவரது குறும்பு.
மெல்லிசை மாமன்னர் தந்த,
இனிப்புச் சாறு உள்வைத்த
பாட்டுக் கரும்பு.
இந்தப் படத்தில்தான் இந்தப்
பாடலென்பதறியாமல்
"தர்மம் எங்கே" படத்தினூடே
இந்தப் பாடல் பார்த்த சந்தோஷம்...
கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கையில், தபால்காரர்
"மணி ஆர்டர்" தந்தது போன்ற
சந்தோஷம்.
https://youtu.be/XiSD-cp9KgU
-
சிவாஜி பாட்டு-26
------------------------------
"என் மகன்" படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று உண்டு.
படத்தின் கடைசியில், திரையை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் நடிகர் திலகம் அழகாய் "டாட்டா" காட்டிக்
கொண்டிருக்கையில், "வணக்கம்" என்ற வார்த்தை
வண்ணமாய் வந்து குறுக்கே நிற்கும்.
ஜெயிக்கிற விஷயத்தில் எனக்கு வணக்கமே கிடையாது என்கிற கருத்தில் நடிகர் திலகம்
அந்த வணக்கத்தை நிறுத்திப் பிடித்து வந்த வழியே தள்ளி விடுவார்.
ஆம்.
ஜெயிக்கிற விஷயத்தில் அவருக்கு வணக்கமே கிடையாது என்பதை இந்த "உத்தமன்'பாடலும் ஒரு முறை நிரூபிக்கிறது.
ஒடுங்கிய வாசலோடு உசரத்தில் இருக்கும் கோயிலின் படிகளில் இருந்து அழகுத் துணையோடு இறங்குவதில் துவங்கி, இன்னொரு அழகான இடத்தின் படிகளில் ஏறுவதோடு முடியும்
இந்தப் பாடலும் முடியும் நிமிஷத்தை வெறுக்க வைக்கும்.
பின்னங்கை கட்டிக் கொண்டு எந்தப் பிடிப்புமில்லாமல் அந்தரத்தில் ஒரு கால் உயர்த்தி நிற்பது அழகு.
கேமராவை நோக்கி சிரித்தபடி திரும்புகையில் கொஞ்சம் கூட செயற்கை சேர்க்காத அந்தப்
புன்னகை முகம் அழகு.
கொஞ்சம் பின் நகர்ந்தால் பாதாளம் காட்டுகிற உயரமான அந்த சதுரப் பரப்பில் காதலி
வெட்கத்தால் ஓடுகையில் குறுக்கே கால் நீட்டி மறித்து அவள் வேகம் மட்டுப்படுத்துகிற குறும்பு அழகு.
"பூமியெங்கும் பச்சைச் சேலை"பாடத் துவங்கும் போது தலை சிலுப்புவது அழகு.
கழுத்து சுற்றிய வெளிர் நீல நீள் துண்டு அழகுக்கு அழகு சேர்க்க, ஒயிலாய் உடல் வளைத்துக் குனிந்து காதலியின் கால், கையென தாளம் இசைப்பது அழகு.
வளைந்து, நெளிந்து நடந்து வந்து, தலை ஒருபுறமாய்ச் சாய்த்து, ஆளை அப்படியே
தூக்கிக் கொண்டு போகிற ஒரு சிரிப்பைத் தனது இதழ்களிலே தவழ விடுவதும்...
கழுத்துத் துண்டின் நீளமான ஒற்றை முனையைப் பற்றிச் சுழற்றிக் கொண்டு வேக நடை
நடப்பதும் அழகு.
அழகென்ற சொல்லுக்கு இலக்கணமாக அய்யன் நடிகர் திலகத்தை ஆண்டவன் படைத்தது அழகு.
அந்த அழகு முகத்தை ஆயுசுக்கும் ரசிப்பதற்கு அந்த ஆண்டவனே நம்மைப் படைத்ததும் அழகு.
http://youtu.be/yvf6SCQQA3A
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு- 27
-------------------------------
முல்லா கதைகளில் படித்த ஞாபகம்.
எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் மனைவி,
வேலை முடித்துத் தினமும் மாலையில் வீடு திரும்பும் கணவனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகிக்கிறாள்.
அதற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்கக் கூடும் என்று தினமும் கணவன் கழற்றிப் போடுகிற உடைகளைக் கவனமாக ஆய்வு செய்கிறாள்.
கணவனுக்கு முடி கொட்டும் வியாதி உண்டு. அவனது வெள்ளைச் சட்டையில் விழும்
கறுப்பு நிற தலைமுடியை வைத்து சந்தேகத்தை உறுதி செய்து வசவு பாடத் துவங்கினாள்.
கணவன் ஜாக்கிரதையானான்.
தினமும் வேலை முடித்துக் கிளம்பும் போது சட்டையைக் கழற்றி கறுப்பு முடி ஒட்டிக்
கிடக்கிறதா என்று நன்கு பரிசோதனை செய்த பிறகே புறப்பட்டான்.
அவனுடைய போதாத வேளை,ஒருநாள் அவனது நரைமுடி ஒன்று அவனது வெள்ளைச் சட்டையில் விழுந்து, அவனும் கவனிக்காமல் வீடு வந்து சேர்ந்தான்.
மனைவிக்காரி பார்த்து விட்டுப் பத்ரகாளியானாள்.
"போயும் போயும் ஒரு வயதான பெண்மணியுடனா தொடர்பு வைத்திருக்கிறாய்...?"
கணவன் நொந்து போனான்.
மறுநாள் மிகக் கவனமானான்.
வெள்ளைச் சட்டையைக் கழற்றி அங்குலம், அங்குலமாய்ப் பரிசோதித்து,பத்து முறை சட்டையை உதறி, சட்டையில் கறுப்பு முடியோ,
நரை முடியோ இல்லையென்று உறுதி செய்த பிறகே வீடு திரும்பினான்.
மனைவி வழக்கம் போல சட்டையை ஆய்வு செய்தாள்.அங்குலம், அங்குலமாக ஆராய்ந்தாள். உன்னிப்பாய் உற்றுப் பார்த்தாள். சட்டையில்
எந்த முடியும் இல்லையென்று அறிந்தாள்.
கண்களில் கனல் தேக்கி கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். கேட்டாள்.
"இப்போது ஒரு மொட்டைத்
தலைப் பெண்ணோடு உறவு
வைத்திருக்கிறாய்..இல்லையா?"
*******
சந்தேகம் மட்டுமல்ல, தவறான புரிதல், பிடிவாதம், கர்வம் என்று மோசமான குணமுள்ளவள் மனைவியாக வாய்த்தால், அந்த ஆண்மகனின் வாழ்க்கை அவலப்பட்டுப் போகிறது.
பெய்த பெருமழையில் கரையுடைத்து ஓடும் வெள்ளமாய் வாழ்வோடு ஓடிக் கொண்டிருந்தனை கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்தவள்
கதறக் கதறக் கலங்கடிக்கும் போது, காயப்பட்ட மனசிலிருந்து பீறிட்டுப் பாயும் கவலை ரத்தம் இந்தப் பாடல்.
ஏட்டுப் படிப்பில்லாத அப்பாவித்தனத்தையும், நற்குணங்களால் நல்லவற்றைப் படித்துத் தேர்ந்த
முதிர்ச்சியையும் ஒரே முகத்தில் பிரித்துக் காட்டுவதற்கு நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.
"காட்டு மானை வேட்டையாடத்
தயங்கவில்லையே..
இந்த வீட்டு மானின் உள்ளம்
ஏனோ விளங்கவில்லையே."
ஏகப்பட்ட பயங்கரங்கள் பல்லிளிக்கும் காட்டுக்குள்ளேயே சாதித்து வந்தவன், வீட்டுக்குள் ஒரு அழகான பெண்ணிடம் பயந்து, அவமானப்பட்டுக் கூனிக் குறுகிக் கிடக்கிற அவலத்தை ஒரு நான்கு நிமிஷப் பாடலுக்குள் விளக்கி விடுவது, நடிகர் திலகம் தவிர வேறு
யாராலும் சாத்தியமானதல்ல.
அந்த திறமை முகத்தில் மனைவியால் பட்ட அவமானத்தை அப்பட்டமாய்க் காட்டும் வருத்தமும் தெரியும்.
"அவள் மேல்தான் தவறு. நான் நல்லவன். கூனிக் குறுக எனக்கு அவசியமில்லை"- என்பதான ஒரு ஆண்பிள்ளைத் திமிரும் தெரியும்.
பாடலின் இடையில் ஒரு முறை எழுந்து நின்று "ஆ..ஆ" என்று சோம்பல் முறித்து, கைகள் நீட்டி வளைத்து, உடம்பை நெளித்து...
இது போன்ற பாவனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் பின்புறத்தை கேலியாக ஆட்டிச்
செல்வது...
அவரைப் பிடிக்காதவர்கள் அவர் மேல் வைக்கும் விமர்சனங்களுக்கு, அவர் காட்டும் பழிப்பு.
கலையுலகில் படிந்த இருட்டையெல்லாம் அவரது
திறமை வெளிச்சம் பாய்ந்து செய்யும் அழிப்பு.
அய்யா நடிகர் திலகம் சார்ந்த அத்தனை உன்னதங்களையும் விளக்கி விட...
"நான் கவிஞனுமில்லை.
நல்ல ரசிகனுமில்லை."
http://youtu.be/o17JQ6TWP30
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு-28
------------------------------
இதோ...
திருட்டுப் பயல் பிறக்கிறான்.
செப்பு வாய் திறந்து சிரிக்கிறான்.
கண்ணன் என்கிற கிருஷ்ணன் என்கிற கோவிந்தன் என்கிறகோபாலன் என்கிற மாதவன்
என்கிற முகுந்தன் என்கிற ரமணன் என்கிற மதுசூதனன் என்கிற...
அந்த மாயவன்-
யுகம் யுகமாய் நீண்டு கொண்டே போகும் கடவுளுக்கும்,மனிதருக்குமான இடைவெளியை இல்லாதொழித்தவன்.
அவனது திருக்கரங்கள் சும்மா மாய மந்திரம் செய்து கொண்டிராமல், தன் பாதத்தில் விழுந்து வேண்டியவனின் தோளில் சிநேகமாய் விழுந்தவை.
மற்ற கடவுளரெல்லாம் வேதப் புத்தகம் போல்,பாடப் புத்தகம் போல் மிரட்டலாய் நின்றிருந்து பயங்காட்ட, இவன் சுவாரஸ்யமான கதைப் புத்தகம் போல் எல்லோருக்கும்
பிடித்துப் போனான்.
கண்ணன்-
குழந்தையாய்க் குறும்பு, வாலிபனாய்க் காதல் சேட்டைகள், அகம்பாவங்களை அறிவாயுதம் கொண்டு சாய்க்கிற புத்திசாலித்தனம் என்று இயல்பு விலகாமல், யதார்த்தம் சிதையாமல், வித்தை காட்டாமல் நம் மனம் நிறைந்த கடவுள்.
வாயெல்லாம் வெண்ணெய் வழிய தவழ்ந்த நிலையில் இவன் சிரிக்கும் படம் பார்த்தால் கும்பிடக் கூடத் தோணாது மனம் நிறையும்.
அவன் சிரிக்கிற சிரிப்பே நம்
மனக்கஷ்டங்களை "லபக்"
என்று விழுங்கி விடும்.
******
'தெய்வமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று நாம் கண்ணனைக் கொண்டாட...
'நடிகனென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்பதான அடையாளமாயிருக்கிற நம் நடிகர் திலகம், கண்ணனைக் கொண்டாட...
அழகான பாசுரம், அருமையான பாடலாயிற்று.
நிமிர்ந்து அமர்ந்திருக்கிற அமர்வே கம்பீரந்தான். பலகையிட்டு அமர்ந்ததில் இன்னும் கொஞ்சம் உயரப்படும் போது.. கம்பீரமும் உயர்கிறது.
நடு நெஞ்சில் கைகள் குவியும் கும்பிடல், அய்யனுக்கொன்றும் புதிதில்லை. "வெற்றி வடிவேலனே" பாடும் கட்டபொம்மன் கிட்டத்தட்ட
இப்படித்தான் கும்பிடுகிறார்.
ஒரே விதமான கும்பிடலை கட்டபொம்மனுக்கு வீரமாகவும், விப்ர நாராயணருக்கு பக்தியாகவும்
வித்தியாசப்படுத்தி செய்வது நடிகர் திலகத்தால் மட்டுமே ஆகிற காரியம்.
அழகென்பது ஒப்பனையால் மட்டும் உண்டாவதா? இல்லை என்கிறது அள்ளி முடித்த கொண்டைச் சிகை விட்டுத் துள்ளி நெற்றியில் சுருளும்
ஒற்றைக் கொத்து முடி.
"ஆ..ஊ" என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினால்தான் ஒரு நடிகன், பல கோடி ரசிகர்களைத் தன் வசம் ஈர்க்க முடியுமா? இல்லை.. ஒரு ரெண்டு நிமிஷப் பாசுரத்துக்கு அமைதியாக, அம்சமாக வாயசைத்தே ஈர்க்கலாம் என்கிறார் அய்யன்.
ஆண்டவன் அடியவர்களின் நடையழகும் அழகு மங்கையரை வியந்து வணங்க வைக்குமா..? 'வைக்கும்' என்கிறது... "காரொளி வண்ணனே" என்று பாடி வருகையில் அய்யன் புரியும்
நளினத்தையும், ராஜம்பீரத்தையும் சமவிகிதத்தில் கலந்து செய்த அந்த அழகு நடை.
******
இதோ..
திருட்டுப் பயல் பிறக்கிறான்.
செப்பு வாய் திறந்து சிரிக்கிறான்.
அன்பு தெய்வமவன், துணைக்கொரு கலை தெய்வத்தையும் கூட்டி வந்து, பாடலென்கிற பேரில், வைகுண்ட ஏகாதசி இல்லாமலே சொர்க்க வாசல் திறக்கிறான்.
http://youtu.be/Pfgfff_MZ00
Sent from my P01Y using Tapatalk
-
சிவாஜி பாட்டு-29
------------------------------
இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்கு "இனிப்புக் கடை"என்றே பெயரிருப்பதை எங்கோ பார்த்தேன்.
அழகான ஒரு திரைப்பாடல் "அழகே வா" என்றே துவங்குவதை "ஆண்டவன் கட்டளை"யில் கேட்டேன். பார்த்தேன்.
******
ஒரு இளம் பெண், அந்த வயதிற்கே உரிய வேக, தாகங்களோடு பாடும் மென்பாடல்களென்றால் எழுபதுகளின் இறுதியில் உருவான இசைஞர்கள் உருவாக்கிய பாடல்கள்தாம் என்கிற கருத்தே என் காலத்தில் ( வதந்தியாய் ) பரவியிருந்தது.
அதற்கு உதாரணமாக அவர்கள் சுட்டிக்காட்டிய பாடல்களில் மெட்டும்,இசையும் என்னவோ
பிரமாதப்பட்டாலும், பாடலின் காட்சிகள் சகிக்க முடியாமலே இருந்தன.
குளத்தோரமாய் ஒரு குடம் தண்ணீர் மொள்ள வந்தவள் காரணமே இல்லாமல் கவர்ச்சியாயிருந்த கண்றாவித்தனங்கள் ஒரு இனிமையான மெட்டைப் போர்த்தி மறைக்கப்பட்டன.
காற்றை விட மென்மையான ஒரு சங்கீதக் குரல் பின்னொலித்த பாடலில், கணவனை விடுத்து கண்டவனோடு காட்டுக்குள் அலையும் ஒரு அபத்தப் பெண்ணே காட்சிப்படுத்தப்பட்டாள்.
ஒரு திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக்காக, கதையும், காட்சிகளும் பாடலின்
போக்கில் திசைமாறி அலைந்த கொடுமைகளும் நிகழ்ந்தன.
அப்படிப்பட்ட பாடல்களுக்கெல்லாம் பழிப்புக்
காட்டியது... இந்த "அழகே வா" பாடல்.
******
பசித்த பின் உணவருந்துவது போன்ற ஒரு முறையும், ஒழுங்கும்... கதைக்கேற்றபடி
பாடல் உருவாக்குகிற மெல்லிசை மன்னரிடமே இருந்ததென்பேன்.
கதாநாயகன் வாலிபன். என்றாலும் ஒழுக்கசீலன்.
கற்றறிந்த பண்டிதன். நிறைய மாணவர்களுக்கு பாடம் போதிக்கிற ஆசிரியன்.
கதாநாயகி இளம்பெண். கல்லூரி மாணவி. ஆசிரியராயிருக்கிற நாயகனிடமே பயில்கிறவள்.
ஒழுக்கக் கட்டுப்பாடுகளோடு உயர்ந்த வாழ்க்கை வாழும் நாயகன், தன்னிடம் பயிலும் மாணவியின் வசம் தன்னை கொஞ்சம், கொஞ்சமாய் இழப்பதை அழகாகச் சொல்கிறது இந்தப் பாடல்.
கொஞ்சம் அசந்தால் நாயகியை அலைகிறவளாகவும், நாயகனை வழிகிறவனாகவும் காட்டி விடுகிற கதைச் சூழல்.
காட்சிச் சூழல்.
காவியமாக்குகிறார்கள்...நடிகர் திலகமும், தேவிகாவும்.
கடற்கரையைக் கல்லூரியாக்கி மாணவி, ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறாள்.
"அழகே வா" என்று தேன் தடவி நீளும் குரலில்தான் இறைவன் வாழ்கிறான்.
வேறு விதமாய் கண்ணியமாய் வாழ்ந்தவனை இன்றைய காதல் பாடாய்ப் படுத்துவதை
அப்பட்டமாய்க் காட்டுவதற்கு நடிகர் திலகத்தின் கண்களைத் தவிர வேறு கண்களுக்குச்
சக்தி கிடையாது.
ஒரு உயரமான பாறை. அதன் பின்னே உயர்ந்து வளர்ந்த தென்னை மரம். பாறையில் இறுகிய, குழம்பிய நடிப்பு பாவங்களுடன் நடிகர் திலகம்
நிற்கிறார். சட்டென்று தென்னை மரத்தை விட அவரே உயர்ந்து தெரிகிறார்.
பழைய ஒழுக்கமான வாழ்க்கையா..? பாழாய்ப் போன காதலா..? என்று மனம் கொள்ளும் தடுமாற்றமென்பது பாவனைகளால் விளக்கி விட
முடியாத உணர்ச்சி.
பூதம் பார்த்து மிரண்ட ஒரு குழந்தையின் பயந்த பார்வை, பின் திரும்பி நின்று முதுகு காட்டி நிற்கையில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாததை வெளிப்படுத்தும் விதமாய் வலது கையை மூடி
இறுக்கி தன் தொடையில் குத்திக் கொள்வது, அழகானவள் அழகாய்ப் பாடிக் குளித்துக்
கொண்டிருக்க, விலகி நடக்க முன் வைத்த காலும், தயங்கி மீண்டும் பின் திரும்பும் காலுமாய் ஒரு பாவனை...
இப்படி சின்னச் சின்ன பாவனைகள் கொண்டே அந்த உணர்ச்சியை விளக்கி விடுவது... நடிகர் திலகத்தின் மூலமாக நமக்குக் கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்பது..
ஆண்டவன் கட்டளை.
http://youtu.be/3lIpebdRTw0
Sent from my P01Y using Tapatalk