PDA

View Full Version : kaditham



venkkiram
8th June 2009, 12:33 AM
கடிதம்

யாரும் என்னைப் பார்க்காத முடியாத இடமாக அமர்ந்து அந்த காகிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என படிக்க ஆரம்பித்தேன்.

----.----
செல்லம்..

உன்னோட அம்மு எழுதுறேன். என்னை மன்னிச்சிடுடா. இந்த ஜென்மத்துல நம்ம காதல் ஒன்னு சேராதுன்னு நினைக்கிறேன். நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்குடா. உன்னை பார்த்து இன்னையோட சரியா முப்பதேழு நாள் ஆகுதுடா. நீ என்ன பண்ற? எப்படி இருக்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்குடா. நீ என்ன பார்க்க ரொம்ப ஆர்வமா இருப்பன்னு எனக்குத் நல்லாத் தெரியும். என்னால உனக்கு ஆரம்பத்திலிருந்து எவ்வளவு வலி. ஆனா அதெல்லாம் தாங்கிட்டு நீ கடைசி வரை நம்மோட காதலை விட்டுக்கொடுக்காம போராடினாயே. அதை நெனைச்சா தாண்டா ரொம்ப பெருமையா இருக்கு. ஆனா நம்மோட எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்பா, அம்மா, பெரியப்பா எல்லாரும் அவசர அவசரமா என்னை வேற ஒருத்தன் கிட்ட பிடிச்சி கொடுக்கலாம்னு சுடுதண்ணியை கால்ல ஊத்திகிட்டு நிக்கிறாங்க.வீட்டுல என் கிட்ட யாரும் எதை பத்தியும் பேசுறதில்லை. தனி அறையிலே அடைச்சி போட்ருக்காங்க. பாட்டிதான் பொழுது சாஞ்சா என்னோட அறைக்கு தூங்க வருவா. அவகிட்டேயிருந்து தான் எனக்கு மாப்பிள பார்க்கறாங்கன்னு தெரிஞ்சிகிட்டேன். இந்த உலகத்துல நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்றது யாருக்கும் பிடிக்கல பார்த்தியா. கேட்டா சாதி வேறன்னு சொல்றாங்க. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா இந்த மண்ணுல பிறக்கவே கூடாதுடா செல்லம். எங்கையாவது ஓரு இடத்துல , இது போல சாதி வெறி புடிச்ச ஜனங்க இல்லாத இடத்துல பிறக்கணுன்டா. அப்படி பிறந்து ஆயுசு முழுசும் காதலித்து, கல்யாணம் பண்ணி, நிறைய குழந்தைய பெத்துக்கணும். ம்ம்.. குழந்தைன்னு சொல்ற போதுதான்

----.----

(எச்சில் முழுங்கி அடுத்த பக்கம் திருப்பி படிக்க ஆரம்பித்தேன்)

----.----

ஞாபகம் வருது. நமக்கு இந்த சோதனையான நேரத்திலும் ஒரு இனிப்பான சேதி. ஆமாம். நான் முழுகாம இருக்கேன். இதைக்கேட்டா நீ எவ்வளவு சந்தோஷப்படுவே. பதினைந்து நாள் முன்னாடிதான், ஒரே அசதியா இருந்து, வாந்தி எடுத்த போது, பாட்டி பார்த்துட்டு, அம்மாகிட்ட வத்தி வச்சிடுச்சி. கோபப்பட்டு அடிச்சாங்க. அப்பா கிட்ட சொல்லப் போறேன்னு போனவங்க கிட்ட, நாந்தான் கால்ல விழுந்து , "அப்படியெல்லாம் சொல்லிடாதிங்கம்மா. அப்புறம் அவர அப்பா உயிரோட வைக்கா மாட்டாரு. நான் நீங்க சொல்ற மாதிரி இனி கேட்டுக்கிறேன்" ந்னு காலைப்புடிச்சி அழுதேன். "சரி, இந்த வாரம் சனிக்கிழமை அப்பா சந்தைக்கு கிளம்பின பிறகு ஆஸ்பத்திரிக்கு போய் கருவை கலைச்சிட்டு வந்திடலாம்"னு சொல்லிட்டு போயிட்டாங்க. வயித்துல வளற சிசுவை கலைச்சிட்டு இன்னொருத்தவன் கிட்ட கழுத்த நீட்ட எனக்கு பிடிக்கலடா.. அப்படி செஞ்சா அது நான் உனக்கு செய்ற பாவம். கிடைச்ச ஒரே ஒரு சந்தர்ப்பத்தை சரியா நம்ப ரெண்டு பேரும் பயன் படுத்தி ஊர வீட்டு ஓடிப் போயிருந்தா, இந்த நேரம் எப்படியோ வாழ்ந்திருக்கலாம். அதை தவற விட்டுட்டு இப்போ நாம ரெண்டு பேரும் இப்படி அவஸ்தை படுறோம். இப்போ நீ எங்க இருக்க? எங்க அப்பா, பெரியப்பாவால ஏதாவது பிரச்சனை, இடஞ்சல் உனக்கு வந்ததா? நான் இங்கே தனி அறையில சிக்கி தவிக்கிறேன். எனக்கு வெளி உலகத்தில என்ன நடக்குதுன்னே தெரியல. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இந்த நரக வாழ்க்கை வாழனும்? நான் இவுங்களுக்கு சரியான பாடம் காட்டணுமென்றால் அது என் தற்கொலையாத் தான் இருக்கும். அதனாலதான் யாருக்கும் தெரியாம இன்னைக்கு சாயந்திரம் அப்பா அறைக்கு போய், அலமாறியிலிருந்து தூக்க மாத்திரைகள் இருக்கிற டப்பிய எடுத்துட்டு வந்திடேன். நாளைக்கு விடியக் காலையில இந்தக் கடிதத்தை பால்காரன் கிட்ட எப்படியாவது சேர்த்துட்டு, மாத்திரைகளை முழுங்களாம்னு

----.----

வேர்த்து விறுவிறுத்து விட்டது. என்னை அறியாமலே நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.

இந்தக் காகிதம் இருந்த குமுதத்தை இரண்டு மூன்று முறை உதறி விட்டேன். அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியான தாள் எங்கேன்னு தேட ஆரம்பித்தேன். தேடிக்கொண்டே இருந்தேன். கிடைத்த பாடில்லை. அறையில் போதிய வெளிச்சமில்லாமல் இருள் பரவி கிடந்தது. சுவிட்சை போட்டு பார்த்தேன். நம்ப நேரம், இருக்கிற ஒரே ஒரு நாற்பது வாட் பல்பும் எரியவில்லை.

"மணீ.. டேய் மணீ.." மொதலாளி அவரது அறையிலிருந்து குரல் கொடுத்தது எனக்குக் கேட்டது.

"இதோ வறேன் மொதலாளி" ன்னு அந்த கடிதத்தை மடித்து சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு அவரது அறைக்கு ஓடினேன்.

"வெட்டியா நிக்காதேன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது? உன்கிட்ட என்ன சொன்னேன். ராவுத்தர் கடையில போய், பழைய பேப்பர், புத்தகம் எல்லாம் வாங்கிட்டு வாடா. அவர் இதோட மூணு தடவை போன் பண்ணிட்டாரு.. எல்லாம் ரெடியா கட்டி வச்சிருக்காராம்"

"வெட்டியா நிக்கிலிங்க மொதலாளி. இதுவரை வந்த பேப்பர், புத்தக கட்டையெல்லாம் பெரிய தராசுல எடைபோடு கணக்கு சரியா இருக்கான்னு பாத்துகிட்டு இருந்தேன், லைட் வேற எரிய மாட்டெங்குதுங்க."

"டேய், மணி. உன்னை பத்தி எனக்குத் தெரியாதா.. பேப்பரை எல்லாம் எடை போடுறேன்னு சொல்லிட்டு அங்க போய் பழைய ஆனந்த விகடன், குமுதத்தை எல்லாம் படிச்சிட்டு நிப்ப.. நீ இப்படி படிச்சி படிச்சி வேலையை சரியா கவனிக்காம இருக்கிறதாலதான், நான் அங்க ஒரு பியூஸாப் போன லைட்ட மாட்டி வச்சிருக்கேன். போய் பொழப்ப கவனிடா.. அதுதான் சோறு போடும்"

"சரிங்க மொதலாளி.." என கனத்த மனதோடு ராவுத்தர் கடைக்கு கிளம்பினேன்.

pavalamani pragasam
8th June 2009, 09:09 AM
'அப்பா' படித்த அனுபவம் தந்த ஊகம் சரியாய் போய்விட்டது! நல்ல முன்னேற்றம்! :clap:

Madhu Sree
8th June 2009, 01:08 PM
venkiram... the story touched my heart...
andha letter ezhudhinavangalukku enna aagiyirukkumonnu kavalai padara
alavukku unga ezhuthu nadai irundhudhu...

:bow: :bow: :bow: