PDA

View Full Version : என் கிராமம் எனது மண்



vasudevan31355
1st September 2013, 09:11 AM
எனது மண்.

http://farm3.static.flickr.com/2058/2366614496_87f7a49c56.jpg

ஒரு குக்கிராமம். ராமாபுரம் என்று பெயர். அப்பா அங்கிருக்கும் எலிமெண்டரி ஸ்கூலுக்கு தலைமை ஆசிரியராக பதவி ஏற்றுக்கொண்டார். 1969 வாக்கில் என்று வைத்துக் கொள்ளுங்களேன். நான் அப்போது ஏழாவது வயதை தொட்டிருந்தேன். நான் ராமாபுரத்தில் படிக்கவில்லை. அருகில் இருக்கும் சிறு டவுன் கடலூர் துறைமுகம் என்று சொல்வார்கள். அங்கு ஒரு கிறிஸ்டியன் ஸ்கூலில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தேன். சனி ஞாயிறு ஆனால் அப்பா என்னை சைக்கிளில் கிராமத்துக்கு அழைத்து வந்து விடுவார்கள். அப்பாவுக்கு ஊர்க்காவல் படை (Home Guard) என்றால் கொள்ளை பிரியம். அப்பாவின் அப்பா அதாவது தாத்தா போலீசாக இருந்தவர். அப்பாவுக்கும் போலீசாக ஆசைதான். ஆனால் அப்பாவுக்கு அதிர்ஷ்டம் இல்லை. வாத்தியாராகிப் போய் விட்டார். ஆனால் போலீஸ் ஆசை மட்டும் விடலை. அதனால் ஊர்க்காவல் படையில் சேர்ந்து தன் ஆசையை ஓரளவு தீர்த்துக் கொண்டார். சனிக்கிழமை தோறும் கடலூரில் ஊர்க்காவல் படை பரேட் இருக்கும். இரண்டு மணி நேரம் மாங்கு மாங்கு என்று வேர்க்க விறுவிறுக்க பரேட் முடித்து விட்டு அங்கு கொடுக்கும் இரண்டு பூரிகள், உருளை பொடிமாஸ் அடங்கிய ஒரு பொட்டலத்தை கொண்டு வந்து என்னிடம் கொடுக்காமல் அவரே சாப்பிட்டு விடுவார்.

http://1.bp.blogspot.com/-BD1TXxl_8VU/UFVdeeIDpqI/AAAAAAAAAUU/vk3qDei3WcE/s1600/man+mathil.jpg

கிராமத்துக்குப் போனால் ஒரே குஷிதான். அம்மாவுக்கு தனி மரியாதை. பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் எங்கள் வீட்டில்தான் இருப்பார்கள். வீடென்றால் பனை ஓலை வேய்ந்த சிறு குடிசை. சுற்றியுள்ள சுவர்கள் செம்மண் மற்றும் களிமண்ணால் ஆக்கப்பட்டிருக்கும். மண் தரை நன்கு சாணமிட்டு மெழுகப் பட்டிருக்கும்.

ஹெட்மாஸ்டர் பிள்ளை என்பதால் நான் எல்லோருக்கும் ரொம்பச் செல்லமாக்கும். அப்பா எனக்கு வாங்கித் தந்த மூன்று சக்கர சைக்கிள் மூலம் கிராமத்தை வலம் வருவேன். அது அப்போது ஆச்சர்யமான விஷயம். அனைவரும் என்னை விழுங்கி விடுவது போல பார்ப்பார்கள். பெருமை பிடிபடாது எனக்கு.

கள்ளமில்லா உள்ளம் படைத்த கிராமத்து மண் வாசனை மிக்க மக்கள். அவர்களைப் பொறுத்த வரை அம்மா மிக்க மரியாதைக்குரிய பெண்மணி. கிராமத்தில் வாழை, கரும்பு, முந்திரி சாகுபடிதான். நல்ல மண்வளம். புன்செய் பூமி. அதனால் அறுவடையின் போது எங்கள் வீட்டிற்கு கிராமத்து மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் அறுவடை செய்தவற்றை தங்களால் இயன்ற அளவு தந்து விட்டுப் போவார்கள். வீட்டில் வாழைத்தார், முந்திரிப் பயிர், கரும்பு என்று அடுக்கி வைக்க இடம் இருக்காது. அம்மா படித்தவர் ஆதலால் எல்லா பிள்ளைகளுக்கும் இலவசமாக பாடம் சொல்லித் தருவார்கள். அதனால் அம்மா மீது அனைவருக்கும் மரியாதை.

சனி, ஞாயிறு லீவாகையால் ஒரே கொண்டாட்டம்தான். எல்லோரும் பிக்னிக் போல கிளம்பி விடுவோம். கிராமத்து இயற்கை அழகைக் காணக் கண்கோடி வேண்டும். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற வாழைத் தோப்புகள். பொங்கல் பானையில் பொங்கி வரும் பொங்கல் நுரை போல அங்கங்கே கவிழ்ந்து கிடக்கும் முந்திரிக்காடுகள். வயல்களில் நெடிதுயர்ந்து காணப்படும் கம்பங்கதிர்கள். கேழ்வரகுக் கதிர்கள். விண்ணை முட்டும் பனை மரங்கள். அங்கங்கே தென்படும் ஈச்சங்காடுகள்.

http://pazasu.atheetham.com/img/kinaru.jpg

மலைப்பாங்கான பகுதி என்பதால் நிலத்தடி நீர் மிக ஆழத்தில் இருக்கும். வசதியான ஒரு சிலர் விவசாயத்திற்காக மோட்டார் பம்ப் வைத்திருப்பார்கள். குடிநீர் கிணற்றிலிருந்துதான் இறைக்க வேண்டும். கிணறு என்றால் சாதாரணக் கிணறு அல்ல. வெறும் தரைக்கிணறு. கிணற்றின் குறுக்கே நடுவில் ஒரு ஒரு பெரிய கட்டையை நிற்பதற்காக போட்டிருப்பார்கள். ஊருக்கென்று பொதுவாக ஓரிரு இடங்களில் தரைக் கிணறு வெட்டி வைத்திருப்பார்கள். பெண்கள் ஒடுக்கு விழுந்த செப்புக் குடங்களை எடுத்துக் கொண்டு தண்ணீர் மொள்ளச் செல்வார்கள். குடத்தின் கழுத்தில் கயிற்றால் சுருக்குப் போட்டு எந்த வித பாதுகாப்புமின்றி அப்படியே கட்டையின் மீது நின்றபடியே (ராட்டினமெல்லாம் கிடயாது) கிணற்றுக்குள் குடத்தை இறக்க வேண்டியதுதான். மெதுவாக எட்டிப் பார்த்தால் ஒரே இருட்டாக இருக்கும். தண்ணீரே தெரியாது. கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில்தான் தண்ணீர் இருக்கும். கயிற்றை அப்படி இப்படி ஆட்டி லாவகமாக தண்ணீரை மொண்டு அப்படியே கயிற்றை மேலே நின்றவாக்கில் இழுப்பார்கள். குடம் கிணற்றுக்குள் அங்குமிங்கும் மோதி மேலே வரும்போது பாதி தண்ணீர்தான் குடத்தில் மிஞ்சும். மிக மிக டேஞ்சர். கொஞ்சம் தவறினாலும் கிணற்றுக்குள் விழவேண்டியதுதான்.

http://cgwb.gov.in/secr/photos/fieldops/FIELD%20ACTIVITIES-PUMPING%20WELL.jpg

துணி துவைப்பது மோட்டார் கொட்டகையில்தான். காலை ஆறுமணி அளவில் பம்பின் வாய்வழியே சாணத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றி மோட்டாரை ஸ்டார்ட் செய்வார்கள். 'தப தப' என்று தண்ணீர் கொட்டியவுடன் தொட்டியில் இறங்கி ஒரே ஆட்டம் போடுவோம். மூக்கைப் பிடித்துக் கொண்டு தொட்டி நீரினில் மூழ்கி மூச்சை அடக்குவோம். என்னவோ முத்துக் குளிக்கப் போனவன் மூச்சை அடக்குவானே அவனைப் போல பெரும் சாதனை செய்தது போல நினைத்துக் கொள்வோம். மூச்சை அடக்கிக் கொண்டு நீரில் மூழ்கி கண்ணைத் திறந்து பார்த்தால் ஒரே பயமாக இருக்கும்.

வாய்க்கால் வழியாக தண்ணீர் பயிர்களுக்குப் பாயும் அழகே அழகு. நோட்டுப் பேப்பரில் காகிதக் கப்பல் செய்து ஓடும் வாய்க்கள் தண்ணீரில் விட்டு பார்த்து ரசிக்கும் அழகே தனி.

கிராமங்களில் எங்கு பார்த்தாலும் பரந்து கிடக்கும் காட்டாமணக்கு இலையை செடியிலிருந்து கிள்ளி எடுத்தால் இலைக் காம்பிலிருந்து பால் வடியும். அதை அப்படியே பாட்டில் மூடியில் கொஞ்சம் சேகரித்துக் கொண்டு பேப்பர் ஒன்றை சிகரெட் போல சுருட்டி அதன் நுனியை காட்டாமணக்கு பாலில் தோய்த்து வாயில் வைத்து ஊத 'நாடோடி மன்னனி'ல் எம்ஜியார், சரோஜாதேவி பாடும் "கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே" டூயட்டில் வரும் சோப்பு நீர்க் குமிழ்கள் போல குமிழ்கள் பெரிது பெரிதாகக் கிளம்பும். ஒவ்வொரு குமிழும் மற்றொரு குமிழ் மீது மோதி வெடிப்பதைக் கண்டால் அவ்வளவு குதூகலம் கிளம்பும்.

காய்ந்த பனை மட்டை ஓலையை எடுத்து அதை சிலுவை போல சிறியதாய் செய்து, அதன் நடுவில் நெருஞ்சி முள்ளைக் குத்தி பிடித்தபடியே ஓட ஆரம்பித்தால் சும்மா 'சர்ர்ர்ர்' ரென காற்றாடி போல அது சுற்றும் அழகை என்னவென்று சொல்ல!

கோலி குண்டு வாங்க காசேது? நகைகள் கழுவ பயன்படுத்தப் படும் பூந்திக் கொட்டை மரம்தான் கோலி குண்டுகளைக் கொடுக்கும். அழகான உருண்டையான பச்சை பூந்திக் காய்களை வைத்து 'பேந்தா' என்ற கோலி விளையாட்டை விளையாடுவோம்.

http://3.bp.blogspot.com/-yTouLbX-vhc/UdAHGqBPCFI/AAAAAAAAB4I/oyTyaDxYXOQ/s664/F7.jpg

சவுக்குக் குச்சியை சீவி கிட்டிப் புள் ரெடி பண்ணி அடித்தால் புள் விழுந்த இடத்திலிருந்து அடித்த இடத்திற்கு "நான்தான் ஙொப்பன்டா...நல்ல முத்துப் பேரன்டா"... மூச்சை அடக்கிப் பாடி ஓடி வர முடியாது. அவ்வளவு தூரம் புள் போய் விழுந்திருக்கும்.

கார்த்திகை தீபத்திற்கு பனை மரம் ஏறி பனம்பூக்களைப் பறித்து வெயிலில் காய வைத்து, பின் அதை சுட்டு கரியாக்கி, அந்தக் கரியைப் பொடி செய்து துணியில் வைத்து சுருட்டி, அந்த பந்தத்தை கவைக் கழிக்குள் செருகி, அந்தக் கவைக் கழியின் கீழே கயிறைக் கட்டி துணிப் பந்தின் மீது நெருப்புத் துண்டுகளை வைத்து தலைக்கு மேல் சுற்றினால் சிதறும் பூப்போன்ற நெருப்பு மத்தாப்புக்களை காணக் காண அற்புதமாய் இருக்கும்.

மாட்டுப் பொங்கல் அன்று மாட்டு வண்டியில் அனைத்துப் பசங்களும் ஏறி ஊரை வலம் வரும் குதூகலம். வண்டியின் சைடு கட்டைகளை பாதுகாப்புக்கு பிடித்துக் கொண்டு "போகியும் போச்சு... பொங்கலும் போச்சு பொண்ணு குட்றா...... " என்று விவரமறியாமல் கத்தும் அப்பாவித்தனம்.

கோடைக் காலங்களில் லீவ் நாட்களில் காலையில் பிக்னிக் கிளம்புவோம். அம்மா அருமையாக தளதளவென தயிர் சாதம் செய்து அதில் முந்திரி போட்டு கருப்பு திராட்சையைக் கலப்பார்கள். புளியோதரையும் உண்டு. கிராமத்தார் கொடுத்த மாவடுவை தொட்டுக் கொள்ள எடுத்துக் கொள்வோம். ஸ்கூல் பிள்ளைகள் அவரவர்கள் வீட்டிலிருந்து கம்பங்கூழ், கேப்பங்க்கூழ், களி, அதற்கு வாட்டமாக பழைய கருவாட்டுக் குழம்பு எடுத்து வருவார்கள்.

http://treesinsangamtamil.files.wordpress.com/2011/07/panai.jpg

http://maathevi.files.wordpress.com/2011/11/dsc02524.jpg

ஒன்பது மணிக்கு அனைவரும் கிளம்புவோம். முதலில் நேராக பனந்தோப்புக்கு செல்லுவோம். அங்கு முன்கூட்டியே கிராமத்து பள்ளி மாணவர் ஒருவரின் அப்பா ரெடியாக பன நுங்குகளை வெட்டி போட்டு வைத்திருப்பார். நூறு இருநூறு நுங்குகளுக்கு மேல் இருக்கும். அழகாக ஒவ்வொன்றாக அனைவருக்கும் சீவித் தருவார். மூன்று கண்களுடன் அழகாக காட்சியளிக்கும் நுங்கை லாவகமாக பிடித்து ஒவ்வொரு கண்ணிலும் ஆள்காட்டிவிரலை நுழைத்து உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட வேண்டியதுதான். முதலில் நுங்கு நீரும், பின் வழுக்கையுமாக வாயில் செல்ல செல்ல அமிர்தமாய் இருக்கும். குடலெல்லாம் குளிரும். பின் ஈச்சங்காடு. பாலைவனத்தில் இருப்பது போல திட்டு திட்டாக ஈச்சங் கன்றுகள் பரவிக் கிடக்கும். கன்றுகளுக்கு உள்ளே நடுவில் கன்னங்கரேன்ற கொத்துக் கொத்தாகக் காணப்படும் ஈச்சம் பழங்கள். சுவை என்றால் அப்படி ஒரு சுவை. அப்படியே பறித்து கால்சரா பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு ஒவ்வொன்றாக தின்று கொண்டு வருவோம்.

http://static.panoramio.com/photos/large/70399940.jpg

பின் அடுத்து முந்திரிக் காடுகளுக்கு செல்வோம். எந்த முந்திரிக் காட்டுக்கும் செல்லலாம். யாரும் ஒன்றும் கேட்க மாட்டார்கள். அங்கு பச்சை முந்திரிக் கொட்டைகளை கிராமத்து பிள்ளைகள் பறித்து போடுவார்கள். பின் காய்ந்த பனைமட்டைகளை எடுத்து வந்து அதைக் கொளுத்தி அப்படியே முந்திரிக் கொட்டைகளை எரியும் பனைமட்டைகளாலேயே பிரட்டி பிரட்டி சுடுவார்கள். பச்சை முந்திரியாய் இருந்தாலும் முந்திரிக் கொட்டைகளின் தோல்கள் அதிலுள்ள எண்ணைத் தன்மையின் காரணமாய் பற்றி எரியும். பின் அதை மணலைப் போட்டு அணைத்து, ஒவ்வொரு கொட்டையாக சுத்தியலால் உடைத்து முந்திரிப் பருப்புகளைத் தருவார்கள். அடேயப்பா! அப்படி ஒரு ருசியை நாம் அனுபவித்திருக்கவே முடியாது.

பின் ஒரே ஆட்டம்தான். மதியம் ஆனவுடன் சாப்பாட்டு மூட்டைகளை அவிழ்ப்போம். முதலில் புளியோதரை, பின் தயிர் சாதம் என்று காலியாகும். பிறகு கேப்பைக் களி. அதை அப்படியே கொட்டாங்கச்சியில் எடுத்து கையில் தருவார்கள். அதில் கருவாட்டுக் குழம்பை ஊற்றி அதில் மிதக்கும் கத்தரிக்காயுடன் கலந்து பிசைந்து சாப்பிட்டால். அடா! அடா!அடா! முந்திரிக்காடு அதன் வாசனையையும் மீறி கருவாட்டுக் குழம்பால் மணமணக்கும்.

http://2.bp.blogspot.com/-U-lKdtp0ovM/UC1A1zCB_0I/AAAAAAAAAjY/z9yWUObv6BE/s1600/Koozh.jpg

கூழ் விருப்பப் பட்டவர்கள் அதை சாப்பிடுவார்கள். கேப்பங்கூழில் சாதத்தை உதிரியாய் வடித்து கலந்திருப்பார்கள். உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது கேப்பை கூழ். கம்பங்க்கூழோ உடலுக்கு சூடு. பிறகு முந்திரி மரத்தின் மீது ஏறி கழிகுச்சி என்ற ஆட்டம் ஆடுவோம். எல்லோரும் மரத்தில் இருப்போம். எங்களை ஒருவன் பிடிக்க வேண்டும். கீழே ஒரு வட்ட வளையத்தை கோடாய் போட்டு அதில் ஒரு குச்சியை வைத்திருப்போம். அவன் எங்களைப் பிடிப்பதற்குள் நாங்கள் அந்த வளையத்திற்குள் இருக்கும் குச்சியை மிதித்து விட வேண்டும். குச்சியை மிதிக்காமல் இருப்பவன் தொடப்பட்டு விட்டால் அவன் அடுத்து மற்றவர்களைப் பிடிக்க வேண்டும். படு ஜோராக இருக்கும். அம்மா அப்பா முந்திரி மர நிழலில் ஒரு குட்டித் தூக்கம் போடுவார்கள்.

http://www.radiocollectie.nl/radio%27s/L4X25T.JPG

அப்பா அப்போது பிலிப்ஸ் ரேடியோ ஒன்று வைத்திருந்தார். ரேடியோவின் வலது பக்கத்தில் ஐந்து பட்டன்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும். முதல் பட்டன் மீடியம் வேவ்ஸ். இரண்டாவது பட்டன் ஷார்ட் வேவ்ஸ், மூன்றாவது பட்டன் ஷார்ட் வேவ்ஸ் 2, நான்காவது பட்டன் நினைவில்லை. ஐந்தாவது பட்டன் ஆப் பட்டன். மதியத்திலிருந்து சிலோன் ஸ்டேஷன்தான் வைப்போம். கே.எஸ்.ராஜாவும், மயில்வாகனம் சர்வானந்தாவும் அமர்க்களப் படுத்திக் கொண்டிருப்பார்கள். (கே எஸ் ராஜா கேட்பார் "மனோரமா... பாம்பு எப்படி வரும்?... மனோரமா ஏதோ ஒரு சினிமாவில் சொன்னது இப்போது பதிலாக வரும். "தலை முன்னால வரும்... வால் பின்னால வரும். ஆஹா.. இலங்கை வானொலி இலங்கை வானொலிதான்) கிராமத்தில் அப்போது எங்கள் ரேடியோ மட்டுமே இருந்தது. அது அப்போதைக்கு ஒரு அதிசயப் பொருள். சாயங்காலம் ஆனதும் "பொங்கும் பூம்புனல்" கேட்டபடியே மோட்டார் கொட்டகைக்கு வந்து ஜம்மென்று ஒரு குளியல் போடுவோம்.

மோட்டார் கொட்டகை அருகிலே ஒரு அத்தி மரம். சிகப்பு சிகப்பாய் அத்திப் பழங்கள் பழுத்துத் தொங்கும். அதைப் பறித்து புழுக்கள் இருக்கிறதா என்று 'செக்' செய்துவிட்டு சாப்பிடுவோம். வயல் வெளிகளின் வழியே வரப்பில் வீட்டுக்கு நடந்து வரும் போது வழியில் கம்பங்கதிர்களைப் பறித்து சுவைத்து வருவோம். கேழ்வரகு கதிர்களை உள்ளங்கையில் வைத்து நிமிட்டி நிமிட்டி எடுத்து மென்றபடியே வருவோம். வீடு திரும்பும் போது மாலையும் இரவும் சந்தித்து மங்கிய ஒளியில் இருக்கும். அன்று முழுக்க தீனி வேட்டை நடந்ததால் பசி இருக்காது. அப்படியே பாயை விரித்து உறங்கினால் சொர்க்கலோக தூக்கம்தான்.

ம்...அதெல்லாம் பொற்காலம். நன்கு படித்து, ஒரு நல்ல வேலையில் அமர்ந்து, இப்போது நல்ல சம்பளம் வாங்கி வசதியாய் இருந்தாலும் சுகர், ரத்த அழுத்தம் என்ற ஜாதி, பேதமற்ற வியாதிகள் உடலை ஆக்கிரமிக்க ஆரம்பிக்க, அவசர கதி இயந்திர வாழ்க்கையில் உழன்று, சம்பளத்தில் பாதியை மருத்துவருக்கும், மருந்துக்கும் தந்து, மீதியை காலேஜ் பீஸாகக் கட்டி அழுது விட்டு, கம்ப்யூட்டரை கண நேரமும் பிரியாமல் முதுகுத் தண்டு உடைந்து, சென்ற இடமெல்லாம் செல்லில் பைத்தியக்காரன் போல் பேசி, நான்கு சக்கர கட்டை வண்டிக்காரனின் கைவண்ணத்தில் உருவான பாஸ்ட் புட்டை பதம் பார்த்து அது நம் வயிற்றைப் பதம் பார்க்க, அப்போதைக்கு எங்கு கட்டணக் கழிப்பிடம் இருக்கிறதோ அங்கே கியூவில் நின்று ஓடிவிட்டு, "அப்பாவுக்கு பேஸ்புக் பார்க்கக் கூடத் தெரியலைம்மா" என்ற பிள்ளைகளின் நக்கல் நையாண்டியை பெருமையாய் நினைத்து நண்பர்களிடம் "நமக்கு என்னப்பா தெரிகிறது? பசங்க தூள் கிளப்புதுங்கப்பா"... என்று பெருமை பேசிக் கொண்டு, வேலை கிடைத்து அமெரிக்கா போன மகன் எப்ப வருவான் என்று காத்து, ஸ்கைப்பில் அவன் முகம் பார்த்து, பேச்சு அடிக்கடி கட்டாகி ,முகமும் சரியாகத் தெரியாமல் கட்டாகி கட்டாகி தெரிய, அவன் இங்கு வந்து ஏழுநாள் தங்கி அவன் சொந்த பிளாட் வாங்கும் வேலைகளைப் பார்த்து முடிக்க, எட்டாவது நாள் மறுபடி அவன் வெளிநாடு கிளம்ப, அவன் சூட்கேஸ்களை வெயிட் போட்டுப் பார்த்து "அப்பா எல்லாம் கரெக்ட்டா இருக்கு '... என்று கலங்கிய கண்களுடன் ஏர்போர்ட் சென்று பார்வையாளர்கள் கேலரியில் டிக்கெட் வாங்கி, அவன் பிளைட் ஏறும் வரையில் எட்டி எட்டிப் பார்த்து அழுதபடியே திரும்பும் இந்த இயந்திர வாழ்க்கைக்கும், அந்த கள்ளம் கபடமில்லாத துன்பமே உணர முடியாத கிராம வாழ்க்கைக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்?

நினைத்துப் பார்க்கிறேன். என் இளமைக் கால கிராம நினைவுகளை அசை போட்டபடியே தூங்குகிறேன், வெள்ளேந்தியான அப்பாவி மக்கள். உடலில் அழுக்கு இருந்தாலும் உள்ளத் தூய்மை முழுதும் நிறைந்த மக்கள். எந்த உதவியும் எந்த நேரத்திலும் செய்யத் தயாராய் இருக்கும் அன்பு இதயங்கள். என் மன உளைச்சல்களும், உள்ளக் குடைச்சல்களும் குறைந்து போன அதிசயத்தை என் கிராமத்தை நினைக்கும் போது உணர்கிறேன். என் வியாதிகள் என்னை விட்டு அந்தக் கணம் பறப்பதை உணருகிறேன்.

இப்போது கூட மறக்காமல் வருடம் ஒரு முறையாவது குடும்பத்துடன் என் கிராமம் சென்று பழைய நினைவுகளை புதுப்பித்துக் கொள்கிறேன். பரமானந்தம் அடைகிறேன். அதே மக்கள்... அதே பாசம்... அதே அன்பு.

அதுதான் எனது மண்.

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

Richardsof
1st September 2013, 09:25 AM
Dear vasudevan sir

your article takes me to my native village sathanur during the periods of 1960.

Good begining ....

Welcome more and more

chinnakkannan
1st September 2013, 12:33 PM
அழகிய படங்களுடன் அழகிய பதிவு வாசுதேவன் சார்..இன்னும் எழுதுங்கள்..( ராமாபுரம் எந்தப் பக்கம்..)..எனக்கு மதுரை நினைவுகள் பொங்குதே..

RAGHAVENDRA
1st September 2013, 04:14 PM
வாசு சார்,
அழகிய கிராமம், பழகிய மண், பசுமரத்தாணி போல் நெஞ்சிலாடும் நினைவுகள்...
நினைத்துப் பார்க்கிறேன், என் நெஞ்சம் துடிக்கின்றது... என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
இந்தத் திரி ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் என்பது போன்ற எண்ணங்களைக் கிளறி விட்டு அந்தக் கால நினைவுகளை எழுத வைக்கும் சக்தி படைத்துள்ளது என்பது திண்ணம்.

vasudevan31355
1st September 2013, 08:13 PM
நன்றி வினோத் சார், சின்னக் கண்ணன் சார் மற்றும் ராகவேந்திரன் சார்.

vasudevan31355
1st September 2013, 08:21 PM
சின்னக் கண்ணன் சார்,

ராமாபுரம் கிராமம் தென் ஆற்காடு மாவட்டம் கடலூர் அருகே அமைந்துள்ளது. கடலூரிலிருந்து சரியாக பதினைந்து கிலோமீட்டர்கள். கடலூரிலிருந்து இரண்டு வழிகள் உண்டு. ஒன்று குள்ளஞ்சாவடி செல்லும் வழியிலுள்ள கண்ணாரப் பேட்டை வழியாக வழிசோதனைப் பாளையம் சென்று அங்கிருந்து கிழக்கு ராமாபுரம் வழியாக மேற்கு ராமாபுரத்தை அடையலாம்.

மற்றொன்று திருப்பாதிரிப் புலியூர் வழியாக கேப்பர் மலை (கேப்பர் மலை ஜெயில் மிக பிரசித்தி பெற்ற இடம். அருள்மிகு பிரேமானந்தா சாமியார் இங்குதான் சிறை வைக்கப்பட்டார் :)) அடைந்து பின் சாத்தங்குப்பம் வழியாக சென்றும் ராமாபுரத்தை அடையலாம்.

vasudevan31355
1st September 2013, 08:28 PM
நண்பர்கள் அவரவர்களின் சொந்த, அல்லது தங்களுக்குத் தெரிந்த கிராம மண் வாசனை அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். அனைவரது பழைய கிராமத்து நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்வதற்கும் மறந்து போன பல விஷயங்களை நினைவு படுத்திக் கொள்வதற்கும் இந்தத் திரி பயன்படவேண்டும் என்பதே என் விருப்பமும் ஆசையும் ஆகும். கிராமத்து மறக்க முடியாத பல்வேறுவகைப்பட்ட பழக்க வழக்கங்களை, சம்பிரதாயங்களை இன்றைய இளம்தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக இந்தத் திரி தங்கள் அனைவரது ஒத்துழைப்பாலும் சிறந்து விளங்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அனைவருக்கும் என் நன்றிகள்.

Gopal.s
1st September 2013, 09:28 PM
Congrats Vasu. I read it in our thread already. But it has a new sheen and gloss with appropriate Photographs. Such recordings are very much required for future generation. There is KI.Rajnarayan in you. Great work. Keep it up.

Murali Srinivas
1st September 2013, 10:32 PM
வாசு சார்,

முன்பு ஒரு முறை நடிகர் திலகத்தின் திரியில் கிராமத்தில் டெண்ட் கொட்டகையில் சினிமா பார்த்த அனுபவங்களை நீங்கள் எழுதிய போது அதில் இந்த விஷயங்களை குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த சினிமா அனுபவங்களை தவிர்த்து விட்டு நீங்கள் பதிவிட்டிருக்கும் நினைவுகளில் கிராமீய மணம் கமழ்கிறது என்பதை நான் சொல்லாமலே படிக்கும் அனைவரும் புரிந்துக் கொள்வர். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த என் போன்றோருக்கு இது போன்ற அனுபவங்கள் படிக்க மட்டுமே கிடைக்கும். நிறைய எழுதுங்கள்.

அன்புடன்

Subramaniam Ramajayam
2nd September 2013, 08:39 AM
வாசு சார்,

முன்பு ஒரு முறை நடிகர் திலகத்தின் திரியில் கிராமத்தில் டெண்ட் கொட்டகையில் சினிமா பார்த்த அனுபவங்களை நீங்கள் எழுதிய போது அதில் இந்த விஷயங்களை குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த சினிமா அனுபவங்களை தவிர்த்து விட்டு நீங்கள் பதிவிட்டிருக்கும் நினைவுகளில் கிராமீய மணம் கமழ்கிறது என்பதை நான் சொல்லாமலே படிக்கும் அனைவரும் புரிந்துக் கொள்வர். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த என் போன்றோருக்கு இது போன்ற அனுபவங்கள் படிக்க மட்டுமே கிடைக்கும். நிறைய எழுதுங்கள்.

அன்புடன்

TIRUVARUR, tanjore dt TN. my birthplace and thaplace where my ancestors lived. Early from 50's we go there every year and spend some weeks and relax, thosedays a famous train called BOATMAIL was availale to trech the place. night 8pm dep arraival early morning by 4am I uued to get a sense of KUTHUGALAM while nearing the place especially a bridge on oodampokki river on the banks of tiruvaur,
we spend the mornings to visit a big tank called KAMALALAYAM OPP TO THE big temple which is famous for its fresh waters it has about 60 deepwells inside and waters never dry till date a very rare TANK.
after food lot of bullock carts carrying the advertisements about current film posters. we plan our schedules accordingly.
there were only two three theatres one by name BABY And other AMMAIYAPPA. ammaiyappa mostly screens NT moviies and the other one mgr pictures.
my remembrance rolls back to pavamannippu padital muttampoduma t.k. tanayan days which we go with family and enjoyed.that time itself I have developed a sense of liking on NT and his films.
our place is very famous for its CHARIOT- RATHAMBIGGEST IN ASIA USED AT THE TIME OF FESTIVALS. OUR PLACE STILL FAMOUS FOR THIS THREE TANK TEMPLE AND CHARIOT. EVEN now whenever we get ance we never miss the occasions of visiting our place.
tanks vasu sir your writings about your place made me to share little

RAGHAVENDRA
2nd September 2013, 09:13 AM
ராமஜெயம் சார்
தங்களது சொந்த ஊரான திருவாரூர் பற்றிய நினைவுகள் ஸ்வாரஸ்யமாயுள்ளன. தொடர்ந்து நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

நாங்கள் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நகர வாசி என்றாலும் உறவினர்கள் மூலமாக பல்வேறு சிற்றூர்களில் அவ்வப்போது சென்று வந்த அனுபவங்கள் உள்ளன. வரும் நாட்களில் அவற்றைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன்.

பலருடைய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இத்திரி ஒரு சிறந்த மய்யமாக அமையும்.

vasudevan31355
2nd September 2013, 09:58 AM
ராமஜெயம் சார்,

தங்களின் திருவாரூர் ஞாபகங்கள் தங்களின் மகிழ்ச்சியைக் காட்டுகின்றன. திருவாரூர் தங்கராசு, திருவாரூர் எம்.எஸ்.தாஸ் போன்ற தலைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. தற்சமயம் கூட தஞ்சை சென்று வரும் போது திருவாரூர் வழியாகத்தான் வந்தேன். கோயில்களை நிறைய பார்த்தேன். சாலைகளும் நன்றாக இருந்தன. தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கமலாலயம் டேங்க்கை காண ஆவல் மீறிடுகிறது. தாங்கள் நடிகர் திலகம், எம்ஜியார் அவர்களின் படங்களை பாரத்தை நினைவு கூர்ந்தது இனிமை.

vasudevan31355
2nd September 2013, 10:14 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களுடைய உறுதுணைக்கு என் மனமார்ந்த நன்றி.

JamesFague
2nd September 2013, 10:38 AM
Nice writeup Mr Vasudevan Sir.

RAGHAVENDRA
2nd September 2013, 10:39 AM
Kamalalayam Temple Tank, Tiruvaur (google search result)

http://i1.trekearth.com/photos/138746/cimg0272.jpg

JamesFague
2nd September 2013, 10:41 AM
In childhood days I went to Nedumaram the native place of my mother which is
near Kottaiyur. But I could not recollect any experience of that visit.

vasudevan31355
2nd September 2013, 11:45 AM
'குளுகுளு' குற்றால அனுபவம்.

சமீபத்தில் நண்பர்களுடன் குற்றாலம் உல்லாசப் பயணமாக சென்று வந்தேன். நான் இதுவரை குற்றாலம் பார்த்ததில்லை. என் கட்டாயத்தின் பேரில் நண்பர்கள் குற்றாலம் செல்லச் சம்மதித்தனர்.

நெய்வேலியிலிருந்து mahindra quanto வேனில் ஐந்து பேர் கிளம்பினோம். மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு ஒன்றரை மணிக்கு தென்காசி சென்றோம். தென் காசியில் ரூம் புக் செய்யலாம் என்றால் வாடகை ஒருநாளைக்கு ஐந்து பேருக்கு ரூபாய் இரண்டாயிரம் கேட்டார்கள். மேலும் "குற்றாலத்தில் ரூம் எடுத்தால் வாடகை கம்மி... நீங்கள் அங்கேயே ரூம் எடுங்கள்", என்று ஒருவர் வழி சொன்னார். பின் குற்றாலம் சென்று அலைந்து ஒரு ரூமைப் பிடித்தோம். வாடகை ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று பேரம் பேசி ரூம் எடுத்தோம். ரூம் நன்றாகவே இருந்தது. சிலுசிலுவென்ற குற்றாலச் சாரலை முதன் முதலாக ஆனந்தமாக அனுபவித்தேன். நண்பர்கள் குற்றாலத் தண்ணீரில் குளிப்பதற்கு முன் வேறு தண்ணீரில் மூழ்க நான் பயணக் களைப்பில் அசந்து தூங்கி விட்டேன். (நான் நல்ல பிள்ளையாக்கும்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00389.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00389.jpg.html)

பின் காலை ஏழு மணிக்கு எழுந்து ஒரு டீயைக் குடித்து விட்டு மெயின் அருவிக்கு நடை கட்டினோம். மெயின் அருவியில் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. அப்படியும் கூட்டமென்றால் அப்படி ஒரு கூட்டம். தலையைக் கூட நனைக்க முடியவில்லை. எனக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இருந்தாலும் குற்றாலம் பார்த்து விட்டோம் என்ற சிறு திருப்தி.

பின் அங்கேயே ஒரு சிறு டிபன் கடையில் சூடாக ஆளுக்கு ஐந்து இட்லியை சுவைத்து விட்டு சிற்றருவி வந்தோம். மலையில் இருந்து ஒரு சிறு அருவியாகக் கொட்டுகிறது. ஒரு நபருக்கு குளிக்க ரூபாய் ஐந்து கட்டணம் வசூலிக்கிறார்கள். அருவியில் தண்ணீர் நிறையவே கொட்டியது. கட்டணக் குளியல் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனந்தமாகக் குளித்தோம்.

குற்றாலத்தில் ஆண்கள் துண்டு அல்லது பர்முடாஸ் அணிந்து குளிக்கலாம். பெண்கள் சேலை அல்லது சுடிதாருடன் குளிக்கலாம். இருபாலாரும் உள்ளாடைகள் மட்டும் அணிந்து குளிக்கத் தடை. பெண்களுக்கென்று தனியாக குளிக்க இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

குற்றாலத்தின் அழகிய தோற்றம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/20130824-001.jpeg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/20130824-001.jpeg.html)

செண்பக அருவியில் குளிக்கத் தடை செய்திருக்கிறார்கள். அப்படியே குற்றாலத்தை ஒரு வலம் வந்தோம். எங்கும் மக்கள் ஆனந்தமாக உடல் ஈரத்துடன் தலையை துவட்டிக் கொண்டு சர்வ சாதாரணமாக துண்டைக் கட்டிக் கொண்டு சாலைகளில் உலவுவதைக் காண முடிந்தது. ஒவ்வொருவர் முகத்திலும் குற்றாலக் குதூகலம்தான். நடிகர் திலகம் 'பாவை விளக்கு' படத்தில் குற்றால அழகை பருகியபடி பாடி வருவாரே...("ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே") அந்தப் பாடலை என்னையுமறியாமல் என் வாய் முணுமுணுத்தது. அதையும் மீறி நடிகர் திலகத்தின் அந்த எழில்முகம் நினைவிலேயே நின்று வந்தது. (ம்..ம்... நீங்கள் அனைவரும் என்ன நினைக்கிறீர்கள் என்று புரிகிறது... அவர் நினைவில் வராத இடம் என்று ஒன்று உண்டா? அனைத்திலும் ஆக்கிரமிப்பு செய்பவராயிற்றே அவர்!)

ஐந்தருவி அட்டகாசம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/20130824-005.jpeg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/20130824-005.jpeg.html)

இன்னொரு முக்கியமான விஷயம். குற்றாலத்தை மிக தூய்மையாக வைத்திருக்கிறார்கள் என்பதே அது. நிஜமாகவே ஆச்சரியப்பட்டேன். மிகப் பெருமையாகவும் இருந்தது. எங்கும் அவ்வளவாகக் குப்பைகளையோ கழிவுகளையோ காண முடியவில்லை. குளிக்கும் அருவிகளை அழகாகப் பராமரிக்கிறார்கள். அடிக்கடி இடங்களை கழுவி கிளீன் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

காரையாறு டேம்

http://3.bp.blogspot.com/_soIDG8KpvIg/TFpt9QKJrhI/AAAAAAAAAKg/JE-6B6OAVxQ/s1600/Karaiyar+Dam.jpg

பின் காலை பத்து மணிக்கு அங்கிருந்து பாபநாசம் புறப்பட்டோம். கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டர்கள். பாபநாசம் சென்று அங்கிருந்து மலைப் பாதையின் வழியே பாண தீர்த்தம் நீர்வீழ்ச்சியைக் காணப் புறப்பட்டோம். ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். அங்கிருந்து காலாற நடந்தோம். தாமிரபரணி ஆறு ஆர்ப்பாட்டமாக எங்களை வரவேற்றது. பிரம்மாணடமான காரையாறு டேம். அணை முழுதும் தண்ணீர் வெள்ளம். எங்கும் தண்ணீர். பார்க்கவே மலைப்பாகவும், பிரம்மிப்பாகவும் இருந்தது. சிலுசிலுவென்ற காற்றும், இயற்கை சூழல்களும் ரம்மியம். அங்கிருந்து பாணதீர்த்தம் அருவிக்கு போட்டிங் போகலாம். எங்கள் போதாத காலம் அந்த அருவியிலும் குளிக்கத் தடை. நிறைய உயிர் இழப்புக்கள் ஏற்படுவதால் 144. 'குளிக்கத் தடை' என்ற அறிவிப்புப் பலகையை பார்த்ததும் கடுப்பாகி விட்டது. இருந்தாலும் எங்கள் ஏமாற்றத்தை பெருமளவில் தீர்த்து விட்டது இனிமையான படகு சவாரி.

பாணதீர்த்தம் அருவிக்கு சென்று வர ஒரு ஆளுக்கு முப்பது ரூபாய்தான் படகு சவாரிக்குக் கட்டணம். ஒரு படகில் பத்துப் பேர் செல்லலாம். டிக்கெட் எடுத்துக் கொண்டு படகில் ஏறினோம். ஏறும் போது படகு ஒரே தள்ளாட்டம். நண்பர்களும் ஒரே தள்ளாட்டம். படகு அப்படியும் இப்படியும் ஆட ஒருவழியாக சமாளித்து படகில் அமர்ந்தோம். படகு செல்ல ஆரம்பித்ததும் எங்கள் உயிர் எங்கள் கையில் இல்லை. (தண்ணீரின் ஆழம் 150 அடியாம்... அடேயப்பா! குலை நடுக்கம் ஏற்படாமல் என்ன செய்யும்?) படகு தண்ணீரில் கவிழ்ந்து விடுவது போல மிகவும் சாய்ந்து அப்படியும் இப்படியுமாக ஆட படகில் அமர்ந்தவர்கள் பயத்தில் வீறிட்டு அலற படகோட்டி கலகலவென சிரித்தார். "ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும்... பயப்படாதீர்கள்" என்று எங்களுக்கு தைரியம் சொல்லி எங்கள் அனைவரையும் பேலேன்ஸாக அமரவைத்தார். சில வினாடிகளில் படகு சகஜ நிலையில் செல்ல ஆரம்பித்தது. "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டோம். இப்போது நன்றாக என்ஜாய் செய்ய ஆரம்பித்தோம். படகுகளில் பாதுகாப்பு கவச உடை மறக்காமல் தந்து அணிவிக்கச் சொல்லுகிறார்கள். படகு செல்லும் போது ஆனந்தமோ ஆனந்தம். சுற்றிலும் நீர்ப்பரப்பு. தெள்ளத் தெளிவான தாமிரபரணி நீர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் நெடிதுயர்ந்த விண் தொடும் மலைகள். மலைகளில் முகடுகளில் தெரியும் எழிலார்ந்த மரங்கள். குளுகுளு காற்று. லேசான மழைச்சாரல். நண்பர்களின் நக்கல் நையாண்டி அரட்டைகள். படகு நீரைக் கிழித்துக் கொண்டு போகும் போது கிடைக்கும் சுகானுபவம். சந்தோஷம் களை கட்டும் முகங்கள். தண்ணீரில் கைவிட்டு ஒருவர் மேல் ஒருவர் பெரியவர் சிறியவர் பேதம் பாராமல் அள்ளித் தெளிக்கும் ஆனந்தம். நிஜமாகவே அற்புத அனுபவம்.

பொறுத்திருங்கள்.

chinnakkannan
2nd September 2013, 06:24 PM
மனக் காரை ரிவர்ஸ் கியரெடுத்து சில பல வருட்ங்கள் பின்னோக்கிச் சென்றால்.. கல்லூரிப்பருவமதில் குற்றாலம் மதுரையிலிருந்து சென்று வந்தது நினைவுக்கு வருகிறது.. அதி காலை நாலு மணி பஸ்..பின் குற்றால்ம் ஏழோ எட்டோ மணி நினைவில்லை..பின் எல்லா அருவிகளிலும் டபக் டபக் என க் குளித்து ( நான் ப்ளஸ் நால்வர்) முடித்து..வருகையில் சிலுசிலுவென சாரல்..அப்புறம் சுடச்சுட சாப்பாடு சாப்பிட்டு பஸ் ஏறி மாலை மங்கும் நேரம் மதுரை வந்தாச்சு..அப்புறம் தங்கும்படியெல்லாம் போனதில்லை;;

நல்ல பதிவு தொடருங்கள்..

Subramaniam Ramajayam
2nd September 2013, 07:32 PM
ராமஜெயம் சார்,

தங்களின் திருவாரூர் ஞாபகங்கள் தங்களின் மகிழ்ச்சியைக் காட்டுகின்றன. திருவாரூர் தங்கராசு, திருவாரூர் எம்.எஸ்.தாஸ் போன்ற தலைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. தற்சமயம் கூட தஞ்சை சென்று வரும் போது திருவாரூர் வழியாகத்தான் வந்தேன். கோயில்களை நிறைய பார்த்தேன். சாலைகளும் நன்றாக இருந்தன. தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கமலாலயம் டேங்க்கை காண ஆவல் மீறிடுகிறது. தாங்கள் நடிகர் திலகம், எம்ஜியார் அவர்களின் படங்களை பாரத்தை நினைவு கூர்ந்தது இனிமை.

Thank you vasu sir. one more important point about tiruvarur,
tiruvaruril piranthal mukthi, tiruvannamalaiyai ninaithale mukthi and kasiyil iiranthal mukthi. NEEDLESS TO SAY I BELONG FIRST CATHEGERY,
ihave had a very strange anubhavam with cuddalore which i will defitely share later. upcourse i have not visited neyveli.