| View previous topic :: View next topic |
| Author |
Message |
saradhaa_sn Seasoned Hubber

Joined: 13 Jul 2005 Posts: 1632 Location: Chennai
|
Posted: Sat Oct 17, 2009 9:39 am Post subject: 'Makkal Kalaignar' JAISHANKAR |
|
|
'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர்
1964 தமிழ்த்திரையுலகின் இன்னொரு முக்கியமான ஆண்டு. அதுவரை கதாநாயக்ர்களாக சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களாக கோல்லோச்சிக்கொண்டிருந்த நாற்பெரும் நட்சத்திரங்களான நடிகர்திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், காதல் மன்னன் ஜெமினி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். ஆகியோருக்கு மத்தியில் புதிய வரவுகளாக சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் ஆகியோர் புதிய கதாநாயர்களாக நுழைந்தனர். இவர்களில் முத்துராமன் மட்டும் ஏற்கெனவே சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தவர், இவ்வாண்டு கதாநாயகன் ப்ரமோஷன் பெற்றார். தற்போதைய திரையுலகம் போல் அக்காலம் இருந்ததில்லை. புதுமுகங்கள் அவ்வளவு சுலபமாக நுழைந்துவிட முடியாது. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ரொம்பவே தயங்குவார்கள். மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ மாட்டார்களோ, நிராகரித்து விட்டால் போட்ட பணம் திரும்பாதோ என்ற பயம். வினியோகஸ்தர்களும் புதியவர்கள் நடித்த படமென்றால் மாட்டை பல்லைப்பிடித்துபார்ப்பது போல, தயாரிப்பாளர்களை ரொம்பவே பயமுறுத்துவர். அறிமுகமாகி பல படங்கள் வந்தபின்னும் பத்திரிகைகள் அவர்களை புதுமுகம் என்ற அடைமொழியோடே விமர்சிப்பார்கள். இத்தனைக்கும் மத்தியில் இந்த ஐந்து நட்சத்திரங்களும் ஒரே நேரத்தில் திரையுலகப்பிரவேசம் செய்தனர்.
அவர்களில் ஒருவர்தான் பின்னாளில் எல்லோராலும் 'மக்கள் கலைஞர்' என்றும் 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்றும் அன்போடு அழைக்கப்பட்ட திரு ஜெய்சங்கர். அப்போது வசீகரமான முகத்தோற்றமும், ஸ்டைலான தலைமுடியும், துரு துருவென கண்களுமாக இவர் அறிமுகமானபோதே அன்றைய இளைஞர்களையும், கல்லூரி மாணவிகளையும் கவர்ந்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஓராண்டு புகுமுக வகுப்பும் (பி.யூ.ஸி.), புதுக்கல்லூரியில் (தமிழில் : நியூகாலேஜ்) பி.ஏ. பட்டமும் பெற்று, டெல்லியில் பணியாற்றிக்கொண்டிருந்த இவரை முதன் முதலில் திரையுலகுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் ஜோசப் தளியத்.
ஜெய் நுழைந்த நேரம், தமிழில் ஆக்ஷன் நாயகர்களுக்கு பஞ்சமாயிருந்த நேரம். அப்போது பெரும்பாலும் பெரும்பாலும் எம்.ஜி.ஆர். படங்களே ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு தீனி போடுவதாக இருந்தன. மற்ற மூவரின் படங்களும் குடும்பம், பாசம், செண்டிமெண்ட் வகையிலேயே பெரும்பாலாக அமைந்தன. இன்னொரு ஆக்ஷன் நாயகனாக தலையெடுத்த ஆனந்தன், சிலரின் சதிவேலைகளால் அமுக்கப்பட்டு புறந்தள்ளப்ப்ட்டார். இந்நேரத்தில் ஆக்ஷன் கதாநாயக்ரகளாக புயலென நுழைந்தனர் இருவர். ஒருவர் ரவிச்சந்திரன், இன்னொருவர் ஜெய்சங்கர். _________________ Anbudan….. Saradha Prakash |
|
| Back to top |
|
 |
saradhaa_sn Seasoned Hubber

Joined: 13 Jul 2005 Posts: 1632 Location: Chennai
|
Posted: Sat Oct 17, 2009 9:54 am Post subject: |
|
|
இரவும் பகலும்
மக்கள் கலைஞரின் முதல் திரைப்படம். கருப்புவெள்ளைப்படம்தான். அப்போது கோடம்பாக்கத்தில் 'சிட்டாடல் ஸ்டூடியோஸ்' என்றொரு படப்பிடிப்பு நிலையமும், அதிலேயே அவர்களது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் இயங்கி வந்தது. 'ஞான சௌந்தரி' போன்ற வரலாற்று சிறப்புமிக்க படங்களைத்தந்த நிறுவனம். அவர்கள் தயாரித்த 'இரவும் பகலும்' படத்தின் மூலம்தான், எடுத்த எடுப்பிலேயே கதாநாயனாக நுழைந்தார் ஜெய்சங்கர். ஜோசப் தளியத் இயக்கத்தில் வந்த இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக வசந்தா என்ற நடிகை நடித்திருந்தார். அசோகன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்ததுடன், சொந்தக்குரலில் ஒரு முழுப்பாடலும் பாடியிருந்தார். ஜெய்க்கும், அசோகனுக்கும் இப்படத்தில் ஏற்பட்ட நட்பு, அசோகனின் இறுதி யாத்திரை வரை தொடர்ந்தது.
முதல் படத்திலேயே ஜெய்க்கு நல்ல ரோலும், அருமையான பாடல்களும் அமைந்தன. எடுத்த எடுப்பிலேயே டி.எம்.சௌந்தர்ராஜன் இவருக்குப் பாடியதால், அதுவே தொடரத்துவங்கி பல அருமையான பாடல்கள் வந்தன. இவருக்காக டி,எம்,எஸ். பாடிய
"இரவும் வரும், பகலும் வரும்
உலகம் ஒன்றுதான்
உறவும் வரும், பகையும் வரும்
இதயம் ஒன்றுதான்"
என்ற பாடலும்
"உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இந்த
உறவுக்குக் காரணம் பெண்களடா"
பாடலும் பயங்கர பாப்புலர் ஆயின. அத்துடன் அசோகன் சொந்தக்குரலில் பாடி, நடித்திருந்த
"இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் -அதை
இருப்பவனும் எண்ணிபார்க்க மறந்துட்டான்"
என்ற பாடல், அவருக்கு (ஏற்கெனவே அவர் நடித்திருந்த 'வீடுவரை உறவு, வீதிவரை மனைவி' பாடல் அளவுக்கு) பாப்புலராகி படத்துக்கு கூட்டம் சேர்த்தது. டி.ஆர்.பாப்பா இசையமைத்திருந்தார்.
முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால், ஜெய்சங்கர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதாநாயனாக ஆனார். மளமளவென படங்கள் குவியத்தொடங்கின..... _________________ Anbudan….. Saradha Prakash |
|
| Back to top |
|
 |
RAGHAVENDRA Devoted Hubber

Joined: 21 Jan 2008 Posts: 357
|
Posted: Sat Oct 17, 2009 10:01 am Post subject: |
|
|
சகோதரி சாரதா அவர்களின் இந்தத் திரி இனிய மற்றும் இன்ப அதிர்ச்சி, தீபாவளி பரிசு. மக்கள் கலைஞர், வெள்ளிக்கிழமை ஹீரோ என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் அன்புடன் அழைக்கப்பட்ட ஜெய் சங்கர் அவர்களைப் பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டுகிறது. மனிதாபிமானம் என்றால் ஜெய்சங்கர் என்று அகராதியில் பொருள் எழுதி விடலாம். நடிகர் திலகத்திற்கு பி.ஏ. பெருமாள் போல் ஜெய்சங்கருக்கு ஜோசப் தளியத் எனலாம். அவருடைய இன்னொரு அறிமுகம் வாணிஸ்ரீ, படம் காதல் படுத்தும் பாடு. மலரும் நினைவுகளில் நம்மை மூழ்கழடிக்க இந்தத்திரி மலர்ந்திருக்கிறது.
மீண்டும் சாரதா அவர்களுக்குப் பாராட்டுக்கள்
ராகவேந்திரன் _________________ visit http://www.nadigarthilagam.com
a website for Sivaji Ganesan
http://www.ilaiyathilagamprabhu.com
a website for Prabhu Ganesan |
|
| Back to top |
|
 |
saradhaa_sn Seasoned Hubber

Joined: 13 Jul 2005 Posts: 1632 Location: Chennai
|
Posted: Sat Oct 17, 2009 10:05 am Post subject: |
|
|
பஞ்சவர்ணக்கிளி
பாகப்பிரிவினை, பாலும் பழமும், படகோட்டி போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைத்தந்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி தயாரித்த பஞ்சவர்ணக்கிளி படத்தை இயக்கியவர் கே.சங்கர். ஜெய்சங்கர் இரட்டை வேடங்களில் நடித்த இப்படத்தில் அவருடன் கே.ஆர்.விஜயா, முத்துராமன், எல்.விஜயலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர்.
மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் தேனான பாடல்கள் அமைந்து படத்துக்கு சிறப்பு சேர்த்தன.
பாரதிதாசனின் "தமிழுக்கும் அமுதென்று பேர்" ஒரு Super Hit பாடல்.
கே.ஆர்.விஜயா பாட, அதற்கு எல்.விஜயலட்சுமியின் பரதநாட்டியம் அமைந்த "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்" பாடலும், "கண்ணன் வருவான் கதை சொல்லுவான், வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்" பாடலும், "அவளுக்கும் தமிழென்று பேர்" பாடலும் அன்றுமுதல் இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கும் Evergreen Mega Hit பாடல்கள்.
அருமையான கதையமைப்புடன் 1965-ல் வெளியான பஞ்சவர்ணக்கிளி ஒரு வெற்றிப்படம். _________________ Anbudan….. Saradha Prakash |
|
| Back to top |
|
 |
saradhaa_sn Seasoned Hubber

Joined: 13 Jul 2005 Posts: 1632 Location: Chennai
|
Posted: Sat Oct 17, 2009 10:16 am Post subject: |
|
|
இந்த திரியை வரவேற்று முதல் 'வரவேற்பு பதிவு' அளித்திருக்கும் சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.
குழந்தையும் தெய்வமும்
'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் நடித்து, ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த மாபெரும் வெற்றிப்படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தனர். ஜெய்சங்கரின் ஜோடியாக பழம்பெரும் நடிகை ஜமுனாவும், குழந்தைகளாக குட்டி பத்மினியும் நடித்திருந்தனர். ஈகோவினால் பிரிந்து வாழும் கணவன் மனைவியின் பிடிவாதத்தால் குழந்தைகள் படும் வேதனையை கண்களில் நீரை வரவழைக்கும் வண்ணம் சொல்லியிருந்தனர் படத்தில். ஜெய்சங்கரின் இளமைத்தோற்றத்துக்கு முன் ஜமுனா சற்று அக்கா மாதிரி தோற்றமளித்தார் என்பது உண்மை. இருந்தாலும் சிறந்த நடிப்பினால் பேலன்ஸ் செய்திருந்தார். நகைச்சுவையில் நாகேஷ் கலக்கியிருந்தார்.
அப்போதே இன்றைய உத்தியுடன் மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திருந்த
"என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா"
பாடல், கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது.
மகிழ்ச்சி, சோகம் என இரண்டுமுறை பாடப்படும் பாடலான
"அன்புள்ள மான்விழியே... ஆசையில் ஓர் கடிதம்" பாடல் இன்றைக்கும் பாப்புலர்.
"கோழி ஒரு கூட்டிலே.. சேவல் ஒரு கூட்டிலே"
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று"
"பழமுதிர்ச்சோலையிலே தோழி, பார்த்தவன் வந்தானடி"
என, அத்தனையும் தேன்சொட்டும் பாடல்கள். தந்தவர்கள் மெல்லிசை மன்னர்களாயிற்றே.
1965-ல் வெளியான 'குழந்தையும் தெய்வமும்' பல இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடிய மாபெரும் வெற்றிப்படம். _________________ Anbudan….. Saradha Prakash |
|
| Back to top |
|
 |
saradhaa_sn Seasoned Hubber

Joined: 13 Jul 2005 Posts: 1632 Location: Chennai
|
Posted: Sat Oct 17, 2009 10:30 am Post subject: |
|
|
"நட்புக்கு ஒரு ஜெய்சங்கர்"
தமிழ்த்திரையுலகில் நட்பு என்ற வார்த்தைக்கு ஒரு புதிய பரிமாணத்தைதந்தவர் மக்கள் கலைஞர் ஜெய் என்றால் அது மிகையில்லை. பொதுவாக திரையுலகக் கலைஞர்கள் எல்லோருமே நட்புறவோடு பழகுபவர்கள்தான். (அவர்களது ரசிகர்களுக்குள் வெட்டு குத்துகள் நடந்தபோதும்). ஒருவர் திறமையை மற்றவர்கள் வஞ்சகமின்றி பாராட்டுபவர்கள்தான். அதில் ஐயமில்லை. இருந்தாலும் முதலாளி, தொழிலாளி, பெரிய கலைஞர், சின்னக் கலைஞர் என்ற பாகுபாடுகள் இன்றி ஒருவருக்கொருவர் ' ஹாய்' சொல்லிப்பழக்கப்படுத்தியவர் ஜெய்தான் என்பது பெரும்பாலோரது கருத்து. நட்புக்காக எதையும் செய்வார், எதையும் விட்டுக்கொடுப்பார்.
பல படங்களில் அட்வான்ஸ் வாங்கியதோடு படம் முடியும் வரை நடித்துக்கொடுப்பார். படம் முடிந்து வினியோகஸ்தர்களிடம் சரியாக விலையாகவில்லையென்று தயாரிப்பாளர் கலங்கி நின்றால் சம்பளத்தை குறைத்துக்கொள்வார். ஏன், சில படங்களில் பாக்கி சம்பளமே வேண்டாமென்று சொல்லியுமிருக்கிறார். இது அந்த தயாரிப்பாளர்களே சொன்னது.
ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகில் ஜூபிடர், மாடர்ன் தியேட்டர்ஸ், ஏவிஎம், ஜெமினி, விஜயாவாகினி, தேவர் பிலிம்ஸ், சித்ராலயா, கலாகேந்த்ரா போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே படமெடுத்துக்கொண்டிருந்த நிலையை மாற்றி, பல சிறிய தயாரிப்பாளர்களும் உருவாக பெரிதும் காரணமாக இருந்தவர் ஜெய்சங்கர் என்றால் அது மிகையில்லை.
ஒருமுறை சித்ராலயா கோபு அவர்கள் சொன்னதுபோல, ஒரு ஸ்டண்ட் மாஸ்ட்டர், ஒரு காஸ்ட்யூம் டிசைனர், ஒரு மேக்கப்மேன் சேர்ந்து வந்து 'அண்ணே, நாங்க மூணு பேரும் உங்களை வச்சு ஒரு படம் தயாரிக்கலாம்னு ஆசைப்படுறோம்' என்று சொன்னால் உடனே 'ஓ... அதுக்கென்ன பண்ணிடுவோமே' என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி விடுவார். அவருடைய நட்பு வட்டம் பெரிது என்பதால் இயக்குனர், கதாநாயகி, சக நடிகர்கள் என எல்லோரையும் அவரே புக் பண்ணி கொடுப்பார். அதோடு அவர்களை தனியே அழைத்து, "இதோ பாருங்கப்பா. புதுசா படமெடுக்கணும்னு ஆசைப்படுறாங்க. அதனால ஒரு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி வாங்கிக் கொடுத்திடுறேன். அதை வாங்கிக்கிட்டு நடிங்க. படம் வினியோகஸ்தர்களிடம் விலையானதும் பாக்கிப் பணத்தை வாங்கித் தந்துடுறேன். பணத்துக்கு நான் கியாரண்டி" என்று சொல்லி நடிக்க வைப்பார். தன்மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய நாகேஷ், தேங்காய் சீனிவாசன், மூர்த்தி, ஸ்ரீகாந்த், நிர்மலா, லட்சுமி, ஜெயசித்ரா போன்றோரைத்தான் புக் பண்ணுவார். இசைக்கு வி.குமார், சங்கர் கணேஷ், விஜயபாஸ்கர் போன்ற குறைந்த பட்ஜெட் கலைஞர்களையே போடச்சொல்வார். பெரிய கம்பெனிகள் ஒரு கதாநாயகனுக்கு ஒதுக்கும் பணத்தில் இவர் ஒரு படத்தையே முடித்துவிடுவார்.
அதனால் இவரது படங்கள் சில லட்சங்களிலேயே உருவாகிவிடும். இரண்டு வாரங்கள் திரையரங்குகளில் ஓடினால்கூட போட்ட பணமும் திரும்பக்கிடைத்து, ஓரளவு லாபமும் கிடைத்து விடும். மூன்று நான்கு வாரங்கள் ஓடினாலோ நல்ல லாபம் பார்த்துவிடலாம். பிரமாண்ட படங்கள் குறைந்தது 75 நாட்களைக்கடந்தால்தான், செலவழித்த பணமே திரும்ப வரும். அவற்றோடு நாட்கள் கணக்கில் ஒப்பிடும்போது ஜெய்யின் படங்கள் தோல்விபோல எண்ணத்தோன்றும். ஆனால் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும், தியேட்டர் உரிமையாளருக்கும்தான் (இவரது படத்தால் எவ்வளவு லாபம் என்ற) உண்மை நிலை தெரியும். இப்படியாக இவரால் உருவாக்கிவிடப்பட்ட குட்டி குட்டி தயாரிப்பாளர்கள் நிறையப்பேர் உண்டு.
நான் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிந்தபோது, ஒருமுறை கலைவாணர் அரங்கில் ஒரு நிகழ்ச்சியில் என் அருகே அமர்ந்திருந்த கருடா ஃபிலிம்ஸ்'அத்தையா மாமியா' படத்தயாரிப்பாளரான திருமதி என்.ஆர்.அமுதாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, படம் எப்படி ஓடியது என்று விசாரிக்க, அதற்கு அவர் "எங்களுக்கு ஜெய் சார் இருக்கும்போது என்னங்க கவலை?. அவரே எல்லாப் பொறுப்புக்களையும் எடுத்துக்குவார். தயாரிப்பாளர் என்ற கவலையே எங்களுக்கு வைக்க மாட்டார். அவர் தெருவில் இறங்கி போஸ்ட்டர் ஒட்டாததுதான் பாக்கி. மற்ற எல்லாத்தையும் அவரே செஞ்சுடுவார். படம் கொஞ்சநாள் ஓட்டத்திலேயே எல்லோருக்கும் நல்ல லாபம் வந்தது" என்று முகம் மலர சொன்னார்.
அதுவரை ஜெய்சங்கரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தது மட்டும்தான். இப்போ நேரிலேயே அறிந்துகொண்டேன். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். _________________ Anbudan….. Saradha Prakash |
|
| Back to top |
|
 |
Murali Srinivas Seasoned Hubber
Joined: 18 Mar 2006 Posts: 1264
|
Posted: Sat Oct 17, 2009 2:24 pm Post subject: |
|
|
சாரதா,
மக்கள் கலைஞர் ஜெய் அவர்களைப் பற்றிய திரிக்கும் செய்திகளுக்கும் நன்றி. பள்ளிப் பருவத்தில் நான் பார்த்த ஏராளமான ஜெய் படங்கள் நினைவிற்கு வருகின்றன.
சினிமாவில் எல்லோரையும் எல்லோரும் அண்ணே என்று அழைப்பதையே வழக்கமாக கொண்டிருந்ததை மாற்றி ஹாய் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியது ஜெய்தான் என்று சொல்லுவார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் + ஜெய்சங்கர் என்ற காம்பினேஷன் படங்கள் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன என்றால் மிகையில்லை. அது போல் நகைச்சுவை படங்கள், action படங்கள், துப்பறியும் படங்கள் என்று தனக்கென ஒரு பாணி வைத்திருந்தார்.
டி.எம்.எஸ்.குரல் நிச்சயமாக இவருக்கும் பொருந்தியது. நீங்கள் சொன்னது போல் முதல் படத்திலேயே அது செட் ஆகி விட்டது. நலம் நலம்தானா முல்லை மலரே ஆகட்டும், காட்டு புறாக்கள் கூட்டுக்குள் பாடும் பாட்டுக்கு யார் துணை வேண்டும் ஆகட்டும், உன் கருங்கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார் ஆகட்டும், தொட்டு தொட்டு பாடவா ஆகட்டும், பார்த்து கொஞ்சம் பேச வந்தாள் எத்தனை கோபம், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போன்று மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற நீ எங்கே என் நினைவுகள் அங்கே பாடல் 1970 -ம் வருடம் வானொலியில் அதிக நேயர்களால் விரும்பி கேட்ட பாடலாக அமைந்தது. நீங்கள் குறிப்பிட்ட அத்தையா மாமியா படத்தில் கூட விலைவாசி மாறி போச்சு விஷம் போல ஏறிப் போச்சு வரிகளில் ஜெய் தான் தெரிவார், டி.எம்.எஸ். தெரிய மாட்டார்.
நமது நடிகர் திலகத்துடன் கூட முதலில் அவர் நடித்த இரண்டு படங்களான அன்பளிப்பு மற்றும் குலமா குணமா இரண்டும் குறிப்பிட தக்கவை.
தொடருங்கள்
அன்புடன் |
|
| Back to top |
|
 |
saradhaa_sn Seasoned Hubber

Joined: 13 Jul 2005 Posts: 1632 Location: Chennai
|
Posted: Sun Oct 18, 2009 1:27 am Post subject: |
|
|
டியர் முரளி,
மிகவும் நன்றி. நான் இந்த ஃபாரம் முழுக்க சுற்றியலைந்தபோது, சாதனைகள் பல புரிந்த கலைஞர்கள் பெரும்பாலோருக்கு திரிகள் துவங்கப்பட்டு, பதிவுகள் இடப்பட்டு, அவை மக்களால் படிக்கப்பட்டு, இவற்றின்மூலம் அக்கலைஞர்கள் நினைவுகூறப்பட்டு வருவதைப் பார்த்தபோது, அறுபதுகளின் மத்தியில் துவங்கி எழுபதுகளின் மத்தி வரை கதாநாயகனாக, இரு திலகங்களுக்கும் அடுத்தபடியாக தமிழ்த்திரையைக் கலக்கிய 'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் அவர்களுக்கு ஒரு திரியில்லையே என்ற எண்ணமே (எண்ணம் மட்டுமல்ல ஏக்கமும் கூட) இத்திரி உருவாகக்காரணமாக அமைந்தது எனலாம்.
துவங்கியதுமே நீங்களும், சகோதரர் ராகவேந்தர் அவர்களும் அளித்திருக்கும் உற்சாக வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இதில் நான் மட்டுமல்ல, மக்கள் கலைஞரைப்பற்றி அறிந்துள்ள எல்லோருமே தாங்கள் அறிந்த பல நல்ல விஷயங்களை, அரிய செய்திகளை இங்கு எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளும் வண்ணம் தங்கள் பதிவுகளைத் தந்து, மனிதாபிமானமும் பண்பும் மிக்க நல்லவராக வாழ்ந்து மறைந்த மக்கள் கலைஞர் ஜெய் அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வேண்டுகிறேன். _________________ Anbudan….. Saradha Prakash |
|
| Back to top |
|
 |
RAGHAVENDRA Devoted Hubber

Joined: 21 Jan 2008 Posts: 357
|
Posted: Sun Oct 18, 2009 1:43 am Post subject: |
|
|
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகத்திற்கு ஒரு புத்துயிர் ஊட்டியது என்றால் அது மிகையல்ல. நுழைந்த வேகத்திலேயே கல்லூரி மாணவிகளிடம் தனி யிடம் பிடித்த கதாநாயகர் ஜெய்சங்கர். அவருடைய திருமணத்தின் போது நான் பள்ளி மாணவன். அப்போதைய சுவையான தகவல் நான் கேள்விப்பட்டது. தமிழ்த்திரையுலகில் முதன் முதலாக ஒரு கதாநாயகனின் திருமணம் செய்து கொண்டதற்கு பல மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் வருந்தி ஏக்கம் கொண்டது ஜெய்சங்கரின் திருமணத்தின்போது தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அமர்ந்தவர் ஜெய்சங்கர். அது மட்டுமல்ல அது வரை பல நாயகர்களை வைத்து படம் எடுத்து வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் குறிப்பிட்ட ஒரு நடிகரை வைத்தே தொடர்ச்சியாக படம் எடுத்த பெருமையும் ஜெய்சங்கரையே சேரும். அதே போல காமிரா மேதை கர்ணன் பெரும்பாலும் ஜெய்சங்கருக்காகவே கதை உருவாக்கி அருமையான படங்களைக் கொடுத்துள்ளார், சில பல வேறுமாதிரியான காட்சிகளைத் தவிர்த்து. அதில் குறிப்பாக கங்கா தமிழ்த்திரையுலகில் தனி முத்திரை பதித்தது. கறுப்பு வெள்ளை படங்களிலேயே ஒளிப்பதிவில் அசுர சாதனை படைத்த கர்ணனின் இப்படத்தில் ஒரு காட்சியில் சாரட் வண்டியும் குதிரையும் ஒரே சமயத்தில் வேகமாக அதே சமயம் இணையாக பயணிக்கும் காட்சி இடம் பெறும். அக் காட்சியில் சாரட் வண்டியின் இரு சக்கரங்களுக்கு இடையில் தொலைவில் பயணிக்கும் குதிரை ஓடுவதைக் காண்பித்திருப்பார். இன்று வரை இக்காட்சியினைப் போல் இன்னொரு படத்தில் இடம் பெறவில்லை. இக்காட்சியில் ஜெய்சங்கர் முழுதும் டூப் இன்றி நடித்துள்ளார் என்றால் அவரின் தொழில் பக்தியை அறிந்து கொள்ளலாம்.
இது ஒரு உதாரணம் மட்டுமே.
ராகவேந்திரன் _________________ visit http://www.nadigarthilagam.com
a website for Sivaji Ganesan
http://www.ilaiyathilagamprabhu.com
a website for Prabhu Ganesan |
|
| Back to top |
|
 |
P_R Moderator Hubber

Joined: 19 Nov 2004 Posts: 8648 Location: oodu
|
Posted: Sun Oct 18, 2009 1:52 am Post subject: |
|
|
நான் பார்த்த கொஞ்சூண்டில் ரசித்தது அவர் நகைச்சுவைத் திறனை.
வீட்டுக்குவீடு
பலர் ஒரே சமயத்தில் பேசிக்குழப்பும் காட்சியில் மனைவி லக்ஷ்மிமைப் பார்த்து:
ஜெய்: (உரத்த குரலில்) என்ன நீ
ல: இப்பொ நீங்க "என்ன டீ" னு சொன்னீங்களா..."என்ன நீ"ன்னு சொன்னீங்களா 'ன்னு எனக்கு இப்பொவே தெரிஞ்சாகணும்
ஜெய்: (கனிவான குரலில்) மாலதி நான் உன்னை எப்போ கூப்பிட்டாலும் அது "என்ன நீ" தான்.."என்ன டீ" கிடையாது
ல்: ம்ம்
ஜெய்; (விட்ட இடத்திலிருந்து..உரத்த குரலில்): என்ன நீ
கணவன் மனைவி நெருங்கும்போது மனைவியில் தோழிவந்துவிட
ல: என்ன கலா ? (காட்சியை விட்டு வெளியேறுகிறாள்)
ஜெய்: (கோபம் + இயலாமை கேலிக்குரலில்) கலா கலா கலா (தோளை ஒரு வெட்டு)
கலாவின் (வெ.ஆ. நிர்மலா) ஆணாதிக்கக் கணவன் (முத்துராமன்) பார்த்துக்கொண்டிருக்க நடக்கும் காட்சி. லக்ஷ்மி அலுவலகத்திலிருந்து களைப்போடு திரும்ப, வேலை கிடைக்காமல் வீட்டில் இரூக்கும் ஜெய் காஃபி குடுத்து உபசரிப்ப்பார். காலடியில் அமர்ந்து அன்று லக்ஷ்மியின் பிரதாபங்களை ரசித்துக் கேட்பார். அந்தக் காட்சியில் அவரது பாவனைகள் நடை எல்லாவற்றிலும் ஒரு பெண்மை
லக்ஷ்மி: அந்த மேனேஜருக்கும் apropos னா என்னன்னு தெரியல (சிரிப்பு)
ஜெய்: apropos தெரியலையா (உடன் சிரிப்பு...பின்பு நிறுத்தி)...ஆமாம் மாலதி apropos னா என்ன ?
லக்ஷ்மி: apropos னா with reference to னு மேனேஜர் கிட்ட தெளிவா சொல்லிட்டேன்
ஜெய்: (கையை தட்டி, வலக்கையை தாடையில் வைத்து) அசந்தி போயிருப்பாரே
முத்துராமன்  _________________ To pretend not to do something I have to do it. So in reality I only pretend to pretend - Jacques Derrida |
|
| Back to top |
|
 |
saradhaa_sn Seasoned Hubber

Joined: 13 Jul 2005 Posts: 1632 Location: Chennai
|
Posted: Sun Oct 18, 2009 5:07 am Post subject: |
|
|
ரத்தத்தை உறைய வைத்த
"யார் நீ?"
திரைப்பட ரசிகர்கள் மத்தியில் திகில் படங்களுக்கென்று ஒரு ஆர்வம், எதிர்பார்ப்பு எப்போதுமே உண்டு. அப்படி ஒரு படமாக அமைந்து ரசிகர்களை சீட்டின் நுனிவரை இழுத்து வந்து திகிலூட்டிய படம்தான் இது.
ஆலயமணி, ஆனந்தஜோதி, ஆண்டவன் கட்டளை படங்களைத்தயாரித்த 'இடிச்சிரிப்பு வில்லன்' பி.எஸ்.வீரப்பாவின் பி.எஸ்.வி.பிக்சர்ஸ் தயாரித்த படம். படத்தை சத்யம் இயக்கியிருந்தார். வேதா இசையமைத்திருந்தார்.
மக்கள் கலைஞரும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் இணந்து நடித்த இப்படத்தில் இவர்களுடன் குமாரி ராதா, ஆனந்தன், எஸ்.வி.ராமதாஸ், ஓ.ஏ.கே.தேவர், மனோரமா, ஏ.வீரப்பன் ஆகியோரும் நடித்திருந்தனர். என்றாலும் படம் முழுக்க வியாபித்திருந்தவர்கள் 'ஜெய்'யும் 'ஜெயா'வும்தான். படத்தின் முதல் காட்சியே நம்மை திகிலின் உச்சத்துக்கு அழைத்துச்செல்லும். நள்ளிரவில் காரில் வரும் ஜெய்யிடம் நடுக்காட்டில் வெள்ளை உடையும் விரித்துப்போட்ட தலைமுடியுமாக லிஃப்ட் கேட்டு ஜெயலலிதா காரில் ஏற, அவர் ஏறியதும் கார்விளக்குகள், அணைய, வைப்பரும் நின்று போக, இருட்டிலும் தனக்கு வழி தெரியும் என்று ஜெய்க்கு அவர் (அவரா அல்லது 'அதுவா') வழிகாட்டிச்செல்ல, இதுதான் நான் இறங்கவேண்டிய இடம் என்று சொல்லி இறங்கும் இடம் பயங்கரமான சுடுகாடு. காரில் இருந்து இறங்கி கொஞ்சம் கூட உடல் அலுங்காமல் காற்றோடு காற்றாக 'அது' நடந்துபோக, அதிர்ச்சியுடன் காரிலிருந்து ஜெய் இறங்கிப்பார்க்கும்போது, சுடுகாட்டின் 'கேட்'டை 'அது' நெருங்கியதும் கேட் தானாக திறக்க, உள்ளே போனதும் கேட் தானாக மூடிக்கொள்ள.... காற்றில் மெல்ல பாடல் ஒலி ('நா......னே...... வ.... .ரு..... வே...ன்..... இங்.....கும்...... அங்..... கும்) கரைந்து வர, அதிர்ச்சியின் உச்சியில் ஜெய் மட்டுமல்ல, பார்த்துக்கொண்டிருக்கும் அனைவரும்தான்.
துவக்கத்திலேயே ஊட்டிய திகில் கடைசிவரை குறையாமல் கொண்டு சென்றிருப்பார் இயக்குனர். குறிப்பாக சுடுகாட்டின் மத்தியிலிருக்கும் அந்த பாழடைந்த பங்களா.... அய்யோ, தூக்கத்திலும் பலரை பயமுறுத்தியது. ஜெய் போகுமிடத்துக்கெல்லாம் 'அது' பாடிக்கொண்டே வந்து பயமுறுத்துவதும், அதற்கேற்றாற்போல ஆளில்லாமல் ஆடும் ஊஞ்சல், ஆளில்லாமல் நகரும் படகு என காட்சிக்கு காட்சி திகிலூட்டினர். காற்றில் படபடக்கும் வெள்ளைச்சேலையும், காற்றில் கலைந்து அலையும் கூந்தலுமாக தூரத்தில் ஜெயலலிதாவைக்காட்டும்போது 'அது'வாகவே தோன்றும்...
திகில் படத்துக்கேற்ற திகில் இசையைத் தந்து நம்மை மேலும் பயமுறுத்தியிப்பார் வேதா. (இப்படத்தில் அவர் கொடுத்த பின்னணி இசைதான், 'அதே கண்கள்' படத்துக்கு இவரை இசையமைக்க ஏ.வி.எம்.செட்டியாரை தூண்டியிருக்க வேண்டும்).
பாடல்கள் அததனையும் மணி மணியாக இருந்தன. (இந்திப்பட பாடல்கள் மெட்டிலேயே அமைந்திருந்த போதிலும்). படத்தில் திருப்பி திருப்பி பாடப்படும் "நானே வருவேன் இங்கும் அங்கும் யாரென்று யார் அறிவார்?" பாடல் ஒரு தெவிட்டாத தேனமுதம்.
மற்ற பாடல்களும் ஒன்றும் குறைவில்லை...
"பொன்மேனி தழுவாமல் பெண்ணின்பம் அறியாயாமல் போக வேண்டுமா?"
"என் வேதனையில் உன் கண்னிரண்டும் என்னோடு
அழுவதேன் கண்ணா" என மேலும் இரண்டு சூப்பர் பாடல்கள் ஜெயலலிதாவுக்கு.
குமாரி ராதா கொலை செய்யப்படுவதற்கு முன், அவருடன் ஜெய் பாடும் டூயட்...
"பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா?" பாடல் ஒரு அழகிய மெலோடி...
கொடைக்கானலில் குரூப் டான்ஸர்கள் பாடியாட ஜெய் ரசித்துப் பார்க்கும் பாடல்..
"கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது - அது
உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேட்குது"
பாடலும்கூட அருமையான ஒன்றுதான்.
மனதை உறைய வைக்கும் திகில் காட்சிகள் மட்டுமல்லாது, மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக்காட்சிகளும் உண்டு. குறிப்பாக கிளைமாக்ஸில் ஜெய்சங்கரும், ஆனந்தனும் மோதும் சண்டைக்காட்சி.
வழக்கத்துக்கு மாறாக ஒரு வித்தியாசமான படமாக வந்த 'யார் நீ?' மக்கள் பேராதரவுடன் பெரும் வெற்றிபெற்றது. _________________ Anbudan….. Saradha Prakash |
|
| Back to top |
|
 |
saradhaa_sn Seasoned Hubber

Joined: 13 Jul 2005 Posts: 1632 Location: Chennai
|
Posted: Sun Oct 18, 2009 9:51 am Post subject: |
|
|
மக்கள் கலைஞரின் ரசிகர் மன்றங்கள்
மக்கள் கலைஞர் அறிமுகவாதற்கு முன்பு வரையில் அறுபதுகளில் பல்வேறு கதாநாயகர்கள் நடித்துக்கொண்டிருந்த போதிலும், முறையான ரசிகர் மன்றங்களின் பலமும் பங்களிப்பும் இருந்தது இருபெரும் திலகங்களுக்கு மட்டும்தான். அவர்களின் திரைப்பட வெளியீடுகள் மட்டுமே திருவிழாக்கோலங்கள் பூண்டன. நடிகர்திலகம், மக்கள் திலகம் இருவரின் புதிய படங்கள் திரையிடப்படும் அரங்குகளெல்லாம், ‘கும்பாபிஷேகம் காணும் கோயில்களாக’ மாறின. கொடிகளும், தோரணங்களும், ராட்சத நட்சத்திரங்களும், கட்-அவுட்களுக்கு மாலைகளுமாக அல்லோலகல்லோலப்பட்டன. குறிப்பாக இருவரும் முறையே காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சிகளைச்சார்ந்து இருந்ததால், அந்தந்த கட்சிக்கொடிகளே கட்டப்பட்டன.
எஸ்.எஸ்.ஆரும் தி,மு,க,வைச்சேர்ந்தவராக இருந்தபோதிலும், அவருக்கு அவ்வப்போது கட்சித்தொண்டர்களின் ஆதரவு கிடைத்து வந்ததே தவிர, முறைப்படுத்தப்பட்ட மன்ற அமைப்புகள் இல்லை. ஆகவே அவரது படங்களுக்கு எப்போதாவது கட்சித்தொண்டர்கள் கொடிகளைக்கட்டினால் உண்டு. ஜெமினிகணேஷைப் பொருத்தவரையில் அவரது ரசிகர்கள் மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்களாகவும், அலுவலகங்களில் பணிபுரிபவர் களாகவும் இருந்தனர். தங்கள் அபிமான நடிகரின் படவெளியீட்டைக் கொண்டாட வேண்டும் என்பதோ, முதல்நாள் முதல் காட்சி பார்க்க வேண்டுமென்பதோ அவர்கள் நோக்கமாக இல்லை. 'இப்போ எதுக்கு அடிச்சிபிடிச்சிகிட்டு நிற்கணும்?. கொஞ்ச நாளில் கூட்டம் குறைஞ்சிடும் அப்போ பார்த்துக்கலாம்' என்ற மனப்பான்மையில் இருந்தவர்கள். அதுமட்டுமல்ல, அவரது படங்கள் பார்க்காமல் விடுபட்டாலும் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதவர்கள். எனவே அவரது பட வெளியீடுகள் ஏனோதானோதான்.
இந்நிலையில் இருபெரும் திலகங்களுக்கு அடுத்த நிலையில் வலிமையான மன்ற அமைப்புகள் உருவாகி வளர்ந்தது மக்கள் கலைஞருக்குத்தான். பெரும் நகரங்களில் மட்டுமல்லாது, சின்னச்சின்ன கிராமங்களில் கூட இவருக்கு மன்றங்கள் தோன்றி வலிமையடைந்து வந்தன. எந்த அரசியல் கட்சியையும் சாராத மன்றாங்களாதலால், முதன்முதலில் மன்றத்துக்கென்று கொடி உருவானதும் ஜெய்சங்கருக்குத்தான். இந்த விஷயத்தில் விஜயகாந்த் போன்றோருக்கு முன்னோடி இவர்தான். நீலநிறக்கொடியில் மத்தியில் ஒரு வெள்ளை நட்சத்திரம், அதில் மக்கள் கலைஞர் ஜெய்யின் புகைப்படம் பிரிண்ட்டாகியிருக்கும். பட வெளியீடுகளின்போது இந்தக்கொடிகள்தான், திரையரங்குகளில் கட்டப்படும். அதுபோக தியேட்டர் முழுக்க பல்வேறு மன்றங்களின் பேனர்கள், தோரணங்கள் என்று அமர்க்களப்படும். இதில் இன்னொரு விசேஷம், இவர் எல்லோருக்கும் நல்லவர் என்பதால், இவர் பட வெளியீட்டின்போது எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களும் தியேட்டர்களில் கூடி நிற்பார்கள். (இவர் 'வண்டிக்காரன் மகன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன கையோடு, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் வரவு நின்று விட்டது. காரணம் விளக்க வேண்டியதில்லை. உள்ளங்கை நெல்லிக்கனி).
வெறுமனே பட வெளியீட்டை மட்டும் கொண்டாடும் மன்றங்களாக இல்லாமல், மக்கள் சேவை இயக்கமாகவும் இயங்கவேண்டுமென மக்கள் கலைஞர் வேண்டுகோள் விட, அந்தந்த ஏரியா மன்றங்கள் அங்குள்ள மக்கள் பிரச்சிகளை (முடிந்தவரை) தீர்க்கமுற்படும் முயற்சியில் இறங்கின. 1977 -ல் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் வெள்ள சேதங்களின்போது, ஜெய்சங்கர் மன்றங்களின் நிவாரணப்பணிகள் மக்கள் மத்தியில் பேசப்பட்டன.
மக்கள் கலைஞரின் 150-வது படமான 'டாக்ஸி டிரைவர்' பட வெளியீட்டின் போது சென்னை திரையரங்குகளை மன்றங்கள் அலங்கரித்திருந்த விதம் பிரமிக்க வைத்தது. அதற்கு முன் வெளியான 'துணிவே துணை' படத்துக்கும் பெரிய அளவில் வெளியீட்டு விழா நடத்தினர். சித்ரா திரையரங்கின் ஆபரேட்டர் அறையிலிருந்து கூட்டத்தைப் பார்வையிட்ட படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும், ஒளிப்பதிவாளர் பாபுவும் அசந்துபோனாகள். ஜெய்சங்கர் படத்துக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறதா என்று.
ஜெய்சங்கர் மன்றங்களின் பட வெளியீட்டு வைபவங்கள் ஒரு முடிவுக்கு வந்தது, முரட்டுக்காளை படத்தோடுதான். அப்படத்தில்தான் அவர் வில்லனாக இரண்டாவது அவதாரம் எடுத்தார். முரட்டுக்காளை படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கும்போதே ரஜினியும் ஜெய்யும் இணைந்து நடித்த 'காயத்ரி' படம் வெளியானது. அந்தப்படத்துக்கு அமைக்கப்பட்ட பேனர்களில் "முரட்டுக்காளை ஜோடி சூப்பர் ஸ்டார் ரஜினி & சூப்பர் பாண்ட் ஜெய் இணைந்து வழங்கும் காயத்ரி" என்று குறிப்பிட்டிருந்தது.
முரட்டுக்காளை வெளியீட்டின்போது, தேவையில்லாத சர்ச்சைகள், கலாட்டாக்களை தவிர்க்கும் பொருட்டு ஜெய் தனது மன்ற நிர்வாகிகளை அழைத்து அந்தப்படத்துக்கு தனது மன்றத்தின் சார்பில் கொடிகள், தோரணங்கள், பேனர்கள் எதுவும் கட்டவேண்டாமென்றும், இனி வில்லனாக படங்களில் நடிப்பதால் எல்லா கதாநாயகர்களுடனும் நடிக்கவேண்டி வரும் என்றும் ஆகவே இனிவரும் படங்களுக்கு அலங்காரங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பண்பாளர் ஜெய்சங்கர் தனது மன்றத்தினருக்கு விடுத்த வேண்டுகோளைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்துபோன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர், தங்கள் மன்றங்களின் சார்பில் ஜெய்சங்கருக்கு கட்-அவுட்டுகள், மாலைகள், பேனர்கள் என்று அமைத்து அசத்திவிட்டனர்.
இயக்குனர் ராமண்ணாவின் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்த 'கன்னித்தீவு' படத்தின் வெளியீடுதான், ரசிகர் மன்றத்தினர் கடைசியாக முழுவீச்சில் ஈடுபட்ட அமர்க்களமான படவெளியீடு.
_________________ Anbudan….. Saradha Prakash |
|
| Back to top |
|
 |
saradhaa_sn Seasoned Hubber

Joined: 13 Jul 2005 Posts: 1632 Location: Chennai
|
Posted: Mon Oct 19, 2009 5:14 am Post subject: |
|
|
மக்கள் கலைஞருக்கு 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' பட்டம் வழங்கிய
"வல்லவன் ஒருவன்"
மக்கள் கலைஞர் ஜெய், வழக்கமாக எல்லோரும் நடித்துவந்த பாணியை மாற்றிக்கொண்டு தனக்கென ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுத்து நடைபோடத் துவங்கிய படம் 'வல்லவன் ஒருவன்'. மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற மாபெரும் நிறுவனத்தில் அவர் இணைந்த இரண்டாவது படம். அந்த நிறுவனத்துக்கு இது 102-வது படம். இதற்கு முன்பே 'இரு வல்லவர்கள்' என்ற படத்தில் ஜெய் நடித்திருந்தார். அதில் இன்னொரு வல்லவனாக, மாடர்ன் தியேட்டர்ஸின் பணம் போடாத பார்ட்னர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு ஆர்.எஸ்.மனோகர் நடித்திருந்தார். (மாடர்ன் தியேட்டர்ஸின் எல்லாப்படங்களிலும் மனோகர் இருக்கவேண்டும் என்பது மறைந்த திரு டி.ஆர்.சுந்தரம், தன் மகன்களுக்கு இட்டிருந்த அன்புக்கட்டளை). அப்படத்தில் ஜெய்யின் நடிப்பு, குறிப்பாக அவரது சுறுசுறுப்பு, சண்டைக்காட்சிகளில் அவர் காட்டிய துடிப்பு, அதற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு இவற்றைக்கவனித்த மாடர்ன் தியேட்டர் அதிபர் இயக்குனர் ஆர்.சுந்தரம், ஜெய்யின் பாணியை மாற்றும் விதமாக, ஒரு ஆங்கில துப்பறியும் படத்தை தமிழில் எடுக்க முனைந்தார்.
ஒரு தீப்பெட்டித்தொழிற்சாலைக்கு அரசு வழங்கிய வெடிமருந்து இறக்குமதி செய்யும் உரிமையை தவறாக உபயோகித்து, அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வெடிமருந்து மூலப்பொருட்களை நாச வேலைக்கு பயன்படுத்தி, நாட்டை உருக்குலைக்க துணிந்த ஒரு தீவிரவாதக் கும்பலைப் பிடிக்க வந்த ஒரு துப்பறியும் அதிகாரியை, தீவிரவாதிகள் கொன்றுவிட, அந்தக்கொலையாளிகளான சதிகாரக்கும்பலைப்பிடிக்க பம்பாயிலிருந்து (அப்போது மும்பை ஆகவில்லை) அனுப்பப்படும் இன்னொரு துப்பறியும் அதிகாரியாக ஜெய். ஒல்லியான, அழகான உடல்வாகுடன், கருப்புக்கோட்டும் சூட்டும், கண்களில் குளிர்க்கண்ணாடியும், கையில் ஜேம்ஸ்பாண்ட் ப்ரீஃகேஸும், துப்பாக்கியுமாக இவர் விமான நிலையத்தில் அறிமுகமாகும் முதல் காட்சியே தியேட்டரில் கைத்தட்டல் பலத்த பெற்றது. அதுவரை தமிழ்த்திரை கண்டிராத வித்தியாசமான ரோல். பத்திரிகை விமர்சனங்களில் "வந்துவிட்டார் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்" என்று பாராட்டி எழுத, அதுவே அவருக்கு நிரந்தர பட்டமாக மாறியது.
அப்போதுதான் புதிதாக அறிமுகமாகியிருந்த ஜப்பானிய 'ஜூடோ ஃபைட்' இப்படத்தில் பயன்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பைப்பெற்றது. மர்மக்குகையில் நடந்துபோய்க்கொண்டு இருக்கும்போதே எலெக்ட்ரிக் ஷாக் அடிப்பது, காரின் நான்கு டயர்களும் தீப்பற்றி எரிந்துகொண்டு இருக்கும்போதும் கார் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது போன்ற சாகசக்காட்சிகள் மக்களை அதிசயிக்க வைத்தன. கருப்புவெள்ளைப்படமானாலும் வெளிப்புறக்காட்சிகள் கண்ணைக்கவர்ந்தன. ஏரியில் 'போட் சேஸிங்' தமிழ்ப்படத்தில் முதலில் இந்தப்படத்தில்தான் வந்ததாக பத்திரிகைகள் எழுதின. படத்தின் தரத்திற்கேற்றாற்போல பின்னணி இசையையும் வித்தியாசமாகத்தந்திருந்தார் வேதா. (ஆங்கிலப்படத்தில் இருந்து 'தழுவப்பட்ட' இசைதான்)
அப்போதைய தமிழ்ப்பட உலகின் கவர்ச்சிப்புயல்களென கருதப்பட்ட எல்.விஜயலட்சுமி, ஷீலா, விஜயலலிதா ஆகியோருடன், மெயின் வில்லனாக மனோகர் நடித்திருந்தார். நாயகியருக்கு கவர்ச்சியான நாகரீக உடைகள் தரப்பட்டிருந்தன. இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக மாணவர்கள் மத்தியில் 'வல்லவன் ஒருவன்' படம் நன்றாக எடுபட்டது. சண்டைக்காட்சிப்பிரியர்கள் சிலர் மெல்ல முகாம் மாறத்துவங்கினர். பள்ளி மாணவர்கள் வகுப்பறையிலும், இடைவேளைகளிலும் இப்படத்தைப்பற்றியே சிலாகித்துப்பேசி, பார்க்காத மாணவர்களை ஏக்கம் கொள்ள வைத்தனர்.
இப்படத்தின் பாடல்கள் வானொலிகளிலும் (குறிப்பாக இலங்கை வானொலி) மற்றும் ஒலிபெருக்கிகளிலும் சக்கைபோடு போட்டன. அனைத்துப்பாடல்களும் அருமையாக அமைந்தன.
மக்கள் கலைஞர் ஜெய் மற்றும் எல்.விஜயலட்சுமிக்கு மூன்று டூயட் பாடல்கள்.... முதல் பாடல், கிளப்பில் பாடும்
"தொட்டு தொட்டு பாடவா, தொடர்ந்து வந்து பாடவா
கட்டிக்கொண்டு பாடவா, கண்ணம் பார்த்து பாடவா"
இரண்டாவது டூயட், இன்றும் கூட தொலைக்காட்சிகளில் பசுமையாக வலம் வரும்....
"இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத்தானா பெண்ணானது
நான் கேட்டதைத் தருவாய் இன்றாவது"
(ஆகா... கருப்புவெள்ளையிலேயே என்ன அருமையான ஒளிப்பதிவு. ஓடும் படகில் டி.ஷர்ட்டும், டைட் பேண்ட்டுமாக விஜி ஆட, அதை டி.ஷர்ட், ஸ்கார்ஃப், நெற்றியில் புரண்டு விழும் ஸ்டைல்முடியுடன் ஜெய் ரசிக்க, அடுத்த வரியில் விஜி தரையில் ஆடிக்கொண்டு போக, அதைப்பார்த்துக்கொண்டே ஏரியை ஒட்டிய கட்டைச்சுவரில் ஜெய் நடந்துவரும் ஸ்டைலே தனிதான்).
மூன்றாவது டூயட், சற்று வேகமான மெட்டில்...
"முத்துப்பொணு வாம்மா, முத்தமிடலமா
அக்கம்பக்கம் யாருமில்லை கட்டிக்கொள்ளலாமா
தோளுக்கு மேலே மாலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா"
இதுபோக எல்.ஆர்.ஈஸ்வரிக்கு இரண்டு அருமையான தனிப்பாடல்கள்....
ஒன்று, மனோகரை மயக்க ஷீலா பாடும்....
"அம்மம்மம்மமா...........
கன்னத்தில் கன்னம் வைத்துக்கொள்ளு
கள்ளுண்ட பூவைக்கொஞ்சம் கிள்ளூ
அம்மம்மம்மமா சுகம் என்ன சொல்லு".
மற்றொன்று, ஜெய்சங்கரை மயக்க விஜயலலிதா பாடும்...
"பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணிமண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம், உன்னை அழைக்குது வா"
இப்பாடல்களை நினைக்கும்போதெல்லாம் இன்றைய நடுத்தர வயதினருக்கு, தங்கள் மாணவப்பருவம் மனதில் வரும் என்பதில் ஐயமில்லை. அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்கள் இவை. பாடல்கள் மட்டுமல்ல, இப்படமும் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சென்றடைந்தது.
ஆங்கிலப்பட பாணியில் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படம் வந்திருப்பதைக் கொண்டாடும் வகையில், ரசிகர்கள் திருப்பித் திருப்பி இப்படத்தைப் பார்க்கத்துவங்க 1967-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்ததுடன், மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை, மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற ஆலமரத்தின் நிரந்தரப்பறவையாக ஆக்கிக்கொண்டது.
(இடையில் 'எதிரிகள் ஜாக்கிரதை' படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் துவங்கியபோது, ஜெய் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அதில் ரவிச்சந்திரன் நடித்தார். அதன்பின்னர் 'நான்கு கில்லாடிகள்', 'சி.ஐ.டி.சங்கர்' படங்களின்மூலம் அந்நிறுவனத்தில் ஜெய்யின் பயணம் தொடர்ந்தது) _________________ Anbudan….. Saradha Prakash |
|
| Back to top |
|
 |
pammalar Regular Hubber
Joined: 13 Sep 2009 Posts: 198 Location: Chennai
|
Posted: Mon Oct 19, 2009 11:36 am Post subject: |
|
|
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் பெரும்புகழைப் போற்றும் வகையில், நடிகர் திலகத்தின் பக்தையான சகோதரி சாரதா அவர்கள் தொடங்கியுள்ள இத்திரி மாபெரும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் !!!
அவரது இந்த பெருமுயற்சிக்கு எமது நன்றி கலந்த பாராட்டுக்கள் !!!
அன்புடன்,
பம்மலார்.
_________________ pammalar |
|
| Back to top |
|
 |
sivank Seasoned Hubber

Joined: 02 Mar 2007 Posts: 1778 Location: In the heart of my dearest
|
Posted: Tue Oct 20, 2009 2:43 am Post subject: |
|
|
Superb writing for a good deserving actor. Thanks saradha. I really eager to read more about this good hearted samaritan. _________________ Nallaven enakku naane nallavan |
|
| Back to top |
|
 |
|
|
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2009 phpBB Group
|
|